Thursday, November 3, 2011

மீடியாவுக்கு பயமில்லை !

ஒரு ஃபியூடல் சொசைட்டி மாடர்ன் சொசைட்டியாக மாறுகிற காலகட்டத்தில் அந்த மக்களும் நாடும் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு அறிவியல் சிந்தனை பரவ வேண்டும். அதற்கு மீடியா உதவ வேண்டும். ஐரோப்பாவில் நடந்ததை சொன்னேன். இங்கே என்ன நடக்கிறது? அறிவியல் சிந்தனையை தூண்டுவதற்கு பதில் ஜோசியம், மூடநம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களை பரப்புகிறது மீடியா. ஏற்கனவே நமது நாட்டில் 80 சதவீத மக்கள் ஜாதி, மதம், மூடநம்பிக்கை போன்ற விஷயங்களில் சிக்கி மனரீதியாக பின்தங்கி நிற்கிறார்கள்.



மார்கண்டேய கட்ஜு

புதுடெல்லி : பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்துக்கள் மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.என்.என் & ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கட்ஜு கூறிய விஷயங்கள் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது. அந்த கேள்வி & பதில் நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகள் இங்கே:


கரன் தாப்பர்


கரன் தாப்பர்: சமீபத்தில் சில பத்திரிகை மற்றும் டீவி ஆசிரியர்களை சந்தித்தபோது, ‘மீடியா பொறுப்பில்லாமல் செயல்படுகிறது‘ என்று வருத்தப்பட்டீர்கள். மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு ஏமாற்றம் தருகிறதா?


மார்கண்டேய கட்ஜு: ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது.

உங்களுக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லையா?

நிச்சயமாக இல்லை.

உண்மையாகவா சொல்கிறீர்கள்?

உண்மையாகவே எனக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. மக்கள் நலனுக்காக மீடியா பணியாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. சில நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதையும் பார்க்கிறேன்.

உண்மையான தகவல்களை பாரபட்சம் இல்லாத முறையில் வழங்குவது மீடியாவின் கடமை என்று அந்த சந்திப்பில் குறிப்பிட்டீர்கள். மீடியா நேர்மையாக செயல்படவில்லையா, அல்லது அது போதுமானதாக இல்லையா?

ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாற்றம் நேர்ந்து கொண்டிருக்கிறது. நில பிரபுத்துவ வேளாண் சமூகமாக இருந்த இந்தியா இன்றைக்கு நவீன தொழில்சார் சமுதாயமாக மாறும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இது வலிகள் மிகுந்த காலகட்டம். முன்பு ஐரோப்பா இதே மாற்றத்தை சந்தித்த நேரத்தில், மக்களுக்கு அந்த வலியை குறைக்கும் வகையில் அங்குள்ள மீடியா செயல்பட்டது.

இந்தியாவில் அப்படி நடக்கவில்லை என்கிறீர்களா?

இங்கே அதற்கு தலைகீழாக நடக்கிறது. ஐரோப்பாவில் ரூசோ, தாமஸ் பய்ன், திதரோ மாதிரி எழுத்தாளர்கள் மக்களை மாற்றத்துக்கு தயார் செய்தார்கள். ‘இந்த நாட்டிலுள்ள கடைசி சாமியாரின் குடலை உருவி அதை கடைசி மன்னனின் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கவிடும் வரையில் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காது‘ என்று முழங்கினான் பிரஞ்சு சிந்தனையாளன் திதரோ.

அவர்களோடு ஒப்பிட்டால் இந்தியாவின் வரலாற்று மாற்றத்துக்கு நமது மீடியாவின் பங்களிப்பு எப்படி?

இந்திய மீடியா பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுப்பதை பார்க்கிறேன். மூன்று விஷயங்களை உதாரணம் காட்டலாம். முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை மீடியா திசை திருப்புகிறது. இங்கே பிரச்னைகள் எல்லாமே பொருளாதார அடிப்படையிலானவை. நம் மக்களில் இன்னமும் 80 சதவீதம் பேர் வறுமை, வேலையின்மை, விலைவாசி, நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அந்த பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தீர்வு காண தூண்டாமல், பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா. சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது.

ஃபேஷன், சினிமா, கிரிக்கெட் மேட்டரை மக்களுக்கு போதையேற்ற மீடியா பயன்படுத்துகிறது என்கிறீர்கள்?

ஆமாம். கிரிக்கெட் நமது ஜனங்களுக்கு ஒரு போதை பொருள் & ஓப்பியம் & மாதிரி. ரோமாபுரி பேரரசன் சொல்வானாம், ‘மக்களுக்கு ரொட்டி கொடுக்க வழியில்லை என்றால் சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்‘ என்று. இந்தியாவில் மக்களுக்கு தேவையானதை கொடுக்க முடியாவிட்டால் அவர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறோம். நிறைய சேனல்களில் இரவு பகல் எந்த நேரமும் ஏதாவது கிரிக்கெட் மேட்ச் ஓடிக் கொண்டே இருக்கிறது & அதுதான் நாட்டின் ஒரே பிரச்னை மாதிரி.



மக்கள் விரோதமாக மீடியா செயல்படுவதை காட்டும் இன்னும் இரண்டு விஷயங்கள் என்னென்ன?

இரண்டாவது, அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. இங்கே பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் என்ன நட க்கிறது? ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ‘குண்டு வைத்தது நாங்கள்தான் என்று இந்தியன் முஜாஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன.

அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள். எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது? முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.

மீடியா இந்த விஷயத்தில் கேர்லசாக நடக்கிறது, தகவல் உண்மையா என்பதை செக் பண்ணாமல் செய்தி வெளியிடுகிறது என்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே அப்படி செய்வதாக நினைக்கிறீர்களா?

மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.

மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?

குண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்? மீடியாவின் மக்கள் விரோத நிலைப்பாடுக்கு மூன்றாவது உதாரணமாக எதை சொல்ல போகிறீர்கள்? ஒரு ஃபியூடல் சொசைட்டி மாடர்ன் சொசைட்டியாக மாறுகிற காலகட்டத்தில் அந்த மக்களும் நாடும் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு அறிவியல் சிந்தனை பரவ வேண்டும். அதற்கு மீடியா உதவ வேண்டும். ஐரோப்பாவில் நடந்ததை சொன்னேன். இங்கே என்ன நடக்கிறது? அறிவியல் சிந்தனையை தூண்டுவதற்கு பதில் ஜோசியம், மூடநம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களை பரப்புகிறது மீடியா. ஏற்கனவே நமது நாட்டில் 80 சதவீத மக்கள் ஜாதி, மதம், மூடநம்பிக்கை போன்ற விஷயங்களில் சிக்கி மனரீதியாக பின்தங்கி நிற்கிறார்கள்.




அவர்களை அந்த மாயைகளில் இருந்து விடுவித்து ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்துக்கு கொண்டுவர, முற்போக்கான எண்ணங்கள் உருவாக மீடியா தூண்டுதலாக இருக்க வேண்டுமா, வேண்டாமா? ஆனால் மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலையை நமது மீடியா செய்கிறது. பல சேனல்களில் பெரும்பாலான நேரம் ஜோசியம் ஓடுகிறது. இன்றைக்கு நீங்கள் இந்த கல் மோதிரம் போட வேண்டும், இன்ன கலர் சட்டை அணிந்தால் நீங்கள் இறங்கும் காரியம் வெற்றி என்றெல்லாம் அபத்தமாக சொல்லி மக்களின் மூளையை மழுங்கடிக்கிறார்கள். என்ன பேத்தல் இது!

ஆக, மீடியா என்ன செய்ய வேண்டும் என சமுதாயம் எதிர்பார்க்கிறதோ அதை செய்யவில்லை என்கிறீர்கள். தன்னை நம்பிய இந்தியாவை மீடியா கைவிட்டு விட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?

