Tuesday, March 27, 2012

படம் சொல்லும் சேதி !


கென்யாவின் மாஸாய் பழங்குடி இனத்தவர் மத்தியில் குழந்தைத் திருமணமும், பெண்களை சித்ரவதை செய்யும் பழக்கம் அதிகம் இருக்கிறது. மாஸாய் இளைஞர்களுக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுத்து அவர்களை நவீனப்படுத்தித் திருத்த அரசு முயற்சி செய்கிறது. அப்படி கிரிக்கெட் ஆடும் ஒரு மாஸாய் இளைஞர்.


புகழ்பெற்ற நார்வே சிற்பி குஸ்தாவ் விஜிலேண்ட் 212 கல் மற்றும் உலோகங்களை வைத்து, தலைநகர் ஆஸ்லோவில் சிற்பப் பூங்காவை உருவாக்கி வருகிறது அந்நாட்டு அரசு. 1939-ம் ஆண்டு தொடங்கி 1949-வரை அவர் செதுக்கிய சிற்பங்களை அழகிய பீடங்களில் வைத்து பூங்கா உருவாகிறது.


மனிதர்களைப் போலவே ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் வாழ்கின்றன கடல் ஆண் சிங்கங்கள். தங்களுக்கென கடலிலும், கரையிலும் எல்லை நிர்ணயித்துக் கொள்ளும் கடல் ஆண் சிங்கங்கள், அந்த எல்லைக்குள் பெண் கடல் சிங்கங்களை அனுமதிக்கும். தனது வாரிசே ஆனாலும் அனுமதி இல்லை ! மீறி வரும் பிள்ளையைக் கொல்லக் கூடத் தயங்குவதில்லை இவை! அழிந்து வரும் அரிதான இந்த ஆஸ்திரேலிய கடல் சிங்கங்களை 'நேஷனல் ஜியோகிராபிக்' இதழுக்காக படம் எடுத்தவர், மைக்கேல் பேட்ரிக் ஒ' நீல்.






தகவல் : முத்தாரம் இதழ்.

Monday, March 26, 2012

தகவல் துளி !


உருது மொழி வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. சீன மற்றும் ஜப்பான் மொழிகள் மேலிருந்து கீழாகவும், மெக்சிகோ மொழி கீழிருந்து மேலாகவும் எழுதப்படுகின்றன.கிரேக்க மொழி இடமிருந்து வலமாக எழுதத் தொடங்கி, பின்னர் வலமிருந்து இடம், இடமிருந்து வலம் என்று மாறி மாறி எழுதப்படுகிறது.



உலகில் அதிக இரத்தம் கொண்ட உயிரினம் திமிங்கலம். இதன் உடலின் 8000 லிட்டர் வரை இரத்தம் இருக்கும்.



கத்தரிக்காய் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றலுடையது. எனவேதான் பிரியாணியுடன் கத்தரிக்காய் கூட்டு பரிமாறப்படுகிறது.



பகலில் போடும் சிறு துக்கத்தை nap என்கிறோம். இது நெப்போலியன் என்ற பெயரின் சுருக்கம். மாவீரன் நெப்போலியன், பகலில் தவறாமல் சிறிது நேரமாவது தூங்குவாராம்.






தகவல் : நே. இராமன்.

Sunday, March 25, 2012

உடல் - உள்ளது உள்ளபடி....


50 சதவீத கார்பன், 21 சதவீத ஆக்சிஜன், 18 சதவீத நைட்ரஜன், சிறிது கந்தகம்....எல்லாம் சேர்த்துதான் நம் தலைமுடி. நாளொன்றுக்கு சராசரியாக 0.04 செ.மீ. வளரக்கூடிய தலைமுடிக்கு தனிப்பட்ட வாழ்நாள் உண்டு. ஒரு முடியின் அதிகபட்ச ஆயுள் 4 வருடம்தான்.



நாம் அழாவிட்டாலும், நாள் தோறும் நம் கண்களில் 13 சொட்டு கண்ணீர் சுரக்கிறது. அதில் 7 சொட்டு ஆவியாகிறது. மீதி 6 சொட்டு மூக்கிற்குள் இறங்குகிறது.




பெரும்பான்மையான உதட்டுச் சாயங்களில் 30 முதல் 40 சதவீதம் வரையில் விளக்கெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.





தகவல் : நெ.இராமன்.

Friday, March 23, 2012

பேச்சை நிறுத்தும் துப்பாக்கி !


'சும்மா வளவளன்னு பேசி நம்ம வேலையைக் கெடுக்கறவங்களை நிக்க வச்சு சுடணும்' என்று புலம்புகிறீர்களா ? இனிமேல் நிஜமாகவே அப்படிப்பட்டவர்களை சுடலாம்... இந்த சிறப்பு துப்பாக்கியை வைத்து !

