Wednesday, July 20, 2011

மாயாவதி ஏன் வெல்கிறார் ? -- வரலாற்று அறிஞர் காஞ்சா அய்லைய்யா


எந்த சாதிய கூட்டணிகளையும் மீறி மாயாவதிதான் அடுத்தும் ஆட்சிக்கு வருவார்

உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி தேர்தலை எதிர்கொள்வதற்கு இன்னும் ஓராண்டு உள்ளது. ராகுல் காந்தி மற்றும் திக்விஜய் சிங் தலைமையில் காங்கிரசார் அங்கே கடுமையாகப் பணியாற்றி வருகின்றனர். மாயாவதியைத் தோற்கடிக்க காங்கிரஸ் சமாஜ்வாடியுடன் கைகோர்க்க விருப்பத்துடன் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இரு கட்சிகள் கொண்டிருக்கும் தனிப்பட்ட ஆசைகளால் அந்தக் கூட்டணி வருவதற்கு வாய்ப்பில்லை. இம்மாநிலத்தில் பாஜகவும் ஆட்சிக்கு எப்பாடுபட்டாவது வரவேண்டும் என்று போராடி வருகிறது. அக்கட்சியின் ராமஜென்ம பூமி ஆயுதம் பழுதுபட்டு விட்டதால் பலவீனமாக உள்ளது.

தேர்தலுக்கு முன்பான இந்த ஓர் ஆண்டில் இரண்டு விஷயங்களுக்காக மாயாவதி விமர்சனத் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம். கட்சியின் கீழ்மட்ட, மத்திய நிலைகளில் பிராமணர்களின் மேலாதிக்கம் தலித் தொண்டர்கள் மத்தியில் குறிப்பாக சாமார்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்சியில் பிராமணர்கள் தங்களுக்கு சாதகமாக ஆட்சி அதிகாரத்தைப் பயன் படுத்திக்கொண்டதான உணர்வு அவர் களிடையே உள்ளது. தலித்துகள் மற்றும் பிராமணர்களைச் சேர்த்து மாயாவதி ஒரு அசாதாரணமான பரிசோதனையை செய்தது நம் அனைவருக்கும் தெரியும். பிராமணர்களுக்கு பொருளாதார அனுகூலங்கள் கிடைக்க வேண்டும் என்று மாயாவதி விரும்பினார். அந்த வாய்ப்பை வழங்காவிட்டால் அங்கே மிகப்பெரிய பிராமணக் கலகம் எழுந்திருக்கும்.

பிராமணர்களில் ஒரு பிரிவினர் காங்கிரசுக்குப் போகலாம் என்ற தோற்றம் உள்ளது. ஆனால் காங்கிரஸ் யாரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப் போகிறது என்பதை வைத்துதான் இதை முடிவுசெய்ய முடியும். தலைவர் யார் என்ற பிரச்னையில் பாஜகவிலும் குழப்பம் நிலவுகிறது.

தலித் வாக்குவங்கியை தக்கவைக்க மாயாவதி சமாஜிக் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தியது இரண்டாவது முக்கிய அம்சமாகும். ஆனால் தலித்துகளின் நல்வாழ்வுக்காக பெரிதாக எதையும் அவர் செய்யவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் அம்பேத்கர், புத்தரையெல்லாம் தாண்டி பரிவர்த்தனின் முகமாக கான்ஷிராம் மாறியுள்ளார். கான்ஷிராம் சாமார் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் மாயாவதியுடன் சாமார்கள் பொருளாதாரப் பயன் பெறாவிட்டாலும் நீடித்து நிற்பார்கள். மற்ற தலித்துகளிடம் கொஞ்சம் அதிருப்தியும் உருவாகியுள்ளது.

சாமார் அல்லாத தலித் சாதியினரும் அதிகமாக மாயாவதியிடமிருந்து விலகிச் செல்லவில்லை. ஏனெனில் மாயாவதியின் கலாசார சுயமரியாதைப் பரப்புத் திட்டங்கள் தான் காரணம். ஊடகங்கள் மாயாவதியை சுயநல, ஊழல் பெண்மணியாக, தனது சிலைகளை தானே நிறுவுபவராக, மாலைகள் என்ற பெயரில் பகிரங்கமாக பணத்தைப் பெறுபவராக, வெளிப்படுத்த நினைக்கின்றன. ஆனால் தலித்துகளோ மாயாவதியை தலித் வரலாற்றை நிர்மாணம் செய்பவராகப் பார்க்கிறார்கள்.

உயர்சாதி அறிவுஜீவிகள் காசி, மதுரா, அயோத்யா போன்ற வரலாற்றுத் தலங்களை பெருமையாகக் கருதுகிறார்கள். ஆனால் இவை அப்போது கட்டப்படும்போது நிறைய பொதுமக்கள் வறுமையில் வாடி செத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் தற்போது தலித்துகளின் தலைவி செய்யும் செயல்கள் வருங்காலத்தில் பெருமைமிக்க வரலாறாக இருக்கப் போவதில்லை என்று கூறினால், அதை தலித்துகள் ஏற்கப்போவதில்லை. இந்துமரபில் மாயாவதியின் சிலை தலித்துகளின் சொந்த வழிபாடாக உருவாக மாறலாம். ஒருவேளை பௌத்த பெண் அடையாளமாகவோ, அம்பேத்கர் சிலைகளைப் போன்றோ மாறலாம். இந்த தேசம் தாஜ்மகாலால் பெருமை அடைய முடியாது. ஏனெனில் மக்கள் பசியில் இறந்துகொண்டிருக்கும் போது அது கட்டப்பட்டது. அதேபோல தலித் பகுஜன் வரலாற்று ஸ்தலங்களை உருவாக்கும் மாயாவதியையும் இந்த நாடு கண்டிக்கவே முடியாது.

இதற்கு நேர்மாறாக முலாயம் சிங்கோ, தனது ஆதரவுத் தளமான பிற்படுத்தப்பட்டவர்களின் அடையாளத்திற்கோ சுயமரியாதைக்கோ ஒரு துளிகூட தன் உழைப்பைத் தரவில்லை. அவர் மாயாவதி போன்றோ, கான்ஷிராம் போன்றோ வரலாற்று அடையாளமாக ஒரு நாளும் உருவாகமுடியாது. இருவருமே இந்து வேர்களை எதிர்த்து வந்தவர்கள். மாயாவதி கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த வரலாற்று ஸ்தலங்களை பிராமணர்களின் வேர்களை துண்டித்தே உருவாக்கியுள்ளார்.

உணவுக்கான பசியைவிட கலாசார வரலாற்றுக்கான பசிதான் தலித்துக்கு வலுவானது. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி மீண்டும் ஆட்சிக்கு வருவதே அம்மாநிலத்துக்கு நல்லதாக இருக்கும்.

நன்றி : தி சண்டே இந்தியன்

இஸ்ரேல் காஸ்ஸாவில் 3 ஆயிரம் டன் குண்டுகளை வீசியுள்ளது


காஸ்ஸா,ஜன:கடந்த 2008 ஆம் ஆண்டு 22 நாட்கள் நீண்ட கொடூரமான காஸ்ஸா தாக்குதலின்போது இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது பேரழிவை ஏற்படுத்தும் 3 ஆயிரம் டன் குண்டுகளை வீசியுள்ளது.

ஆயுதக்கிடங்கில் சேமித்து வைத்திருந்த கொடூரத் தன்மைக் கொண்ட குண்டுகளை காஸ்ஸா போரின்போது ஃபலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் வீசியதாக காஸ்ஸா போலீஸ் எக்ஸ்ப்ளோசிவ் என்ஜினீயரிங் டைரக்டர் மேஜர் தெஹ்ஸின் ஸாத் கூறியதாக ஃபலஸ்தீன் இன்ஃபர்மேசன் மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பல்வேறு வகையான குண்டுகளை சாதாரண மக்களையும், வாகனங்களையும் குறிவைத்து இஸ்ரேல் வீசியதாக தெஹ்ஸின் ஸாத் கூறுகிறார்.

கேன்ஸர், மலட்டுத்தன்மை போன்ற கொடூரமான நோய்களை உருவாக்கும் தன்மைக் கொண்ட வெள்ளை பாஸ்பரஸ், டங்ஸ்டன், யுரேனியம் உள்பட சர்வதேச அளவில் தடைச் செய்யப்பட்ட வெடிப்பொருட்களை இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது பிரயோகித்தது.

தரைமார்க்கம், வான்வழி, கடல்வழி என மூன்று வாரம் நீண்ட கோரமான தாக்குதலில் 1400 ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 1600 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது.

காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்க நீதிபதி கோல்ட்ஸ்டோன் தலைமையிலான ஐ.நா விசாரணைக் குழு கண்டறிந்திருந்தது. விசாரணைக் கமிஷன் தாக்கல் செய்த 575 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் காஸ்ஸா போரின்போது இஸ்ரேல் நடத்திய கொடூரங்களின் 7 உதாரணங்களை மேற்கோள் காட்டியிருந்தது.

செய்தி:தேஜஸ்

நன்றி : தினக்ஸ் வலைப்பூ

‘‘மொழிவழியாக மனித வரலாற்றில் பின்னோக்கிப் பயணம் செய்கிறோம்’’




னிரெண்டாயிரம் பக்கங்கள். சுமார் ஐந்து லட்சம் தமிழ்ச்சொற்கள். 31 தொகுதிகள்... 37 ஆண்டுகளாக நடந்துவந்த தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் (Tamil etymological Dictionary project) இப்போது முழுமை எய்தியுள்ளது. பாவாணர் தொடங்கிய இத்திட்டமானது பேராசிரியர் இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது. மூத்த தமிழறிஞரான மதிவாணன் என்.அசோகனுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்...

