Sunday, March 18, 2012

ஆச்சரியங்கள் - விநோதங்கள் !


உடலில் எந்த பாகத்தில் வலி ஏற்பட்டாலும் அதை பாரம்பரிய சிகிச்சை மூலம் குணமாக்க முடியும் என்கிறார்கள் ஈரான் நாட்டின் வைத்தியர்கள். 'ஹிஜாமா' எனப்படும் இந்த 'கப்பிங் தெரபி' (Cupping Therapy) சிகிச்சையை பலர் எடுத்துக் கொள்கிறார்கள்.


கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் கப்புக்குள் பேப்பரைப் போட்டு எரித்து, அதன் உட்புறத்தை வெற்றிடமாக்கி, வலியுள்ள இடத்தின் மேல் வைத்து விடுகிறார்கள். கப்பில் உள்ள வெப்பம், அந்த பகுதி தசைகளை அழுத்திப் பிடித்துக் கொள்கிறது. வெப்பம் மெல்ல உடலில் ஊடுருவிச் செல்வதால், அந்த இடம் சிவப்பாகி ரத்தக் கசிவு ஏற்படுகிறது. வழியை ஏற்படுத்தும் கெட்ட இரத்தம் இப்படி வந்துவிட்டால் வலி சரியாகிவிடுமாம். 3500 ஆண்டு பழமையான இந்த சிகிச்சையை ஈரான் மட்டுமில்லாமல், சீனா மற்றும் அரேபியா நாடுகளிலும் பின்பற்றி வருகிறார்கள்.


'உலகின் மிக உயரமான தகவல் தொடர்பு டவர்' என்ற கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறது, ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள 'டோக்கியோ ஸ்கை ட்ரீ' (Tokyo Sky Tree). உலகின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற வகையிலும் இது இரண்டாம் இடத்தைப் பெறுகிறது. (முதலிடம், புர்ஜ் கலிஃபா, துபாய்).

634 மீட்டர் உயரம் கொண்ட இதன் கட்டுமானப் பணிகள் இந்த பிப்ரவரி 29-ம் தேதி முடிவடைந்தன. ஆனால், அதற்கு முன்பே கின்னஸ் சான்றிதழ் தேடி வந்துவிட்டது. கடந்த வருட இறுதியிலேயே முடிந்திருக்க வேண்டியது. ' 2 மாத தாமதத்துக்குக் காரணம், கடந்த வருடம் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியும், நிலநடுக்கமும்தான்' என்கிறது கட்டுமான குழு.



லீப் வருடத்தில் வரும் பிப்ரவரி 29 என்ற கூடுதல் தினத்தை ஒவ்வொரு நாட்டிலும் வித விதமாக கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் பூனைக்கான உணவுகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, அந்த உணவு டப்பாக்களை வைத்தே 10 அடி உயர பூனை ஒன்றை அன்றே உருவாக்கியது. ஆயிரக்கணக்கான இந்த உணவு டப்பாக்களை ஆதரவற்ற பூனைகளை வளர்க்கும் இல்லங்களுக்குக் கொடுத்து விட்டார்கள்.





தகவல் : ப்ரியா.

Thursday, March 15, 2012

பணிவின் அடையாளம் ஃபாரடே.




மின்சாரம் என்பது கட்டுப்பாடு இல்லாத காட்டாற்று வெள்ளம் போல் பாயக்கூடியது. தொலைக்காட்சி முதல் கொண்டு நாம் பயன்படுத்தும் மின்சார உபகரணங்கள் அனைத்தும் அந்தக் காட்டாற்று வெள்ளத்தால் பாதிக்கப்படமால் இருக்கக் காரணம் மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் மின்மாற்றி (Transformer) கருவிகள்தான். அந்த மின்மாற்ற கருவியை உருவாக்கிய அறிவயல் மேதை மைக்கேல் ஃபாரடே (Michael Faraday).

மைக்கேல் ஃபாரடே இங்கிலாந்தில் 1791 - ம் ஆண்டு பிறந்தார். எழ்மை அவரது பள்ளிபடிப்பை பாதியில் நிறுத்தியது. ஒவ்வொரு திங்கட் கிழமையன்றும் மைக்கேலின் தாய் அவருக்கு ஒரே ஒரு ரொட்டியைத் தருவார். அதை 14 துண்டுகளாகப் பிரித்து ஒரு நாளைக்கு இரண்டு துண்டுகள் சாப்பிடுவார். அப்படியொரு வறுமை அவரை வாட்டிய போதும் அவருக்கு புத்தகங்கள் மீது ஆர்வம் அதிகம் .

