Tuesday, January 31, 2012

தகவல் களம் !


பலுவார்ட் பாலம் மெக்சிகோவில் உள்ள ஒரு தாங்கு பாலம் (Baluarte Bicentennial Bridge) ஆகும். சியோரா மாட்ரோ மலை இடுக்குகளில் இது அமைக்கப்பட்டுள்ளது. 1123 மீட்டர் நீளமுடையது. பள்ளத்தாக்கில் இருந்து 402.6 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் உயரமான தாங்கு பாலம் இதுவே. தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2012 இறுதியில் திறக்கப்பட உள்ளது.



இந்தியாவில் குகை ஓவியங்களுக்கு பெயர் போனது மகாராஷ்டிரா மாநிலம் அஜந்தாவில் உள்ள குகை ஓவியங்களே (Ajantha Cave Paintings). இங்கு இயற்கை முறையில் வரையப்பட்ட ஓவியங்கள் நிறைய உள்ளன. கி.மு.200 முதல் கி.பி. 650 வரையிலான காலத்தில் வரையப்பட்டவை இவை. புத்த மதக் கொள்கைகளை முதன்மைப் படுத்தி இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.



அடிப்பாகம் மிகவும் தடிமனாகவும், மேற்பாகம் குறுகிய கிளைகளாகவும், குறைந்தளவே இலைகளை கொண்ட மரம் அடன்சோனியா கிரான்டிடியரி (Adansonia Grandidieri Tree). மடகாஸ்கரில் மிகவும் புகழ்பெற்ற மரம். இந்த வித்தியாசமான மரத்தை ஆய்வு செய்த பிரெஞ்சு தாவரவியலாளர் ஆல்ஃப்ரெட் கிராண்டியரி பெயரிலேயே இது அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.




வங்கக்கடலோரம் உள்ள புதுச்சேரி சுமார் 200 ஆண்டுகள் பிரெஞ்சு காலனி பகுதியாக இருந்தது. ஆந்திராவின் காக்கிநாடா அருகே உள்ள ஏனாம், தமிழகத்தின் நாகப்பட்டினம் அருகே உள்ள காரைக்கால், கேரளாவின் கோழிக்கோட்டுக்கு அருகே உள்ள மாஹே ஆகிய பகுதிகள் புதுவை ஆட்சிப்பகுதிக்குட்பட்டவை. இங்கு தமிழ் மொழியோடு பிரெஞ்சு மொழி பேசுபவர்களும் அதிகம் உள்ளனர்.



தகவல் : டி.கார்த்திக்.

Monday, January 30, 2012

நம்பினால் நம்புங்கள் !

ஓட்டப்பந்தயம் மட்டுமே ஒலிம்பிக்கில் பதிவு செய்த முதல் ஒரே விளையாட்டு !



ஃபேஸ்புக்கில் சராசரியாக தினமும் 25 கோடிப் பேரின் புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன!



பறவை ஓய்வாக இருக்கும்போது அதன் இதயம் நிமிடத்திற்கு 400 முறை துடிக்கிறது. பறக்கும் போது 1000 முறை !


கரப்பான் பூச்சியின் தலை துண்டானாலும், தலையில்லாமல் 7 மணிநேரம் உயிர் வாழும்.



நோபல் பரிசுத் தொகை 9,33,000 டாலர்கள்.



உலகில் சிறைப்பட்டவர்களில் 25 சதவிகிதம் பேர் அமெரிக்கச் சிறைச்சாலையில் உள்ளனர்.




தகவல் : கோவிந்த், கே.ஜெயலட்சுமி.

Friday, January 27, 2012

மனம் கொத்திப் பறவை !


மரங்கொத்திப் பறவைகள் உலகில் எப்போது தோன்றின, தோன்றிய பின் எப்படியெல்லாம் கிளைத்து பிரிந்தன. பிரிந்து வியப்பித்த இனங்கள் எத்தனை, காலமாற்றங்களினால் இவ்வினங்களில் எவையெவை எப்போது அழிந்து போயின என்பது போன்ற பல்வேறு ஆய்வுகள் செய்து பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இதன்படி தற்போது பூமியில் வாழும் ஆண்டிலியன் பிக்லூட் (Antillean Piculet) என்ற மரங்ககொத்திப் பறவைதான் ஆதிகாலத்து இறுதி இனத்தைச் சேர்ந்த ஒத்த இன்றைய வாரிசு.

இப்பறவை முதன் முதலில் எப்போது தோன்றியிருக்கக் கூடும் என்பது பற்றிய அறிவியல் ஆய்வுகள் எப்படி இருந்தாலும், கிடைத்த இப்பறவையின் புதைபடிமங்கள் நிஜத்தில் 2.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய 'ஒலிகோசீன்' பருவத்தைச் சார்ந்தவையே. எனினும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதற்கு முன்பாகவே இப்பறவையினங்கள் பெருகியிருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே இப்பறவைகள் 5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய 'இயாசீன்' பருவத்தின் தொடக்கத்தில் தோன்றியிருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுகிறது. தற்போதைய மரங்கொத்திப் பறவைகளின் பல்வேறு துணை இனங்கள் ஒப்பிட்டளவில் 1.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய 'மியோசீன்' பருவத்தை ஒத்ததாகவே இருக்கிறது. இப்படி ஜிகினா வித்தை காட்டிக்கொண்டிருந்தாலும் டொமினிக் குடியரசில் கிடைத்த சிறகுகளுடன் கூடிய இப்பறவையின்
புதைபடிமம் 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதுதான் என்று ஆய்வில் சத்தியம் செய்கிறது.

