Monday, October 24, 2011

கடல் கடந்து கவிதை படித்தவர்


ராபர்ட் ஓபன் ஹய்மர் என்ற அறிவியல் அறிஞர் இருந்தார். இவர் அணுக்கருப் பிளவு, அணு உலை சார்ந்த அறிவியலில் சிறந்து விளங்கினார்.

தனது 21 - ம் வயதில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்குச் சென்று படித்தார். படிப்பதில் ஆர்வம் அதிகம் உடையவர். அதனால், நூலகத்திற்கு சென்று பல நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும், தேடி தேடிப் படிப்பார்.

இதனால், பல நேரங்களில் அவரது தந்தை தன் மகனைக் காணவில்லையே, எங்கு சென்றிருப்பான் என்று நூலகத்திற்கு வந்து தேடி செல்வார்.

ஒரு கட்டத்தில் அவரது தந்தை, 'தன் மகன் எப்போதும் படித்துக் கொண்டே இருக்கிறானே' என்று பயந்தே போய்விட்டார். அதனால், மகனின் மனநிலையை மாற்ற நினைத்தார். தனது மகன் உல்லாசமாக பொழுதை கழிக்க வேண்டும் என்று எண்ணி ஒரு படகை வாங்கி கொடுத்தார். ஆனால், ஹைமரோ, இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினார். அதனால், தந்தை வாங்கி கொடுத்த படகில் ஏறி, அட்லாண்டிக் கடலைக் கடந்து இங்கிலாந்து நாட்டுகே சென்று விட்டார்.

ஓபன் ஹைமர் படித்து முடித்த பின்னர், அவருக்கு பல பல்கலைக்கழகங்களில் இருந்து அழைப்பு வந்தது. கடைசியாக, அவர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

வேலையில் சேர்ந்த முதல் நாளே அந்தப் பல்கலைக்கழகத்தின் டீன் அவரிடம் வந்து "ராபர்ட் உனக்கு பல பல்கலைக்கழகங்களில் இருந்து அழைப்பு வந்தும், நீ ஏன் இந்தப் பல்கலைக்கழகத்தைத் தேர்ந்த்தெடுத்தாய் ?" என்று கேட்டார். அதற்கு ஓபன் ஹைமர், "இங்குள்ள நூலகத்தில் 16 மற்றும் 17 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த சில பழைய பிரெஞ்சுக் கவிதைகளை நான் ஒரு முறை படித்தேன். அவற்றை மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆவலில் தான் இங்கு வந்து சேர்ந்தேன்" என்றார்.



தகவல் : தினத்தந்தி.

நம்பினால் நம்புங்கள் !


ஜெயின்ட் பாண்டா தினமும் 12 மணிநேரம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்.




உலகில் இன்னும் 54 லட்சம் உயிரினங்களுக்கு பெயரிடப்படவே இல்லை.




அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 'டைனோசர்' என்ற நகர் உள்ளது.




சோனி நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ரைஸ் குக்கர். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை.




செவ்வாய் கோளில் உள்ள பாறைகளுக்கு யோகி, ஸ்கூபீ டு, இன்டியானா ஜோன்ஸ் என்றெல்லாம் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

நீயின்றி நானில்லை.. நிலவின்றி நாமில்லை


நிலா எப்போதுமே கவிஞர்களை கொள்ளை கொள்ளும் ஒரு அம்சம்தான். இந்த நிலா உருவானதற்கு நீண்ட வரலாறு உண்டு. 400 கோடி வருடங்களுக்கு முன்பு தியா என்ற பெரிய கிரகம் ஒன்று பூமியில் வந்து மோதியது. அந்த மோதல் சரியான கோணத்தில் அமைந்ததால் மட்டுமே நமக்கு நிலவு என்ற ஓர் அற்புதம் கிடைத்தது. இந்தக்கோணம் சற்று அதிகமாக இருந்திருந்தால் அது பூமியின் மீது மோதாமலே சென்றிருக்கும். பூமிக்கு நிலவு கிடைத்திருக்காது.

