Wednesday, February 29, 2012

தகவல் களம் !


பழங்கால இந்தியாவின் நலந்தா பல்கலைக்கழகத்தில் ஏராளமான அரிய புத்தகங்களுடன் இருந்த நூலகத்தை, 'முத்துகள் நிறைந்த கடல்' என்று உலகமே வியந்து பாராட்டுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது தொடங்கப்பட்ட இந்திய தேசிய நூலகம் கொல்கத்தாவில் உள்ளது. இந்த நூலகத்தில் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியான புத்தகங்கள் பல உள்ளன. இதே போல மற்றொரு இந்திய நூலகமும் புகழ் பெற்றது. அது, நம் சென்னையின் கன்னிமரா நூலகம்.


ஒரு பூனை நம்மை உற்றுப் பார்க்கிறது என்றால் அதன் பார்வை, "நீ என்ன பெரிய இவனா ?" என்று எடை போடுவது போல் இருக்கும். "நான் ஏன் உன்னை நம்ப வேண்டும் ? நீ எனக்கு யார் ? உனக்கு இங்கே என்ன வேலை ? என்பது போன்ற கூரிய விசாரணை அந்தப் பார்வையில் பதிந்திருப்பதாக விலங்கியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூனைகள் ஆழ்ந்து தூங்குபவை. தூங்கும்போது கனவும் காண்கின்றனவாம்.அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் அமைந்துள்ளது ட்யூபா நகரம். இங்கு பழங்காலச் சித்திர எழுத்துக்களை கண்டுபிடித்துள்ளனர் ஆய்வாளர்கள். குதிரை, மனிதனின் முகம், செடியின் வேர் என 5000 சித்திரங்கள் அங்குள்ள பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. ஹோபி பழங்குடியினர் வரைந்தவையே இவை. இப்படி ஒரே இடத்தில் அதிக சித்திரக் குவியல் கிடைத்தது இதுவே முதல் முறை. ஏதோ செய்தியை மற்றவர்களுக்குச் சொல்ல இவை வரையப்பட்டிருக்கலாம் என்பதால் 'நியூஸ் பேப்பர் ராக்' (Newspaper Rock- Arizona) என்று இதற்கு பெயரிட்டு இருக்கிறார்கள்.


தங்க இழைக் கொண்டு நெய்தது போல் தகதகவென்று மின்னும் இந்த உடையை சைமன் பீர்ஸ் மற்றும் நிக்கோலஸ் கோட்லே என்பவர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர். லண்டனில் இருக்கும் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் இந்த உடையை நெய்ய நான்கு ஆண்டுகள் பிடித்தது.


ஒரு வகை சிலந்தி வலையில் நெய்த ஆடை இது. மடகாஸ்கர் பகுதியில் கோல்டன் ஆர்ப் சிலந்திகள் (Golden Orb spiders) உள்ளன. இவை பின்னும் வலைகள் தங்க நிறத்தில் இருக்கும். எவ்வாறு பட்டுப் புழுவின் கூட்டிலிருந்து பட்டு நூலைத் தயாரிக்கிறோமோ, அதே போல் இந்த சிலந்தியின் வலையிலிருந்து இந்த தங்க நிற நூலைத் தயாரிக்கிறார்கள். ஒரு உடை தயாரிக்க மட்டுமே 10 லட்சம் சிலந்தி வலைகள் தேவைப்பட்டுள்ளன.
தகவல் : ராஜி ராதா, ஜக்கி விக்கி, ஷம்ரிதி, ப்ரியா.

Tuesday, February 28, 2012

நம்பினால் நம்புங்கள் !


அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் 1921 - ம் வருடம் ஒரு சட்டம் வந்தது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் யாராவது குறட்டை விட்டு அயலாருடைய தூக்கத்துக்கு தொந்தரவு செய்தால் அவருக்கு முதல் தடவையாக 20 பவுனும் (Pound), இரண்டாவது தடவையாக 200 பவுன் அபராதமும் விதிக்கப்படும் என்பதே அது. பின்னால் இந்த சட்டம் ரத்தானது.


(Swift Bird Nests)


'ஸ்விப்ட்' என்னும் குருவிகள், தமது வாயில் ஊறும் ஒரு விதப் பசையைக் கொண்டே தம் கூடுகளைக் கட்டுகின்றன. இந்தக் கூட்டை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் ஜப்பானியர்கள்.


(Singing Sand Hill- Kazakhstan)


ரஷ்யா அருகிலுள்ள கஜகஸ்தான் நாட்டின் பாலைவனத்தில் 'பாடும் மலை' ஒன்று உள்ளது. அல்டின் என்ற அந்த மலையின் மீது காற்று பட்டாலோ அல்லது அதன் சரிவுகளில் பிராணிகள் நடந்தாலோ, இனிய இசை எழுகிறது. மணல் குன்றுகளால் உருவான இந்த மலையின் மீது வறண்ட காற்று பட்டால் மட்டுமே இசை வருகிறது. ஈரக்காற்று பட்டால் அதன் ஒலி நின்று விடுகிறது.


(2 feet, Anoa midget Buffalo-Indonesia)

இரண்டு அடி உயரமுள்ள எருமை இருக்கிறது என்றால் அது இயற்கையின் விந்தைதானே. இந்தோனேஷியா அருகே உள்ள ஒரு தீவு செலிபிஸ் ஆகும். இத்தீவிலுள்ள காடுகளில் அனாவ் என்னும் குள்ள எருமையைக் காணலாம். இந்த எருமை முழு வளர்ச்சி அடைந்தாலும் கூட இரண்டு அடி உயரமே இருக்கும். பரவசமூட்டும் அழகுடையது இந்தக் குள்ள எருமை.

தகவல் : முக்கிமலை நஞ்சன்.

Monday, February 27, 2012

படம் சொல்லும் சேதி !


