Saturday, August 20, 2011

ஒற்றைக் கொம்பு... உதைத்தால் வம்பு!

தெங்குமரஹடா ராமசாமி... மேற்குத் தொடர்ச்சி மலையின் தனிக் 'காட்டு’ ராஜா! மாயாறு பள்ளத்தாக்கு, தெங்குமர ஹடா, முதுமலை, மசினக்குடி, தலமலை, தாளவாடி எனச் சுமார் 1,000 சதுர கி.மீ. பரப்பளவுகொண்ட வனத்தில், யானை ஆராய்ச்சியாளர்களுக்கு இவர் தான் வழிகாட்டி. அடர்ந்த வனத்தில் அவரைச் சந்தித்தேன். ''அப்பாவுக்கு வேட்டையாடுறதுதான் தொழில். அதனால காடே கதின்னு கிடப்போம். அப்பலாம் வேட்டைக்குத் தடை கிடையாது. நாலு வயசுலயே 10 வேட்டை நாய்களைக் கூட்டிட்டு வேட்டைக் குப் போயிருக்கோம். கடமான், உடும்பு, காட்டுப் பன்னி, அலுங்கு (எறும்பு தின்னி), மந்தியெல்லாம் வேட்டையாடிச் சாப்பிடுவோம். நேரம் இருந்தா வீடு திரும்புவோம். இல்லேன்னா, ஏதாவது ஒரு மரத்துல மேல ஏறிப் படுத்திருவோம்.

பறவையியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த சிவகணேசன் என்னைத் தேடி வந்தார். 'மாசம் 1,000 ரூபா தர்றேன். என் கூட வர்றியா’னு கேட்டார். காட்டு யானைங்க இருக்கிற இடத்துக்கு அவரைக் கூட்டிட்டுப் போகணும். இதுதான் என் வேலை. அவரை ஆனைக்கட்டி, முதுமலை, சிறுயூர், தெங்குமரஹடா காட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போனேன். அங்கே மறைவா இருந்து மணிக்கணக்கில் யானைகளைப் பத்திக் குறிப்பு எடுத்தார்!'' என்பவர் சின்ன இடைவெளி கொடுத்து, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுப் பேச்சைத் தொடர்கிறார்.


'காட்டுக்குள் போறப்ப பேசக் கூடாது. காதுகளைக் கூர்மையா வெச்சுக்கணும். பழுப்பு, பச்சை நிற உடுப்பைத்தான் உடுத் தணும். நான் முன்னாடி போவேன். மத்தவங்களை 10 அடி தூரம் பின்னாடி வரச் சொல்வேன்.


ஒருவேளை, யானை துரத்தினா, அதை என் பின்னாடி வரவெச்சு அவங்களைத் தப்பிக்கவைக்கத்தான் இந்த ஏற்பாடு. காட்டுக்குள்ளே நுழைஞ்சதுமே யானை எங்கே இருக்குன்னுசுலபமா கண்டுபிடிச்சிருவேன். யானைக்குனு தனி வாடை இருக்கு. அதை வெச்சே கண்டு பிடிச்சுரலாம். அது போக, மரத்தை ஒடிக் குற சத்தம், மூச்சு விடுற சத்தம், நடக்குற சத்தத்தைவெச்சு, எத்தனை யானைங்க இருக்குது, கொம்பு யானை (ஆண்) எத்தனை, பெண் யானை எத்தனை, குட்டி எத்தனைன்னு ஓரளவு கணிச்சிருவேன். யானைங்க நம்மைப் பார்த்திருச்சுன்னா, தும்பிக்கையைத் தூக்கி, காதை விறைக்கும். உடனே, எதிர் திசையில நாம மெதுவா நகர்ந்துடணும். மீறி அங்கேயே இருந்தோம்னா, காலைத் தரையில ஓங்கி உதைக்கும். அப்படிப் பண்ணினா, நம்மைத் தாக்கப் போகுதுன்னு அர்த்தம். உடனே ஓடிரணும். யானை எடுத்த எடுப்புலயே 40 கி.மீ. வேகத்துல ஓட ஆரம்பிக்கும். அப்படித் துரத்த ஆரம்பிச்சதுன்னா, விசாலமான பாதையில ஓடாம புதரைப் பார்த்து ஓடணும்.

