Friday, May 25, 2012

தகவல் களம் !


ஏர்பஸ் ஏ 380 ரக விமானம் போலவே ஒரு உணவகம் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது. சாங்கிங் நகரில் இருக்கும் 'ஸ்பெஷல் கிளாஸ்' என்ற இந்த உணவகம் ஒரே நேரத்தில் 110 பேர் சாப்பிடலாம். இருக்கைகள், உள் அலங்காரம் எல்லாமே விமானம் போல இருக்கிறது. பரிமாறுகிறவர்கள் விமானப் பணிப் பெண் போலவே உடை அணிந்திருப்பார்கள். விமானத்தில் பறக்க முடியாதவர்கள் இங்கே சாப்பிட்டு திருப்தி அடையலாம். குடும்பத்தோடு சாப்பிட தனி அறைகளும் உண்டு.



இயற்கையின் விசித்திரங்களை அல்பட்ராஸைத் தவிர வேறெந்த பறவையைக் கொண்டும் விளக்கிட முடியாது. காலங்காலமாக நாம் அறிந்ததைவிட, இந்தப் பறவைகள் எவ்வளவு தூரம் பறக்கின்றன என்பதை செயற்கைக் கோள்கள் நமக்குக் காட்டியுள்ளன. பழுப்புத் தலையுள்ள அல்பட்ராஸ் பறவையால் புவியை 42 நாட்களில் வட்டமடிக்க முடிகிறது. ஒரு அல்பட்ராஸினால், புவியின் சுற்றளவைப் போல 3 மடங்கு தொலைவை ஒரே ஆண்டில் கடக்க முடியும். கிட்டத்தட்ட 3 மீட்டர் நீளமுள்ள இதன் இறக்கைகளை நீண்ட தூரப் பயணத்தின்போது இது பயன்படுத்துவதே இல்லை என்பது இன்னொரு ஆச்சரியம்.

அமெரிக்க வெண்ணிற நெற்றிக் கழுகை விட இது இருமடங்கு எடை கொண்டிருந்தாலும், காற்றைக் கிழித்துச் செல்லும் வேகம் அதிகம். அல்பட்ராஸ் காற்றை எல்லா வகையிலும் பயன்படுத்திக் கொண்டு கோணல்மாணலாக ஜிக்ஜாக் வடிவம் போல பறக்கிறது. அல்பட்ராஸின் இதயத் துடிப்பு அது ஓய்வெடுக்கும் போது இருப்பதைவிட, பறக்கும்போது குறைவு ! இறக்கை மற்றும் மூட்டுகளில் உள்ள லாக் அமைப்பு காரணமாகவே, இது பறக்கும்போது இயங்குவதில்லை.


அல்பட்ராஸின் தனித்துவமிக்க அளவு, ஆற்றல், இடைவிடாது மிகமிக நீண்ட தூரம் பறக்கும் தன்மை ஆகியவை பார்ப்பவரை தடுமாறச் செய்யும்.பறவை பிரியர்களுக்கு இது அற்புத விஷயம்....

'இந்த பறவையைப் போல உள் இயங்கும் ஆற்றலைக் கொண்டே நம் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ளவேண்டும்' என்கிறார் ஒரு தத்துவ ஞானி.

இப்பறவைகள் இடம்பெயர்வதோடு நிறுத்தாமல், பாதையை நினைவில் வைத்துக் கொண்டு, மீண்டும் தங்கள் கூட்டுக்கே திரும்பிவிடுவதும் ஒரு புதிர்தான்!



குதிரை மேல் அமர்ந்தபடி இருக்கும் போர் வீரர்கள், தளபதிகள் சிலைகளை செதுக்கவும் ஒரு மரபு இருக்கிறது. குதிரை நான்கு கால்களையும் தரையில் பதித்திருந்தால், அந்த சிலையில் இருப்பவர் இயற்கையாக மரணம் அடைந்ததாக அர்த்தம். குதிரையின் ஒரு கால் அந்தரத்தில் இருந்தால், போரில் காயம்பட்டு அதன்பிறகு வீரர் இறந்ததாக அர்த்தம். குதிரையின் இரண்டு கால்கள் அந்தரத்தில் இருந்தால், போர்களத்திலேயே வீரர் இறந்ததாக அர்த்தம்.












தகவல் : லோகேஷ்.