இந்த சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தில் நீங்கள்எப்படி இணைந்தீர்கள்?

ஒரு சொல்லின் வேரை ஆராய்வதற்கு பலமொழி அறிவு தேவை. எனவே சேலம் கல்லூரியில் பணிபுரிந்த எனக்கு பல மொழிகள் எழுதப் படிக்கத் தெரியும் என்பதால் பாவாணர் அவர்களிடம் இத்திட்டத் தில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. இன்று 37 ஆண்டுகள் இப்பணியில் கழித்தும் உள்ளேன். வட இந்திய மொழிகளில் உள்ள பல வினைச்சொற்களின் மூலம் தமிழாக உள்ளது. தமிழ்தான் வேர். இந்தியில் நாளை வா என்பதை ‘கல் ஆவோ’ என்கிறார்கள். கல் என்றால் நாளை. இந்தச் சொல் சமஸ்கிருதம், பெர்சியனில் இல்லை. குஜராத்தியில் இதை கால் ஆவோ என்கிறார்கள். ஒரியாவில் காலி ஆவோ என்கிறார்கள். தமிழில் காலையில் வா என்கிறார்கள். ஆக, இந்த காலைதான் இப்போது கல் ஆகியிருக்கிறது. எனவே வட இந்தியா முழுக்க ஒரு காலத்தில் தமிழ் பேசுகிறவர்கள்தான் இருந்தனர் என்றும் காலப்போக்கில் அது பிராகிருதமாகவும் பாலியாகவும் திரிந்தபோது சொற்கள் திரிந்துபோய்விட்டன என்று கூறலாம். அந்தச் சொற்களுக்கு வேர்மூலம் காணவேண்டுமென்றால் இந்த தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலியில் காணலாம்.

இதன் பயன் என்ன ?

இன்று இருக்கும் பல மொழிகள், சொற்கள் எங்கிருந்து பிரிந்து வந்தன? இந்தி, வங்காளி, பஞ்சாபி போன்ற மொழிகள் எங்கிருந்து உருவாயின? இந்த மொழிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தன? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தன என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியும். சொற்களை காலத்தால் மீட்டுக் கொண்டுபோனால் இவையெல்லாம் ஒரே மூல மொழியில் இருந்து பிரிந்தன என்பது தெரிகிறது. அந்த மூல மொழிக்கு தமிழ்மொழி மிகவும் நெருக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் நம் முன்னோர்களின் வரலாறும் வெளிக்கொணரப்படுகிறது. இதனால் ஒருவர் மற்றொரு மொழியிடம் பற்றுகொள்ளவும் அதைப் பேசுவோரிடம் உறவுகொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இதில் நீங்கள் எதிர்கொண்ட சங்கடங்கள் ? சவால்கள் ?

பொதுவாக சில சொற்களைப் பற்றி ஆராயும்போது, அவை பிறமொழி அகராதிகளிலும் கிடைக்காது. அவற்றுக்காக மலைவாழ் மக்கள் பேசும்மொழி, சிறு திராவிட மொழிகள், நாட்டுப்புற மொழி ஆகியவற்றை ஆராய வேண்டும். ராகி என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். கேழ்வரகைக் குறிக்கும் இச்சொல் எங்கிருந்து வந்திருக்க வேண்டும்? தமிழில் ‘ரா’ மொழியின் முதலில் வராது.

இது படுகர்களின் மொழியில் உள்ளது. அவர்கள் இதை எரகி என்கிறார்கள். நான்கு இறகுகளாக கதிர் உடைவதால், அதற்கு இறகி என்று பெயர் வைத்திருக்கவேண்டும். அதுதான் ராகி ஆனது.

சகோதரன் என்ற சொல் வடமொழியில் இருந்து நமக்கு வந்தது. ஆனால் அது வருவதற்கு முன்னால் தமிழர்களுக்கு சகோதரனைக் குறிக்கும் சொல் இல்லையா ?

தஞ்சாவூர் பகுதியில் சீர்காழியை அடுத்த ஊர்களில் வசிக்கும் மீனவர்கள் சகோதரர்களைக் குறிக்க வேறு சொல் கையாளுகிறார்கள். எனக்கு பிறவன்மார் மூணு பேர் என்பார்கள். பிறவிமார் மூணு பேர் என்பார்கள். பிறவன் என்பது ஆண் சகோதரனையும் பிறவி என்பது பெண் சகோதரியையும் குறிக்கிறது. தமிழில் உறை என்றால் தங்கியிருக்கும் வீடு. பிராகிருத மொழியில் உரா என்றால் வீடு. பஞ்சாபியில் உரா என்றால் வீடு.

எப்படி இச்சொல் அங்கே போனது ? ஸ்பெயினில் பாஸ்க் மொழியில் உரா என்றால் மனைவி. வீட்டைக் குறிப்பது மனைவியைக் குறிக்குமல்லவா? உறை என்று பேசுபவர்கள் யாரும் தமிழகத்தில் இல்லை. ஆனால் முன்னொரு காலத்தில் பிரிந்துபோனவர்களிடம் எஞ்சியிருக்கும் சொல்லாக அச்சொல் இருக்கலாம்.இதுபோல ஏராளமான சொற்கள் உள்ளன. இதையெல்லாம் இந்த அகரமுதலியில் தந்துள்ளோம்.

கல்வெட்டு ஆய்வுகள், அகழ்வாராய்ச்சி போன்றவை எப்படி உங்களுக்கு உதவி செய்துள்ளன?

நிறைய என்று சொல்லலாம். நான் சிந்துவெளி முத்திரைகள் அனைத்தையும் படித்துள்ளேன். ஐராவதம் மகாதேவனும் அஸ்கா பர்போலாவும் ஒரு முத்திரையைக் கூட படிக்க இயலவில்லை. அவர்கள் முகமதியர்கள்போல வலமிருந்து அந்த முத்திரைகளைப் படிக்கவேண்டும் என்று முடிவெடுத்தனர். சிந்துவெளி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களில் 75 விழுக்காடு இந்தியாவில்தான் உள்ளன. அப்படி இருப்பின் இந்திய மொழிகள் அனைத்தும் அரபியைப் போல வலமிருந்துதானே எழுதப்பட்டிருக்க வேண்டும்? அப்படியா உள்ளன? இடமிருந்துதானே எழுதுகிறோம்? சிந்துவெளி முத்திரைகள் இடமிருந்துதான் எழுதப்பட்டவை என்று நான் ஐயாயிரம் முத்திரைகளைப் படித்துக் காட்டியுள்ளேன்.

ஆனால் நீங்கள் படித்தவற்றுக்கு அங்கீகாரம் இல்லையே ? ஏன் ?

வலமிருந்து படிக்கவேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். அதை மாற்றிக்கொள்ளத் தயாராக அவர்கள் இல்லை. சரி. அப்படி முடிவெடுத்தவர்களை ஒரு முத்திரையையாவது அவர்களைப் படித்துக்காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். லைக் என்று ஆங்கிலத்தில் இருக்கும் சொல்லை எகில் என்று வலமிருந்து படிக்கமுடியுமா? முடியாது. அதுபோல்தான் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அஸ்கோ பர்போலாவாலும் ஐராவதம் மகாதேவனாலும் சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க இயலாது. அப்புறம் இவர்கள் அதை அசை எழுத்து(syllabic) என்று சொல்லிவிட்டு படமாகப் (pictographic) படிக்கிறார்கள். ஒரு மீன் படம் இருக்கிறது. அதற்குப் பின்னால் ஆறு கோடுகள் இருக்கின்றன. இதை அறுமீன் என்று படிக்கிறார் கள். வணிகர்கள் பயன்படுத்திய முத்திரைகளில் அவர்கள் பெயர் தானே இருக்கவேண்டும்? நான் படித்ததில் சாத்தன் என்றொரு பெயர் உள்ளது. பல பெயர்கள் தமிழ்ப்பெயர்களாக உள்ளன. கூத்தழகன் சாத்தன் என்றே வருகிறது. ‘ழ’கரமே நன்றாக உள்ளது.

சிந்துவெளி முத்திரைகளில் சிவனின் பெயர் கோ அவ்வன் என்று உள்ளது. யோக நிலையில் உள்ள சிவன். ஆரிய திராவிட நாகரிகங்களுக்கு இடையே ஒரு வேறுபாடு உண்டு. யாகம் செய்தது ஆரிய நாகரிகம். யோகம் அதாவது தவம் செய்தது திராவிட நாகரிகம். இப்போது யோகத்தை அவர்களும் யாகத்தை இவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். சிந்துவெளி நாகரிகத்தில் யோக நிலையில் சிவன் இருப்பதால் அது தமிழர்கள் நாகரிகமாக இருக்கவேண்டும். சிந்துவெளியில் அந்த சிவன் மீது கோ அவ்வன் என்று உள்ளது. கோ என்றால் மலை. மலையப்பன், கொண்டப்பன், கட்டப்பா என்கிறோம் அல்லவா? சிந்துவெளி நாகரிகத் தமிழில் அவ்வன் என்றால் அப்பன்; அவ்வை என்றால் தாய் என்று நான் சொன்னேன். ஆனால் இலக்கியத்தில் எங்குமே இதற்குச் சான்று இல்லையே என மறுத்தார்கள்.

