Tuesday, February 14, 2012

திரைப்படம் !


சிறந்த நடிகைக்கான 'ஊர்வசி' விருதை மூன்று முறை பெற்றவர் நடிகை சாரதா.



தமிழின் முதல் வண்ணப்படம் 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்'.



ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் பானு அத்தையா (Bhanu Athaiya). 1982-ம் ஆண்டு 'காந்தி' திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் என்ற முறையில் விருது பெற்றவர்.





தகவல் : எஸ்.சடையப்பன்.

Monday, February 13, 2012

படம் சொல்லும் சேதி


அமெரிக்காவின் புகழ்பெற்ற காலணி தயாரிப்பு நிறுவனமான எல்.எல்.பீன் நிறுவனம் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது. விழாவைச் சிறப்பிக்கும் வண்ணமே இந்த வாகனம் ! 'வேட்டையாடுபவர்களின் காலணி' என புகழ்பெற்ற இவர்களின் கெளபாய் ஷூ போலவே 13 அடி உயரம், 20 அடி நீளத்தில் ஒரு வாகனத்தை உருவாக்கி அமெரிக்கா முழுக்க வலம் வரச் செய்திருக்கின்றனர்.

வனத்தை அழிப்பவனின் வீர விளம்பரம் !


பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கார்டூனிஸ்ட் ஆண்ட்ரே ஃபிராங்குயின் உருவாக்கிய 'மார்சுபிலாமி' என்ற இந்த கார்ட்டூன் கேரக்டருக்கு இப்போது வயது 60. கிட்டத்தட்ட மஞ்சள் குரங்கு போல இருக்கும் இந்த கற்பனை விலங்கு, குழந்தைகள் உலகில் எண்ணற்ற சாகசங்கள் புரிந்திருக்கிறது. பல ஐரோப்பிய மொழிகளில் இது பிரபலம். கார்ட்டூன் தாத்தா !




பழங்கால கார்களை சிலர் பத்திரமாக ஒட்டுவார்களே.... அப்படி இவர் ஓட்டுவது விமானம்! இரண்டாம் உலகப் போரின் போது குண்டுகள் போடப் பயன்படுத்திய பி-17 ரக விமானங்களை அமெரிக்காவின் 'காலிங்க்ஸ் ஃபவுண்டேசன்' அமைப்பு பராமரித்து ஒட்டி வருகிறது. அதில் ஒரு விமானத்தை ஓட்டும் ஸ்டூவர்ட் நியூமேன் என்ற இவர் முன்னால் விமானப்படை வீரர். 67 ஆண்டுகளுக்குப் பிறகு விமானம் ஓட்டுகிறார். மக்களை குண்டு போட்டு கொன்ற மாவீரன்!



மனித முகம் போலவே உள்ள இந்த முகமூடி நாற்காலி ஜெர்மன் நாட்டின் கொலோன் நகரில் நடைபெற்ற கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. 48 நாடுகள் கலந்துகொண்ட இந்த கண்காட்சியில் எல்லோரையும் கவர்ந்தது இந்த முகமூடி நாற்காலிதான். பொய் முகம்.




தகவல் : முத்தாரம் இதழ்.

Sunday, February 12, 2012

தகவல் களம் !


மிகச் சிறிய இக்கருவியை அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் கண்காட்சியில் காட்சிக்காக வைத்திருந்தனர். 'பல்ஸ் மீட்டர் ரிங்' (Pulse Meter Ring) என்றழைக்கப்படும் இது, ஒருவரின் நாடித்துடிப்பு மற்றும் ரத்தத்தில்உள்ள பிராணவாயு அளவை கணிக்க உதவுகிறது. ரத்தத்தில் உள்ள பிராணவாயு குறைந்தால் மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இக்கருவி மூலம் சரியான அளவைக் கணித்து அதற்கு ஏற்ப உடனுக்குடன் சிகிச்சை மேற்கொள்ள இக்கருவியை அறிமுகம் செய்திருக்கிறார்கள் அங்கே.



பொதுவாக பறவைகள் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப இடம் பெயர்ந்து செல்வது வழக்கம். அமெரிக்காவில் உள்ள ஒருவகையான நாரைகள், விஸ்கான்சினில் இருந்து புளோரிடாவிற்கு குளிர் நாட்களில் இடம்பெயர்ந்து செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது சில குஞ்சு நாரைகள் வழி மாறிச் சென்றுவிடுவது வழக்கம். அதை பாதுகாக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேசன் சென்டர்' (Federal Aviation Administration Center) அமைப்பினர் பறவைகள் இடம் பெயரும் போது சிறிய ரக கிளைடர் விமானம் கொண்டு அவற்றுக்கு வழி காட்டி வருகிறார்கள்.