அதே வேளையில் அந்த கோணம் சற்று குறைவாக இருந்திருந்தால் அது பூமியில் மோதியவுடன் பூமி தூள்தூளாக நொறுங்கி போயிருக்கும். எரிகற்கள், வால் நட்சத்திரங்கள் போல் பூமியும் சூரியனை சுற்றி வந்திருக்கும். சரியான கோணத்தில் இந்த மோதல் நிகழ்ந்த காரணத்தால் தான் நிலவு சரியான அளவில் சரியான தொலைவில் உள்ளது. இதனால்தான் நம்மால் முழுமையாக சூரியகிரகணத்தை பார்க்க முடிகிறது. நிலவின் தொலைவு சற்று மாறி இருந்தாலும் நம்மால் சூரியகிரகணத்தை பார்க்க முடிந்திருக்காது.


2004 - ம் ஆண்டு டேவ் வால்தட் என்ற விஞ்ஞானி நடத்திய ஆய்வின் படி நிலவின் எடை இப்போது இருப்பதை விட இரண்டு சதவிகிதம் அதிகமாக இருந்திருந்தால் கூட பூமியின் அச்சு சாய்வு 50 டிகிரி வரை மாறியிருக்கும். ஒரு சதவிதம் பூமியின் எடை கூடியிருந்தால் கூட பூமியின் சுழலும் வேகம் குறைந்திருக்கும் என்கிறார். இதனால் நீண்ட பகலும், நீண்ட இரவும் ஏற்பட்டிருக்கும்.


நிலவின் எடை இப்போது உள்ளதை விட குறைவாக இருந்தாலும் பூமியின் சுழலும் வேகம் அதிகரித்திருக்கும். இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திருக்கும். டேவ் சொன்னபடி 50 டிகிரி வரை சாய்வு கோணம் அதிகரித்திருந்தால் பருவ காலங்களில் மிகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும்.

அது மனிதன் மட்டுமல்ல, பூமியில் எந்த உயிரினமும் வாழ முடியாத சூழ்நிலையை உருவாக்கியிருக்கும். அதேபோல் பூமியின் சுழலும் வேகம் குறைந்தால் பகலுக்கும், இரவுக்குமான வெப்பநிலை மிக அதிகமாக வித்தியாசப்படும். மேலும் துருவப்பகுதிக்கும், பூமத்திய ரேகைப் பகுதிக்கும் இடையே உள்ள வெப்பநிலை வித்தியாசம் குறைவாக காணப்படும். அதனால் துருவப்பகுதிகளில் பனிப்பாறைகள் இருப்பது சந்தேகமே.

ஒருவேளை பூமியின் சுழலும் வேகம் அதிகரித்தால் அதிகமான அழுத்தத்தோடு காற்று வீசும். பகலுக்கும், இரவுக்கும் இடையே உள்ள வெப்பநிலை வித்தியாசம் குறைவாக இருக்கும். துருவப்பகுதிம், பூமத்திய ரேகைப் பகுதிக்கும் இடையே உள்ள வெப்பநிலை அதிகரிக்கும்.


இதன் காரணமாக துருவப்பகுதிகளில் குளிர் அதிகமாகி கரியமில வாயு உறையும் நிலைக்கு சென்று விடும். இப்படி உறைவதால் காற்றில் கரியமில வாயுவின் அளவு குறையும். இந்த வாயு வெப்பத்தை தன்னுள் வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இதன் அளவு வளி மண்டலத்தில் குறைவதால் பூமி மேலும் குளிர்வடைந்து ஒரு பனிப்பந்தாக மாறிவிடும்.

நிலவின் தோற்றம் எதிர்பாராத ஒரு விபத்து என்றாலும், அது உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியான இடமாக பூமியை மாற்றியுள்ளது. இந்த இயல்பான சூழ்நிலையே மனிதன் உருவானதற்கு காரணம். ஒரு வேலை நிலவு மட்டும் இல்லையென்றால் பூமியின் முதல் நிலை உயிரினங்களான பூச்சிகள், நுண்ணுயிரிகள் மட்டுமே தோன்றியிருக்கும். மனிதன் தோன்றியிருக்க மாட்டான். எனவே மனிதன் உருவாக நிலவுதான் காரணம்.


தகவல் : தினத்தந்தி .

Sunday, October 23, 2011

சின்ன சின்ன செய்திகள்


'The Cure for Insomnia' இதுவே உலகின் மிக நீளமான திரைப்படம். மொத்தம் 87 மணி நேரம்.




ஐ.நா சபை தனிப்பட்ட தபால் தலையைப் பயன்படுத்துக்கிறது.



சொக்க தங்கம் என்றால் 1000 கிராமில் 999 கிராம் வரை தூய்மையான தங்கம் இருக்கும்.



