Wednesday, July 20, 2011

பசுமை வேட்டை என்கிற பயங்கரவாதம்-IV

சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில் கூட ராணுவம், துணை ராணுவப் படை, காவல் துறை ஆகியன இழைத்து வரும் குற்றங்களை நாம் நாள்தோறும் செய்திகளில் அறிந்து வருகிறோம். இதில் மறைக்கப்படும் நிகழ்வுகள் எண்ணற்றவை என்ற போதும், காவல் நிலைய சாவுகள், போலி மோதல் படுகொலைகள், மக்கள் கூடுவதைக் கலைக்க துப்பாக்கிச் சூடுகள் என அரசு ஒடுக்குமுறைக் கருவிகளின் தோலுரியாத நாட்கள் ஒன்றுமில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் மேற்சொன்ன முறைகளில் நிகழ்ந்த வன்முறை நிகழ்வுகளினால் கொல்லப்பட்ட காஷ்மீர் மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 70 ஆயிரம்.

தமிழகத்தில் கூட, வீரப்பனையும் அவரது கூட்டாளிகள் சிலரையும் பிடிப்பதற்கு அல்லது கொல்வதற்கு பெறப்பட்ட சிறப்பு அதிகாரத்தை வைத்துக் கொண்டு, காவல் துறையின் அதிரடிப்படையினர் நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கொன்றும், சில நூறு மக்களை காணாமல் ஆக்கியும், பாலியல் கொடுமைகள் மற்றும் உடல் வதைகளில் உச்ச நிலைகளைக் கையாண்டும் நிகழ்த்திய மனித விரோத செயல்களை நாமறிவோம். மிகச் சமீபமாக, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் மக்களின் நிராயுதபாணியான போராட்டங்களின் மீது, ராணுவப் படையினர் நிகழ்த்திய ஒடுக்குமுறையில் ஒரே வாரத்தில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆக, தரப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கும் இடப்படும் ஆணைகளுக்கும் முகங்கொடுக்க ராணுவ சிப்பாய்கள் மட்டுமல்லர், மக்களும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசும் அதிகார வர்க்கமும் விரும்புகின்றன. ஆனால், ஆளும் வர்க்கத்தின் இவ்விருப்பத்தைக் காறி உமிழ்வது போல, தண்டேவாடாவில் பணியிலிருக்கும் பெயர் சொல்ல விரும்பாத ஒரு ராணுவ சிப்பாய் "தெகல்கா' (மே 8, 2010) பத்திரிகையாளரிடம், “நான் எப்பொழுதும் எனது நாட்டிற்காக தியாக உள்ளத்துடன் பணிபுரியவே விரும்புகிறேன். ஆனால், ஒன்றுமில்லாததற்காக நான் சாகப் போவதாகத்தான் இப்பொழுது உணர்கிறேன். பல்வேறு சட்டவிரோத நிகழ்வுகளை நான் இங்கு பார்த்து வருகிறேன். கண்மூடித்தனமாக நாங்கள் கட்டளைகளைப் பின்பற்றுகிறோம். தேடுதல் வேட்டைக்குச் செல்லும்போது, மாவோயிஸ்டுகள் எவர் என்பதை அறிய முடிவதில்லை. ஏழை பழங்குடியினர் தாக்கப்படுவதும், ஒன்றுமறியாதவர்கள் கொல்லப்படுவதும்தான் நடக்கிறது.


“ஒருவரை மாவோயிஸ்ட் என நீங்கள் முடிவெடுத்தால், அவரைக் கொன்றுவிடலாம் என்றுதான் எங்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்காக நான் செய்து கொண்டிருப்பது ஒன்றுமல்ல என்றுதான் நான் உணர்கிறேன். எனது நாட்டுப் பற்று இறந்து விட்டது என்பதையே சொல்லவும் விரும்புகிறேன்'' – என ராணுவ மொழியில் கூறுவதானால் "நெற்றிப் பொட்டில் சுட்டாற்' போல கூறியுள்ளார். இது ஒரு வகையில் ராணுவ முகாமிற்குள்ளிருந்து எழும் அபயக் குரல்; ஒப்புதல் வாக்குமூலம்; மனித முகமும் கூட.

“பெரும்பாலான ராணுவ சிப்பாய்கள் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். மேலும், அவர்களில் சிலர் பழங்குடியினரும் கூட. ஆனால், ராணுவப் படையினர் என்ற வகையில் அவர்கள் பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தும் கொடுமைகளைக் கணக்கிடும் போது, அவர்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள். அவர்களுக்குப் பாடம் புகட்டவே சிந்தால்நர் மற்றும் சிந்தாகுபா பகுதிகளில் நாங்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம்'' என ஒரு தொலைபேசி உரையாடலின்போது "தெகல்கா'விடம் குறிப்பிட்டவர் வேறு யாருமல்லர், பஸ்தார் மண்டலத்தின் மாவோயிஸ்ட் கட்சி குழுவின் செயலாளரும், தண்டேவாடா தாக்குதல் திட்டத்தின் வடிவமைப்பாளருமான ராமண்ணா (எ) ராவுல சீனிவாஸ் (வயது 44) தான். இவர், ஆந்திராவில் ஒரு பண்ணைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து, 30 ஆண்டுகளுக்கு முன்பே குடும்ப உறவுகளிலிருந்து விலகி, சட்டீஸ்கர் சென்று விட்டவர். சட்டீஸ்கர் அரசாலும் ராணுவத் துருப்புகளாலும் தேடப்படுவோர் பட்டியலில் முதன்மை இடத்தில் இருப்பவர்.

ராமண்ணா மட்டுமல்லர், நக்சல்பாரி அரசியலின் தத்துவ அடிப்படைகளைக் கற்ற எவரும் ராணுவம் மற்றும் காவல் துறையின் கடைநிலை துருப்புகள் குறித்த கண்ணோட்டத்தில் இத்தகைய கரிசனத்தையே கொண்டுள்ளனர். அதனால்தான் சீருடை தரித்த இப்படையினரை, அரசாளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக் கருவிகள் என வகைப்படுத்துகின்றனர். ஆனால், ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான சமூக – அரசியல் கண்ணோட்டத்துடனேயே பயிற்றுவிக்கப்படும் ராணுவம் மற்றும் காவல் துறையினர், பார்வையாளராக இருக்கும் ஏனைய பிரிவினரை விட, ஒடுக்குமுறையில் பங்கேற்கும் வகையினர் என்ற அளவில் – ஒவ்வொரு நிகழ்வு குறித்துமான நேரடி சாட்சியாகவும் இருக்கிறார்கள். இருந்தும் மிகச் சிலரே, மிகச் சில தருணங்களில் மட்டுமே தமது மனித முகங்களை வெளிப்படுத்தி நிற்கின்றனர். ஆனால் மிருக பலம் கொண்ட ஆளும் வர்க்கத்தின் கருணையற்ற விசாரணைகளின் முன்பு, இம்முகங்கள் பலவீனமானவையே.

கடந்த பத்தாண்டுகளில் அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் பிரச்சனை என்ற வகையில், மாவோயிஸ்டுகளின் போராட்டங்களுக்கு நியாயம் கற்பிக்கும் அல்லது பழங்குடி மக்களின் சார்பில் பேசத் தலைப்படும் பலமான முகங்களையும் நாம் கவனம் கொள்ள வேண்டியதிருக்கிறது. “மாவோயிஸ்டு பிரச்சனை குறித்து பேச முற்படும் எவரும், அதை ஓர் "அபாயம்' என்ற அளவில் மட்டுமே குறிப்பிட விரும்புகின்றனர். நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த உள்நாட்டு "அபாயம்' 5ஆம் அட்டவணை (பழங்குடியினர் வாழும்) பகுதிகளில் மட்டும் ஏன் இத்தனை வலிவுடன் நிலவுகிறது என்ற கேள்வியை நமக்குள் எழுப்ப வேண்டும். மிக நீண்டகாலமாக, நமது வளர்ச்சித் திட்டங்களின் கருத்துகள் அனைத்தும் வேதாந்தா, போஸ்கோ, டாடா, எஸ்ஸார், மிட்டல் போன்றவர்களின் லாப நோக்கங்களுக்காக, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்களைச் சுரண்டுவதற்குத்தானே முன்வைக்கப்படுகின்றன. பங்கேற்புடன் நிகழும் முன்னேற்றத்திற்கும், ஆக்கிரமிப்பில் நிகழும் முன்னேற்றத்திற்கும் இடையிலான வேற்றுமைகளை நாம் விளக்க முற்பட வேண்டும்'' என்கிறார், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் (அய்யர்).

இந்திய அரசமைப்புச் சட்ட விதிகள் 243ஜி மற்றும் 243 இசட்.டி. ஆகியவற்றில் செய்யப்பட்ட 73ஆவது திருத்தங்களைச் சுட்டிக் காட்டும் மணிசங்கர், “அனைத்து மாநில அரசுகளும் "பழங்குடி மக்களுக்கான பஞ்சாயத்துராஜ் விரிவு சட்டம்' – PESA 1996 இன் அடிப்படையில், பழங்குடியினரை அவர்கள் வாழும் வனப்பகுதிகளின் முழு உடைமையாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பழங்குடி கிராமத்திலும் அங்கு வாழும் வயதுவந்த ஒவ்வொரு மனிதரையும் உறுப்பினராகக் கொண்ட கிராம சபாக்களின் முழு ஒப்புதலோடு மட்டுமே, அக்கிராமத்தின் வளங்களோ, விளை பொருட்களோ, நிதி ஆதாரமோ, இதர சேமிப்புகளோ கையாளப்பட வேண்டும் என இச்சட்டம் வலியுறுத்திச் சொல்கிறது. ஊழல் மயப்பட்டிருக்கும் அதிகார வர்க்கத்தின் பிடியிலிருந்து விலக்கி, பழங்குடியினரின் வாழ்க்கை உத்தரவாதம், நிதி மேலாண்மை மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் அனைத்தும் அம்மக்களிடமே இருக்க வழிவகை செய்யும் இது போன்ற சட்டத் திருத்தங்களால் மட்டுமே, ஜனநாயகம் மிக உயர்ந்த கட்டத்தில் நிலைபெறும்'' என்கிறார்.

மேலும் அவர், “மாவோயிஸ்டுகளின் பிடியிலிருக்கும் பகுதிகளில் மட்டுமல்ல, அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் அந்தந்த மாநில அரசுகள் உடனடியாக இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். டாடா, அம்பானி போன்றவர்களிடம் குவிந்துள்ள உபரி நிலங்களை அரசு புனிதமாகக் கருதிக் கொண்டிருந்தால், பெரும் சமூகப் பயன்பாட்டிற்கு அவற்றை எப்படி அரசால் கையகப்படுத்த முடியும்? நினைவுக் கெட்டிய காலம் முதல் பழங்குடியின மக்களே வனப்பகுதிகளின் உரிமையாளர்களாக இருந்துள்ளனர். தண்டகாரண்ய காடுகளில் பிரிட்டிஷ் படைகள் நுழைந்ததுதான், அம்மக்களின் பாரம்பரியத்தை தொந்தரவு செய்த முதல் நடவடிக்கை எனலாம். காலனி ஆட்சி வெளியேறியபிறகு, அம்மக்களிடமே அவர்களின் வனப்பகுதிகளை திருப்பித் தருவதுதானே, ஜனநாயக இந்தியா செய்திருக்க வேண்டிய முதல் கடமை. இந்திய நடுத்தர வர்க்கத்தினர் இன்றைய பெரு நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வைத்திருக்கின்றனர். ஆனால், நிலங்களின் உரிமையாளர்களான பழங்குடி மக்களோ, இந்நிறுவனங்களின் இத்திட்டங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதேன்?'' என்று கேள்வியெழுப்புகிறார்.

நேற்றைய மத்தியப் பிரதேச மாநிலத்திலும் இன்றைய சட்டீஸ்கர் மாநிலத்திலும் அமைந்துள்ள பஸ்தார் மாவட்டத்தின் ஜகதல்பூரில், 1955 இல் அகிய இந்திய பழங்குடியினர் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்ற அன்றைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, “உங்கள் வாழ்விடங்களில் உங்களுக்கு விருப்பமான வாழ்க்கை முறையிலேயே நீங்கள் இருக்கலாம்'' என உறுதியளித்திருந்தார். இந்த உறுதி அளிப்பின் நீட்சியாகவே 1996 இல் பழங்குடிப் பகுதிகளுக்கும் விரிவு செய்யப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டம் (PESA) கொண்டு வரப்பட்டது.

பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தினால் நியமிக்கப்பட்ட கிராமப்புற மேலாண்மை நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று, “1894 இல் கொண்டு வரப்பட்ட மத்திய நில கையகப்படுத்தும் சட்டம், PESA சட்டத்துடன் இன்றுவரை இணைக்கப்படவில்லை. மேலும், இது தொடர்பாக புதிய சட்டமுன்வரைவுகளும் நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்படவில்லை. இந்நிலையில் காலனியாதிக்க காலத்திய நில கையகப்படுத்தும் சட்டம், பரவலான அளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பலவந்தமாக தனிநபர் மற்றும் சமுதாய நிலங்கள் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன. பல நேரங்களில் மாநில அரசுகளே இதைச் செய்கின்றன'' என்கிறது. குறிப்பாக, ஜார்கண்ட் அரசு பன்னாட்டு நிறுவனங்களோடு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்காக, நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டத்தை வைத்துக் கொண்டு, அரசு தொழில் நிறுவனங்களுக்கென முதலில் வளைத்துக் கொண்ட பிறகு, இந்நிலங்களை தனியார் பெரு நிறுவனங்களுக்கு "பொது மக்களின் நலன்' என்ற வார்த்தைகளில் நீண்டகால குத்தகைக்கு விற்றுவிட்டது.

ஏறத்தாழ அனைத்து மாநில அரசுகளுமே இது போன்ற சட்ட மீறல்களைத் தான் நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மேற்கொள்கின்றன. 1990 – 95 வரையான ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தின் மதுரை – தேனி மாவட்டங்களில் பரந்துள்ள மேகமலை வனப்பகுதிகளில், ஏறத்தாழ 7,106 ஹெக்டேர் காட்டு நிலங்கள் சட்டவிரோதமாக, ஒரு குடும்பத்தின் சொத்தாக மாற்றப்பட்டிருந்த திருட்டுத்தனத்தை, 1996 இல் மாநில ஊழல் கண்காணிப்பு இணை ஆணையராகப் பொறுப்பிலிருந்து உமாசங்கர் அய்.ஏ.எஸ். கண்டறிந்து அரசுக்குத் தெரிவித்திருந்தார். இன்றுவரை அந்த சட்ட விரோத செயலின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்கள், இப்படித் தனிநபர்களால் சட்டவிரோதமாக மட்டுமல்ல, சட்டபூர்வமாகவும் களவாடப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதற்காக, வளர்ந்து கொண்டிருக்கும் மாநிலங்களுக்கு இடையில் நிலங்களைக் கையகப்படுத்துவதில், மற்றவர்களுக்கு சளைத்தவர்களில்லை என்ற அளவில் போட்டியே நடக்கிறது. காடு – மலைகள் சூழ்ந்த மாநிலங்களில் வனப்பகுதிகளும் சமவெளிப் பகுதிகள் நிறைந்த மாநிலங்களில் விளைநிலங்களும் அந்தந்த மாநில அரசுகளாலும், ஊழல் அரசியல்வாதிகளாலும் தொடர்ந்து களவாடப்பட்டுவருகின்றன. ஆனால் "கிராம சபா'க்கள் என அழைக்கப்படும் உள்ளூர் மக்களின் நிர்வாகம் மட்டுமே, அந்தந்தப் பகுதி நிலங்களுக்கு முழு உரிமையுடையன என உத்தரவாதமளிக்கும் PESA சட்டம் போன்றவையோ, வெறும் ஏட்டுச் சுரைக்காய் போல, எழுதப்பட்டவர்களாலேயே, எப்பொழுதோ அழிக்கப்பட்டும் விட்டன.

ஆனாலும் முதல் இந்தியப் பிரதமரின் உறுதி அளிப்பு முதல் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள்சார் அறிவாளிகளின் ஒத்துழைப்பு வரையான துணைக் கருக்களுடன், பழங்குடி மக்கள் காலனி ஆட்சிக்காலம் தொட்டு, தம் வாழ்விட உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டேயிருக்கின்றனர். ஆந்திர எல்லையில் அமைந்துள்ள ஒரிசா மாநிலத்தின் கோராபுட் மாவட்டத்தின் நாராயண்பட்டினத்தில் "ஜாசி முலியா ஆதிவாசி சங்க'த்தைச் சேர்ந்த சுமார் 150 பழங்குடி மக்கள், தங்கள் நில உரிமைகளுக்காக, நிராயுதபாணியாக கடந்த நவம்பர் 20, 2009 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவோயிஸ்டு தேடுதல் வேட்டைக்காக, நாராயண்பட்டினத்தில் சி.ஆர்.பி.எப்.இன் கம்பெனி ஒன்று முகாமிட்டுள்ளது. இவர்களும், உள்ளூர் காவல் துறையும் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த பழங்குடியினர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரண்டு பழங்குடியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமுற்றனர். ஆண்கள் அனைவரையும் தாக்கி, கைது செய்தனர். அதற்குப் பிறகும் நவம்பர் 28, 2009 அன்று காலை 7 மணியளவில் ஜங்திவல்சா என்ற கிராமத்தைச் சுற்றி வளைத்து, ஆதிவாசி சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரையும் கடுமையாகத் தாக்கினர். இக்கிராமம் நாராயண்பட்டினத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலேயே இருந்ததால், துணை ராணுவப் படையினரின் காலை நேர கொலைவெறி சோம்பல் முறிப்புக்கான களமாக மாற்றப்பட்டது ("தெகல்கா' ஏப்ரல் 17, 2010).