மழை பெறுவதற்காக மரங்களை வளர்ப்பதற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயலாற்றி வருகிறது. ஆனால், ஏற்கனவே இருக்கின்ற மரங்களை பல்வேறு பூச்சியினங்கள் தாக்கி கொஞ்சம் கொஞ்சமாக உளுத்தப் போகச் செய்வதோடு இறுதியில் பட்டுப் போகவும் வைத்து விடுகின்றன.

ஆனால், இப்படி நேராமல் மரங்களைக் காப்பது மரங்கொத்திகளே. மரங்களில் உள்ள புழு, பூச்சி மற்றும் வண்டினங்களைக் கண்டறிந்து, அவைகளைப் பெருமளவில் உட்கொண்டு அழித்து நமது மரங்களைக் காப்பதில் மரங்கொத்திப் பறவைகள் மகாசேவகர்கள் !


மரங்கொத்திப் பறவைகள் மரங்களையும் அதன் பட்டைகளையும் இடைவிடாது தொடர்ந்து கொத்திப் பெயர்க்கும் போது, உள்ளிருக்கும் பூச்சிகளை உட்கொள்கின்றன. இதற்கு ஏதுவாக இப்பறவைகள் பல்வேறு உடற்கதவுகளைக் கொண்டிருக்கின்றன. உலகில் உள்ள எல்லாப் பறவைகளுக்கும் கால்களில் பின்னோக்கிய விரலும், 3 முன்னோக்கிய விரல்களும் இருக்கும்.

ஆனால், மரங்கொத்திப் பறவைகளுக்கு மட்டும் நன்கு வளைந்த நகங்களுடன் கூடிய விரல்களில் 2 முன்னோக்கியும், 2 பின்னோக்கியும் இருக்கும். இத்தகவு உயரமான மரத்தில் நீண்ட நேரத்திற்குக் கொத்திக் கொண்டிருக்கும்போது, இவ்விரல்களின் படிமானம் எளிதில் புவி ஈர்ப்பு விசைக்கு பெப்பே காட்டி விடுகின்றன.


மரங்கொத்திப் பறவைகளின் வாழ்வியல் இயல்புகள், இரை தேடல், சகாக்களுக்கு சங்கதி தெரிவித்தல், நளினமான காதல் மொழிகள் ஆகிய அனைத்துக்கும் இவற்றின் எஃகுப் போர்வை போர்த்திய கூரிய மற்றும் உறுதியான அலகுகள்தான் உபயோகப்படுகின்றன. ட்ரம் இசைப்பது போல் மரப்பட்டைகளைக் கொத்தும்போது எழும் ஒலியும், மரங்களில் துவாரம் இடுகையில் எழும் ட்ரில்லிங் ஒலியும்தான் இப்பறவைகளின் பல்வேறு தேவைகளுக்கான பொது சங்கேத ஒலி !.

மரங்கொத்திப் பறவைகளின் அலகுகள் மற்ற பிற பறவைகளைப் போல் இல்லாமல் நீளமாகவும், திடகாத்திரமாகவும், கூர்மையாகவும் இருப்பது ஒரு அதிசயம்தான். இந்த அஸ்திர அலகே கூட மண்ணில் உபயோகப்படுத்தும்போது இப்பறவைகளுக்கு அவ்வளவாக உதவுவதில்லை. இப்பறவைகளின் சாகித்தியம் எல்லாம் மரப்பட்டைகளின் மீதுதான்!

இந்த மரங்களின் மீது மரங்கொத்திப் பறவைகள் மகிழ்ச்சியாக மேலும் கீழுமாக உலாவுவதற்கு அதன் பாதங்களில் உள்ள விரல்களின் அமைப்பும், இயல்பான கால்களும் மரங்களின் மீது உயரவாக்கில் கூட நெடு நெடுவென ஏறுவதற்கு உதவுகின்றன. உயரமாக கிளைகளின்றி வளர்ந்திருக்கும் மரங்களிலும் தம் அலகால் ட்ரம் இசைக்கத் தயங்குவதில்லை இப்பறவைகள்.

ஹிட்லர் கொடுத்த தண்டனைகளில் கொடுமையானது எனக் கருதப்படுவது எது தெரியுமா ? தனக்கு பிடிக்காதவனைத் தலையசைக்க முடியாமல் கட்டி வைத்து அவனது தலையுச்சியில் ஐந்து வினாடிக்கு ஒரு சொட்டு தண்ணீர் துளி விழுவது போல் செட்டப் செய்ததுதான் ! இப்படி தலையுச்சியில் விழும் நீர்த் திவலைகள் ஒரு சில மணி நேரத்திற்கு மட்டும்தான் தண்ணீர் துளிபோல் தெரியும்.

அதன் பிறகு மூளையின் இயல்பான செளகரியம் பாதிக்கப்படுவதால், ஒவ்வொரு நீர்த்துளியும் ஒரு பெரிய பாறாங்கல் போல தோன்றுமாம். இது போல இந்த மரங்கொத்திப் பறவைகள் இரைதேடும் நிமித்தம் தட்... தட்... தட்...டென ட்ரம் வாசிப்பது போல் தொடர்ந்து தினந்தோறும் மரம்கொத்துவதால், அந்த ஓசை, மூளையையும் பாதிக்க ஏராளமான வாய்ப்பிருக்கிறது. அதன்பிறகு இப்பறவை ஒரு மென்டல் மரங்கொத்தி.