சீனாவில் ரயில் நிலையங்களில் சுமை தூக்கிகள்(போர்டர்கள்) இல்லை.



மருந்துகளின் இளவரசி 'பென்சிலின்'.



ஏழு ஊர்களை உள்ளடக்கிய பகுதியே சென்னையில் உள்ள எழும்பூர்.




தகவல் : முத்தாரம் இதழ்

Saturday, October 22, 2011

மரியாதை குறைவான பயம்.

எல்லா மக்களுக்குமே சில விஷயங்களில் பயம் இருக்கும். ஆனால் ஒரு நாட்டுக்கே பொதுவான பயம் இருக்க முடியுமா ?

அப்படி ஒரு பயம்தான் 'டைஜின் கியோபுஷோ'.

இது ஜப்பானியர்களுக்கு வரும் மட்டும் பயம். தங்கள் செய்கைகள், உடல் அசைவுகள், எதிராளியை காயப்படுத்த்திவிடுமோ என்கிற பயம்தான் அது. பெரும்பாலான நாட்டு மக்களுக்கு சுய கவுரவம் தான் முக்கியம். நம்மவர்கள் மரியாதை குறைந்தால் கேட்டு வாங்குவார்கள். ஆனால், ஜப்பானியர்கள் அவமரியாதைக்கு உள்ளானால் கூட புன்னகையோடு நகர்ந்து சென்றுவிடுவார்கள். அவர்களின் பண்பாடு அப்படி.

வீட்டுக்கு வரும் விருந்தினரில் இருந்து, எதிரே வரும் முகம் தெரியாத நபர் வரை, அதனை பேருக்கும் மரியாதை கொடுத்து பழக்கப்பட்டவர்கள். சின்ன உடல் அசைவு கூட தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டு மரியாதை குறைவாக எடுத்துக் கொள்ளப்படுமோ என்று கவனமாக இருப்பார்கள்.

தன் தோற்றம், உடல் அசைவு, முக பாவனை, வியர்வை, நாற்றம் போன்றவை எதிராளிக்கு தன்னை பற்றி தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிடுமோ பயப்படுவார்கள். தன்னால் அடுத்தவர்கள் அவமானப்பட்டு விடுவார்களோ என்ற எச்சரிக்கை உணர்வே, பயமாக, நோயாக மாறி விடுகிறது.

இந்த வகை நோய் உள்ள ஜப்பானியர்கள் யாரையும் சந்திக்க விரும்பாமல் வீட்டுக்குள் முடங்கி கிடப்பார்கள். வேலைக்கும் போக மாட்டார்கள். வீட்டுக்கு யாரவது வந்தால் ஒளிந்து கொள்வார்கள். வேறு வழி இல்லாமல் சந்திக்க நேர்ந்தால் எதிராளியின் கண்களை பார்க்கமாட்டார்கள்.

ஒருவரை சந்திக்க பல முறை குளித்து, பல முறை வாசனை திரவியம் தடவி, சின்ன சுருக்கம் கூட இல்லாமல் துணி அணிந்து இருக்கிறதா என்று பார்த்து விட்டுதான் வெளியே கிளம்புவார்கள்.

சிறு வயதில் தன்னால் பிறர் அவமரியாதை பட்ட சம்பவம் ஒன்று இருந்தால், பிற்பாடு அதற்காக வருத்தப்பட்டால் அதுதான் இந்த பயத்தின் அடிப்படை.

இந்த பயத்தை போக்குவதற்கு ஜப்பானில் பல மருத்துவமனைகள் உள்ளன.

இந்த வகை நோயாளிகளுக்கு 'மோரிட்டா' என்கிற நான்கு நிலை சிகிச்சை கொடுக்கப்படுகிறது. முதலில் தூங்க சொல்வார்கள். எழுந்ததும் பய நோயாளியை கவிதை எழுதவோ அல்லது அன்றைய நிகழ்வுகளை குறிப்பேட்டில் எழுத சொல்வார்கள். அதற்கடுத்து, யோசிக்கவே முடியாத அளவிற்கு வேலை செய்ய சொல்வார்கள். நான்காவது நிலையாக, தொடர்ச்சியாக, பல கருத்தரங்குகளுக்கு சென்று நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டும் என்பதும் பயிற்சிகளில் ஒன்று. இப்படி ஒவ்வொரு நிலையாக நோயாளின் பயத்தை குறைத்து, நோயில் இருந்து விடுபட உதவி செய்வார்கள்.


