Friday, May 25, 2012

தகவல் களம் !


ஏர்பஸ் ஏ 380 ரக விமானம் போலவே ஒரு உணவகம் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது. சாங்கிங் நகரில் இருக்கும் 'ஸ்பெஷல் கிளாஸ்' என்ற இந்த உணவகம் ஒரே நேரத்தில் 110 பேர் சாப்பிடலாம். இருக்கைகள், உள் அலங்காரம் எல்லாமே விமானம் போல இருக்கிறது. பரிமாறுகிறவர்கள் விமானப் பணிப் பெண் போலவே உடை அணிந்திருப்பார்கள். விமானத்தில் பறக்க முடியாதவர்கள் இங்கே சாப்பிட்டு திருப்தி அடையலாம். குடும்பத்தோடு சாப்பிட தனி அறைகளும் உண்டு.இயற்கையின் விசித்திரங்களை அல்பட்ராஸைத் தவிர வேறெந்த பறவையைக் கொண்டும் விளக்கிட முடியாது. காலங்காலமாக நாம் அறிந்ததைவிட, இந்தப் பறவைகள் எவ்வளவு தூரம் பறக்கின்றன என்பதை செயற்கைக் கோள்கள் நமக்குக் காட்டியுள்ளன. பழுப்புத் தலையுள்ள அல்பட்ராஸ் பறவையால் புவியை 42 நாட்களில் வட்டமடிக்க முடிகிறது. ஒரு அல்பட்ராஸினால், புவியின் சுற்றளவைப் போல 3 மடங்கு தொலைவை ஒரே ஆண்டில் கடக்க முடியும். கிட்டத்தட்ட 3 மீட்டர் நீளமுள்ள இதன் இறக்கைகளை நீண்ட தூரப் பயணத்தின்போது இது பயன்படுத்துவதே இல்லை என்பது இன்னொரு ஆச்சரியம்.

அமெரிக்க வெண்ணிற நெற்றிக் கழுகை விட இது இருமடங்கு எடை கொண்டிருந்தாலும், காற்றைக் கிழித்துச் செல்லும் வேகம் அதிகம். அல்பட்ராஸ் காற்றை எல்லா வகையிலும் பயன்படுத்திக் கொண்டு கோணல்மாணலாக ஜிக்ஜாக் வடிவம் போல பறக்கிறது. அல்பட்ராஸின் இதயத் துடிப்பு அது ஓய்வெடுக்கும் போது இருப்பதைவிட, பறக்கும்போது குறைவு ! இறக்கை மற்றும் மூட்டுகளில் உள்ள லாக் அமைப்பு காரணமாகவே, இது பறக்கும்போது இயங்குவதில்லை.


அல்பட்ராஸின் தனித்துவமிக்க அளவு, ஆற்றல், இடைவிடாது மிகமிக நீண்ட தூரம் பறக்கும் தன்மை ஆகியவை பார்ப்பவரை தடுமாறச் செய்யும்.பறவை பிரியர்களுக்கு இது அற்புத விஷயம்....

'இந்த பறவையைப் போல உள் இயங்கும் ஆற்றலைக் கொண்டே நம் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ளவேண்டும்' என்கிறார் ஒரு தத்துவ ஞானி.

இப்பறவைகள் இடம்பெயர்வதோடு நிறுத்தாமல், பாதையை நினைவில் வைத்துக் கொண்டு, மீண்டும் தங்கள் கூட்டுக்கே திரும்பிவிடுவதும் ஒரு புதிர்தான்!குதிரை மேல் அமர்ந்தபடி இருக்கும் போர் வீரர்கள், தளபதிகள் சிலைகளை செதுக்கவும் ஒரு மரபு இருக்கிறது. குதிரை நான்கு கால்களையும் தரையில் பதித்திருந்தால், அந்த சிலையில் இருப்பவர் இயற்கையாக மரணம் அடைந்ததாக அர்த்தம். குதிரையின் ஒரு கால் அந்தரத்தில் இருந்தால், போரில் காயம்பட்டு அதன்பிறகு வீரர் இறந்ததாக அர்த்தம். குதிரையின் இரண்டு கால்கள் அந்தரத்தில் இருந்தால், போர்களத்திலேயே வீரர் இறந்ததாக அர்த்தம்.
தகவல் : லோகேஷ்.

Wednesday, May 23, 2012

படம் சொல்லும் சேதி


ஹூண்டாய் நிறுவனம் ஐ 30 காரை அறிமுகம் செய்கிறது. இந்தக் காரின் வலுவை பரிசோதிக்க,இங்கிலாந்தில் இருக்கும் நோவ்ஸ்லி விலங்கியல் பூங்காவில் கொண்டுபோய் விட்டுவிட்டார்கள். பபூன் குரங்குகள் பல மணிநேரம் எத்தனையோ அட்டகாசங்கள் செய்தும், எதுவும் ஆகவில்லையாம் !புகழ்பெற்ற அமெரிக்க சிற்பி ஜெப் கூன்ஸ் கடந்த 94-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை செதுக்கிய பல சிற்பங்கள் இப்போது சுவிட்சர்லாந்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 'உடைந்த முட்டை' என்ற இந்த சிற்பமும் அதில் ஒன்று. வாழ்க்கையின் நிலையின்மையைப் பேசும் சிற்பங்கள் அவருடையவை.'நேஷனல் ஜியாக்ராபிக்' இதழுக்காக இம்மானுவேல் கூப் கலோமிரிஸ் என்ற புகைப்படக் கலைஞர் எடுத்த அரிய புகைப்படம் இது. கனடா நாட்டின் ஒரு ஏரியில், பனிபொழிவு அதிகம் இல்லாத ஒரு பனிக்கால பகலில் எடுக்கப்பட்டது. பனியாக உறைந்திருக்கும் ஏரி நீர் பாளம் பாளமாக பிளந்திருக்க, அதற்குள் காளான்கள் போல வெள்ளையாக தெரிபவை....உண்மையில் ஊ ற்றுக் குமிழ்கள் ! ஏரியின் அடியிலிருந்து வரும் இயற்கை எரிவாயு, தண்ணீர் உறைந்ததும் அப்படியே குமிழ்களாக சிறைப்பட்டிருக்கிறது.

தகவல் : முத்தாரம் இதழ்.

Saturday, May 5, 2012

விண் உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி!
(Russian Largest Space Telescope in Orbit-Radio Astron)


சமீபத்தில் கஜகஸ்தான் நாட்டிலிருக்கும் ஏவுதளத்தில் இருந்து ரஷ்யா பெடரேஷன் ஏவியுள்ள விண்கலம்தான் 'ரேடியோ ஆஸ்ட்ரான்'. இந்த விண்கலம், பூமிக்கு மேலே விண்ணில் தந்து சுற்றுவட்டப் பாதையில் நிலைகொள்ளும்போது, இதிலுள்ள 300 மீட்டர் விட்டம் கொண்ட ஆன்டெனா விரியும்.