இக்கிராமத்தில் மாவோயிஸ்டுகளின் உறுப்பினர்கள் வெடிகுண்டுகள் மற்றும் இதர ஆயுதங்களோடு தங்கியிருப்பதாகவும், அருகிலுள்ள காவல் நிலையத்தை தாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், நம்பத்தகுந்த தகவல் கிடைத்ததால், அக்கிராமத்தில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாகவும், அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் தப்பித்துச் சென்றதாகவும், அவர்கள் தப்பித்துச் செல்ல உதவியவர்கள் மற்றும் மாவோயிஸ்டுகளோடு தொடர்புடையவர்கள் என 15 பேர் கைது செய்யப்பட்டதாகவும் – இக்கொலை வெறித் தாக்குதலின் பிறகு புனையப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்டது. "அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பவர்கள்' என்ற குறிப்புடன் 13 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். மிகச் சிறுவனாகயிருந்த புலா பீமா (வயது 13)வைத் தவிர, மற்ற சிறுவர்கள் அனைவரும் மாவட்ட பொதுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வயது வந்தவர்கள் மற்றும் கடும் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள பொதுச் சிறைகளில், வயது வராத சிறுவர்களை சிறைப்படுத்தக் கூடாது எனும் சிறார்கள் நீதிச் சட்டம், பழங்குடியினர் வழக்குகளில் சாதாரணமாக மீறப்படும் மற்றுமொரு வன்கொடுமையாக நடைமுறையில் இருக்கிறது. இவ்வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட 13 சிறுவர்களின் பிறப்புச் சான்றிதழோடு, அவர்கள் சிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் நீதிமன்றத்திற்கு அவர்களின் வழக்குரைஞர் சுட்டிக் காட்ட வேண்டிய அவலம் நேர்ந்தது. பல நேரங்களில் காவல் துறையினரின் சட்ட மீறல்களுக்கு நீதித் துறையும் ஒத்துழைப்பதை நாம் அறியாதவர்கள் அல்லர்.

கடந்த ஆகஸ்டு 2007இல் ஆந்திர மாநிலம் அய்தராபாத், ராம்நகரைச் சேர்ந்த பத்மாக்கா, க/பெ. பாலகிருஷ்ணா என்பவர், மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பிஜப்பூரில் கைது செய்யப்படுகிறார். அவர் மீது இந்திய குற்றவியல் சட்டப்பிரிவுகள் 302, 149/IPC, 21(1)/ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு புனையப்பட்டது. ஆனால், வழக்கில் எவ்வித ஆதாரங்களும் காட்டப்படாததால், ஆகஸ்ட் 10, 2009 அன்று பிலாஸ்பூர் உயர் நீதிமன்றம், அவரை ராய்ப்பூர் மத்திய சிறையிலிருந்து விடுவிக்க ஆணை பிறப்பித்தது. அவரை அழைத்து வர அடுத்த நாள் அவரது வழக்குரைஞர் சிறைக்குச் சென்றபோது, ஆகஸ்டு 12 இல் விடுவிப்பதாக சிறை நிர்வாகம் கூறியது. தமது கட்சிக்காரரின் உயிருக்கு ஆபத்து நேர்வதை உணர்ந்த வழக்குரைஞர் உடனடியாக, ஆட்கொணர்வு மனு ஒன்றை சட்டீஸ்கர் அரசுக்கு எதிராகத் தொடுத்தார்.

ஆனால் சிறைக்கு உள்ளேயே குற்றவியல் நடைமுறை 147, 148, 307/IPC மற்றும் 25, 27/ஆயுதச் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் அவரை மீண்டும் கைது செய்திருப்பதாகக் கூறி, நீதிமன்ற விசாரணைக்கு காவல் துறை உட்படுத்தியது. பிஜப்பூர், போபால்பட்டிணத்தை வாழ்விடமாகக் கொண்டிருந்த பத்மா, க/பெ. ராஜனா கடந்த 2001 அக்டோபர் 15 அன்று, போலி மோதலில் காவல்துறையால் கொல்லப்பட்டிருந்தார். ஆனால், அறியப்பட்டிருந்த மாவோயிஸ்டு உறுப்பினராயிருந்த பத்மா க/பெ.ராஜனாவின் மீது புனையப்பட்டிருந்த இரு முக்கிய வழக்குகளை பத்மாக்கா, க/பெ. பாலகிருஷ்ணாவின் வழக்கில் இணைத்திருந்தனர். தகுந்த ஆதாரங்களோடு பத்மாக்காவின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் இதை நிரூபித்தார் ("தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்', ஆகஸ்டு 14, 2010).

இப்படியாக, அனைத்து வகைகளிலும் நீதிமன்றங்கள் காவல் துறையினரின் அயோக்கியத் தனங்களுக்கு வெளிப்படையாகவே துணை நிற்கின்றன. மாவோயிஸ்டுகளைக் காரணம் காட்டி, பழங்குடியின மக்களின் மீதான ஒடுக்குமுறைகளிலோ – நீதிமன்றங்கள் ஈவிரக்கமற்ற நிறுவனங்களாக அநீதியுடன் செயல்படுகின்றன என்றே குற்றம் சுமத்த இயலும். பழங்குடி மக்களுக்காகப் பேச விழையும் குறைந்த எண்ணிக்கையிலான அறிவாளிகளையும், பத்திரிகையாளர்களையும், மனித உரிமை செயல்பாட்டாளர்களையும், பினாயக் சென் போன்ற மருத்துவர்களையும், ஹிமான்சுகுமார் போன்ற காந்தியவாதிகளையும், ராமச்சந்திர குகா, சாய்பாபா போன்ற பேராசிரியர்களையும் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என காவல் துறை எளிதாக முத்திரை குத்தி விடுகிறது. தேவையெனில், வழக்கும் சிறைவாசமும் பூட்டிவிடும். நீதிமன்றங்கள் கைவிலங்குகளைத் தந்து வேடிக்கை பார்க்கும்.

நிகரகுவாவை பிறப்பிடமாகக் கொண்டவரும், பிரபல ராக்பாடகர் மைக் ஜாக்கரின் மனைவியுமான பியான்கா ஜாக்கர், அய்ரோப்பிய கவுன்சிலின் தூதுவராக அண்மையில் ஒரிசாவின் நியாம்கிரி மலைப்பகுதிக்கு வருகை தந்திருந்தார். இவர், மனித உரிமையாளராக, சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாவலராக சர்வதேச அரங்கில் அறியப்படுகிறவர். அவர் அங்கு வேதாந்தா நிறுவனத்தின் சுரங்க வேலைகள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்நிலையையும் நேரில் கண்டறிந்தார். அம்னஸ்டி இன்டர்நேஷனல், ஆக்ஷன் எய்டு, சர்வைவல் இன்டர்நேஷனல் மற்றும் இந்தியத் தொண்டு நிறுவனங்கள் பலவும், வேதாந்தா நிறுவனத்தின் முறைகேடுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி தன்னிடம் முறையிட்டதைத் தனது நேர்காணலில் ("தெகல்கா', 1.5. 2010) தெரிவித்துள்ளார். இக்குற்றச்சாட்டுகளுக்கு வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் பதிலேதும் சொல்லவில்லை என்பதால், லண்டனிலிருந்து வெளிவரும் "தி கார்டியன்' பத்திரிகையில் இவர் இதுபற்றி கட்டுரைகள் எழுதுவதாகவும் கூறுகிறார்.

“வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருப்பவள் என்ற வகையில் நானும் லண்டனில் பங்குதாரர்கள் கூட்டமொன்றில் கலந்து கொண்டிருந்த நேரத்தில், "ஆக்ஷன் எய்டு' நிறுவனம் என்னை சந்தித்தது. "சீதாராம் குலிசிகா' என்ற பழங்குடித் தலைவரை எனக்கு அறிமுகம் செய்தனர். அவரைச் சந்தித்த பிறகு, வேதாந்தா நிறுவனம் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகளின் பின்னே எழுந்திருக்கும் பிரச்சனைகளை அவர்கள் மூடி மறைப்பதை உணர்ந்து கொண்டேன். மற்ற பங்குதாரர் களும் வேதாந்தா நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டு மென ஆதரவு திரட்டுவேன். நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தியாவில் வேதாந்தா நிறுவனத்தின் பங்கு முதலீடு, 25 சதவிகிதம் அளவுக்கு ஓரிசாவில்தான் செய்யப்பட்டுள்ளது. இம் மாநில அரசு வேதாந்தா நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது'' என கடுமையாகக் குற்றம் சாட்டுகிறார்.

நியாம்கிரி மலைப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களை சந்தித்த பிறகு, “இம்மலையில் வாழும் கோண்டு இன மக்களுக்கு மட்டுமல்ல, மழைவளம் மிக்க வனப்பகுதி என்ற வகையில் இந்திய மக்கள் அனைவருக்கும் இப்பகுதி முக்கியமானது. இயற்கை வாழ்வாதாரங்களுடன் தற்சார்பு மிக்க, தன்னிறைவு பெற்ற வாழ்க்கை முறையை கோண்டு இன மக்கள் பெற்றிருக்கின்றனர். உப்பு மற்றும் பெட்ரோல் மட்டுமே, அவர்களுக்குத் தேவையான வெளிஉலகப் பொருட்கள். ஒரு மூத்த பழங்குடி மனிதர் என்னிடம் சொன்னார், “எங்கள் நீர்நிலைகளில் வாழும் மீன்கள் கூட வெளி உலக நீர்நிலைகளில் வாழ முடிவதில்லை எனும் போது, நியாம்கிரி மலைக்கு வெளியே எங்களாலும் வாழ முடியாது'' என்று. இம்மலையில் செறிந்திருக்கும் பாக்சைட் படிமங்களால் நீராதாரம் அதிக அளவில் சேகரமாகின்றது. இது, மலையின் கீழ்ப்பகுதியில் வாழும் மக்களுக்கும் தேவையான நீர்வளத்தை இங்கிருக்கும் இரண்டு பெரிய ஏரிகளின் மூலமாகக் கொண்டு சென்று சேர்க்கிறது.

“தனிச்சிறப்புள்ள மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல், வளரும் நாடுகள் சர்வதேச மதிப்புயர்வுக்காக, பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவதற்கும், சில தனிப்பட்ட செல்வந்தர்களை உயர்த்துவதற்கும், நாட்டின் வளங்களைப் பயன்படுத்துவது சரியானது அல்ல. மக்களின் பங்களிப்பும் முன்னேற்றமும் உள்ளடங்கிய, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் செய்யப்படும் வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமே நமக்குத் தேவையானவை'' என ஆக்கப்பூர்வமாகத் தனது கருத்துகளை பியான்கா முன்வைக்கிறார்.

உலக அளவில் சுரங்கங்கள், மக்களின் இடப்பெயர்வு, அரசு ஒடுக்குமுறைகள், புரட்சிகள் ஆகியவை பற்றி கேள்வியெழுப்பிய போது, “போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளின் மக்களுடன் பணிபுரிந்த அனுபவத்தில் சொல்கிறேன். மக்களின் வாழ்வாதாரங்களைச் சுரண்டி, இயற்கை வளங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் இடங்களிலெல்லாம் உள்நாட்டுக் கலவரங்கள் வெடிக்கின்றன. வாழ்விடங்களிலிருந்து மக்களை அப்புறப்படுத்தி, அவர்களின் பாரம்பரிய நிலங்களை அபகரித்து, அடிப்படை மனித உரிமைகளைச் சிதைத்து மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய கேள்விகள் மீது இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.

கோண்டு இன மக்கள் கேட்பது போல, அவர்களின் நிலங்களுக்குப் பதிலாகத் தரப்படும் பணம் ஒருபோதும் அவற்றை ஈடுசெய்ய முடியாது. ராணுவத்தைக் குவித்து, மக்களின் மீது தாக்குதல் நடத்தும் உள்நாட்டுப் போரை இந்திய அரசு தவிர்க்க வேண்டும். நிகரகுவா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, வளரும் நாடுகள் அனைத்திலும் மக்களின் மரணங்கள் மீதுதான் சுரங்கங்கள் தோண் டப்படுன்றன. கவுதமாலா, எல். சால்வடார், நிகரகுவா மற்றும் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட உள் நாட்டுக் கலவரங்கள் மற்றும் புரட்சிகள் பலவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் மக்களுக்குத் துரோகம் இழைப்பவையாகவே முடிந்து போயின. இந்தப் படிப்பினைகளின் அடிப்படையில், இந்திய அரசும் அரசியல்வாதிகளும் மக்களின் குரல்வளையை மிதித்து முன்கொண்டு செல்லப்படும் இந்த வளர்ச்சி குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்'' என அக்கறையுடன் பதிலளிக்கிறார் பியான்கா ஜாக்கர்.


நன்றி : ஆசிரியர் இளம்பரிதி, தலித் முரசு இதழ் மற்றும் கீற்று இணையதளம்

பசுமை வேட்டை என்கிற பயங்கரவாதம்-III


சங்கராச்சாரிகள் முதல் சீத்தாராம் எச்சூரிகள் வரை, பழங்குடியின மக்களின் பிரச்சனைகளை அவரவர் கோணத்தில் அணுகிக் கொண்டிருக்க, "மாவோயிஸ்டு பிரச்சனையை எவ்வாறு அணுகுகிறீர்கள்?' என்ற "தெகல்கா' (சூன் 12, 2010)வின் கேள்வியை எதிர்கொள்ளும் எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் இயக்குநரான இ.என்.ராம்மோகன், “முதலாவதாகவும் முழுமையாகவும் இது ஒரு சமூக நீதிப் பிரச்சனை. 1980களில் மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.அய்.)யில் டி.அய்.ஜி.யாக அய்தராபாத்தில் நான் பணியிலிருந்த பொழுது, இப்பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறேன்.

“பல தலைமுறைகளாக ஆந்திராவில் உயர்சாதியினர் - தலித்துகளையும் பழங்குடியினரையும் சுரண்டி வருகின்றனர். சுதந்திரத்திற்கு முன்பு நில உச்சவரம்பு எதுவும் சட்டமாக இருக்கவில்லை. அதனால் உயர் சாதியினர் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தமக்கு சொந்தமாக வைத்திருந்தனர். ஆனால் தலித்துகளும், மலைவாழ் மக்களும் நிலமற்றவர்களாக இருந்தனர். மிகச் சிலர் மிகக் குறைவான அளவில் நிலம் வைத்திருந்தனர். அவர்களையும் காலப் போக்கில் பொய்க்கணக்குகள் எழுதி, மிரட்டி, அவர்களின் சொற்ப நிலங்களையும் அபகரித்து விட்டனர். வேறு வழியின்றி, உயர்சாதியினரிடம் கூலி விவசாயிகளாக, கொத்தடிமைகளாக அம்மக்கள் வாழ நேரிட்டது.

“இச்சூழலில் 1946 இல் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, தெலுங்கானா பகுதியில் அம்மக்களுக்கான தமது அரசியல் வேலைகளைத் தொடங்கியது. வில், அம்புகளோடு பழங்குடியினரை குழுக்களாகத் திரட்டி, உயர்சாதியினரின் தானியக் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தவற்றை மீட்டு, உணவின்றி தவித்த மக்களுக்கு விநியோகித்தது. அப்போராட்டத்தின் வாயிலாக, விளைச்சலில் மூன்றில் இரண்டு பங்கு உழைப்பவர்களுக்கும், மூன்றில் ஒரு பங்கு நில உடைமையாளர்களுக்கும் என அறிவிப்பு செய்தனர்.

“ஆனால் இதை ஏற்றுக் கொள்ள மறுத்த நில உடைமையாளர்களுக்கு சாதகமாக காவல் துறை, உழைக்கும் விவசாயிகளை அடித்து நொறுக்கி கைது செய்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, நில உச்சவரம்புச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும், அவை ஆந்திராவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 1989 இல் ஆந்திராவில் என்னுடன் பணியாற்றிய உளவுத் துறை இயக்குநராகயிருந்த அஜய் தியோராவை அழைத்துக் கொண்டு, அப்போதைய வருவாய்த்துறை அமைச்சரை சந்தித்தேன். நில உச்சவரம்புச் சட்டத்தை உடனடியாக முழுமையாக நிறைவேற்றினால் ஒழிய, நக்சலைட் பிரச்சனைக்கு நீங்கள் தீர்வுகாண இயலாது எனக் கூறினேன். "அது சாத்தியமில்லை, நாங்கள் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது' என அவர் எங்களிடம் கூறினார். அவரது அமைச்சரவை சகாவான சுதாகர்ராவ் என்பவரே அடிலாபாத் தொகுதியில் 1100 ஏக்கர் நிலத்தின் உடைமையாளராக இருந்தார்.