தகவல் : தினத்தந்தி.

சொல்வனம் !


"மனிதரை மனிதர் மதித்து நடந்தால் அதுவே பண்பாடு. அதுவே சமூதாய நீதி. எந்தக் காலத்திலும் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மனிதர்களின் கண்ணியத்துக்கு பரஸ்பரம் மதிப்புக் கொடுத்து நடந்து கொள்வதே நீதி."


- பிரெஞ்ச் சிந்தனையாளர் புரௌதான்.


நன்றி: தோழர் தமிழச்சி பெரியார்

Friday, October 21, 2011

நந்தி உண்டு... நந்தன் இல்லையா ?

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் பி. சம்பத். அதன் அமைப்பாளராக இருந்து முன்னணியை உருவாக்குவதில் இவருக்கும் பெரும் பங்கு உண்டு.

" சொந்த ஊர் துத்துக்குடி. என் இரண்டு வயதில் அப்பா காலமானார். அம்மாவின் பராமரிப்பில்தான் வளர்ந்தேன். அம்மா ஹோட்டலில் கூலி வேலை செய்து வந்தார். நெல்லை இந்து கல்லூரியில் பி.யூ.சி. படித்தேன். மாணவனாக இருந்தபோது. என் அண்ணாச்சி ஐ.டி.யு தொழிற்சங்கத்தில் இருந்தார். அவர் வைத்திருக்கும் மார்க்சிய, இடதுசாரி நூல்களை வாசித்ததால் இயக்க ஈடுபாடு ஏற்பட்டது. மின்சார வாரியத்திலும் துத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் பணியாற்றினேன். 1987 - ல் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டேன். அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, 1966 - ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின் முழு நேர ஊழியன் ஆனேன். தற்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்" - சுருக்கமாக தன் அறிமுகம் முடித்துவிட்டு தமிழகத்தில் தீண்டாமை குறித்து விரிவாகப் பேசத் தொடங்குகிறார்.....

சாதியப் பிரச்சனைகளில் தலையிட வேண்டும் என்ற ஈடுபாடு எப்போது ஏற்ப்பட்டது ?

"1992 - ல் திருச்செந்தூர் தாலுக்காவுக்கு உட்பட்ட நாலு மூலைக் கிணறு கிராமத்தில் தலித் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. காரணம் இல்லாமல் ஊரில் உள்ள இளைஞர்களைக் கைது செய்தது காவல் துறை. பெண்கள் மற்றும் ஒன்றரை வயதுக் குழந்தை மீதுகூடத் தோட்டாக்கள் உமிழப்பட்டன. இந்தச் சம்பவம் எனக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. 1996 - ல் கொடியங்குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை கடுமையாகத் தாக்கி, வீடுகளைச் சேதப்படுத்தி, விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் திருடிச் சென்றது காவல் துறை. 1995 - 96 -ல் தென் மாவட்டங்களில் தொடர்ச்சியான சாதிக் கலவரங்களில் தலித்துகள் அதிகம் பாதிக்கப்பட்டனர். கட்சி சார்பாகத் தொடர்ந்து அந்த மக்களைச் சந்தித்தேன். தலித்துக்களின் சமூக, பொருளாதார விடுதலைக்கான முயற்சியில் ஈடுபடவேண்டும் என்பது கணத்தில் எடுத்த முடிவல்ல. தொடர்ச்சியாக தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களைக் கண்டதால், எடுத்த முடிவு!".

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பணிகளில் குறிப்பிடத்தக்கவையாக நீங்கள் கருதுவது ?

"2007 - ம் ஆண்டு ஆகஸ்ட் 16 தீண்டாமை ஒழிப்பு முன்னணி உதயமானபோது நான் அதன் அமைப்பாளர் ஆனேன். புதுக்கோட்டையில் நடந்த முதல் மாநாட்டில் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நாங்கள் முதலில் தலையிட்டது உத்தப்புரம் பிரச்சனையில்தான். எங்கள் போராட்டத்தால் சுவர் இடிக்கப்பட்டு பாதை உண்டக்கபட்டது.