பூமியில் பல இடங்களில் ஏற்கனவே உள்ள தொலைநோக்கி சிக்னல்களுடன் இது இணைக்கப்படும். அப்போது இந்த விண்கல ஆன்டெனா உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியாக மாறிவிடும். அப்போது அதன் விட்டம் 3 லட்சத்து 50 ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும். கற்பனை செய்து பார்க்கவே முடியாத அளவுக்கு இதன் சிக்னல்கள் மிகத் துல்லியமாக இருக்கும்.

இந்த ஆண்டெனாவை 'இன்டெர்பெர்ரோமெட்ரி' (Interferometry) என்ற தொழில்நுட்பத்தின் உதவியால் பூமியில் இருந்து கொண்டே இயக்க முடியும். விஞ்ஞானிகள் இந்த தொலைநோக்கியை பயன்படுத்தி, தொலை தூரத்தில் இருக்கும் பிரபஞ்சத்தின் பகுதிகளையும் துல்லியமாகப் படமெடுக்கலாம். எனவேதான் இந்த 'ரேடியோ ஆஸ்ட்ரான்' விண்கலம் உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே இதுபோல பல ரேடியோ தொலைநோக்கிகள் விண்ணில் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், இந்த ரேடியோ ஆஸ்ட்ரானுக்கென ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அதாவது, பூமிக்கு மேலே 10 ஆயிரம் கி.மீ. முதல் 3 லட்சத்து 90 ஆயிரம் கி.மீ.வரை உயர்ந்தும் தாழ்ந்தும் நகரும் திறன் கொண்டது இந்த விண்கலம்.

பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து இதன் உயரத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியும். அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா, ஜெர்மனி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தொலைநோக்கிகள் இந்த ரேடியோ ஆஸ்ட்ரான் சிக்னல்கள் மூலம் இணைக்கப்படும்.

எம்.87 எனப்படும் ஒரு நட்சத்திர மண்டலத்தின் நடுப்பகுதியில் ராட்சத கருப்பு ஓட்டை ஒன்று உள்ளது. இந்தக் கருப்பு ஓட்டையில் பல மர்மங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அந்த மர்மப் பிரதேசத்தை துல்லியமாகப் படமெடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது.


காரணம், சாதாரண விண்வெளி தொலைநோக்கியைக் காட்டிலும் இது 10 ஆயிரம் மடங்கு அதிக துல்லியமாக செயல்படக் கூடியது. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு விண்ணில் இருக்கப் போகும் இந்த 'ரேடியோ ஆஸ்ட்ரான்' விண்கல தொலைநோக்கியிலிருந்து வினாடிக்கு 144 மெகாபைட்ஸ் வேகத்தில் தகவல்களைப் பெற முடியும்.தகவல் : முக்கிமலை நஞ்சன்.

Friday, May 4, 2012

வந்தாச்சு பறக்கும் கார் !

(Flying Car - Terrafugia)

தரையில் சென்று கொண்டிருக்கும் நம் கதைநாயகனின் கார் பட்டென்று மேலே பறந்து வில்லன்களைத் தாண்டுமே... அந்த உட்டாலக்கடி எல்லாம் இனி உண்மையாகப் போகிறது. ஆம், கார் பாதி-விமானம் பாதி' கலந்து செய்த கலவையாக அமெரிக்காவில் உருவாகியிருக்கிறது ஒரு ஜகஜால கார்.

கடந்த ஏப்ரல் 6-ல் நடைப்பெற்ற நியூயார்க் சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் ஆனானப்பட்ட போர்டு, நிஸ்ஸான், டொயோட்டாவெல்லாம் வாய்பிளந்து நிற்க, ஒரு குட்டி நிறுவனம் தயாரித்த இந்த அழகிய கார், இறக்கை விரித்துப் பறந்து காட்டி அசத்தியிருக்கிறது.


இந்தப் பறக்கும் காரைத் தயாரிக்க வேண்டும் என்ற ஒரே குறிக் கோளோடு, 'மசாசூசெட்ஸ்' தொழிநுட்ப நிறுவனத்தில் படித்த தொழிநுட்ப பொறியாளர்கள் மற்றும் விமான ஓட்டிகள் 25 பேர் இணைந்து ஆரம்பித்த குட்டி நிறுவனம்தான் டெர்ராப்யூஜியா (Terrafugia).2006 - ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், ஆறு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு இன்று நினைத்ததை சாதித்திருக்கிறது.

'டிரான்ஸிஷன்.... (Transition) அதாவது, மாற்றம் என்றே பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தக் கார், மோட்டார் உலகையே மாற்றப் போவது நிச்சயம்' என்று நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார் டெர்ராப்யூஜியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்ல் டைட்ரிச்.

சராசரி அளவுள்ள உங்கள் வீட்டு கார் நிறுத்துமிடத்தில் இது அடங்கிவிடும். இதை சாலையில் சாதாரணமாக விமான நிலையம் வரை ஓட்டிச் செல்ல முடியும். அங்கிருக்கும் ரன்வேக்குப் போனதும் இதை விமான மோடுக்கு மாற்றி இறக்கை விரித்துக் கிளம்பலாம். இது அதிகபட்சம் 740 கி.மீ. தூரம் வரை பயணிக்கும்.


அந்த தூரத்துக்குள் உள்ள எந்த நகரத்திலும் நீங்கள் தரையிறங்கிவிட்டு மீண்டும் இதைக் காராக்கிக் கொள்ளலாம். இரண்டு பேர் மட்டும் பயணிக்கக் கூடிய இந்தக் கார், சாதாரண பெட்ரோலிலேயே இயங்கும். 1400 அடி உயர வரை பறக்கும்' என்று தொழில்நுட்ப விவரங்களை அடுக்குகிறார் இதை சோதனை ஓட்டம் செய்து காட்டும் பைலட்டான பில் எம்டீர்.


இந்த வருட இறுதிக்குள் இந்தக் கார் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. விலை சுமார் 3 லட்சம் டாலர்....அதாவது 1 கோடியே 53 லடசத்து 7470 ரூபாயாம் !

"எவ்வளவு காசியிருந்தாலும் இந்தக் காரை சுலபமாக வாங்கிவிடமுடியாது. "ஸ்போர்ட் பைலட்' ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களே இதை வாங்க முடியும்' என்கின்றனர் மோட்டார் வல்லுனர்கள்.


