Wednesday, August 3, 2011

இரட்டைக் குடியிருப்பு, இரட்டை சலூன், இரட்டை டம்பளர், இரட்டைப் பேருந்து.

கோவை மாவட்டத்தின் மேற்கு எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், வயல்வெளிகள் நிறைந்த கிராமங்களில் ஒன்றுதான் தொண்டாமுத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கெம்பனூர் கிராமம். இக்கிராமத்தில் 500 ஒக்கலிகர் குடும்பங்களும், 10 போயர் குடும்பங்களும், 350 அருந்ததியர் குடும்பங்களும் வசித்து வருகின்றனர். பெரும்பாலான ஒக்கலிகர் குடும்பங்கள் நிலம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். 3 குடும்பங்கள் தவிர அருந்ததியர்கள் யாருக்கும் நிலம் இல்லை.

கெம்பனூர் கிராமத்திற்கு கோவையிலிருந்து விடப்பட்ட அரசுப் பேருந்து 64 டி. அப்பேருந்து கெம்பனூர் கிராமத்திற்கு வரும்போதெல்லாம் கெம்பனூர் எல்லைக்கு 200 மீட்டர் தொலைவில் உள்ள ஊருக்குள்ளேயே நின்று விடும். கிராமத்தின் எல்லையில் சேரியில் இருப்பவர்கள் 200 மீட்டர் நடந்து சென்று பேருந்தில் ஏறி நகரத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு இக்கிராமத்தை உள்ளடக்கிய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, எட்டு கொங்கு வேளாளர் கவுண்டர் சாதியை சேர்ந்த தமிழக அமைச்சர்களில் ஒருவராகப் பொறுப்பேற்ற எஸ்.பி. வேலுமணி நன்றி தெரிவிப்பதற்காக கெம்பனூர் வந்தார். கெம்பனூர் கிராமத்திற்கு கோவையிலிருந்து விடப்பட்டிருக்கும் அரசுப் பேருந்து 64 டி எல்லை வரைக்கும் வராமல், ஊருக்குள்ளேயே நின்று விடுவதைக் கூறி பேருந்தை முறையாக இயக்க வேண்டுமென சேரிமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அமைச்சரும் பின்விளைவுகள் ஏதும் அறியாமல் உடனே அதிகாரிகளை அழைத்து, பேருந்துகளை முறையாக இயக்குமாறு உத்தரவிட்டு சென்று விட்டார். பேருந்து சரியாக மூன்று முறை கிராம எல்லையான சேரி வரைக்கும் சென்று திரும்பியது.

பேருந்து சேரி வரை சென்று திரும்பியதால் தலித்துகளுக்கு இம்முறை உட்கார்ந்து பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. ஊர் பேருந்து நிறுத்தத்தில் ஏறியவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தலித்துகள் உட்கார்ந்து கொண்டும், சாதிஇந்துக்கள் நின்று கொண்டும் பயணிக்க பொறுக்குமா சாதிவெறியர்களுக்கு? நான்காவது முறையாக பேருந்து வரும்போது, கடல் கடந்தும் வாழ்கின்ற தமிழர்களின் உரிமைக் குரலான ம.தி.மு.க.வின் மாவட்ட துணைச் செயலரும், ஒக்கலிகர் மகாஜன சங்கத்தின் மாநில இளைஞர் அணி செயலருமான கதிரவன் தலைமையில் ஊர்மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் செய்ததோடு, இனிமேல் பேருந்து சேரிப்பக்கம் போகக் கூடாது என்றும் மிரட்டினர்.

அதிகாரிகள் வழக்கம் போல் தலையிட்டு, இனிமேல் பேருந்து சேரிப்பக்கம் செல்லாது என உத்தரவாதம் தந்து அவ்வாறே நடைமுறைப்படுத்தினர். அடுத்த நாள் அனைத்து பத்திரிகைகளும் சாதி பிரச்சனைகளை எல்லாம் மூடி மறைத்து, ஏதோ இரண்டு வெவ்வேறான ஊர்களுக்கு இடையில் நடந்த பிரச்சனை போல செய்தி வெளியிட்டன.

அமைச்சர் கொடுத்த உத்தரவு ஒரே நாளில் காற்றில் பறக்க விடப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த தலித்துகள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, அமைச்சர் கொடுத்த உத்தரவை நிறைவேற்றக் கோரி முறையிட்டனர். சேரி மக்களின் போராட்டத்திற்குப் பிறகு, வழக்கம் போல நடந்து முடிந்த அநீதிக்கு தண்டனை என்பதையெல்லாம் மறந்து, இனிமேல் பிரச்சனை வராமல் இருக்க அமைதிக் கூட்டத்தை நடத்தி, உலகளாவிய கண்டுபிடிப்பாக ஒரு சமரச முயற்சிக்கு கொண்டு வந்தனர். அதுதான் "இரட்டைப் பேருந்து'.