பழைய புத்தகக் கடைகளுக்குச் சென்று அவசர அவசரமாக புத்தகங்களைப் புரட்டுவார். கடைக்காரர்கள் அவரை விரட்டியடிப்பார்கள். சிலர் இரக்கப்பட்டு புத்தகங்களை வாசிக்கக் கொடுப்பார்கள். அதில் ஒரு கடைக்காரர் ஃபாரடேக்கு புத்தகம் பைண்டிங் செய்யும் வேலை கொடுத்தார். பைண்டிங்குக்கு வரும் பல அறிவியல் புத்தகங்களைப் படித்து அவர் தன் அறிவை வளர்த்துக் கொண்டார்.

மைக்கேல் ஃபாரடே மிகவும் நேசித்த ஒரு விஞ்ஞானி சர்.ஹம்ப்ரி டேவிட். ஃபாரடே ஹம்ப்ரி டேவிட்டுக்கு ஒரு கடிதம் எழுதினார். 'தங்களுடைய ஆய்வு கூடத்தில் ஒரு எடுபிடி வேலை இருந்தால் கூட எனக்கு தாருங்கள்' என்று எழுத, ஃபாரடேயின் ஆர்வத்தைக் கண்டு அவரை தன்னுடைய உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார்.

படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்ட ஃபாரடே, வருடக்கணக்கில் ஆய்வுகள் மேற்கொண்டு தனது 40 வயதில் 'காந்தத்தினால் மின்சக்தியை உருவாக்க முடியும்' என்று நிருபித்தார். அதன் பின்பும் 25 ஆண்டுகள் கடுமையான ஆய்வில் ஈடுபட்டு, மின்சக்தியின் வேகத்தை மாற்ற உதவும் டிரான்ஸ்ஃபார்மர், மின்சக்தியை உற்பத்தி செய்யும் டைனமோ ஆகிய கருவிகளைக் கண்டறிந்தார்.


டிரான்ஸ்ஃபார்மர் கருவி மின்சாரத்தைச் சீர்ப்படுத்த உதவும் என்றால், டைனமோ மின் உற்பத்திக்கே துணை செய்கிறது. இன்றுவரை மோட்டார் வாகன இயக்கத்துக்கு அடியப்படையாகவும் திகழ்கிறது.

இந்தக் கண்டுபிடிப்புகளால் மாமேதை விஞ்ஞானி மைக்கேல் ஃபாரடேவுக்கு 'சர்' பட்டம், ராயல் கழகத்தின் தலைவர் பதவி ஆகியவை தேடி வந்தன. நான் மைக்கேல் ஃபாரடேவாகவே இருக்க விரும்புகிறேன்' என்று கூறி, இரண்டையும் பணிவாக மறுத்துவிட்டார்.

ஃபாரடே 1867 - ம் ஆண்டு மறைந்தார். அப்போது புகழ் பெற்ற மேதைகளை லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் அடக்கம் செய்வதே பெருமையாகக் கருதப்பட்டது. ஆனால், மைக்கேல் ஃபாரடேவின் உடல், அவர் விருப்பப்படி ஒரு சாதாரண இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

அதன் பிறகு அது சாதாரண இடுகாடா என்ன ?


(மைக்கேல் ஃபாரடேவின் கல்லறை)








தகவல் : சி.பரத்.
பட உதவி : விக்கிப்பீடியா.

Wednesday, March 14, 2012

இப்படியும் சில....


எதையாவது சம்பந்தமில்லாமல் ஒப்பிட்டு சர்ச்சைகளில் மாட்டுவதே விளம்பரத் தந்திரமாக இருக்கிறது. அமெரிக்காவின் மெக்டொனால்டு நிறுவனம் சமீபத்தில் ஒரு விளம்பரம் வெளியிட்டது. 'எங்கள் தயாரிப்பான சிக்கன் துண்டுகளை சாப்பிடுவது, ஆதரவற்ற தெரு நாயை எடுத்து வளர்ப்பதைவிட அப்படி ஒன்று ஆபத்தான விஷயம் இல்லை' என்றது அந்த விளம்பரம். விலங்குகள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, விளம்பரத்தை திரும்ப பெற்றுக் கொண்டு மன்னிப்பும் கேட்டு இருக்கிறது அந்த நிறுவனம்.



தேவாங்கு இனத்தைச் சேர்ந்த பிராணி டார்ஸியர் (Tarsier). அழிந்து வரும் அரிய விலங்குகள் பட்டியலில் இருக்கும் இவை பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகம் வசிக்கின்றன. பெரிய கண்களை உடைய டார்ஸியர்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. இவை தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். மனிதர்களாலோ, மற்ற விலங்குகளாலோ கேட்க முடியாத அல்ட்ரா சவுண்டு அலைவரிசையில் அதிக சத்தத்துடன் ஒலியெழுப்பி ஒன்றுடன் ஒன்று பேசி கொள்கின்றனவாம்.