தகவல்: கோகுலவாச நவநீதன்.

Wednesday, May 2, 2012

என் பெயர் அம்பேத்கர்!

'அம்பேத்கர்னு பேர்வெச்சுக்கிட்டு தலித்களுக்குத் துரோகம் பண்றான்’பார் ஒரு அரசியல்வாதி. 'அம்பேத்கர்னு பேரைப் பார்த்தாலே தெரியலையா? தலித்தா இல்லாதவங்களுக்கு இவன்கிட்ட என்ன நியாயம் கிடைக்கும்’ பார் இன்னொரு அரசியல்வாதி. இப்படித்தான் நான் கடந்த பல வருஷங்களா அவங் கவங்க விருப்பங்களுக்கு ஏத்த படி முத்திரை குத்தப்பட்டு இருக்கேன். அதனாலேயே, அம்பேத்கராகிய நான் யாருங்கிறதை நிரூபிக்க ஒவ்வொரு கணமும் கவனமாக இருக்க வேண்டி இருக்கு'' என்று புன்னகைக்கும் அம்பேத்கர், கடலூர் மாவட்ட உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவின் ஆய்வாளர்.

அம்பேத்கர் என்றால், ஒரு தலைவரின் முகம் நினைவுக்கு வரும் முன்னர்... அவர் சாதியும் நினைவுக்கு வரும் மோசமான சூழலில்தான் நம் நாடு இன்னும் இருக்கிறது. அம்பேத்கர் என்று தனக்கு வைக்கப்பட்ட பெயர் காரணமாக இவர் அனுபவித்த துயரங்களின் பட்டியல்...

''விழுப்புரம் மாவட்ட தியாகதுருவம்தான் என் சொந்த கிராமம். வளர்ந்தது, வேப்பூர் கிராமத்தில். சுகாதாரத் துறையில் தொழுநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் கிராம மருத்துவர் என் அப்பா கதிர்வேலன். தீவிரமான கடவுள் பக்தரான அவருக்குத் தந்தை பெரியாரின் கொள்கைகள் மீது ஈர்ப்பு ஏற்பட, நாத்திகரா மாறினார். திராவிட இயக்கம், அம்பேத்கர், பெரியார்னு ஈடுபாடு காட்டினார். எனக்கு பரணீதரன்னுதான் முதலில் பேர்வெச்சு இருந்தாங்க. ஆறு வயசுல வேப்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சேர்த்தப்ப, என் பேரை அம்பேத்கர்னு எழுதச் சொன்னார் அப்பா. அன்னையிலேர்ந்து நான் அம்பேத்கர் ஆயிட்டேன்.

பள்ளிக் காலங்களில் எனக்கு முத்திரைகள் எதுவும் இல்லை. காரணம், சின்ன ஊர். எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். சட்டம் படிக்க சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கு வந்தேன். எல்லை கடந்து அப்பதான் சாதிய அடையாளங்களோட வடிவங்கள் தெரிய ஆரம்பித்தன. சேர்ந்த புதிதில், 'எவன் உன்னை ராகிங் பண்ணுறான்னு பார்ப்போம்’னு என்னைப் பிடிச்சுப் பத்திரப்படுத்துச்சு ஒரு குழு. என் பெயரே எனக்கு ஒரு பக்கச் சார்பைக் கொடுத்துச்சு. அடுத்து போலீஸ் வேலைக்குத் தேர்வா னேன். ஆவடி வீராபுரத்தில் பயிற்சி.

தமிழ்நாடு முழுக்க 280 பேர் வந்திருந்தாங்க. வரிசையா ஒவ்வொருத்தர் பேரா சொல்லிக் கூப்பிட்டாங்க. அம்பேத்கர்னு என் பேரைச் சொல்லிக் கூப்பிட்டவுடனே அத்தனை பேர் கண்ணும் என்னை மொய்க்க ஆரம் பிச்சுடுச்சு. அந்தப் பார்வைக்குத்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்?

'டேய்! இவன் நம்மாளுடா...’ 'ஓ... அவனா நீயி?’ங்கிற மாதிரி எத்தனையோ பார்வைகள்!

பயிற்சிக் காலத்தின்போது பலரும் வந்து சாதிரீதியாகத் தங்களுக்கு ஏற்படுற சிரமங்களை என்கிட்ட வந்து சொல்வாங்க. நான் ஆறுதல் சொல்லி அனுப்பிவைப்பேன். அப்படி வர்றவங்க எந்த நியாயத்தின்பேரில் என்கிட்ட வர்றாங்கங்கிறதை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது.

அப்புறம், போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் வேலைக்குச் சேர்ந்தேன். சாதி தொடர்பான சச்சரவுகளுக்குப் பஞ்சமே இல்லாத பகுதி அது. 2000-ல் புளியங்குடிங்கிற இடத்தில் ஒரு சமூகத்தைச் சார்ந்த மூணு பேரைக் கொடூரமாக் கொன்னுட்டாங்க. கடலூர் மாவட்டமே பற்றி எரியுற அளவுக்குப் பதற்றம். உயர் அதிகாரிகள் அத்தனை பேரும் வந்துட்டாங்க. என்னோட உயர் அதிகாரியாக இருந்த நரசிம்மன், 'பாடியைத் தூக்கி ஆம்புலன்ஸில் வைப்பா’ன்னார். நான் போய் பிணத்தைத் தூக்கினேன். உடனே, அங்கிருந்த சிலர் 'பிணத்தைத் தூக்கக்கூட நம்ம போலீஸ்தாண்டா வர்றான்’னாங்க. அப்போ நிலைமையைச் சுமுகமான சூழலுக்குக் கொண்டுவந்தார் சைலேந்திரபாபு.

ஆனா, அம்பேத்கர்ங்கிற பேர் காரணமாவே நான் அந்தச் சம்பவத்தப்ப ஒதுங்கி இருக்க வேண்டிய நிலை. ரவுண்ட்ஸ் போனால், குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்க மாட்டாங்க. சிலர் வீட்டிலேயோ, விருந்து கொடுக்காத குறையாக உபசரிப்பாங்க. எல்லாம் 'அம்பேத்கர்’ங்கிற பேருக்குக் கிடைக்கிற மரியாதை.