ஒரு பெரிய சமுதாய மாற்றத்தில் மீடியாவின் பங்களிப்பு அபாரமானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் மீடியா என்பது ஏதோ சாமான் உற்பத்தி செய்து சந்தையில் விற்கும் சாதாரணமான பிசினஸ் கிடையாது. அறிவு சம்பந்தப்பட்டது. சிந்தனை சம்பந்தப்பட்டது. மக்களுக்கு அறிவியல் அடிப்படையிலான புதிய சிந்தனைகள் உருவாக தூண்டுகோலாக செயல்படும் புனிதமான பணி மீடியாவுக்கு தரப்பட்டிருக்கிறது. அந்த பொறுப்பை அது செய்ய தவறினால் நாட்டை மக்களை கைவிட்டு விட்டதாகத்தானே அர்த்தம்?

இந்தியாவை இன்னும் மோசமாக்குகிறது மீடியா என்றா சொல்கிறீர்கள்?

அதுதான் என் மதிப்பீடு. ஒரு ஜோசியர் உட்கார்ந்துகொண்டு ‘இது அந்த ராசி, அது அணிந்தால் உங்களுக்கு ராசி‘ என கதை அளந்துகொண்டிருப்பதை எத்தனை சேனல்களில் பார்க்கிறோம்.

‘செய்தியை சரியாக சொல்வதில்லை; உண்மைகளை இஷ்டத்துக்கு திரித்து கூறுகிறது; கருத்தையும் வார்த்தைகளையும் வெட்டி ஒட்டி வேறு அர்த்தம் கொடுக்கிறது’என்பது மீடியா பற்றிய மக்களின் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அதேதான் என் கருத்தும். 2009 தேர்தலில் பார்த்தோம். முன்னெல்லாம் செய்தியாளர்கள் வேட்பாளரை பார்த்து, ‘எனக்கு பத்தாயிரம் கொடு; உனக்கு சாதகமாக செய்தி போடுகிறோம்‘ என்று பேரம் பேசினார்கள். அதை பார்த்து பத்திரிகை உரிமையாளர்களுக்கு வேறு ஐடியா உதித்தது. ‘நாம்தான் சம்பளம் கொ டுக்கிறோமே, செய்தியாளர்கள் இப்படியும் சம்பாதிக்க ஏன் இடமளிக்க வேண்டும்? நாமே சம்பாதிக்கலாமே?‘ என்று முடிவு செய்து, ‘ஒரு கோடி கொடுங்கள், நான் ஒரு பேக்கேஜ் தருகிறேன்‘ என்று டீல் போடுகிறார்கள். ஒரு பத்திரிகையில் ‘‘வேட்பாளர் ‘ஏ‘ அமோக வெற்றி பெறுவார்‘‘ என்ற செய்தி மேலே; ‘‘அவருக்கு டெபாசிட் போய்விடும், ‘பி‘தான் ஜெயிப்பார்‘‘ என்று கீழே முதல்பக்கத்திலேயே பிரசுரமான விசித்திரத்தை பார்த்தோம். கண்ணை விற்று சித்திரம் வாங்கும் வேலை.

இந்த மாதிரி பிரச்னைகளுக்கு தீர்வு காண நீதிபதி வர்மா தலைமையில் நியூஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் அமைத்து சுயமாக சில கட்டுப்பாடுகளை கொண்டுவர முயற்சி செய்தார்கள்...

அதில் எந்த பலனும் ஏற்பட்டதாக தெரியவில்லையே. நீங்கள் தொழில் நடத்துவது ஏழைகள் வாழும் நாட்டில்; அதனால் அவர்களுடைய பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தாக வேண்டும்; அதை விடுத்து ‘லேடி காகா வந்துவிட்டார்.. கரீனா கபூர் தனது மெழுகு சிலையை மிகவும் சிலாகித்தார்..’ இதெல்லாமா முக்கிய செய்தி ஆவது?

மீடியா ஏன் மாறவில்லை என நினைக்கிறீர்கள்?

அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அது ஒரு காரணம். கொஞ்சமாவது பயம் இருக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம்.

அதற்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?

பத்திரிகைகளை மட்டும்தான் பிரஸ் கவுன்சில் இப்போது கேள்வி கேட்க முடியும். பிரஸ் கவுன்சில் பெயரை மீடியா கவுன்சில் என மாற்றி டீவி சேனல்களையும் அதன் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சொல்லி திருந்தாத மீடியா நிறுவனத்துக்கு அரசு விளம்பரங்களை நிறுத்துவது; லைசென்ஸை குறிப்பிட்ட காலத்துக்கு முடக்கி வைப்பது போன்ற தண்டனை அளிக்க அந்த கவுன்சிலுக்கு அதிகாரம் வேண்டும். பிரதமருக்கு எழுதியிருக்கிறேன்.

அது பத்திரிகை சுதந்திரத்தை பாதிக்கும் என்பார்களே?

ஜனநாயகத்தில் எல்லோரும் மக்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவர்கள். எந்த சுதந்திரமும் எல்லையில்லாதது அல்ல. சில கட்டுப்பாடுகள் இருந்தாக வேண்டும். மீடியா இதை உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.

மீடியாவை உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது போலிருக்கிறதே?

நான் ரொம்பவும் மதிக்கிற சில மீடியாகாரர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக சாய்நாத்தை சொல்லலாம். அவர் மேல் எனக்கு ரொம்ப மரியாதை உண்டு. விவசாயிகள் தற்கொலை பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட ஆட்கள் குறைவு. பெரும்பாலான செய்தியாளர்கள் அரைகுறையாகத்தான் இருக்கிறார்கள். எகனாமிக் தியரி, பொலிடிகல் சயின்ஸ், லிட்டரேச்சர், ஃபிலாசபி போன்ற விஷயங்களில் ஆழ்ந்த அறிவு இல்லாதவர்கள்.


தகவல் - தினகரன் நாளிதழ் 02.11.2011.

நன்றி : பெரியார் முழக்கம் மற்றும் நண்பர் ரமேசு.

நினைவில் கொள்வோம் இவரை !


ஆரம்பப் பள்ளிப் படிப்பை கூட முறையாக கற்றிராத ஒருவர், பின்னாளில் அரசு பாலிடெக்னிக்கில் முதல்வராக வேலை பார்த்தார் என்றால் அது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான். அவர்தான் ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு).

பல்துறைகளிலும் நூற்றுக்கணக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அவர் ஓர் அறிவியல் புரட்சியாளர்தான்.

கோயமுத்தூருக்கு முதன் முதலில் என்ஜினீயரிங் படிப்பை அறிமுகப்படுத்தியவரும் அவரே. அவர் உருவாக்கிய சர்தார் ஹோப் பாலிடெக்னிக்கில் மாணவர்களை 6 வாரங்களில் ஆட்டோ மொபைல் என்ஜினீயராகவும், 42 நாட்களில் ரேடியோ என்ஜினீயராகவும் மாற்றினார். சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களும் பேராசிரியார்களும் இதை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.ராணுவ அதிகாரிகளுக்கும் நாயுடு இந்த பயிற்சியை அளித்தார்.

ஒரு குறிப்பிட்ட துறை என்று இல்லாமல் சகல துறைகளிலும் தனது ஆளுமையை செலுத்தினார். வழக்கத்தைவிட நீண்ட பருத்தி இழைகளைத் தரும் பருத்தி விதைகளை கண்டுபிடித்தார். அதன் விதைகளை 10 ரூபாய்க்கு விற்றார். ஜெர்மானியர்கள் இதை வாங்கி கலப்பினத்தை உருவாக்கினார்கள். அதற்கு "நாயுடு காட்டன்" என்ற பெயரே வைத்தனர். அவர் உருவாகிய பப்பாளி விதைகள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டன. நீரிழிவு, ஆஸ்துமா, வெள்ளைப்போக்கு போன்ற நோய்களுக்கு அவர் கண்டுபிடித்த மருந்துகளை அமெரிக்க மருந்து கம்பெனி "ஸ்பைசர்" வாங்கிக் கொண்டது.