ஒரு முறை ரெண்டு ஆராய்ச்சியாளர்களை அழைச்சுட்டு பவானி சாகர் - காராச்சிக்கொறை காட்டுல யானைகளைத் தேடிப் போனேன். திடீர்னு யானை பிளிர்ற சத்தம் கேட்டுச்சு. 'யானை நம்மைக் கவனிச்சுடுச்சு’னு சொல்லிட்டு இருக்கும்போதே, ஒரு கொம்பு யானை நேருக்கு நேரா துரத்த ஆரம்பிச்சது. நான் அவங்க ரெண்டு பேரையும் புதர்ல தள்ளிவிட்டுட்டு, பாதையில் ஓட ஆரம்பிச்சேன்.

ஏன்னா, யானைக்குக் கண் பார்வை குறைவு. புதர்ல இருக்குறவங்களைவிட, பாதையில தெளிவா தெரியிற உருவத்தைக் குறிவெச்சு ஓடி வரும். நான் நினைச்ச மாதிரியே அவங்களை விட்டுட்டு என்னைத் துரத்த ஆரம்பிச்சது. ஓடிட்டு இருக்கும்போதே உடைஞ்சுகிடந்த கண்ணாடி பாட்டில் துண்டு ஒண்ணு என் கால்ல குத்திடுச்சு. சுருண்டு விழுந்துட்டேன். யானை நாலு எட்டு தூரத்துல வந்து நின்னுருச்சு. உடனே, பக்கத்துல கிடந்த பாட்டிலை எடுத்துப் பாறையில் அடிச்சு உரசுனேன். ஆக்ரோஷமா வந்த யானை சடக்குனு திரும்பி ஓடிப் போயிருச்சு. பொதுவா, கருங்கல்லைத் தட்டுற சத்தம் கேட்டாலோ, அரிவாளைக் கல்லுல உரசுற சத்தம் கேட்டாலே யானைகளுக்கு ஆகாது. அப்படிச் செஞ்சா, யானை பயந்து ஓடிரும்னு எதுவும் நிச்சயம் கிடையாது. ஆனா, அது நம்ம அதிர்ஷ்டத்தைப் பொறுத்த விஷயம். புகையைவெச்சு யானையை விரட்டலாம். பல தடவை பீடியைப் பத்தவெச்சே யானைகள்கிட்ட இருந்து தப்பிச்சிருக்கேன்.

ஒரு சமயம் 'மாயாறு பக்கமா ஒரு யானைக்கு மதம் பிடிச்சு இருக்கு. அதைக் கண்காணிச்சுத் தகவல் சொல்லுங்க’னு வனத் துறையினர் சொல்லி அனுப்புனாங்க. மதம் பிடிச்ச யானைக்குன்னு தனி வாடை உண்டு. ஒரு பெரிய புதர் பக்கத்துல அந்த வாடை அடிச்சது. புதரை விலக்கிப் பார்த்தா, ரெண்டு அடி தூரத்துல யானை நின்னுட்டு இருக்கு. என்னைப் பார்த்ததும் தும்பிக்கையைத் தூக்கி என் தலை முடியைப் பிடிச்சு இழுத்துச்சு. அப்படியே குனிஞ்சு ஓடினேன். தலையில கொத்து முடியைக் காணோம். அரை மணி நேரமா காட்டுக்குள் ஓடிக்கிட்டே இருக்கேன். அந்த யானை விடாமத் துரத்துது. மாயாறு வந்ததும் குதிச்சிட்டேன். உள் நீச்சல் அடிச்சிட்டே கொஞ்ச தூரம் தள்ளிப் போய் எழுந்து பார்க்குறேன்... நான் ஆத்துல குதிச்ச இடத்துல யானை இறங்கி தும்பிக்கையால துழாவிட்டு இருந்தது. அந்த ராஜாவுக்கு அவ்வளவு கோபம். அன்னிக்கு நான் தப்பிச்சது என் முன்னோர்கள் செஞ்ச புண்ணியம்!