“ஆந்திராவில் அன்றிலிருந்து இன்றுவரை பல காவல் நிலையங்களில், ஒரு தாழ்த்தப்பட்டவர் துணிந்து ஒரு புகாரைப் பதிவு செய்யும் நிலைமை இல்லை. ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு ஆதரவாக வழக்குப் பதிவோ, விசாரணையோ அங்கு நடைபெறுவதில்லை. பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பண்ணையார்களின் நிலங்களில் வேலை செய்பவர்களின் வீட்டுப் பெண்களின் திருமண நாளன்று, முதல் இரவை நிலப்பிரபுக்களோடுதான் பகிர்ந்து கொள்ள வேண்டுமென நிர்பந்திக்கப்படுகின்றனர். ஆதிவாசிகளின் நாட்டுப்புறப் பாடல்களில் இக்கொடுமைகள் பாடப்படுகின்றன. தமக்கு இந்நாட்டில் எவ்வித உரிமையும் இல்லை என அவர்கள் பாடுகின்றனர். இத்தகைய தவறுகள் களையப்படாமல், இப்பிரச்சனைகள் எவ்வாறு தீர்க்கப்படும் என நீங்கள் நம்புகிறீர்கள்?” என்று எதிர்க் கேள்வி எழுப்புகிறார். அதிகார வர்க்கத்தில் பங்கு பெற்றிருக்கும் ராம்மோகன் போன்றவர்களின் இத்தகைய தார்மீக ஆவேசம், இங்கு ஒரு கடைநிலை அரசு ஊழியனுக்கு இல்லாமல் போனதேன்?

"ராம்மோகன் அதிகார வர்க்கத்தின் ஜனநாயகக் குரல்; அருந்ததிராய் மேல்தட்டு வர்க்கத்தின் புரட்சிகர முகம்' என்றார் ஒரு நண்பர். இருக்கட்டும். அதிகார வர்க்கத்திலிருந்தும், மேல்தட்டு வர்க்கத்திலிருந்தும் சாத்தியமான இக்குரலும் இம்முகமும், சமூகநீதி எனும் வாய்ப்பில் கல்வி, வேலை, நவீன வாழ்க்கை என இடஒதுக்கீடு பெற்றிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரிலிருந்து உருவாகும் சாத்தியங்கள் அருகிக் கொண்டே வருகின்றன. ஆயுதமும் வன்முறையும்தான் போராட்டப் பாதையாக இருக்க முடியுமா? என இவர்கள் முணுமுணுக்கின்றனர். அழுக்கும் கறைகளும் நிரம்பிய வெளி உலகத்தின் வெம்மை அடர்ந்த வெளிச்சத்தைவிட, குளிர்ந்த தூய்மை பரவும் வனத்தின் நிழலே மேலானது என வாழ்ந்து வந்த பழங்குடியினர், இந்திய ராணுவத்தின் மிருக பலத்தினால் ஒடுக்கப்பட்டு, "சல்வாஜுடும்' திறந்த வெளி சிறைக் காவலிலும், தமது பாரம்பரிய சுதந்திர வாழ்வு பறிக்கப்பட்டு உள்ளடர்ந்த வனாந்தர சூழலிலும் உயிர் இருப்புக்காக ஓடிக் கொண்டும், போராடிக் கொண்டும் இருக்கின்றனர். அவர்கள் எண்ணிக்கையில் பல லட்சத்தினர். அடர்ந்த அக்காடுகளிலும் மலைகளிலும் நாம் எண்ணுவது போல, அவர்களால் தம் கோரிக்கைகளை முழங்க முடியாது; போராட்டப் பாதைகளைத் தீர்மானிக்க முடியாது.

“உண்ணாவிரதம் இருக்கவும், ஆர்ப்பாட்டம் செய்யவும் அவர்களால் முடியாது. உண்மையில் அவர்கள் வேறு வழியின்றி உண்ணாமல்தான் இருக்கின்றனர் என்பதே நமக்குப் புரியாத நிலையில், அதை ஒரு போராட்டமாகச் செய்தால் மட்டும் நாம் புரிந்து கொள்ளப் போகிறோமா?” என இதைத்தான் கேள்வியாக எழுப்புகிறார் அருந்ததிராய். அரசியல் வெறுமையுற்ற சாமானிய மக்கள் இருக்கட்டும். கோட்பாடுகளும், நுண் அரசியலும், மானுட ரசனைகளும் ததும்பி வழியும் அறிவுஜீவிகள் என்னவானார்கள் என அசூயை கொண்டால், “நீங்கள் நினைப்பது போல, எழுத்தாளர்களும், கலைஞர்களும் புரட்சிகர டி.என்.ஏ.விலிருந்து வரவில்லை” என தனது மொழியில் பகடி செய்கிறார் அருந்ததிராய். ஆனால் அது பகடி அல்ல!

நாம் நம்பிக்கை கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் மிகச் சாமானிய மனிதர்களாக, அவ்வகையான ஒப்பனைகளையே தத்தமது அடையாளங்களாகத் தரித்து வாழ்கின்றனர் -அல்ல, பிழைக்கின்றனர். தமது பிழைப்புக்கான "கரிக்குலம் விடே' ஆகத்தான் அவர்கள் தமக்கான ஒப்பனைகளைப் பூசிக் கொள்கின்றனர். உண்மையில் அதிகார வர்க்கத்திற்கும், ஆதிக்க சாதி கட்டுமானத்திற்கும், பார்ப்பனிய அரசியலுக்கும் எதிராக அணிவகுக்க வேண்டிய இக்கலைஞர்களும் எழுத்தாளர்களும் நடைமுறையில், தலித் மற்றும் பழங்குடியின மக்களின் பிரச்சனைகள் மீது பாராமுகம் கொண்டிருக்கின்றனர். பல நேரங்களில் புறக்கணிக்கின்றனர். சில நேரங்களில் அருவருப்பு கொள்கின்றனர்.

இவர்களுக்கு எரிச்சலூட்டும் இவ்வறிய மக்களின் வாழ்க்கைக்கும், அவர்களின் விழுமியப் பண்பாட்டிற்கும், பாரம்பரியக் கலைகளுக்கும், தொன்மத்திற்கும், கடுமையான உழைப்பிற்கும், அறநெறிகளுக்கும், இயற்கையுடனான கூட்டிணைவிற்கும், அழகியல் ரசனைக்கும், மானுட நேயத்தின் எல்லையற்ற அன்பிற்கும், அறுதியிட்டுக் கூற முடியாத அப்பாவித் தனத்திற்கும் ஒப்பனை பூசியிருக்கும் நம் "நம்பிக்கைக்குரிய' இவர்களின் டி.என்.ஏ.க்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதே அருந்ததிராயின் பகடிக்குப் பின்னே நாம் கூற விரும்புவதும்.

வர்ணதர்ம படிநிலைக் கட்டுமானத்தின் மேல் மற்றும் இடைநிலைச் சாதிகளிலிருந்து, பெருமளவில் இத்தகைய ஒப்பனைகளோடு உலாவரும் கலைஞர்களும் எழுத்தாளர்களும், "அவர்ணர்'களாகத் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் தலித் - பழங்குடியின மக்களிடமிருந்தும், அவர்களின் பிரச்சனைகளிலிருந்தும் விலகி நிற்கின்றனர் என்றே புரிந்து கொள்ள இடமிருக்கிறது. ஒப்பனைகளை மீறி தமது வெகுசன உளவியல் அம்பலப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகக் கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இவையே பல நேரங்களில் உன்னத இலக்கியங்களாகவும், தீவிர உடல்மொழி பேசும் நாடகங்களாகவும் கொண்டாடப்படுகின்றன. ஆனால் கலை - இலக்கிய வரலாற்றின் எழில்மிகு பக்கங்களை இட்டு நிரப்பும் இவர்களின் பிரதிகள், பழங்குடி மக்களின் உப்புக் குருதி நெடி வீசும் உடல்களைவிட மகத்தானவை அல்ல.

ஊடகங்களின் ஒப்பனை அறைகளுக்குள் ஒளிந்து கொள்ளாமல் சுதந்திரமாகவும், அறிவு நாணயத்தோடும், உண்மையாகவும் இயங்கும் தனித்துவமான கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் மக்களுக்கான "அறிவுஜீவிகள்' என நாம் அடையாளம் காணவும் வேண்டும். கடந்த ஏப்ரல் 6 அன்று தண்டேவாடாவில் 76 துணை ராணுவப் படையினர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்ட களேபரம் ஓய்வதற்குள், கடந்த மே 17 அன்று ஒரு பேருந்து மாவோயிஸ்டுகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 16 பொதுமக்களும்(?) 15 சிறப்புக் காவலர்களும் கொல்லப்பட்டனர்.

மாவோயிஸ்டுகளோடு தொடர்புபடுத்தி - குற்றம் சாட்டப்பட்டு, சட்ட விரோதமாக இரண்டு ஆண்டுகள் சட்டீஸ்கர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த, மனித உரிமைப் போராளியும் மருத்துவருமான, பினாயக் சென், “பேச்சு வார்த்தைக்கான சூழலை சீர்குலைக்கும் இச்செயலை நாம் ஒப்புக் கொள்ள முடியாது. வன்முறையை எவர் கையாளும் போதும், நமது ஒப்புதல் மறுப்பை பல வடிவங்களிலும் நாம் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்” எனப் பதிவு செய்கிறார். “அரசின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்புகிறவர்கள் திட்டமிட்ட, இரக்கமற்ற (மாவோயிஸ்டுகளின்) வன்முறைகளைக் கண்டனம் செய்வதில்லை” என அங்கலாய்க்கிறார் நடுவண் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.

புகழ் பெற்ற மனித உரிமையாளரும் வழக்குரைஞருமான கே.ஜி. கண்ணபிரான், “அரசாங்கமோ, நக்சலைட்டுகளோ இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் நாம் எழுந்து நிற்க வேண்டும் என விரும்புவது, ஒரு வகை பார்ப்பனிய சடங்குத்தனமாக இல்லையா? அரசின் வன்முறை குறித்து நாம் பேசும்போது கவனமெடுக்கும் உள்துறை அமைச்சர், நக்சலைட்டுகளின் வன்முறையை நாம் கண்டிக்கும்போது கண்டுகொள்வதில்லை. ஒட்டுமொத்த வன்முறை குறித்தும் நாம் பேச முன் வந்தால், அதை செவிமடுக்க உள்துறை அமைச்சர் தயாராக இருப்பாரா?” என கேள்விகள் எழுப்புகிறார்.

“இப்பேருந்து குண்டு வெடிப்பு, ஊடகங்கள் செய்தி வெளியிடுவது போல மாவோயிஸ்டுகளின் திட்டமிட்ட செயலாக இருந்தால், அது நிச்சயமாக மன்னிக்கவும் நியாயப்படுத்த முடியாததும் ஆகும். பல ஊடகங்கள் செய்திகளைத் திரித்தும் மிகைப்படுத்தியுமே வெளியிடுகின்றனர். இப்பேருந்தில் பயணம் செய்த சிறப்புக் காவல் அதிகாரிகள் ஒருபுறமிருக்க, மற்றவர்கள் ஊடகங்கள் கூறுவது போல பொதுமக்கள் அல்லர். அவர்கள் சிறப்புக் காவல் பிரிவில் இணைவதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள். போர்ச் சூழல் நிலவும் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான பேருந்தை காவல் துறை பயன்படுத்தியது, அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது” என்கிறார் அருந்ததிராய். தண்டேவாடாவை உள்ளடக்கிய பஸ்தார் மண்டல காவல் துறை அய்.ஜி. லாங்குமார் என்பவரிடம் கூட, சிறப்புக் காவலர்களுக்காக பொதுப் பேருந்துகளைப் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பியபோது ("அவுட்லுக்', மே 31, 2010 வார இதழ்) மவுனம் சாதிக்கவே செய்தார். இந்த மவுனத்திற்கு மட்டுமல்ல -

“மாவோயிஸ்டுகள் மீதான நடவடிக்கைகளை இன்னும் கடுமையாக்க பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்துகிறது' ' - நரேந்திரமோடி, குஜராத் முதலமைச்சர்.

“மாவோயிஸ்டுகளின் ஆதரவாளராகச் செயல்படும் சில மனித உரிமை அமைப்புகள் ஆபத்தானவை. அவை தமக்கான நிதித்தேவையை மாவோயிஸ்டுகளிடமிருந்தே பெறுகின்றன” - அஜித் டோவில், மத்திய உளவுப் பிரிவு முன்னாள் இயக்குநர்.

“நமது எதிரிகள் யாரென்பதில் மனித உரிமை அமைப்புகள் குழப்பம் விளைவிக்கின்றன. மாவோயிஸ்டுகள்தான் எதிரிகள் என்பதில் நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம்” - அஜய் ஷானி, மோதல் மேலாண்மை நிறுவனம்.

“மனித உள்ளீடற்ற வெறுமையான சமூகத்தைக் கட்டியெழுப்புவதே மாவோயிஸ்டுகளின் விருப்பமாக இருக்கிறது.” - ஹர்ஷ் மந்தர், தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் - என்பன போன்ற அதிகார வர்க்கத்தின் குரல்களுக்கும் போதுமான மறுமொழிகளைப் பகர, நியாய உணர்வு பீறிடும் எவரொருவரும் முன்வர வேண்டும். அவர்கள் எழுத்தாளர்களாக, கலைஞர்களாக, அறிவுஜீவிகளாக இருக்க வேண்டுமென்பது கட்டாயமும் அல்ல.

தண்டேவாடாவிலிருந்து சுக்மா எனுமிடத்திற்குச் செல்லும் வழியில் தகர்க்கப்பட்ட பேருந்து குண்டு வெடிப்பு நிகழ்வின் இரு நாட்களுக்குப் பிறகு, பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழு டெல்லியில் கூடியது. இக்கூட்டத்தில் மாவோயிஸ்டுகளை எதிர்கொள்வதற்கான புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டன. இதில் மாவோயிஸ்டுகளைக் கண்காணிப்பதற்கும், ராணுவ தேடுதல் வேட்டைக்கும் வானூர்திகளை (ஹெலிகாப்டர்களை) கூடுதலாகப் பயன்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வான்வழித் தாக்குதலுக்கு விமானப் படையின் விமானங்களைப் பயன்படுத்துவதில் முடிவு காணப்படவில்லை என ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. "சொந்த மக்களின் மீது வான்படையைப் பயன்படுத்துவது, அனுமானிக்க முடியாத பேரழிவுகளை ஏற்படுத்தும்' எனச் சில மூத்த விமானப்படை அதிகாரிகளே மறுக்கின்றனர். "துணை ராணுவப் படையினருக்குப் போதுமான பயிற்சியின்மையும் ஒழுங்கமைக்கப்பட்ட தலைமையின்மையும் தான் தண்டேவாடாவில் 76 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டதற்கு அடிப்படைக் காரணம், "தாண்டேவாடாவில் 22 காவல் நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில் போதுமான பயிற்சியுடன் கூடிய காவலர்களும் வழிநடத்தும் ஆய்வாளர்களும் இல்லை', "துணை ராணுவப் படையினரும் காவலர்களும் இணக்கமான தகவல் பரிமாற்றத்தில் இருப்பதில்லை', "சிறப்புக் காவலர்கள் பொதுமக்களின் பேருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டும், அவர்கள் அதைப் பயன்படுத்துகின்றனர்', "ஆளில்லா விமானங்களைக் கண்காணிப்பில் ஈடுபடுத்துவது பற்றி பேசப்படுகிறது. ஆனால் அடர்ந்த காடுகளில், இம்முயற்சிகள் தோல்வியைத் தருவனவாகவே உள்ளன' என்பன போன்ற கருத்துகள் ராணுவ வட்டாரங்களில் உலவுகின்றன.

ஆனாலும் 1966 இல் மிசோ தேசிய முன்னணி கெரில்லாக்களின் மீதும், 2003 இல் ஜம்முவில் காகா மலைப் பகுதிகளிலும் வான்வழித் தாக்குதலுக்காக வான்படைகள் பயன்படுத்தப்பட்டுள்ள முன்னுதாரணங்களும் இருக்கின்றன. "குடிமைத் துறைகளுக்கு உதவும்' நோக்கில் உள்நாட்டு பாதுகாப்புக் கடமைகளில் ராணுவத் துறையினரும், விமானப் படைப் பிரிவும் பயன்படுத்தப்படுவதற்கு, தனித்த அரசியல் சட்ட ஒப்பங்கள் இருக்கின்றன எனவும் கூறப்படுகிறது. அடர்ந்த காடுகளில் ராணுவ வீரர்களையும் தளவாடங்களையும் இறக்குவதற்கு, விமானப்படை உலங்கு ஊர்திகள் தற்போதும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கது. இக்கட்டுரையின் போக்கில், ராணுவம், துணை ராணுவப் படை, காவல் துறை, துறை சாராத சிறப்புக் காவல் அதிகாரிகள் (அமைப்பு சாரா தொழிலாளிகள் போல) போன்றவற்றுக்கான வேறுபாடுகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அண்டை நாடுகளுடனான போர், இணக்கமுள்ள நாடுகளுடன் கூட்டு நடவடிக்கை மற்றும் அய்க்கிய நாடுகள் அவையின் சிறப்புப் படைப் பிரிவில் பங்கேற்பு என ராணுவத் துறையின் அவசியமும் ஒழுங்கும் வரையறை செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டுக் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு துணை ராணுவப் படையினரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ராணுவப் படைப் பிரிவிற்கு வழங்கப்பட்டிருக்கும் பயிற்சிகளும் இடப்படும் ஆணைகளும் மிகக் கடுமையானவை. அவை சொந்த நாட்டு மக்கள் மீது பயன்படுத்த முடியாதவை. ராணுவமும், துணை ராணுவப் படையும் நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவை. காவல் துறையோ மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பவை. துறை சாராத சிறப்புக் காவல் பிரிவுக்கோ சட்ட அங்கீகாரம் இல்லை. சட்ட விரோதமானதும் கூட. இத்தகைய புரிதல்களின் அடிப்படையில் தான் இ. என். ராம் மோகன் போன்றவர்களின் கூற்றுகளையும் நாம் அறிய வேண்டும்.