ரூ.2 ஆயிரத்து 500க்கு ஒரு சிறிய காரை தயாரிக்க முடியும் என்றார் ஜி.டி.நாயுடு. அதற்கான புளூ பிரிண்டை மத்திய அரசுக்கு அனுப்பினார். அது மட்டும் நடந்திருந்தால், நானோ காருக்கு முன்னோடியாக ஜி.டி.நாயுடுவின் கார் இருந்திருக்கும்.

குறைந்த செலவில் குறுகிய நேரத்தில் வீடு கட்டும் திட்டம் ஒன்றையும் நாயுடு கண்டுபிடித்தார். அதன்படி, 7.11.1967 காலை 9.30 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு அடுத்த நாள் மாலை 3.45 மணிக்கு புதுமனை புகுவிழா நடத்தப்பட்டது. அவ்வளவு வேகமான தொழில்நுட்பம் அவரிடம் இருந்தது.

மின்சாரத்தால் இயங்கும் சவரம் செய்யும் கருவி, மின்சார மோட்டார், சப்பாத்தி, பூந்தி தயாரிக்கும் சமையலறை சாமான்கள், 640 பூட்டுகளை ஒரே சாவியில் திறக்கும் சாவி (Master Key) என்று பல்துறை வித்தகராக இருந்தார். தொழில் நுட்பம் என்பதை எட்டாத உயரத்தில் இருந்து இறங்கி, எளிமைப்படுத்தியதுதான் ஜி.டி. நாயுடுவின் வாழ்நாள் சாதனை.

தகவல் : தினத்தந்தி.


திரு. ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகளில் சில :












ஆட்டோ முருகன் (எ) தாயுமானவன்!

'சமீபத்தில் ஒரு வீட்ல இருந்து துர்நாற்றம் வந்துச்சு. பூட்டை உடைச்சிட்டுப் போய்ப் பார்த்தா, ஒரு மூலையில போர்வைக்குள்ள முடங்கிக் கிடந்தாங்க வயசான ஒரு அம்மா. 90 வயசாச்சும் இருக்கும். போர்வையை உடம்புல இருந்து பிரிக்கக்கூட முடியலை. பஞ்சு பஞ்சா பிஞ்ச சதையோட போர்வை ஒட்டிக்கிடந்துச்சு. அந்த அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டு, அவங்க யாருன்னு விசாரிச்சா, வசதியானவங்களாம். கம்யூனிஸ்ட் போராளியா ஜெயிலுக்கு எல்லாம் போயிருக்காங்க. வயசான பிறகு அவங்களைப் பராமரிக்கச் சங்கடப்பட்டு, அப்படித் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டாங்களாம். என்ன புள்ளைங்களோ?''

- இதுவும் இன்னமுமாகப் பல சோகக் கதைகளைப் பகிர்ந்துகொள்ளும் முருகன், ஓர் ஆட்டோ டிரைவர். 'தெருவின்டே சப்தம்’ என்று இவர் எழுதிய புத்தகம் முழுக்க ஹ்யூமன் ஸ்டோரிகளால் நிரம்பி வழிகிறது. முருகனின் 'போட்டோ ரிக்ஷா’வும் கேரளம் முழுக்கப் பிரபலம்!

முருகனின் ஆட்டோ முழுக்கத் தெருவில் வாழும் குழந்தைகளின் புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கும். செல்லும் இடம் எங்கும் அதைக் காண்பவர்களின் சிந்தனைகளை, எண்ணங்களைச் சில நிமிடங்களுக் கேனும் இழுத்துப் பிடித்து நிறுத்தும்!

''நான் பிறந்தது தமிழ்நாட்டில் செங்கோட்டைப் பக்கம். குடிப் பழக்கத்தால் என் அப்பா இறந்து போக, அம்மாதான் என்னைக் கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. ஒரு தங்கச்சி. அம்மாவுக்கு நாமளும் கஷ்டம் கொடுக்க வேண்டாம்னு ஆறு வயசுலயே தெருவுக்கு வந்துட்டேன். தெருன்னா... தெருவேதான்!

சாப்பிடுறது, தூங்கறது, விளையாடுறது எல்லாமே தெருவில்தான். ஹோட்டல்ல இருந்து வீசப்படும் எச்சில் இலைகளை அடிச்சுப் பிடிச்சுச் சாப்பிடுவேன். மார்க்கெட் தரையில சிந்திச் சிதறிக்கிடக்குற காய்கறிகளை ராத்திரி போய்ப் பொறுக்கிட்டு வந்து வீட்ல கொடுப்பேன். வீட்டுக்கு என் முதல் சம்பாத்தியம்னா, அதுதான்.

10 வயசு வரைக்கும் அப்படித்தான் போச்சு. அப்போ கடவுள் மாதிரி வந்தார் மவுரிஸ் ஃபாதர். என்னை மாதிரி ஆதர வற்ற பலரைத் தன்னோடு அழைச்சுட்டுப் போய் தங்கவெச்சார். குளிக்கிறது, பல் விளக்குறதுனு அடிப்படையான விஷயங்களைக் கத்துக்கிட்டதே அங்கதான்.என்னைப் படிக்கவெச்சார். ஆனா, பாவம்... ஒரு கட்டத்துல இல்லத்தை நடத்தவே ஃபாதர் ரொம்ப சிரமப்பட, 'நம்மளால முடிஞ்ச உதவி’னு நினைச்சுக்கிட்டு திரும்பத் தெருவுக்கே வந்துட்டேன்.

மெக்கானிக் ஷாப்ல வேலை பார்த்தப்ப, ஆட்டோ ஓட்டக் கத்துக்கிட்டேன். அந்தச் சமயம்தான் 'சைல்டு லைன்’ல வேலைக்குச் சேர்ந்தேன். தெரு ஓரத்தில் இருக்கும் குழந்தைகளைக் காப்பகத்துல சேர்க்கிறதுதான் என் வேலை. என்னால முடிஞ்ச வரை நிறையக் குழந்தைகளைக் காப்பகத்தில் சேர்த்துவிட்டேன்.

அப்போ கிடைச்ச நல்லவங்க அறிமுகம் மூலமா, டிஜிட்டல் கேமராவும் லேப் டாப் பும் கிடைச்சது. ஆட்டோ ஓட்டி சம்பாதிச் சதைவெச்சு தெருவில் வசிப்பவர்களுக் காக 'தெருவோர ப்ரவர்தக்கா அசோசி யேஷன்’ அமைப்பைத் தொடங்கினேன். கையில கேமரா இருந்ததால், கண்ல தட்டுப்படுற வித்தியாசமான காட்சிகளைப் படம் எடுக்கும் பழக்கம் தொத்திக்கிட்டது. ஒரு முறை லாரி டயருக்கு அடியில ஆறு மாச சிசுவைப் படுக்கவெச்சுட்டு, பெத்த வங்க பக்கத்துல ரோடு போடுற வேலை பார்த்துட்டு இருந்தாங்க. அதைப் படம் எடுத்தபோதுதான், இப்படி ஆதரவு இல்லாம தெரு ஓரத்தில் விடப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையை கேமராவில் பதிவு பண்ணணும்னு தோணுச்சு.