ஆம், 'ஸ்பீச் ஜாமிங் கன்' (Speech jamming gun) என்ற இந்தத் துப்பாக்கி, மனிதர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படாமல் அவர்களின் நான்-ஸ்டாப் பேச்சை மட்டும் கப்சிப் என்று நிறுத்திவிடுகிறதாம். ஜப்பானைச் சேர்ந்த கஸூடகா குரிஹரா, கோஜி சுகடா என்னும் இரண்டு விஞ்ஞானிகள் இணைந்து வடிவமைத்திருக்கும் கண்டுபிடிப்பு இது.

'இனிமேல், பள்ளி வகுப்பறையில் மாணவர்களில் யாராவது வண்டி வண்டியாய்ப் பேசிக் கொண்டிருந்தாலோ, நூலகத்திற்குள் உட்கார்ந்து கதையடித்துக் கொண்டிருந்தாலோ இந்தத் துப்பாக்கித்தான் பேசும்' என்று பன்ச் அடிக்கிறார்கள் அந்தக் கண்டுபிடிப்பாளர்கள்.

சரி, இது எப்படி பேச்சை நிறுத்துகிறது ? ரொம்ப எளிது. தூரத்தில் நிற்கிறவர்களாக இருந்தாலும், அவர்களின் பேச்சை சரியாகப் பிடித்துக் கொள்ளும் ஒரு விசேஷ மைக் இதில் இருக்கிறது. அது பேசிக் கொண்டிருப்பவரின் வார்த்தைகளை அச்சு பிசகாமல் இழுத்துப் பதிவு செய்து கொள்கிறது. அப்படிப் பதிவு செய்த வார்த்தைகள், ஒரு விசேஷ ஸ்பீக்கர் வழியாக ராக்கெட் வேகத்தில் மேற்படி ஆசாமி மேல் திருப்பி ஏவப்படுகிறது. இத்தனையும் 0.2 நொடிக்குள் துரிதமாக நடந்து விடுவதால், பேசுகிறவர் தான் பேசிய வார்த்தைகளையே 0.2 நொடிக்குள் திரும்பக் கேட்கிறார்.


அப்படி நாம் பேசிய வார்த்தைகளே நமக்குக் கேட்டால் நம் பேச்சு சட்டென நின்று விடுவது உளவியல் ரீதியான உண்மை. இதைப் பயன்படுத்திதான் அமைதியை நிலைநாட்டுகிறது இந்த கப்சிப் துப்பாக்கி !

"நூறு அடி தூரத்தில் இருப்பவர்களிடம் கூட இந்தத் துப்பாக்கி செயல்படக் கூடியது. மேலும், சம்பந்தப்பட்டவர் மீது இது ஒலியை செலுத்தும்போது பக்கத்தில் நிற்பவர் கூட அந்த ஒலியை அறியமாட்டார். எனவே, யாருக்கும் எந்த பாதிப்பும் இதனால் இல்லை' என்கிற விஞ்ஞானிகள், இதன் குறைபாடாக ஒன்றே ஒன்றைத்தான் குறிப்பிடுகிறார்கள். அர்த்தமுள்ள வார்த்தைகளைப் பேசினால் மட்டும்தான் இந்தக் கருவி அதைத் திருப்பிச் செலுத்துமாம். அர்த்தமின்றி ஏதேனும் உளறினால் வேலை செய்யாதாம்.






தகவல் : கோகுலவாச நவநீதன்.

Thursday, March 22, 2012

அமைதி, அன்பு, காரம்...


இதற்கு பெயர் என்னவோ 'அமைதி படகு' என்பதுதான்! ஆனால் இது குட்டியூண்டு படகு இல்லை. ஆயிரம் பேர் பயணம் செய்யும் வசதிக் கொண்ட சொகுசுக் கப்பல். ஒரு லட்சியப் பயனத்துக்காக இப்போது இந்தக் கப்பல் உலகம் சுற்றி வருகிறது. 'அழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை உலகில் எந்த நாடும் தயாரிக்கவோ, வைத்திருக்கவோ கூடாது' என்பதுதான் அந்த உன்னத லட்சியம். ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அமெரிக்கா அணு குண்டுகளை வீசியபோது தப்பிப் பிழைத்த 130 பேர் இந்தப் பிரச்சாரக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். காயம்பட்டவர்கள்தானே வலியை விவரிக்க முடியும் !


