Sunday, December 11, 2011

சாதனைக்கு வயது ஒரு தடையல்ல!


புகழ் பெற்ற ' தி ஆர்ஜின் ஆஃப் ஸ்பீசீசஸ்' (The Origin of Species) என்ற புத்தகத்தை எழுதிய போது சார்லஸ் டார்வினுக்கு 50 வயது.



மெக் ஆடம் என்கிற ஆங்கிலேய நிலம் அளப்பவர்தான் (Surveyor) 69 வயதில் கல்லைப் பரப்பிச் சாலையை அமைக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.



பிறவியிலேயே பார்வையும், கேட்கும் திறனும், பேசும் திறனும் இல்லாமல் பிறந்த ஹெலன் கெல்லர் கடுமையான பயிற்சிகளால் 10 வயதிலேயே பேசக் கற்றுக் கொண்டதோடு, சொற்பொழிவு ஆற்றும் திறனும் பெற்றார். இதைக் கேள்விப்பட்ட விக்டோரியா பேரரசி ஒரு கப்பலுக்கு ஹெலன் கெல்லரின் பெயரை சூடியது தனிக் கதை.



ஆஸ்திரியா நாட்டு மருத்துவர் சிக்மண்ட் ப்ராய்டு கனவுகள் பற்றி ' தி இன்டபிரிடேஷன்ஸ் ஆஃப் ட்ரீம்ஸ்' (The Interpretation of Dreams) என்ற புத்தகத்தை 44 வது வயதில் எழுதி உலகப் புகழ் பெற்றார்.



தகவல் : (கே.ஜெயலட்சுமி, சென்னை)

Wednesday, December 7, 2011

புகழ்ச்சி இயல்பன்று !

உலகிலேயே மிகவும் கடினமானது என்னவென்றால் ஒருவரை உட்கார வைத்து கொண்டு அவர் முகத்துக்கு நேராக புகழ்வது. அதைவிடக் கடினமானது அந்தப் புகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருப்பது. ஆனால், இந்த இரண்டும் இங்கே மிக இயல்பாக நடக்கின்றன. பொது மேடைகளில் மட்டுமின்றி, காதலன், காதலி உரையாடலிலும் கூட புகழ்ச்சி என்பது மிகையாக இருந்தால்தான் அது உணமையான காதல் என்று கருதப்படுகிறது.

எப்போதும் இயல்புதான் சுவையானது. இயல்புதான் அழுத்தமானது. ஆனால், இங்கே மிகைப்படக் கூறுவது, மிகைப்படப் பாராட்டுவது, உண்மையைக் காட்டிலும் கூடுதலாக பேசுவது என்பவைதான் வரவேற்புக்கு உரியவைகளாக இருக்கின்றன. இது ஒரு சமூகத்தின் நலிந்த நிலையைத்தான் காட்டுகிறது.

அண்மையில் வெளியான ஒரு திரைப்படத்தில் காதலனுக்கும், காதலிக்கும் இடையே நடக்கின்ற உரையாடல் மிக நயமானதாகப்பட்டது. அந்த பெண் தன்னுடைய காதலனிடத்தில் ஒரு கேள்வி கேட்கிறாள், "எல்லா காதலனும், தன் காதலியை தேனே என்றும் , மானே என்றும் கொஞ்சுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், ஒருநாள் கூட நீ என்னை அப்படி கொஞ்சியதில்லையே" என கேட்கிறாள்.


அவன் சொல்கிறான்,"உண்மைதான். உன்னை பார்த்தல் தேனை பார்த்தது போல தோன்றவில்லை என்கிறான். "அப்படியா ? நான் உனக்கு தேனாக தோன்றவில்லையா ?" என்கிறாள். "இல்லை... இல்லை நீ எனக்குத் தேனில்லை" என்கிறான். இந்த இடத்திலே அந்தக் காட்சியை நினைக்கும் போது நமக்கு நினைவுக்கு வரும் ஒரு இலக்கியத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என தோன்றுகிறது.

ஷேக்ஸ்பியர் எழுதிய கிங்லியர் நாடகம் ஒன்று இருக்கிறது. முடிவு மிக சோகமாக அமைந்த நாடகம் அது. ஆனால், மிக அருமையான உரையாடல்கள் அந்த நாடகம் முழுவதும் இருக்கிறது. ஒரு இடத்திலே ஆண்டனி என்கிற கதை பாத்திரத்தைப் பார்த்து கேமலின் என்கிற பெண் சொல்வாள், "எப்போது பார்த்தாலும் அடி வாங்குவதற்கு என்றே ஒரு கன்னத்தையும், பழி சுமப்பதற்காகவே என்று ஒரு தலையையும் வைத்திருப்பவள் நீ "என்று கூறுவாள்.