சுரேந்திர ராஜான்னு ஒரு ஃபாரஸ்ட் கார்டை ஒத்தைக் கொம்பு யானை மிதிச்சுக் கொன்னுடுச்சு. 'அது அடிக்கடி ரோட்டுப் பக்கம் வருது. அதைக் கண்காணிச்சு காட்டுக்குள் திசை திருப்பிவிடணும்’னு என்கிட்ட சொல்லி அனுப்பினாங்க. நாலு பசங்களைக் கூட்டிக்கிட்டுப் போனேன். வாட்ச்சிங் டவர் பக்கம் காரை நிறுத்திட்டு உள்ளே போனோம். நான் யானையை மோப்பம் பிடிச்சிட்டேன். அதுவும் என்னை மோப்பம் பிடிச்சுருச்சு போல. திடீர்னு பெரிய சலசலப்பு. எங்களைச் சுத்தி ஏழெட்டு யானைங்க ஆங்காங்கே தும்பிக்கை தூக்குதுங்க. தலை தெறிக்க ஓடி ரோட்டுக்கு வந்தோம். அங்கே 10 யானைங்க காரைச் சுத்தி நிக்குது. நெருப்பு மூட்டி எல்லா யானைகளையும் விரட்டித் தப்பிச்சு வந்தோம்.

பல தடவை என்னை யானைங்க துரத்தினாலும் எனக்கு அதுங்க மேல கோபம் எதுவும் கிடையாது. சொந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைஞ்சா, யாருக்குத்தான் கோபம் வராது? அதுங்க செய்யிறதுதான் சரி. முன்னாடி நான் வேட்டையாடி விலங்குகளைக் கொன்னதை நினைச்சா, இப்போ வருத்தமா இருக்கு. அதுக்குப் பிராயச்சித்தமா மரக் கடத்தல், வேட்டை கும்பலைப்பத்தி தகவல் கொடுத்து, காட்டைப் பாதுகாத்துட்டு வர்றேன். ஒண்ணு மட்டும் நிச்சயம்... காடும் விலங்கு களும் நல்லா இல்லைன்னா, நாம நல்லா இருக்க முடியாது. நம்மளால காடுகளை உருவாக்க முடியாது. பாதுகாக்கத்தான் முடியும். காடுகளைப் பாதுகாக்க நாம எதுவும் செய்ய வேண்டாம். சும்மா இருந்தாலே போதும். காடும் விலங்குகளும் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும்!''- சுற்றிலும் நேசத்தோடு பார்வையைப் படர விட்டபடி முடிக்கிறார் ராமசாமி!


தகவல் : நிருபர் -டி.எல்.சஞ்சீவிகுமார், ஆனந்தவிகடன், 24-08-2011.


நன்றி : சுற்றுசூழல் குறித்தும், வனவிலங்குகள் குறித்தும்
பல தகவல் அடங்கிய வலைப்பூ : http://poovulagu.blogspot.com

Thursday, August 18, 2011

தந்தை பெரியார் கன்னடரா / மனிதரா ?



பெரியாரை ஒரு கன்னடர் என்று இப்போதும் வாய் கூசாமல் சொல்லும் மனிதர்கள் சிலர் இருக்கவே செய்கின்றனர். அவர் கர்நாடகத்திற்குச் சென்றதெல்லாம் பெல்லாரிச் சிறையில் கல்லுடைப்பதற்காகத் தான். பள்ளிக் கூடங்களில் இந்திப் பாடம் திணிக்கப்படுவதை எதிர்த்து, தமிழுக்காகப் போராடி அவர் சிறை சென்றார். தண்டனைக்கும் மேலே தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காகக் கடும் வெயில் அடிக்கும் பெல்லாரிச் சிறைக்கு ஒரு கோடையில் அரசு அவரை அனுப்பி வைத்தது.