திமிங்கல குடும்பத்தைச் சேர்ந்தவை டால்பின் மீன்கள். இவற்றின் முதல் எதிரி சுறா மீன்தான். ஒரு டால்பின், குட்டி போடும்போது மற்ற டால்பின்கள் அதைச் சுற்றி சுவர் போல நின்று, தாயையும் குட்டியையும் சுறாக்களிடமிருந்து காப்பாற்றுகின்றன. இது மட்டுமில்லை... ஒரு டால்பினுக்கு உடல் நலம் சரியாக இல்லா விட்டால், பிற டால்பின்கள் அதனிடம் வருகின்றன. அதை அப்படியே கடல் மட்டத்துக்கு மேலே தூக்கி வந்து, அது எளிதாக சுவாசிப்பதற்கு உதவுகின்றன.




தென் அமெரிக்க நாடான சிலியிலிருந்து இங்கு வந்தது மிளகாய். சிலி நாட்டிலிருந்து வந்ததால்தான் ஆங்கிலத்தில் 'சில்லி' என்று அழைக்கப்படுகிறது.



தகவல்: வித்யுத், முக்கிமலை நஞ்சன், லோகேஷ்.

Wednesday, March 21, 2012

தகவல் பல விதம் !


இன்னும் சில பல பத்தாண்டுகளில் கச்சா எண்ணெய்க் கிணறுகள் வற்றி பெட்ரோல், டீசல் எல்லாம் தீர்ந்துவிடும் அபாயம் இருக்கிறது. அதனால் உலகெங்கிலும் மாற்று எரிபொருள் தேடும் முயற்சிகள் நடக்கின்றன. பிரேசில் நாடு சர்க்கரையிலிருந்து எத்தானால் தயாரித்து, அதை எரிபொருளாகப் பயன்படுத்தும் முயற்சியில் வெற்றியடைந்து இருக்கிறது.

இதேபோல அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் பலவும் மக்காச் சோளத்திலிருந்து எத்தனால் எடுக்கின்றன. டீசல் எஞ்சின்களில் டீசலுக்குப் பதிலாக வெஜிடபிள் ஆயிலைப் பயன்படுத்தும் முயற்சிகளும் நடக்கின்றன.

ஆனால் இவை எல்லாவற்றிலும் ஒரு அபாயம் இருக்கிறது. உணவே எரிபொருள் ஆகிவிட்டால், உலகெங்கும் உணவுப் பஞ்சம் வந்துவிடும். இதற்கு கடலுக்குள் தீர்வு கண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். கடலுக்கடியில் இருக்கும் பாசிகள், களைச் செடிகள் போன்றவற்றிலிருந்து எத்தனால் தயாரிக்கும் முயற்சிதான் அது!

ஒரு ஸ்பெஷல் என்சைமை இந்த பாசிகள் மற்றும் களைகளில் புகுத்தினால், அதிலிருந்து எத்தனால் கிடைக்கும். மக்கச் சோளத்தில் கிடைப்பதைவிட ஐந்து மடங்கு அதிகம் எத்தனால் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இதற்காக கடலுக்கு அடியில் யுத்தங்கள் நடக்கலாம். மீண்டும் ஏகாதிபத்தியப் போர்.



உலகில் கிடைக்கும் அத்தனை ரக ஸ்கேல்களாலும் அளந்து முடிவெடுத்துவிட்டார்கள். இவர்தான் சாதனையாளர் என்று! மிகக் குள்ளமாகப் பிறந்ததுதான் இவர் சாதனை. நேபாளத்தைச் சேர்ந்த 72 வயது சந்திர பகதூர் டாங்கி இப்போது கின்னஸால் அங்கீகரிக்கபட்ட உலகின் குள்ள மனிதர்.

'தற்போது உலகில் உயிர்வாழும் மனிதர்களில் மிகக் குள்ளமானவர்', மனித இன வரலாற்றில் இதுவரை உலகில் பிறந்தவர்களிலேயே மிகக் குள்ளமானவர்' என இரண்டு சாதனை சான்றிதழ்களை கின்னஸ் கொடுத்து இருக்கிறது. கின்னஸ் பதிப்பகத்தின் ஆசிரியர் கிரெய்க் கிளாண்டோ நேபாளம் வந்து சான்றிதழ்களை வழங்கினார். சந்திர பகதூரின் உயரம் 54.6 சென்டிமீட்டர். இதற்குமுன் உலகின் குள்ள மனிதராகக் கருதப்பட்டவர், 60 சென்டிமீட்டர் உயரமுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜூன்ரே பாலாவிங். அவருக்குத்தான் தெரியும் அவர் வேதனை.



அந்த அழகிய பெட்டியைத் திறந்தால் உள்ளே 49 குட்டி சாக்லேட்டுகள் இருக்கும். பெட்டியின் விலை இந்திய மதிப்பில் 4 லட்சம் ரூபாய். 'அப்படி என்ன தங்கத்துலயா இழைச்சிருக்காங்கா ?' என்று நீங்கள் பொங்கினால்....ஆமாம்.

