Monday, April 9, 2012

படம் சொல்லும் சேதி !

(Veteran Artist Tim Storrier's Self-Portrait-Australia)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு ஓவியப்போட்டியில் முதல் பரிசு பெற்ற 'வழிப்போக்கன்' ஓவியம்தான் இது. வரைந்தவர் ஓவியர் டிம் ஸ்டோர்ரியர். அந்தக்கால வழிப்போக்கனுக்கு கட்டுசோறு மூட்டை போதும். ஆனால், இப்போது என்னவெல்லாம் தேவைப்படுகிறது.



(Mammoth Reproductions in the Exhibition 'Giants of the Ice Age', Nebra, Central Germany)

ஜெர்மனியின் நெப்ரா நகரில் 'ஐஸ் ஏஜ் ஜென்ட்ஸ்' என்ற கண்காட்சி இந்த மாதம் தொடங்கி டிசம்பர் வரை நடைபெறுகிறது. பனி யுகத்தில் வாழ்ந்த பிரமாண்டமான மிருகங்களை அப்படியே உயிருள்ள உருவங்கள் போலச் செய்து கண்காட்சியில் வைக்கிறார்கள். அப்படி உருவாக்கப்பட்ட மம்மூத் யானையும், அதன் குட்டியும்...



(A Flower Horn Fish-Thailand)

தலையில் கொம்பு முளைப்பது என்பது தரையில் வாழும் விலங்கினங்களுக்கே உரிய சிறப்பம்சம். மீனுக்கு கொம்பு முளைத்தால்.... அது இப்படிதான் கொண்டை போட்டுவிட்டது போல இருக்கும். தாய்லாந்தில் அழகிய மீன் கண்காட்சி நடந்தது. அதில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்த இந்த மீனுக்கு பெயர் ' ஃபிளவர்ஹார்ன் ஃபிஷ்'. அதாவது பூக்கொம்பு மீன்.


(9.5 Crores Kelly bag- France)

பிரான்சின் புகழ்பெற்ற ஹெர்ம்ஸ் பர்கின் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்தப் புதிய கைப்பையின் விலை ஒன்பதரை கோடி ரூபாய். முதலைத் தோலில் செய்து, அதன்மீது விலை உயர்ந்த 11,303 வைரங்களும் இதர கற்களும் பதிக்கப்பட்ட கைப்பை. இதன் கைப்பிடியை கையில் மாட்டிக் கொண்டால் அழகிய பிரேஸ்லெட் போலத் தெரியும். வைரங்கள் எதுவும் சுலபத்தில் விழுந்து விடாதபடி கவனமாக பதிக்கப்பட்டு இருக்கின்றன.





தகவல் : முத்தாரம் இதழ்.

Sunday, April 8, 2012

நம்பினால் நம்புங்கள் !


எலெக்ட்ரிக் ஈல் எனும் மீன் வகை வெளிப்படுத்தும் மின்சாரமானது, ஒரு குதிரையையே கொல்லும் அளவு ஆற்றல் வாய்ந்தது.




மனித நாவை விட ஈயின் கால்கள் ஒரு கோடி மடங்கு நுட்பமான உணர்வு கொண்டவை.



வௌவால் ஆண்டுக்கு ஒரு குட்டி மட்டுமே இடும். அதன் அளவில் உள்ள பாலூட்டிகளில் மிக மெதுவாக இனப்பெருக்கம் செய்பவை வௌவால்களே.



கொசு ஒரு மைல் சுற்றளவைத் தாண்டி வெளியே செல்லாது.








தகவல் : முத்தாரம் இதழ்.

Friday, April 6, 2012

குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன் ?


தேர்வு நேரம் இது. நமது கல்வி முறை மனப்பாடம் செய்வதையே மையமாகக் கொண்டு இயங்குகிறது. 'படி...படி...' என்று பெற்றோரும் பிள்ளைகளை வாட்டி வதைக்கும் காலத்தில் அமெரிக்காவில் நினைவு தவறுதல், கவனம் சிதைவுறுதல் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஓஹியோவில் உள்ள தேசிய குழந்தைகள் மருத்துவமனை வெளியிட்ட அந்த ஆய்வில், 'குழந்தைகள் படிக்க சிரம்பப்படுவது ஏன்' என்பது குறித்த அதிர்ச்சியளிக்கும் விபரங்கள் உள்ளன.