இலக்கியத்தைவிட 2000 மூவாயிரம் ஆண்டுகள் பழைமையானது சிந்துவெளி. அந்த சொல் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அந்தச் சொல் சங்ககாலம் வரை இருந்திருக்கிறது என்பது இப்போது புலப்படுகிறது. புதுச்சேரி பல்கலைப் பேராசிரியர் ராஜன், புலிமான் கோம்பை என்ற ஓர் இடத்தில் செய்த ஆய்வில் ஒருநடு கல்லில் தமிழ் பிராமி எழுத்துக்களைப் படித்தார். அதில் அவ்வன் பதவன் என்று ஒரு பெயர் உள்ளது. ஆக, சங்ககாலத்திலேயே அவ்வன் என்ற பெயர் இருந்திருக்கிறது. எனவே சிந்துவெளியில் நான் படித்ததும் சரியே என்ற முடிவுக்கு வந்தேன்.




மேலை நாட்டு மொழியியல் ஆய்வுக்கும் உங்கள் ஆய்வுக்கும் என்ன தொடர்பு? அந்த கொள்கைகளை எப்படிப் பயன்படுத்திக்கொண்டீர்கள் ?

அவர்கள் உலக மொழிகளுக்கு ஒரு பொது அளவுகோல் வைத்து ஆய்ந்தார்கள். ஆனால் வேர்மூலம் காண்பதில் தவறான பாதையில் சென்றுகொண்டுள்ளனர். சொற்களால் சொற்களை மீட்டமைக்கிறார்கள். ஆனால் அதற்குப் பொருள் இருக்கும் என்பதை அவர்கள் ஏற்பதில்லை. காரணம் கருதித்தான் பொருட்களுக்குப் பெயர் வைத்துள்ளனர். எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்றார் தொல்காப்பியர். இந்த அடிப்படையில்தான் பாவாணர் அணுகுமுறையும் மேனாட்டவர் அணுகுமுறையும் வேறுபடுகின்றன. சொல் மூலம் மட்டும் காட்டினால் போதும் என்கிறார்கள் அவர்கள். நாங்களோ சொல் மூலத்துடன் பொருள் மூலமும் காண்பிக்கிறோம். நிழல் என்பது பழங்காலத்தில் நீழல் என்று இருந்தது. நீள்வதால் நீழல் என்று பெயர்வைத்தான் என்று நான் சொல்கிறேன். ஆனால் அதெல்லாம் வேண்டாம் நிழல் என்று பெயர்வைத்துவிட்டான் என்பதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்; காரணம் வேண்டாம் என்பது மேலைநாட்டு அணுகுமுறை. உங்கள் மொழியில் தெரியவில்லை. நீங்கள் சொல்ல இயலாது. ஆனால் எங்கள் மொழியில் தெரிகிறது. நாங்கள் சொல்கிறோம். எங்களு டைய சொற்பிறப்பியல் அகராதி, உலகில் வந்துள்ள பிற சொற் பிறப்பியல் அகராதிகளைவிட வேறு பட்ட அமைப்பு கொண்டது. மிகவும் விஞ்ஞானரீதியிலானது. சொல்லை ஆராயும்போது அதன் பொருளுக்கு முதலிடம் கொடுக்கிறோம்.

பாவாணருக்குப் பின்னால் இப்பதவியில் நீங்கள் நியமிக்கப்பட்டதற்கு பெருஞ்சித்திரனார் எதிர்ப்புத் தெரிவித்ததாகச் சொல்லப்பட்டதே...

பாவாணருக்கும் பெருஞ்சித்திரனாருக்கும் கடைசி காலத்தில் வேறுபாடுகள் வந்துவிட்டன. பாவாணரை, அவர் தன் வீட்டைக் கட்டுவதில்தான் கவனமாக உள்ளார். அகரமுதலியை மறந்து விட்டார் என்று விமர்சனம் செய்தார். இடையில் நானும் சிக்கிக் கொண்டேன். ஆனால் பின்னால் மதிவாணன் தக்கவர்தான் என்று என்னைக் குறிப்பிட்டு எழுதினார். இத்திட்டம் உருவானபோது தமிழோடு பிற மொழிகளும் தெரிந்த தமிழாசிரியர்கள் வேண்டும் என்று பாவாணர் தேடியபோது, அவரிடம் சொல்லி சேலத்தில் பணிபுரிந்த எனக்கு இவ்வாய்ப்பை பெருஞ்சித்திரனார்தான் அளித்தார். இன்றைக்கு அவர் இருந்திருந்தால் இப்பணி முடிந்திருப்பது கண்டு பெருமகிழ்வு கொண்டிருப்பார்.

நன்றி : தி சண்டே இந்தியன்

பாட்டுத்தலைவன் (கனவு காணும் பெற்றோர்களுக்கு)


நீதிபதிகள் தீர்ப்பை சொல்லச் சொல்ல அவனுடைய பார்வையெல்லாம் அப்பாவை நோக்கியதாகவே இருந்தது. அவரோ தன் இரண்டு கைகளையும் முகத்துக்கு நேராக கோர்த்த படி இறைவனை வேண்டிக்கொண்டிருந்தார். ஸ்ரீநாத் எலிமினேடட்! நீதிபதிகள் அறிவித்தனர். அப்பா அழுதுவிட்டார். அழுகை கோபமாக மாறியிருக்க வேண்டும். மனதிற்குள் ஸ்ரீநாத்துக்கு இனி பாடவேண்டாம் என்கிற மகிழ்ச்சி. சிரிக்க வேண்டும் போல் இருந்தது. ஆனாலும் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டான். டிவியில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த லட்சோபலட்ச ஜனங்களும் அழுதனர். பிண்ணனியில் சோக இசை வடிய... ‘ஆறுவயதிலேயே அசாத்திய திறமை கொண்ட இவர் போட்டியை விட்டு இப்போது வெளியேறினாலும் வைல்ட் கார்ட் சுற்றில் மீண்டும் பாடுவார்..’ பிண்ணனி குரல் ஒலிக்க நிகழ்ச்சி முடிந்தது.

இன்னும் இரண்டு வாரங்களில் எக்ஸலன்ட் சிங்கர் போட்டியில் வொய்ல்ட் கார்ட் ரவுண்ட். தோற்றவர்கள் கூடி பாடுவார்கள். அதில் இருவருக்கு இறுதி வாய்ப்பு. வெற்றிப்பெற்றே ஆகவேண்டும். அவனுக்கல்ல அவனுடைய அப்பாவுக்கு. அவர் வெறிபிடித்த மாதிரி அலைந்தார். பல இசை கலைஞர்களோடுப் பேசினார். எஸ்.எம்.எஸ் ஓட்டு மிக முக்கியம்.. ஏர்பெல் நிறுவனத்திலிருந்து உயர் அதிகாரியிடம் நிறைய ஓட்டுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு விலை பேசத் தொடங்கினார்.

கடைசி சுற்றுப்போட்டியில் அவனை எலிமினேட் செய்தபோது எப்படி அழுதான் தெரியுமா? அதை அவனால் மட்டுமே விவரிக்க முடியும். தோற்றதற்காக அவன் அழவில்லை. அவனுக்கு தோல்வியென்றால் தெரியாது. அவன் பிறந்ததிலிருந்து அப்பா அவனை அது போல திட்டினதே இல்லை. பின் மண்டையில் அடித்து அடித்துத் திட்டினார். சனியனே சனியனே! எத்தன வாட்டி பிராக்டீஸ் பண்ணே! அப்படி என்ன ஞாபக மறதி.. இனி நான் எப்படி ஆபீஸ்ல மொகத்த காட்டுவேன்..

ஒவ்வொரு சுற்றிலும் அவன் வெற்றி பெற்று முன்னேறும் போதும் அப்பா நிறைய பாராட்டுவார். சிரிப்பார். நண்பர்களுக்கெல்லாம் போன் போட்டு சார் ஸ்ரீநாத் ஜெயிச்சிட்டான். பாடகர் பாலா அசந்துட்டார். அப்படியே பையன அலேக்கா தூக்கிட்டார். பாடகி அனுசுயாஸ்ரீ எப்படி பாராட்டினாங்க தெரியுமா , வருங்காலத்துல பெரிய சிங்கரா வருவானு சொன்னாங்க.. தினமும் நிறைய ரசிகர்கள் போன் பண்றாங்க!

மகிழ்ச்சியில் சாக்லேட் வாங்கித்தருவார். அவன் சாக்லேட்டை வாங்கி ஆவலோடு பிரித்து வாயில் போடும் போது அதை பிடுங்கி விடுவார். பாதி உடைத்துக்கொடுப்பார். குரல் கெட்டுவிடுமாம். ஐஸ்கிரீம் அறவே கிடையாது. ஆனால் மடியில் வைத்துக்கொஞ்சுவார். அவன் என்றால் அவருக்கு உயிர். தன்னுடைய லட்சியம் கனவு எல்லாமே அவன்தான் என்று கருதினார். விளையாட்டாகத்தான் எக்ஸலன்ட் சிங்கரில் ஸ்ரீநாத் கலந்து கொண்டான். யாருமே எதிர்பார்க்கதது நடந்தது. அடுத்தடுத்த சுற்றுகளில் அவன் ஜெயிப்பதும், தொடர்ந்து அவனுக்கு வந்து விழும் பாராட்டும்.. அவையெல்லாம் அப்பாவை நோக்கியாதாய் மாறியதும் .. காலில் இறகு முளைத்து பறக்கத் தொடங்கினார். இத்தனை புகழை அவன் பரம்பரையில் யாருமே பார்த்ததில்லை.