Wednesday, May 23, 2012

படம் சொல்லும் சேதி


ஹூண்டாய் நிறுவனம் ஐ 30 காரை அறிமுகம் செய்கிறது. இந்தக் காரின் வலுவை பரிசோதிக்க,இங்கிலாந்தில் இருக்கும் நோவ்ஸ்லி விலங்கியல் பூங்காவில் கொண்டுபோய் விட்டுவிட்டார்கள். பபூன் குரங்குகள் பல மணிநேரம் எத்தனையோ அட்டகாசங்கள் செய்தும், எதுவும் ஆகவில்லையாம் !



புகழ்பெற்ற அமெரிக்க சிற்பி ஜெப் கூன்ஸ் கடந்த 94-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை செதுக்கிய பல சிற்பங்கள் இப்போது சுவிட்சர்லாந்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 'உடைந்த முட்டை' என்ற இந்த சிற்பமும் அதில் ஒன்று. வாழ்க்கையின் நிலையின்மையைப் பேசும் சிற்பங்கள் அவருடையவை.



'நேஷனல் ஜியாக்ராபிக்' இதழுக்காக இம்மானுவேல் கூப் கலோமிரிஸ் என்ற புகைப்படக் கலைஞர் எடுத்த அரிய புகைப்படம் இது. கனடா நாட்டின் ஒரு ஏரியில், பனிபொழிவு அதிகம் இல்லாத ஒரு பனிக்கால பகலில் எடுக்கப்பட்டது. பனியாக உறைந்திருக்கும் ஏரி நீர் பாளம் பாளமாக பிளந்திருக்க, அதற்குள் காளான்கள் போல வெள்ளையாக தெரிபவை....உண்மையில் ஊ ற்றுக் குமிழ்கள் ! ஏரியின் அடியிலிருந்து வரும் இயற்கை எரிவாயு, தண்ணீர் உறைந்ததும் அப்படியே குமிழ்களாக சிறைப்பட்டிருக்கிறது.





தகவல் : முத்தாரம் இதழ்.

Saturday, May 5, 2012

விண் உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி!




(Russian Largest Space Telescope in Orbit-Radio Astron)


சமீபத்தில் கஜகஸ்தான் நாட்டிலிருக்கும் ஏவுதளத்தில் இருந்து ரஷ்யா பெடரேஷன் ஏவியுள்ள விண்கலம்தான் 'ரேடியோ ஆஸ்ட்ரான்'. இந்த விண்கலம், பூமிக்கு மேலே விண்ணில் தந்து சுற்றுவட்டப் பாதையில் நிலைகொள்ளும்போது, இதிலுள்ள 300 மீட்டர் விட்டம் கொண்ட ஆன்டெனா விரியும்.

பூமியில் பல இடங்களில் ஏற்கனவே உள்ள தொலைநோக்கி சிக்னல்களுடன் இது இணைக்கப்படும். அப்போது இந்த விண்கல ஆன்டெனா உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியாக மாறிவிடும். அப்போது அதன் விட்டம் 3 லட்சத்து 50 ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும். கற்பனை செய்து பார்க்கவே முடியாத அளவுக்கு இதன் சிக்னல்கள் மிகத் துல்லியமாக இருக்கும்.

இந்த ஆண்டெனாவை 'இன்டெர்பெர்ரோமெட்ரி' (Interferometry) என்ற தொழில்நுட்பத்தின் உதவியால் பூமியில் இருந்து கொண்டே இயக்க முடியும். விஞ்ஞானிகள் இந்த தொலைநோக்கியை பயன்படுத்தி, தொலை தூரத்தில் இருக்கும் பிரபஞ்சத்தின் பகுதிகளையும் துல்லியமாகப் படமெடுக்கலாம். எனவேதான் இந்த 'ரேடியோ ஆஸ்ட்ரான்' விண்கலம் உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே இதுபோல பல ரேடியோ தொலைநோக்கிகள் விண்ணில் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், இந்த ரேடியோ ஆஸ்ட்ரானுக்கென ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அதாவது, பூமிக்கு மேலே 10 ஆயிரம் கி.மீ. முதல் 3 லட்சத்து 90 ஆயிரம் கி.மீ.வரை உயர்ந்தும் தாழ்ந்தும் நகரும் திறன் கொண்டது இந்த விண்கலம்.

பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து இதன் உயரத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியும். அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா, ஜெர்மனி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தொலைநோக்கிகள் இந்த ரேடியோ ஆஸ்ட்ரான் சிக்னல்கள் மூலம் இணைக்கப்படும்.

எம்.87 எனப்படும் ஒரு நட்சத்திர மண்டலத்தின் நடுப்பகுதியில் ராட்சத கருப்பு ஓட்டை ஒன்று உள்ளது. இந்தக் கருப்பு ஓட்டையில் பல மர்மங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அந்த மர்மப் பிரதேசத்தை துல்லியமாகப் படமெடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது.


காரணம், சாதாரண விண்வெளி தொலைநோக்கியைக் காட்டிலும் இது 10 ஆயிரம் மடங்கு அதிக துல்லியமாக செயல்படக் கூடியது. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு விண்ணில் இருக்கப் போகும் இந்த 'ரேடியோ ஆஸ்ட்ரான்' விண்கல தொலைநோக்கியிலிருந்து வினாடிக்கு 144 மெகாபைட்ஸ் வேகத்தில் தகவல்களைப் பெற முடியும்.







தகவல் : முக்கிமலை நஞ்சன்.

Friday, May 4, 2012

வந்தாச்சு பறக்கும் கார் !

(Flying Car - Terrafugia)

தரையில் சென்று கொண்டிருக்கும் நம் கதைநாயகனின் கார் பட்டென்று மேலே பறந்து வில்லன்களைத் தாண்டுமே... அந்த உட்டாலக்கடி எல்லாம் இனி உண்மையாகப் போகிறது. ஆம், கார் பாதி-விமானம் பாதி' கலந்து செய்த கலவையாக அமெரிக்காவில் உருவாகியிருக்கிறது ஒரு ஜகஜால கார்.

கடந்த ஏப்ரல் 6-ல் நடைப்பெற்ற நியூயார்க் சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் ஆனானப்பட்ட போர்டு, நிஸ்ஸான், டொயோட்டாவெல்லாம் வாய்பிளந்து நிற்க, ஒரு குட்டி நிறுவனம் தயாரித்த இந்த அழகிய கார், இறக்கை விரித்துப் பறந்து காட்டி அசத்தியிருக்கிறது.


இந்தப் பறக்கும் காரைத் தயாரிக்க வேண்டும் என்ற ஒரே குறிக் கோளோடு, 'மசாசூசெட்ஸ்' தொழிநுட்ப நிறுவனத்தில் படித்த தொழிநுட்ப பொறியாளர்கள் மற்றும் விமான ஓட்டிகள் 25 பேர் இணைந்து ஆரம்பித்த குட்டி நிறுவனம்தான் டெர்ராப்யூஜியா (Terrafugia).2006 - ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், ஆறு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு இன்று நினைத்ததை சாதித்திருக்கிறது.

'டிரான்ஸிஷன்.... (Transition) அதாவது, மாற்றம் என்றே பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தக் கார், மோட்டார் உலகையே மாற்றப் போவது நிச்சயம்' என்று நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார் டெர்ராப்யூஜியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்ல் டைட்ரிச்.

சராசரி அளவுள்ள உங்கள் வீட்டு கார் நிறுத்துமிடத்தில் இது அடங்கிவிடும். இதை சாலையில் சாதாரணமாக விமான நிலையம் வரை ஓட்டிச் செல்ல முடியும். அங்கிருக்கும் ரன்வேக்குப் போனதும் இதை விமான மோடுக்கு மாற்றி இறக்கை விரித்துக் கிளம்பலாம். இது அதிகபட்சம் 740 கி.மீ. தூரம் வரை பயணிக்கும்.


அந்த தூரத்துக்குள் உள்ள எந்த நகரத்திலும் நீங்கள் தரையிறங்கிவிட்டு மீண்டும் இதைக் காராக்கிக் கொள்ளலாம். இரண்டு பேர் மட்டும் பயணிக்கக் கூடிய இந்தக் கார், சாதாரண பெட்ரோலிலேயே இயங்கும். 1400 அடி உயர வரை பறக்கும்' என்று தொழில்நுட்ப விவரங்களை அடுக்குகிறார் இதை சோதனை ஓட்டம் செய்து காட்டும் பைலட்டான பில் எம்டீர்.


இந்த வருட இறுதிக்குள் இந்தக் கார் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. விலை சுமார் 3 லட்சம் டாலர்....அதாவது 1 கோடியே 53 லடசத்து 7470 ரூபாயாம் !