சின்ன வயதில் விளையாட்டின்போது சில குழந்தைகள் தலையில் லேசாக அடிபட்டு பின் சரியாகி விடுவதைப் பார்த்திருப்போம். ஆனால், இந்தக் காயம் ஆறியதால், அது முடிந்து விட்டதாக அர்த்தமில்லையாம். அது மூளைக்குள் ஊடுருவி அழுத்தமாக நினைவைத் தாக்கி, மறதியை அதிகரிக்கச் செய்கிறதாம். 'லட்சக்கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் இப்படி காயங்களுடன் வருகின்றனர். நாமும் சிகிச்சையளித்து விட்டு குழந்தை குணமாகி விட்டதாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். ஆனால் அப்படி சிகிச்சை பெற்ற குழந்தைகளில் பலர் இந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்' என்கிறார் இந்த மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் கீத்யீட்ஸ். சில குழந்தைகளுக்கு ஓராண்டு வரை இந்த நினைவு மறதி பாதிப்பு நீடிக்கிறதாம்.

அடிபட்டு சரியாகிவிட்டாலும் அலட்சியமாக இருக்காமல் குழந்தையைக் கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தலைவலி, கோபம், எரிச்சல், சமநிலை குலைதல், படிப்பில் கவனமின்மை, அசதி, மறதி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக குழந்தையை பரிசோதிக்க வேண்டும் என்று அமெரிக்க நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். 8 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே இத்தகைய பாதிப்புக்கு அதிகம் ஆளாகின்றனர்.

அடி, விபத்து போன்ற புறக்காயங்கள் மட்டுமின்றி, கடுமையான வன்முறையை சந்தித்தல், கோரமான விபத்துகள், படுகொலைகளைப் பார்த்தல், பயம், புறக்கணிக்கப்படுதல், அவமதிக்கப்படுதல் போன்ற அகரீதியான காயங்களும் குழந்தைகளுக்கு ஆழமான பாதிப்பை மூளைக்குள் ஏற்படுத்துவதாக இந்த ஆய்வு கூறுகிறது. குழந்தைகளை விளையாட அனுமதிக்காமல் வீட்டுக்குள் முடக்குவதும் அதிகமான படிப்புச் சுமையை ஏற்றுவதும் குழந்தையின் மூளையை மந்தமாக்கி விடுகிறது என்றும் உளவியல் நூல்கள் தெரிவிக்கின்றன.



எனவே, குழந்தை மதிப்பெண் எடுக்கவில்லை என்பதற்காக தண்டிப்பதைத் தவிர்த்து, குழந்தையின் நடவடிக்கைகளை தாயுள்ளத்துடன் கண்காணித்து உதவி செய்தால், அவசியமான நேரத்தில் சிகிச்சையளித்தால், நிச்சயம் எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் !






தகவல் : செந்தூரம் ஜெகதீஷ்.

Thursday, April 5, 2012

உலகம் பலவிதம் !


இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும், 'ஏதோ எரிமலை சீறுவதால் அதிலிருந்து நெருப்புக் குழம்பு பொங்கி வழிகிறது' என்று தோன்றலாம். ஆனால், உண்மை அதுவல்ல ! இது சாதாரண அருவி, தண்ணீர் வழிந்து விழும் அற்புத அருவி. இதன் தண்ணீர்தான் இயற்கையின் மாயாஜாலத்தில் இப்படி நெருப்புக் குழம்பு போல சீற்றத் தோற்றம் காட்டுகிறது.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கிறது யோஸ்மைட் தேசிய பூங்கா. இந்தப் பூங்காவில் ஒரு அருவிக்குப் பெயர் 'குதிரைவால் அருவி'. மலை முகட்டிலிருந்து ஒரு நேர்க்கோடாக தண்ணீர் தரையில் வந்து விழுகிற விதத்தில் இருக்கிறது இந்த அருவி. பிப்ரவரி மாதத்தின் மத்தியில் இரண்டே இரண்டு வாரங்களுக்கு சூரியன் மிகச் சரியாக இந்த அருவியின் தலைப் பக்கமாக அஸ்தமன நேரத்தில் வரும்போது சிவப்பான சூரியக் கதிர்கள் பட்டு அருவி அப்படியே செந்நிறமாகிறது. அப்போது புகைப்படம் எடுத்தால் இப்படித்தான் தோன்றுகிறது அருவி.