அவர், “C.R.P.F., I.T.B.P., B.S.F. ஆகியவற்றில் நான் பணியாற்றி உள்ளேன். சி.ஆர்.பி.எப். சட்டம் - ஒழுங்கு ஆணைப் படையாகப் பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. லத்தி சார்ஜ் செய்வதில் அவர்கள் தேர்ந்தவர்கள். ஆனால் காஷ்மீரில் நடப்பதை நீங்கள் கவனித்தால், அவர்கள் அங்கே கூட்டங்களை நோக்கி கல்லெறிகிறார்கள். ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக் கொள்ளும் அக்கூட்டத்தில், ஒரு பக்கத்தில் சீருடை அணிந்தவர்களையும் மற்றொரு புறத்தில் சீருடை அணியாதவர்களையும் (பொதுமக்கள்) நாம் காண முடியும். கலவரப் பகுதிகளுக்கு அனுப்பப்படும் அவர்கள் (துணை ராணுவப் படையினர்) அந்தந்த மாநில காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறார்கள். (கற்களை எறிந்து கூட்டத்தைக் கலைப்பது காவல்துறைக்குத் தரப்பட்டிருக்கும் பயிற்சியாக இருக்கலாம். ஆனால், மிசோரம், நாகாலாந்து உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் ராணுவத் தலைமையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இதுபோன்ற காரியங்களில் ஈடுபடாமல் இருக்கிறார்கள் (நாகா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்கள் அனைத்துமே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தானே இருக்கின்றன)” என்கிறார். (அடைப்புக் குறிப்புகள் - கட்டுரையாளருடையவை).

மேலும் அவர், “நக்சலைட்டுகளுக்கு எதிராக ராணுவத்தைப் பயன்படுத்துவது பேரழிவை விளைவிக்கும். எடுத்துக்காட்டாக, பீகார் படைப்பிரிவினரில் கணிசமானோர் ஆதிவாசிகளே. அவர்கள் தம் உறவினர்களுக்கு; குடும்பத்திற்கு எதிராக எப்படி செயல்பட முடியும். ஒன்றுமறியாத மக்களைக் கொன்றுவிட்டு, நக்சலைட்டுகளைக் கொன்றோம் என்றே பல நேரங்களில் சொல்லப்படுகிறது. மாவோயிஸ்டுகள் ஒருபோதும் ஆயுதங்களை ஒப்படைக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அப்படிச் செய்ய முடிவெடுத்தால், மீண்டும் போராட்டத்தை தொடங்குவது கடினமாகிவிடும்.

“அரசு நிலம், வன உரிமைகள், சுரங்கங்கள் ஆகியவற்றில் தமது கொள்கைகளை மாற்றிக் கொண்டால் மட்டுமே, அவர்களிடம் நாம் உரையாற்றவும், சம்மதிக்கவும் செய்ய முடியும். அடிப்படை நிலைமைகளைச் சரி செய்யாமல் மிகப்பெரிய ராணுவ வலிமையைக் குவித்தாலும், பிரச்சனைகள் இன்னும் கூடுதலாக வளரவே செய்யும். எனது கருத்தை எந்த இடத்திலும் நான் இவ்வாறே பதிவு செய்ய விரும்புகிறேன் - அது அரசாங்கத்திடமானாலும்” என மனசாட்சியுடன் பேசுகிறார்.

உள்நாட்டுக் கலவரங்களிலும் நெருக்கடிகளிலும் பயன்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள துணை ராணுவப் படையினரின் எண்ணிக்கை, ஏறத்தாழ ஏழு லட்சம் என மதிப்பிடப்படுகிறது. மத்திய பாதுகாப்புப் படைப் பிரிவில் 2.30 லட்சம், எல்லைப் பாதுகாப்புப் படையில் 1.30 லட்சம், அசாம் ரைபிள் பிரிவில் 50 ஆயிரம், இந்தோ - திபெத் எல்லைக் காவலில் 75 ஆயிரம், இதரப் பிரிவில் 1 லட்சம் என உள்ளனர். உள்நாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் போராடுவது, பாரம்பரிய நினைவிடங்களைப் பாதுகாப்பது, தேசிய பேரழிவுக் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது, கலவரங்களைக் கட்டுப்படுத்துவது, முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பிற்குச் செல்வது, தேர்தல் பணிகளில் பங்கேற்பது ஆகியன இப்படைப் பிரிவுகளுக்கு வரையறுக்கப்பட்டிருக்கும் வேலைப் பிரிவினைகள். "எந்த வேலையும் எந்த நேரமும் எந்த இடமும்', "மரணம் வரையிலும் பணி' என்பதே இவர்களுக்கான குறிக்கோள்களாக; கடமையின் ஒழுங்குகளாக; கட்டுப்படுத்தும் ஆணைகளாக வழங்கப்பட்டுள்ளன.

இத்தகைய துணை ராணுவப் படைப்பிரிவின் 1.50 லட்சம் சிப்பாய்கள்தான் மத்திய இந்தியாவின் மாவோயிஸ்டு அரசியல் பகுதிகளில், "சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கென குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 160 பேர் என்ற விகிதத்திலிருக்கும் காவல் துறையினரின் எண்ணிக்கையோ, ஜார்க்கண்ட் மற்றும் சட்டீஸ்கரில் 1 லட்சம் மக்களுக்கு 205 பேர் என இருக்கிறது என்பதும் இங்கு கவனத்திற்குரியது. இருந்தும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை என்பது ஒருபுறமிருக்க, ஊழலும் எதேச்சதிகாரமும் ஊதிப் பெருத்திருக்கும் அதிகார வர்க்கத்தின் சுரண்டலுக்கு ஆதரவாகப் பணிபுரிய நிர்பந்திக்கப்பட்டிருக்கும் துணை ராணுவப் படையினர் மத்தியில், அவநம்பிக்கைகளும் விரக்தியும் வளர்ந்து வருவதும் ஊடங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

துறைசார் புள்ளிவிவரங்களின்படி, 14,422 வீரர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். "மாநில காவல் படையினரையும், துணை ராணுவப் படையினரையும் ஒருங்கிணைத்துச் செல்வதில் பின்னடைவும் முரண்களும் தோன்றியிருப்பதாக' இ.என். ராம்மோகன், தனது ஒரு நபர் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ("தெகல்கா', மே 8, 2010). “ஓர் அதிகாரிக்கு தண்ணீரோ, குளிர்பானமோ வாங்கிவர பத்து கார்கள் முகாமிலிருந்து செல்கின்றன. ஆனால் விடுமுறையில் ஒரு வீரர் செல்வதற்கு காட்டிலிருந்து வெளியேற, ஒரு ஜீப்பை பயன்படுத்துவதற்குப் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. அடிப்படை மனித உரிமைகள் எங்களுக்கு அறவே இல்லை” என 12 ஆண்டுகளாக துணை ராணுவப் படையில் பணிபுரியும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசோக்ரே (வயது 34) குற்றம் சுமத்துகிறார்.

“தற்காலிகமாக முகாமிடும் இடங்களில் தங்குவதற்கு, மழை மற்றும் கடும் வெயிலுக்கும் பாதுகாப்பான மற்றும் குறைந்த அளவு வசதியுடன் கூடிய கூடாரங்கள் அமைத்துத் தருவதில்லை. காயமடைந்து மருத்துவமனைகளில் இருக்கும் காலங்களில்கூட, சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. காவலர்களுக்கான நலத்திட்டங்கள் முறையாக அவர்களிடம் சென்று சேர்வதில்லை. அதிகாரிகளோ வசதியான, பாதுகாப்பான குடியிருப்புகளில் போதுமான வேலையாட்களோடு சொகுசாக வாழ்க்கை நடத்துகின்றனர். வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் பயணப்படிகளைப் பெறுவதும் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது” என மற்றொரு வீரர் ஆதங்கப்படுகிறார். ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சி.ஆர்.பி.எப். காவலராக 16 ஆண்டுகளாகப் பணியிலிருக்கும் ஒருவர், “1947இல் சுதந்திரம் பெற்றதாகச் சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்னும் அடிமைகளைப் போலத்தான் நடத்தப்படுகிறோம்” என வேதனையை வெளிப்படுத்துகிறார்.

போராடும் மக்களுக்கு செயல் தந்திர ரீதியில் பயனளிக்கும் இத்தகைய முரண்களைக் களைவதற்கும் அறிவுரைகளை வழங்குவதற்கும் அதிகார வர்க்கம் பல்வேறு வழிவகைகளைக் கையாண்டும் வருகிறது. அவற்றில் பேராபத்து மிகுந்த ஆலோசனைகளும் சொல்லப்படுகின்றன. ஓய்வுபெற்ற "விங் கமாண்டர்' யு.சி.ஜா. என்பவர், “உள்நாட்டு பாதுகாப்பின்மை, உள்நாட்டு அமைதியின்மை போன்ற காலங்களில் நமது ராணுவத் தலைவர்கள் "பொது அமைதியைக் காப்பது' என்ற கேள்வி எழும்போதெல்லாம் "இது எங்கள் வேலை அல்ல; இதை எங்களால் செய்ய இயலாது, சொந்த நாட்டு மக்கள் மீது வான்வழித் தாக்குதல் உட்பட வன்மையான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது' என்று மறுத்து வருகின்றனர். இந்த பொறுப்பின்மை, அரசின் ஆயுதந்தாங்கிய படையினருக்கு, இந்தியக் குடிமக்களிடம் நன்மதிப்பைப் பெற்று தராது. கால அவசரம் கருதியும் தொழில் நிமித்தமும் குடிமக்களின் விருப்பத்தை நிறைவேற்றித் தருவது அவர்களுடைய கடமை” என "தி இந்து' நாளிதழில் (சூன் 6, 2010) எழுதுகிறார்.

இவரது கட்டுரையின் பேராபத்து மிகுந்த பகுதி குறிப்பிடுவது என்னவென்றால், “உள்நாட்டு எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவும் ராணுவம் விருப்பத்துடனேயே இருக்கிறது. இது போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படும் வீரர்களுக்கு ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் உடனடியாக அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும்” என்பதே. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் “எதிரிகளை கண்டவுடன் சுட்டுத் தள்ளுவது, பொதுமக்களை எந்த நேரத்திலும் விசாரணைக்கு உட்படுத்துவது, சம்மன் இல்லாமல் வீடு மற்றும் நிறுவனங்களில் சோதனையிடுவது, ஆவணங்களைக் கைப்பற்றிக் கொள்வது” என்பன போன்ற அடக்குமுறைகளுக்கு சட்டப்பூர்வமாகவே அனுமதியளிக்க வகை செய்கிறது.

இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை முற்றிலும் மீறுவதற்கு, ராணுவத் துறையினருக்குத் துணை நிற்கிறது. மணிப்பூரில் அசாம் சிறப்புப் படைப் பிரிவிற்கு இச்சட்ட அதிகாரம் வழங்கப்பட்டு, கடந்த சில ஆண்டுகளில் ராணுவத்தின் அளவிட முடியாத கொடுமைகளை அம்மக்கள் அனுபவித்து வருகின்றனர். தாய்வழிச் சமூகத்தின் சிதைந்து போகாத பண்பாட்டுக் கூறுகளை இன்னும் தாங்கி நிற்கும் மணிப்பூர் மண்ணின் வீரஞ் செறிந்த பெண்களின் நிர்வாணப் போராட்டத்தை, இந்த உலகம் ஒருபோதும் மறக்க இயலாது. சிறப்பு அதிகாரச் சட்டத்தின் வழியே அசாம் படைப் பிரிவினர் நிகழ்த்திய கொடுமைகளின் வெளிப்பாடாகத்தான் அப்பெண்களின் போராட்டம் வெடித்தது. சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்படாமலேயே, ராணுவத் துறையினர் நிகழ்த்தும் கொடுமைகளும் குற்றங்களும் பொறுத்துக் கொள்ளக்கூடியனவாக இல்லாதபோது, யு.சி.ஜா. போன்றவர்களின் ஆலோசனைகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டால் என்னாவது ?


நன்றி : ஆசிரியர் இளம்பரிதி, தலித் முரசு இதழ் மற்றும் கீற்று இணையதளம்

பசுமை வேட்டை என்கிற பயங்கரவாதம்-II

சட்டீஸ்கரில் உள்ள பஸ்தார் மாவட்டத்தின் உள்ளடர்ந்த காட்டுப்பகுதியான தண்டேவாடாவில் மத்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 70 பேர், கடந்த ஏப்ரல் 6 அன்று மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டனர். ராணுவ ரீதியான பாதுகாப்புக் குளறுபடிகளால் இந்த இழப்பு ஏற்பட்டது என, பாதுகாப்புத் துறை தெரிவித்தது. இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய, எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் இயக்குநரும், காஷ்மீர் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நீண்ட காலம் இந்திய ராணுவத் துறையில் பணியாற்றியவரும், நேர்மையான அதிகாரி என (பணிக்காலத்தில்) நற்சான்றிதழ் பெற்றிருப்பவருமான இ.என். ராம் மோகன் என்பவரை, உள்துறை அமைச்சரான ப. சிதம்பரம் முன்வந்து நியமித்திருக்கிறார்.

மனித உரிமை ஆணையம் அல்லது நீதித்துறை விசாரணை எனில், குடிமக்களின் தரப்பிலான நியாயங்கள் கவனம் கொள்ளப்படும். ஆனால், இது முற்றிலும் (ராணுவ) துறை ரீதியான விசாரணையே. இந்திய அரசு மற்றும் ராணுவத் துறைக்கு ஆதரவான அதிகாரியாகவே செயல்பட்டாலும், இ.என். ராம் மோகன் அண்மையில் "தெகல்கா' (சூன் 12, 2010) ஆங்கில வார இதழுக்கு அளித்திருக்கும் நேர்காணல், போராடும் மக்களுக்கு எதிரான; மாவோயிஸ்ட் போன்ற போராளிகளுக்கு எதிரான; அரசுக்கு ஆதரவான பலருக்கும் உறைந்து போகாத சில உண்மைகளை உணர்த்தி நிற்கிறது.


இவர் தனது நேர்காணலில், “சட்டீஸ்கரில் இது பெரும்பாலும் காடுகள் மீதான உரிமை சம்பந்தப்பட்டதே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆதிவாசிகள், சாதி மேலாதிக்கத்தினால் காடுகளில் வாழ தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள். காடுகளில் கிடைக்கப் பெறும் பொருட்களை சேகரித்து, காடுகளுக்கு வெளியே இருக்கும் சந்தைகளில் அவர்கள் விற்க வருகின்றனர். அப்பொருட்களை வாங்குபவர்களாக இருப்பவர்கள் "வைசிய' வணிகர்கள். பொருட்களின் விலை மதிப்பு அறியாத ஆதிவாசி மக்களை, மிகக் குறைந்த விலை தந்து வணிகர்கள் ஏமாற்றுகின்றனர். ஆதிக்க பிராமணர்கள், அராஜக சத்திரியர்கள், சுரண்டும் வைசியர்கள் என்ற மூவகை மேலாதிக்கம் இங்கு நிலவுகிறது. தற்செயலாக, ப. சிதம்பரம் ஒரு வைசியர்.