பார்க்க பறவை போல் காட்சி அளிக்கும் அந்த கிளைடர் விமானத்தை குஞ்சு பறவைகள், தாய்ப் பறவை என நினைத்துக் கொண்டு அதை பின் தொடர்கின்றன. இப்பணியை ஒவ்வொரு இடப் பெயர்ச்சி சீசனிலும் இந்த மையம் செய்து வருகிறது.



"அலோ டிரான்ஸ் பிளான்டேஷன்" மாற்று சிகிச்சைக்காக இந்த மண்டையோட்டை உருவாக்கியிருக்கிறார்கள் பெல்ஜியத்தில் உள்ள ஹென்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ பேராசிரியர்கள். ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து அணுக்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளை மாற்றும் சிகிச்சைக்குப் பெயர்தான் "அலோ டிரான்ஸ் பிளான்டேஷன்" (Allo Transplantation).

இந்த சிகிச்சையில் சருமம், நரம்பு, எலும்பு என பல உறுப்புகளையும் மாற்றி அமைக்க முடியும். உலகில் முதன் முறையாக ஒருவரின் மண்டையோட்டை கொண்டு பாதிக்கப்பட்டவருக்கு முகச்சீரமைப்பு செய்ய பெல்ஜிய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்காவே இந்த மண்டையோடு!





தகவல் : ஷம்ரிதி.

Friday, February 10, 2012

தேதியைக் காணோம் !


தெற்கு பசிபிக் கடலில் இருக்கும் சமோவா என்ற தீவு தேசத்தில் வசிக்கும் மக்களுக்கு கடந்த டிசம்பரில் வெறும் 30 நாட்கள்தான். ஆமாம்..... அவர்களது நாட்காட்டியில் டிசம்பர் 30-ம் தேதியை அரசாங்கம் ரத்து செய்து விட்டது.

இந்த விநோதம் நிகழ்ந்ததற்குக் காரணம், ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு அருகில் உள்ளது சமோவா தீவு. ஆனாலும், அமெரிக்க, ஐரோப்பா நாடுகளுடன் அதிகமாக வியாபாரம் செய்யும் நோக்கத்தில், அவர்களுக்கு ஒத்துப்போகுமாறு தங்கள் நாட்காட்டியை வடிவமைத்தனர். 119 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாற்றம் நிகழ்ந்தது.

ஆனாலும், அவர்களின் பெரும்பகுதி வர்த்தகம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுடன்தான்.


பக்கத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும், சமோவாவுக்கும் 21 மணி நேர வித்தியாசம். இதனால் ஏகப்பட்ட சங்கடங்கள். சமோவாவில் சனிக்கிழமையாக இருக்கும்போது ஆஸ்திரேலியாவில் ஞாயிற்று கிழமை. எனவே அன்று வியாபாரம் பாதிக்கும். அடுத்த நாள் சமோவாவில் விடுமுறையாக இருக்கும்போது ஆஸ்திரேலியாவில் திங்கள்கிழமை பரபரப்பாக வியாபாரம் நடந்து கொண்டிருக்கும்.


இப்படி இரண்டு வாரத்தில் இரண்டு நாட்கள் இழப்பைத் தவிர்க்க, 21 மணி நேரம் பின்தங்கி இருப்பதைவிட மூன்று மணி நேரம் முன்னால் போகலாம் என முடிவெடுத்தது அரசு. டிசம்பர் 30-ம் தேதியை அடித்து விட்டு, அப்படியே 29-ம் தேதியிலிருந்து 31-ம் தேதிக்குப் போய்விட்டார்கள். இப்போது இரண்டு தேசங்களிலும் ஞாயிற்று கிழமை ஒன்றாகவே வருகிறது.




தகவல் : லோகேஷ்.

Thursday, February 9, 2012

தகவல் துளி !


தென் ஆப்பிரிக்காவில் கிம்பர்லி என்ற இடத்தில் 1871 - ல் மலையைக் குடைந்து வைரச் சுரங்கம் உருவாக்கினர்.சுரங்கத்தில் 2722 கிலோ வைரக் கற்கள் கிடைத்தன. ஆனால், மலை திடீரென்று இடிந்ததில் சுரங்கம் பள்ளமாக மாறியது. தற்போது 240 மீட்டர் ஆழம் 463 மீட்டர் சுற்றளவுடன் உள்ள மிகப் பெரிய பள்ளமாகக் காட்சியளிக்கிறது இச்சுரங்கம். உலகின் இரண்டாவது மிகப் பெரிய பள்ளம் இது.



கேரளாவின் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இடுக்கி அணை ஆசியாவிலேயே உயரமான வளைவு அணைகளுள் ஒன்று. இது 1973 - ல் திறக்கப்பட்டது.



இதயத்தின் கீழ்ப்பாக நுனிக்கு, 'அபெக்ஸ்' என்று பெயர். இது மார்புக் கூட்டை லேசாகத் தொட்டு கொண்டிருப்பதால் தான் இதயம் தன் வேலையை சரிவரச் செய்ய முடிகிறது.