வெறும் இரண்டே நிமிடங்களில் இப்படி மாயாஜாலம் காட்டிவிட்டு மறைகிறது சூரியன். வானம் தெளிவாக இருந்து, அருவியிலும் போதுமான தண்ணீர் கொட்டினால்தான் இந்தக் காட்சி சாத்தியமாகும் ! இதைப் படம் பிடிக்க உலகெங்கிலும் இருந்து புகைப்படக் கலைஞர்கள் இங்கு வந்து காத்து இருக்கிறார்கள்.



உலகெங்கிலும் பல விமான நிறுவனங்கள் சிக்கலை சந்திக்கும் நேரம் இது. ஹங்கேரி நாட்டின் 'மாலேவ்' விமான நிறுவனம் நஷ்டத்தைத் தாங்காமல் மூடப்பட்டு விட்டது. அந்த நிறுவனத்தின் ஆறு விமானங்களையும் அமெரிக்காவில் தனித் தனியாகப் பிரித்து பழைய இரும்புக்குப் போடுகிறார்கள். இவற்றைப் புதுப்பிக்க ஆகும் செலவுக்கு புதுசே வாங்கிவிடலாம் என்பதால் சீண்டுவாரில்லை !




தேள் கொட்டுவது என்பது வலி மிகுந்த அனுபவம். சில சமயம் இறப்பு நிலையும் ஏற்படக்கூடும். ஆனால், அந்தத் தேளின் விஷமே மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆமாம், நரம்பு நோய்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தேள் விஷம் மருந்தாகிறது. தேள்களில் இதுவரை மொத்தம் 12 வகை இருப்பதாக சொல்கிறார்கள். அவை: வெண்தேள், செந்தேள், கருந்தேள், கொள்ளிதேள், சித்திரத்தேள், சந்தித்தேள், சினைத்தேள், மணித்தேள், ஜூனைத்தேள், நீர்த்தேள், உச்சிலிங்கத்தேள், நச்சுத்தேள்.










தகவல் : லோகேஷ்,வித்யுத்.

Wednesday, April 4, 2012

தகவல் களம் !



மென்மையான காஷ்மீர் கம்பளங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை மென்மையாக இருப்பதற்குக் காரணம், பாஷ்மினா ஆடுகள். இமயமலையை ஒட்டிய பனி படர்ந்த பகுதிகளில் பிரத்யேகமாக வசிக்கும் இந்த ஆடுகள், அந்தக் குளிரைத் தாங்குவதற்கு ஏதுவான மென்மையான அடர் ரோமங்கள் அமையப் பெற்றவை. அவற்றிலிருந்து தான் புகழ் பெற்ற காஷ்மீர் சால்வைகளும் கம்பளங்களும் உருவாகின்றன.

குறைந்துவரும் இந்த இனத்தை அபரிமித ஆற்றலோடு உருவாக்குவதற்கான முயற்சி, காஷ்மீரின் ஷெர்-இ-காஷ்மீர் பல்கலைக்கழக விலங்கியல் துறையில் நடக்கிறது. அவர்கள் குளோனிங் முறையில் பாஷ்மினா ஆட்டை உருவாக்கி சாதித்துள்ளனர். 'நூரி' என இந்த ஆட்டுக் குட்டிக்கு பெயர் வைத்துள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு 'கரிமா' என்ற எருமைக் கன்றுக் குட்டியை ஹரியானாவில் குளோனிங் முறையில் உருவாக்கினார்கள். அதன் பின் இந்தியாவின் இரண்டாவது குளோனிங் வெற்றி இது!