இணையதளப் பக்கங்களில் அதிகம் உபயோகிக்கப்படும் உருவம் ஸ்மைலி ஃபேஸ் (Smiley Face). சிரிப்பின் குறியீடாக அறியப்படும் இது மஞ்சள் உருவத்தில் இருக்கும். சிரிக்கும் கோடாக வாய் இருக்கும். 2011 ஜூலையில் கனடா நாட்டில் 2961 பேர் கூட்டமாக நின்று இந்த உருவத்தை உருவாக்கியதே இதுவரை சாதனையாக இருந்தது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 25 பள்ளிகளைச் சேர்ந்த 4444 மாணவர்கள் கூடி இந்த சாதனையை முறியடித்தனர்.




தகவல் : எஸ்.உமாபதி.

Tuesday, March 13, 2012

படம் சொல்லும் சேதி !


தைவானில் நடைபெற்ற '3-டி' கலைக் கண்காட்சியில் ஒரு முப்பரிமாண ஓவியத்தின் வாய்க்குள் நுழைந்து வெளிவரும் ஒரு பெண்.



இதைக் காதல் என்றும் சொல்லலாம். உக்ரைன் நாட்டின் சோபிக் நகரில் க்ளேவென் என்ற இடத்தில் இருக்கும் பயன்படுத்தப்படாத பழைய ரயில் பாதையைச் சுற்றி மரங்கள் இப்படி அடைந்து வளர்ந்து, அந்தப் பாதையை குகையாக்கி இருக்கிறது. நெருங்கியவர்களின் கை பிடித்து இந்தப் பாதையில் நடந்தால் நேசம் கிளர்ந்தெழக்கூடும்!




அந்தக்கால ஜமீன் பங்களாக்களில் புலித்தலை, மான் தலை என்று சுவரில் பாடம் செய்து மாட்டியிருப்பதைப் பார்த்திருக்கலாம். இறந்த விலங்கை இப்படி தோலோடு படம் செய்துவைப்பது, 'டாக்ஸிடெர்மி' (Taxidermy) எனப்படுகிறது. இப்படிப் பாடம் செய்த விலங்குகளை ஏதோ சுவரில் பொம்மை போல மாட்டி வைக்காமல், அவற்றை அலங்கரித்து, மனிதர்கள் செய்வது போன்ற செயல்களை அவையும் செய்வதாக நடிக்க வைத்துக் காட்டுவது இப்போது அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறது. நிறைய பானம் கட்டி இதைக் கற்று கொள்கிறார்கள்.







தகவல் : முத்தாரம் இதழ்.

Monday, March 12, 2012

காடும்....கானுயிர்களும்


லத்தீன் அமெரிக்க நாடான கோஸ்டாரிக்காவில் வித்தியாசமான வண்ணத்துப் பூச்சிகள் காணப்படுகின்றன. இவை பல வண்ணங்களில் இருப்பது வித்தியாசமானத்தல்ல; இவை எண்களுடன் தொடர்பு கொண்டிருப்பதுதான் வித்தியாசம். ஆமாம்....இவற்றின் ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள இரண்டாவது இறக்கையின் அடிப்பாகத்தில் 89 என்ற இலக்கம் கொண்ட எண் தெரிவது போல உள்ளது. அதனாலேயே இவை 'எண் வண்ணத்துப் பூச்சிகள்' (Number Butterflies) என அழைக்கப்படுகின்றன. 89-க்குள் வாழ்க்கை இருக்குது இராமைய்யா....



மா, கரி, சிந்தூரம், அத்தி, அறுகு, இம்மடி, கைம்மா இதெல்லாம் யானைக்கான வெவ்வேறு தமிழ்ப் பெயர்கள். களிறு என்றால் ஆண் யானை. பிடி என்றால் பெண் யானை. பெயரைச் சொன்னாலே அதிருமில்லே....



எறும்பு தின்னிகளின் உடல் முழுவதும் முள் போன்ற அடுக்கடுக்கான பட்டை அமைப்பு இருக்கும். இந்தப் பட்டைகளைத் துப்பாக்கிக் குண்டுகளாலும் துளைக்க முடியாது. அத்தனை வலுவானவை. அஞ்சா நெஞ்சன்.