இது போன்ற சில கூர்மையான வசனங்கள் அதில் வரும். அதுபோல, லியர் என்கிற மன்னனுக்கு மூன்று மகள்கள் இருந்தார்கள். அந்த மூன்று பெண்களுக்கும் தன் முதுமையின் காரணமாக நாடு முழுவதையும் பிரித்து கொடுத்து விடலாம் என்று மன்னன் கருதினான். அந்த நாடகத்தினுடைய முதல் காட்சியே அதுதான்.

மூன்று மகள்களையும் அழைத்தான். "எனக்கு வயதாகிறது. நான் இந்த நாட்டை மூன்று பங்காக ஆக்கி, உங்களுக்கு கொடுத்து விடலாம் என்று கருதுகிறேன். ஆனால், யார் என்னிடம் கூடுதல் அன்பு வைத்து உள்ளீர்களோ, அந்த அளவுக்கு நான் கொடுக்க போகும் நாட்டின் அளவும் கூடுதலாக இருக்கும். எனவே ஒவ்வொருவராக சொல்லுங்கள்" என்று சொன்ன பிறகு, சொல்ல வேண்டுமா என்ன ?. எவ்வளவு புகழ்கிறோமோ, அவ்வளவு நாட்டின் பகுதியை நாம் பெற்று கொள்ளலாம் என்று பெண்கள் மனதிற்குள் முடிவு செய்கிறார்கள்.


மன்னன், மூத்த மகளை அழைத்து முதலில் நீ சொல் என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண் சொல்கிறாள், "உலகத்திலேயே உன்னைத்தான் நான் கூடுதலாக நேசிக்கிறேன். வேறு யாரையும் அல்ல. இந்த உலகத்தில் எத்தனை மனிதர்களை எடுத்துகொண்டாலும், நான் கூடுதலாக நேசிக்கிற மனிதன் நீ மட்டும்தான்" என்று ஒரே போடாக போட்டு விடுகிறாள்.

இதை கேட்டு மன்னன் நெகிழ்ந்து விடுகிறான். உடனே,மன்னன் "நல்லது, நம்முடைய நாட்டின் வரைப்படத்தில் இந்த கோட்டிலிருந்து, அந்த கோடு வரை உள்ள வளமான பகுதியை நீ சொல்லி இருக்கிற புகழ்ச்சிக்கு ஏற்ப உனக்கு தருகிறேன்" என்று கூறுகிறார்.

அடுத்து, இரண்டாவது மகளை அழைத்து, "இப்போது நீ சொல் பார்க்கலாம்" என்கிறார். அவள் சொல்கிறாள், "எல்லாம் மூத்த சகோதரி சொன்ன செய்திதான். கூடுதலாக ஒன்று, அவள் எவ்வளவு தூரம் உங்கள் மீது நேசம் வைத்துள்ளளோ, அதைவிட கூடுதலாக நான் உங்களை நேசிக்கிறேன்" என்று கூறுகிறாள். முதல் மகளுக்கு கிடைத்ததைவிட, கொஞ்சம் அதிகமான வளங்களும், எல்லைகளும் தனக்கு கிடைக்கும் என்று எண்ணி கொள்கிறாள். அதுபோலவே, அவளுக்கு கிட்டுகிறது.

ஆக, இரண்டு பேரும் புகழ்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு, வளமான பெரும் பகுதிகளை பெற்று கொள்கின்றனர். அதில் அவர்களுடைய கணவன்மார்களுக்கும் நாடு கிடைத்த மகிழ்ச்சி.


இப்போது, இறுதியாக தன்னுடடைய கடைக் குட்டியான மூன்றாவது மகளை அழைத்து, "நீ கடைசி மகளாக இருந்தாலும் கூட, என் மீது நீ வைத்துள்ள வாஞ்சையையும், அன்பையையும் நான் அறிவேன். நீ சொல், உன் மூத்த சகோதரிகள் இரண்டு பேரைக் காட்டிலும் என் மீது நீ எப்படி அதிகமான அன்பு வைத்திருக்கிறாய்" என மன்னன் கேட்ட போது,

மூன்றாவது மகளான கார்டிலீயா பொறுமையாக சொல்கிறாள்

"ஒன்றுமில்லை"

"ஒன்றுமில்லையா ? " என கேட்க

"ஆமாம், ஒன்றுமில்லை என்றால் ஒன்றுமில்லைதான்" என்கிறாள்.

அப்போது மன்னன் சொல்வான் Nothing comes from Nothing என்று. அதாவது "ஒன்றுமில்லாத்திலிருந்து உலகத்தில் ஒன்றும் வெளிவராது. நீ எப்படி ஒன்றுமில்லை என்று சொல்கிறாய்" என்று கேட்கிறபோது, கார்டிலீயா சொல்வாள் "அப்படி இல்லையப்பா ஒரு அப்பாவின் மீது பெண்ணுக்கு எவ்வளவு அன்பு இருக்குமோ அவ்வளவு அன்பு நான் வைத்திருக்கிறேன்".