தெற்கு பிரான்சில் இருக்கும் மென்டன் நகரில் அறுவடை நேரத்தில் நடக்கும் 'எலுமிச்சை திருவிழா' (Lemon Festival in Menton, France) காட்சி இது. கடந்த 79 ஆண்டுகளாக இந்தத் திருவிழா நடக்கிறது. பிரான்ஸ் முழுக்க விவசாயிகளும், சுற்றுலாப் பயணிகளும் வருவார்கள். அவர்களை வரவேற்க 145 டன் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை வைத்து 300 பேர் உழைத்து உருவாக்கிய ஈபிள் டவர்.உலகின் மிகச் சிறிய பச்சோந்தியை ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவில் கண்டுபிடித்திருக்கிறார்கள் விலங்கியல் அறிஞர்கள். 'ப்ரூக்கேசியா மைக்ரோ' (Tiny Brookesia Micro) என பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் பச்சோந்தி மூக்கு நுனியிலிருந்து வால் வரை அளந்தால் மூன்று சென்டிமீட்டர் அளவில் இருக்கிறது. வாலைச் சுருட்டிக் கொண்டு நம் கட்டை விரல் நகத்துக்குள் அடங்கிவிடும் அளவு உள்ளது.உலகின் மிக உயிர்ப்பான நடனம் என்று சம்பா நடனத்தைச் சொல்வார்கள். அந்த ஒப்பனையும், அளவான ஆடையும், துடிப்பான இசையும் கலந்து கூட்டம் கூட்டமாக ஆடும் ஆட்டம். பிரேசில் நாட்டின் இந்த ஆட்டத்தின் மீது உலகமே மோகம் கொண்டு அலைகிறது. பிரேசில் தலைநகர் சாவ்பாலோவில் ஆண்டுதோறும் நடக்கும் 'சம்பா கார்னிவல்' தான் (Samba Carnival,Brazil) இது.


தகவல் : முத்தாரம் இதழ்.

Sunday, February 26, 2012

நாங்க எல்லாம் அந்த காலத்திலேயே......


'ஜியோடிங்கியா ஜெங்கி' (Xiaotingia Zhengi) என்ற இதற்கு முன் கேள்விப்பட்டிராத சீன விலங்கின் வரைப்படம் இது. பாறைப் படிமங்களில் உறைந்து கிடந்த பழங்கால எலும்புகளை வைத்து இந்த மாதிரிப் படத்தை உருவாக்கியுள்ளனர். இரண்டு பெரிய பிரமாண்டமான இறக்கைகள், சின்ன கூர்மையான மூக்கு மற்றும் தடிமனான கால்கள் கொண்ட இவை, டைனோசர் போன்ற வடிவமுள்ள பறவை இனத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று சீன தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது 'டைனோசர் லேட் ஜூராசிக்' காலகட்டத்தில் வாழ்ந்ததாம். வெறும் 800 கிராம் எடையே கொண்ட குட்டி இனமான இதுவே, பறவைகளின் முன்னோடியாக இருக்கலாம் என்கிறார்கள்.


வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த 'ஷீல்டுக்ரோக்' (Shieldcroc) என்ற இனத்து முதலையின் மாதிரிப் படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவின் மிசௌரி பல்கலைக்கழகம். இப்போது உலகெங்கும் வாழும் முதலை இனங்கள் அனைத்துக்கும் மூதாதை இதுதானம் !


இதன் வாய்ப்பகுதிக்கு முன்பாக ஒரு பாதுகாப்புக் கவசம் அமைந்து இருந்ததாம். அதனாலேயே இப்படி பெயர் வந்திருக்கிறது. முதலை இனம் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை அறியவும், அரிய முதலை இனம் அழிந்து விடாமல் காக்கவும் இந்த கண்டுபிடிப்பு உதவும் என்கிறார்கள்.பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால மனிதனின் மண்டையோட்டு முன்நெற்றிப் பகுதியை ஆராய்ச்சி செய்கிறார் தொல்பொருள் ஆய்வாளர் மேரி ஆன்டோனி. பிரெஞ்ச் ரிவேரா பகுதியில் உள்ள குகை ஒன்றில் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இது வேட்டையாடி வாழ்ந்த ஹோமோ எரெடக்ஸ் (Homo Erectus) இனத்தைச் சேர்ந்த 25 வயது ஆணின் மண்டையோட்டுப் பகுதி.

1
லட்சத்து 70 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஹோமோ எரெடக்ஸ் என்ற இந்த பழங்கால மனித இனத்தவரே உணவை சமைத்துச் சாப்பிடும் பழக்கத்தை முதன் முதலில் கற்றுக் கொண்டவர்கள். அதன் பிறகே மனித இனம் பரிணாம வளர்ச்சியில் அதீத முன்னேற்றம் கண்டது.
தகவல் : ஷம்ரிதி.

Friday, February 24, 2012

வெற்றி என்பது......வெற்றி பெற வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கிறது. படிப்பில், விளையாட்டுப் போட்டிகளில் இப்படி எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவார்கள். சுருக்கமாகச் சொன்னால் வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் யாருமே கிடையாது. வெற்றி பெற முடியாதவர்கள் உண்டே தவிர, வெற்றி பெற விரும்பாதவர்கள் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.

ஆனாலும் வெற்றி என்றால் என்ன என்கிற ஒரு வினாவிற்குப் பல்வேறு விதமான விடைகள் இருக்கின்றன.

பொதுவாக உலகம் நம்புகிற வெற்றி எதுவென்று கேட்டால், மற்றவரைக் காட்டிலும் முந்தி இருப்பது என்பதைத்தான், இந்த உலகம் வெற்றி என்று குறிப்பிடுகிறது. பணக்காரன் என்றால், யாரையெல்லாம் விடப் பணக்காரன், அறிவாளி என்றால் யாரையெல்லாம் விட அறிவாளி, சாதனையாளன் என்றால் யாரைவிடச் சாதனையாளன் என்று மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்துத்தான் நம் வெற்றியைத் தீர்மானிக்கிறோம்.

ஒப்பிடுதல் பிழையில்லை. ஆனால் அந்த ஒப்பீட்டில் ஒரு நுட்பமான குறை இருக்கிறது. மற்றவர்களைவிட முந்தி இருக்கிறோமா என்பதைக் காட்டிலும், நாமே நம்முடைய பழைய வெற்றிகளைக் காட்டிலும் முந்தி இருக்கிறோமா என்பதுதான் வெற்றியின் அடிப்படையான செய்தி. ஏற்கனவே பெற்றிருக்கிற வெற்றியைக் காட்டிலும் கூடுதலாக இன்னொரு கட்டத்திற்கு, இன்னொரு தளத்திற்கு, இன்னொரு இடத்திற்கு வந்து சேர்வதுதான் வெற்றி.ஏனெனில் மற்றவர்களோடு நாம் நம்மை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டிய தேவையில்லை.ஒவ்வொருவருடைய வாழ்க்கைச் சூழலும் வேறுவேறாக இருக்கிறது. அவர்களுடைய பாரம்பரிய மரபியல் கூறுகள் வேறுவேறாக இருக்கின்றன. எனவே அடுத்தவனோடு போட்டி என்பதை விட நம்மோடு நாம் போட்டியிடுகிறோம் என்பது முக்கியமானது.