ஒரு மரம் என்றால் அதற்கு இலை இருக்கும். ஒரு காலகட்டத்தில் அந்த இலை உதிரும் ; பிறகு மரம் துளிர்க்கும். இலைகள் வளரும். ஆனால், சந்தன மரத்தில் மட்டும் இலைகள் உதிராது. ஒரு சந்தன மரம் முழு வளர்ச்சியடைய 60 முதல் 100 ஆண்டுகள் ஆகும். இதனால்தான் சந்தனத்திற்கு இத்தனை மதிப்பு.
வயசானாலும் வாசம் போகாது.







தகவல் : வித்யுத்.

Sunday, March 11, 2012

சுத்துதே சுத்துதே பூமி !


விண்வெளியின் அற்புதங்களை அறியச் செய்தவர் கலிலியோ கலீலி(Galileo Galilei). இவர் 1564-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி இத்தாலியில் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பைசா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில சேர்ந்தார். ஆனால் அதில் அவருக்கு நாட்டம் இல்லை. இயற்பியலில் அவரது கவனம் திரும்பியது.

இரண்டு பொருட்கள் ஒரே உயரத்திலிருந்து விழுந்தால், அவற்றுள் எடை அதிகமான பொருள்தான் முதலில் தரையில் விழும்' என அரிஸ்டாட்டில் கூறியதை கலிலியோ மறுத்தார். 'ஒரே உயரத்திலிருந்து விழுபவை, ஒரே சமயத்தில்தான் தரையை அடையும்' என்று கூறினார். இதை நீருபிக்க மக்களையும், அறிஞர்களையும், பைசா நகர கோபுரத்துக்கு அழைத்துச் சென்றார். கோபுர உச்சியிலிருந்து இரண்டு துப்பாக்கிக் குண்டுகளை ஒரே சமயத்தில் தரையை நோக்கிப் போட்டார். ஒரு குண்டின் எடை 450 கிராம். இன்னொன்று 4500 கிராம். இரண்டும் ஒரே நேரத்தில் தரையை வந்தடைந்தன.

சாய்ந்த கோபுரம் என்பதால் கலிலியோ எளிதாக விளக்கிக் காட்ட முடிந்தது. மக்கள் கண்ணால் கண்டும் அவரது கண்டுபிடிப்பை மறுத்தனர். இதுபோல் சாய்வுகளிலும் பந்துகளை உருள விட்டு பரிசோதித்தார். 1590 - ல் தனது முடிவுகளை முன் வைத்து 'ஆன் மோஷன்' என்ற புத்தகத்தை எழுதினார்.

பெளதீக உலகத்தின் வாசற்கதவை முதன் முதலில் அகலத் திறந்து வைத்தவர். தனது தொலை நோக்கியில் கோள்களின் நகர்வை ஆராய்ந்து அவர் எழுதிய 'வீண்மீன்களின் தூதர்' என்னும் நூல் வானிலை துறை வளர வழி வகுத்தது.


பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது' என்பதை முதன் முதலில் ஆதாரத்துடன் விளக்கியது அவர்தான். 1632 - ல் 'இரண்டு முக்கியமான உலகங்களின் உரையாடல்' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

'மதத்திற்கு விரோதமான பல உண்மைகள் அதில் இருப்பதாக' குற்றச்சாட்டுக்கு ஆளானார். விசாரணைக்காக கிறிஸ்தவ திருச்சபையின் முன் நிறுத்தப்பட்டார்.

'நமது வேத நூல் பரலோக வாழ்வை அடைவதற்கான வாழ்வை காட்டுகிறதே தவிர, வானில் உள்ள அற்புதங்களை விளக்குவதன்று' என்று அவர் வாதிட்டார். ஆனால் இந்த வாதம் ஏற்கப்படவில்லை. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


தண்டனையிலிருந்து தப்பிக்க மன்னிப்புக் கடிதம் கொடுத்தார். எனவே அவரது மரண தண்டனை, சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 22 நாட்கள் சிறையிலிருந்த பின் கலிலியோ விடுதலையானார். இறுதி நாட்களில் வியான்னாவில் வறுமையால் பீடிக்கப்பட்டு கண்களை இழந்து குருடானார். தனது 78 - ம் வயதில் அவர் மரணம் அடைந்தார்.

மன்னிப்புக் கடிதம் தரும்போது 'உலகம் உருண்டை என்பதை நானே மறுத்தாலும் கூட அதுதான் உண்மை. அது அப்படிதான் இருக்கும். எனக்காக அது தட்டையாகிவிடாது' என்று குறிப்பிட்டிருந்தார்.இப்போது அதை உலகமே ஒப்புக் கொண்டு விட்டது.





தகவல் : சி.பரத்.