உலகிலேயே மிக விரைவாகச் செல்லக்கூடிய எலிவேட்டரை ஜப்பானின் மிட்ஸூபிஷி நிறுவனம் உருவாக்குகிறது. சீனாவின் ஷாங்காய் நகரில் 'ஷாங்காய் டவர்' என்ற வானுயர்ந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. வரும் 2014-ம் ஆண்டு இது கட்டி முடிக்கப்டும். 632 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் இந்த ஷாங்காய் டவர், உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீஃபாவை விட சற்றே உயரம் குறைவானது. 128 மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடத்தில் சிறப்பு அம்சமே இந்த எலிவேட்டர்தான்.

ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த எலிவேட்டார். தரைத் தளத்தில் ஏறும் ஒருவர், 128-வது மாடியை வெறும் 37 நொடிகளில் சென்றடைய முடியும். இப்போது புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் இருக்கும் எலிவேட்டரைவிட இது இரண்டு மடங்கு வேகம். இவ்வளவு வேகமாகச் சென்றாலும், உள்ளே பயணிப்பவர்கள் சிறு அதிர்வையோ, காது அடைத்துக் கொள்ளும் அவஸ்தையோ உணர முடியாது. இப்படி வேகமாக பயணிக்கும் போது, அந்த இயக்கத்தில் கொஞ்சம் மின்சாரத்தையும் இது உற்பத்தி செய்யுமாம்.



தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் ஜென்மப் பகை இருந்தாலும், இசை இரண்டு தேசங்களையும் இணைக்கிறது. பிரான்ஸ் ரேடியோவுக்காக தலைநகர் பாரிஸில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு இரண்டு கொரியாக்களைச் சேர்ந்த கலைஞர்களும் இணைந்துவந்து தங்கள் பாரம்பரிய வாத்தியங்களை இசைத்தார்கள்!







தகவல் : லோகேஷ்.

Tuesday, April 3, 2012

டைட்டானிக் மூழ்க நிலவு காரணமா ?


பிரமாண்ட டைட்டானிக் கப்பல், 1500 பேரை பலி கொண்டபடி மூழ்கிப் போன வருடம், 1912 . நம்ம ஊர் என்றால் இந்நேரம் நூற்றாண்டு விழா கொண்டாடியிருப்போம். ஆனால், அமெரிக்கர்கள் ஒரு படம் எடுத்து உலகம் முழுக்க வசூலை வாரிக் குவித்த பிறகும் கூட, 'டைட்டானிக் ஏன் முழ்கியது? என்ற ஆராய்ச்சியைக் கைவிடவில்லை. "டைட்டானிக் மூழ்கியதற்கு நிலவுதான் காரணம் !" என்று சமீபத்தில் பரபரப்பாக அறிவித்திருக்கிறார்கள் அவர்கள்.

'ஒரு பெரிய பனிப்பாறையில் மோதித்தானே டைட்டானிக் கப்பல் கவிழ்ந்தது' என்ற புருவம் சுருக்குகிறீர்களா ? சரிதான், பனிப்பாறைதான் முதல் குற்றவாளி. ஆனால், அவ்வளவு பெரிய பனிப்பாறை, அந்த நேரத்தில், அந்த இடத்தில் எப்படி வந்தது? இங்கேதான் இரண்டாம் குற்றவாளியாகக் கைகட்டி நிற்கிறது நிலா.

"டைட்டானிக் மூழ்கிய அதே ஆண்டில் வழக்கத்துக்கு மாறாக நிலவு நம் பூமியை மிகவும் நெருங்கி வந்திருக்கிறது.1400 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் வானவியல் அதிசயம் இது !" என்கிறார் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண பல்கலைக்கழக இயற்பியலாளர் டொனால்டு ஆல்சன்.

'சரி, இதற்கும் கப்பல் மூழ்குவதற்கும் என்ன சம்பந்தம் ?"

- அதையும் விளக்குகிறது அவர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு.