"எவ்வளவு காசியிருந்தாலும் இந்தக் காரை சுலபமாக வாங்கிவிடமுடியாது. "ஸ்போர்ட் பைலட்' ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களே இதை வாங்க முடியும்' என்கின்றனர் மோட்டார் வல்லுனர்கள்.






தகவல்: கோகுலவாச நவநீதன்.

Wednesday, May 2, 2012

என் பெயர் அம்பேத்கர்!

'அம்பேத்கர்னு பேர்வெச்சுக்கிட்டு தலித்களுக்குத் துரோகம் பண்றான்’பார் ஒரு அரசியல்வாதி. 'அம்பேத்கர்னு பேரைப் பார்த்தாலே தெரியலையா? தலித்தா இல்லாதவங்களுக்கு இவன்கிட்ட என்ன நியாயம் கிடைக்கும்’ பார் இன்னொரு அரசியல்வாதி. இப்படித்தான் நான் கடந்த பல வருஷங்களா அவங் கவங்க விருப்பங்களுக்கு ஏத்த படி முத்திரை குத்தப்பட்டு இருக்கேன். அதனாலேயே, அம்பேத்கராகிய நான் யாருங்கிறதை நிரூபிக்க ஒவ்வொரு கணமும் கவனமாக இருக்க வேண்டி இருக்கு'' என்று புன்னகைக்கும் அம்பேத்கர், கடலூர் மாவட்ட உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவின் ஆய்வாளர்.

அம்பேத்கர் என்றால், ஒரு தலைவரின் முகம் நினைவுக்கு வரும் முன்னர்... அவர் சாதியும் நினைவுக்கு வரும் மோசமான சூழலில்தான் நம் நாடு இன்னும் இருக்கிறது. அம்பேத்கர் என்று தனக்கு வைக்கப்பட்ட பெயர் காரணமாக இவர் அனுபவித்த துயரங்களின் பட்டியல்...

''விழுப்புரம் மாவட்ட தியாகதுருவம்தான் என் சொந்த கிராமம். வளர்ந்தது, வேப்பூர் கிராமத்தில். சுகாதாரத் துறையில் தொழுநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் கிராம மருத்துவர் என் அப்பா கதிர்வேலன். தீவிரமான கடவுள் பக்தரான அவருக்குத் தந்தை பெரியாரின் கொள்கைகள் மீது ஈர்ப்பு ஏற்பட, நாத்திகரா மாறினார். திராவிட இயக்கம், அம்பேத்கர், பெரியார்னு ஈடுபாடு காட்டினார். எனக்கு பரணீதரன்னுதான் முதலில் பேர்வெச்சு இருந்தாங்க. ஆறு வயசுல வேப்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சேர்த்தப்ப, என் பேரை அம்பேத்கர்னு எழுதச் சொன்னார் அப்பா. அன்னையிலேர்ந்து நான் அம்பேத்கர் ஆயிட்டேன்.

பள்ளிக் காலங்களில் எனக்கு முத்திரைகள் எதுவும் இல்லை. காரணம், சின்ன ஊர். எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். சட்டம் படிக்க சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கு வந்தேன். எல்லை கடந்து அப்பதான் சாதிய அடையாளங்களோட வடிவங்கள் தெரிய ஆரம்பித்தன. சேர்ந்த புதிதில், 'எவன் உன்னை ராகிங் பண்ணுறான்னு பார்ப்போம்’னு என்னைப் பிடிச்சுப் பத்திரப்படுத்துச்சு ஒரு குழு. என் பெயரே எனக்கு ஒரு பக்கச் சார்பைக் கொடுத்துச்சு. அடுத்து போலீஸ் வேலைக்குத் தேர்வா னேன். ஆவடி வீராபுரத்தில் பயிற்சி.

தமிழ்நாடு முழுக்க 280 பேர் வந்திருந்தாங்க. வரிசையா ஒவ்வொருத்தர் பேரா சொல்லிக் கூப்பிட்டாங்க. அம்பேத்கர்னு என் பேரைச் சொல்லிக் கூப்பிட்டவுடனே அத்தனை பேர் கண்ணும் என்னை மொய்க்க ஆரம் பிச்சுடுச்சு. அந்தப் பார்வைக்குத்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்?