Friday, March 9, 2012

ஏழை படும் பாடு !


மருத்துவமனையில் இருந்து கேட்கிற ஒரு தாயின் கதறல் அந்தச் சிறுகதையின் தொடக்கம். விருத்தாசலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தமிழ்ச் செல்வி சாமுண்டி என்கிற தலைப்பில் தொகுத்திருக்கிற சிறுகதைத் தொகுப்பில், 'எதார்த்தம்' என்றொரு கதை இருக்கிறது. அந்தக் கதையில் தங்கள் பிள்ளையை இழந்த விட்டு, விவசாயக் கூலிகளான தாயும், தந்தையும் அழுகிற அழுகை நம் நெஞ்சைச் சுடுகிறது.

காலையிலேயே அந்தப் பிள்ளைக்கு உடம்பெல்லாம் சுட்டது. அவர்கள் நடவு வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவள் கேட்டால் 'இப்படிக் கொதிக்குதே பிள்ளைக்கு.' அவனும் தொட்டுப் பார்த்து விட்டு பதறிப் போனான், பயந்து போனான். என்ன செய்வது என்று இரண்டு பேருக்கும் புரியவில்லை. திருத்துறைப் பூண்டியிலே இருக்கிற ஒரு மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு போகலாம் என்று நினைத்தார்கள்.

காசு இருந்தால் தனியார் மருத்துவமனையில் எந்த நேரம் வேண்டுமானாலும் காட்டலாம். ஆனால் இவர்கள் இந்த கிராமத்திலே இருந்து திருத்துறைப் பூண்டிக்குப் போக வேண்டும்.

'பத்து மணிக்குப் போயிட்டு நாம நடவுக்கு வந்துர முடியுமா' என்று கேட்டாள். 'எப்படி முடியும், அங்க ஆஸ்பத்திரியே 10 மணிக்கு மேலதான் தொறப்பாக. நாம அதுக்கப்புறம் புள்ளையைக் காட்டிட்டு, இங்க கொண்டு வந்த விட்டுட்டு போறத்துக்கு பன்னெண்டு மணி ஆயிரும். அதுக்கப்புறம் யாரு நம்மள வேலைக்குச் சேப்பா ? அப்ப இன்னைக்கு வேலைக்குப் போகலையா நீ' என்று கேட்டான்.

'வேற என்ன வழியிருக்கு. இந்த புள்ளைக்கு இப்படி கொதிக்குதே, எப்படி விட்டுட்டு போறது' என்று அவள் கேட்டாள். அந்த கேள்வியில் நியாயம் இருப்பதை அவனும் உணர்ந்தான். ஆனாலும் இன்றைக்கு நடவு வேலைக்குப் போகவில்லை என்றால் மறுபடியும் நாளைக்குச் சேர்த்துக்கொள்வார்களா என்று தெரியாது.

மனைவி கண்ணம்மா இருக்கிற அணி சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள் தொடர்ந்து வேலை கிடைக்கிறது. ஒரு நாளைக்குப் போகவில்லை என்றாலும், அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ள பத்துப் பேர் தயாராக இருக்கிறார்கள். அவளுக்கு அது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஒரு நாள் கூலி போனால் கூடக் குற்றமில்லை. தொடர்ந்து வேலை கிடைக்கமால் போய்விடுமோ என்ற அச்சம் இருந்தது.

எனவே அவன் மெதுவாய்ச் சொல்லிப் பார்த்தான். 'ம்ம்... உண்மதான். ஆனா நாம இன்னைக்கு நடவுக்குப் போகலைன்னா, இனிமே நமக்கு வேலையே இல்லமாப் போயிடுமோன்னு பயம்மா இருக்கு. நாம நாலு நாள் ஓடி வேலை பர்த்துட்டோமுன்னா அடமான வச்சிருக்கிற ஒன்னோட மூக்குத்திய மீட்டுறலாம். வருஷம் பூராவ நமக்கு வேலை கெடைக்கிது ? இந்த நேரத்துல நாம நடவுக்குப் போகலைன்னா வேற எப்ப போறது' என்று அவன் கேட்டான்.

'சரி அப்ப இந்த புள்ளைய என்ன பண்ணலாங்கற' என்று அவள் கேட்டபோது, 'இதோ நம்ம முக்குக் கடையிலா ஒரு காய்ச்ச மாத்திர இருக்கு. அதையும் டீத்தண்ணியும் வாங்கிக் குடுத்துட்ட காய்ச்சல் குறைஞ்சி போயிரும். நாம சாயங்காலமா வந்து ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிறலாம்' என்று சொன்னான்.