ஐயாவை ஏன் பெல்லாரிக்கு அனுப்பி வைத்தீர்கள், அங்கு அவருக்குப் பேச்சுத்துணை கூட இருக்காதே என்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய சர்.ஏ.டி. பன்னீர்ச் செல்வத்திற்கு விடையளித்த அன்றைய முதலமைச்சர் ராஜாஜி, அவருக்குக் கன்னடம்தானே தாய்மொழி, நாயக்கருக்கு அங்குப் பேச்சுத்துணை இல்லாமலா போய்விடும் என்று கிண்டலடித்தார். ராஜாஜிகள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

1938, 39களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற தந்தை பெரியார், 06.12.38 அன்று நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம், ஒரு வரலாற்று ஆவணம். அந்த ஆவணத்திலிருந்து இதோ சில பகுதிகள்:

"இந்தக் கோர்ட்டு காங்கிரஸ் மந்திரிகள் நிர்வாகத்திற்கு உட்பட்டது. தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந் தவர்கள். இவை தவிர இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் மந்திரிகள் அதிதீவிர உணர்ச்சி கொண்டிருக்கிறார்கள். அது விசயத்தில் நியாயம் அநியாயம் பார்க்க வேண்டிய தில்லை என்றும் கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து ஒழிக்க வேண்டும் என்றும் ...(கருதிக்கொண்டிருக்கிறார்கள்). எனவே இந்தி எதிர்ப்பு விசயமாய் மந்திரிகள் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் அடக்குமுறையே என்பது எனது கருத்து. அடக்குமுறைக் காலத்தில் இம்மாதிரி கோர்ட்டுகளில் நியாயம் எதிர்ப்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.

ஆதலால் இந்தக் கோர்ட்டு நியாயத்தில், இந்த வழக்கில் எனக்கு நம்பிக்கை இல்லை... பொதுமக்கள் தவறுதலாய்க் கருதாமல் இருப்பதற்கும்... நான் நிரபராதி என்பதை எடுத்துக்காட்டுவதற்கும் ஓர் அறிக்கை எழுத்து மூலமாய்ச் சமர்ப்பிக்கிறேன்.(மற்றபடி) இந்த வழக்கு விசாரணைச் சடங்கில் நான் கலந்து கொள்ளவில்லை வக்கீல் வைக்கவும் இல்லை "

இப்படிச் சொல்லிவிட்டுத்தான், தன் பக்கத்து நியாயங்களை மக்கள் மன்றத்திற்காக அவர் எடுத்து வைக்கின்றார். 6மாதக் கடுங்காவல் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகின்றது. பணத்தைக் கட்டாத காரணத்தால், 1939 பிப்ரவரி 26ஆம் தேதி, பெரியாரின் காரை அரசு பறிமுதல் செய்து விடுகிறது. எதற்கும் கவலைப்படாத பெரியார் சிறை வாழ்க்கையைத் தொடர்கின்றார்.

அவரிடம் எப்படிக் கலக்கத்தை உருவாக்கலாம் என்று கருதிய அரசு, அதே மாதம் அவரை கர்நாடகத்திலுள்ள பெல்லாரி சிறைக்கு மாற்றுகிறது. புதிதாகத் தைக்கப்பட்ட சிறை உடைகளை எல்லாம் மறக்காமல் எடுத்துக் கொண்டு, பெல்லாரிக்கு ஐயா புறப்படுகின்றார். சிறை மாற்றத்தைக்கூட அரசு ரகசியமாக வைத்திருந்தது. எப்படியோ அதனைத் தெரிந்து கொண்ட கட்சித் தோழர்கள், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் நோக்கி ஓடிவருகின்றனர். அதனால் இரவு ஒன்பதரை மணிக்குப் புறப்பட வேண்டிய பம்பாய் மெயிலுக்குப் பதிலாக, மூன்றரை மணிக்குப் புறப்பட்ட ரேணிகுண்டா பாசஞ்சரில் சாதாரண வகுப்பில் அவரை அழைத்துச் செல்கின்றனர். எல்லாவற்றிற்கும் பெரியார் ஒத்துழைப்புக் கொடுக்கின்றார்.