தகவல் : டி.கார்த்திக், கோவிந்த் மற்றும் கே.ஜெயலட்சுமி.

Wednesday, February 8, 2012

நம்பினால் நம்புங்கள் !


பண்டைய சீனாவில் நோயாளிகள் குணமடைந்தால் மட்டுமே மருத்துவர்கள் பணம் பெறுவார்கள். தவறி நோயாளி இறந்துவிட்டால் நோயாளிக்கு இழப்பீட்டு தொகையாக அந்த மருத்துவர் பணம் தர வேண்டும்.



கடந்த 3500 ஆண்டுகளில் 230 ஆண்டுகள் மட்டுமே உலகம் முழுக்க அமைதி நிலவியிருக்கிறது.




இருவரிடமும் ஆயுதம் இல்லை என்பதை உணர்த்துவதற்காகத்தான் புதியவர்களிடம் கை குலுக்கும் பழக்கம் உருவானது.




ஆண்கள் ஒரு விஷயத்தை முடிவு எடுப்பதற்குள் மூன்று முறை மனதை மாற்றிக் கொள்வதாக ஒரு ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.




தனது துணைவி, மகள் மற்றும் மகன் இறந்த துயரத்தில் கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் எழுதிய கவிதைகளின் தொகுப்பே "கீதாஞ்சலி".




தகவல் : நெ.இராமன்.

Monday, February 6, 2012

தகவல் களம் !


தீயதைப் பார்க்காதே, கேட்காதே, பேசாதே என உணர்த்தும் மூன்று குரங்கு பொம்மைகள் புகழ் பெற்றவை. அவை ஜப்பான் நாட்டில் நிக்கோ எனும் நகரத்திலுள்ள புத்த ஆலய ஓவியங்கள். அதைதான் பொம்மைகளாக்கி விற்பனை செய்கிறார்கள். அந்த புகழ் பெற்ற ஓவியத்தை வரைந்தவர் ஹிதாரி ஜிஸ்கோ என்ற புகழ் பெற்ற ஓவியர். அந்த குரங்குகளுக்கு மிஜாரு, இவஜாரு, கிகஜாரு (Mizaru, Iwazaru, Kikazaru) என்ற ஜப்பானியப் பெயர்கள் உண்டு.



பிரான்ஸ் நாட்டு உணவகங்களில் சாப்பிடப் போகும் குடும்பத்தில் குழந்தைகள் சமர்த்தாக இருந்தால், அவர்களுக்கு உணவாக ஊழியர்களே கொசுறு (Tips) கொடுப்பார்கள். உண்மைதான். மேசை விரிப்பில் உணவுப் பொருள் எதையும் சிந்தாமல் சாப்பிடும் குழந்தைகளுக்கு, அந்த ஒழுக்கத்தைப் பாராட்டும் வகையில் கொடுக்கப்படுவதுதான் அது. இதைப் பார்த்துப் பெரியவர்களும் எச்சரிக்கையுடன் உணவுப் பொருட்களைச் சிந்தாமல், சிதறாமல் உண்ண வைக்கிறார்கள்.


ஆராய்ச்சியாளர்கள் தங்கள் வாழ்க்கையையே ஆராய்ச்சிகாகக் கழிக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, அவ்வாறு சிரமப்பட்டு கண்டுபிடித்தப் பொருளுக்கு உரிமம் வாங்குவது அதைவிடச் சிரமம். தான் கண்டுபிடித்தப் பொருளுக்கு உரிமம் பெறுவதற்குள் அதே பொருளுக்கு வேறொருவர் பெற்றுவிட்டால்....

எலிசா கிரே என்பவர்க்கு இப்படிதான் நேர்ந்தது. பல ஆண்டுகள் கடினமாக உழைத்த கண்டுபிடிப்புக்கு உரிமம் பெறுவதற்காக 1876 பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு 2 மணி நேரத்திற்கு முன் இன்னொருவர் அதே பொருளுக்கு உரிமம் பெற்றுவிட்டார். அந்த நபர் வேறு யாரும் அல்ல. அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்தான் அவர். தொலைபேசிதான் அந்தக் கண்டுபிடிப்பு!



ஜப்பானியர்கள் கடைபிடிக்கும் பல நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று. தாம் சாப்பிட ஆரம்பிக்கும் முன் ''கோச்சிசொசம' (Gochisosama) என்று சொல்வார்கள். இது வீட்டில் மட்டுமல்ல, வெளியே உணவகங்களில், நண்பர் - உறவினர் வீடுகளில், பிற நாடுகளில் என்று எல்லா இடங்களிலும் அவர்கள் மேற்கொள்ளும் பழக்கம். இதற்கு 'இந்த உணவைத் தயாரித்து வழங்கியவருக்கு நன்றி' என்று பொருள்.





தகவல் : வித்யுத், கே.ஜெயலட்சுமி.