இப்போதெல்லாம் அவன் ஹோம் வொர்க் செய்வதில்லை. ஸ்கூலுக்கு எப்போதாவதுதான் செல்கிறான். மிஸ் கூட அவனை திட்டுவதில்லை , எப்போதும் அடுத்த என்ன பாட்டு பாடப்போறடா செல்லம்? பாலா சார்கிட்ட ஒரு ஆட்டோகிராப் வாங்கித்தரீயா? மாதிரியான கேள்விகள்தான்! ஹோம் வொர்க் ஏபிசிடி பிரச்சனைகள் இல்லை.. அது ஒரு பக்கம் மகிழ்ச்சிதான்.

பூங்காவுக்கு போய் சறுக்கி விளையாட முடிவதில்லை. பூங்காவுக்குள் நுழைந்தாலே ஏ அங்கபாரு ஸ்ரீநாத் என்று கூட்டம் கூடி விடுகிறது. சிலர் ஆட்டோகிராப் கூட கேட்கிறார்கள். அவன் பெயரை அட்சர சுத்தமாக எழுத பழக்கிவிட்டிருக்கிறார் அப்பா. யாரோடும் விளையாடுவதில்லை. அவன் கத்திக்கொண்டு எங்காவது ஓடினால் பிடித்துக்கொள்வார். ஏன் இப்படி கதர்ற வாய்ஸ் என்னாவறது..

தன்னுடைய முழுநேர பிஸினஸைவிட்டுவிட்டு இப்போதெல்லாம் எப்போதும் ஸ்ரீநாத்தை கவனிப்பதையே முழுநேர வேலையாக செய்துகொண்டிருந்தார். அதில் அவனுடைய அம்மாவுக்கு கொஞ்சம் மகிழ்ச்சிதான். முன்னெல்லாம் அர்த்தராத்தியில் கதவு தட்டி விடிவதற்கு முன் விமானத்தில் பறப்பார். ஆனால் அப்பாவின் பாட்டுக்காரன் பயணம் அம்மாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதை சொன்னதற்கு சண்டையாகி சண்டை முற்றிப்போய் டைவர்ஸ் வாங்கிட்டு உங்கப்பன் வீட்டுக்கே போய்க்க்கோடி என்பதாக , அம்மா சரணடைந்து சமாதானத்திற்கு வர முடிவுற்றது.

மியூசிக் சேனல்களுக்கு இணையாக இருபத்திநான்கு மணிநேரமும் வீடுநிறைய பாட்டுதான். காலையில் நான்கு மணிக்கே எழுப்பி விடுவார் அப்பா. தூக்கம் தூக்கமாக இருக்கும். டிவிஎஸ் பிப்டி அதிர பாட்டு மாஸ்டரும் வந்துவிடுவார் , அப்பா பக்கத்திலேயே அமர்ந்த படி அவனையே பார்த்துக்கொண்டிருப்பார். அவன் அரைக்கண்ணில் தூங்கியபடி பாடுவான். மீண்டும் மீண்டும் ஒரே பாட்டை பாடுவான். மாஸ்டர் விடாப்பிடியாக வாயில் மாவா வழிய ‘பையன் நன்னா பாதறான் அந்னா இந்நுனும் கொந்தம் பிராக்திஸ் பந்தா சரியாபூதூம்.. ‘’ என்பார். மாவா வாசனை அவனுடைய ஏசி அறையில் நிரம்பி எங்கும் மாவா பொடி காற்றில் அலைவதாய் கற்பனை செய்து கொள்வான். அந்த பொடி தூளாகி வானில் பரவி , கோலங்களைப்போல விதவிதமான உருவங்களாய் மாறி மாறி ஓடி ஆடி வித்தைகள் காட்ட.. ‘’தே கந்ணா இன்னடா நீ காலைலயே தூங்கதே..’’ என்று பின்மண்டையில் தட்டி எழுப்பி விடுவார் அந்த மாவா மாஸ்டர்.

இவன் விழித்துக்கொண்டு மீண்டும் சாசச சாசச ரீரிரி என கத்துவான். பக்கத்துவீட்டிலிருப்பவர்களுக்கு கூட இவன் இன்ஸ்பிரேஷன் ஆகிப்போயிருந்தான். தங்களுடைய பிள்ளைகளுக்கு அவனை காட்டி காட்டி ‘பாரு அதுவும்தான் புள்ள! என்னாமா பாடி என்னமா ஜெயிச்சுண்டு வந்திருக்கு.. நீயும்தான் இருக்கியே சரியான மண்ணு.. உன் அப்பா மாதிரி , சரியான தத்தி’ என்று பேசுவது ஸ்ரீநாத்தின் ஏரியாவில் சாதாரணமாகிவிட்டது. அவனுடைய வீட்டு வேலைக்காரியின் பையன் குமாரும் எக்ஸலன்ட் சிங்கர் போட்டியில் கலந்து கொண்டான். ஒப்புக்கு சப்பானியாக பாடவைத்து முதல் சுற்றிலேயே அவனுடைய சாரீரம் சரியில்லை என விரட்டிவிட்டார்கள். அதில் ஸ்ரீநாத்துக்கு நிறைய வருத்தம். ஆனால் குமாருக்கு வருத்தமில்லை எப்போதும் போல அம்மாவோடு வந்து ஸ்ரீநாத் பாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான். அப்பா அவனோடு பேச விடுவதுமில்லை. பேசவிட்டால் நிறைய கதை சொல்லுவான்.. எல்லாமே அவனே சொல்லும் கதை. அவன் ஏரியாவில் கிடைக்கும் தேன்மிட்டாய் தருவான். ச்சே ஏன்தான் பாடுறேனோ! மீனாட்சிக்கு மகனா பொறந்திருக்கலாம் என்று நினைப்பான்.

இன்னும் மூன்று நாள்தான் இருந்தது. இவன் இதுவரைக்கும் அந்தப் பாடலை ஆயிரம் முறை பாடியிருப்பான். அவ்வளவும் பயிற்சி. சரணத்துல இன்னும் ஸ்பீட் வேணும்.. அந்த இடத்துல சங்கதி சரியில்ல.. பல்லவி பல் இளிக்குது மாதிரியான அப்பாவின் வசனங்கள் தூங்கும் போது கூட காதில் ரீங்காரமிடும். நேற்று தூங்கும் போது போட்டியில் இவன் தோற்பதாகவும் அப்பா அவனுடைய நாக்கை இழுத்து கத்தியால் அறுப்பதாகவும்.. ரத்தம் வருவதாகவும் கனவு கண்டான். அரை இரவில் விழித்தெழுந்து அழ ஆரம்பித்துவிட்டான். அப்பா எழுந்து வந்து அழக்கூடாது என்று அதட்டினார். அழுதாலும் சாரீரம் கெட்டுவிடுமாம். வாயைப்பொத்திக்கொண்டு விசும்பினான். அழாத அழாத.. என்று கையை ஓங்கிக்கொண்டு கண்கள் சிவக்க அப்பா நிற்பதைப் பார்த்து அம்மாவுக்கே லேசாக உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. அம்மாவைக் கட்டிப்பிடித்தபடி படுத்து உறங்கினான். அடுத்த நாள் போட்டி.. தூக்கத்திலும் அந்த பாடலையே பாடிக்கொண்டிருந்தான். அம்மா நான் நாளைக்கு தோத்துட்டா அப்பா என்ன பண்ணுவாரு என்றான். அம்மாவும் பயத்தோடே இறுக்க கட்டியணைத்தபடித் தூங்கினாள்.

அடுத்த நாளில் அவன் பாடினான். நீதிபதிகள் கைத்தட்டினர். அனைவரும் பாராட்டினர். இறுதியில் முடிவு அறிவிக்கப்படும் நேரம் வந்தது. நீதிபதிகள் தீர்ப்பை சொல்ல சொல்ல அவனுடைய பார்வையெல்லாம் அப்பாவை நோக்கியதாகவே இருந்தது. அவரோ தன் இரண்டு கைகளையும் முகத்துக்கு நேராக கோர்த்த படி இறைவனை வேண்டிக்கொண்டிருந்தார். அப்பாவுக்கு அருகில் அமர்ந்திருந்த அம்மாவும் நினைத்துக்கொண்டாள்.. ‘’ஒருவேளை தோத்துட்டா அப்பா என்ன பண்ணுவாரு’’ திகிலாக இருந்தது. அவன் வெற்றிபெற்றான். அப்பா மகிழ்ச்சியில் அவனை தூக்கி கொஞ்சினார். சிரித்தார். கண்ணீர் விட்டு அழுதார். ஸ்ரீநாத்துக்கு எதுவுமே செய்ய தோன்றவில்லை. அவன் அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தான். ‘’தோத்திருந்தா அப்பா என்ன செய்திருப்பாரு’’ என யோசித்துக்கொண்டேயிருந்தான்.