எந்த ஒரு செயலையும், அதேமாதிரியான இன்னொரு செயலை நாம் அடுத்த முறை செய்ய நேர்கிறபோது, அதைக் காட்டிலும் சிறப்பாகச் செய்திருக்கிறோமா என்பது மிக முக்கியமானது. காரணம் முன்னால் செய்ததைவிட இப்போது செய்கிறபோது நமக்கு அனுபவம் என்ற ஒன்று கூடுதலாகக் கிடைத்திருக்கிறது.

நாம் ஒரு தேர்வு எழுதினோம், அது ஓர் அனுபவம். ஒரு விளையாட்டுப் போட்டியிலே கலந்து கொண்டோம், அது ஓர் அனுபவம். இன்னொரு முறை நாம் பங்கேற்கிறபோது அந்த அனுபவம் நமக்குக் கூடுதலாகக் கைகொடுக்கிறது. எனவே ஒவ்வொருமுறையும் கூடுதலாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு நாம் வந்து சேர்வதுதான் அடிப்படையில் வெற்றி என்று பொருள்.

அதை நோக்கி நாம் செயல்படுகின்ற நேரத்தில், மற்றவர்களைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல், நம்முடைய பணியில் கூடுதல் கவனத்தோடு இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. அப்படி அடுத்தடுத்து மென்மேலும் வெற்றிகளைப் பெற்று வர வேண்டும் என்றால் நாம் கூடுதலாகத் திட்டமிட வேண்டும், கூடுதலாக உழைக்க வேண்டும். எந்தத் துறையில் நாம் இருக்கிறோமோ, அந்தத் துறையில் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் அடிப்படையான செய்தி.

அப்படிக் கவனம் செலுத்துவதற்கு எதுவெல்லாம் தடையாக இருக்கிறது ?

அழகான ஒரு முரணை நாம் பார்க்கலாம். வயது ஆக ஆக அனுபவம் ஏறுகிறது. இது ஒரு நல்ல செய்தி. ஆனால், வயது ஆக ஆக எந்த ஒரு மனிதனுக்கும் சலிப்பு வந்து சேர்கிறது. இது ஒரு எதிர்மறையான செய்தி. இந்த இரண்டு முரண்பட்ட நிலைகளிலே இருந்து நாம் தொடர்ந்து வெற்றிகளைப் பெற வேண்டுமானால், இவற்றிலிருந்து எப்படி விடுபடுவது என்பது முக்கியமானது.

வயதாகிறபோது அனுபவம் ஏறுகிறது. ஆனால், அத்தோடு அது நின்றுவிடுவதில்லை. நமக்கு இனிமேல் என்ன இருக்கிறது, ஏறத்தாழ வாழ்க்கையின் பாதிப் பகுதியை கடந்து வந்து விட்டோம், வாழ்க்கையின் முக்கால் முடிந்து போய்விட்டது என்கிற எண்ணங்கள்தான், நம்மை அடுத்த கட்டத்திற்குப் போக விடாமல் தடுக்கின்றன அல்லது பின்னே இழுக்கின்றன. அவற்றிலிருந்து விடுபடவில்லை என்றால் நம்முடைய அனுபவம் கூட நமக்குப் பயன்படாமல் போய்விடும்.

எனவே நாம் வயது பற்றிய ஒரு சிந்தனைக்கு வர வேண்டும். வயதானால் நம்மால் முடியுமா, முடியாதா என்றொரு கேள்வி எழுகிறது. அப்படியானால் வயது என்பது என்ன ? வயது என்பது உடல் சார்ந்தது மட்டும்தானா ? பொதுவாக, வயது என்பது உடல் சார்ந்ததன்று, நம்முடைய மனம் சார்ந்தது என்று சொல்கிறோம். சரியாகச் சொல்ல வேண்டுமானால் வயது என்பது மூன்று வகைப்படும். உடம்பின் வயது, அறிவின் வயது, மனதின் வயது என்று இந்த வயதை நாம் மூன்றாகப் பகுத்துக் கொள்ளலாம்.

உடம்பின் வயது துல்லியமானது. யாரும் கூட்டியோ, குறைத்தோ, பார்த்துக் கொள்ள முடியாது. காலம் அதைத் தீர்மானிக்கிறது. நீங்கள் பிறந்து இந்த உலகத்திலே எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்பதுதான் அந்த உடம்பின் வயதிற்கான ஒரே ஒரு கணக்கு. இதில் ஒன்றும் பெரிய சிக்கலோ, நுட்பமோ இல்லை. ஆனால் அறிவின் வயதும், மனதின் வயதும் அப்படியல்ல. சிலபேருக்கு வயது ஏற ஏற அறிவு கூடும். சிலருக்கு வயது ஏற ஏற குறையும்.


அறிவின் வயது என்பதை இன்றைக்கு அறிவியல் உலகிலே ஐக்யூ ஏஜ் (IQ Age) என்று சொல்கிறார்கள். ஐக்யூ என்பது The Intelligence Quotiont என்கிற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் ஆகும். சில பிள்ளைகளை நாம் பார்க்கலாம். பத்து வயதாக இருக்கிறபோதே இருபது வயது மனிதனைப் போல சிந்திப்பார்கள். சில பேர் 40 வயதான பிறகும், 14 வயதிற்குரிய அறிவுகுரியவர்களாகவே நின்று போய்விடுவார்கள்.

இப்போதும் நம்மால் எந்தப் புத்தகத்தை கூடுதலாகப் படிக்க முடிகிறது. எந்த மாதிரியான படங்களை எல்லாம் பார்க்க மனம் விரும்புகிறது என்பதையெல்லாம் பார்த்தால் அது அறிவின் வயதையும், மனதின் வயதையும் ஒட்டியதாக இருக்கிறது. பல்வேறுவிதமான பொது அறிவுத் தகவல்களைச் சேகரித்து வைப்பது, சேகரித்து வைத்துள்ள தகவல்களிலிருந்து, நுட்பமான, சரியான எதிர்கால முடிவுகளை எடுப்பது என்பதெல்லாம் அறிவின் வயதை ஒட்டியதாக இருக்கிறது.