என் மேல, 'குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால், பாரபட்சமாக நடந்துகொள்கிறார்’னு ஒரு வழக்கு பதியப்பட்டு, 10 வருஷங்களுக்கு மேல விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு. கடலூர் மாவட்டத்துக்கு வந்து 12 வருஷங்கள் ஆகுது. தப்பு செஞ்சா, ஒரு போலீஸ் அதிகாரிங்கிற முறையில் நான் என்ன செய்யணுமோ, அதைப் பாரபட்சம் இல்லாம செய்வேன்கிறதை எல்லாத் தரப்பு மக்கள்கிட்டேயும் நிரூபிச்சு இருக்கேன்.

என் சங்கடங்களைத் தெரிஞ்சுகிட்ட எங்கப்பா ஒருகட்டத்துல, 'உனக்கு நான் சிரமம் கொடுத்துட்டேனோ? நீ வேணும்னா, உன் பேரை மாத்திக்கப்பா’னு சொன்னார். 'அரை நூற்றாண்டுக் காலம் இந்த நாட்டோட அடித்தட்டு மக்களுக்காகப் போராடியவரோட பேர் என் பேர்ங்கிறது எனக்குப் பெருமைதான்பா. வேணாம்பா’ன்னுட்டேன்.

அண்ணல் அம்பேத்கரை இந்தச் சமூகம் இன்னமும் ஒரு சாதியின் தலைவராகப் பார்க்குதேங்கிறதுதான் என் வேதனை'' என்று முடித்தார் அம்பேத்கர்.

இவ்வளவு கஷ்டங்களையும் அனுபவித்த இந்த அம்பேத்கர், பிறப்பால் தலித் அல்ல. அம்பேத்கரின் பெயரைவைத்துக்கொண்டு இருப்பதாலேயே இவர் அனுபவிக்கும் கொடுமைகள் இப்படி என்றால், உண்மையான அடித்தட்டு மக்கள் படும் துன்பம்?நன்றி : நிருபர் டி.அருள் எழிலன்

படம் : ஜெ.முருகன் - ஆனந்த விகடன்


Sunday, April 29, 2012

புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எழுதும் விதம்!

எழுத்தாளர் ஆல்க்ரென்

  • ஆல்க்ரென் எனும் எழுத்தாளர், சில சுவையான சம்பவங்களை மட்டுமே யோசிப்பார். அவற்றை எழுதத் தொடங்கி ஒன்றுக்கொன்று முடிச்சுப் போடும் போதுதான் கதைக் கரு என்ற ஒன்றே உருவாகும்.
  • மாரியக் என்ற எழுத்தாளர் எழுதத் தொடங்கிவிட்டால் அது முடியும் வரை எழுதிக் கொண்டே போவார். ஒரு நாவல், எந்தக் காரணத்துக்காகவும் ஒரு நிமிடம் கூட தடைபட்டு நிற்கக்கூடாது என்பது இவருடைய கொள்கையாகும். உணவு, உறக்கம் என எல்லாவற்றையும் மறந்து நாள் கணக்கில் இவர் நாவல்கள் எழுதியுள்ளார்.
  • அன்டோனி பார்சன் என்பவர் துப்பறியும் நாவலாசிரியர். உணவுக்காகக் கூட தன் நாவலை இடையில் நிறுத்தி வைக்க மாட்டார். ஆனால், எழுதி முடித்த பின்பு வயிறு முட்ட உணவு சாப்பிட்டு விட்டு இரண்டு நாட்கள் தூங்குவாரம்.


எழுத்தாளர் ட்ரூமன் கபோட்

  • ட்ரூமன் கபோட், தான் எழுத நினைக்கும் கதையை வரிக்கு வரி சிந்தித்து மனதுக்குள் கற்பனையாக ஒரு முறை எழுதி விடுவாராம். அதன் பின்புதான் முதல் வரியையே எழுதத் தொடங்குவாரம்.


எழுத்தாளர் பெர்னார்ட் ஷா

  • ஜார்ஜ் பெர்னார்ட் ஷா ஒரு நாளைக்கு ஐந்து பக்கங்களுக்கு மேல் ஒரு வார்த்தை கூட எழுதமாட்டார். ஐந்தாவது பக்கம் எழுதி முடிக்கும்போது ஒரு வாக்கியம் பாதி எழுதப்பட்டிருந்தால் கூட, எழுதுவதை நிறுத்திவிட்டு அதை மறுநாள்தான் எழுதத் தொடங்குவார்.


எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்

  • சார்லஸ் டிக்கன்ஸ் எழுதும்போது தன் எழுத்தில் உள்ள நகைச்சுவைப் பகுதியைப் படித்து தானே வயிறு குலுங்கச் சிரிப்பார். சோகமாக எழுதும்போது, அந்தப் பக்கம் முழுவதும் அவர் கண்ணீரால் நனைந்திருக்கும். அந்த அளவுக்கு உணர்ச்சிப் பிழம்பானவர்.எழுத்தாளர் எட்கார்ட் வாலஸ்

  • எட்கார்ட் வாலஸ் என்பவர், வெள்ளிக் கிழமையில்தான் எழுத ஆரம்பிப்பாராம். வெள்ளி இரவு உணவு முடித்து பின் பேனாவைக் கையில் எடுத்தால், திங்கட் கிழமை காலை ஒன்பது மணிக்குள் முடித்து விடுவார். இடையில் உணவும் இல்லை தூக்கமும் இல்லை. கற்பனை வளத்துக்காக தேநீர் மட்டும் நிறையக் குடிப்பாராம்.


கவிஞர் ஷெல்லி

  • ஷெல்லி கவிதைகள் எழுதும்போது, அவருடைய வாய் எதையாவது மென்று கொண்டே இருக்கும். அப்பொழுதுதான் கறபனை தடைபடாமல் பெருக்கெடுத்து ஓடும்.
  • இமானுவேல் பர்க் தனது கற்பனை வளம் குன்றும்போதெல்லாம் சூடான நீரில் கால்களை நனைத்துக் கொண்டே சிந்திப்பார். அப்பொழுதுதான் அவருக்கு கற்பனை சுரக்குமாம்!
  • அப்பாஸ் என்ற எழுத்தாளர் மிகவும் இரைச்சலும் கூச்சலும் நிறைந்த மக்கள் சந்தடியுள்ள இடத்தில்தான் உட்கார்ந்து எழுதுவார். இதற்காகவே கூச்சல் மிகுந்த ஓட்டலை நாடிச் சென்று அங்கே அமர்ந்து எழுதுவாராம்!.


தகவல் : மெர்வின்.