மிக்க நன்றிகள் : நன்றி- சூரியகதிர் மற்றும் அதிஷா வினோ

அமெரிக்க நடத்திய போர்களில் இதுவரை உயிர்ப் பலி 2,25,000:ஆய்வு


செப்டம்பர் 11,2001 தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா தொடுத்த போர்களால் இதுவரை 2,25,000 உயிர்ப் பலி ஏற்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஈராக், ஆப்கானிஸ்தானில் தொடுத்த போர்கள் மற்றும் பாகிஸ்தானிலும் ஏமனிலும் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது பிரவுன் பல்கலைக்கழகம்.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களில், சுமார் 2,25,000 பேர் உயிரிழந்துள்ளனர்; 3,65,000 பேர் காயமடைந்துள்ளதாக இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் அமெரிக்கர்கள் சுமார் 6,000 பேர் உள்பட 31,741 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், ஈராக்கியர்கள் 9,900 பேர், ஆப்கானியர்கள் 8,800 பேர், பாகிஸ்தானியர்கள் 2,300 பேர் மற்றும் 2,300 அமெரிக்க தனியார் பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர்.

இந்தத் தாக்குதல்களில் இதுவரை பலியான சிவிலியன்களின் எண்ணிக்கை 1,72,000. இதில், 1,25,000 ஈராக்கியர்களும், 35,000 பாகிஸ்தானியர்களும், 12,000 ஆப்கானியர்களும் பலியாகியுள்ளனர்.

மேலும், 168 பத்திரிகையாளர்கள் மற்றும் 266 தன்னார்வ தொண்டு ஊழியர்களும் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கப் போர்களால் இதுவரை 78 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு, அமெரிக்காவால் தொடுக்கப்பட்ட போர்களுக்கு இதுவரை 4.4 டிரில்லியன் டாலர்கள் அளவில் செலவிடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

இவை அனைத்தும் அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள மதிப்பீடுகளைக் காட்டிலும் மிக அதிகம் என்பது கவனத்துக்குரியது.

நன்றி : விகடன் இணையதளம்

ஊழலின் மூலத்தை எதிர்க்க மறுக்கும் ஊழல் எதிர்ப்பாளர்கள் -- விடுதலை இராசேந்திரன்



இதோ இந்தியாவின் அனைத்து மக்களின் பிரதிநிதிகள்' என்று இரண்டு தனி மனிதர்கள் கதாநாயகர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தனி மனிதர்கள் யார் என்பதே தமிழ் நாட்டுக்குத் தெரியாது. ஒருவர் கதர்குல்லாய் அணிந்திருக்கிறார் – பெயர் அன்னா அசாரே என்கிறார்கள். "பிரதமரே ஊழல் செய்தாலும் விடக் கூடாது; "லோக்பால்' என்ற அதிகாரம் கொண்ட அமைப்பை அமைத்தாலே ஊழல் ஒழிந்துவிடும்' என்கிறார்; ஊழல் குற்றவாளிகளைத் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்கிறார். தூக்குத் தண்டனையை காந்தியே எதிர்த்தவர்தான் என்பது, இந்த நவீன காந்திக்கு தெரியாமல் போய்விட்டது.

"உண்ணாவிரதம்' என்ற போராட்டத்தை அறிவித்தார், அவ்வளவுதான். பார்ப்பன தேசிய ஊடகங்கள் அவற்றை தேசியப் பிரச்சனையாகவே மாற்றின. சமரசம் பேச ஆட்சியாளர்கள் ஓடிவந்தார்கள். மணிப்பூர் மாநிலத்தில் கொடூரமான ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி, இரோம் ஷர்மிளா என்ற வீராங்கனை கடந்த 10 ஆண்டுகளாக பட்டினிப் போராட்டம் நடத்துகிறார். மருத்துவமனையில் அவரை அடைத்துவைத்து ராணுவம் வலுக்கட்டாயமாக அவருக்கு மூக்கின் வழியாக உணவைத் திணிக்கிறது. ஷர்மிளாவின் பட்டினிப் போராட்டத்தை – ஒரு செய்தியாகக்கூட இந்த ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சென்றதில்லை.

அன்னா அசாரேயின் உண்ணாவிரத மேடையில் காந்தி படத்தை காணவில்லை. காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே வணங்கிய "பாரத மாதா' படம்தான் அலங் கரித்துக் கொண்டிருந்தது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவாரங்கள் – அசாரேயின் படைத்தளபதிகள். அசாரே வுக்கு மிகவும் பிடித்தது, குஜராத்தின் மோடி ஆட்சிதான்; அங்கேதான் நல்லாட்சி நடக்கிறது என்கிறார்.

முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த "குஜராத் ராஜபக்சே'யின் ஆட்சியில் – 17 ஆயிரம் கோடி ரூபாய் குளம் வெட்டும் ஊழல், 260 கோடி ரூபாய் ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழல், 600 கோடி ரூபாய் மீன் வளர்ப்பு திட்ட ஊழல் என ஊழல்கள் அணிவகுத்து நிற்கின்றன. கிராமங்களில் வறுமையின் கோராத்தாண்டவம்; மக்கள் கிராமங்களை காலி செய்துவிட்டு நகரங்களை நோக்கி ஓடுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு – அவர்கள் விரும்புகிற இடங்கள் தாராளமாக ஒதுக்கப்படுகின்றன; அங்கே 5 ஆண்டுகளுக்கு எந்த வரியும் கிடையாது. அன்று மன்னர்கள் ஆட்சியில், இப்படித்தான் ஊர்கள் "தானமாக' (சதுர்வேதி மங்கலங்கள்) வழங்கப்பட்டன. அங்கே மன்னனின் எந்த வரி விதிப்பும் நடைமுறைக்கு வராது. அன்று சதுர்வேதி மங்கலங்கள்; இன்று அதற்குப் பெயர் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

டாட்டாவின் "நா÷னா' கார் தயாரிப்புக்கு – உற்பத்தி செலவைவிட மோடி கூடுதல் மானியம் தருகிறார். நிலத்தைப் பறிகொடுத்த மக்கள், அரசிடமிருந்து இன்னும் இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்று கதறுகிறார்கள். முஸ்லிம்கள் இனப்படுகொலை வழக்கில், மோடிக்கு "நீரோ மன்னர்' என்று பட்டம் சூட்டியது உச்ச நீதிமன்றம் (ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது, பிடில் வாசித்தவன் நீரோ). இதே நரேந்திர மோடி குஜராத்தில் "லோக் அயுக்தா' என்ற ஊழல் மீட்புக் குழுவை அமைக்க மறுத்து விட்டார் என்பது அசாரேவுக்கு தெரியாதுபோலும். ஊழலுக்காக உயிர் விடவும் தயாரான அசாரே, மராட்டியத்தில் தனது சொந்த கிராமத்தில் செயல்படுத்தி வரும் நல்வாழ்வுத் திட்டங்களில், சாதிப் பாகுபாடுகளை கைவிடத் தயாராக இல்லை என்று சுட்டிக் காட்டுகிறார், மதச்சார்பற்ற எழுத்தாளர் ராம்புனியானி.

கதாநாயகனாகக் களமிறக்கப்பட்டுள்ள மற்றொரு ஊழல் எதிர்ப்பு நாயகன் பாபாராம்தேவ். காவியுடையில் காட்சி தரும் "யோகா மாஸ்டர்'. பசுமாட்டை வெட்டினால் தூக்குத் தண்டனை தர வேண்டும் என்று வடமாநிலங்களில் இதுவரை இயக்கம் நடத்தியவர். இப்போது, வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியோரையும் தூக்கில் போட வேண்டும் என்கிறார். காவி உடை தரிக்கும் இவரின் சொத்து மதிப்பு 5,000 கோடி ரூபாய் என்றும், ஆண்டு வருமானம் 1,000 கோடி ரூபாய் என்றும் செய்திகள் கூறுகின்றன. உத்தரகாண்ட் மாநிலம் பதஞ்சலியில் மிகப் பெரிய யோக பீடம்; 300 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேத மருத்துவமனை; 200க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள்; மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பு; ஸ்காட்லாந்து நாட்டில் சொந்தமான தனித் தீவு என்று கொடிகட்டிப் பறக்கிறது இவரது சாம்ராஜ்யம்.

"பசுவதை'க்கு மரண தண்டனை கோரும், இவரது மருந்து நிறுவனத் தயாரிப்பில், விலங்குகளின் எலும்புகள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்து, மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. பா.ஜ.க., பார்ப்பன இந்துத்துவ சக்திகள் புடை சூழ "ராம்லீலா' மைதானத்தில் இவர் "உண்ணாவிரத'த்தைத் தொடங்கினார். ஊழல் அரக்கனாக – 10 தலை ராவணன் உருவத்தை அமைத்து, "ராம ராஜ்ய' பெருமையைப் பறை சாற்றினார்கள்.

ஊழல் ஒழிப்பு பேரார்வம், திடீரென்று இவர்களிடம் பெருக்கெடுத்து ஓடியது ஏன்? காரணம் இருக்கிறது. அண்மைக்காலமாக காமன் வெல்த் விளையாட்டு ஊழல்; ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல்; 2ஜி அலைக்கற்றை ஊழல் என்று ஊழல்கள் அடுத்தடுத்து அம்பலமாகி – மக்களிடையே ஊழல் எதிர்ப்பு உணர்வு உருவானது. பாரதிய ஜனதா, இந்த உணர்வுகளை அறுவடை செய்ய திட்டமிட்டது. அவர்களின் திட்டமெல்லாம் 1975 ஆம் ஆண்டை மீண்டும் கொண்டு வரலாம் என்பதுதான். ஜெயப்பிரகாஷ் நாராயண், அப்போது – இந்திரா ஆட்சிக்கு எதிராக "முழுப் புரட்சி' இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம், இந்துத்துவா சக்திகள் – ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. அதே நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என்பதே அத்வானிகளின் துடிப்பு.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட இந்துத்துவா சக்திகள், மீண்டும் மக்கள் மன்றத்தில் கால் பதிப்பதற்கு – அவர்களிடம் எந்த செயல் திட்டமும் இல்லை. மீண்டும் "அயோத்தி ராமனிடம்' அடைக்கலம் புகுந்தால், மக்கள் ஆதரவு இருக்கப் போவது இல்லை என்பதை அவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்கள்.