“இம்மூவகை சமூகங்களும் பல நூறு ஆண்டுகளாக அடித்தட்டு மக்களை ஒடுக்கி வருகின்றனர். இப்படிப்பட்ட மக்களுக்கு உதவ முன்வரும் கம்யூனிஸ்டுகளை, நாம் ஏன் குற்றம் சுமத்த வேண்டும்? இவர்களே, வணிகர்களின் வரவினங்களை அறிந்து கொண்டு, ஆதிவாசி மக்களுக்குச் சேர வேண்டிய நியாயமான விலையை அவர்களின் பொருட்களுக்குப் பெற்றுத் தருகிறார்கள். பீடி இலை வியாபாரம் பற்றி நீங்கள் அறிந்தால், அதில் கிடைக்கும் வருமானம், டெல்லி அரசியல்வாதிகள் வரை போய்ச் சேர்வது உங்களுக்குத் தெரியவரும். ஆனால் அதைப் பறித்து, சேகரிக்கும் ஏழை மக்களுக்கோ கிடைப்பது ஒன்றுமில்லை'' எனக் குறிப்பிடுவதை நாம் கவனிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இரு சட்டங்கள் இன்னும் நடைமுறைக்கு வராமல் இருப்பதைச் சுட்டிக்காட்டும் ராம் மோகன், “ஒன்று நிலங்களை கையகப்படுத்துவது, மற்றொன்று வன உரிமைகள் தொடர்பானது. ஆனால் கெடுவாய்ப்பாக, இந்தக் காடுகளில் நிறைந்திருக்கும் கனிம வளங்கள், அதிகாரத்தில் வீற்றிருக்கும் கட்சிகளுக்குப் பெரிய புதையல் கிடைத்தது போல இருக்கிறது. நீங்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டால், தோண்டியெடுக்கப்படும் கனிமங்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கு, உங்கள் சுவிஸ் வங்கிக் கணக்கை உயர்த்தும். வனத்தில் வாழும் ஏழை மனிதன் வசதியாக மறக்கப்படுவான். பீகாரில் பூமிகார் உயர் சாதியினர் வெளிப்படையாகவே சொல்கிறார்கள், "எங்கள் வீட்டு நாய்கள், பூனைகளின் பெயர்களில்கூட எங்கள் நிலங்களைப் பதிவு செய்திருக்கிறோம்' என. எவ்வளவு காலம் இச்சூழல் எதிர்ப்பின்றியே இருக்கும்? இதைச் சரி செய்வதற்கு ஏன் நீங்கள் முன்வரவில்லை? இந்த அரசாங்கம் அறிவுடையதாக இருந்தால், இதைச் செய்ய வேண்டும். இல்லையெனில் மோசமான சூழலே உருவாகும். அது பேரழிவை விளைவிக்கும்'' என ஊழல் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் எச்சரிக்கை விடுக்கிறார்.

ஊடகங்கள், பழங்குடி மக்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்றே பிரச்சாரம் செய்வது குறித்து ராம் மோகன், “அனைவரும் நக்சலைட்டுகளை மய்யப்படுத்தியே இப்பிரச்சனையை அணுகுகின்றனர். மிகச் சிலரே இதன் இருவித அடுக்குகள் பற்றி புரிந்து கொள்கின்றனர். சி.பி.அய்., சி.பி.எம்., சி.பி.அய். (எம்.எல்.), சி.பி.அய். (மாவோயிஸ்ட்) என இக்கட்சிகளின் தலைவர்கள் 90 சதவிகிதத்தினர் உயர் சாதிகளைச் சேர்ந்தவர்களே. ஆனால் அவர்கள் அரசியல் - தத்துவம் சார்ந்து சாதியற்றவர்களாக, ஏழை மக்களின் தோழர்களாக அறியப்படுகிறார்கள். தங்கள் அரசியல் திட்டப்படி, அவர்கள் இந்நாட்டின் அதிகாரத்திற்கு வர விழைகிறார்கள். தனிப்பட்ட வகையில் ஒரு மாவோயிஸ்ட் அரசில் நான் வாழ விரும்பவில்லை. ஆனால், நமது சமகால அராஜக சூழல் இது போன்றே தொடருமெனில், வேறு என்னதான் நிகழும்?

“எந்தவொரு பிரச்சனைக்கும் மக்கள் வேறு வழியின்றியே ஆயுதம் தூக்குகின்றனர். பழங்குடிகளை அவர்களின் உரிமைகளுக்காகப் போராடவே, மாவோயிஸ்டுகள் ஆயுதம் தூக்கப் பயிற்றுவிக்கின்றனர். மார்க்சிய வகுப்புகளில் கெரில்லா போர் முறையும் ஒரு பாடமாக இருக்கிறது. தண்டேவாடாவில் 76 பேரை நாம் இழந்து விட்டோம் என ராணுவத்தினர் என்னிடம் குமுறுகின்றனர். இதற்குப் பழி தீர்க்கும் வகையில் அவர்கள் செயல்பட்டால், அது இன்னும் வலுவான தலைமையை, கட்டுப்பாட்டை அம்மக்களிடம் உருவாக்கும்'' என அனுபவபூர்வமாகவும், நேர்மையாகவும் தனது அணுகுமுறையை முன்வைக்கிறார்.

ஆனால் "சொந்த மக்கள் மீது ராணுவ ரீதியான போரை நாங்கள் விரும்பவில்லை' என சொல்லிக் கொண்டே, "பசுமை வேட்டை' என்று பெயரிடப்பட்ட உள்நாட்டுப் போரை, இந்திய அரசு நடத்தி வருகிறது. இப்போருக்காக மத்திய துணை ராணுவப் படை, எல்லை பாதுகாப்புப் படை, நாகா போர்ப்படை ஆகியவற்றின் ஒரு லட்சம் துருப்புகள் தன்டகாரண்ய காடுகளில் இறக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கம், பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், மகாராட்டிரம், ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இரண்டரை லட்சம் காவல் படைகள், நேரடியாக பழங்குடியின மக்களுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பழுப்பு வேட்டை நாய்கள், கோப்ராக்கள், தேள்கள் என பெயரிடப்பட்ட சிறப்புப் படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, போராடும் மக்களிடையிலான சாதி மற்றும் இனக்குழு முரண்களைப் பயன்படுத்தி, "சல்வா ஜுடும்' என்ற கூலிப்படையும் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2005 ஏப்ரல் மாதம் சட்டீஸ்கரில் உருக்காலை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு, சல்வா ஜுடும் அமைக்கப்பட்டது என்பது கவனத்திற்குரியது.

"அமைதிக்கான ஒருங்கிணைந்த முனைப்பு' என்று பொருள்படும் சல்வா ஜுடும், பழங்குடி மக்களின் கிராமங்களில் துணை ராணுவப் படையுடன் நுழைந்து, அம்மக்களை அடித்து, சித்திரவதை செய்வது, பெண்களை வன்புணர்ச்சி செய்து கொல்வது, குடிசைகளுக்குத் தீ வைப்பது என கடந்த நான்கு ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சூறையாடி நிர்மூலமாக்கியுள்ளனர். இதன் விளைவாக, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் காடுகளுக்குள் உயிர் தப்பி வாழ்கின்றனர். பயிர்களை சேதப்படுத்தி தீக்கிரையாக்குவது, குடிநீரில் நஞ்சு கலப்பது என வாழ்வாதாரங்களையும் அழித்து விட்டனர். வனங்களில் கிடைக்கும் பொருட்களை சந்தைகளில் விற்று, அரைப் பட்டினியோடு வாழ்ந்து வந்த மக்களுக்கு, சந்தைகள் அழிக்கப்பட்டு மூடப்பட்டதால், அதுவும் இல்லாமல் போனது. சல்வா ஜுடும் குண்டர் படைக்கு இப்பகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகேந்திர கர்மா தலைமை தாங்குகிறான். தமிழகத்தில் தஞ்சைத் தரணியின் நில உடைமையாளர்களை காங்கிரஸ் கட்சியில் கருப்பையா மூப்பனார் பிரதிநிதித்துவப்படுத்தியது போல, மகேந்திரகர்மா அப்பகுதி நில உடைமையாளர்களின் காங்கிரஸ் கட்சி பிரதிநிதி.

ஏறத்தாழ 1 லட்சம் மக்கள் சட்டீஸ்கர், லால்கர், ஜார்க்கண்ட் பகுதிகளின் அரசு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சல்வா ஜுடும்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் இம்முகாம்களில், பழங்குடியின மக்கள் கொடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். "இம்முகாம்கள் அம்மக்களைக் குற்றவாளிகளாகவே உற்பத்தி செய்யும்' என வேதனை தெரிவிக்கிறார், பதினேழு ஆண்டுகள் இப்பகுதியில் மக்கள் நடுவில் பணிபுரியும் வினோபாவேவின் பூமிதான இயக்கத்தைச் சேர்ந்த காந்தியவாதியான ஹிமான்சுகுமார். “சல்வா ஜுடும் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டது. அது சூழலை மேலும் மோசமாக்குகிறது. முன்னர் நிலப்பிரபுக்கள் செய்ததையே இன்றைக்குக் காவல் துறையும், மத்திய சிறப்புக் காவல் படையும் செய்து வருகின்றன. பாலியல் வன்புணர்ச்சி, படுகொலைகள் ஒரு புறமிருக்க, காவல் படையினர் ஆதிவாசிகளின் ஆடு, கோழிகளைக்கூட களவாடிச் செல்வதாக அம்மக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். இது சகித்துக் கொள்ள முடியாதது'' என்று முன்னாள் ராணுவ அதிகாரி ராம் மோகனும் குற்றப்படுத்துகிறார்.

சல்வா ஜுடும் கூலிப்படையில், மாதம் 1500 ரூபாய் சம்பளத்தில் அரசுக்கு ஆதரவான பழங்குடி இளைஞர்கள் சிறப்புக் காவலர்களாக (குகOண்) நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கூலிப் படையின் செலவினங்களை டாடா, எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள் பார்த்துக் கொள்வதாக, எழுத்தாளர் அருந்ததிராய் குற்றம் சுமத்துகிறார். போராடும் மக்களுக்கு எதிராக, அவர்களில் ஒரு பிரிவினரையே பயன்படுத்தும் தந்திரம், வெள்ளைக் காலனி ஆட்சியாளர்களிடமிருந்து இந்திய ஆளும் வர்க்கம் கற்றுக் கொண்ட கயமைத்தனங்களில் ஒன்று.


துணை ராணுவப் படையினராலோ, காவல் துறையாலோ, சல்வாஜுடும் கூலிப்படையாலோ கொல்லப்படும் அல்லது காணாமல் ஆக்கப்படும் பழங்குடியின மக்களைத் தேடுவதற்கும், படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களைப் பெற்று இறுதி நிகழ்ச்சிகளைச் செய்வதற்கும் என்றே "தியாகிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கூட்டிணைவு' என்ற அமைப்பு ஆந்திராவில் உருவாக்கப்பட்டுள்ளது. "சிலருடைய பிணங்கள் அழுகிய நிலையில் கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட உடல் காயங்களுடன் காடுகளில் தேடிக் கண்டெடுக்கப்படுகின்றன' என இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். சல்வாஜுடும் கட்டுப்பாட்டிலுள்ள பழங்குடியினரின் பல்வேறு கிராமங்களில் ஒன்றான "கொட்டச்சேறு' தீக்கிரையாக்கப்பட்டு,

மாவோயிஸ்டு என்ற சந்தேகத்தின் பேரில் சிலர் கொல்லப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்ட சூழலில் ஆந்திராவில் 2008 ஆம் ஆண்டு "செர்லா' என்னும் இடத்தில் தேசிய மனித உரிமை ஆணையம், ஒரு பொது விசாரணையை நடத்தியது. கொட்டச்சேறு கிராமவாசிகள் பலர் அதில் பங்கேற்றனர். சல்வாஜுடும் கூலிப்படையினராலும், பாதுகாப்புப் படையினராலும் தாங்கள் கொடுமைப்படுத்தப்பட்டதை மனித உரிமை ஆணையத்திடம் சாட்சியம் அளித்தனர். ஆனால் ஆணையமோ, தனது அறிக்கையில் எவர் மீதும் குற்றம் சாட்டவில்லை. "நந்தினி சுந்தர்' எனும் மானுடவியல் ஆய்வாளர் 2005இல் இருந்து சல்வாஜுடும் செய்து வரும் அட்டூழியங்களைப் பட்டியலிட்டு, மய்ய நீரோட்ட பத்திரிகைகளின் வெளியீட்டாளர்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் பலருக்கும் விரிவான அறிக்கைகள் அனுப்பினார். ஆனால், அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. வன உரிமைகள், நில உரிமைகள், விவசாயத்துறை மேம்பாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு, சுரண்டல், பட்டினி, குழந்தைத் தொழிலாளர்கள், இடப்பெயர்வு, மறுவாழ்வுத் திட்டங்கள், குடிநீர் தட்டுப்பாடு, உத்தரவாதமற்ற இருப்பு என பழங்குடி இன மக்களின் வாழ்க்கை குறித்துப் பேச மறுக்கும் மய்ய நீரோட்ட ஊடகங்களும் அரசுத் துறைகளும் "மாவோயிஸ்டுகளின் வன்முறை' என்ற ஒற்றைப் பிரச்சாரத்தை மட்டுமே செய்து வருகின்றனர்.

சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்திலிருந்து உள்நாட்டு அகதிகளாக ஆந்திரப் பிரதேச எல்லைக்குள் 16,000 த்திற்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஒருவேளை உணவுக்கும் வழியற்ற நிலையில் இவர்கள் வறண்ட ஆற்றுப்படுகைகளில் தேங்கிக் கிடக்கும் அசுத்தமான தண்ணீரை நெடுந்தொலைவு நடந்து சென்று கொண்டு வந்து குடிக்கின்றனர். இதன் விளைவாக மலேரியா, தோல் நோய்கள், மற்றும் இனம் தெரியாத நோய்களாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த மே மாதத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் நாம் அனர்த்திக் கொண்டிருந்தபோது, கிழிந்த மேற்கூரைகளும், உடைந்த தடுப்புச் சுவர்களுமாக இருந்த அம்மக்களின் முகாம்கள் அமைந்திருக்கும் நிலப்பகுதியின் வெப்பநிலை 1170 பாரன்ஹீட் ஆக இருந்தது. இனி மழைக்காலம் வரும் போது, நிலைமை இதைவிட மோசமானதாகவே இருக்கும். வனத்துறையினரோ இவர்களை இக்காடுகளிலிருந்தும் விரட்டியடிக்கவே முயன்று வருகின்றனர். “அவர்களின் குடியிருப்புகளை நாங்கள் இதுவரை ஏழு, எட்டு முறைகளாவது உடைத்து சேதப்படுத்தி இருக்கிறோம். ஆனாலும் அவர்கள் இவ்விடத்திலிருந்து திரும்பிப் போக மறுக்கிறார்கள்'' என்கிறார் சபியுல்லா என்கிற மாவட்ட வனத்துறை அதிகாரி ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' சூன் 27, 2010).

"நாங்கள் எங்கே போவது? எங்களால் திரும்பிப் போக முடியாது!' என நிர்கதியாய் தவிக்கின்றனர் இம்மக்கள். இதே பகுதியில் வாழும் சிறு உடைமையாளர்களின் நிலங்களில் மிளகாய் பறிப்பது போன்ற வேலைகளுக்கு உள்ளூர் கூலியை விடக் குறைவான கூலிக்கு இவர்கள் செல்கின்றனர். கோத்திகோயா, முறியா போன்ற இப்பழங்குடி மக்களை பழங்குடியல்லாத பிற உள்ளூர் சமூகத்தினரே இப்படியாகச் சுரண்டுகின்றனர். "தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் சில கோத்திகோயாக்களுக்கு நாளொன்றுக்கு 100 ரூபாய் ஊதியத்தில் பணி ஏற்பாடு செய்த போதும், அவர்கள் உள்ளூர் சமூகத்தினரிடம் 50 ரூபாய் கூலிக்கே செல்கின்றனர், என இத்திட்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். ஆனால் இவர்கள் அம்மக்களுக்குத் தர விரும்பும் வேலை என்னவென்றால், அக்காட்டிலுள்ள மரங்களை வெட்டுவதுதான். "நாங்கள் இதைச் செய்தால் வேறு எங்கு போய் வசிப்பது?' என்கிறார் ஒரு முறியா பழங்குடி. தங்கள் வாழ்விடமாகவும் வாழ்க்கையாகவும் இருக்கும் வனத்தை அழிய விடாமல் காப்பதற்காகத்தானே பழங்குடியின மக்களின் இப்போராட்டமே என்பதை, அந்த வனத்துறை அதிகாரிக்கும் அரசு எந்திரத்திற்கும் வேறு எங்ஙனம் உணர்த்துவது?

“ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளத்தின் பின்தங்கிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த அரசுகள் தவறிவிட்டதால்தான், மாவோயிசமும் வன்முறையும் பழங்குடிப் பகுதிகளில் வளர்ந்துள்ளன. மேலும், மதங்கள் மற்றும் மதத் தலைவர்களின் தலையீடும் நடவடிக்கைகளும் இல்லாமல் போனதும் ஒரு முக்கியக் காரணம். காஞ்சி காமகோடி பீடம் பள்ளிகள் மற்றும் தொழிற் பயிற்சி மய்யங்களை இப்பகுதியில் நிறுவி, பழங்குடி மக்களிடம் பல்வேறு வேலைத் திறன்களையும் தகுதிகளையும் வளர்த்தெடுக்க முன்முயற்சி எடுக்கும். மதத் தலைவர்கள் குறிப்பாக, இந்து மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்கள் தங்களிடம் உள்ள அரசியல் விருப்பு வெறுப்புகளைக் களைந்து, அம்மக்களிடம் ஆன்மிகப் போதனைகளைக் கொண்டு செல்ல வேண்டும். சமூக அமைப்பின் மதிப்பீடுகளையும், வாழ்வின் அர்த்தங்களையும் புரிந்து கொண்டால், சமூகத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதற்கு இந்துவாகவோ, முஸ்லிமாகவோ அல்லாமல் இந்தியர்களாக மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் சமூக நல்லிணக்கமும் அமைதியும் நாட்டில் நிலவும்'' என திருவாய் மலர்ந்தருளியுள்ளார் காஞ்சி சங்கராச்சாரி ("தி இந்து', சூன் 29, 2010).