இந்த மனதினுடைய வயது இருக்கிறதே, அது வெறுமனே உங்களுடைய உற்சாகம் சார்ந்தது அவ்வளவுதான். இந்த மனம் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் வயது குறைகிறது. ஒருவேளை இளமைக்காலத்திலேயே மனம் சோர்ந்துவிடுமானால், 25 வயது இளைஞனுக்கும் கூட மனத்தினுடைய வயது 60 ஆக ஆகிவிடுகிறது. மனதின் வயதுதான் நம்மை இயக்குகிறது.

மனம் இளமையாக இருந்தால் அடுத்தடுத்த திட்டங்களை நம்மால் போட முடிகிறது. ஏராளமான எதிர்காலத் திட்டங்களை வைத்துக் கொண்டிருக்கிற 70 வயது மனிதர்களையும் நாம் பார்க்கிறோம். எதிர்காலம் பற்றிய எந்த சிந்தனையுமின்றி சோர்ந்துப் போய்க் கிடக்கிற 30 வயது இளைஞனையும் பார்க்கிறோம்.

சோர்வு என்பதும், அடுத்த வேலைக்கான ஊக்கம் என்பதும் மனதிலிருந்து வருகிறது. ஆகவே அதை மனதின் வயது என்கிறோம். நாம் மனதின் வயதைக் குறைத்துக் கொண்டும், அறிவின் வயதைக் கூட்டிக் கொண்டும் இருப்போமானால் உடலின் வயதுப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. எதிர்மறையாக நடந்துவிடுவதுதான் பெரிய ஆபத்து.

எல்லாம் நேர்மறையாக அமையுமானால், நம்மால் கூடுதலாகத் திட்டமிட முடியும். கூடுதலாகப் பணியாற்ற முடியும். நாம் இருக்கின்ற துறையிலே கூடுதலாகக் கவனம் செலுத்த முடியும். அப்படி செய்கிறபோது நேற்றைக்கு நம் துறையில் என்ன சாதித்திருந்தோமோ அதைக் காட்டிலும் கூடுதலாகச் சாதிக்க முடியும். அதற்கு அடுத்த கட்டத்திற்கு வர முடியும்.

எனவே நம்மை நாமே முந்துவது என்பதுதான் வெற்றியே தவிர, அடுத்தவர்களை முந்துகிறோமோ என்பதல்ல. அடுத்தவர்களை முந்த வேண்டுமா என்பது கூட ஒரு பெரிய கேள்விதான். நம்மை நாம் தொடர்ச்சியாக முந்திக் கொண்டிருந்தோ மென்றால், நாம் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்று பொருள். எனவே ஒருவன் வெற்றியாளனா, இல்லையா என்பதை அவனுடைய பழைய நடவடிக்கைளையும், இன்றைய நடவடிக்கைளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அவன் எழுதிய கவிதையையும், இப்போது அவன் எழுதுகிற கவிதையையும், அன்றைக்கு வரைந்த ஓவியமும், இன்றைக்கு வரைந்த ஓவியமும், அன்றைக்கு இருந்த நிர்வாகத் திறனும், இன்றைக்கு இருக்கிற நிர்வாகத் திறனும் எப்படி இருக்கின்றன என்பதை ஒப்பிட்டு பார்த்தால், வெற்றியாளர்கள் யார் என்பதை நம்மாலே எளிதில் கண்டுபிடித்து விடமுடியும்.


நாம் வெற்றியாளர்களாக ஆக வேண்டுமென்றால் பின்பற்ற வேண்டிய செயல்நெறி, சூத்திரம் இதுதான்.நூல் : ஒன்றே சொல், நன்றே சொல்.


ஆசிரியர் : ஐயா சுப.வீரபாண்டியன்.

Thursday, February 23, 2012

இடையீட்டப்பம் (Sandwich) உருவான விதம்......


1762 - ல் ஜான் மாண்டேகு (John Montagu) என்பவரது சோம்பேறித்தனத்தால் கிடைத்ததுதான் இந்த இடையீட்டப்பம் (சாண்ட்விச்-Sandwich). சீட்டு விளையாடுவதில் அதீத ஆர்வம் கொண்வர் இவர். விளையாட்டுக்கு உணவு இடைவெளி கொடுக்கக்கூட விருப்பப்படவில்லை இவர்.

ரொட்டித் துண்டுகளையும், கறித் துண்டுகளையும் அருகில் வைத்துக் கொண்டார்.விளையாடும்போதே இரண்டு ரொட்டித் துண்டுகளை எடுத்து அதன் நடுவில் ஒரு கறித் துண்டை வைத்து சாப்பிட ஆரம்பித்தார்.

பசியும் போச்சு. விளையாட்டும் கெடவில்லை.....


சரி இந்த பெயர் எப்படி வந்தது என்பதை பார்ப்போம். ஜான் மாண்டேகு வகித்த அரசு பதவியின் பெயர் 'போர்த் எர்ல் ஆப் சாண்ட்விச்' (4th Earl of Sandwich). அதிலிருந்துதான் சாண்ட்விச் என்ற பெயர் வந்தது.
தகவல் : முத்தாரம் இதழ்.

Wednesday, February 22, 2012

கோயபல்ஸ் !


ஆங்கிலத்திலே இரண்டு சொற்கள் உண்டு. ஒன்று பாப்புலர், மற்றொன்று நொட்டோரியஸ் என்றும் குறிப்பிடுவார்கள். நல்ல விதத்தில், நல்ல முறையில், நல்ல காரணங்களுக்காக மக்களிடம் அறிமுகமானவர்களை பாப்புலர் என்று சொல்கிறார்கள். தவறான காரணங்களுக்காக வேறு வித்தியாசமான முறையில் மக்களிடம் அறிமுகமானவர்களை நொட்டோரியஸ் என்றும் சொல்கிறார்கள்.

அப்படி ரொம்பவும் நொட்டோரியஸ் என்று சொல்லக் கூடிய அளவிற்கு உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவர் போல் ஜோசப் கோயபல்ஸ் (Paul Joseph Goebbels) கோயபல்ஸ் என்ற பெயரை நாம் அத்தனை பேரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

கோயபல்ஸ் என்கிற பெயர் இன்று உலகம் முழுவதும் அறியப்பட்டப் பெயராக உள்ளது.