பா.ஜ.க. பரிவாரங்களின் இந்த சூழ்ச்சித் திட்டத்தைப் புரிந்து கொண்ட காங்கிரஸ் கட்சி, இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளத் திட்டமிட்டது. அன்னா அசாரே உண்ணாவிரதத்தைத் தொடங்கியவுடன் – அவரிடம் சமரசம் பேச காங்கிரஸ் ஓடியது. அவரது பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாக உறுதியளித்தது. பாபாராம்தேவை சரிகட்டுவதற்கு, நான்கு மத்திய அமைச்சர்கள் ஓடினார்கள்! ஆனால், காங்கிரசுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இந்தியாவின் பிரதமரை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது, ராம்தேவின் கோரிக்கைகளில் ஒன்று. கடந்த காலங்களில் பாரதிய ஜனதா முன்மொழிந்த கோரிக்கைதான் இது. நாட்டின் 125 கோடி மக்கள் தொடர்பான ஒரு பிரச்சனையில், ஒரு "யோகா மாஸ்டர்' முடிவெடுக்கும் அதிகாரத்தை தன்னிடம் எடுத்துக் கொண்டு விட்டார். அம்பேத்கர் போராடிப் பெற்ற – இரட்டை வாக்குரிமைக்கு எதிராக காந்தி தொடங்கிய உண்ணாவிரத சண்டித்தனத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு ?

ஊழல் – பதுக்கல் பணத்தை எதிர்க்கக் கிளம்பியிருக்கும் இவர்கள், ஊழலின் வேகம் பாய்ச்சலாக மாறியதற்கான காரணத்தை கூறõமல் ஏன் மறைக்கிறார்கள்? ஒரு காலத்தில் – அரசு நிர்வாக மட்டத்தில் கையூட்டு பெறும் பழக்கம் இருந்தது. பெரும் தொழிலதிபர்கள் – தொழில் உரிமம் – தொழில் அனுமதி பெறுவதற்கு கையூட்டு தந்து வந்தார்கள். அப்போதெல்லாம் தொழில் கொள்கைகளை அரசுகள்தான் உருவாக்கின. ஆனால், 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு "சுனாமி வரத் தொடங்கியது. அது, "தாராளமயமாக்கல்' என்ற கொள்கை வடிவில் வந்தது. அதன் பிறகு அரசின் தொழில் கொள்கைகளை வடிவமைப்பதையே பெரும் முதலாளிகளும் – பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டன. வி.பி. சிங் மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்தியதும் அதே காலகட்டம்தான்.

அரசுத்துறை நிறுவனங்களில் பார்ப்பன ஆதிக்கத்தில் "அசைவு' தொடங்கியது. வடமாநிலங்களில் பார்ப்பன ஆதிக்க சாதி யினரே முதல்வர்களாக வந்து கொண்டிருந்த நிலையும் மாறத் தொடங்கியது. அப்போது பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியின்போது நிதியமைச்சர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்த தாராளமயமாக்கல் கொள்கைதான் – அரசுத் துறைகளை, பொதுத் துறை நிறுவனங்களை, தனியார் பிடியில் கொண்டு போய் சேர்த்தது. முதலமைச்சர்களாக – பார்ப்பனரல்லாத – இதர சமூகப் பிரிவினர் வந்தாலும் – அவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் விலை பேசி வாங்கி விட்டன. முதலமைச்சர், எதிர்க் கட்சித் தலைவர், அரசியல் கட்சிகளை பார்ப்பன – பன்னாட்டு நிறுவனங்களே இயக்கத் தொடங்கின.

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை – தனியார் துறைக்கு விற்று விட்டால் சர்வதேசக் கடன்களை அடைத்துவிடலாம் என்ற ஆலோசனையை முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரங்கராஜன் என்ற பார்ப்பனர் முன் வைத்தார். அவர் தலைமையிலேயே நரசிம்மராவ் ஒரு குழுவை நியமித்து, பொதுத் துறை பங்குகள் வேகம் வேகமாக விற்பனை செய்யப்பட்டன. முதலீடுகளை விலக்கிக் கொள்ளும் குழு (டிஸ்இன்வெஸ்ட்மென்ட் கமிட்டி) என்று அதற்குப் பெயர். தொடர்ந்து வந்த பாரதிய ஜனதாவின் ஆட்சியில் குழுவுக்கு பதிலாக, ஓர் அமைச்சரகத்தையே உருவாக்கினார்கள். ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் அருண்ஷோரி தான் இந்தத் துறையின் அமைச்சர்.

இப்போது வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் 9 லட்சத்து 58 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் என்று சர்வதேச அளவில் ஆய்வுகளை மேற்கொண்ட தேவ்கர் குழு கூறுகிறது. தேவ்கர், சர்வதேச நிதி நிறுவனத்தில் பொருளாதார ஆய்வாளராகப் பணியாற்றியவர். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சம் ஒன்று உண்டு. அதாவது, "தாராளமயமாதல்' கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகுதான், மேற்குறிப்பிட்ட தொகையில் 68 சதவிகிதம் (6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்) வெளிநாட்டு வங்கிகளுக்கு திருட்டுத்தனமாகப் போயிருக்கிறது.



கார்ப்பரேட் நிறுவனங்களின் மூளை பார்ப்பன அதிகார வர்க்கம். இவர்களின் கொள்ளைக்காக, வனச் சட்டங்கள், மின்சாரம், சுரங்கங்கள் மற்றும் தண்ணீர் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டன. அன்னியச் செலாவணி மோசடிகளை கிரிமினல் குற்றமாக்கிய "பெரா' சட்டங்கள் நீக்கப்பட்டன. மக்கள் நிலத்தை அபகரித்து, அவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வரத் தொடங்கின. இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் "கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் தொகை – 240 கோடி ரூபாய் என்றும்; இந்தத் தொகை அப்படியே வெளிநாட்டு வங்கிகளுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறது என்றும் வாஷிங்டனில் உள்ள பொருளாதார ஆய்வு நிறுவனம் (Global Financial Integrity) கூறுகிறது.

2005 – 2006 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சி "கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி 3 லட்சத்து 74 ஆயிரத்து 937 கோடி ரூபாய் என்று ஒடுக் கப்பட்ட மக்களின் குரலை எதிரொலித்து வரும் கட்டுரையாளர் சாய்நாத் குறிப்பிடுகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நன்கொடை பெறாத அரசியல் கட்சிகளே இல்லை; பொதுவுடைமைக் கட்சிகளும் இதில் அடக்கம். அண்மையில் "நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏடு, இதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. இப்படி பெரும் தொழில் நிறுவனங்களுக்கு "தானமாக'க் கொட்டி அழப்படும் பெரும் தொகை, ஊழல் தொகைதானே! ஊழல் எதிர்ப்பாளர்கள் ஊழலின் மூலத்தை ஏன் எதிர்க்கவில்லை? இவர்களின் உண்ணாவிரத நாடகச் செலவும் – கார்ப்பரேட் நிறுவனங்களின் "கணக்குப் புத்தகங்களில்' பதியப்படுவதாலா ?

2009 ஆம் ஆண்டு, இந்திய ஆட்சிகளின் "செல்லப்பிள்ளை' தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு முன் தேதியிட்டு 91 ஆயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகையை நிதி நிலை அறிக்கையில் ப. சிதம்பரம் அறிவித்தார். இந்த வரிச் சலுகையை "தேசிய நலன்' கருதி வரவேற்பதாக பாரதிய ஜனதாவின் வெங்கையா நாயுடு நாடாளுமன்றத்தில் பேசினார். அம்பானிகளைக் கொழுக்க வைப்பதில்தான் இவர்களின் தேசிய நலன்களே அடங்கியிருக்கின்றன.

இந்திய கிராமங்களில் நிலவும் தீண்டாமை குறித்து தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நூலாக வெளிவந்துள்ளது. அதில், “சமூகத்தில் ஏற்கனவே நிலவிவரும் சாதியப் பாகுபாடுகளை பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது தொழில் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. அவர்களின் உழைப்பைச் சுரண்டி, குறைந்த கூலிக்கு ஒப்புக் கொள்ளச் செய்வதற்கு, சாதிய ஏற்றத்தாழ்வுகள் நல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன'' என்று கூறுகிறது.

“பன்னாட்டு நிறுவனங்களிடம் பொருளாதார அதிகாரங்கள் மய்யம் கொண்டிருப்பது ஆபத்தானது. இதனால் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் மாநிலங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து – சமத்துவமற்ற நிலை மேலும் மேலும் வளர்கிறது'' என ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியரும், தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினருமான திருமதி சோயா அசன் எச்சரித்துள்ளார்.