Saturday, April 28, 2012

கருப்பு மருந்துகளின் தந்தை!
Louis Pasteur

பாம்பு,தேள், போன்ற விஷ ஜந்துகளுக்கு மட்டுமல்ல...தான் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க் குட்டிகளிடமும் கூட மனிதன் அப்போதெல்லாம் பயந்து நடுங்கிய காலம் அது. ஆம், வெறிநாய்க்கடி என்பது அப்போதெல்லாம் ஓர் உயிர்கொல்லி நோய். எந்த மருந்துக்கும் கட்டுப்படாத அந்த ராபீஸ் நோயைக் கட்டுபடுத்தினார் லூயி பாஸ்டர் என்ற மருத்துவ மேதை.

பிரான்ஸில் 1822-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பிறந்த லூயி பாஸ்டர், சிறுவயது முதலே வேதியியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்தினார். அந்த ஆர்வம்தான், படிப்பை முடித்தவுடன் சிறிய அளவில் ஒரு ஆய்வுக் கூடத்தை நிறுவவும் அவரைத் தூண்டியது. ஒரு முறை லூயி தன் ஆய்வுக் கூடத்தில், வேதியியல் மாற்றங்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தபோது, கிருமிகள் எனப்படும் நுண்ணுயிரிகளை கவனித்தார். உலகையே வருத்திக் கொண்டிருக்கும் நோய்களையும் இந்த நுண்ணுயிரிகளையும் பொருத்திப் பார்த்தார். எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணம் கிருமிகளே, கிருமிகளின்றி ஓரணுவும் அசையாது என்று தன் ஆராய்ச்சிகளின் மூலம் நிரூப்பித்தார்.

நோய்களுக்கான காரணத்தைக் கண்டறிந்ததோடு நிற்காமல், தடுப்பு மருந்துகளை உருவாக்கும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கினார்.முதலில் பால் போன்ற திரவங்களில் உள்ள தீய பாக்டீரியாக்களை அழிக்கும் வழிமுறையைக் கண்டறிந்தார். இன்றுவரை பால் தொழிற்சாலைகளில் பின்பற்றப்படும் இந்த வழிமுறை, லூயி பாஸ்டரின் பெயரிலேயே 'பாஸ்டரைஸிங்' என்று அழைக்கபடுகிறது.


அதன்பின் கடும் முயற்சியின் விளைவாக, ஆந்த்ராக்ஸ் மற்றும் வெறிநாய்க்கடி (ராபீஸ்) கிருமிகளைக் கட்டுபடுத்தும் வழி முறையைக் கண்டுபிடித்தார் லூயி.

1885-ம் ஆண்டில் ஜோசப் மெயிஸ்டர் என்ற ஒன்பது வயது சிறுவனை வெறிநாய் ஒன்று 15 முறை கடித்துவிட்டது. அன்றையை மருத்துவர்கள் அனைவரும் கை விரித்துவிட்ட நிலையில், அவனுக்கு லூயி தந்து தடுப்பு மருந்து மூலம் சிகிச்சை அளித்தார். உயிரையும் காப்பாற்றினார். அந்தச் சிகிச்சையின் வெற்றிக்குப் பிறகு, லூயி உலகம் முழுவதும் பிரபலமாகி, லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் தனது 5 குழந்தைகளில் மூவரை டைபாய்டு நோய்க்கு பலி கொடுத்தவர் லூயி. பிற்காலத்தில் அவர் டைப்பாய்டு மட்டுமல்லாமல், டைபஸ், மஞ்சள் காமாலை, டிப்தீரியா, இன்புளூயன்சா போன்ற நோய்களையும் தன் மருந்துகளால் கட்டுபடுத்திக் காட்டினார்.

இறுதியாக 1895-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி... லூயி பாஸ்டர் என்ற பொக்கிஷத்தை இந்த உலகம் இழந்தது. மரணத்தோடு போராட அவர் கொடுத்துவிட்டுப் போன சில மருத்துவப் பொக்கிஷத்தை மரணத்தால் பறித்துக் கொள்ள முடியுமா என்ன ?
தகவல் : சி.பரத்.

Thursday, April 26, 2012

நிலம்....நடுக்கம்.


அருகருகே நகரும் இரண்டு பூமித் தட்டுகள் லேசாக உராயும்போது பெரிய அளவில் அழிவு இல்லை. அது லேசான நடுக்கமே. ஆனால், எதிரெதிர் திசையில் நகரும் இரண்டு பூமித் தட்டுகள் முட்டிக் கொள்ளும்போதுதான் பிரளயமே நடுங்குகிறது.

பொதுவாகவே பூமித் தட்டுகள் நகர்வது ரொம்ப குறைவான வேகத்தில்தான். ஆண்டுக்கு சில சென்டி மீட்டர்கள். ஆனால் முட்டிக்கொள்ளும்போது நீயா - நானா என்கிற அளவிற்கு கங்கணம் கட்டிக் கொள்கின்றன. இரண்டும் தட்டுகளும் ஆண்டுக்கணக்காக அப்படியே முட்டிக் கொண்டு நிற்கும். தட்டின் பின் பக்க சுமை இதை அழுத்தி முன்னால் தள்ளப் பார்க்கும். இப்படி ஒருபுறம் நகரமுடியாமல் தவிக்கும் இந்தத் தட்டுகளில் அழுத்தம் அதிகமாகிக் கொண்டே இருக்கும்.

ஸ்பிரிங் விளையாட்டு போலத்தான் இது. இருபுறமும் கைகளால் ஒரு ஸ்பிரிங்கை அழுத்திப் பிடித்திருக்கிறீர்கள். அதை அழுத்தி வைக்கும்போது எப்படியாவது இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிக்கும். இரண்டு புறமும் பிடித்திருக்கும் கைகளை விட்டுவிடுகிறீர்கள். சட்டென அது விரிந்துவிடும் இல்லையா ? அதுபோல இரண்டு தட்டுகள் ஆண்டுக்கணக்கில் முட்டிக் கொண்டிருக்கும்போது சேரும் அழுத்தம் திடீரென சில நொடிகளில் வெளிப்படும். அந்த சக்தியின் வெளிப்பாடு மிகப் பயங்கரம்.அப்போது அந்தத் தட்டுகள் நகர்ந்து, இத்தனை ஆண்டுகளாக பாக்கி வைத்திருந்த தூரத்தை ஒரே சமயத்தில் கடக்கப் பார்க்கும். இதில் ஒரு தட்டு பெரியதாகவும் இன்னொன்று சிறியதாகவும் இருந்தால் ஒரு தட்டு இன்னொரு தட்டிற்கு அடியில் கொஞ்ச தூரம் போய்விடும். அதன் பின் சில காலம் ஆட்டம் கண்டு கொண்டே இருக்கும். நிலை பெறுவதற்கு 6 மாதங்கள் கூட ஆகலாம்.

நன்றி : முத்தாரம் இதழ்.