அவருடைய பெயர் எதற்காக அறியபட்டுள்ளது என்றால் உலகத்திலே மிகுதியாகப் பொய் சொன்னவர் என்கிற பொருளிலே கோணிப் புழுகன் கோயபல்ஸ் என்றுதான் நாம் அறிந்துள்ளோம்.

ஆனால், கோயபல்ஸிடம் கூட ரொம்ப வித்தியாசமான திறமைகள் இருந்தன என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். கோயபல்ஸ் நாம் அறிந்துள்ளது போல் ஹிட்லருக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர். 1925 - ல் தான் ஹிட்லரும் கோயபல்சும் சந்தித்துக் கொள்கிறார்கள்.

கோயபல்ஸின் தோற்றத்தை எழுதுகிற வரலாற்று ஆசிரியர்கள் அவர் மிகவும் விசித்திரமான தோற்றமுடையவர் என்று எழுதுகிறார்கள். குறிப்பாக அவருடைய கால்களைப் பற்றி எழுதும்போது கால்கள் கழுதையின் கால்களைப் போல் இருந்ததாகக் எழுதுகிறார்கள். அது அவருக்கான உடல் நலக் குறைபாடாகக் கூட இருக்கலாம். வேடிக்கையான அடையாளமாக இருந்திருக்கிறது.

மனிதர்கள் அவரை பார்த்த உடனே கேலியாகச் சிரித்திருக்கிறார்கள். ஆனாலும், கோயபல்ஸ் மேடைகளிலே ஏறி பேசத் தொடங்கிய பிறகு, யாரெல்லாம் அந்தக் கோயபல்சைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தார்களோ அவர்களேகூட தங்களை மறந்து கோயபல்சினுடைய பேச்சைக் கேட்டதாக அங்கே பல குறிப்புகள் நமக்குச் சொல்கின்றன.


கோயபல்ஸ் அப்படிப்பட்ட மிகப்பெரிய பேச்சாளர். அதுவும் ஒரு நாடகத்தன்மை வாய்ந்த பேச்சு என்று அவருடைய பேச்சைக் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். ஹிட்லருடைய பேச்சு உலகத்திலே புகழ் பெற்றது அப்படிதான். ஹிட்லர்தான் உலகத்திலேயே தன்னுடைய பேச்சை நாடக மயமாக ஆக்கிக் காட்டியவர்.

விளக்குகளையெல்லாம் பொருத்தி, அதிலே இருக்கிற அந்த ஒளிக் கருவிகளைக் கையாளுகிறவர்களிடத்திலே சொல்லி, எந்த நேரத்திலே எந்த வண்ண விளக்குகளை நீங்கள் ஒளிர வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி விடுவார். நான் மிகக் கோபமாக பேசுகிறபோது சிவப்பு வண்ணம் மேடையிலே அப்படியே பாய்ந்து வர வேண்டும் என்பதையெல்லாம் சொல்லி வைத்து நாடகத்தனமையோடு பேசுகிற ஆற்றல் ஹிட்லரிடம் இருந்தது.

அதைப்போலவே கோயபல்சும் உணர்ச்சிகரமாக பேசி கேட்கிற மக்களையெல்லாம் இவர் எந்த உணர்வில் பேசுகிறாரோ அந்த உணர்வுக்கு இழுத்து வந்த விடுகிற ஒரு பெரிய ஆற்றல் வாய்ந்தவராக இருந்தார். அந்த ஆற்றல் ஹிட்லரிடம் இவரைக் கொண்டு போய் சேர்த்தது. 1928 - ஆம் ஆண்டு தன்னுடைய நாசிக் கட்சியினுடைய கொள்கைபரப்புச் செயலாளராக கோயபல்சை ஹிட்லர் நியமிக்கிறார். அதுதான் அவர் அரசியல் வாழ்க்கைக்கு வருகிற முதல் கட்டம். நாசிக் கட்சி ஜெர்மனி மக்களிடத்திலே ஆரியர்கள் நாம் ; நாம்தான் ஆளப் பிறந்தவர்கள் என முழங்கியது.

யூதர்களுக்கு எதிராக அவர் மிகப் பெரிய எழுச்சியை அந்த ஜெர்மனிய மக்களிடத்திலே ஏற்படுத்தியிருந்த காலம்கட்டம் அது. எனவே அந்த நேரத்தில் கோயபல்ஸ் ஜெர்மனி மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு பேச்சாளனாக, ஹிட்லருடைய வலது கையாக எல்லோரிடமும் அறியப்பட்டார்.


பேச்சக்கு மயங்கிய அந்த ஜெர்மனிய மக்கள் தேர்தலில் ஹிட்லருக்கு வாக்களித்து அதிபராக்கினார்கள். ஹிட்லர் பதவிக்கு வந்ததற்கு பிறகு அவருடைய அமைச்சரவையிலேயும் கோயபல்சுக்கு இடம் கிடைத்தது. அதன் பிறகு வந்த இரண்டு தலைமுறைக்கு தேர்தலில் வாக்களிக்க வேண்டிய வேலையை இல்லாமல் செய்துவிட்டார் ஹிட்லர். இனி கோயபல்சுக்கு வருவோம். கோயபல்ஸ் அந்த ஜெர்மனிய மக்களிடம் வித்தியாசமான முறையில் பிரச்சாரங்களைக் கொண்டு செல்கிறார். அவருடைய பிரச்சார முறைகள் வரலாற்று ஆசிரியர்களாலே கூட வியப்பாக பார்க்கபட்ட ஒன்று.

அதுவும் இரண்டாவது உலக யுத்தத்திலே அவருடைய பிரச்சார யுத்திகளை வரலாற்றில் படிக்கும் போது வேடிக்கையான ஒன்றாக இருக்கும். முதல் பிரச்சாரம் முனுமுனுப்புப் பிரச்சாரம். இரண்டாவது ஜோதிடப் பிரச்சாரம். மூன்றாவது திரும்ப திரும்ப சொல்லும் பிரச்சாரம்.

இது போன்ற பிரச்சார யுத்திகளை எல்லாம் நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், கோயபல்சினுடைய விஷயங்கள் அத்தனையும் பொய்யானவை. ஆனாலும், அவர் அதை கொண்டு சென்ற முறை இருக்கிறதே அது வலிமையானது.