அவளுக்கும் அது சரி என்பது மாதிரிப் பட்டது. ஒரு பக்கத்திலே காய்ச்சல் கொளுத்துகிற குழந்தையை விட்டுப்போக மனமில்லை. இன்னொரு பக்கத்திலே நடவு வேலை போய்விட்டால், நாளைக்குச் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்றும் புரியவில்லை. ஒரு ஆள் சம்பாதித்து இந்தக் குடும்பத்தைத் தள்ள முடியாது. அப்படி ஒன்றும் பெரிய வருமானம் இல்லை. இரண்டு பெரும் கூலிகள்.

ஆகையினாலே 'சரி ஓடிப்போய் அந்த முக்குக் கடையிலே மாத்திரய வாங்கிட்டுவா' என்று சொன்னாள். வாங்கிக் கொண்டு வந்ததும் அதை டீத்தண்ணியிலே கலந்து கொடுத்தார்கள். பிள்ளையும் குடித்தது. எப்படியும் ஒரு மணி நேரத்திலே காய்ச்சல் குறைஞ்சிரும். நாம சாயந்திரம் ஒடி வந்திரலாம் என்று இரண்டு பேரும் வேலைக்குப் போனார்கள். வேலைக்குப் போன இடத்திலே கடுமையான வேலை. அன்றைக்கு வழக்கமாக முடிக்கிற நேரத்திற்கு வேலை முடிந்துவிட்டாலும், கூலி கொடுப்பதற்குக் கொஞ்சம் நேரம் ஆயிற்று. எனவே வரிசையில் காந்திருந்து கூலி வாங்கிக் கொண்டு வருவதற்குள் மணி 6 ஆகிவிட்டது. இவள் வீடு வந்து சேர்வதற்கும், அவன் வருவதற்கும் சரியாக இருந்தது.

அவர்கள் இரண்டு பேருக்கும் காலையில் இருந்த ஒரு திட்டம், பிள்ளைக்கு அந்த மாத்திரையோடு நிறுத்தி விட வேண்டாம். வருகிறபோது சின்ன சின்ன நண்டுகளைப் பிடித்துக் கொண்டு வந்து, அதை நச்சிப்போட்டு ரசம் வச்சிக் குடுத்தா காய்ச்சல் கொறைஞ்சிரும் என்பது. அது அவர்களுடைய கை வைத்தியம்.

எனவே கண்ணம்மாள் வருகிறபோதே, வரப்புகளிலே இருந்த சின்ன சின்ன நண்டுகளைப் பிடித்துப் தன் முந்தானையிலே கட்டிக்கொண்டாள். அந்த நண்டுகள் குறுகுறுவென்று வயிறெல்லாம் ஓட, அதன் கால்களைப் பிய்த்துத் போட்டு விட்டு, மறுபடியும் முந்தானையிலே முடிந்துகொண்டு வந்து சேர்ந்தாள். மாரியப்பனும் நண்டுகளைக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தான். அதைக் கண்ணம்மாள் கொண்டுவந்ததிலே மகிழ்ச்சி அடைந்தான்.இன்றைக்கு இரவு ரசம் வைத்துச் சாப்பிட்டால் காய்ச்சல் குறைந்து விடும்.

உள்ளே போய்ப் பிள்ளைத் தொட்டுப் பார்த்தால், காய்ச்சல் காலையிலே இருந்ததைவிடக் கடுமையாய் இருக்கிறது. பிள்ளைக்குக் கைகால் எல்லாம் இழுக்கிறது. இரண்டு பேரும் அலறி அடித்தபடி, நண்டை எல்லாம் அப்படியே போட்டு விட்டுப் பிள்ளையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு திருத்துறைப் பூண்டி அரசு மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள்.

இவர்கள் போய் சேர்வதற்குள் அங்கே பணியில் இருந்த மருத்துவர் வீட்டிற்க்குப் போய்விட்டார்.அங்கே இருந்த செவிலியர்கள் சொன்னார்கள், ஒரு பத்து நிமிடம் காத்திருங்கள் அடுத்த மருத்துவர் வந்துவிடுவார் என்று. பிள்ளைக்கோ காய்ச்சல் கொதிக்கிறது. அதுமட்டுமல்லாமல், கைகால் எல்லாம் இழுக்கிறது. அதைப் பார்த்துவிட்டு செவிலியர்கள் முதல் உதவி சிகிச்சைகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

ஆனாலும், காய்ச்சல் குறைந்தபாடில்லை. மருத்துவர் வந்தார். மாத்திரை கொடுத்தார். அந்த பிள்ளை கொஞ்சம் மயக்கத்திலே இருந்தது. இனி சரியாய் போய்விடும். நல்ல வேளை கொஞ்சம் தாமதமாகி இருந்தாலும், குழந்தையை இழந்திருப்போம் என்கிற எண்ணத்தோடு இரண்டு பேரும் குழந்தைக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருந்தார்கள்.