Wednesday, April 25, 2012

நம்பினால் நம்புங்கள் !


ஆச்சா என்கிற மரத்திலிருந்துதான் நாதஸ்வரம் இசைக் கருவி செய்யப்படுகிறது.கிளியோபாட்ரா என்பது ஒரு அழகியின் பெயர் அல்ல. மாசிடோனிய இளவரசிகளின் பட்டத்துப் பெயரே கிளியோபாட்ரா.நம் உடலிலேயே அதிக அளவு வேலை செய்வது நம் கைகளில் உள்ள கட்டை விரல்தான்.இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கும் எல்லைக் கோடாக அமைந்திருக்கும் கிராமத்தின் பெயர் யூரி.


தகவல் : டி. கார்த்திக்.

Tuesday, April 24, 2012

தேங்காய் நண்டு !

(Coconut Crab-Chennai Museum)

"மனிதர்களில் பராக்கிரமசாலிகளை நாம் பாராட்டத்தான் செய்வோம். ஆனால், விலங்குகளில் மட்டும் பராக்கிரமசாலிகளை வசை பாடப் பழகிவிட்டோம். அப்படி நம்மிடம் கெட்ட பெயர் வாங்கிய பராக்கிரமசாலி தான் திருட்டு நண்டு எனப்படும் தேங்காய் நண்டு!"

-- காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பாடம் செய்யப்பட்ட தேங்காய் நண்டைக் காண்பித்து இந்தத் தகவலைச் சொன்னார் சென்னை அருங்காட்சியகத்தின் விலங்கியல் பிரிவு காப்பாட்சியர் அசோகன். அப்படி என்ன பராக்கிரமம் இந்த நண்டுக்கு ? அதையும் அவரே விளக்குகிறார் ?

"நிலத்தில் காணப்படும் முதுகெலும்பற்ற விலங்கினங்களிலேயே இதுதான் மிகப் பெரியது. மூன்றடிக்கு மேல் நீளமும் நான்கு கிலோ வரை எடையும் இருக்கும். தண்ணீரில் வாழும் பெரும்பாலான நண்டுகளுக்கு மத்தியில்.... நிலத்தில், அதிலும் தென்னை மரங்கள் அடர்ந்த பகுதிகளில் அதிகம் வாழும் நண்டுகள் இவை. தென்னை மரத்தில் ஏறி தேங்காயைப் பறித்து அதன் நாரையும் உரித்து உடைத்து உட்கொள்வதால்தான் தேங்காய் நண்டு என்ற பெயரைப் பெற்றது.

மனிதர்கள் வாழக்கூடிய பகுதிக்கு இது வந்தால் அவ்வளவுதான். மனிதர்கள் பயன்படுத்தும் சட்டி,பானை இத்யாதிகளை எல்லாம் ஏதோ உணவுப் பொருள் என்று நினைத்து உருட்டிக் கொண்டு போய்விடும். அதனால்தான் திருட்டு நண்டு என்றும் பெயர் பெற்றது.


இந்த வகை நண்டுகள் கடல் நீரில்தான் முட்டைகளை இடும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் சிப்பி, நத்தை,சங்கு, ஆமை போன்ற உயிரினங்களின் ஓடுகளில் ஒட்டிக்கொண்டு சிறிது காலம் வாழும்.கொஞ்சம் வளர்ச்சியடைந்தாலும் தரைக்கு வந்து நிலத்தில் குழிகளைத் தோண்டி, மெத்தென்று தேங்காய் நார்களைப் போட்டு அதில் வசிக்க ஆரம்பிக்கின்றன.

இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் கடல் தீவுகளில் அதிகம் வாழும் தேங்காய் நண்டுகள், பல நிறங்களிலும் காணப்படுகின்றன. நல்ல நுகரும் சக்தி இருப்பதால் இவை எளிதில் இரையைக் கண்டுபிடிக்கின்றன. பொதுவாக இது மற்ற நண்டினங்களிருந்து மாறுபட்ட் இருப்பதால் இதை உன்ன விரும்ப மாட்டார்கள்.

ஆனால், இந்த நண்டின் மாமிசத்தில் மருத்துவ குணம் உண்டென்று ஒரு புரளி உள்ளதால் சில நாடுகளில் இதை வேட்டையாடுவதும் உண்டு. இதனால் இந்த இனம் சில பகுதிகளில் முற்றிலும் அழியும் நிலைக்கு வந்துவிட்டது!" என்று அபயாமணி அடித்தார் அசோகன்.


இன்றுவரை நாம் ஆச்சரியப்படுவதற்கென்று இருக்கும் ஒன்றிரண்டு உயிரினங்களையும் நம் மூடநம்பிக்கைகள் அழித்துவிடக் கூடாது அல்லவா ?

தகவல் : டி.ரஞ்சித்.

Monday, April 23, 2012

படம் சொல்லும் சேதி !


உலகின் மிகக் குட்டியான நாய் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது இது. டாஷண்ட் கலப்பின குட்டியான இது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்திருக்கிறது. பிறந்த குட்டியாக இருந்தபோது ஒரு ஸ்பூனுக்குள் அடங்கிவிட்டதாம். மூன்றரை இஞ்ச் நீளமே இருக்கும் இதற்கு, உலகின் மிகப் பெரிய பாப் பாடகியான பியான்ஸ் நோல்ஸ் பெயரை வைத்திருக்கிறார்கள்.மனித இனம் நெருப்பைப் பயன்படுத்தத் தெரிந்து கொண்ட பிறகுதான் நாகரீகத்தை நோக்கிய முதல் பாய்ச்சல் நிகழ்ந்தது.எப்போது முதல் மனிதர்கள் நெருப்பைப் பயன்படுத்தினார்கள் என்பதில் மானுட ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிகழ்கிறது. இதை தீர்க்கும் ஆதாரம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கிடைத்திருக்கிறது.

இங்கிருக்கும் ஒன்டர்வெர்க் குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் நிறைய சாம்பல் கிடைத்திருக்கிறது. கூடவே எரிந்த எலும்புகளும்! இவை பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கண்டறிந்து உள்ளனர். நமது முன்னோர்களான ஹோமோ எரெடக்ஸ் இனத்தவர் விலங்குகளை எரித்து மாமிசம் சாப்பிட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.நம் ஊர்களில் ஆண்டு தேர்வு முடிந்ததும் பள்ளி மாணவர்கள் ஒருவர் சட்டையில் இன்னொருவர் இங்க் அடித்து மகிழ்ச்சியடைவார்கள். அவ்வாறு அசாம் மாநிலத் தலைநகர் கௌகாத்தியில் தேர்வு முடிந்த கல்லூரி மாணவர்கள் தங்கள் முகத்தில் வெள்ளி மூலாம் பூசி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடுகின்றனர்.