ஆனால், இந்த எளிய மரங்கொத்திப் பறவைகளுக்கு இயற்கை பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இப்பறவைகளின் மண்டையோட்டுக்குள் மிகச் சிறிய பருமனில் மூளையை அமைத்து, அதை பாதுகாக்க வைக்க, மண்டையோட்டிற்கும், மூளைக்கும் இடையே உள்ள இடைவெளியை உலகில் மற்ற எந்த பறவைக்கும் இல்லாத வகையில் அதிகமாக அமைந்திருக்கிறது.

எனினும் இந்தப் பறவைகளின் அலகின் மரத்தொடர்பு, ட்ரம் இசை தொடங்கிய வினாடியின் ஆரம்பத்திலேயே இப்பறவையின் மூளை இந்த மறைமுக ஆபத்தை உணர்ந்துவிடுகிறது. எனவேதான் முதல் கொத்தின் தொடக்கத்திலேயே, இப்படி மரங்கொத்துவதால் தெறிக்கும் மரத்துகள்கள் கண்களில் படாமல் இருக்க மூன்றாவது இமையான மெல்லிய பாலிதீன் கண் போர்வையைக் கண்களில் போர்த்திவிட இதன் சின்னஞ்சிறு புத்திசாலி மூளை சரியாக
உத்தரவு இடுகிறது. 5- ம் அறிவு !

இவ்வாறு இரைத் தேட மரங்களைத் கொத்தும்போது, அலகும் அதன் மூக்குத் துவாரங்களும் அருகருகே இருப்பதால் அதனுள் மரத்துகள்கள் புகுந்து நுரையீரல் நோய்களை ஏற்படுத்திவிடக் கூடும். எனவேதான் இயற்கை இதன் நாசித்துவாரங்களை மிகவும் குறுகியதாகவும், நீளவடிவிலும் அமைந்திருப்பதோடு, தூசுகளை வடிக்கட்ட ஏராளமான சிறகுத் தடைகளையும் அமைத்திருக்கின்றது. இப்படி ராணுவப் பாதுகாப்பு இருப்பதால்தான் இப்பறவைகள் நகர்புற மரங்களைக் கூட தைரியமாக கொத்திக் கொண்டிருக்கின்றன.


அங்குமிங்குமாக அடிக்கடி தாவிப் பறந்தோடும் ஆர்ப்போரியல் குணம் கொண்ட மரங்கொத்திப் பறவைகளின் வாழிடப் புவியியல் நேர்த்தி வெகுவாக வேறுபடுகிறது. மனிதர்கள் நெரிசலாக வாழும் நகர்ப்புறங்களில் உள்ள பூங்காக்கள், மரங்கள் நிறைந்த வளாகங்கள் ஆகிய இடங்களில் தொடங்கி மூங்கில் காடுகள், நதிக்கரையோரங்கள், உயர் மரக்காடுகள், குட்டை மர நிலங்கள், மழை மிகுந்த காடுகள் வரை எங்கும் இப்பறவைகள் வாழ்கின்றன.

அதுமட்டுமல்ல, சொற்ப மரங்கள் மட்டுமே இருக்கும் பாலைவனத்தைக் கூட இவை விட்டு வைப்பதில்லை. பாவம், இப்பறவைகளுக்கு முற்களுடன் கூடிய உயரமான கள்ளி மரங்கள்தான் பாலைவனத்தில் கிடைக்கும். எனினும், மரங்கொத்தி இனங்கள் இங்கும் சுக ஜீவனம் செய்கின்றன. பாலைவனப் பறவைகள்.


இப்படி இப்பறவைகள் தாம் வாழும் இடங்களில் 1000 முதல் 3000 ஏக்கர் வரையான பகுதியைத் தம் எல்லையாக நிர்மாணித்துக் கொள்கின்றன. இத்தகைய எல்லைப்புறத்திற்க்குள் கூட்டு வாழ்கையை விரும்பாமல் கோபத்தோடு தனிமையில் திரியும் வகை, கூட்டமாக தம் இனத்தோடு இணக்கமாக வாழும் வகை மற்றும் மற்றபிற பூச்சியுண்ணும் வகை பறவைகளுடன் நட்போடு பழகித் திரியும் என மூன்று வகை மரங்கொத்திகள் உள்ளன. வாழ்வியல் சாதுர்யம் !

மரங் கொத்திப் பறவைகளில் பெரும்பாலானவை மிலிட்டரி விலாஸ் பார்ட்டிகள்தான் ! சில இனங்கள் மட்டும் தரை மீது சைவ உணவு தேடி அலைவதுண்டு. இதிலும் சில ரகங்கள் குறுகிய உயரத்திற்கு மரங்களில் தாவி, திருட்டுத்தனமாக அசைவம் புசிப்பதுண்டு. எனினும் சில மரங்கொத்தி இனப் பறவைகள் மட்டுமே முற்றிலும் மரங்களைத் துறந்து, துறவிகள்
போல் தரை வாழ்க்கை வாழ்கின்றன. மரங்கொத்தித் துறவிகள் !