ஆனால் பகலெல்லாம் வேலைப் பார்த்துக் களைத்துப்போன அவர்களால் தொடர்ந்து விழித்திருக்க முடியவில்லை.கட்டிலுக்குப் பக்கத்திலே கண்ணம்மாள் படுத்து உறங்கிப் போனாள். அந்த மருத்துவமனையின் வராண்டாவில் துண்டை விரித்து மாரியப்பனும் படுத்துக் கொண்டான். எப்படியும் பிள்ளைக்குக் காலையிலே சரியாகிவிடும் கொண்டுபோய் வீட்டிலே விட்டுவிட்டு, அடுத்த நாள் காலையிலே நடவுக்குப் போய்விடலாம் என்பது அவர்களது திட்டம்.

திடீரென்று கண்ணம்மாளின் அலறல் சத்தம் கேட்டு மர்ரியப்பன் ஓடிச் சென்று பார்க்கிறான். நர்சுகள் எல்லோரும் பக்கத்திலே இருக்கிறார்கள். அந்த குழந்தை இறந்து போய்விட்டது. அவர்களால் அதைக் காப்பாற்ற முடியவில்லை. கொடுத்த மாத்திரை வேலை செய்ய முடியாத அளவுக்கு நோய் கடுமையாகப் பாதித்து, அந்தக் குழந்தை இறந்து போய்விட்டது.


ஓவென்று.....கண்ணம்மாள் அலறுகிறாள். அருகில் இருக்கிற செவிலியர்களும் மற்றவர்களும் சமாதானம் செய்தும் கூட ஒரு மணிநேரமாக அவளின் கதறல் நிற்கவில்லை. மிகவும் ஆதரவாக, சமாதானமாக, பாசமாகப் பேசிய செவிலியர்கள் கூட, அரைமணிநேரம், முக்கால் மணிநேரத்திற்கு பிறகு கடுமையாகப் பேசுகிறார்கள். என்ன இருந்தாலும் இது மருத்துவமனை இப்படியெல்லாம் சத்தம் போடக் கூடாது என்று எவ்வளவு சொன்னாலும் கண்ணம்மாவால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவர்களும் பொறுமை இழந்து, கண்ணம்மாவைக் கையைப்பிடித்து இழுத்து வந்து மரத்தடியிலே விட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். மருத்துவமனைக்கு எதிரிலே இருக்கிற மரத்தடியில் அப்படியே விழுந்து கிடக்கிறாள். மீண்டும் அங்கேயிருந்தும் கதறுகிறாள். வேறு வழியில்லாமல் மாரியப்பன் குழந்தைக்குப் பக்கத்திலே இருந்து பார்த்துக் கொள்கிறான்.

முதல் நாள் இரவு தன் அம்மாவுக்கு சொல்லியனுப்பினான். 'கையிலே காசு இல்ல. நீ ஏதாவது காசு எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு வா. பிள்ளைய ஆஸ்பத்திரியில சேத்திருக்கிறோம்' என்று. அடுத்த நாள் காலை 5 மணி பேருந்தில் அவனுடைய தாய் வந்து சேர்ந்தாள். எப்போது எழுந்தாள், எப்போது இதையெல்லாம் செய்தாள் என்று தெரியாது, வரும்போது சோறும், புளிக்குழம்பும் எடுத்துக் கொண்டு வந்தாள். மகனைப் பார்த்து, மகன் அலறுவதைப் பார்த்து அவளுக்குப் புரியவில்லை. 'எம்மா எம்புள்ள என்னய விட்டுப் போயிட்டாம்மா' என்று அழுதான். மகனையும், மருமகளையும் அரவணைத்து ஆறுதல் சொல்லி அவளும் அழுதாள்.

மருத்துவமனையிலே பிள்ளையைத் துணியிலே சுற்றிக் கையிலே கொடுத்து விட்டார்கள். 'இனிமேலும் இங்கே வைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் எப்படியாவது எடுத்துக் கொண்டு போங்கள்.' பிள்ளையைத் தோளிலே சாய்த்துக் கொண்டு பேருந்து நிறுத்தம் வரைக்கும் மூவரும் அழுது கொண்டே வந்தார்கள். ஏதாவது வாடகைக்கார் கிடைக்குமா என்றால் 250 ரூபாய், ஆட்டோ 150 ரூபாய் கேட்டார்கள். 'அம்மா நீ எவ்வளவு பணம் வச்சிருக்கே' என்று கேட்டபோது, அந்த அம்மா எண்ணிப்பார்த்து '15 ரூபாய் இருக்கிறது' என்று சொன்னாள். 15 ரூபாய்க்கு எந்த வண்டியும் போகமுடியாது.