பெல்லாரி சிறை மாற்றத்தைப் பன்னீர்ச் செல்வம், அரக்கோணம் சஞ்சீவி நாயுடு, ஆர். நாராயணி அம்மாள், டி.ஏ.வி. நாதன் உள்ளிட்ட பலர் கடுமையாக எதிர்க்கின்றனர். இவர்களுள் சிலர் மறியல் செய்து கைதும் ஆகின்றனர்.

கல்லுடைக்கும் பணி அங்கு ஐயாவுக்குக் கொடுக்கப்படுகின்றது. அதில் அவர் சோர்ந்து போய்விடுவார் என்பது அரசின் எண்ணம். ஆனால் அவரோ தொடர்ந்து கல் உடைத்ததோடு அல்லாமல், அதிகாரிகளைப் பார்த்து, 'ஐயா, இன்னிக்கு இது போதுங்களா' என்று கேட்டிருக்கிறார். அவர்களே பல நேரங்களில் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள்.

எனினும் பெல்லாரியின் கொடும்வெயில் அவரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. வழக்கமான வயிற்றுவலி மேலும் பன்மடங்கு கூடிவிட்ட காரணத்தால் பெரும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார். அவரைச் சிறையில் சந்தித்த, சிறைத் துறை அமைச்சர் டாக்டர் சுப்பராயன், அவர் நிலை கண்டு வருந்தி, உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்டிருக்கிறார். உங்களால் உதவி செய்ய முடியுமென்றால், என் உடல் நிலை பற்றி நன்கறிந்த டாக்டர் குருசாமி முதலியார் அவர்களை இங்கு வந்து என்னைச் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் கூறியிருக்கிறார்.

பெரியார் தமது கொடிய அரசியல் எதிரியானாலும், அவர் தமது ஆப்த நண்பர் என்றும், அவரது வி­யத்தில் தமக்கும் கவலை உண்டென்றும், முதலமைச்சர் ராஜாஜி சட்டமன்றத்தில் கூறியபோதும், அவர் செய்த ஒரே உதவி, மருத்துவர் குருசாமி முதலியார் சிறைக்குச் சென்று பெரியாரைச் சோதிக்க உதவியதுதான், ஆனாலும், பெல்லாரி வெயில் கொடுமையால், எந்த சிகிச்சையும் பயனளிக்கவில்லை.

பெல்லாரி சிறையில் உள்ள மருத்துவமனையிலாவது அவரை அனுமதித்துக் குணப்படுத்த வேண்டும் என்று சிறைத்துறைத் தலைவருக்கு (ஐ.ஜி) அளித்த விண்ணப்பமும் பயனற்றுப் போய்விட்டது.

13.05.1939 அன்று, வேறு வழியின்றி, கோவைச் சிறைக்கு ஐயாவை அரசு மாற்றியது. இறுதியில், 168 நாள் சிறைவாசம் முடிந்து, மே 21ஆம் தேதி, கோவைச் சிறையிலிருந்து அவர் விடுதலையானார்.

அந்தக் காலகட்டத்தில்தான் மாவீரர்கள் நடராசனும், தாலமுத்துவும் சிறையில் காலமானார்கள். 1939 ஜனவரி 15 - கட்டாய இந்திக்கு முதற்பலியான வீரர் நடராசன். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அவர் தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். உடல்நிலை நலியத் தொடங்கிய நேரத்தில், 'மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, விடுதலை பெற்றுச் சென்று விடு' என்று பலரும் தூண்டினர். 'நான் பெரியாரின் தொண்டன். இறந்தாலும் சிறையிலேயே இறப்பேனே அல்லாமல், மன்னிப்புக் கேட்டு வெளியேற மாட்டேன்' என்று உறுதிகாட்டியவர் அவர். அதானல்தான், "நடராசனின் தமிழ் வீரச் செய்கையை, பொன் எழுத்துகளில் பொறிக்க வேண்டும்" என்று எழுதினார் அண்ணா.