பல மாதங்கள் அப்படிப் படங்கள் எடுத்ததில் குழந்தைகளைப்பத்திக் கவலைப்படாத இந்தியச் சமூகத்தின் நிஜ முகம் கண்ல தட்டுப்பட்டது. 'ஐ.எஸ்.ஐ. முத்திரை தேவைப்படாத இந்திய ஏழைக் குழந்தைகள்’னு சொல்லி, உலகத் துக்குக் காட்டணும்னு ஒரு கோவம் வந்துச்சு. அந்த புகைப்படங்களை வெச்சு ஒரு கண்காட்சி நடத்தலாம்னு நினைச்சேன். இடம் கிடைக்கலை. 'நம்ம ஆட்டோவுலயே மொபைல் எக்ஸிபிஷன் நடத்துவோம்’னு முடிவு எடுத்தேன். அப்படித்தான் இந்த 'போட்டோ ரிக்ஷா’ ஐடியா கிடைச்சுது. படங்களை ஆட்டோவில் ஒட்டிவெச்சுக்கிட்டு கேரளா முழுக்க வலம் வந்தேன். நிறையப் பேர் பார்த்தாங்க. சிலர் கிட்ட வந்து பேசினாங்க. ஒண்ணு, ரெண்டு பேர் 'இந்த நிலைமைக்கு யார் காரணம்?’னு யோசிக்க ஆரம்பிச்சாங்க. இந்தச் சிந்தனை ஒவ்வொருத்தர் மனதிலும் மாற்றத்தை உண்டாக்கணும். அதுதான் என் ஆசை!

என் புகைப்படம் ஒண்ணுக்கு தேசிய அளவில் விருது கிடைச்சுது. பல பத்திரிகைகளில் இருந்து போட்டோ ஜர்னலிஸ்ட் வேலைக்குக் கூப்பிட்டாங்க. ஆனா,புகைப் படக்காரன்கிறதைக் காட்டிலும் சமூகப் பணியாளனாத்தான் என்னை முன்னிறுத் திக்க விரும்புறேன்!''

- முருகனின் வார்த்தையில் தொனிக்கும் ஈரம் அவரது விழிகளிலும் பிரதிபலிக்கிறது!


நன்றி : நிருபர் : ந.வினோத்குமார். படங்கள் : எம்.விஜயகுமார்--விகடன்

Wednesday, November 2, 2011

தகவல் களம் !

அமெரிக்காவின் தெற்கு மாகாணங்கள் பலவற்றில் தீ எறும்புகள் என்ற ஒரு வகை எறும்புகள் அதிகம் உள்ளன. இவை கடித்த இடத்தில் தீ பிடித்து எரிவது போன்ற உணர்வு ஏற்படும். தீ எறும்புகளின் நஞ்சினால் அதிகம் கடிப்பட்டவருக்கு உடனடி சிகிச்சை அளிக்க விட்டால் மரணம் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு.



டயாலிசிஸ் கருவியைக் கண்டுபிடித்தவர் ஹாலந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர் வில்ஹெம் கோலோப் (Willem Johan Kolff).

தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகத்தை முதன் முதலில் அமைத்தவர் ராஜா சர்.அண்ணாமலை செட்டியார்.



தகவல் : முக்கிமலை நஞ்சன் நீலகிரி

வரலாற்று பார்வையில் 7 ஆம் அறிவு - வே.மதிமாறன்


7 ஆம் அறிவு படம் பார்த்துவிட்டு அதைப்பற்றி எழுத வேண்டும் என்று தோழர்கள் கேட்டுக் கொண்டார்கள். தங்கம் ஆசிரியர் ஷேக் மொய்தீன் அக்டோபர் 26 ஆம் தேதி “படம் எனக்கு பிடித்திருக்கிறது. படத்தை பாராட்டி வரும் தங்கம் இதழில் எழுதுவதாக இருக்கிறோம். நீங்கள் அவசிம் பாருங்கள்” என்றார். சரியென்று ஒருவழியாக குடும்பத்தோடு சென்று பார்த்தேன். பத்தாம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகன் கவின் சொன்னான், “தசாவதாரம் கதையையே எடுத்து இருக்காங்கப்பா. அதுலேயும் ஆரம்பத்துல அந்தக் காலத்து சம்பவம் வரும். இதுலேயும் அது மாதிரிதான். அதுல அமெரிக்காவிலிருந்து, ஒருத்தன் மோசமான கிருமியை தேடி இந்தியாவுக்கு வருவான். இதுல சீனாவுல இருந்து ஒருத்தன் வர்றான்.” என்றான். உண்மைதான். தசாவதாரம், வைணவப் பெருமையோடு அய்யங்கார் உயர்வை பேசியது. நேரடியான பார்ப்பனிய கருத்தை அய்யங்கார் Version ஆக காட்டியது. 7 ஆம் அறிவோ, இந்து பார்ப்பனிய சார்பு நிலைக்கு தமிழன் Paint அடித்திருக்கிறது. தசாவதாரம், 7 ஆம் அறிவு இரண்டும், கதையில் மட்டுமல்ல, பவுத்தம் பற்றிய கருத்துக்களை இருட்டடிப்பு செய்ததிலும் ஒரே மாதிரி இணைந்திருக்கின்றன. தசாவதாரம், வைணவ கோயில்களை சைவர்கள் இடித்ததாக காட்டியது.

ஆனால் வரலாற்றில் பவுத்த கோயில்களை வைணவர்கள் இடித்ததே அதிகம். ஸ்ரீ ரங்கநாதனிலிருந்து, காஞ்சிபுரம் அத்தி வரதர், திருமலை கோவிந்தா வரை அந்த சிலைகள் இருக்கும் நிலை, உலகம் முழுக்க புத்தர் சிலைகள் இருக்கும் நிலை. குறிப்பாக பள்ளிகொண்ட நிலையிருக்கும் புத்தர் சிலை உலகப் புகழ் பெற்றது. அதுதான் ஸ்ரீ ரங்கத்திலிருக்கிறது.


போதிதர்மன், புத்தனின் பாதங்களில் சரணடைந்தான். அவன் ஒரு பவுத்தன். போதிதர்மன் தமிழன் என்பதினாலோ சித்த வைத்தியனாகவோ சீனாவிற்கு செல்லவில்லை. புத்தரின் கருத்துக்களை சுமந்து கொண்டுதான் அவன் சீனாவிற்கு சென்றான். போதிதர்மன் தமிழனாக மட்டும் இருந்திருந்தால், காஞ்சிபுரத்தில் அவன் இருந்த தெருவுக்கே தெரிந்திருக்க மாட்டான். பவுத்தனாக இருந்ததினால்தான், அவன் உலகமெங்கும் உள்ள பவுத்த நாடுகளில் கொண்டாடப்பட்டு, இந்து ஜாதி வெறி பவுத்த எதிர்ப்பு மன்னர்களால், தமிழகத்தில், இந்தியாவில் இருட்டடிப்பு செய்யப்பட்டான். புத்தரை எந்த பிராந்திய, மொழி உணர்வுகளுக்குள் அடக்க முடியும்? அவருக்கு இந்தியாவில் என்ன மரியாதை இருக்கிறது? பிறகு அவரின் சீடனுக்கு மட்டும் என்ன மரியாதை இருக்கும்? நல்லதும் கெட்டதும் புத்தருக்கு என்ன நேர்ததோ அதுவே அவர் சீடர்களுக்கும் நேர்ந்தது. போதிதர்மனிடம் பவுத்தத்தை கழித்துவிட்டு பார்த்தால் ஒன்றுமில்லை. ஆக, அவன் தமிழனல்ல. பவுத்தன். ஆனால், 7 ஆம் அறிவு பவுத்ததிடமிருந்து அவனை பிரித்து, தமிழனாக அடையாளப்படுத்துகிறது. சிக்கல் அதிலிருந்தே, அதனாலேயே துவங்குகிறது. தமிழன் என்பதற்கு மொழியைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லுபடியான அடையாளங்கள் இல்லை. அதனால்தான் இந்து அடையாளங்களை எல்லாம் தமிழன் அடையாளமாக காட்ட வேண்டிய மோசடியும் அறியாமையும் இணைந்து, 7 ஆம் அறிவாக அவதாரம் எடுத்திருக்கிறது.