உத்தப்புரம் தலித் மக்களின் கோரிக்கைக்களுக்காக,2010- ல் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, போலீஸார் தடியடி நடத்தி, டி.கே.ரங்கராஜன், நான் உள்ளிட்ட பல தோழர்களை அடித்து இழுத்துச் சென்றார்கள். உத்தப்புரத்தில் எம். பி. நிதியில் இருந்து நிழற்குடை கட்டுவதற்கு 3 லட்ச ரூபாயை டி.கே.ரங்கராஜன் ஒதுக்கி தந்து இருக்கிறார். ஆனால், நிழற்குடை கட்டினால் சமூகப் பதற்றம் வரும் என்று காரணம் சொல்லி, அந்த நிதியை அரசு பயன்படுத்தவேயில்லை.

திருச்சி எடமலைப்பட்டி புதூர், கோவை பெருமாள் நகர், சேலம் மகாத்மா காந்தி மகான் தெரு, திருப்பூர் போன்ற பல இடங்களில் தீண்டாமை சுவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் டவுனில் பொதுச் சாலையில் தலித்துகள் நுழைய கூடாது என்பதற்காக இரும்பு கதவு போட்டு சாதியை பாதுகாத்தார்கள். அதனை இடங்களிலும் எங்கள் போராட்டங்களால் தீண்டாமைச் சுவர்கள் தகர்க்கப்பட்டன.

2008 ஜூலை 12 அன்று அருந்ததியர் உள் ஒதுக்கீடு கேட்டு பிரமாண்டமான பேரணியை சென்னையில் நடத்தி, அன்றைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து மனு அளித்தபோது, கொள்கை அளவில் அருந்ததியருக்கு மூன்று சதவிகித உள் ஒதுக்கீட்டு வழங்க ஒப்புக்கொண்டார். 18 இடங்களில் ஆலயப்
பிரவேசப் போராட்டங்கள் நடத்தி, முதன் முதலாக தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்து சென்று இருக்கிறோம்.

63 நாயன்மார்களில் நந்தன் மட்டுமே தலித் நாயன்மார். சிதம்பரம் கோயிலுக்குள் அவர் நுழைந்த வழி என்பதற்காக, தெற்கு வாசலை அடைத்து வைத்து இருக்கின்றனர். முன்பு அந்த பாதை இருந்ததற்கான சான்றுகள் சேக்கிழார் புராணத்தில் இருக்கின்றன. கட்டுமான பணிகளுக்குக்காதான் அந்த வாசல் தற்காலிகமாக வைக்கப்பட்டதாகவும், பின்னர் மூடப்பட்டதாகவும் கதை விடுகிறார்கள். தற்காலிக வாசலுக்கு எதற்கு கோபுரம் வைத்தார்கள் ? அதிகாரபூர்வமற்ற வாசலுக்கு முன் எதற்கு நந்தி வைத்தார்கள் ?.

2010 - ல் பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று அந்த வாசலைத் திறக்க கோரி கண்டன ஆர்பாட்டம் நடத்தினோம். ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை. 'நந்தன் என்று ஒருவர் இருந்தாரா என்பதே சந்தேகத்துக்கு இடம் இன்றி நமக்கு தெரியாது' என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி கூறியது வியப்பை அளித்தது.


தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்று பெயர் வைத்திருப்பது ஏன்?

சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழித்து விட முடியுமா?

சாதி ஒழிக்கப்பட வேண்டும். சாதிய ஒடுக்குமுறையின் கோர வடிவம்தான் தீண்டாமை. பெரியாரும், அம்பேத்காரும் தீண்டாமையைக் ஒழிக்க தனி கவனம் எடுத்து கொண்டார்கள். தீண்டாமை ஒழிப்பு என்பது, சாதி ஒழிப்பின் பிரிக்க முடியாத முன்னுரிமைக் கடமை. தீண்டாமை முற்றிலும் ஒழிந்து போனாலும் கூட சாதியை ஒழிக்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து போராடும்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்ற தலித் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுக்கிறதா ?

தீண்டாமை ஒழிப்பு முன்னணியிலேயே பல தலித் அமைப்புகள் உள்ளன. மாநில அளவில் 18 அமைப்புகளும், மாவட்ட அளவில் 67 அமைப்புகளும் உள்ளன. சில தலித் அமைப்புகள் தங்கள் சுயநலத்துக்காவும், பதவியை பெறுவதற்காகவும், தொடங்கிய திசையை விட்டு விலகிச் செல்வதுபோலத் தோன்றுகிறது. அரசியல் கட்சிகளாக உருவெடுக்கும்போது இந்த மாதிரியான போக்கு உருவாகிறது. இதனை மாற்றிக் கொண்டால் எந்த அமைப்புடனும் இணைந்து செயல்படுவதில் எந்தத் தயக்கமும் இல்லை.