ஊழலுக்கு நீர் ஊற்றி வளர்த்து, நாட்டின் அரசியல் பொருளாதார அதிகாரங்களை தன் வசமாக்கிக் கொண்டு, வேகம் வேகமாக வளர்ந்து வரும் இந்த அதிகாரத் திமிங்கிலங்களை எதிர்க்காமல் – அவர்களின் மூகமூடிகள் ஊழலை எதிர்க்க வந்திருக்கிறார்கள். இப்போது, ஓர் அடிப்படையான கேள்வியை எழுப்ப வேண்டி யிருக்கிறது. ஊழல் ஒழிப்பு மட்டும்தான் இந்த நாட்டில் முதன்மையாக நிற்கும் பிரச்சனையா? ஊழலை மட்டும் ஒழிப்பது, இந்த சமுதாயத்தில் சாத்தியமா ?

இந்த சாதிய சமூக அமைப்பே ஊழலைவிட கொடூரமானது என்ற எதார்த் தத்தை, திட்டமிட்டு ஏன் மறைக்க வேண்டும்? இன்னும் இரட்டை டம்ளர்கள், இரட்டை சுடுகாடுகள், சேரிகள், சாதிய வன்கொடுமைகள், "கவுரவ'க் கொலைகள் – அதை அங்கீகரிக்கும் கட்டப் பஞ்சாயத்துகள், சமூகத்திலும் பொருளாதாரத்திலும் விலக்கப்பட்டு நிற்கும் தலித் மக்களின் பறிக்கப்படும் வாழ்வுரிமைகள் – இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா? இவர்களின் இதயங்களைத் தொடவில்லையா ?

ஒரு மனிதனின் சமூக நிலையும் கவுரவமும் அவர் பிறவியிலேயே நிர்ணயிக்கப்படும் ஒரு நாற்றமெடுத்த சமூகம், உலகில் எந்தப் பகுதியிலாவது உண்டா? அரசியலும் பொருளாதாரமும் – சமூகம் பெற்றெடுக்கும் குழந்தைகள்தான். சமூகமே ஊழலாகிக் கிடக்கும்போது, இந்த ஊழல் நாற்றத்தைப் பாதுகாத்துக் கொண்டு, பொருளாதார ஊழல்களை மட்டும் ஒழித்துவிட இயலுமா?

அன்னா அசாரேயும், பாபாராம் தேவும் குடிமைச் சமூகத்தின் பிரதிநிதிகள் என்று ஊடகங்கள் பறைசாற்றுகின்றன. உண்மையில், இந்த நாட்டின் மக்கள் அனைவரும் "சிவில் சமூகமாக' "குடிமக்கள்' என்ற உரிமைக்குரியவர்களாக வாழ்கிறார்களா? சட்டத்தின் அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் பொதுவாக சாதியச் சமூக அமைப்பு ஏற்றுக் கொண்டு விட்டதா?

ஒரு ஜனநாயக அமைப்பின் "சிவில் சமூகத்துக்கான இலக்கணம் என்ன? அம்பேத்கர் கூறுகிறார் : “சகோதரத்துவம் என்பது, ஜனநாயகத்தின் மற்றொரு பெயர்தான். ஜனநாயகம் என்பது ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல; முக்கியமாக அது, ஒரு கூட்டு வாழ்க்கை முறை. வழிவழியாக பெறப்பட்ட அனுபவங்களின் தொகுப்பு. சாரத்தில் அது சமூக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கே ஆகும்.''

சமூக மனிதர்களுக்கு மதிப்பும், மரியாதையும் மறுக்கப்படுவதே இந்த நாட்டின் "பெருமை'. அதுவே இங்கு "தேசம்; தேசப்பற்று'. அதற்கே "புனிதம்' "தெய்வீகம்' "தார்மீகம் என்று பெருமைகள் எற்றப்படுகின்றன. "சாதி தர்மத்தை மீறாதே' என்பதே இங்கு சமூக ஒழுங்காக கட்டமைக்கப்படுகிறது. செய்த "பாவ'ங்களுக்கு லஞ்சம் கொடுத்து "புண்ணியம்' பெரும் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டுள்ள சமூகம் இது. "வேண்டுதல்' "தட்சணை' "பாவவிமோசனம்' "பரிகாரம்' என்ற பெயர்களில் லஞ்சம் இங்கே புனித மகுடங்களை சூட்டிக் கொண்டு நிற்கிறது.

குறுக்கு வழியில் சட்ட மீறலில் நேர்மையற்ற முறையில் பயனடைவதுதான் "லஞ்சம் – ஊழல்' என்றால், அதே இலக்கணம் சாதியச் சுரண்டலுக்கும் அப்படியே பொருந்தும். சமூகத்தின் இந்த ஊழலை அப்படியே காப்பாற்றிக் கொண்டு, அந்த நச்சு மரத்தின் வேர்களுக்கு நீர் ஊற்றி வளர்த்துக் கொண்டு, துளிர்விடும் இலைகளான "பொருளாதார ஊழலை' மட்டும் வெட்டுவதற்கு "அரிவாள்' தூக்கிக் கிளம்புவோர் மக்களை திசை திருப்பும் மனிதர்களே !

அம்பேத்கர் கூறுகிறார் :

“நீங்கள் எந்தத் திசையில் சென்றாலும் சாதிக் கொடூரன் வந்து வழிமறிப்பான். இந்த சாதிக் கொடூரனை ஒழிக் காமல் அரசியல் சீர்திருத்தத்தையோ, பொருளாதார சீர்திருத்தத்தையோ அடையவே முடியாது.''

நன்றி : தலித் முரசு மற்றும் கீற்று இணையதளம்

தாத்தா ரெட்டைமலை சீனிவாசன்



சாதி எனும் பெயரில் சக மனிதர்களை விலங்குகளாக நடத்திய கேடுகெட்ட சமூகத்தைத் திருத்த, ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் சமூகத்திலிருந்து தோன்றியவர் தத்தா ரெட்டைமலை சீனிவாசன். செங்கல் பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் கோழியாளம் எனும் கிராமத்தில் 7.7.1859 ஆம் ஆண்டு பிறந்தார். கோழியாளம் மதுராந்தகத்திற்கு வடமேற்கே சுமார் பதிமூன்று கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. இவர் பெயரிலுள்ள ரெட்டைமலை எனும் ஒட்டு அவரது தந்தையின் பெயராக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. பின்னர் இவரது குடும்பம் தஞ்சை மாவட்டத்திற்குக் குடிபெயர்ந்தபோது அங்கு உயர் கல்வியை முடித்தவர், அதன்பின்னர் கோவையில் அரசினர் கலைக் கல்லூரியில் படிப்பினைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பி.ஏ. பட்டதாரியாக பெருமைகொண்டார்.

இங்கு கல்வி பயிலும் காலத்தில் அறிஞர் அயோத்திதாச பண்டிதரின் வீட்டில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் அயோத்திதாசப் பண்டிதரின் மைத்துனன் ஆவார். 1887 ஆம் ஆண்டு ரெங்க நாயகி அம்மையாரை மணந்தவர் ஊட்டியில் ஒரு நிறுவனத்தில் பத்தாண்டுகள் கணக்கராக பணிபுரிந்தார்.

தலித் சமூகத்தின் துயரத்தைத் தொடர்ந்து கண்டவர், தம் சமூகத்தின் துயரங்களை நீக்க பணியிலிருந்து விலகி 1890 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். தென்னிந்தியா முழுவதும் சென்று ஒடுக்கப் பட்ட மக்களின் நிலையை நேரில் கண்டறிந்த அவர், சாதியிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான வழியைக் காணும் ஆய்வில் இறங்கினார்.

சமத்துவ சமூகம் அமைப்பதற்கான தரவுகளை கல்வெட்டுகளிலிருந்தும், வரலாற்று நூல்களிலிருந்தும், அரசுக் குறிப்பேடுகளிலிருந்தும் தேடினார். தானடைந்த அறிவுகளை 1893 ஆம் ஆண்டு தொடங்கிய 'பறையன்' என்ற இதழ் மூலம் வெளிப்படுத்தினார். அவரின் பத்திரிகை அந்நாளில் அச்சிட்ட உடனேயே வெகுவாக விற்றுத் தீர்ந்தது. இந்திய கடந்து அயல் நாடுகளிலும் அதற்கு வாசகர்கள் பெருகியிருந்தனர். பத்திரிகையாளராக மட்டும் இருந்திடாமல் மக்களை திரட்டி அமைப்பாக்கினார். 1891 ஆம் ஆண்டு பத்திரிகை தொடங்கும் முன்னரே 'பறையர்மகாஜன சபை ' என்ற அமைப்பை தொடங்கி சாதிக் கொடுமையை எதிர்த்து மக்களை அணியமாக்கினார்.பல போராட்டங்களை நடத்தினார்.

'பறையர் மகாஜன சபை' மூலம் அக்காலத்திலேயே மாநாடு நடத்தி தலித் மக்களின் உரிமைகள் குறித்துப் பேசினார். இவ்வாறான தொடர்ச்சியான போராட்டங்கள், கூட்டங்கள் மூலம் 1894 ஆம் ஆண்டு குடியிருக்க வீட்டுப் பட்டாக்களும், விவசாயம் செய்வதற்கு நிலங்களும், குழந்தைகளுக்கு கல்வி வசதியும் பெற்றுத் தந்தார்.மேலும் , ஆங்கில அரசு காலத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்த முன்னோடியாகவும் விளங்கினார். மக்களோடு இருந்து பணிசெய்ததன் சாட்சியாக ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டலாம்.1895 ஆம் ஆண்டு சென்னை வந்த ஆங்கில அதிகாரி வைஸ்ராய் லார்டு எல்சின் என்பவரிடம் மனுக் கொடுப்பதற்காக் மக்களைத் திரட்டியவர், அவர்களோடு ஊர்வலமாகச சென்றார். இன்றைய கால ஊர்வலங்களின் போது தலைவர்கள் மக்களுக்கு அப்பாற்பட்டு வாகனத்தில் வருவதை ஒப்பிட்டுப் பார்த்து அவருடைய மக்கள் நெருக்கத்தை உணரலாம்.