“இன்னைக்கு வந்திருக்கிற கடிகாரம் என்னங்க நேரம் காட்டுது, ஒவ்வொன்னும் ஒவ்வொரு நேரம் காட்டுது. எங்க பாட்டி சூரிய வெளிச்சத்த வைச்சே சரியான டைம் சொல்லுவாங்க. துல்லியமா இருக்கும். அதாங்க நம்ம தமிழனோட அறிவியல்” என்று சுவிஸ்லிருந்து வாங்கிய, கருணை கிழங்கு சைசு கடிகாரத்தை கையில கட்டிக்கொண்டு பேசுகிற ஒரு ……… மாதிரி, இந்த படத்துலேயும் வாழ்க்கையை நவீன அறிவியல் வளர்ச்சியின் மீது வசதியாக வைத்துக் கொண்டு, வாயலேயே வடை சுடுகிற வசனங்கள் நிறைய இருக்கு. “நாம இல்ல உண்மையான தமிழர்கள், ஆயிரம், ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி வீரத்தையும நாகரீகத்தையும் இந்த உலகத்துக்கே சொல்லிக்கொடுத்தாங்களே அவுங்கதான் உண்மையான தமிழர்கள்” என்று வசனம் பேசிவிட்டு, பிறகு ‘நவக்கிரகம், ஆரிய பட்டா, பஞ்சாங்கம், அமாவாசை’ என்று தமிழனின் பெருமையாக பேசுகிறது. ஆரிய பட்டா தமிழனா? பெயரிலேயே ஆரிய என்று இருக்கிறது. பட்டறிவுக்கும், அறிவியலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களை என்னவென்று சொல்வது? நல்லா.. வருது.. சொன்னா அசிங்கமாயிடும்.

நவீன தொடர்பு சாதனங்களின் உச்சமான இணையத்தில், Face Book ல் ஜாதி பெருமை பேசுகிற படித்த ஒருவனைப் போல், கிராபிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, தமிழனின் பெருமையாக இந்துப் பெருமை பேசுகிறது 7 ஆம் அறிவு. (எப்படியோ சிரமப்பட்டு சினிமாகாரனா ஆயிடுறாங்க. பிறகு கருத்து கந்தசாமியா மாறி கண்டத சொல்லி நம்ம தாலிய அறுக்குறாய்ங்க. இருக்குற முக்கியமான வேலையெல்லாம் உட்டுட்டு இந்த அக்கப்போருக்கு எல்லாம் விமர்சனம் எழுதி தொலைக்க வேண்டியதா இருக்கு.) நம்ம ஊர்ல சண்டைன்னு வந்துட்டா மண்ண வாரி தூத்துறதுதான் வழக்கம். அதையே கிராபிக்ஸ்ல, அப்படியே புழுதிய கிளப்பி போதிதர்மன் எதிரி மேலே குப்பையை வாரி அடிப்பதுபோல் காட்டியிருக்கிறார்கள்.



இந்த முறையை சென்னை Corporation க்கு சொல்லிக் கொடுத்தா, சென்னையாவது சுத்தமாகும். கொடிய தொற்று நோயிலிருந்து சீன மக்களை காப்பாற்றுவதற்காக போதி தர்மன் சீனாவிற்கு போனாராம். ஆனால், அவர் வாழ்ந்த தமிழ்நாட்டில் பெரியம்மை, காலரா போன்ற தொற்று நோய்களால், சித்த வைத்தியத்தில் சிறந்தவர்களான தமிழர்கள் கும்பல் கும்பலாக செத்துக் கொண்டிருந்தபோது, போதிதர்மனாக வந்து தமிழர்களுக்கு மருத்துவம் பார்த்தது வெள்ளைக்காரன்தான். (அவுனுக்கும் வந்துடுமோ என்ற பயம்தான்) வெள்ளைக்காரன் வருகைக்குப் பிறகுதான் பெரியம்மை போன்ற நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அற்ப ஆயுள் இந்தியர்களுக்கு, ஆயுள் 60 வயதை தாண்டியது.

அதுபோல், சீன மக்களின் வாழ்க்கையை மேன்மை படுத்தியது, போதிதர்மனின் குங்பூ கலையல்ல. மாவோ என்கிற மகத்தான தலைவன் கடைப்பிடித்த மார்க்சியம் என்கிற மந்திரமே. ‘மனிதர்களை கொன்று நரபலி கொடுக்கும் நிலையில் மற்ற நாடுகள் இருந்தபோது, நாம் கலைகள் பல வற்றி்லும் மருத்துவம்…’ என்று பெருமை பேசுகிறது படம். போன நூற்றாண்டுவரை பெண்களை உடன்கட்டை என்ற பெயரில் உயிரற்ற கணவனின் உடலோடு, ஒன்றாக வைத்துக் கொளுத்திய இந்து சமூகத்தில் இருந்து கொண்டு எப்படி இந்த ‘பெருமையை’ கூச்சமில்லாமல் எழுத முடிந்தது? ஹாலிவுட் படங்களை பார்த்து, வில்லனுக்கு கிறிஸ்துவ பெயர்களை வைக்கிற தமிழ் பட இயக்குநர்கள், கதாநாயகனுக்கு மட்டும் இந்து பெயர்தான் வைப்பார்கள். அதுவும் விஞ்ஞானி என்றால், கண்டிப்பாக பார்ப்பனப் பெயர்தான். இந்தப் படத்திலும் சுபா சீனிவாசன்தான் ஆராய்ச்சியாளர். (சித்த வைத்தியரான சீனிவாசன், தன் பொண்ணுக்கு வச்ச பேரப் பாரு.) இதுதான் 7 ஆம் அறிவின் தமிழ் உணர்வு.


இவர்களுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவோ பராவயில்லை. அவரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் விஞ்ஞானிக்கு ‘முருகன்’ என்ற தமிழ் பெயரை வைத்திருந்தார். ‘ஊழல் விஞ்ஞானியாக வருகிறவருக்கு பெயர், ரங்கராஜன்தானே. அது பிராமண பெயர்தானே’ என்று சிலர் பதில் சொல்லலாம். அது சரி, தமிழை குரங்கு என்று சொன்னவர் பெயர் நெல்சன். உளுந்தூர்பேட்டை ஊரு. அவரைத்தான் மிக அசிங்கமான வார்த்தையால் சுபா சீனிவாசன் திட்டுவார். தமிழுக்கு எதிராக கருத்து சொன்னவர் நெல்சன் என்கிற கிறித்துவ குறியீட்டோடு, படத்தின் கடைசியில் ‘மதம் மாற்றத்தினால் நம் அடையாளத்தை அழித்து விட்டார்கள்’ என்ற அறிவுரையை பொறுத்திப் பார்த்தால் புரியும். ஆனால், போதிதர்மனின் சிறப்பே அவர் புவுத்தனாக மதம் மாறியதுதான்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக உருவானதற்கு அவர் குடும்பத்தின் கிறித்துவ மதமாற்றம் ஒரு முக்கியக் காரணம். கிறித்துவராக இல்லாமல் இருந்திருந்தால் அவர் இசை துறைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் கிறித்துவ மதம் எந்த வகையில் தமிழனின் அடையாளத்தை மறைத்தது. (பின்னணி இசையில் ஹாரிஸ் ஜெயராஜ் அதிக சத்தத்தோடு சிரமப்படுத்திட்டாரு. பாடல்களில் இளைராஜா சாயில் அமைந்த, எம்மா..எம்மா.. காதல் பொன்னம்மா… பாடல், அபூர்வசகோதரர்கள் படத்தில் வந்த ‘உன்ன நினைச்சு பாட்டு படிச்சேன்..தங்கமே..’ என்ற பாடலை நினைவுபடுத்தியது. சூழலும் அந்த படம்போன்றே சர்க்கசில் வேலை செய்பவரின் காதல் தோல்வி. அதற்காகத்தான் அதே எஸ்.பி.பியை பாட வைத்தார்களோ? சீன இசை பாடல், ‘டிவிங்கிள், டிவிங்கள் லிட்டில் ஸ்டார்…’ Rhymes யை நினைவுட்டியது.)