அப்படியென்றால் தலித்துகள் கட்சி அரசியலுக்கு வரவே கூடாது என்கிறீர்களா ?

நான் அப்படி சொல்லவில்லை. தலித் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து செல்லாமல் சந்தர்பவாதக் கட்சிகளாக மாறுவது தலித் விடுதலைக்கு உதவாது. தலித் மக்கள் நிச்சயமாக அரசியல் சக்திகளாக உருவெடுக்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் பங்கு பெற வேண்டும். அதுதான் தலித் மக்களுக்கான உண்மையான அரசியல் விடுதலை. வெறுமனே எம்.எல்.ஏ-வாகவோ, எம்.பி,யாகவோ ஆகிவிட்டதால், அரசியல் அதிகாரம் பெற்றுவிட்டதாக நாம் சொல்லி விட முடியாது. எம்.எல்.ஏ, எம்.பி ஆவதைவிட உள்ளாட்சி அமைப்புகளில் தலித்துகள் பதவிக்கு வருவதுதான் இன்றைக்கு பெரும் சவாலாக இருக்கிறது. பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு போன்ற எத்தனையோ உதாரணங்களை நாம் பார்த்துவிட்டோம்.

சாதி ஒழிப்புக் குறித்த புரிதல்களோடு இயங்கும் பிற இயக்கங்களுடன் இணைந்து உங்கள் அமைப்பு செயல்படுகிறதா ?

பெரியாரின் கொள்கைகளைத் திராவிடக் கட்சிகள் கைவிட்டுவிட்ட நிலையில், பெரியார் பெயரை காப்பாற்றும்படி சாதியம் குறித்து பேசும் இயக்கமாக பெரியார் தி.க. இருக்கிறது. அதனுடன் இணைந்து நாங்கள் பல இயக்கங்கள், கருத்தரங்குகள், கூட்டு நிகழ்வுகளை நடத்தி இருக்கிறோம்.


பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அங்கு சென்று வந்தீர்களே... என்ன நிலைமை ?

அங்கே காவல் துறை அடாவடித்தனமான அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறது. இம்மானுவேல் குருபூஜைக்குச் செல்லும் தலித் மக்களை இயல்பாக அனுமதித்து இருக்க வேண்டும். செப்டம்பர் 9-ம் தேதி பழனிக்குமார் என்கிற 9-ம் வகுப்பு படிக்கும் தலித் மாணவன் கொலை செய்யப்பட்டான். இம்மானுவேல் குருபூஜை குறித்த அச்சத்தை ஏற்படுத்துவது தான் இதன் நோக்கமாக இருந்திருக்க முடியும். இந்த பின்னணியில் ஜான் பாண்டியனைக் கைது செய்ததன் மூலம் நிலைமையை மோசமாக்கியது காவல் துறை. தங்களது கடும் அதிருப்தியை தெரிவிக்க, மறியல் செய்ய முயன்றவர்களை கலைக்க எளிய வழிமுறைகளைக் கையாளாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கண்டனத்துக்குரியது. தமிழக அரசு நியமித்துள்ள கண்துடைப்பு விசாரணை கமிஷன் மீது தலித் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் சி.பி.ஐ. விசாரணைக் கோருகிறோம். தவறு இழைத்த அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 லட்ச ரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாஞ்சோலைத் தொழிலாளர் பேரணியின் போதும், உத்தப்புரம், காங்கேயனூர் போராட்டங்களின் போதும் தி.மு.க. ஆட்சி. அப்போதும் காவல் துறை இப்படிதான் நடந்துகொண்டது. ஆட்சி மாறினாலும்,
காவல்துறையின் அட்டூழியங்கள் மாறவில்லை. காவல் துறையின் ஒரு பகுதி அதிகாரிகளிடம் சாதியக் கண்ணோட்டம் இருப்பதால் ஆட்சியில் யார் வந்தாலும் சாதிய வன்மைத்துடனே நடந்து கொள்கிறது காவல் துறை.


நன்றி : நிருபர் கவின் மலர்-விகடன் .