இயல்பில் ஏராளமான மரங்கொத்தி இனப் பறவைகள் மரங்களைக் கொத்தி துளையிட்டு உள்ளிருக்கும் பூச்சியினங்களையும் அதன் இளம் பருவப் புழுக்களையும், உறிஞ்சியும், ஒட்டி எடுத்தும் உட்கொண்டே வாழ்கின்றன. இதற்கு இப்பறவைகளின் தந்தம் போன்ற உறுதியான மற்றும் கூரிய அலகுகள் பெரிதும் உதவுகின்றன. இந்த அலகுகள் இப்பறவைகளுக்கு நிஜத்தில் ஓர் இரை ஆயுதம் !


ஒரு தச்சன் மரச்சாமான்கள் செய்யும் போது, மரத்தில் பல்வேறு கருவிகளைக் கொண்டு துளையிடுவதுண்டு. இத்தகைய வசதிகள் ஏதுமின்றி அலகு எனப்படும் இரை ஆயுதத்தை வைத்துக் கொண்டே இப்பறவைகள் அவர்களைவிடவும் விரைவாகவும், எளிதிலும், மரங்களில் துளையிட்டு விடுகின்றன. அதாவது சுத்தியல் கொண்டு அடிப்பது போன்ற திடத்துடன் இப்பறவைகள் தம் அலகால் கொத்தல்களை மரத்தின் மீது வீசுகின்றன. அதாவது ஒரு சொடக்குப் போடும் வினாடி நேரத்திற்குள் இந்த மரங்கொத்திப் பறவை 14 - 16 முறை மரத்தைக் கொத்தி விடுகின்றது. என்னவொரு அசாத்திய வேகம் ? இப்படியே இவை ஒரு நாளில் 8000 முதல் 12000 கொத்தல்களை மரத்தின் மீது வீசுகின்றன. இதனால்தான் எத்தகைய கடினமான மரமும் இப்பறவைகளுக்குக் கட்டுப்பட்டு விடுகின்றன. வீரப்பராக்கிரம அலகு !

மரங்கொத்திப் பறவைகள் மரங்களின் மீது வாசிக்கும் அலகு இசை உண்மையில் ஒரு அழகிய இசைதான் ! தம் இரை தேடலுக்காக மரத்தின் மேற்புறத்தில் ஒரு கவசம் போல் அமைத்திருக்கும் மரப்பட்டைகளுக்கு இடையில் துவம்சம் புரிந்து கொண்டிருக்கும் எறும்புகள், வண்டுகள் மற்றும் இன்ன பிற பூசிகளைக் கவர்ந்து உட்கொள்வதற்காக மரங்கொத்திகள் மரங்களை கொத்துகின்றன. இப்பறவைகளுக்கு சாதுர்யமான குரலோசை கிடையாது. மலிந்து கிடக்கும் இரை மற்றும் காதலை வெளிப்படுத்த இப்பறவைகளுக்கு பிரத்யேகக் குரலிசை இல்லை. எனவே மரங்கொத்தலில் ஏற்படும் பட்...பட்...பட்... ஒலியையே இவை சங்கீதமாகச் சகாக்களுக்கு அறிவிக்கின்றன. கொத்தல் மொழி !

பொதுவாக மரங் கொத்திப் பறவைகள் தாங்கள் வாழும் பகுதியில் உள்ள மரங்களில்தான் கொத்தியே வாழ்கின்றன. இவை பசுமையான, பளிங்கு பதித்தாற் போலிருக்கும் மரங்களைத் தீண்டுவதில்லை. அப்படியே அம்மரத்தைத் துளைத்தாலும் புழு, பூச்சிகள் இருக்காது. எனவே, வயதாகி பட்டைகளில் வெடிப்புகள் விழுந்துள்ள மரங்களிலும், பட்டுப்போன மரங்களிலும், உளுத்துப்போன மரங்களிலும் மட்டுமே இப்பறவைகள் இசைக் கச்சேரியை வைத்துக் கொள்கின்றன. இதில் பட்டுப்போன மற்றும் உளுத்துப்போன மரங்களில் உள்ள மேற்பட்டைகளுக்கும் மரத்தண்டிற்க்கும் இடையே, சிறிய இடைவெளி இருப்பதால், இந்த கொத்தல் இசை மிகுந்த ஒலியுடன் இருக்கும். மர இசை!


மரங் கொத்திப் பறவைகளின் தினசரி உணவில் மர எறும்புகள், மரந்துளைக்கும் வண்டுகள், இவற்றின் இளம்பருவப் புழுக்கள், பழங்கள், கொட்டைகள், மற்ற சிறு பூச்சிகள் ஆகியவை இடம் பெறும். இவை இணக்கமாக புறா, காக்கை, புல்புல், மைனா, கொண்டைக்குருவி மற்றும் மரத்தலையான் பறவைகளோடு சேர்ந்து இரைதேடும். இவை அந்திப்பூச்சிகளையும், ஈசல்களையும் துரத்திப் பிடித்து உட்கொள்ளும். நல்லிணக்க விருந்து !

மரங் கொத்திப் பறவைகளின் நாக்கு, இரையைக் கவருவதற்கு ஏற்ப அமைந்துள்ளது. இதன் நாக்கு மிகவும் உறுதியோடும் 4 அங்குல நீளத்திற்கு வெளியே நீளக்கூடியதாகவும் இருக்கிறது. மேலும், நாக்கின் மேற்புறத்தில் மெல்லிய முள் போன்ற அமைப்பும், பசைபோல் ஓட்டும் தன்மையுடைய எச்சிலும் இருக்கிறது. இது போல நாக்கின் வடிவமைப்பும் அவற்றின் இரைப் பிரியத்திற்கு ஏற்பவே அமைந்துள்ளது !