“நம்முடைய வீரமும், பெருமையும் நமக்கு தெரியக்கூடாது என்பதினால், நம்ம ஆண்ட ஒவ்வொருத்தரும் அத திட்டமிட்டு மறைச்சிட்டாங்க” என்று வீரமாக பேசுகிறார் போதிதர்மனோட DNA. சரி, வீரமா இருந்த நம்மள ஒருத்தன் மட்டுமா, ‘ஒவ்வொருத்துனும்’ எப்படி அடிமையாக்கி ஆண்டான்? அப்போ நம்ம வீரம் அப்படிங்கறது என்ன? ‘மஞ்சள உடம்புல பூசிக்கிறத மருத்துவம்ன்னு சொல்லிக் கொடுங்க..’ சரி. சொல்லிக் கொடுத்துடலாம். ஆனால், பொம்பளதான் மஞ்சள் தேச்சி குளிக்கனும்னு இருக்கே, அதுக்கு என்ன சொல்றது? இதுபோக, சீன எதிர்ப்பு, இலங்கை தமிழர்களின் துயரங்களை நினைவூட்டுவது போன்ற வசனம் இவைகள் எல்லாம் புலம் பெயர்ந்து வாழுகிற தமிழர்களை குறிவைத்து எழுதப்பட்ட எப் எம் ரைட்ஸ் வசனங்களாகத்தான் இருக்கிறது. இலங்கைக்கு 7 ஆம் அறிவு போகும்போது அந்த வசனங்களை தூக்கிட்டுதான் அனுப்புவாங்க. இல்லன்னா சிங்கள அரசு இந்தப் படம் எடுத்தவங்கள சூ…. லேயே சுடுவான். ஆனால், இங்கு இருக்கிற இளியச்சவாய் தமிழன்கிட்ட மட்டும் இடஓதுக்கிட்டுக்கு எதிரான வசனங்களோட திரையிடலாம். காரணம் நம்மதான் தமிழர்களாச்சே. இதுல பெரிய கொடுமை படத்தோட தயாரிப்பாளர் இடஓதுக்கிட்டுகாகவே கட்சி நடத்துகிற திமுக தலைவரோட பேரன். கஷ்டம். யாருக்கு? யாருக்கோ!


பல்லவ மன்னர்களை தமிழர்களாக காட்டியிருக்கிறது 7 ஆம் அறிவு. அவர்கள் தமிழர்களா இல்லையா என்கிற பட்டிமன்றம் நடப்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், அவர்கள் பவுத்தர்கள் இல்லை. களப்பிரர்கள் என்கிற சமண மற்றும் பவுத்த மன்னர்களின் காலங்கள் முடிந்த பிறகு, துவங்குகிறது பல்லவர்களின் காலம். களப்பிரர்கள் சமணர்கள் என்பதினாலேயே அவர்களின் காலத்தை இருண்ட காலம் என்று, வரலாற்று ரீதியாக பொய் சொல்லப்பட்டது. அவர்கள் நிச்சயம் தமிழர்கள் இல்லை என்பது மட்டுமல்ல தமிழின் விரோதிகள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

பல்லவர்களின் பவுத்த வெறுப்பும், சமஸ்கிருத விருப்பும், சைவ, வைணவ சமயங்களுக்கு அவர்கள் விளக்கு பிடித்த காரணத்தினாலும் அவர்களின் ஆட்சி சிறப்பானது, அவர்கள் தமிழர்கள் என்றும் கட்டுக்கதை பரப்பப்பட்டது. பல்லவர் காலத்தில்தான் தேவாரம் எழுதிய திருஞானசம்பந்தனும், திருநாவுக்கரசும் சமண சமயத்தை கொன்று, சாகும் தருவாயில் இருந்த, சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர். அதேபோல் வைணவத்திற்கும் பல்லவர்கள் தீவிட்டி பிடித்திருக்கிறார்கள். ஆழ்வார்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்களை ‘மங்களா சாசனம் செய்த திருப்பதிகள்’ என பல்லவர்களால் அழைக்கப்பட்டன. பல கிராமங்கள் கோயில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் தானமாக தரப்பட்டன. பவுத்தத் துறவிகளை கேலி செய்து மத்த விலாச பிரகசனம் என்ற நாடகத்தை மகேந்திர வர்மன் என்கிற பல்லவ மன்னன் வட மொழியில் எழுதியுள்ளான். எவனெல்லாம் சமண, பவுத்த சமயங்களை தீ வைத்துக் கொளுத்தி, சைவ சமயத்திற்கு தீவிட்டி பிடித்தானோ அவனை எல்லாம் வரலாற்று ஆய்வாளர்கள், தேர்ந்த கதாசிரியர்கள் போல், மகா மன்னர்கள் என்றும் பச்சைத் தமிழர்கள் என்றும் கதைகளையே வரலாறாக எழுதினார்கள்.

அப்படித்தான் நரசிம்ம பல்லவன், ராஜராஜ சோழன் போன்றவர்கள், ஆனந்த விகடன் கிருஷ்ணமூர்த்தியாக இருந்து பின் கல்கி அவதாரம் எடுத்த, கல்கி கிருஷ்ண மூர்த்திக்கு மகா மன்னர்களாக தெரிந்தார்கள். அதனால்தான் பொன்னியன் செல்வனில் ராஜராஜ சோழனையும், சிவகாமி சபதத்தில் நரசிம்ம பல்லவனையும் தமிழனின் சிறந்த மன்னர்களாக சித்தரித்தும் பவுத்த மன்னன் புலிகேசியை வில்லனாகவும் கதை எழுதினார்.




அதன் பொருட்டே இன்றுவரை ஆனந்த விகடன் போன்ற இதழ்கள், புலிகேசி மன்னர்களை கோமாளிகளாக சித்தரித்து தொடர்ந்து கார்டூன், ஜோக் என்று நக்கலடிக்கிறார்கள். ஆனந்த விகடனில் பயிற்சி எடுத்த ஒரு இயக்குரும் புலிகேசி மன்னனை கோமாளியாக படம் எடுத்தார். கல்கிக்கும், இந்திய வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அவர்களும் இவரைப்போல் நாவல்கள்தான் எழுதினார்கள். டாக்டர் அம்பேத்கர் சொல்வார், ‘இந்தியாவிற்கு ஒரு முறையான வராலாறு என்று சொன்னால், அது பவுத்ததிற்கும் பார்ப்பனியத்திற்கும் நடந்த போராட்டம்தான்’ என்பார். 7 ஆம் அறிவில் குறிப்பிடுகிற காலம் முதலாம் மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் காலம். ஏறக்குறைய திருநாவுக்கரசு சைவ சமயம் பரப்பிய காலம். அதற்கு பிறகு இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேஸ்வரவர்மன் இவர்களுக்குப் பிறகு இரண்டாம் நரசிம்மவர்மன் காலம். இவன் காலத்தில்தான் தேவாரம் பாடிய சுந்தரர் இந்த மன்னனின் துணையோடு, சமண சமயத்தை சூறையாடி, சைவ சமயத்தை பரப்பிய காலம். இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட பல்லவன் இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டதுதான் காஞ்சி கைலாச நாதர் கோயில்.

அந்தக் கோயில் கல்வெட்டுகளில், அவன் தன் வரலாறை முழுக்க சமஸ்கிருதத்தில் பதித்துள்ளான். ஆக, 7 ஆம் அறிவில் காட்டப்படுகிற போதிதருமன், பல்லவ ராஜகுமாரன் அல்ல, அவன் பல்லவர்களால் ஒடுக்கபட்ட பவுத்த போதகர். காஞ்சிபுரத்தில் இருந்த பவுத்த மடத்தில், பயின்றவர். ‘இனி இங்கு பவுத்தத்தை பரப்ப முடியாது’ என்ற காரணத்தால், சீனா சென்றவர். அவரைப் போலவே அவருடன் படித்த போதிருசி என்பவர் ஜப்பான் சென்றார். சரி, போதிதர்மனை தமிழன் என்றே வைத்துக் கொள்வோம். இப்போது அந்த பெருமையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இவருக்கு 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரின் உயரிய கருத்துக்களை பின்பற்றுவதற்கு பதில், வள்ளுவரையே ‘தன் ஜாதிக்காரர்’ என்று எல்லா ஜாதிக்காரனும் உரிமை கொண்டாடுகிறான். இப்படி ஜாதி வெறி பிடித்த படித்த தமிழர்களிடம், போதிதர்மனை பரிந்துரைப்பதின் மூலம், இனி போதிதர்மனையும் தங்கள் ஜாதிக்காரராகத்தான் அடையாளப்படுத்திக் கொள்வார்கள். ஏனெனில் தமிழின உணர்வு, ஜாதி உணர்வில்தானே முடிகிறது.