ஒரே வழித்தட எண் (64 டி) கொண்ட அரசுப் பேருந்து 6 முறை சேரிக்கும், மீதமுள்ள முறை ஊருக்குள்ளும் வரும் என அதிமேதாவித்தனமான முடிவுக்கு காவல் துறை – இரு தரப்பினரையும் ஒப்புக் கொள்ள வைத்து, அவ்வாறாக ஒப்புக் கொண்ட பின்னரும் கூட காவல் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்ட முடிவை காற்றில் பறக்க விட்டு, ஒரே ஒரு முறை மட்டும் அரசுப் பேருந்து சேரிக்குள் வந்து செல்கிறது. சேரி மக்கள் பயன்படுத்தும் அப்பேருந்தை பெரும்பாலும் ஊர் மக்கள் பயன்படுத்துவது இல்லை. ஆக, தலித்துகளுக்கு ஒரு பேருந்து; ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஒரு பேருந்து என கெம்பனூர் தன் சாதி வெறியை மெய்ப்பித்திருக்கிறது. 


தகவல் மற்றும் நன்றிகள் : நீலவேந்தன், தலித் முரசு மற்றும் கீற்று இணையதளம்.

Tuesday, August 2, 2011

சொல்வனம்


மனிதனின் செல்வம், புகழ், பெருமை நிலைக்கக் கூடியதல்ல. அவன் காலத்திலேயே மாறும் அவன் சந்ததி காலத்திலும் மாறும். ஆகவே அதை சம்பாதிப்பதே முடிந்த முடிவு என்றெண்ணுவது முட்டாள்தனம்.

- பெரியார், ('விடுதலை' - 28.04.1943)

உலகிலே நிறத்தின் காரணமாகக் காட்டப்படும் வேற்றுமை, உயர்வு தாழ்வு ஒரளவுக்கு மாற்றமடைந்து கொண்டு வருகிறதென்றாலும் துரதிர்ஷ்ட வசமாக இந் நாட்டிலே இவ்வுப கண்டத்தில் மட்டும் பிறவியின் காரணமாக, தொழிலின் காரணமாக கற்பிக்கப்பட்டிருக்கும் உயர்வு தாழ்வு சட்டப்பூர்வமாக இருந்து வருவதுடன் அதைப் புதுப்போர்வையில் மறைத்து நிரந்தரமாக நிறைபெறச் செய்வதற்காக சூழ்ச்சியும் செய்யப்பட்டு வருகிறது.

- பெரியார், ('விடுதலை' - 23.03.1942)

தமிழில் எழுதப்படும் புத்தகங்கள் தமிழ்ச் சொற்கள் கொண்ட புத்தகங்களாகவே இருக்க வேண்டும் என்பதே தமிழர் விருப்பம்.

- பெரியார், ('விடுதலை' 17-05-1941)
தோழர் தமிழச்சியின் முகப்புத்தகத்திலிருந்து......
http://www.facebook.com/tamizachi.france

கடல் காடுகள்


நதிகள், ஒடைகள், போன்றவற்றின் பிறப்பிடம் காடுகள் தான். அவை தான் நீரின் ஆதாரம்.ஆச்சரியமாக நீருக்கு அடியிலும் காடுகள் இருக்கின்றன. நீர்காடுகளில் இரண்டு வகை உள்ளன.

முதல் வகையை அலையாத்தி காடுகள் என்கிறார்கள். இது பெரும்பாலும் கடல் நீருக்கு அருகிலேயே வளரும். இந்த தாவரங்கள், தண்டுகளிலும், கிளைகளிலும், உள்ள தூவாரங்களின் மூலம் ஆக்சிஜனை உள் இழுத்து கொள்ளும். நீர்மட்டம் அதிகரிக்கும் போது, சிறிய குழல்களை வெளியே நீட்டி சுவாசிக்கும்.

கடலுக்கு அருகில் இருந்தாலும், உப்புதன்மையை வடிகட்டியே நீரை எடுத்துக் கொள்ளும்.இதன் இலைகள் மூலமாக நீர் ஆவியாதல் மிக மெதுவாகவே நடக்கும்.சுனாமி, கடல் கொந்தளிப்பு போன்ற காலங்களில் அதன் வேகத்தை கட்டுபடுத்தி, இந்த அலையாத்தி காடுகள் நம்மை காப்பற்றுகின்றன.

உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் பிரேசிலில் உள்ளன. இதன் பரப்பளவு 25 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். இரண்டாவது இடம் பெறுவது நமது பீச்சாவரம் கடற்கரை.


தகவல் : தினத்தந்தி

Monday, August 1, 2011

ஒரு புலியின் மரணம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் மட்டுமே வாழும் "சுமாத்ரா புலிகள்" பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். மிகவும் அழியும் தருவாயில் உள்ள இந்த புலிகள் எப்படி பாதிக்கப்பட்டு இறந்து போகின்றன என்பதற்கு ஆதாரமாக "Green Peace" ஒரு காணொளிக் காட்சியை வெளியிட்டுள்ளது.


வேட்டைக்காரர்களால் வைக்கப்பட்ட பொறியில் தன் காலை சிக்கவைத்து அங்கிருந்து தப்பமுடியாமல் ஒரு வாரகாலம் பசியில் போராடிய அந்த புலி செத்துப் போனது. Asia Pulp and Paper என்ற நிறுவனம் அதிக அளவில் காடுகளை அழித்து வருவதன் விளைவால் பல்வேறு உயரினங்களும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மனிதனின் அகோரப் பசிக்கு இரையாகும் இந்த புலி இதயத்தை கனக்க வைக்கிறது.




தகவல் : இயற்கை வனங்கள் குறித்த நல்ல வலைப்பூ
http://ivansatheesh.blogspot.com

சொல்வனம்

எல்லா உயிருடனும்
அன்பாக இருங்கள்
மனிதர்களிடம்
மட்டும்
விழிப்புடன் இருங்கள் !

-பச்சைத் தமிழர் காமராசர்

“இப்போ என்ன ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் மிஸ்டர் எடிசன்?”

தாமஸ் ஆல்வா எடிசன் வெறித்தனமாக ஆராய்ச்சி செய்பவராம். ஒரு முறை பார்ட்டி ஒன்றுக்கு வலுக்காட்டாயமாக இழுத்து செல்லப்பட்டார். சிறிது நேரத்திலேயே வெட்டிப் பேச்சு விவகாரங்கள் அவருக்கு அலுத்து விட்டது.

யாரும் கவனிக்காதபோது நைசாக நழுவினார் எடிசன். அந்தோ பரிதாபம்! வாசல் கதவைக் கண்டவராக அதை நோக்கி விரைகையில் தோளில் ஒரு கை.

“இப்போ என்ன ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் மிஸ்டர் எடிசன்?” என்று கேட்டார், கைக்கு சொந்தக்காரர், பார்ட்டி தருபவர். பதில் சொல்லாமல் இருக்க முடியாது.

“வெளியே போகிற வழியை!” என்று பதில் தந்து விட்டு நடையைக் கட்டினார் எடிசன்.


தகவல் : லைவ்பிளானட் வலைப்பூ

இயற்கையின் விந்தை


பூமியில் இருந்து நாம் ஒரு நட்சத்திரத்தைப் பார்க்கிறோம். அது ஒர் ஒளியாண்டு தூராத்தில் இருக்கிறது. அப்படியானால் அந்த நட்சத்திரத்தில் இருந்து புறப்பட்ட ஒளி நமது கண்ணை வந்தடைய ஒரு வருடமாகிறது. நாம் பார்ப்பது ஒரு வருடத்துக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் எப்படி இருந்தது என்பதைதான், இப்போது இருப்பதையல்ல.

நமக்கு மிகவும் அருகமையிலுள்ள நட்சத்திரம் 'பிராக்சிமா சென்டாரி' ஆகும். இது இருக்கும் தூரம் 4.25 ஒளியாண்டுகள். அதாவது 3.75 லட்சம் கோடி கிலோமீட்டர்கள்.

'சிரியன்' என்கிற நட்சத்திரம் 8.7 ஒளியாண்டு தூரத்திலும், 'கனோபஸ்' என்கிற நட்சத்திரம் 900 ஒளியாண்டு தூரத்திலும், 'ஆண்டிரமெடா' என்கிற நட்சத்திரத் தொகுதி 20 லட்சம் ஒளியாண்டு தொலைவிலும் உள்ளன. அது 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதைதான் நாம் இப்போது பார்க்கிறோம்.


தகவல் : தினத்தந்தி