ஒரிசாவின் பழங்குடி மக்களிடையே மருத்துவப் பணி செய்து வந்த கிறித்துவப் பாதிரியார் குடும்பத்தை தீயிட்டுக் கொளுத்தியும், கிறித்துவப் பெண் துறவிகளைப் பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்கியும் கிறித்துவ மத நம்பிக்கை சார்ந்த பழங்குடி மக்களின் கிராமங்களைத் தீக்கிரையாக்கி, பலரையும் படுகொலை புரிந்த, இந்து மத ஆன்மிகவாதிகள் மற்றும் தலைவர்கள் தங்கள் நடவடிக்கைகளை சட்டீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்கிறாரா சங்கராச்சாரி? சமூக நல்லிணக்கமும் அமைதியும் மாவோயிஸ்டுகளால் அல்ல, இவர் குறிப்பிடும் மதத் தலைவர்களாலும், ஆன்மிக நடவடிக்கைகளாலும்தான் பலநூறு ஆண்டுகளாக சீர்குலைந்து போயுள்ளன என்பதைக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, சிறையிலிருந்த காஞ்சி சங்கராச்சாரி அறியாதவரல்ல. அரசின் வளர்ச்சித் திட்டங்கள், தனது மடத்தின் வழியே முன்னெடுக்க விரும்பும் நலத்திட்டங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடும் சங்கராச்சாரி, பழங்குடியின மக்களைக் கொன்று குவிக்கத் திட்டமிடும் அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்தும், ராணுவத் துருப்புகளின் வன்முறை வெறியாட்டங்கள் குறித்தும் பேச முன்வருவாரா?

சனாதன சங்கராச்சாரி போன்றவர்களே இப்படி மென்மையான குரலில் பேசிக் கொண்டிருக்கும்போது, பாட்டாளி வர்க்கத்தின் காவலனாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் முன்னணித் தலைவருமான சீத்தாராம் எச்சூரி போன்றவர்களோ, "மாவோயிஸ்டு வேட்டைக்கு விமானங்களைப் பயன்படுத்த வேண்டும்' என கூக்குரலிடுகின்றனர். அண்மையில் நடந்து முடிந்து போன மேற்கு வங்க உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சி மூன்றில் இரண்டு பங்கு செல்வாக்கை இழந்து நிற்கிறது. சிங்கூர், லால்கர் என மக்கள் போராட்டங்களில் எதிர்நிலை எடுத்து, தாம் முன்வைக்கும் சோசலிச அரசியல் லட்சியத்திற்காகப் போராடி வரும் கம்யூனிஸ்ட் கட்சியாக இருப்பினும் - மாவோயிஸ்டுகளுக்கு எதிராக முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துடன் கைகோர்த்து நிற்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. இடதுசாரித் தலைமை பார்ப்பனமயமானால், உழைக்கும் மக்களைக் காட்டித் தரும் என்பதற்கு வரலாற்றில் இன்னுமொரு எடுத்துக்காட்டாக அம்பலப்பட்டுப் போயுள்ளது இக்கட்சி! தலித் மற்றும் பழங்குடி மக்களின் சமூக அடித்தளத்தை அரசியல் தலைமைப் பாத்திரமாக உயர்த்த முன்வராத கம்யூனிசப் போலிகளாக, இத்தகைய சோசலிச வேடதாரிகள் தம் செல்வாக்கை இழந்து நிற்கின்றனர்.

“99 சதவிகித பழங்குடிகள் மாவோயிஸ்டுகள் அல்லர்; ஆனால் 99 சதவிகித மாவோயிஸ்டுகள் பழங்குடிகளே'' என அருந்ததிராய் தெளிவுபடுத்துகிறார். கடந்த 4.6.2010 அன்று "உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு' சென்னையில் ஏற்பாடு செய்திருந்த பசுமை வேட்டைக்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் உரையாற்றும்போது, “போராடும் மக்களுக்கு ஆதரவாகத்தான் நிற்கிறேன்; பேசுகிறேன் என்பதை "நான் ஒரு மாவோயிஸ்டுதான்' என்பதாக ஊடகங்கள் செய்தியைத் திரித்து வெளியிடுகின்றன. சிறை செல்வதற்கு அஞ்சி இதை நான் மறுக்கவில்லை. ஒரு எழுத்தாளர் என்ற முறையில் எனக்கு எதையும் கேள்வி கேட்க உரிமை இருப்பதாகவே நம்புகிறேன்'' என தயக்கமின்றி குறிப்பிட்டார் அருந்ததிராய்.

மேலும் அவர், “நடுத்தர வர்க்கமும் மேல்தட்டு வர்க்கமும்தான் இந்த அரசுகளின் அனைத்துக் கயமைத்தனங்களுக்கும் முட்டுக் கொடுப்பவையாக இருக்கின்றன'' என்றும் சாடினார். நுகர்வு வெறி, தன்னலம், பேராசை, பண்பாட்டுச் சீரழிவு, போலிப் பெருமிதம் ஆகிய எதிர்மறைக் குணநலன்களை உயர்த்திப் பிடிக்கும் நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்க மனிதாபிமானிகளின் உளவியல் பாத்திரமாக, தத்துவப் பண்டமாகத்தான் நாடாளுமன்றவாத இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிகள் உருமாறி இருக்கின்றன. சங்கராச்சாரிகளின் மனிதாபிமானமும், பார்ப்பனிய கம்யூனிசப் போலிகளின் மனிதாபிமானமும் - இத்தகைய நடுத்தர வர்க்க ஊசலாட்டத்தின் மயிரிழையில்தான் ஊடாடி நிற்கின்றன. அது மட்டுமல்ல, சில நேரங்களில் அவை ஒரே புள்ளியில் குவிந்தும் விடுகின்றன.


நன்றி : ஆசிரியர் இளம்பரிதி, தலித் முரசு இதழ் மற்றும் கீற்று இணையதளம்

பசுமை வேட்டை என்கிற பயங்கரவாதம்-I

நக்சல்பாரி... ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் "வசந்தத்தின் இடிமுழக்கம்' என புகழப்பட்ட மேற்கு வங்கத்தின் சிறு கிராமம் ஒன்றின் தீப்பொறி, இன்று இந்தியாவின் செழிப்பான கனிம வளங்கள் நிறைந்த சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா, மேற்கு வங்கம், மகாராட்டிரம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களின் 60,000 சதுர கி.மீ. பகுதிகளை உள்ளடக்கிய "தண்டகாரண்ய' எனும் நிலப்பகுதியில் பிழம்பாக எரிந்து கொண்டிருக்கிறது. இப்பிழம்புதான் "சிவப்பு பயங்கரவாதம்' எனும் அடைமொழியாக, இந்திய ஊடகங்களில் கவனம் தவறாமல் பிரச்சாரம் செய்யப்பட்டும் வருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அய்ரோப்பிய முதலாளிகள் "கம்யூனிச பூதம்' என மக்களிடம் அச்ச உணர்வூட்டும் எண்ணத்துடன் செய்த பிரச்சாரத்திற்கு ஒப்பானது இது.


அனைத்து ஆளும் வர்க்கங்களும் அரசுகளும் தாம் மேற்கொள்ளும் எந்தவொரு பயங்கரமான அல்லது கடுமையான அல்லது கொடூரமான நடவடிக்கையையும் நாட்டின் வளர்ச்சி – பாதுகாப்பு – இறையாண்மை என்ற சொற்களின் திரைகளுக்குப் பின்னே நியாயப்படுத்தி விடுகின்றனர். இந்துத்துவ அரசியலுக்கு "இஸ்லாமிய பயங்கரவாதம்' எனில், முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு "சிவப்பு பயங்கரவாதம்.' அனைத்துப் போராட்டங்களும் இங்கே வரையறுக்கப்பட்ட சொற்களில்தான் அளவிடப்படுகின்றன. தீவிரவாதம் முதல் எல்லை தாண்டிய பயங்கரவாதம் வரை, புதிய அடைமொழிகளை காலத்திற்கேற்ப ஆளும் வர்க்கங்களும், அரசுகளும் உற்பத்தி செய்து வருகின்றன. இச்சொற்களையும், இவற்றிற்குப் பின்னான எச்சரிக்கையையும் சூழலுக்கேற்ப அச்சமூட்டும் தொனிகளில், கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு சேர்ப்பதில் இந்திய பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களின் பங்களிப்பே முதன்மையாகும்.

அவ்வகையில் நாட்டு மக்களுக்கு அரசுத் தலைவர் விடுக்கும் முக்கிய செய்தியாக, "உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்' என்கிற பிரதமர் மன்மோகன் சிங்கின் எச்சரிக்கை, மீண்டும் மீண்டும் ஊடகங்களை நிறைக்கிறது. துப்பாக்கிகளோடும், சீருடைகளில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபடுவது போலவுமான குடிமக்களின் ஒரு பகுதியினர், இச்செய்திகளின் பின்னணிக் காட்சிகளில் தவறாது இடம் பெற்று விடுகின்றனர். எவ்வெப்பொழுதும் பாதுகாப்பு மனநிலையைத் தேடும் சாமானிய மக்களின் உணர்வுகளை உறைய வைக்க இக்காட்சிகள் முயல்கின்றன.

ஆனால் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சிலவும், வணிகத் திரைப்படங்கள் பலவும், சில உண்மைச் சம்பவங்களும் இதைவிட மேலான உறைய வைக்கும் காட்சிகளை நாள்தோறும் வழங்கிக் கொண்டிருப்பதால், "சிவப்பு பயங்கரவாத' காட்சிகள் எந்த அளவு உதவப் போகின்றன எனத் தெரியவில்லை. ஆனாலும் திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய்கள், மெய்களாக நிலைப் பெற்று விடும் வழக்கமான ஆபத்து இருப்பதால், சாமானிய மக்களின் உணர்வுகளுக்கு விழிப்பூட்ட, "உறைய வைக்கும் உண்மைகளை'த் தேடி கண்டடைவதும் "எதிர்'ப் பிரச்சாரம் செய்வதும் நம்முன் நிற்கும் கடமையாகிறது.

ஆந்திராவை மய்யமாகக் கொண்டு இயங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) (மக்கள் யுத்தம்)யும், பீகாரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட மாவோயிச கம்யூனிச மய்யம் என்ற கட்சியும், செப்டம்பர் 21, 2004இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என ஒரே கட்சியாக இணைந்து செயல்படப் போவதாக அறிவித்தன. அன்றைய நாளிலிருந்துதான் சிவப்பு "பயங்கரவாதப் பேரபாயம்' உரத்து ஒலிக்கத் தொடங்கியது. "ரெட் காரிடார்' என தண்டகாரண்யா அழைக்கப்படுவதற்கான அரசியல், பொருளாதார மற்றும் சமூகக் காரணிகளை ஆராய்ந்தால், இந்திய அரசும் ஆதரவு ஊடகங்களும் எழுப்பும் பயங்கரவாத கூக்குரல், ஒரு ராணுவ முழக்கம் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளலாம். மிகவும் குறிப்பாக, சட்டீஸ்கர் – ஜார்க்கண்ட் – ஒரிசா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தண்டகாரண்ய வனப் பகுதிகளில் பன்னாட்டு நிறுவனங்களோடு, இந்திய அரசும் தரகு முதலாளிகளும் செய்து கொண்டிருக்கும் சுமார் 25 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MOக்) இம்முழக்கத்தின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கின்றன.

அலுமினியம், பாக்சைட், நிலக்கரி, மாங்கனீஷ், சிலிகா, குவார்ட்சைட், புளோடைட், கிரானைட், இரும்புத் தாது மற்றும் தங்கம், வைரம் உள்ளிட்ட கனிம வளங்களின் சுரங்கங்களாக தண்டகாரண்ய வனப்பகுதி இருக்கிறது. நாட்டின் அய்ந்தில் ஒரு பகுதி இரும்புத் தாதுக்கள் இப்பகுதியில்தான் படிந்துள்ளன. 3500 கோடி டன் நிலக்கரியும், 234 கோடி டன் இரும்புத் தாதும், 3550 மில்லியன் டன் சுண்ணாம்புக் கல்லும், 60 கோடி டன் டாலமைட்டும், 9.5 கோடி டன் பாக்சைட்டும் காணக் கிடைப்பதாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. 1960களிலேயே சட்டீஸ்கரின் பைடில்லா மலைத் தொடரில் இரும்புத் தாதுக்கள் கிடைப்பது கண்டறியப்பட்டு, ஜப்பானிய இரும்பு ஆலைகளுடன், அப்போதே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பொருளைப் "புரிந்து' கொள்வதற்கான கல்வி மற்றும் அரசியல் அறிவை அப்போது நாம் பெற்றிருக்கவில்லை.

1990 களிலேயே மத்திய இந்தியாவின் இப்பகுதியை உலக வங்கி, அந்நிய முதலீடுகளுக்கான வாய்ப்பான பகுதியாக சுட்டிக் காட்டியுள்ளது. உலக வங்கியின் முன்னாள் அதிகாரியான மன்மோகன் சிங், “பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளைக் கொண்டு வருவதில் பெரும் பின்னடைவு ஏற்படும்'' என "தண்டகாரண்ய பயங்கரவாதத்தை' சுட்டிக்காட்டி, நாள்தோறும் ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிக் கொண்டிருப்பதும் இதனால்தான்.

சுரங்கங்கள், மின் உற்பத்தி திட்டங்கள், அலுமினிய சுத்திகரிப்பு ஆலைகள், எக்கு உருக்காலைகள் போன்றவற்றிற்காக, டாடா, எஸ்ஸார், ஜிண்டால், வேதாந்தா மட்டுமல்ல, இன்னும் பல வெளிநாட்டு நிறுவனங்களோடும் இந்திய அரசு பல்வேறு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டுள்ளது. நிதி அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் வேதாந்தா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருந்த ப. சிதம்பரம், உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதும்கூட, "சிவப்பு பயங்கரவாத'த்தை இந்நிறுவனங்களுக்கான அக்கறையுடன் கையாள்வதற்குத்தானே ஒழிய, வேறல்ல. பிரதமர் மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் கடந்த காலங்களில் உலக வங்கி, உலக வர்த்தக மய்யம் மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசகர்களாகப் பணியாற்றினர் என்பதும், இந்திய அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்புகளைக் கைப்பற்றி, இந்நிறுவனங்களின் நேரடி முகவர்களாக "சட்டபூர்வமாக'ச் செயல்பட்டு வருகின்றனர் என்பதும் "படித்த' அறிவாளிகள் அனைவரும் அறிந்த உண்மையே. திருடர் கைகளில் திறவுகோல்கள் என்றே இந்த அரசியல் – பொருளாதார பின்புலத்தின் அதிகார மய்யத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் குறை சொல்லிக் கொண்டிருந்தால், நாட்டின் முன்னேற்றம் – தொழில் வளர்ச்சி – அந்நியச் செலாவணி ஆகியவற்றில் எதை இட்டு நிரப்புவது? என்ற மேலோட்டமான கேள்வி தொக்கி நிற்கிறது. யாருக்காக – எதற்காக? எவற்றை – யாரை? அழித்து இத்தகைய முன்னேற்றமும், வளர்ச்சியும், செலாவணியும் கிடைக்க வேண்டும்? என்ற எதிர்க்கேள்வி தொடுத்தால் மட்டுமே, "சிவப்பு பயங்கரவாதம்' எனும் சூழலைப் புரிந்து கொள்ள முடியும். மேலும் உண்மைகளைத் தேடி தண்டகாரண்ய காட்டுப் பகுதிக்குள் பயணிக்கவும் வேண்டும். அப்படிப் பயணித்தவர்களின் சாட்சியங்களோடுதான் இந்த எதிர்ப் பிரச்சாரமும், எதிர்க் கேள்வியும் – இக்கட்டுரையின் அடிப்படைகளாக இங்கு முன்வைக்கப்படுகின்றன. மிகச் சமீபத்தில் தண்டகாரண்ய காட்டுப் பகுதிக்குள் பயணம் செய்து, தனது அனுபவங்களை "அவுட்லுக்' வார இதழில் நீண்ட கட்டுரையொன்றில் பதிவு செய்திருந்தார், புகழ் பெற்ற எழுத்தாளரும் "புக்கர்' விருது பெற்றவருமான அருந்ததிராய்.