இந்தப் படத்தில், நாடு கெட்டுபோவதற்கான மூன்று முக்கிய காரணங்களாக சொல்லபடுவதில் முதல் காரணம் Reservations. இடஓதுக்கீடு. எனக்கும் கூட அப்படித்தான் தோணுது. தந்தை பெரியார் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து, கல்வியில் இடஓதுக்கீடும் கிராமப்புற பள்ளிக்கூடமும் கொண்டு வருவதற்கு பாடுபட்டார். ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த சமூகத்திலிருந்து படித்த வந்த சிலர், சினிமாகக்காரனாக மாறி இப்படி சமூகத்திற்கும், ஒடுக்கபட்ட மக்களுக்கும் எதிராக வாயில வர்றத எல்லாம் வசனமா எழுதிகிட்டு இருக்காங்க. இதுக்கா இவுங்க படிச்சது? இதுக்கு இவுங்க பெசமா ஆடு, மாடே மேய்ச்சிருக்கலாம். அதுவே இவர்கள் எடுக்கிற சினிமாவை விட மேன்மையானது. சமூகத்திற்கு பயனுள்ளது.





நன்றி : சமூக சிந்தனையாளர் வே.மதிமாறன் வலைப்பூ
(http://mathimaran.wordpress.com)

Tuesday, November 1, 2011

நம்பினால் நம்புங்கள் !


இரண்டாவது ராணி எலிசபெத் 16 நாடுகளுக்கு ராணியாக இருந்தார்.




ஆண்களைவிட பெண்களுக்கே சுவை உணர்வு அதிகம்.






அமெரிக்க விண்வெளி வீரர்கள் 24 பேர் ஓஹியோ (Ohio) மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மாகாணத்தில்தான் விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களும். நிலவில் முதலில் கால் பதித்த நீல் ஆர்ம்ஸ்டராங்கும் பிறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






தகவல் : முத்தாரம் இதழ்

ரஷ்யாவின் ரகசிய அறிக்கை அம்பலமானது


கூடங்குளம் அணுமின் திட்டம் ஆபத்தானது

கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தீவிரமாகி வரும் நிலையில் மன்மோகன் சிங் ஆட்சி, அத் திட்டத்தை நிறைவேற்றும் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. மக்களுடைய போராட்டத்துக்கு ‘மதச்சாயம்’ பூசும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படு கின்றன. கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் தூண்டி விடுவதாக பிரச்சாரம் செய்யப்பட்டு ‘இந்து’ அடையாளத்தோடு, சில அமைப்புகள் அணுமின் திட்டத்துக்கு ஆதரவாக, களமிறக்கப்பட்டுள்ளன. அணுவின் ஆபத்து மதங்களைக் கடந்து அனைத்து மக்களுக்கும் எதிரானது என்பதே உண்மை.

பார்ப்பனர்கள் இதில் அணு உலைத் திட்டங் களுக்கு ஆதரவாக களமிறக்கப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூரில் பார்ப்பனர்கள் நடத்தும் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் கூடங்குளம் திட்டத்துக்கு ஆதரவு திரட்டும் பரப்புரை இயக்கம் ஒன்று, கடந்த 23 ஆம் தேதி காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘இரசாயன தொழிற்சாலைகள் சங்கம்’ என்ற அமைப்பின் பெயரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் கல்பாக்கம் அணு மின் நிலைய இயக்குனர் இராமமூர்த்தி, கூடங்குளம் அணுமின் நிலையத் தலைமைக் கட்டுமானப் பொறியாளர் பி.சி.பாடக் ஆகியோர் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த ஆபத்தும் வராது என்றும், உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட் டுள்ளன என்றும் பேசினர். தொடர்ந்து கேள்வி நேரம் அறிவிக்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில் இல்லாததால் கூச்சல் குழப்பம் நிலவியது. கூட்டத்துக்கு ஆர்.எஸ். எஸ். பார்ப்பனர்கள் கணிசமாக வந்திருந்தனர். கேள்விகளை கேட்க விடாது அவர்கள் தடுத்து கூச்சல் போட்டனர்.


கூடங்குளத்தில் கடந்த 100 ஆண்டுகளில் பல முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அவை எல்லாமுமே 250 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளாகவே நிகழ்ந்துள்ளது. ஆனால், கூடங்குளம் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 300 கிலோ மீட்டருக்கு அப்பால்தான் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தவறான தகவல் தரப்பட்டுள்ளது. இதை மேடையில் ஏறி ஒரு பார்வையாளர் கேட்ட போது, விஞ்ஞானிகளிடமிருந்து பதில் இல்லை. தொடர்ந்து கேள்விகள் கேட்பதை தடுத்ததால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்தக் கூட்டத்தில் பார்வையாளர்களாக பெரியார் திராவிடர் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயலாளர் ஜி.இராம கிருட்டிணன், அக்கட்சி மாநிலங்களவை உறுப் பினர் டி.கே. ரங்கராசன், சட்டமன்ற உறுப்பினர் சவுந்தர்ராசன் ஆகியோரும் வந்திருந்தனர். எதிர்ப் பாளர்களை டி.கே.ரங்கராசன் சமாதானப் படுத்தினார். எழுத்தாளர் ஞாநி, வழக்கறிஞர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட தோழர்கள் கேள்விகளை எழுப்பினர். கேள்விகளுக்கு உரிய விளக்கம் தரப்படாததால் கூட்டம் குழப்பத்தில் முடிந்தது.

அக்.23 ஆம் தேதி மாலை கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிராக சென்னையில் பனகல் மாளிகை அருகே தமிழக இளைஞர் எழுச்சி இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். தமிழக மக்களுக்கு எதிராக மூன்று தமிழர்களை தூக்கிலிட முடிவு செய்த இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி, ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் ஆபத்தை உருவாக்கக் கூடிய அணுமின் திட்டத்தை திணிக்கிறது. இரண்டு நடவடிக்கைகளுமே தமிழர்களின் இறையாண் மைக்கு எதிரான இந்திய தேசிய பார்ப்பன ஆட்சியின் கொடூர செயல்பாடுகளாகும் என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக அண்மையில் ஏடுகளில் வந்துள்ள சில செய்திகளை அவர் சுட்டிக் காட்டினார்.