வேறு வழியில்லை, அவன் மனைவியையும், அம்மாவையும் பார்த்து, 'நாம எழப்பட்டவங்க. நமக்கு வேறு வழியில்ல. நீங்க ரெண்டு பேரும் கட்டயப்பட்டு அழுகைய நிறுத்திட்டா இந்தப் பிள்ளைய தோளுல சாய்ச்சிக்கிட்டு பஸ்சிலேயே போயிரலாம்' என்று சொன்னான்.

அழுகையை அவ்வளவு எளிதில் அடக்க முடியவில்லை. ஆனாலும் காய்ச்சலில் கிடக்கிற குழந்தையைத் தூக்கிக்கொண்டு போவது போல, அந்தக் குழந்தையை அரவணைத்துத் தூக்கிக் கொண்டு பேருந்தில் ஏறி உட்கார்ந்தான். இதில் என்ன கொடுமையென்றால், திருத்துறைப் பூண்டியிலிருந்து கிராமத்திற்குப் போவதற்கு மூன்று டிக்கெட்டுகள் இல்லை, முன்றரை டிக்கெட்டுகள் எடுத்தான். இதைப்பார்த்து மறுபடியும் கண்ணம்மா அழுதாள். அவனுடைய தாய் அவளை அடக்கினாள்.

ஏறத்தாழ கிராமத்தை நெருங்குகிற போது, அதற்கு மேலும் தாங்க முடியாமல், 'ராசா போயிட்டியேடா....' என்று அந்தப் பெண் அழுதபோதுதான் நடத்துனருக்குப் புரிந்தது. தன்னை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது புரிந்தாலும், அவர் கோபப்படாமல் போனால் போகட்டும் என்று கிராமத்திலேயே இறக்கிவிட்டார்.

கிழே இறங்கி அந்தத் தேநீர்க்கடையிலே ஆளுக்கு ஒரு தேநீரைக் குடித்துவிட்டு, அந்தக் குழந்தையைக் கொண்டுபோய் அடுத்த நாள் அடக்கம் செய்து, மூன்று நாட்களுக்குப் பிறகும் எழாமல் கண்ணம்மா தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். உண்ணவில்லை, சரியாக உறங்கவில்லை.

அப்போது மாரியப்பனின் தாய் கண்ணம்மாவைத் தட்டி எழுப்பி, 'என்ன செய்றது, எவ்வளவு நாள் அழ முடியும். அழுதாலும் என்ன செய்ய முடியும். மறுபடியுமா அந்தக் குழந்த வரப்போகுது. கண்ணத் தொடச்சிக்க. பொம்பளைங்க எல்லோரும் நடவுக்குப் போறாங்க பாரு. அவுங்களோட சேர்ந்து போ. போகலைன்னா நாளைக்குச் சாப்பாட்டுக்கு என்ன பண்றது. வேறு வழியென்ன இருக்கு நமக்கு. அழுது அழுது காசு வருமா' என்று சொல்லிச் சமாதானப்படுத்தினாள்.

முதலில் கண்ணம்மாவிற்குக் கோபம் வந்தது. பிள்ளை இறந்து போயிருக்கிற துன்பம்கூடத் தெரியாமல் நடவு வேலைக்குப் போகச் சொல்லுகிறாளே என்று நினைத்தாள். ஆனால்,அதையும் மீறி, அதைத் தவிர வேறு வழியில்லை என்கிற எதார்த்தம் கன்னம்மாளுக்குப் புரிந்தது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தலையை வாரி முடிந்துகொண்டு எழுந்தாள். நடைப் பிணமாக நடவுக்குப் போகும் பெண்களோடு சேர்ந்து நடந்தாள் என்று அந்தக் கதை முடிகிறது.

ஏழைகள் தங்கள் பிள்ளையின் சாவினால் ஏற்பட்ட துன்பத்தைக் கூட வெளிப்படுத்திக் கொள்ள முடியாமல்தான் இந்த பூமியில் வாழ்கிறார்கள் என்னும் கொடுமையை அந்தச் சிறுகதை நம் நெஞ்சில் தைப்பதைப் போலச் சொல்லுகிறது.






நூல் : ஒன்றே சொல், நன்றே சொல்.


ஆசிரியர் : ஐயா சுப.வீரபாண்டியன்.