கனிம வளங்களை தன்னுள் புதைத்திருக்கும் தண்டகாரண்யா ஆளரவமற்ற காட்டுப் பகுதி அல்ல. சந்தால், கோல், முண்டா, கோண்டு, ஓரான் என இன்னும் சில பழங்குடி மக்களின் பன்னெடுங்கால வரலாற்றுத் தாயகம் அது. இயற்கை வாழ்வாதாரங்களோடும், தனித்த பண்பாட்டுக் கூறுகளோடும் வாழ்ந்து வரும் அம்மக்கள் மிகச் சரியாகச் சொல்வதெனில், ஆங்கிலேய காலனி ஆதிக்கம் இந்திய நிலப் பகுதியெங்கும் வளங்களைச் சூறையாட பயணப்பட்டபோதுதான், முதன் முதலில் அந்நியரின் தொல்லைகளுக்கு ஆளாயினர். அன்று தொடங்கிய தொந்தரவுகள் பன்னாட்டு நிறுவனங்களின் வடிவில், இன்று அம்மக்கள் மீதான போர் எனும் உருவிலும் வளர்ந்துள்ளன. “தண்டகாரண்ய காடுகளில் நடப்பது உள்நாட்டுப் போர். மலையின் வளங்களைப் பெருமுதலாளிகளின் காலடியில் சமர்ப்பிக்க, இந்திய அரசு தொடுத்திருக்கும் போர் இது'' என குற்றம் சுமத்துகிறார் அருந்ததிராய்.

உண்மையில் எல்லோரும் எண்ணிக் கொண்டிருப்பது போல, மாவோயிஸ்டுகள் இக்காடுகளுக்குள் நுழைந்த பிறகு நடைபெறத் தொடங்கிய போர் அல்ல இது. காடும், காட்டின் வளங்களும், இயற்கை வாழ்வாதாரங்களும் தமது பாரம்பரிய உரிமைகள் என வழிபட்டுக் கொண்டிருந்த பழங்குடி இன மக்கள், அக்காடுகளுக்குள் அந்நியர் நுழைந்து ஆக்கிரமிக்க முயன்றபோதெல்லாம் கலகங்களைப் புரிந்துள்ளனர். 1774 முதல் 1779 வரை ஆங்கிலேயரையும், மராட்டியர்களையும் எதிர்த்து பழங்குடியினர் நடத்திய போராட்டம் "ஹல்பா கலகம்' என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1825இல் "பரால்கோட் கலகம்', 1842 முதல் 1863 வரை பஸ்தார் பகுதிகளில் நடைபெற்ற கலகங்கள், 1876இல் ஜகல்பூரில் வெடித்தெழுந்த "முறியா கலகம்,' 1930களில் வட ஆந்திராவில் நடைபெற்ற "ராம்பா கலகம்' என, தமது மரபு வழிப்பட்ட வில் – அம்பு ஆயுதங்களைக் கொண்டு மட்டுமே, இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, தங்களின் இருப்பைக் காத்துக் கொள்ள பழங்குடியினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆங்கிலேயரின் துப்பாக்கி, பீரங்கிகளுக்கு முன், மரபு வழிப்பட்ட வில் – அம்பு ஆயுதங்கள் வெல்ல முடியாது போனாலும், பழங்குடிகள் ஒருபோதும் மண்டியிடவில்லை. பல தலைமுறைகளாக நிகழ்ந்து வரும் பழங்குடியின மக்களின் இப்போராட்டங்களோடு மாவோயிஸ்டுகள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என்று சொன்னாலும், அது மிகையல்ல.

கனிம வளங்களுக்காகவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் காட்டிலிருந்து அப்புறப்படுத்தப்படும் அல்லது விரட்டியடிக்கப்படும் கேட்பாரற்ற நிலைமையை எதிர்கொண்டு வாழ்ந்த பழங்குடியின மக்கள், வரலாற்றுப் போக்கில் தமக்கு ஆதரவளிக்க முன் வந்த நக்சல்பாரிகளோடு கரம் இணைத்துக் கொண்டது, ஆச்சரியத்திற்குரியதொன்றுமல்ல. இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்காக ஏறத்தாழ இரண்டரை கோடி மக்கள் தம் வாழ்விடங்களிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டுள்ளனர். இதில் சரிபாதி மக்கள் பழங்குடியினத்தவரே. வாழ்விடங்களை இழந்த பல்வேறு பழங்குடி இன மக்கள், நாட்டின் பல பகுதிகளிலும் நாடோடிகளாகத்தான் வாழ நேர்ந்திருக்கிறது. தமிழகத்தில் குறவர், பளியர், காட்டு நாயக்கர் போன்றோர் சில எடுத்துக்காட்டுகள்.

வெளியுலகையும் அதன் ஆரவாரங்களையும் அறியாத, நுகராத பழங்குடி மக்களுக்கு ஆதியும் அந்தமும் அவர்களின் வனமே. “காடு அவர்களின் கடவுள்; உங்களின் கடவுளை நீங்கள் விற்பனை செய்வீர்களா?'' என இதையே அம்மக்களின் மொழியில் கேட்கிறார் அருந்ததிராய். புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் தமது வாழ்விடங்கள் விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என அறிந்து துடிக்கும் பழங்குடியின மக்களுக்குத் தெரிய நியாயமில்லை – "கடவுளை விட நல்ல விலைக்கு வர்த்தகமயமாகிக் கொண்டிருக்கும் பண்டம்' காடுகளுக்கு வெளியே வேறொன்றும் இல்லை என்பது. நவநாகரிக உலகில் அனைத்திற்கும் விலை ஒட்டப்பட்டிருக்கிறது. மனிதர்களில் சிலருக்கு முகத்திலும், பலருக்கு முதுகிலும்.

"விலை மதிப்பற்றது' என தாம் கொண்டாடும் காடு, மலை, நீருற்றுகள், அருவிகள், அபூர்வ மூலிகைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தம் வாழ்விடங்களுக்கான பழங்குடியினரின் போராட்டங்கள், அவர்களுக்கானது மட்டுமல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களின் விளைவாக, இந்தியாவின் இதயப் பகுதியில் இயற்கை கொடையளித்திருக்கும் காட்டு வளங்கள் முற்றாக அழிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. எடுத்துக்காட்டாக, ராக்கட் எனுமிடத்தில் தோண்டப்படவிருக்கும் சுரங்கத்திற்காக 3,278 ஹெக்டேர் காட்டு நிலங்கள் அழிக்கப்படும் வாய்ப்புள்ளது. இந்திராவதி நதியின் மீது கட்டப்பட இருக்கும் நீர்மின் திட்டம் பல கிராமங்களை அழிப்பதோடு, காட்டின் புவியியல் தகவமைப்பையும் சீர்குலைக்கவே செய்யும்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் 13,750 ஹெக்டேர் காட்டு நிலம் அழியும் ஆபத்திலிருக்கிறது. ஒருபுறம் வறட்சியும், மறுபுறம் வெள்ளப் பெருக்குமாக ஒவ்வோர் ஆண்டும் நிகழ்ந்து வரும் பருவகால மாற்றங்கள், இயற்கைப் பேரழிவுகள் ஆகியன, இத்தகைய சூழலியல் தகவமைப்பின் சீர்குலைவை நிரூபித்துள்ளன. இன்னும் வெளியிடப்படாத "வளர்ச்சி'த் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படுமெனில், உலகின் அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்றையும் இந்திய சமூகம் இழக்க நேரிடும். எத்தனை லட்சம் கோடியானாலும், இக்கனிம வளங்களைவிட மதிப்பும் உயிர்ப்பும் கொண்டவை இக்காடுகளும் மலைகளும். ஆரோக்கியத்துடனிருக்கும் ஒரு மனிதனை உயிருடன் அறுத்து, அவனது உள் உறுப்புகளை இன்னொருவருக்குத் தாரை வார்ப்பதற்கு ஒப்பான, இவ் ஒப்பந்தங்களை ஆதரிக்கும் எவரும் பச்சை மாமிசம் உண்ணும் வெறி கொண்டவர்கள் என்பதைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.

பழங்குடி மக்களை பிற்போக்குவாதிகள், நாகரிகம் அறியாதவர்கள், அறிவியல் வளர்ச்சி புரியாதவர்கள் என்றெல்லாம் முதலாளிய வளர்ச்சியில் மாய்ந்து போகும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் எள்ளி நகையாடுகின்றனர். நந்திகிராம், சிங்கூர், காஷிபூர், கலிங்கா நகர், லால்கர், தெஹ்ரி, நர்மதா என ஊடகங்களில் அலசப்படும் இப்பெயர்களுக்குப் பின்னே இருப்பது – கார் தொழிற்சாலைகள், அணைகள், சுரங்கங்கள், நீர் மின் திட்டங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றை அமைப்பதற்காகத் தேர்வு செய்யப்படும் விளை நிலங்களும், குடி பெயர்க்கப்படும் பாரம்பரிய மக்களும் என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.

விவசாயம் இன்றைய நாளில் மூன்றாம் தர தொழிலாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் திட்டமிட்டே தரிசாக்கப்படுகின்றன. ஏழை விவசாயிகள் பட்டினிச் சாவிற்கு முன்பே தற்கொலை செய்து கொள்கின்றனர். கான்கிரீட் காடுகளாக, தானியங்கள் செழித்த பல்லாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இன்று உருமாறிக் கொண்டு வருகின்றன. விவசாயத்திற்கு மின்சாரம் போதவில்லை; விளை நிலங்களுக்கான நீராதாரங்கள் ஒழுங்கமைக்கப்படவில்லை. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்காக புதிய மின் திட்டங்களும், மிஞ்சியிருக்கும் நீர் வளங்களும் திருப்பப்படுகின்றன. தம் குடும்பத்தினரோடு, கிரிக்கெட் போட்டிகளின் உல்லாசத்திலும் ஊழலிலும் திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெருச்சாளி, இந்திய அரசின் விவசாயத் துறை அமைச்சர்.


இந்த வெட்கக் கேடுகளுக்குப் பெயர்தான் நாட்டின் முன்னேற்றமா?

மதவாதத்தைவிட, காங்கிரஸ் கட்சியின் ஊழல் ஆபத்தானதல்ல என்று இலக்கணம் சொன்ன மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநில செயலாளர் பிமன் போஸ், “சிங்கூரிலோ, லால்கரிலோ மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் பழங்குடிகள் பின்தங்கியேதான் இருக்கின்றனர். மேலும், மய்ய நீரோட்ட வாழ்நிலைக்கு வர அவர்கள் விரும்புவதுமில்லை'' ("தெகல்கா' நேர்காணல், 4, சூலை 2009) என்கிறார். காட்டின் வளங்களை நகரங்களுக்குக் கொண்டு சேர்க்க, சாலைகள், இருப்புப் பாதைகள், பாலங்கள், மின் கம்பங்கள் போன்றவற்றை உருவாக்கிய அரசாங்கம், அக்காடுகளுக்குள் வாழும் மக்களுக்கு குடிநீர், மின்சாரம், கல்விக் கூடங்கள், சுகாதார மய்யங்கள் போன்ற அடிப்படைத் தேவைகளைக்கூட செய்து தர முன்வரவில்லை.

எடுத்துக்காட்டாக, 2001 ஆம் ஆண்டில் மாட் மண்டலத்திலுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உழவர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கல்வியும், மருத்துவ வசதிகளும் கேட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். அதே ஆண்டில் தெற்கு மற்றும் மேற்கு பஸ்தார் மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் கல்விக்கான போதிய வாய்ப்புகளையும், வசதிகளையும் கேட்டுப் போராடினர். சால், தேக்கு, மூங்கில் போன்ற காடுகளின் லாபம் கொழிக்கும் மரங்களை வன நிர்வாக அதிகாரிகளின் துணையோடு ஒப்பந்தக்காரர்களும், கடத்தல்காரர்களும் அழித்து கொள்ளையிட்டுக் கொண்டிருந்த காலங்களில், காடுகளில் விளையும் தானியங்கள், விதைகள், உணவுப் பொருட்களை சேகரித்து சந்தைகளில் மிகக் குறைந்த விலைக்கு விற்றும், பீடி இலை ஒப்பந்தக்காரர்களின் சுரண்டலுக்கு உழைத்தும், தம் பட்டினியைக் கழுவிக் கொண்டிருந்தனர் பழங்குடியின மக்கள். 2002 ஆம் ஆண்டு, இந்நிலப் பகுதியில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டு போனதை நவநாகரிக உலகம் கண்டு கொள்ளாமலே இருந்தது.

"ஜங்கல்நாமா : மாவோயிஸ்ட் கெரில்லா மண்டலத்தில் ஒரு பயணம்' எனும் நூல் "பெங்குயின்' வெளியீடாக வந்திருக்கிறது. இந்நூலின் ஆசிரியரான எழுத்தாளரும் களப்பணியாளருமான சத்னம் 2001இல் சட்டீஸ்கரின் பஸ்தார் பகுதியில் மாவோயிஸ்டுகளோடு தங்கியிருந்த தன் அனுபவங்களை இதில் பதிவு செய்திருக்கிறார். “பஸ்தார் பகுதியில் பிலாய் உருக்காலையிலிருந்து, இரும்புத் தாது அதிகம் வெட்டியெடுக்கப்படும் 3 கி.மீ. தொலைவில் கூட, அப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு தமது பாரம்பரிய வில் அம்புகளுக்குத் தேவையான பயன் என்ற அளவில்தான் இரும்பின் பயன்பாடு இருக்கிறது.

பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல், அம்மக்களின் வாழ்க்கைத் தரம் கீழ் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் வாழ்விடங்களில் வெட்டியெடுக்கப்படும் கனிம வளங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில், அம்மக்களின் முன்னேற்றம் என எதுவும் இல்லை. நந்திகிராமில் நிராயுதபாணியான மக்களிடமிருந்து நிலங்கள் பலவந்தமாகப் பிடுங்கப்பட்டதை, அதற்காக அவர்கள் கொல்லப்பட்டதை நாம் வெளிப்படையாகவே பார்க்கவில்லையா?'' என உரிமையாளர்களாக இருந்தவர்களுக்கும், பயனாளிகளாக மாறியவர்களுக்குமான இடைவெளியைச் சுட்டிக் காட்டுகிறார்.

மேலும், “90 சதவிகித பஸ்தார் பழங்குடிகள் நிலமற்றவர்கள். அவர்களை நில உரிமையாளர்களாக மாவோயிஸ்டுகள் மாற்றுகின்றனர். நிலச் சீர்திருத்தங்கள் முறையாக, முழுமையாகச் செய்யப்படாத நிலையில், மாவோயிஸ்டுகள் நிலமற்ற மக்களின் விருப்பங்களை நிறைவு செய்பவர்களாக இருக்கிறார்கள். நமது அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன், சிறந்த அரசாங்கத்தை உருவாக்கப் போவதாக வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்ததும், அமெரிக்க அல்லது மேற்கத்திய அரசு முறையியலைப் பின்பற்றுகிறார்கள். இவர்களின் அரசு நிர்வாகம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறதா? தனியார் நிறுவனங்களைக் கண்காணிக்கிறதா?''

“நாடு சுதந்திரமடைந்து 62 ஆண்டுகளுக்குப் பிறகும் ஏழை மக்கள் மேலும் வறியவர்களாகவே ஆக்கப்பட்டுள்ளனர். சுதந்திரத்திற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த, எனது வாழ்க்கை அனுபவத்தில், நமது நாட்டிலிருந்து அரசியல் ஜனநாயகம் வெளியேறி விட்டது என்றே நான் எண்ணுகிறேன். ஒரு நாடு மக்களால்தான் கட்டமைக்கப்பட வேண்டுமே ஒழிய, அரசாங்கத்தால் அல்ல. பசுமை வேட்டை நடைபெறும் இச்சூழலில் மாவோயிஸ்டுகள் சரியான பாதையிலேயே செல்கின்றனர் என நான் நம்புகிறேன். அவர்கள் புதிய சமூக அமைப்பிற்காகப் போராடி வருகின்றனர். இதைத் தவிர வேறு தீர்வும் இல்லை'' என உறுதியாகக் கூறுகிறார்.

ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், மத்திய கிழக்குப் பகுதிகள் என இந்தியத் துணைக்கண்ட நிலப்பரப்பு, வன்முறைப் போராட்டங்களின் உலைக்களமாகத் தொடர்ந்து இருந்து வருவதை, அடிப்படையில் இந்திய ஆளும் வர்க்கம் விரும்புகிறது என்றே குற்றம் சுமத்த இடமுள்ளது. "ஜிகாத் பயங்கரவாதம்' என்ற பெயரில் ஜம்மு காஷ்மீரில் மக்களும், போராட்டக் குழுக்களுமாக இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ராணுவம் மற்றும் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். "பிரிவினைவாத தீவிரவாதம்' என்ற பெயரில் வடகிழக்கு மாநிலங்களில் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களும் மக்களுமாக பல பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


மத்திய கிழக்கு மாநிலங்களிலோ, பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, "சிவப்பு பயங்கரவாதம்' எனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் தொடர்ச்சியான இத்தகைய அணுகுமுறையால், பழங்குடியின மக்கள் மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு மக்கள் பிரிவினரும் ஆயுதம் தாங்கிய போராட்டப் பாதையை நோக்கியே பயணப்பட நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது கவலை தரும் சூழல் என்பதைவிட, மய்ய நீரோட்ட அரசியல் வழியே மக்களை ஒடுக்கிச் சுரண்டி, அதிகாரத்தைத் தக்க வைக்க, அச்ச உணர்வூட்டும் நல் வாய்ப்பாகவே ஆளும் வர்க்கம் கருதுகிறது.