1) கூடங்குளத்தில் நிறுவப்படவிருக்கும் ரஷ்யாவின் அணுஉலைகள் ஆபத்து இல்லாதவை என்றும், பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது. அண்மை யில் ரஷ்யாவின் அரசு அணு நிறுவனங்களிலே பணியாற்றும் அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் - ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வேதேவ் அவர்களிடம் ரஷ்யாவில் தயாரிக்கப் படும் அணு உலைகள் பற்றிய ஆய்வறிக்கையை கடந்த ஜூன் மாதம் வழங்கியுள்ளனர். இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது அதை எதிர் கொள்ளும் ஆற்றல் இந்த அணுஉலைகளுக்கு இல்லை என்று அந்த அறிக்கையில் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


ரஷ்ய தயாரிப்பு அணு உலைகளில் இதுவரை வெளியில் தெரி விக்கப்படாமல் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்த பல குறைகளை இந்த அறிக்கை முதன் முறையாக வெளிச்சப்படுத்தியுள்ளது. இந்த அணுஉலையில் 31 கடுமையான குறைகளை ரஷ்ய விஞ்ஞானிகள் பட்டியலிட்டுள்ளனர். இயற்கைப் பேரிடர் பெரிய அளவில் நிகழும்போது அணுஉலையைக் கையாளுவோர் எதிர்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்; விபத்து நேரிட்டால் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நட வடிக்கைகள் போன்ற பல குறைபாடுகளை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அணு உலை எந்திரங்களில் மின்சாரம் தொடர்பான பாதுகாப்புகள் மிக மோசமாக இருப்பதையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கடும் விபத்துக்குள்ளான செர்னோ பில் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணுஉலை வடிவமைப்பு முறை கூடங்குளத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும் (எஎநச) அணுஉலை ‘ரியாக்டர்கள்’ நீண்டகாலப் பயன்பாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்படவில்லை. குளிரூட்டும் முறை பழுதடைந்தால், அதை சரி செய்து கொள்ளக் கூடிய பாதுகாப்புகள், முறையாக வடிவமைக்கப் படவில்லை. ஜப்பான் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கு இந்தக் குறைபாடுதான் முக்கிய காரணம். குளிரூட்டும் சாதனங்களின் முக்கிய கருவிகள் மிகவும் பலவீனமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. பூமியதிர்வுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாமலே ரஷ்ய அணுஉலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியதிர்ச்சி நேர்ந்தால், தானாகவே செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளும் வசதிகள் செய்யப்பட வில்லை, ஜப்பான் நாட்டின் ‘புக்குஷிமா’ விபத்துக்குப் பிறகு உள்ள நிலைகளைக் கருத்தில் கொண்டு ரஷ்ய அணுஉலை எந்திரங்கள் வடிவமைக்கப்படவில்லை என்று ரஷ்ய விஞ்ஞானிகளே பட்டியலிட்டு குறை கூறியிருக்கிறார்கள்.

ரஷ்ய அரசு ரகசியமாகப் பாதுகாத்து வைத்திருந்த இந்த அறிக்கையை நார்வே நாட்டின் நம்பகத் தன்மையுள்ள ஒரு இணையத்தளம் வெளிப்படுத்தியிருக்கிறது. நார்வே நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அந்நாட்டின் அணுஉலைகளின் தலைமை பொறியாளர், ரஷ்ய விஞ்ஞானிகளின் இந்த அபாய அறிவிப்பை வெளியே கொண்டுவந்துள்ளார்கள். கூடங்குளம் அணு உலைத் திட்டம் பாதுகாப்பானது என்ற ரஷ்யாவின் உறுதியை - ரஷ்ய விஞ்ஞானிகளின் இந்த அறிக்கை மறுக்கிறது. ‘பிரண்ட்லைன்’ பத்திரிகையில் அதன் கட்டுரையாளர் பிரஃபுல் பிட்வாய் (அக்.21,2001) இதைப் பதிவு செய்துள்ளார்.


2) ஜப்பானில் புக்குஷிமாவுக்குப் பிறகு அந்நாட்டின் அணுஉலை தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை வியட்நாம் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய முயன்று வருகின்றன. இதை ஜப்பான் நாட்டின் அணுஉலை எதிர்ப்பாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். உள்நாட்டில் அணு உலைகளைப் புறக்கணித்துவிட்டு, வெளிநாடுகளுக்கு அதை விற்பனை செய்யலாமா என்ற கேள்வியை ஜப்பான் நாட்டின் ஆளும் கட்சி, எதிர்க் கட்சியிலிருந்தும் கேட்கத் தொடங்கியுள்ளனர். புக்குஷிமாவுக்குப் பிறகு ஜப்பானில் அணுமின் தொழிற்சாலைகள் மிகக் குறைந்த அளவிலேயே செயல்பட்டு வருகின்றன. ஜப்பானிலுள்ள 54 அணுமின் நிலையங்களில் 5 இல் ஒரு மின் நிலையம் மட்டுமே இப்போது இயங்கி வருகின்றன. அய்ரோப்பாவிலேயே மிகப் பெரும் நிறுவனமான ‘சீமென்ஸ்’ (ளுநைஅநளே) நிறுவனம் ‘மூனிச்’ நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. அணுமின் நிலையங்களை படிப்படியாக மூடுவதற்கு ஜெர்மன் முடிவெடுத்ததைத் தொடர்ந்து ‘சீமென்ஸ்’ அணு உலைத் தயாரிப்புகளை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. (அக்.20, 2011 ‘இந்து’ நாளேட்டில் வெளிவந்த கட்டுரை இத் தகவல்களைத் தெரிவிக்கிறது.)

3) பிரான்ஸ் நாட்டில் ஒரு அணுமின் நிலையம் கழிவுகளை நீராவி வழியாக திருட்டுத்தனமாக வெளியேற்றிய குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு அந்நாட்டு நீதிமன்றம் பெரும் தொகையை அபராதமாக விதித்திருக்கிறது.

4) 2009 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி கர்நாடக மாநிலம் கைகா அணுமின்நிலையத்தில் நேர்ந்த கதிர்வீச்சு காரணமாக 90 ஊழியர்கள் பாதிக்கப் பட்டதை மூடி மறைக்க முயற்சி நடந்தது. நவம்பர் 28 ஆம் தேதி பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வழியாக செய்தி வெளியே தெரிந்தது. அப்போது ‘கைகா’ திட்ட இயக்குனர் ஏ.என்.குப்தா, ஒரு உண்மையை போட்டு உடைத்தார். அணு உலைக்கு வெளியேதான், இந்த ஊழியர்கள் இருந்தனர். அப்போதும் அணுக்கதிர் வீச்சி லிருந்து அவர்கள் தப்பிக்க முடியாமல் போய் விட்டது என்று உண்மையை கூறினார். இயக்குனர் இப்படி வெளிப்படையாகவே பேசியதால் அதிர்ச்சி அடைந்த அணுசக்தி ஆணையம். அந்த அதிகாரியை அழைத்து இப்படி வெளிப் படையாக பேசுவது கூடாது என்று கண்டித்தது.

5) இந்தியாவிலுள்ள 20 அணு மின் நிலையங்களில் 10 ஆண்டுகளாக மின் உற்பத்தியில் துணைப் பொருளாக வெளிப்படும் ‘புளுட்டேனியம்’ என்ற அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருளை இந்தியா எதற்கு கையாண்டு வருகிறது என்பது ‘மர்மமாகவே’ இருக்கிறது. புளுட்டேனியத்தைக் கொண்டு கல்பாக்கத்தில் ‘வேகஅணுமின் ஆலை’ அமைக்கப் போவதாக இப்போதுதான் அறிவித்திருக்கிறார்கள்.

6) அணுஉலைகள் ஆயுட்காலம் 30 ஆண்டுகள். மேலும் 30 ஆண்டுகள் நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் எப்படி மூடப் போகிறார்கள் என்பது விடை தெரியாத கேள்வி. அணு உலை தொடங்குவதைவிட அதன் பயன்பாடு முடிந்த பிறகு நிறுத்துவதற்கு பல மடங்கு செலவாகும் தயாரிப்பில் வெளியாகும் கழிவுகளை எப்படி வெளியேற்றப் போகிறார்கள் என்பதற்கு விடை தெரியவில்லை. அணுமின் சக்தியில் அடங்கியுள்ள சர்வதேச அரசியல் - மனித உரிமை - வாழ்வுரிமை அம்சங்கள் அத்தனையும் மக்களுக்கு, தமிழர்களுக்கு எதிரான கேடு. பார்ப்பனர்கள் தீவிர ஆதரவு காட்டுவதிலிருந்தே நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.


தகவல் : திரு. விடுதலை இராசேந்திரன் நன்றி : கீற்று இணையதளம்