முதலில் முனுமுனுப்புப் பிரச்சாரம்.

அரசாங்கத்திலிருந்தே ஆட்களைத் தேர்வு செய்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புவது. அவர்கள் இரண்டு இரண்டு பேராக, மூன்று, மூன்று பேராக பிரிந்து செல்வார்கள். பலரும் கூடியிருக்கிற ஒரு தேநீரகத்தில், ஒரு பேருந்து நிலையத்தில் ஒருவருக்கு ஒருவர் அறியாதவர்கள் போல் நின்று கொண்டு பேசி கொண்டிருப்பார்கள். அவர்கள் முனுமுனுத்துக் கொண்டு பேசும் பேச்சு அருகில் உள்ளவரிடம் பற்றும். இவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என்றால், 'என்ன இருந்தாலும் ஹிட்லர் மாதிரி வராது' என்பார் ஒருவர். இன்னொருவர் மறுக்கிற மாதிரி மறுப்பார்.

மறுப்பவனுடைய வாதங்கள் எல்லாம் பலவீனமாக இருக்கும். ஹிட்லரை ஆதரிக்கிறவன் வாதம் எல்லாம் மிக அழுத்தமாக இருக்கும். முதலில் மறுப்பவனும் பின்பு அதனை ஏற்றுக் கொள்வான். அந்த இடத்திலே நின்று கொண்டிருக்கும் மற்றவர்களுக்கும் இவர்களின் வாதங்களை கேட்கும் போது சரியெனப்படும். இது முனுமுனுப்புப் பிரச்சாரம்.

இரண்டாவது, ஜோதிடப் பிரச்சாரம். ஜோதிடர்களுக்கு வேண்டிய அளவுக்கு பணம் கொடுப்பது, ஏறத்தாழ எல்லா ஜோதிடர்களும் ஒரே மாதிரி எழுதுவது. இரண்டாவது உலக யுத்தத்தில் ஜெர்மனி மிகப் பெரிய வெற்றியடையப் போகிறது, எதிரி நாடுகளின் விழ்ச்சி உறுதியாகிவிட்டது.ஜோதிடம் அவ்வாறே சொல்கிறது. ராசி இவ்வாறு இருக்கிறது, கிரக நிலைகள் நமக்கு சாதகமாக இருக்கிறது என்று பரப்புவது.

மூன்றாவது, திரும்ப திரும்ப சொல்வது. கோயபல்ஸ் கூறிய ஒன்றை, அது சிறிய விஷயமாக இருந்தாலும், அதை பெரிது படுத்தி கூறுவது, தொடர்ந்து சொல்லி கொண்டே இருப்பதன் மூலம் பொய்யும் உண்மையாக சித்தரிக்கப்படும். இவ்வாறாக மூன்று விதமான பிரச்சார உத்திகளைக் கையாண்டார்.

அதோடு மட்டுமல்லாமல், கலைத் துறையையும் கைப்பற்றினார். யூதர்களுக்கு எதிரான வகையில் திரைப்படங்கள் கோயபல்சின் மேற்பார்வையில் வெளியிடப்பட்டது. ஊடகம் என்பது வலிமையான ஒன்று. அதுதான் செய்திகளை மக்களிடம் விரைவாக கொண்டு செல்லும் என்பதை முதலில் பயன்படுத்தியவர் இவரே.


பிறகு செக்கோஸ்லோவியா நாட்டைச் சேர்ந்த லிடா பார்வா (Lida Baarova) என்ற நடிகையுடன் தொடர்பு இருந்ததாக அவருக்கு எதிரான பிரச்சாரம் ஒன்று கையாளப்பட்டது. அது உண்மையும் கூட. அதில் அவருடைய பெயர் கொஞ்சம் சரிந்தாலும், இரண்டாவது உலக யுத்தத்திலே அவருடைய பெயர் உச்சத்திற்கு சென்றது. ஆனாலும், பொய்யை எத்தனைவிதமான திறமையான யுத்திகள் மூலம் பிரச்சாரம் செய்தாலும் உண்மை ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். ஆம், சோவியத் நாட்டுப் படைகள் ஜெர்மனியை முற்றுகையிட்ட நேரத்தில் 1945 ஏப்ரல் 30 - ம் தேதி ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். இந்த நாட்டின் அடுத்த அதிபராக கோயபல்சை நான் நியமிக்கிறேன் என்று கூறிய பிறகுதான் ஹிட்லர் இறந்தார்.

ஆனால், கோயபல்ஸ் அந்த நாட்டிற்க்கு எத்தனை நாள் அதிபராக இருந்தார் தெரியுமா ? அடுத்த ஒரே நாள்தான். மே மாதம் முதல் தேதி அவர் தன்னுடைய மனைவி, 6 குழந்தைகளுடன் தற்கொலை செய்து மாண்டு போனார் என்று வரலாறு சொல்கிறது.


எனவே எவ்வளவு திறமை இருந்தாலும், அது உண்மையின் அடிப்படையில், நேர்மையின் அடிப்படையில் இருந்தால்தான் நிலைக்கும் என்பதை நமக்கு கோயபல்சின் வரலாறு உணர்த்துகிறது.நூல் : ஒன்றே சொல், நன்றே சொல்.


சிரியர் : ஐயா சுப.வீரபாண்டியன்.

Tuesday, February 21, 2012

நம்பினால் நம்புங்கள் !


216 அடி உயர நெடிய விமானம் கொண்ட தஞ்சை பெரிய கோயிலின் அஸ்திவாரம் வெறும் ஐந்து அடிகள் மட்டுமே.உலகில் அதிகம் பேர் பயப்படுவது எலிக்குத்தான். தவளை,கரப்பான் பூச்சி, பல்லி எல்லாம் அடுத்தது.மனிதனைப் போலவே, விலங்குகளில் வழுக்கை விழுவது குரங்குக்கு மட்டுமே.கண்களைச் சிமிட்டாமல் தவளையால் தன் இரையை விழுங்க முடியாது. காரணம், அதன் தொண்டையின் திறவுகோல் கண்களில்தான் இருக்கிறது.தகவல் : நெ. இராமன்.

Monday, February 20, 2012

தகவல் களம் !