மேலும்,அதே 1895 ஆம் ஆண்டு அக்.5 ஆம் ஆண்டு வெளிவந்த பறையன் இதழில் தலித்துகளுக்கு நிலம் ஒதுக்கவில்லை என்பது குறித்து எழுதினர்.மதுரை மாவட்ட ஆட்சியரும், வட்டாட்சியரும் புறம்போக்கு நிலங்களை பறையர் சமூகத்திற்கு வழங்கவேண்டுமென்ற அரசாங்க உத்தரவு மதுரை மாவட்டத்திற்கு பொருந்தாது என்று கூறி நிலம் கொடுக்காமல் ஓரவஞ்சனை செய்வதாகவும், நிலம்கேட்டு அளித்த விண்ணப்பங்களை நிராகரித்ததாகவும் கூறினார். மேலும், புதுப்பட்டி கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான நூறு ஏக்கர் நிலத்தை ஒரு பிராமணருக்கு ஒதுக்கியதை சுட்டிக் காட்டி, ஆட்சியர் அலுவலகத்தில் பிராமணர்களே அதிகாரிகளாக இருப்பதால்தான் பறையர்களுக்கு ஒரு துண்டு நிலம்கூட ஒதுக்கவில்லை என்றும் எழுதினார்..

இந்நிலையில், 1896 ஆம் ஆண்டு அக்.ஏழாம் நாள் சென்னை விக்டோரியா அரங்கில் மக்கள் மாநாட்டைக் கூட்டியவர் ஒடுக்கப் பட்ட மக்களின் அரசியல்,கல்வி,பொருளாதாரம்,பண்பாடு குறித்துப் பேசினார். அதுகுறித்து பல செயல் திட்டங்களை வகுத்தார். ஆனால், திட்டங்கள் நிறைவேறத் தேவையான நிதிதேடி லண்டன் நோக்கி கப்பலில் பயணமானார்.செல்லும் வழியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதனால் தென்னாப்பிரிக்காவில் இறக்கிவிடப்பட்டார். அங்கேயே நேட்டால் என்ற இடத்தில தங்கி நீதிமன்ற மொழிப்பெயர்ப்பாளராக பணியாற்றினார். இந்த பணி நாட்களின்போதுதான் காந்தியுடன் நண்பரானார். தென்னாப்பிரிக்காவின் பீனிக்ஸ் என்னுமிடத்தில் காந்தியைக் கண்டதாகக் கூறுகிறார். காந்திக்கு தமிழில் பெயர் எழுதக் கற்றுக் கொடுத்தார்.

ஆப்பிரிக்காவில் பதினேழு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு 1921 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பி, மீண்டும் பறையன் இதழைத் தொடங்கினார். (எஸ்.கே.அந்தோணி பால் என்பவற்றின் குறிப்பு இப்படிச் சொன்னாலும் ரவிக்குமார் அவர்களின் தொகுப்பில் 1897 ஆம் ஆண்டு வெளிவந்த 'பறையன்' இதழ்ச் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆக அவர் வெளி நாட்டில் இருந்தபோதும் பத்திரிகை நடத்தியிருக்க வேண்டும்)

1922 களில் நீதிக் கட்சியில் இணைந்தவர், 1923 முதல் 1938 வரை பதினைந்து ஆண்டுகள் சட்டப் பேரவையில் நியமன உறுப்பினராக இருந்தார். அனைத்து மக்களுடனும் சாலைகளில் சமமாக நடக்கவும், பொது நீர்நிலைகளில் தண்ணீர் எடுக்கவுமான சுதந்திரம் கொடுக்கும் சட்டத்தை 1925 ஆம் ஆண்டு ஆங்கில அரசிடமிருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பெற்றுத்தந்தார். மேலும், ஒடுக்கப்பட்டவர்கள் மீட்சிபெற சென்னையில் 'ஐக்கிய மகா சபை' எனும் அமைப்பை 1928 ஆம் ஆண்டு நிறுவி அதன் தலைவராகவும் விளங்கினார்.

1930 - லண்டன் முதல் வட்ட மேசை மாநாட்டில் 5 ஆவது மன்னரிடம் உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு மன்னரோடு கைகுலுக்கினார்கள்.

ஆனால் ரெட்டமலை சீனிவாசன் தன கோர்ட் பக்கெட்டில் "ராவ்சாகிப் ரெட்டமலை சீனிவாசன் பறையன் தீண்டப்படாதவன்" என பொறிக்கப்பட்ட அடையாள அட்டையை அணிந்திருந்தார்.

மன்னர் கை குலுக்க முன்வந்த போது இரட்டமலை சீனிவாசன் அதை மறுத்து "நீங்கள் என்னை தொட்டால் தீட்டுஉங்களுக்கு ஒட்டிக்கொள்ளும் என்ற நிலை இருகிறதே! நான் எப்படி உங்களுக்குகை கொடுக்க முடியும்?" என கேட்டார்.

தாத்தா அணிந்திருந்த 'பறையன்' என்ற அடையாள அட்டையை நெஞ்சோடு உரசினார். இந்நிகழ்வு அம்பேத்கருடன் அவர் வைத்த இரட்டை வாக்குரிமை கோரிக்கை ஏற்கப்பட உதவியது. இவ்வரலாற்று நிகழ்வு 1930 ஆம் ஆண்டு நடந்தேறியது.

ஆனால், இரட்டை வாக்குரிமை வழங்குவதை எதிர்த்து காந்தி உண்ணாமல் இருந்தார்.ஒடுக்கப் பட்ட மக்களுக்கு தனித் தொகுதி வழங்குவதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்ததை வீரத் தன்மையற்ற செயல் என்று கூறியதோடு, நேருக்கு நேர் நின்று வாதாடாமல் உண்ணாமல் இருக்கும் கோழை என்று காந்தியைக் குறிப்பிட்டார். அச்சூழ்நிலையில் ஒடுக்கப் பட்ட மக்கள்மீது நடத்தப் பட்ட கொலை,பாலியல் வன்முறை ஆகியவை பெருகியது. அதனால், வேறு வழியில்லாமல் தலித்துகளின் அன்றையப் பாதுகாப்புக் கருதி அம்பேத்கருடன் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது ஒரு வரலாற்றின் கருப்பு நிகழ்வாக அமைந்தது. ஒடுக்கப் பட்ட மக்களுக்கு காந்தி செய்த துரோகம் மன்னிக்கமுடியாததாக அமைந்தது.

அவருடைய மைத்துனன் அயோத்திதாசர் ' தமிழன்' என்று சாதியை ஒழிப்பதற்காக மொழியின்வழி அடையாள படுத்தப் பட்ட பத்திரிகை துவங்கியதற்கு மாறாக, சாதியின் பெயரிலேயே 'பறையன்' என்று பத்திரிகை துவங்கினார். எனை எந்தப் பெயரைச் சொல்லித் தாழ்த்துகிறாயோ அந்தப் பெயர்கொண்டே மீண்டேழுவேன் என்றவாறு அவரது போர்க்குணம் அமைந்தது. அயோத்திதாசர் 'திராவிட மகாஜன சபை' என்று துவங்கியபோது இவர் 'பறையர் மகாஜன சபையை' நிறுவினார்.

விடுதலையின் செயல் வடிவத்தில் இவ்வாறு தனித்த போக்குகளைக் கொண்டிருந்த தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், அம்பேத்கரின் கண்ட வழிமுறையிலும் முரண்பட்டு நின்றார். புத்த மதம் மாறினால் சாதிக் கொடுமைகளுக்கு முடிவுகட்டலாம் என அம்பேத்கர் உரைத்த பொழுது, அதில் தீர்வுகிடைக்கது என்று ஆணித்தரமாகக் கூறினார் தாத்தா. அவர் கூறியது போலவே இன்றும் புத்த மதத்திற்கு மாறிய தலித்துகளின் நிலையில் மாற்றமில்லை.

இவ்வாறான தொலைநோக்கு சிந்தனை கொண்டிருந்த தாத்தா 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் -27 ஆம் நாள் உருவாக்கப்பட்ட செட்யூல்டு இன புரோவின்சியல் அட்வைசரிப் போர்டுக்கு ஆலோசகராக விளங்கினார். இவ்வாறு தொடர்ந்து மக்கள் பணி செய்த அவருக்கு ஆங்கில அரசு 1926 ஆம் ஆண்டு ராவ் சாகிப், 1930 ஆம் ஆண்டு ராவ் பகதூர், 1936 ஆம் ஆண்டு திவான் பகதூர் ஆகிய பட்டங்களை வழங்கியது. 1940 ஆம் ஆண்டு திராவிட மணி என்ற பட்டம் தமிழ் தென்றல் திரு.வி.க. முன்னிலையில் வழங்கப்பட்டது. அந்நிகழ்வுக்கு இராஜாஜி தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓயாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை தேடி ஒடிய மாவீரன் இரெட்டைமலை சீனிவாசன் 1945 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் (இயற்கை எய்தினார்). அவரின் பிறந்த நாள் இன்று. சாதியை ஒழிக்க சபதமேற்போம்.


நன்றி : தமிழ்முதல்வன் வலைப்பூ மற்றும் தமிழச்சி