மூங்கில் காடுகளில் வாழும் மரங்கொத்திகளுக்கு குட்டையான ஸ்பூன் வடிவ முனையுடன் நாக்கு இருக்கிறது. தரையில் இரைதேடுபவைகளுக்கு தட்டையான நாக்கு இருக்கிறது. மரப்பட்டைகளில் இருக்கும் புழு பூச்சிகளை உட்கொள்ளும் பறவைகளுக்கு கூரிய நீண்ட நாக்கு இருக்கிறது. இதனால், பட்டைகளின் இடைவெளிக்குள் நாக்கை நுழைத்து இரை கவர முடிகிறது. மரங்களில் துளையிட்டு சுரங்கம் போல அமைத்து இரையுறிஞ்சும் பறவைகளுக்கு பிரஷ் போன்ற நாக்கு இருக்கிறது. இதைக் கொண்டுதான் இவை வெற்றிடத்தை உருவாக்கி உறிஞ்சுகின்றன. இதனால் உருவாகும் ஈர்ப்பு விசையை எதிர்கொள்ள முடியாமல் உள்ளிருக்கும் எறும்புகள் சாரை சாரையாக வயிற்றுக்குள் அணிவகுத்து வந்து சேர்ந்து விடுகின்றன. இறையுறிஞ்சும் வித்தை !

கொத்தல்களையே தொழிலாகக் கொண்ட மரங்கொத்திப் பறவைகளுக்கு, காலப்போக்கில் தொடர்ச்சியான இந்தக் கொத்தல் ஒலியே கூட ஒரு வித மூளைச் சிதைவை ஏற்படுத்தி விடக் கூடும். இந்த அபாயத்தைத் தவிர்க்கவே மற்ற பறவைகளைவிடவும் இவற்றின் மண்டையோடு தடிமனாகவும் உறுதியோடும் இருக்கின்றன. கூடவே இந்த மண்டையோட்டுடன் இணைந்துள்ள கழுத்து மற்றும் முகத் தசைநார்கள் மிகவும் உறுதியாக நைலான் தரத்தில் அமைந்துள்ளன. வினோத படைப்பு.

பொதுவாக மரங்கொத்திப் பறவைகள் கற்பு நெறி தவறுவதில்லை. ஒருமுறை உணர்ச்சிவசப்பட்டு பெண்/ஆண் பறவை ஒரு ஆண்/பெண் பறவையுடன் இணைந்துவிட்டால், அப்புறம் ஆயுசு முழுவதும் அதே பழைய பறவைதான் கணவன்/மனைவி. எனினும் சில தில்லுமுல்லு மரங்கொத்தி இனங்களும் இருக்கின்றன. இவ்வினங்களிலும் அப்பாவி ஆண் பறவைகள், தன் இணையே கதி என்று கிடக்கின்றன. சில பெட்டை மரங்கொத்திகள் கணவனுக்கு எதிரிலேயே இன்னொரு ஆண்பறவையை சிலாகிப்பது ஆச்சரியம். ஆம், பெண் மரங்கொத்தியின் சின்ன வீடு !


ஆண் மரங்கொத்திகள் சற்றும் முகம் சுழிக்காமல், இணக்கமாக நட்புடன் கூடு அமைத்துக் குஞ்சு பொரிக்கவும் உதவி செய்யும் தன்மையுடையது. மரங்கொத்திப் பறவைகளின் மன்மத லீலைகள் மிகவும் சுவாரசியமானவை. இதன் லீலா விசேஷங்கள் ஏப்ரல் மத்தியில் தொடங்கி மே மாதம் இறுதிக்குள் அடங்கிவிடும். இந்த 45-50 தினங்கள் இப்பறவைகளின் வாழ்க்கையில் தகதகக்கும் தங்க தினங்கள் !

ஆண் பெண் மரங்கொத்திப் பறவைகள் இரண்டும் தோராயமாக ஒரு வண்ணத்தில் காணப்பட்டாலும், இன விருத்திக் காலத்தில் மட்டும் ஆண் பறவைகளின் தலை மற்றும் தொண்டைப் பகுதியில் உள்ள சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத் தீற்றல்கள் சற்றே அதீதப் பளபளப்புடன் பெட்டைகளை ஈர்க்கும் வகையில் இருக்கும். வண்ணக் கவர்ச்சி !

இனவிருத்தி சீசனில், ஏற்கனவே குஞ்சு பொரித்த பெட்டைகள், எவ்வித சபலமும் இன்றி பழைய கணவன்களுடன் காதல் புரியத் தொடங்கி விடுகின்றன. புதிய வாளிப்பான பெட்டைகளை ஆண் பறவைகள் நூல் விடுவது வாடிக்கை. இப்பறவைகளுக்கு பெட்டைகளை ஈர்ப்பதற்கு இனிய சங்கீதம் எதுவும் இல்லை. வாய் திறந்தால் வெறும் கிளிக்... கிளிக்தான் !

இதனால்தான் இவை மரங்கொத்தலில் ஏற்படும் மத்தள வாசிப்பையே காதல் அழைப்பாக விடுக்கின்றன. இதே ஒலியை சற்றே கூட்டி இசைத்து, இது எனது எல்லை, இதற்குள் பிற ஆண் மரங்கொத்திகள் வரக்கூடாதென்று எல்லைப் பிரதேசத்தையும் நிர்ணயிக்கின்றன.