லியனார்டோ டாவின்சி வரைந்த மோனோலிஸா ஓவியம் உலகப் புகழ் பெற்றது. 1503-ல் வரைய ஆரம்பித்து 1519-ல் முழுமை பெற்ற இந்த ஓவியம் பற்றி 500 ஆண்டுகளாக ஏராளமான கதைகள்; தினம் தினம் இதை ஆராய்ச்சி செய்து எதையாவது கண்டுபிடிக்கிறார்கள்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருக்கும் லோவர் அருங்காட்சியகத்தில் நிரந்தரமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது மோனோலிஸா ஓவியம். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இருக்கும் பிராதா அருங்காட்சியகம் 'பளிச்' சென இருக்கும் இன்னொரு மோனோலிஸா ஓவியத்தை கடந்த வாரம் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.இடது : டாவின்சி - வலது : மாணவர்.


டாவின்சி காலத்திலேயே அவரது மாணவர் ஒருவரால் வரையப்பட்ட பிரதியாம் இது. சுமார் 500 ஆண்டுகளாக எங்கோ பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாம். அதை எடுத்து வந்து அவர்கள் வைத்திருக்கிறார்கள். அச்சு அசல் மோனோலிஸா போல இருந்தாலும், இதில் ஏராளமான வித்தியாசங்களைக் காணலாம்.


அமெரிக்காவில் இருக்கும் வேலை வாய்ப்பு நிறுவனமான கேரியர்பில்டர்ஸ்.காம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அந்த விளம்பரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 'திறமைசாலிகளுக்கு நாங்கள் பொருத்தமான வேலை வாங்கித் தருகிறோம்' என்பதை உணர்த்த அந்த நிறுவனம், சிம்பன்சி குரங்கைப் பயன்படுத்தி இருக்கிறது. கோட்-டை சகிதம் ஆபிஸில் ஸ்டைலாக வேலை பார்க்கும் அந்த சிம்பன்சி, சக மனித ஊழியர்களைவிட அதிக திறமை காட்டுகிறது.


ஆனால், 'இப்படிப்பட்ட விளம்பரங்கள் மனிதர்கள் மனதில் சிம்பன்சிகள் பற்றி தவறான எண்ணத்தை விதைக்கும். அது அழிந்து வரும் அரிய விலங்கினம். சிம்பன்சிகள் மீது நாம் அனுதாபம் காட்ட வேண்டும். இந்த விளம்பரம் அவைகள் மீது வெறுப்பையும், பொறாமையையும் உண்டாக்கிவிடும்' என்று ஆதங்கப்படுகிறார்கள் அமெரிக்க வன உயிர் ஆர்வலர்கள்.எத்தனை நாளைக்குதான் சவப் பெட்டிகளை ஒரே மாதிரி செய்து கொண்டிருப்பது? ஆறரை அடி நீள செவ்வக பெட்டியாகவே இது இருக்க வேண்டுமா ? இதிலும் புதுமை செய்யலாமே' என லண்டனில் சிலர் யோசித்ததன் விளைவுதான் இது.சிறிய அளவிலான விமானம், காலணி, கிடார் இசை கருவி என வித விதமான கலை வடிவில் சவப் பெட்டிகளை செய்து காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். பிரிட்டனிலும், கானா நாட்டிலும் இது போன்ற சவப் பெட்டிகளைப் பயன்படுத்துவது இப்போது நாகரீகமாகிவிட்டது. இன்னும் சொல்லப் போனால், ஒரு சிலர் "தங்கள் இறந்த பிறகு எந்த மாதிரியான சவப்பெட்டி வேண்டும் என்று தங்கள் உறவினர்களிடம் முன்கூட்டியே சொல்லி விடுவார்களாம். மண்ணில் புதைந்து போகும் சவப்பெட்டியிலும் கலைத்திறன் காட்ட முடியும்.

தகவல் : ப்ரியா.

Sunday, February 19, 2012

பூகம்பம் வருவதை விலங்குகள் அறியுமா?

பூகம்பம் வந்து உலுக்கிய பிறகு 'அது எவ்வளவு தீவிரமானது' என்பதை ரிக்டர் அளவில் அளக்கலாம். மனித முயற்சி இதை மட்டுமே சாத்தியமாக்கி இருக்கிறது. 'இந்த நேரத்தில், இந்த இடத்தில், இப்படி ஒரு பூகம்பம் வரலாம்' என கணித்துச் சொல்லும் தொழில்நுட்பம் இன்னமும் கை கூடவில்லை. ஆனால், 'பூகம்பம் வருவதை விலங்குகளும்,பறவைகளும் முன்கூட்டியே உணர்ந்து கொள்கின்றன' என்று உலகம் முழுவது நம்பிக்கை இருக்கிறது.


உண்மையில் விலங்குகள் பூகம்பத்தை உணர்ந்து கொள்ளுமா என்றால், அதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. விஞ்ஞானம் அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆனால், சீனா,ஜப்பான், இந்தோனேஷியா போன்ற நில நடுக்கம் உள்ள அதிகம் நிகழக் கூடிய நாடுகள், 'விலங்குகளுக்கு இந்த ஆற்றல் உண்டு' என்று வாதிடுகின்றன. இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழ்ந்திருந்தால், மனிதனும் பூகம்பம் வருவதை முன் கூட்டியே அறிய முடியும் என்கிறார்கள்.

விலங்குகள் உண்பது, உறங்குவது எல்லாமே பொதுவாக தரையில்தான். தரை மீதுதான் பெரும்பாலான நேரங்களில் காதை வைத்துத் தூங்கும். தரைக்கும் விலங்குகளுக்கும் தொடர்பு உண்டு. அதனாலேயே தரையில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளைக் கூட அவற்றால் உணர்ந்துதான் கொள்ள முடிகிறது.ரயில் தண்டவாளத்தில் காதை வைத்தால் தூரத்தில் வரும் ரயிலின் சத்தம் கேட்பதைப் போல, தரையின் மீதே காதை வைத்திருப்பதால் தூரத்தில் ஏற்படும் நில நடுக்கத்தின் சத்தத்தைக் கேட்க முடிகிறது என்கிறார்கள். விலங்குகளைப் போலவே கற்கால மனிதனும் பூகம்பம் வருவதை முன் கூட்டியே அறிந்து கொண்டான்.அதற்கேற்ப இடத்தை மாற்றினான்.