"அந்த வருடத்தில் பூமியை நெருங்கி வந்த நிலவு, மிக மிகக் குறைந்தபட்ச தூரத்துக்கு வந்தது 1912 ஜனவரி 4 ம் தேதி. இது நடந்தது சுமார் 3 மாதம் கழித்து... அதாவது, 1912 ஏப்ரல் 15 அன்றுதான் டைட்டானிக் மூழ்கியது. பொதுவாக பனிப்பாறைகள் வட துருவத்தில்தான் உருவாகும். அதுவும் பனிக்காலமான வருட இறுதியில்தான் அவை உருவாகும்.


டைட்டானிக் மூழ்கிய இடம், வட துருவத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. மூன்றே மாதத்தில் ஒரு பனிப்பாறை அவ்வளவு தூரம் பயணிப்பது கடினம். பயணித்தாலும் அலைகளால் தாக்கப்பட்டு, கரைந்து குட்டிப் பனிக்கட்டி ஆகிவிடும்.


ஆனால், அந்த வருடத்தில் நிலவு பூமிக்கு அருகில் இருந்ததால், கடல் அலைகளில் நிறைய மாறுதல்கள் இருந்திருக்க வேண்டும். வழக்கத்துக்கு மாறான வலிமையான அலைகள் மற்றும் கடல் நீரில் ஏற்பட்ட அசைவுகளே அந்தப் பாறையை அவ்வளவு தூரம் நகர்த்திக் கொண்டு வந்திருக்க வேண்டும். எதிர்பாராத இடத்தில் அது மோதி, டைட்டானிக்கை பதம் பார்த்திருக்கிறது' என்கிறது விஞ்ஞானிகள் குழு.







தகவல்: கோகுலவாச நவநீதன்.

Monday, April 2, 2012

படம் சொல்லும் சேதி !



டிரையத்லான் விளையாட்டு கேள்விப்பட்டிருப்பீர்கள். ஓட்டம், சைக்கிள், நீச்சல் மூன்றும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய விளையாட்டு. குளிர்காலத்தில் ஐஸ் ஸ்கேட்டிங் செய்துவிட்டு துப்பாக்கியால் சுடுவது 'பையத்லான்' போட்டி. இதற்கான உலகக் கோப்பை போட்டி ஆண்டுதோறும் நடக்கிறது. 12.5 கி.மீ. ஸ்கேட் செய்து, இடையில் ஆங்காங்கே படுத்து சுடும் இந்தப் போட்டியில் இந்த ஆண்டு பெண்கள் பிரிவில் வென்ற ஜெர்மனியின் மக்டலேனா நியூனர் முதலில் சுட்டுவிட்டுக் கிளம்பும் காட்சி இது !



நம்ம ஊரில் முதியவர்கள் பயன்படுத்தும் சாய்வு நாற்காலி போன்ற இதை, மேற்கத்திய நாடுகளில் கடற்கரையில் ஓய்வாக உட்காருவதற்குப் பயன்படுத்துகிறார்கள். 'டெக் சேர்' எனப்படும் இதை மிக பிரமாண்டாக 28 அடி உயரத்துக்கு செய்திருந்தார் ஸ்டுவார்ட் முர்டோக் என்ற சிற்பி. தெற்கு இங்கிலாந்தில் இருக்கும் போர்ன்மவுத் பீச்சில் வைக்கப்பட்டிருக்கும் இதன் எடை 6 டன். உட்காருவதற்காக அல்ல; உலக சாதனைக்காக செய்யப்பட்ட முயற்சி இது!



சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் டியானென்மன் சதுக்கத்தை ஒட்டிய பிரமாண்ட ஹாலில் ஆண்டு தோறும் 'நேஷனல் பீப்பிள் காங்கிரஸ்' மாநாடு நடக்கும். சீன அரசு நடத்தும் இந்த முக்கிய மாநாட்டுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்பதற்காக பாரம்பரிய உடையில் காத்திருக்கும் சீனப் பெண்கள் இவர்கள். காத்திருக்கும்போது இப்படி ஜாலி போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்.





தகவல்: முத்தாரம் இதழ்.