தகவல் : முத்தாரம் இதழ்.

Friday, April 20, 2012

மணல் சாலை இல்லை, இது சணல் சாலை !


சணல் கயிறு, சணல் சாக்கு, சணல் பைகள், சணல் சட்டைகள் கூடக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், சணல் சாலை தெரியுமா உங்களுக்கு ? இது வேறெங்கோ வெளிநாட்டில் நடக்க உள்ள அதிசயம் இல்லை. நம் இந்தியாவில்தான் போடுகிறார்கள் !

கொல்கத்தாவில் உள்ள சணல் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று, 24 கி.மீ. தூரத்துக்கு சணல் ரோடு அமைக்கத் திட்டமிட்டுள்ளது. சாதாரண தார் சாலையைக் காட்டிலும் இந்த 'நார்' சாலை வலுவானதாக இருக்கும் என்று அடித்துச் சொல்கிறது அந்நிறுவனம்.

நமது நாட்டில் பெரும்பாலான சாலைகள் வாட்ட சாட்டமாக காட்சியளித்தாலும், ஒரே மழைக்காலம் வந்துவிட்டால் அடித்துப் போட்ட 'கைப்புள்ள' மாதிரி, குற்றுயிரும் குலையுயிருமாகி விடுகின்றன. அவற்றைப் பழுது பார்க்கவே நமது பொருளாதாரம் ததிங்கிணத்தோம் போடுகிறது. ஆனால், இந்த சணல் சாலை வலுவானதாக மட்டுமின்றி, மழைக்காலங்களிலும் பாதிக்கப்படாமல் இருக்குமாம். இத்தனை வாக்குறுதிகளையும் அவர்கள் சும்மா சொல்லவில்லை. ஏற்கனவே மாதிரிச் சாலை ஒன்றை உருவாக்கி சணலின் மதிப்பை சோதித்த பிறகே சொல்கிறார்கள்.

கொல்கத்தாவிலிருந்து நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குப்தி பாரா என்ற கிராமத்தில்தான் அமைத்திருக்கிறது அந்த மாதிரிச் சாலை. சாலை போட பரப்பப்படும் சரளைக் கற்களுக்கும் மண்ணுக்கும் இடையே சிறு பட்டையாகச் சணலை அங்கே அவர்கள் பயன்படுத்தினார்கள். இந்தச் சணல் பட்டை, மழை நீரை உள்வாங்கிச் சாலையைப் பழுதுபடாமல் பாதுகாத்தது. அது மட்டுமல்ல...சரளைக் கற்களையும் நகர விடாமல் பிடித்து வைக்கிறதாம் சணல் பட்டை."சணலைப் பயன்படுத்துவதன் மூலம் சாலையின் ஆயுளை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவாதப்படுத்தலாம்" என்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர்.

மேற்கு வங்கத்தில் சணல் உற்பத்தி அதிகம்.ஆனால், இந்தியா முழுக்க சணலின் பயன்பாடு குறைந்துவிட்டது. சணல் சாக்குகளுக்கு பதில் பாலிதீன் சாக்குகள் வந்துவிட்டன. அதற்கு எதிர்ப்பு கிளம்பிய பிறகும் காகித பைகள் பயன்படுத்தப்படுகின்றனவே தவிர, சணல் சாக்குகள் புத்துயிர் பெறவில்லை. அதனால், உபரியாக இருக்கும் சணலை சாலைகள் போட உபயோகிப்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டம் !

கிராமத்து சணல் உற்பத்தியாளர்களும் நகரத்து இரண்டு சக்கர தோழர்களும் ஒருசேர மகிழ்ச்சியடையும் நாளை விரைவில் எதிர்பார்க்கலாம் !


தகவல் : ஆர்.ஆர்.பூபதி.

Thursday, April 19, 2012

அந்தரத்தில் மிதக்கும் சீனர் !


அடுத்த நொடி இவர் கதி என்ன ஆகியிருக்கும் ? பதைபதைப்போடு இந்தக் கேள்வியைக் கேட்டாலும், லி வெய் அதை புன்னகையோடு எதிர்கொள்கிறார். சீனாவின் ஹூபெய் நகரைச் சேர்ந்த இந்த 37 வயது மனிதர், புவி ஈர்ப்பு விசைக்கே சவால் விடுகிறார். புகைப்படக் கலைஞரான இவர் எடுத்த புகைப்படங்களைவிட, இவரை இப்படி பிறர் எடுத்த படங்களே புகழ் பெற்று உள்ளன.

" அடுக்குமாடியின் உயரத்திலிருந்து உதைக்கப்பட்டு விழுவது, வில்லில் அம்பாக சாய்ந்திருப்பது, அந்தரத்தில் நடப்பது, தலைகீழாய் மிதப்பது என எல்லா படங்களிலும் நான் ரிஸ்க் எடுத்திருக்கிறேன். இது சர்க்கஸ் இல்லை: மேஜிக்கும் இல்லை; இயந்திரங்களின் உதவியோடு செய்யப்படும் சின்னசின்ன சாகசங்கள்" என்கிறார் இவர். சில புகைப்படங்களை உற்றுப் பார்த்தால் இவரை பிணைத்திருக்கும் கயிறு தெரியலாம் !தகவல் : லோகேஷ்.

Wednesday, April 18, 2012

புள்ளிகளுக்குள் பெரும் புள்ளி - லூயி பிரெய்லி!


பார்வை இழந்தவர்கள் என்றால் வாழ்வையே இழந்தவர்கள் என்றுதான் முன்பெல்லாம் மக்கள் கருதினார்கள். அதை மாற்றிக் காட்டிய மாமேதைதான் லூயி பிரெய்லி!.

1809-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் கூப்வெரி என்ற இடத்தில் பிறந்தார். இவர் தந்தை சைமன் ரேனே பிரெய்லி, தோல் பொருட்கள் செய்யும் திறம்மிக்க கலைஞர். லூயி மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையின் தோல் தொழிற்சாலையில் பயன்படும் குத்தூசியைக் கையில் வைத்து விளையாடினார்.

அது அவர் வலது கண்ணில் குத்திக் கிழித்தது. சில நாட்களில் வலது கண் காயத்திலிருந்து நுண்கிருமிகள் இடது கண்ணையும் தாக்கியதால் இரு கண்களிலும் பார்வையை இழந்தார்.