'டேய்! இவன் நம்மாளுடா...’ 'ஓ... அவனா நீயி?’ங்கிற மாதிரி எத்தனையோ பார்வைகள்!

பயிற்சிக் காலத்தின்போது பலரும் வந்து சாதிரீதியாகத் தங்களுக்கு ஏற்படுற சிரமங்களை என்கிட்ட வந்து சொல்வாங்க. நான் ஆறுதல் சொல்லி அனுப்பிவைப்பேன். அப்படி வர்றவங்க எந்த நியாயத்தின்பேரில் என்கிட்ட வர்றாங்கங்கிறதை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது.

அப்புறம், போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் வேலைக்குச் சேர்ந்தேன். சாதி தொடர்பான சச்சரவுகளுக்குப் பஞ்சமே இல்லாத பகுதி அது. 2000-ல் புளியங்குடிங்கிற இடத்தில் ஒரு சமூகத்தைச் சார்ந்த மூணு பேரைக் கொடூரமாக் கொன்னுட்டாங்க. கடலூர் மாவட்டமே பற்றி எரியுற அளவுக்குப் பதற்றம். உயர் அதிகாரிகள் அத்தனை பேரும் வந்துட்டாங்க. என்னோட உயர் அதிகாரியாக இருந்த நரசிம்மன், 'பாடியைத் தூக்கி ஆம்புலன்ஸில் வைப்பா’ன்னார். நான் போய் பிணத்தைத் தூக்கினேன். உடனே, அங்கிருந்த சிலர் 'பிணத்தைத் தூக்கக்கூட நம்ம போலீஸ்தாண்டா வர்றான்’னாங்க. அப்போ நிலைமையைச் சுமுகமான சூழலுக்குக் கொண்டுவந்தார் சைலேந்திரபாபு.

ஆனா, அம்பேத்கர்ங்கிற பேர் காரணமாவே நான் அந்தச் சம்பவத்தப்ப ஒதுங்கி இருக்க வேண்டிய நிலை. ரவுண்ட்ஸ் போனால், குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்க மாட்டாங்க. சிலர் வீட்டிலேயோ, விருந்து கொடுக்காத குறையாக உபசரிப்பாங்க. எல்லாம் 'அம்பேத்கர்’ங்கிற பேருக்குக் கிடைக்கிற மரியாதை.

என் மேல, 'குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால், பாரபட்சமாக நடந்துகொள்கிறார்’னு ஒரு வழக்கு பதியப்பட்டு, 10 வருஷங்களுக்கு மேல விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு. கடலூர் மாவட்டத்துக்கு வந்து 12 வருஷங்கள் ஆகுது. தப்பு செஞ்சா, ஒரு போலீஸ் அதிகாரிங்கிற முறையில் நான் என்ன செய்யணுமோ, அதைப் பாரபட்சம் இல்லாம செய்வேன்கிறதை எல்லாத் தரப்பு மக்கள்கிட்டேயும் நிரூபிச்சு இருக்கேன்.

என் சங்கடங்களைத் தெரிஞ்சுகிட்ட எங்கப்பா ஒருகட்டத்துல, 'உனக்கு நான் சிரமம் கொடுத்துட்டேனோ? நீ வேணும்னா, உன் பேரை மாத்திக்கப்பா’னு சொன்னார். 'அரை நூற்றாண்டுக் காலம் இந்த நாட்டோட அடித்தட்டு மக்களுக்காகப் போராடியவரோட பேர் என் பேர்ங்கிறது எனக்குப் பெருமைதான்பா. வேணாம்பா’ன்னுட்டேன்.

அண்ணல் அம்பேத்கரை இந்தச் சமூகம் இன்னமும் ஒரு சாதியின் தலைவராகப் பார்க்குதேங்கிறதுதான் என் வேதனை'' என்று முடித்தார் அம்பேத்கர்.

இவ்வளவு கஷ்டங்களையும் அனுபவித்த இந்த அம்பேத்கர், பிறப்பால் தலித் அல்ல. அம்பேத்கரின் பெயரைவைத்துக்கொண்டு இருப்பதாலேயே இவர் அனுபவிக்கும் கொடுமைகள் இப்படி என்றால், உண்மையான அடித்தட்டு மக்கள் படும் துன்பம்?



நன்றி : நிருபர் டி.அருள் எழிலன்

படம் : ஜெ.முருகன் - ஆனந்த விகடன்