நடராசனைத் தொடர்ந்து, அதே ஆண்டு மார்ச் மாதம் தோழர் தாலமுத்துவும் சிறையில் மறைந்தார்.

அந்த வரிசையில், தந்தை பெரியாரும் நின்று கொண்டிருந்தார் என்பதுதான் உண்மை. ஆனால் உயிர் பிழைத்து வெளியில் வந்த அவர், அதன் பிறகும் 34 ஆண்டுகள் தமிழ் இனத்திற்காக உழைத்தார்.

தன் வாழ்நாள் முழுவதும் தமிழர்களுக்காகவே உழைத்த அவரைக் கன்னடர் என்று கூறி, அந்நியப்படுத்த நினைப்பவர்களுக்கு ஒரே ஒரு செய்தி -

அவர் தமிழர் இல்லையயன்றால், இங்கே எவன் ஒருவனும் தமிழன் இல்லை !

(சான்று: புலவர் நன்னன் எழுதிய 'இவர்தாம் பெரியார் ‡ 4.இந்தி' மற்றும் புலவர் இளஞ்செழியன் எழுதிய 'தமிழர் தொடுத்த முதல்போர்' )


தகவல்: பேராசிரியர் சுப.வீரபாண்டியன்


தகவல் 1.2.3.4...........


மனித உடலில் இரத்தம் ஒட்டம் இல்லாத பகுதி கண்ணின் கருவிழி மட்டுமே. ஏனென்றால்,இதற்கு தேவையான ஆக்சிஜனை காற்றிலிருந்து நேரடியாக பெற்று கொள்கிறது.



ஆண்களின் சட்டைகளில் வலது பக்கத்தில் பொத்தான்கள் இருக்கும். பெண்களின் சட்டைகளில் இடதுபுறமாக பொத்தான்கள் இருக்கும்.




ஒரு மனிதன் இறக்கும்போது முதலில் அவன் கேட்பு திறனை இழக்கிறான்.




ஒரு மணி நேரம் காதில் இயர்போன் அணிந்து பாட்டு கேட்க்கும்போது காதில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.


தகவல் : தங்கமலர்-தினத்தந்தி.

உலகம் நமக்கு எதிராக இருக்கிறதா ?


மனித சுபாவம் அப்படி
நீங்கள் உட்கார்ந்தால்
அவர்கள் சொல்வார்கள்
உட்காரதே.

நின்றால் சொல்வார்கள்
உனக்கு என்ன பிரச்சனை
நடக்கக் கூடாதா ?

நடந்தால் சொல்வார்கள்
அவமானம்
உட்கார் நீ.

நீங்கள் தாள முடியாமல்
படுத்தால் சொல்வார்கள்
எழுந்து நில்.

நீங்கள்
படுக்கவில்லையானால் சொல்வார்கள்
கொஞ்சம் படுக்கலாமில்லையா ?

விழிப்பதும் தூங்குவதுமாக என் வாழ்வை
நான் வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்
நான் இக்கணமே இறந்துபோனால்
அவர்கள் சொல்வார்கள்
நீ வாழ வேண்டும்.

நான் வாழ்வதைப் பார்த்தார்களானால்
யாருக்குத் தெரியும்
அவர்கள் சொல்வார்கள்
நீ இருப்பதே அவமானம்
செத்துத் தொலை.

அதீத பயத்துடன்
ரகசியமாக
நான் தொடர்ந்து
வாழ்ந்துகொண்டிருக்கிறேன் !"

---- தஸ்லிமா நசுரீன்

வங்காளக் கவிஞர் தஸ்லீமா நசுரீனின் சொந்த வாழ்க்கையை இந்தக் கவிதை பிரதிபலிப்பதாக இருந்தாலும் கவிதையின் உள்ளடக்கம் எல்லோருக்குமானதே !"

தகவல்: மாணிக்கவாசகம், மதுரை.