லூயி பிரெய்லியின் பிறந்த வீடு


அந்தக் காலத்தில் பார்வையற்றவர்கள் பிச்சை எடுத்து வாழும் நிலையிலேயே இருந்தனர். இந்நிலை தன் மகனுக்கு வந்துவிடக்கூடாது என்று நினைத்த அவர் தந்தை, எழுத்துகளை ஆணி மூலம் பலகையில் பதித்து அவருக்குக் கல்வி கற்பித்தார். மேலும், யார் துணையுமின்றி நடந்து செல்ல ஊன்று கோல் ஒன்றையும் தயாரித்துக் கொடுத்தார்.

பார்வை இல்லை என்ற குறைபாட்டை அறிவுக் கூர்மை ஈடுசெய்ய, நன்கு படித்து கல்வியில் தேறினார். பின்பு பாரிஸில் இருந்த பார்வை இழந்தோர் சிறப்புப் பள்ளியில் சேர்ந்தார். அங்குதான் தன் வாழ்நாள் முழுவதையும் கற்பதிலும், கற்பிப்பதிலும் கரைந்தார்.

1821-ம் ஆண்டு, பார்வையற்றோருக்கான 'நைட் ரைட்டிங்' என்ற புதிய எழுத்து வடிவம் அந்தப் பள்ளியில் அறிமுகபடுத்தபட்டது. விரலால் தொட்டு அறியக் கூடிய 12 புள்ளிகளை அது கொண்டிருந்ததால் மாணவர்கள் படிப்பது கடினமானதாகவும், சிரமமாகவும் இருக்கும் என்று லூயி நினைத்தார்.

1824-ம் ஆண்டு இம்முறைக்கு மாற்றாக 6 புள்ளிகளைக் கொண்ட புதிய பிரெய்லி குறியீட்டை அவர் உருவாக்கினார். இம்முறையை உலகம் முழுவதும் பார்வையற்றோர் வரவேற்றனர். அதன் மூலம் அவர்களால் வேகமாகவும் எளிதாகவும் படிக்க முடிந்தது. 1829-ம் ஆண்டு பிரெய்லி முறையில் எழுத்தப்பட்ட தன் முதல் புத்தகத்தை வெளியிட்டார் லூயி. மேலும், பார்வை இழந்தோருக்கான பிரெய்லி தட்டச்சு இயந்திரத்தை பியரி என்பவருடன் இணைந்தது தயாரித்து வெற்றி கண்டார்.


சாதனையாளர்களை விழுங்கினால்தான் நோய்களின் அகோரப் பசி அடங்குமோ என்னவோ.... பிரெய்லியைத் தாக்கியது எலும்புருக்கி நோய். 1852-ம் ஆண்டு...தனது பிறந்த நாளைக் கொண்டாடிய இரண்டே நாட்களில், அதாவது ஜனவரி 6-ம் தேதி தனது 43-வது வயதில் மறைந்தார்.

இன்றும் பார்வையற்றோர் தொட்டு உணரும் அந்த ஆறு புள்ளிகளுக்கு இடையே ஒரு பெரும் புள்ளியாக அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தகவல் : சி.பரத்.

Tuesday, April 17, 2012

உலகம் பல விதம் !


கழுகு இனங்களில் பிரமாண்டமானது அமெரிக்காவில் வாழும் 'கலிபோர்னியா காண்டேர்' இனப் பருந்துகள். இவை இன்னொரு சாதனைப் பட்டியலிலும் இடம்பெறப் போகின்றன. சான் டியாகோ விலங்கியல் பூங்காவில் 'காண்டேர் கேம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அடை காக்கப்படும் ஒரு முட்டையிலிருந்து கழுகுக் குஞ்சு ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியில் வந்து, இந்த உலகை தன் கண்ணால் முதன்முதலில் பார்க்கும் காட்சியை நேரடி ஒளிபரப்பு செய்வதுதான் இந்தத் திட்டம். 'இப்படி கழுகின் பிறப்பைப் பார்ப்பவர்கள், உயிரின் மதிப்பை உணர்வார்கள். அதன்பின் விலங்குகளுக்கு தொல்லை தரமாட்டார்கள்' என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் விலங்கியல் பூங்கா நிர்வாகிகள்.ஒவ்வொரு நகரிலும் ஒரு மணிக்கூண்டு இருக்கும்; அதில் பெரிய கடிகாரம் கட்டாயமாக இருக்கும். அந்த மணிக்கூண்டுக்குப் பின் ஒரு வரலாறு இருக்கும். காலப்போக்கில் அது அந்த நகரின் அடையாளமாகவும் மாறிப் போகும்.

இதேபோல் செக் குடியரசின் தலைநகர் பிராக்கில், நகர சதுக்கத்தில் ஒரு பிரமாண்ட கடிகாரம் உள்ளது. இதை கடிகாரம் என்று சொல்வதைவிட அதிசயம் என்று சொல்லலாம். இது சாதாரணமான நேரம் காட்டும் கடிகாரம் இல்லை. வானசாஸ்திர கடிகாரம். சூரியன், நிலா, இதர கோள்கள் ஆகியவை ஒன்றுக்கொன்று எந்தெந்த திசையில் இருந்தபடி சுழல்கின்றன என்ற கிரக அமைப்பைக் காட்டும். 1410-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கடிகாரம், இப்போதும் இயங்கும் உலகின் மிகப்பழமையான ஒரே வானியல் கடிகாரம். இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்கள் இதை தீயிட்டு அழிக்க முயல, நகர மக்கள் பெரும் போராட்டம் நடத்தி இதைக் காத்தனர்.குழந்தைகள் விரும்பும் 'பேட்மேன்' போல உடை அணிந்த இந்த வௌவால் மனிதன் ஸ்லோவாக் நாட்டைச் சேர்ந்தவர். 26 வயதாகும் இவர் பெயர் ஜோல்டன் கோஹாரி. தண்ணீர், மின்சாரம் ஏதும் இல்லாத பழைய வீட்டில் தனியாக வாழ்ந்துவரும் இவரை அந்நாட்டு மக்கள் செல்லமாக 'ஸ்லோவாக் பேட்மேன்' என்று அழைக்கின்றனர். இவர் நாட்டில் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் சினிமா ஹீரோ கிடையாது.


ஆனால் மக்களுக்கு சேவை செய்வதுதான் இவரின் வேலை. தன் ஏரியாவில் வசிப்பவர்களுக்கு தன்னால் முடிந்த சின்ன சின்ன உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார். அதுவே அவரின் நிரந்தர வேலையாக மாறிவிட்டது. வெளியே செல்லும்போது இந்த உடையில் இருப்பதால், குழந்தைகள் மத்தியில் ஜோல்டன் மிகவும் பிரபலம்.

தகவல் : ப்ரியா.