ஒரு வழியாக ஒரு இளஞ்ஜோடி சேர்ந்துவிட்டால், அவற்றுக்குள் ஏகப்பட்ட குதூகலம்தான். ரகசியமாக ஒரு மரக்கிளையில் அமர்ந்து கொண்டு மூக்கு உரசலும், சிறகு கோதலுமாக சில்மிஷம் செய்து கொள்கின்றன. அப்புறம் ஆண் பறவை சட்டென்று மேலும் கீழுமாகவும், வளைந்து வளைந்தும் படு வேகமாகப் பறக்கும். அப்படியே படபடவென இறக்கைகளை அடித்துப் பறப்பதை நிறுத்தி, பெட்டையை ஆச்சர்யமூட்டி, மறுபடி சற்றுதூரம் வேகமாகப் பறந்தது விட்டு அருகில் வந்து வெற்றி வீரன் போல் அமர்ந்து கொள்ளும். இதன்பிறகு பெண்பறவை எல்லாவற்றையும் எளிதில் அனுமதித்து விடும். மகேந்திரப் பொருத்தம் !


சாந்தி மூகூர்த்தம் முடிந்த மரங்கொத்திப் பறவைகளின் அடுத்த இலக்கு முட்டை போட்டுப் பராமரிக்க ஒரு பாதுகாப்பான கூடு அமைப்பதுதான். பறவைகளின் கூடு அமைக்கும் தன்மை பலதரப்பட்டவை ! இது பறவைக்குப் பறவை, ஏன் இனத்திற்கு இனம் கூட மாறுபடக் கூடும்.

மரங்கொத்திப் பறவைகள் போல், மரங்களில் பொந்து அமைத்து முட்டையிடும் பல்வேறு பறவைகளின் இனவிருத்திக் காலம் ஒன்றாகவே இருப்பதால், மரங்களுக்குப் போட்டி எக்கச்சக்கமாகவே இருக்கும். மரங்கொத்திப் பறவைகளின் இனவிருத்தி இருப்பிடம் அநேகமாக சிதிலமடைந்தத அல்லது உளுத்துப்போன மரங்கள்தான். இந்த மரங்களில் தேவையான அளவு கூடு அமைப்பது எளிது. சுலப வீடு !

இத்தகைய வீட்டுக் கூடை கொத்தி நிர்மாணிப்பதற்கு ஜோடிப் பறவைகள் இரண்டும் ஒருசேர உழைக்கும். சமயத்தில் இத்தகைய மரங்களில் இருக்கும் சிறு துவாரம் அல்லது வெடிப்பை, அஸ்திவாரமாகக் கொண்டு பொந்து அமைப்பது வாடிக்கை. சில வேளைகளில் எதிரிகளின் ஆபத்தைத் தவிர்க்க இவை ஏதேனுமொரு மரக்கிளையின் அடிப்புறத்தில் தலைகீழான பொந்தினை அமைப்பதும் உண்டு. எப்படி அமைந்தாலும் பொந்தின் நுழைவாயில் தாய்ப்பறவையின் உடல் பருமனைவிட சொற்ப அளவே பெரிதாக இருக்கும்.


பல மரங்கொத்திகள் ஒவ்வொரு சீசனுக்கும் புதிதாக இத்தகைய கூடுகளை அமைக்கின்றன. சில சோம்பேறி மரங்கொத்திகள் பழைய பொந்தையே புதிப்பித்துப் பயன்படுத்துவதுண்டு. எப்படியும் இப்பறவைகள் அமைக்கும் கூட்டிற்குள் மென்படுக்கை அமைக்க உதிரும் மரத்துகள்களை சாதுர்யமாக பயன்படுத்துகின்றன. இயற்கை படுக்கை !


இவ்வாறு பாதுக்காப்பான கூடு அமைத்தவுடன், பெண் பறவை அதனுள் 2 - 5 முட்டைகளை இடுகின்றது. பாதுகாப்பற்ற திறந்தவெளி கூடுகளில் முட்டையிடும் பறவைகள்தான் பல்வேறு பாதுகாப்பான நிறங்களில் முட்டையிடுகின்றன. ஆனால், மரங்கொத்திப் பறவைகளின் முட்டைப் பொந்துகள் வெகு பாதுகாப்பானவை. மேலும் இந்த வெள்ளை நிற முட்டைகளை தாய் பறவைகள் இரவு நேரத்தில் கூட கண்டறிந்தது பராமரிக்க முடிகிறது.


இம்முட்டைகள் 11 -14 நாட்கள் அடை காக்கப்பட்டு வெளிப்படும் இளம் குஞ்சுகள் 20 - 30 நாட்கள் பொந்திலேயே பராமரிக்கப்படுகிறது. இப்பருவத்தில் குஞ்சுகள் அனைத்தையும் கற்றுக் கொண்டு கூரிய அலகுடன் கொத்தப் புறப்பட்டு விடுகின்றன.






தகவல் மற்றும் நன்றிகள் :
மருத்துவர் ஆர்.கோவிந்தராஜ் மற்றும் முத்தாரம் இதழ்.