அண்மையில் கொல்கத்தாவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் நள்ளிரவில் "ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ்' என்ற புகைவண்டி கவிழ்க்கப்பட்டு, 150க்கும் மேற்பட்டோர் பலியாயினர். ரயில் கவிழ்ந்ததற்கான உடனடிக் காரணங்களைக் கொண்டு, கவிழ்த்தியவர்கள் "மாவோயிஸ்டுகள்' தான் என மேற்கு வங்க அரசும், ஊடகங்களும் ஒருமித்த குரலில் பிரச்சாரம் செய்தன. ஆனால், மாவோயிஸ்டுகள் இதை மறுத்துள்ளனர். ரயில்வே துறை நடுவண் அமைச்சர் விசாரணைக் குழு ஒன்றை நியமித்ததோடு, வேறு "அரசியல் சதி' பின்புலமாக இருக்கலாம் என தனது சந்தேகங்களை எழுப்பியுள்ளார். இச்சந்தேகத்தின் பலன் மாவோஸ்டுகளுக்குக் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக, "மம்தா பானர்ஜி மாவோயிஸ்டுகளுடன் திரைமறைவுக் கூட்டு வைத்துள்ளதாக' மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து கட்டவிழ்க்கும் பிரச்சாரம் இனியும் பலனளிக்கப் போவதில்லை.

இச்சம்பவத்தை செய்தியாக்கிய "டைம்ஸ் ஆப் இந்தியா' – "மாவோயிஸ்டுகள் அல்லர், பயங்கரவாதிகள்' என தலைப்பிட்டிருந்தது. "மாவோயிசம்' என்பது ஒரு தத்துவ அரசியல் கோட்பாடு. "பயங்கரவாதம்' என்பது எவ்வித தத்துவ அரசியல் பின்புலமும் அற்ற வன்முறைவாதம் என்பதே இதன் பொருள். ஆக, வறட்டு வன்முறை வாதத்தை (வழிமுறையை) மக்களுக்காகப் போராடும் எந்தவொரு இயக்கமும் – அது ஆயுதம் தாங்கியதாக இருப்பினும் – பின்பற்ற இயலாது

என்பதே இதன் மறைபொருள். மாவோயிஸ்டுகளின் மறுப்பிற்குப் பின் இது மேலும் உறுதிப்பட்டுள்ளது. ஆனாலும் தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியன அரசுகளின் நிரந்தர முத்திரைகளாகவே எப்போதும் இருக்கின்றன.


நன்றி : ஆசிரியர் இளமபரிதி, தலித் முரசு இதழ் மற்றும் கீற்று இணையதளம்

அன்று ஏகாதிபத்தியத்தின் கோரபிடியில் வியட்நாம் (முக்கியத்துவம் வாய்ந்த காணொளி)


Phan Thi Kim Phuc Vietnam Napalm by innerpendejo

உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா ?



சென்னையில், சிறார்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, நீலப் படங்கள் எடுத்த டச்சு நாட்டைச் சேர்ந்த வில்ஹெல்மஸ் என்பவனுக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனை!

கடந்த வாரத்தில் நாளிதழ்களின் மூன்றாம் காலத்தில் சிறிய அளவில் வந்த செய்தி..... பத்தோடு பதினொன்று எனச் சொல்லத்தக்க சாதாரணச் செய்திதானா ? உங்கள் வீட்டில் பட்டாம்பூச்சியாக வளைய வரும் குழந்தைகள், பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்பதை ஒரு நாளேனும் கற்பனையாவது செய்திருக்கிறீர்களா ? அது பெரும்பாலான சமயங்களில் உண்மையாக இருக்கும் என்ற அதிர்ச்சியை உங்களால் ஜீரணிக்க முடியுமா ?

"மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் பாலியல் ரீதியிலான தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள். பெண் குழந்தைகள் மட்டுமல்ல, அதே அளவுக்கு ஆண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். ஊடகங்களில் அதுபற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே இருப்பதால், இந்தப் பிரச்சனை சமூகத்துக்கு அதிகமாகத் தெரிவது இல்லை !". என்கிறார் சிறார் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகச் செயல்படும் 'துளிர்' அமைப்பின் களப் பணியாளர் நான்சி வெரோனிக்கா.

" 'கஸ்டோடியல் வயலென்ஸ்' முதற்கொண்டு பல நிலைகளிலும் பால் வேறுபாடு இன்றிப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். ஆனால், இந்த வன்கொடுமைகளில் 12 சதவிகிதத்துக்கும் குறைவாகவே வழக்குகளாகப் பதிவாகின்றன !

தகாத இடங்களில் தொடுதல், தன் அந்தரங்கப் பகுதிகளைத் தொட வைத்தல், நீலப் படங்கள் பார்க்க வைத்தல் போன்ற பாலியல் வன்கொடுமை வகைகளோடு, தொழில்நுட்ப ரீதியிலான வன்கொடுமைகளும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

இந்தக் குற்றங்களுக்கு உள்ளாகும் குழந்தைகள், அந்தச் சம்பவங்களைப்பற்றி தங்களின் பெற்றோரிடத்தில் சொல்ல முடியாத சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்புகூட தந்தையே தன் மகளைச் சீரழித்த சம்பவம் செய்தியாக வந்தது. அந்தச் சிறுமி தன் தகப்பனைப்பற்றி பாட்டியிடம் சொல்லி இருக்கிறாள். அதற்கு அந்தப் பாட்டி , 'உங்க அப்பாதானே ? இது சீக்கிரமா சரியாயிடும். சாமியை வேண்டிக்கோ' என்று சொன்னாளாம். ஆக, 'இது தவறு' என்று தெரிந்திருந்தும், அவர்கள் பொருளாதாரரீதியாகவும், மன ரீதியாகவும் அந்தக் கொடூரனைச் சார்ந்திருக்க வேண்டிய சூழலில் இந்தக் குற்றத்தை எதிர்த்து எங்கு செல்ல முடியும் ?

தமிழகத்தின் மறுபக்கம்

  • கடந்த 2009-ல் மட்டும் பாலியல் வன்முறைக்கு
  • ஆளாக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை - 182.

  • சிறுமிகள் பாலியல் வன்முறை தொடர்பாக இதுவரை நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை - 341
  • கடத்தப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை - 300.

  • கொல்லப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை - 181.

  • நிருபணமான குற்ற சதவிகிதம் - 9.43.

ஒரு சிறுமி பள்ளி வாகனத்தில் ஏறாமல் அழுது கொண்டு நின்று இருக்கிறாள். இதைப் பார்த்த ஒருவர் 'ஏன்' ? என்று கேட்ட போது அந்தச் சிறுமி, 'டிரைவர் மாமா என் பாவாடைக்குள்ளே கை விடுகிறார்' எனச் சொல்லி இருக்கிறாள். அவருக்கு விபரீதம் புரிந்து இருக்கிறது. அந்தச் சிறுமியின் வீட்டினருக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கிறார். வீட்டில் இருந்தவர்களோ, 'அவள் எப்பவுமே அப்படிதான். ரெண்டு அடி போட்டு அவளை வேனில் ஏத்துங்க' என்று அசட்டையாகக் கூறி இருக்கிறார்கள். ஆக, அந்தச் சிறுமிக்கு 'குட் டச், பேட் டச்' போன்றவற்றைச் சொல்லிக் கொடுத்துதான் என்ன பயன் ? பெற்றோர்களின் இத்தகைய புறக்கணிப்புதான் தவறுகள் தொடர்ந்து நடக்க இடம் தருகிறது !

இந்தக் கொடுமைகளை வீடுகளில் பேசுவதற்க்கான சூழ்நிலை நம் சமூகத்தில் இல்லை. ஒருவேளை, குழந்தைகளே தவறை புரிந்து கொண்டு, பெற்றோரிடம் சொன்னாலும், 'நீ அப்படி நடந்துகிட்டு இருப்பே.... அதனால் அவங்க உன்கிட்ட இப்படி நடந்துக்கறாங்க' என்று குழந்தைகள் மீதே பழியைத் திருப்பிவிடும் போக்கே இங்கு இருக்கிறது.

ஆக, நம் கண்முன்னே இவை நடந்தாலும், அவற்றைக் தட்டிக் கேட்க முடியாமல், நாம் அனைவரும் வேடிக்கை பார்பவர்களாக மட்டுமே இருக்கிறோம் !" என்கிறார் நான்சி. சிறார் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானால், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்குகிறார் குழந்தைகள் மனநல நிபுணர் மருத்துவர் ஜெயந்தினி.

"வயது, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது. ஆணா, பெண்ணா; ஒருமுறை நடந்த சம்பவமா அல்லது தொடர்ந்து நடைபெற்ற சம்பவமா; என்ன வகையான பாலியல் கொடுமை, 'யாரிடமாவது சொன்னால், கொலை செய்துவிடுவேன், மார்க் குறைத்துவிடுவேன்' என்பது போல ஏதாவது மிரட்டப்பட்டார்களா ? இவை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டுதான் பாதிக்கப்படும் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கிறோம்.

பாலியல் வன்கொடுமைகளில் சிறார்களின் அந்தரங்க உறுப்புகள் கையாளப்பட்டு இருந்தால், ரத்தக் கசிவு, அந்தப் பகுதியில் எரிச்சல், வலி, சிறுநீர் கழிப்பது கஷ்டமாகிவிடுத, நோய்த் தொற்று போன்றவற்றை ஏற்படலாம். மேலும் சில நேரங்களில், சிறுவர்களுக்கு பாலியல் உணர்வுகள் தூண்டப்பட்டு, அந்த வயதிலேயே சுய இன்பப் பழக்கம் ஏற்படலாம்.

சில அதிர்வுப் பகிர்வுகள் !

  • 5 முதல் 12 வயது உள்ள சிறார்கள் அதிமாக வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் !

  • 70 சதவிகித சிறார்கள் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையை யாரிடமும் சொல்வது இல்லை !

  • 80 சதவிகிதத்துக்கு அதிகமான சிறார் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள், பெற்றோர்களால் நடத்தப்படுகின்றன !

தனக்கு ஏற்படும் வன்கொடுமைகளால் சிறார் அடையும் வேதனையை எழுத்தில் வடிக்க முடியாது. மனம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்கிற அளவுக்குச் செல்வார்கள். நாளடைவில் இந்த ஆறா நினைவு, ஆளுமைப் பண்புகளைப் பாதிக்கலாம். ஒரு பால் உறவில் ஈடுபாடு, திருமணத்தின் மீது வெறுப்பு, தாம்பத்ய உறவில் ஈடுபாடு இன்மை, அதனால் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகள் எனப் பல பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடலாம். இவை எல்லாவற்ற்க்கும் ஒரே தீர்வு. பெற்றோர்கள் குழந்தைகளைப் புரிந்துகொள்ள முயல்வதும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும்தான் !" என்கிறார் ஜெயந்தினி.

சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான

  • வழக்குகள் சராசரியாக 3 முதல் 5 வருடங்கள் வரை நடைபெறுகின்றன. 10 வயதில் ஒரு சிறுமி இந்த வன்கொடுமைக்கு ஆளானால், 15 வயதில்தான் தீர்ப்பு கிடைக்கிறது.

"சட்டம் என்று ஒன்று இருப்பதால்தான் நீதி என்பது ஒரளவாது இருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக, நீதிமன்றங்களில் தீர்ப்புகள் கிடைக்கின்றனவே தவிர, நீதி கிடைப்பதில்லை ' என்பார்கள். அது இந்த விஷயத்திலும் மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது. இந்த வன்கொடுமைகளைச் சட்டபூர்வமாக எப்படி அணுகுவது ? என்பது பற்றி கூறுகிறார் கீதா ராமசேஷன்.

சிறார் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கு எதிரான சட்ட மசோதா வடிவமைப்புக் குழுவில் உறுப்பினராக ஆலோசனைகள் வழங்கியவர் இவர். " சிறார் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகத் தனியாக எந்த ஒரு சட்டமும், இது வரை இல்லை. ஆனால், அது, தொடர்பான மசோதாக்களை வடிவமைக்க சட்ட அமைச்சகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. கற்பழிப்புக்கு உண்டான ஐ.பி.சி. சட்ட வரையறைகளைத்தான் இன்றும் இந்தக் குற்றங்களுக்குப் பயன்படுத்துகிறோம்.

இந்த வன்கொடுமைக் குற்றங்களை நாம் மூன்று தளங்களில் இருந்து அணுக வேண்டி இருக்கிறது.

முதலாவது, சாட்சி விசாரணை. ஒரு குழந்தையை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து, குற்றச் சம்பவத்தை விசாரிப்பது என்பது மிகவும் அபயகாரமானது. அந்தக் குழந்தையின் மனநலம்பற்றி நாம் கருத்தில்கொள்ள வேண்டும். ஆக, இந்த விசாரிப்புகளைத் தனிப்பட்ட முறையில் நடத்த வேண்டும். அப்போதுதான் கூட்டம், போலீஸ் பற்றிய அச்சம் எதுவும் இல்லாமல் ஒரளவு தைரியமாக நடந்தைச் சொல்லும் அந்தக் குழந்தை.

இரண்டாவதாக, நீதிமன்றத்தில் இந்த வழக்கை குறிப்பிட்ட வழியில்தான் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சில வழிமுறைகளை அனைத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கும் அனுப்பி இருக்கிறது. நீதி மன்றங்களில் அந்த வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டாலும், நீதிமன்றக் கட்டத்துக்கு முந்தைய காவல் துறையினரின் விசாரணைகளில் இதுபோன்ற வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவது இல்லை. அதுபோன்ற சமயங்களில், குழந்தைகள் நடந்ததைச் சொல்வதற்கு அச்சப்படாலம். சில உண்மைகளை மறைக்கலாம். மேலும், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் காவல் துறைப் பதிவுகளில் சில வேறுபாடுகள் இருப்பதும் தேவை இல்லாத குழப்பங்களை ஏற்படுத்தும். ஆக, இந்த விசாரணையை மிகவும் 'சென்சிட்டிவ்' ஆக மேற்கொள்ள காவல் துறையினருக்கும் சில வழிமுறைகள் இருந்தால் நலம்.

மூன்றாவதாக, பாதுகாப்பு இல்லாத சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் குழந்தைகள்தான் அதிகமாக இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க இந்த அரசு என்ன செய்யப் போகிறது ? இன்னொரு பக்கம், ஒரு வீட்டில் தந்தையும், தாயும் பணிக்குச் சென்றுவிட, குழந்தையைச் தெரிந்தவர்களிடம் விட்டுச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளும் அதிகம் இந்தச் கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள். அவர்களைப் பாதுக்காக்கவும் இந்த அரசு என்ன செய்யப்போகிறது ?

கேள்விக்குறியோடு முடிக்கிறார் கீதா ராமசேஷன் !

தீர்வுகள்தான் என்ன ?

  • குழந்தைகளிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாலியல்ரீதியான தாக்கங்கலை, பாதிப்புகளை உருவாக்கும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.

  • யாரையும் நம்பி குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும், எச்சரிக்கை அவசியம் !

  • குழந்தைகளுக்கு நல்லவை, அல்லவை இரண்டையும் எப்படி தரம் பிரித்துப் பார்ப்பது என்று சொல்லிக் கொடுங்கள் !

  • உங்கள் குழந்தைகள் இத்தகைய பாதிப்புகளுக்கு ஆளாகி இருந்தால், கூடுமானவரை மருத்துவரீதியாக அணுகுதல் நலம்.

  • விசாரிக்கிறேன் என்ற பெயரில் குழந்தையை உதாசீனப்படுத்தும் விதமாகவோ, காயப்படுத்ஹ்டும் விதமாகவோ நடந்துக் கொள்ளாதீர்கள் !

  • 'சைல்டு ஹெல்ப் லைன் 1098'-ஐப் பயன்படுத்துவதற்க்கு குழந்தைகளிடம் விழிப்பு உணர்வை உருவாக்க வேண்டும்.

  • நீதிமன்றங்கள் இத்தகைய வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விரைவில் நீதி வழங்க வேண்டும்!

நன்றி : நிருபர் ந.விநோத்குமார். (ஆனந்த விகடன்)

கடமை : பட்டாம்பூச்சிகள் போல் மிருதுவான மனமுடைய குழந்தைகளைச் சுற்றி உள்ள உறவுகளுக்கு, தட்டச்சு செய்து இதை தெரியப்படுத்துவது என் கடமை.


"மலை போன்ற ஒரு பெரிய காரியத்தைக் கொண்டு வருவதற்காகத் தலைமுடி போன்ற அற்ப சக்தியைக் கொண்டு கட்டியிழுக்கப் பார்க்கிறோம். வந்தால் மலை போன்ற கொள்கைகள் வரட்டும். வராமல் அறுந்துபோனால் முடிபோன்ற நமது அற்ப முயற்சிகள் வீணாய்ப் போகட்டும். நமக்கு அதைப் பற்றிப் பெரிய கவலையொன்றுமில்லை. இதனால், பெரிய நஷ்டமொன்று ஏற்பட்டுவிடப் போவதில்லையென்று கருதிக் கொண்டே முன் செல்லுகிறோம்."

- பெரியார் ('குடிஅரசு', 31.05.1931)