"நவீன கால மனிதர்கள் வாகனங்களுக்குப் பழகியதால், அதிர்வுகளைத் தாங்கித் தாங்கி உடல் பழக்கப்பட்டுவிட்டது. இதனால் பூகம்பத்தின் மெல்லிய அதிர்வுகளை உணர முடிவதில்லை. இயற்கையை விட்டு செயற்கைக்கு மாறியதால்தான், இதெல்லாம் தெரிவதில்லை" என்கின்றனர் ஜப்பானியர்கள்.

நில நடுக்கத்திற்கு முன்பு நிலத்தின் மீது கந்தக வாசனை வீசும் என்றும், இதனை விலங்குகள் முன் கூட்டியே புரிந்து கொள்ளும் என்றும், பூகம்பத்திற்கு முன்பு கடல் நீர் கலங்கி, இயற்கையான கடல் நிறத்தில் இருந்து வேறுபட்டுத் தெரியும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. பறவைகள் இதை உணர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றுவிடுகிறது.


இதையெல்லாம் விஞ்ஞானம் இன்னும் உறுதிப்படுத்தாததால் உண்மை எதுவென்று நம்ப முடியாத நிலையாக உள்ளது என்பதே உண்மை.

தகவல்: ஆர்.ஆர்.பூபதி.

Friday, February 17, 2012

நம்பினால் நம்புங்கள் !


பாஸ்கல் கண்டுபிடித்த கால்குலேட்டரை பயன்படுத்த அதிலுள்ள கியர்களையும், சக்கரங்களையும் கழற்ற வேண்டும்.இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 37 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.1991-ல் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய 'பவர்புக்' (Apple-Power Book) என்ற கணினிதான், நவீன மடிக்கணினிகளுக்கு முன்னோடி.
பஞ்சாப்பில் உள்ள சிறிய நகரம் பாஸில்கா. இங்கு சுற்றுச்சூழல் காரணங்களுக்காக, சில பகுதிகளில் மோட்டார் வாகனங்களுக்கு அனுமதியில்லை. சைக்கிள் ரிக்சாவில் மட்டுமே பயணம் செய்ய
முடியும். அதனால், 'கால் டாக்சி' போல 'டயல் ஏ ரிக்சா' சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள், ஐ.ஐ.டி மாணவர்கள் !

தகவல் : முத்தாரம் இதழ்.

Thursday, February 16, 2012

டாலரும் அதனைச் சுற்றியுள்ள மூட நம்பிக்கையும்!


உலகையே தங்கத்திற்கு நிகராக ஆட்டிப் படைக்கும் அமெரிக்க டாலர் பெரும் மர்மங்களைத் தன்னுள் அடக்கிச் சக்தி வாய்ந்ததாகத் திகழ்கிறது! 13 என்ற எண்ணையே வெறுக்கும் மேலை நாட்டு உலகம், வீட்டுக் கதவு எண், ஓட்டல்களில் கூட பன்னிரண்டாம் எண்ணிற்கு அடுத்தாற் போல அந்த எண்ணைப் பயன்படுத்துவதில்லை. பதினான்கை தங்களின் வீடுகளுக்கும், அறைகளுக்கும், மாடிகளுக்கும் தந்து 13ம் எண்ணைத் தவிர்க்கிறது.

ஆனால், அமெரிக்க டாலரில் எல்லாமே 13 மயம்தான்! இது ஒரு வியப்பூட்டும் விஷயம். பொதுவாக அமெரிக்காவுக்கே 13 என்ற எண் பல விஷயங்களில் சம்பந்தப்பட்டிருகிறது. அமெரிக்காவில் முதலில் உருவான உண்மையான காலனிகள் 13. அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்டோர் 13 பேர். அமெரிக்கக் கொடியில் இருப்பது 13 கோடுகள் !

அமெரிக்க டாலரைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிட்டும் போது கவனியுங்கள்...... அதில் உள்ள பிரமிடுகளில் 13 படிகள் இருக்கும். மேலே இருக்கும் இலத்தீன் மொழி வாசகத்தில் 13 எழுத்துகள் இருக்கும்.
'E Pluribus Unum' என்பதில் 13 எழுத்துகள். டாலரில் இருக்கும் கழுகுக்கு மேலாக 13 நட்சத்திரங்கள். ஷீல்ட்டில் 13 பட்டைகள். ஆலிவ் மரக் கிளையில்13 இலைகள்; 13 பழங்கள்; 13 அம்புகள்; இப்படி அமெரிக்க டாலரில் அனேக 13-கள் !

டாலர் மறைமுக ஆற்றலை (அக்கல்ட் பவர்) கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது என்பார்கள். அமெரிக்க டாலரின் செல்வாக்கிற்குக் காரணம் அதன் பிரமிடே என்று நம்புகிறார்கள். அதில் உள்ள பூர்த்தியாகாத பிரமிட் அமெரிக்கா எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதை உணர்த்துகிறதாம். பிரமிட்டின் மேலே உள்ள 'எதையும் ஊடுருவும் கண்' அமெரிக்காவிற்கு எப்போதும் தெய்வீக வழிகாட்டுதல் கிடைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளாதாம்.


அதில் உள்ள 'Annuit Coeptis' என்ற 13 எழுத்துகள், இறைவன் அமெரிக்காவின் பணிகளுக்கு ஆதரவளிப்பதைக் குறிக்கிறது. டாலரில் உள்ள 'Novus Ord o Seclorem' என்பது 'உலக ஏடுகளில் ஒரு புதிய அத்தியாயம்' என்ற பொருளில் அமெரிக்க சாகப்தத்தைக் குறிக்கிறது.

தகவல் :ஆர்.ஆர்.பூபதி.


உண்மையில் தன்னை வளப்படுத்திக் கொள்ள பிற நாட்டு வளங்களைச் சூறையாடும் சுயநலப் புத்தியை வெளிக்காட்டாமல், கபட வேடம் போடுவது அமெரிக்காவின் தந்திரம் !

Wednesday, February 15, 2012

தகவல் துளி !வான் கோழிகளின் தாயகம் அமெரிக்கா.மிகச் சிறிய பறவை இனங்களில் ஒன்றான ஹம்பிங் பறவை(Humming Bird),பின் நோக்கியும் பறக்கும் திறன் கொண்டது.நூறு பூஜ்யங்களைக் கொண்ட எண்ணை 'கூகோல்' (Googol) என்பர்.பாஸ்பரஸ் (Phosphorus) நீருக்கு அடியில்தான் சேமித்து வைக்கப்படுகின்றது.

தகவல்: எஸ்.சடையப்பன்.