Wednesday, January 25, 2012

படம் சொல்லும் சேதி


பற்களை துலக்காமல் சாப்பிடலாமா என்று வீட்டில் யாராவது கேட்டால் 'ஆடு மாடு எல்லாம் பல் தேய்க்கிறதா ?' என்ற பதில் பளிச்சென வரும். இனி அப்படி யாரும் சொல்ல முடியாது. ஜெர்மனியில் ஹாம்பர்க் நகர விலங்குகள் பூங்காவில் உள்ள எட்டு வயது யானை தினமும் பல் தேய்க்கிறது. இதற்காக இந்த யானைக்கு பிரத்யேகமாக பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.



கின்னஸ் சாதனைக்காக தைவானில் சாங் குவா என்ற இடத்தில் ஒரே நேரத்தில் 170 பள்ளிகளைச் சேர்ந்த 4600 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட மாபெரும் வயலின் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல மணி நேரம் நின்று கொண்டு வயலின் வாசித்த மாணவர்கள் 86 ஆண்டு கால முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை புரிந்து இருக்கிறார்கள்.



அமெரிக்காவின் நியூயார்க் நகரில் டேரல் ஹீமென்னி - ஸ்டெபனி பீட்டர்சன் தம்பதியருக்கு ஒரு குழந்தை 2011 டிசம்பர் 31-ம் தேதி இரவும், அடுத்த குழந்தை 6 மணி நேரம் கழித்து 2012 ஜனவரி முதல் தேதியும் பிறந்தன. மருத்துவ விதிப்படி முதலில் பிறந்த குழந்தையே இரண்டாவது குழந்தை. இதன்படி பார்த்தால் 2012-ல் பிறந்த குழந்தை மூத்த குழந்தை, 2011-ல் பிறந்த குழந்தை இளையக் குழந்தை. இப்படியும் ஒரு வினோதம்!



தகவல் : முத்தாரம் இதழ்.

கனவுத் தொழிற்சாலை 10



இந்தியாவின் முதல் திரையரங்கம் கட்டப்பட்ட நகரம் கொல்கத்தா. அதன் பெயர் சாப்ளின். கட்டியவர் ஜே.எஃப். மதன். கட்டப்பட்ட ஆண்டு 1907.



ஆஸ்கார் விருது பெற்ற ஒரே ஊமைப்படம் விங்ஸ். 1927 - ல் வெளியானது.




இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் படம் சமுதாயம். இது 1962 - ல் வெளியானது.



35 முறை ஆஸ்கார் விருதுகளை வென்ற ஒரே நபர் வால்ட் டிஸ்னி மட்டுமே.



வங்க மொழியில் வெளிவந்த முதல் திரைப்படம் முஹ் ஒ முகோஸ் (Mukh O Mukhosh). வெளியான ஆண்டு 1956.




தபால் தலையில் இடம் பெற்ற முதல் நடிகை கிரேஸ் கெல்லி.



பாடல்களே இல்லாமல் தயாரிக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் 'நவ்ஜான்'. படம் வெளியான ஆண்டு 1937. பாடல்களே இல்லாத முதல் தமிழ் படம் 'அந்த நாள்'.


இந்தியத் திரையுலகின் முதல் கதாநாயகி கமலாபாய் கோகலே.



ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் எனும் படம் ஆஸ்கார் விருது பெற்றது.



இசையுடன் கூடிய முதல் திரைப்படத்தை உருவாக்கியவர் லீ டி ஃபாரஸ்ட் (Lee De Forest). ஆண்டு 1923.





தகவல் : எஸ்.சடையப்பன். சி.பரத், கே.ஜெயலட்சுமி, கோவிந்த்.

Tuesday, January 24, 2012

தகவல் களம் !

ஆமைப் புராணம்


ஆமையை மல்லாக்கப் படுக்க வைத்தால் அது அப்படியே கிடக்கும். தானாகக் குப்புறப் படுக்க அதற்குத் தெரியாது. அப்படியே கிடந்து கடைசியில் இறந்தே போய்விடும். ஆமையின் ஓடு மிகவும் வலுவானது. அதனை பலமாகத் தாக்கினாலும், ஓடும் பாதிக்கப்படாமல், ஆமையையும் அது காக்கும். கடல் ஆமைகள் ஒரே சமயத்தில் 100 முதல் 200 முட்டைகள் வரை இடும். கோழி முட்டை அளவில் இருக்கக் கூடிய இவற்றை கரைக்கு வந்து இட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். சூரிய வெப்பத்தால் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவந்த உடனே கடலை நோக்கி அவை ஓடும். போகும் வழியிலேயே சில கடல் பறவைக்கும், பிற பிராணிகளுக்கும் இரையாகவும் நேரிடும். ஆமைகள் 150 ஆண்டுகள் வரை வாழக்கூடியதாகும்.


புகைவண்டிப் புராணம்


இந்தியாவில் மேற்குவங்கத்தில் உள்ள கோரக்பூர் புகைவண்டி நிலைய நடைமேடைதான் (Platform) உலக புகைவண்டி நடைமேடைகளிலே மிகவும் நீளமானது. மும்பையிலிருந்து சூரத் நகர் வரை இயக்கப்படும் அதிவேக புகைவண்டியின் பெயர் பறக்கும் ராணி. இந்திய புகைவண்டித் துறையில் மொத்தம் 16 நிர்வாக மண்டலங்கள் உள்ளன.

குறள் புராணம்


குறள் வெண்பா என்ற தமிழ் இலக்கணப்படி அமைந்தது திருக்குறள். இந்த வெண்பா வகையைச் சேர்ந்த வேறு நூல் எதுவுமே தமிழில் இல்லை. திருக்குறள் மட்டுமே.