புகழ்பெற்ற லெபனான் சாக்லேட் நிறுவனமான பாட்சி, அறிமுகம் செய்திருக்கும் 'ஜூவல்லரி சாக்லெட் இது. ஒவ்வொரு சாக்லெட்டும் தங்கம் அல்லது வெள்ளி இழைத்த காகிதத்தால் அழகான வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும். மேலே 24 காரட் தங்கத்தில் செய்த பூக்கள், ஸ்வரோஸ்கி கற்கள். பிளாட்டினத்தால் அலங்காரம் என இழைத்திருக்கிறார்கள். சாக்லெட்டை சாப்பிட்டு காகிதத்தைத் தூக்கிப் போட கண்டிப்பாக முடியாது.

ஒரு நேரச் சோற்றுக்கு அல்லல்ப்படும் உலகமடா இது!









தகவல் : லோகேஷ்.

Monday, March 19, 2012

மனிதர்களும் - விலங்குகளும்.....


மனிதர்கள் வெளிநாடு செல்லும்போது கடவுச்சீட்டு தேவை. விலங்குகளுக்கு ? அவற்றுக்கும் சில ஆவணங்கள் தேவைப்படுகின்றன. விலங்குகள் அதிகமாக வந்து இறங்கும் இடமாக, ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் விமான நிலையம் கருதப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக 6 லட்சத்து 30 ஆயிரம் விலங்குகள் வருகின்றன. செல்லப்பிராணிகளாகவும், சரணாலயங்களில் வளர்க்கவும், ஆராய்ச்சி தேவைக்காகவும் இப்படி பயணிக்கின்றன விலங்குகள். அவை புறப்படும் நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை நடக்கும். இதற்காக சான்றிதழ்களோடு வந்து இறங்கும் இடத்திலும் திரும்ப பரிசோதனை உண்டு. இப்படி ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் சோதனைக்கு ஆளாகும், வியட்நாம் நாட்டு பச்சை நிற தண்ணீர் ஓணான் இது !



ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இருக்கிறது லெனிட்ஸ் விலங்குகள் சரணாலயம். காட்டிலும் நாட்டிலும் கைவிடப்படும் விலங்குகளை எடுத்துப் பராமரிக்கும் சரணாலயம் இது. இந்த சரணாலயத்தின் சமீபத்திய கதாநாயகன், 'பேபி' என்ற பெயர் கொண்ட ஃபிரெஞ்சு புல்டாக்.

சில நாட்களுக்கு முன் இந்த சரணாலயத்துக்கு ஆறு காட்டுப் பன்றிக் குட்டிகள் அழைத்து வரப்பட்டன. அவற்றின் தாயை யாரோ வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். குளிரில் தவித்துக் கொண்டிருந்த குட்டிகளை யாரோ காப்பாற்றி, இங்கு கொண்டுவந்து ஒப்படைத்தார்கள். குளிரில் நடுங்கியபடி அவை நின்றிருப்பதைப் பார்த்து பரிதாப்பட்ட பேபி நாய், அருகில் சென்று அவற்றை நக்கி கதகதப்பூட்டியது. பன்றிக் குட்டிகள் ஒவ்வொன்றும் அந்த நாயின் சைஸில் இருந்தாலும், அதன் கருணை குறையவில்லை. ஆறு குட்டிகளையும் குளிர்போக்கி, அவற்றோடு விளையாடியது. இப்போது தினமும் குட்டிகளுக்கு சரணாலய ஊழியர்கள் சரியான நேரத்தில் பால் தருகிறார்களா என்பதைக் கண்காணித்து, அவற்றைப் பார்த்துக் கொள்வது பேபிதான் ! இந்த விநோத பாசக் காட்சியைப் பார்க்க நிறையப் பேர் வருகிறார்கள்.



செல்லமாக நாய் வளர்ப்பார்கள்; பூனை வளர்ப்பார்கள்; ஆனால், போஸ்னியாவைச் சேர்ந்த எமின் ஜூடிக் என்ற இவர் கரடி வளர்க்கிறார். ஆள் உயரத்துக்கு வளர்ந்திருக்கும் இந்த ஆறு வயது கரடிகள் இரண்டையுமே தனது மகன்கள் போல வீட்டில் வளர்க்கிறார். அவர் சாப்பிடுவதையே அவையும் சாப்பிடுகின்றன. ஜூஸ் குடிக்கின்றன. 'வீட்டுக்குள் கரடி வளர்ப்பது அக்கம்பக்கத்தினருக்கு ஆபத்து' என்று அரசு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டைச் சுற்றி கம்பி வேலி அமைத்திருக்கிறார் இவர்.






தகவல் : லோகேஷ்.