குறிப்பு :

தஸ்லிமா நசுரீன்
வங்காளதேசத்தை சேர்ந்த ஓர் எழுத்தாளரும் முன்னாள் மருத்துவரும் ஆவார். 1980களில் எழுதத் தொடங்கி சமயங்களையும் திட்டவட்டமான இஸ்லாமையும் எழுத்துகளில் கண்டனம் செய்து, பெண்ணியத்தைப் பற்றி எழுதி உலகில் புகழுக்கு வந்தார். இஸ்லாமுக்கு எதிராக எழுதினது காரணமாக வங்காளதேசத்துக்கு திரும்பி செல்லமுடியாத நிலையில் சுவீடனுக்கு வெளியேறினார். 2008இல்திரும்பி இந்தியாவுக்கு வந்து உச்ச பாதுகாப்பு நிலையில் தில்லியில் தற்போது வசிக்கிறார்.

தகவல் : தமிழ் விக்கிபீடியா.

Wednesday, August 17, 2011

ஏழை தேசம்

ஒருபுறம்....

121 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 70 ஆயிரம் கோடிக்குத் தங்க நகைகள் விற்பனையாகின்றன. ரூ.9660 கோடிக்கு வைர நகைகள் ஏற்றுமதியாகின்றன.


ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக டெல்லியில் 18 கோடி குளிர்பான பாட்டில்களும், மும்பையில் 12 பாட்டில்களும் விற்பனையாகின்றன.


மறுபுறம்....

விருது நகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கையினால் செய்யப்படும் தீப்பெட்டித் தொழிலை நம்பி 10 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

''வைகை... இனி, மதுரையைத் தாண்டாது!''

''இன்னும் கொஞ்ச ஆண்டுகளிலேயே... 'தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் வைகை என்ற ஆறு ஓடியது... அதில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது' என்று நம்முடைய குழந்தைகள் வரலாற்றுப் பாடத்தில் பாடம் படிக்கும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது வைகை. இதற்குக் காரணம்... வைகையின் நீர்ப்பிடிப்புப் பகுதியாக இருக்கும் மேகமலை மொட்டை அடிக்கப்படுவதுதான்!'' என்று அதிர்ச்சிச் செய்தி சொல்கிறார்கள்... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.


மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றின் மூலம் பாசனம் பெற்று வந்த ஆயிரக்கான ஏக்கர் நிலங்கள் வறட்சியில் சிக்கியிருக்கின்றன. இதன் காரணமாக, வைகை அணையைத் தூர் வார வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படவே, கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்ற நிலைக்குழு அணையை நேரில் ஆய்வு செய்தது (இதுகுறித்து பசுமை விகடன் ஜூலை 10-ம் தேதியிட்ட இதழில் செய்தி வெளியாகியிருந்தது). இதையடுத்து, அணையைத் தூர்வாரி பாசனப் பரப்பை அதிகரிக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில்தான், 'வைகை... வரலாறு...' என்று திகில் கிளப்புகிறார்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இந்த விஷயம் பற்றி வெளியில் பேசினாலே, அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால், தங்களின் முகம் மறைத்தே நம்மிடம் பேச முன்வந்தனர், அந்தச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

''வைகை உற்பத்தியாகும் மேகமலை 42 ஆயிரம் ஹெக்டேர் பரப்பரளவு கொண்டது. இதில் 1,700 ஏக்கர் பட்டா நிலங்கள். இதில் 23 தனியார் எஸ்டேட்கள் உள்ளன. இதில்லாமல் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பல தரப்பினரும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் முன்பு பஞ்சம் வந்த சமயத்தில் பட்டினிச் சாவுகளைக் குறைப்பதற்காக வருசநாடு மலையில் மக்களை குடியேற அனுமதித்தது அரசு. அப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு கூடிக்கொண்டே போனதன் விளைவுதான் இது. தற்போது, வனச் சரணாலயமாக மேகமலை அறிவிக்கப்பட்டிருப்பதால் புதிய ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பழைய ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த அரசு ஆர்வம் காட்டுவதில்லை.