விதைப் புராணம்


பொதுவாக தாவர விதைகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முளைக்கும் தன்மையை இழந்து விடுகின்றன. ஆனால், தாமரையின் விதை மட்டும் 400 ஆண்டுகளுக்குப் பிறகும் முளைக்கக் கூடிய திறன் படைத்தது. இந்த விதையின் மீது கெட்டியான ஓடு இருப்பதே இதற்குக் காரணம்.




தகவல் : வித்யுத்.

Sunday, January 22, 2012

படம் சொல்லும் சேதி !


புத்தாண்டையொட்டி பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்ற பழமையான் குட்டி நீராவி இழுவை இயந்திரங்களின் அணிவகுப்பில் ஆர்வமாக இலக்கை எட்டும் பிரிட்டன் வாசிகள்.



ஜெர்மனியில் ஹனோவர் நகர மிருகக்காட்சிச் சாலையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன. இங்குள்ள விலங்குகளை சிறந்த முறையில் பராமரிக்க அவற்றின் எடை, உயரம் உள்ளிட்ட அளவுகளை ஒவ்வொரு ஆண்டும் அளவெடுப்பார்கள். அந்த வகையில் மிருகக்காட்சிச் சாலையில் உள்ள குட்டி ஆமையின் எடையை சரி பார்க்கிறார்கள்.



இந்தியாவில் சிங்கங்கள் உள்ள ஒரே மாநிலம் குஜராத். இங்குள்ள கிர் காட்டில் தற்போதைய நிலவரப்படி 411 சிங்கங்கள் உள்ளன. சமீபத்தில் கிர் காட்டில் எடுக்கப்பட்ட சிங்கக் கூட்டத்தின் படம்தான் இது.



சீனப் புத்தாண்டை 'வசந்த விழா' வாகக் கொண்டாடுவது சீனர்களின் வழக்கம். இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே தயாராவார்கள். வசந்த விழாவில் தடபுடலாக விருந்து உபசாரம் நடத்துவதற்காக மீன்களை உலர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.




தகவல் : முத்தாரம் இதழ்.

Friday, January 20, 2012

ஃபாசில் என்றால்.......?


ஒரு புகைப்படத்தையும், அதன் பின்னணியையும் பார்த்து அது எடுக்கப்பட்ட காலத்தை நாம் அறியலாம். அதுபோல மகரந்தூளின் சின்னஞ்சிறு படிமத்தை (ஃபாசில் - Fossil) ஒரு நுண்ணோக்கியை (Microscope) வைத்து பார்க்கும் போது அதன் வடிவம் தெளிவாக புலப்படும்.

அது எந்தத் தாவரத்தினுடையது, எப்படி அந்தத் தாவரம் தோன்றியது, அந்தக் காலகட்டத்தில் பருவநிலை எப்படி இருந்தது ..... இப்படி எத்தனையோ செய்திகளை அந்தத் துகளிலிருந்தே அறிய முடியும். ஒரு படிமத்தை ஆராயும்போது அந்த உயிரினம் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வளர்ச்சியடைந்தது, எத்தனை வயதில் இறந்து போனது போன்றவையும் தெரிய வரும். அதற்கு இழைதழைதான் உணவா அல்லது ஆடு-மாடுகளை ஒரு கட்டு கட்டுமா என்பதைக் கூட இப்போது அறிய முடியும்.


இப்படி தனிப்பட்ட உயிரினங்களின் பண்புகளை அறிய முடிவது மட்டுமல்ல.... ஒட்டுமொத்த உயிரின உலகத்தையும், ஆவணமாகப் பாதுகாக்கும் பதிவாளர் பணியையும் படிமங்களே செய்கின்றன. சில சமயங்களில் உயிரினங்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்ததையும், சில வேளைகளில் படு மந்தமாக இருந்ததையும் கூட இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.



சில உயிரினங்கள் முழுக்கவே அழிந்துபோன சோகத்தை படிமங்கள் மூலம் அறிய முடிந்தாலும், அதற்கான காரணங்கள் பற்றிய விவாதங்கள் விஞ்ஞானிகள் மத்தியில் இன்னும் தொடர்கின்றன. க்ரிட்டேசியஸ் காலகட்டத்தில்
டைனோசர்களோடு வேறு பல உயிரினங்களும் மொத்தமாக மறைந்தன. பூமியில் விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட விளைவு இது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.



தகவல் : முத்தாரம் இதழ்.

Wednesday, January 18, 2012

நம்பினால் நம்புங்கள் !


மனித டிஎன்ஏ (DNA) 95 சதவிகிதம் சிம்பன்சி டிஎன்ஏ-வைப் போன்றே இருக்கிறது.



மன அழுத்தம் காரணமாக 90 சதவிகிதம் நோய்கள் ஏற்படவோ, தீவிரம் அடையவோ செய்கின்றன.



சிறிய மானைக் கொன்று தூக்கிச் செல்லும் வலிமை கழுகுக்கு உண்டு.



ஜாம்பியா, ஜிம்பாப்வே நாடுகளுக்கு இடையிலுள்ள விக்டோரியா நீர்விழ்ச்சியின் சத்தத்தை 40 கிலோமீட்டர் தொலைவிலும் கேட்க முடியும்.



மனிதன் சராசரியாக தினம் 11 ஆயிரம் லிட்டர் காற்றைச் சுவாசிக்கிறான்.


தகவல் : முத்தாரம் இதழ்.