மேகமலையில் வனப்பகுதி எது... அரசுப் புறம்போக்கு நிலம் எது என்று பிரித்துக் காட்டக்கூடிய நில அளவைப் படத்தை இதுவரை வருவாய்த்துறை தயார் செய்யவே இல்லை. சப்-டிவிஷனும் செய்யவில்லை. அதனால் வனப்பகுதிக்குள் வருவாய்துறைக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் உள்ள மரங்களை சில எஸ்டேட் உரிமையாளர்கள் ஆண்டாண்டு காலமாக வெட்டி வருகின்றனர். அதனால்தான் வைகையின் மூலாதாரமான மேகமலை வறண்டு வருகிறது. சூரியனே தெரியாத அளவுக்கு எப்போதும் மேகங்கள் சூழ்ந்திருந்ததால்தான் இதற்கு மேகமலை என்றே பெயர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மலைப்பகுதியில் மொட்டை வெயில் அடித்து வருகிறது. இதே நிலை நீடிக்குமானால்... வைகை ஆறு மதுரையைக் கடப்பது சந்தேகமே'' என்று கவலை பொங்கச் சொன்னார்கள்.


வருவாய்த் துறையிலிருக்கும் சிலரிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''சரியான நில அளவைப் படம் இல்லாததால் கிராம நிர்வாக அலுவலரிடம் உள்ள 'அ’ பதிவேட்டில் ஆறு, ஆற்றுப் புறம்போக்கு, காடு, கரடு, மேய்ச்சல் தரிசு, வனப் புறம்போக்கு, பட்டா நிலம் என மொத்தமாக 1,400 ஏக்கர் நிலம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவை எந்தெந்த இடத்தில் உள்ளன என்பது தெளிவாகக் குறிப்பிடப் படவில்லை. இதனால் வைகையின் நீராதாரமாக இருக்கும் சிறு சிறு ஆறுகளின் புறம்போக்கில் வளர்ந்துள்ள வேங்கை, அத்தி, மா, பலா, தோதகத்தி... எனப் பல வகை மரங்களை எஸ்டேட் உரிமையாளர்கள் தங்களுடையதாக நினைத்து ஆண்டாண்டு காலமாக வெட்டி வருகின்றனர். தேனி மாவட்ட வருவாய்துறையினரிடம் மரம் வெட்ட அனுமதி வாங்குவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ரூபாயை லஞ்சமாக அள்ளிக் கொடுக்கிறார்கள். அதனால் நில அளவை விஷயத்தில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. அரசின் கவனத்துக்கும் இந்த விஷயத்தைக் கொண்டு செல்வதில்லை'' என்று உண்மை நிலையை உடைத்துப் போட்டார்கள்.

தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாதேவியிடம் இதுகுறித்து கேட்டபோது, ''மேகமலை வனப்பகுதியில் சப்-டிவிஷன் செய்யவில்லை என்பது உண்மைதான். அதனால்தான், மலைப்பகுதியில் நில அளவை செய்து புல வரைபடம் தயாரிக்க உத்தரவிட்டுள்ளேன்'' என்று சொன்னார்.

அளவெடுப்பதோடு நில்லாமல்... ஆக்கிரமிப்புகளைத் தடுத்து, மரங்கள் அழிப்பையும் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால், வைகையை யாராலும் காப்பாற்ற முடியாது!

- இரா.முத்துநாகு

தகவல்: பசுமைவிகடன் , 25-08-11.


நன்றி: சுற்றுசூழல் குறித்த ஒர் நல்ல தளம் http://poovulagu.blogspot.com

நம்பினால் நம்புங்கள்


தொலைக்காட்சி பார்க்கும்போதுதான் அதிக கலோரிகள் செலவாகிறது, தூங்குவதைவிட.



அமெரிக்க அரசிடம் இருப்பதைவிட ஆப்பிள் நிறுவனத்திடம் அதிகம் பணம் உள்ளது.



கோலா கரடியின் கைரேகைகள் அச்சு அசலாக மனித கைரேகைகளைப் போலவே இருக்கும்.


உலகிலேயே புகைப்பிடிப்பவர்கள் அதிகம் உள்ள நாடு கீரிஸ்தான்.