"அவ்வளவுதானா ? "

" அவ்வளவுதான். ஒரு அப்பாவின் மீது ஒரு குழந்தைக்கு எவ்வளவு பாசம் இருக்குமோ அந்தப் பாசம் எனக்கு இருக்கிறது". "உன் மூத்த சகோதரிகள் இரண்டு பெரும் எவ்வளவு பாராட்டிச் சொன்னார்கள். நீ என்னமோ என் மீது வைத்திருப்பது வெறும் அன்புதான் என்கிறாயே ?" என்று மன்னன் கேட்ட போது, மிக அழகாய் பதில் சொன்னால் கார்டிலீயா.


"அவர்கள் உலகத்தில் உங்களை மட்டும்தான் நேசிக்கிறேன் என்று சொல்கிறார்கள். அது உண்மையாக இருந்திருந்தால், அவர்கள் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. இங்கேயே இருந்திருக்கலாம். திருமணம் ஆன பிறகு கணவரையும் நேசிக்க வேண்டிய கடமை இருக்கிறதல்லவா ? பிறக்க போகிற குழந்தைகளையும் நேசிப்பது இயல்புதானே. அதோடு இல்லாமல், இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நேசிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறத்தல்லவா ? இப்படியாக, எல்லோரையும் நேசிக்கும் அவர்களுடைய இதயத்தில், அப்பாவிற்கு என்று என்ன இடம் இருக்குமோ, அதுதான் இருக்கும்" என கூறினாள்.

இந்த உண்மையான் கூற்றை அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை. அது அவருக்கு மன நிறைவு தரவில்லை. இது மோசமானது என கருதினான். உடனே மன்னன் கூறுகிறான், "உன் பதில் எனக்கு மன நிறைவை தரவில்லை, ஆதலால், உனக்கு இந்த நாட்டில் எந்த ஒரு பகுதியையும் தர முடியாது. உனக்கு சேரவேண்டிய பங்கை, உன் மூத்த சகோதரிகளே எடுத்து கொள்வார்கள்" என கூறிவிட்டான். பின்னொரு காலம், உண்மையான அன்பு எது என கண்டு, மன வேதனை அடைந்தான்.

இந்த இடத்திலே, மறுபடியும் முதல் பத்தியில் சொன்ன அந்த திரைபடத்தின் காதல் வசனங்களை நினைவுப்படுத்தி பார்ப்போம். எக்காலத்திலும் உண்மையை நேரடியாக உள்ளது உள்ளப்படி சொல்லும் போது, அது ஏற்று கொள்ளபடுவதில்லை. மாறாக, அதை மிகையாக சொல்லும் போதுதான் அது பாராட்டாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

சரி, இனி காதலர்களின் பிரச்சனைக்கு வருவோம். காதலி "என்னை ஏன் தேனே என்றும், மானே என்றும் அழைப்பதில்லை. நான் உனக்கு தேனில்லையா ?" என்று கேட்டபொழுது, காதலன் சொன்னான், "ஆம், நீ எனக்கு தேனில்லை. தேன் சுவையானதுதான். ஆனால், விரைவில் திகட்டிவிடும். ஆனால். நீ எனக்கு வாழ்க்கை முழுவதும் திகட்டாத இனிக்கும் தண்ணீரடி" என்று உரையாடல் முடிவுறும்.


தேன் என்பது சிறிது நேரத்தில் திகட்டி விடும், தண்ணீர்தான் காலம் முழுவதும் துணையிருக்கும் என்ற அந்த உரையாடலை, அந்த வசனத்தை எழுதியிருப்பவர் இயக்குனர் சீமான் அவர்கள்தான்.

ஆகவே, அன்பு என்பது மிகையல்ல. பாராட்டும் அல்ல. அது உண்மையானது மட்டுமே.




நன்றி :
நூல் : ஒன்றே சொல் ! நன்றே சொல் !
-- பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.

Tuesday, December 6, 2011

தகவல் களம் !

இப்போது தனியார் வானொலிகள் இந்தியாவில் அதிகமாக பெருகிவிட்டன. ஆனால், தனிநபருக்காக ஒரு வானொலி நிலையம் முதன் முதலில் 1935- ம் ஆண்டில் உருவானது. ஐதராபாத் மன்னர் நிஜாம்தான் தனக்கென்று ஒரு வானொலி நிலையத்தை உருவாக்கினார். அதன் பெயர் 'டெக்கான் ரேடியோ'.



கடுமையான தண்ணீர் பஞ்சம் நிகழும் காலத்திலும் வாழக் கூடிய உயிரினம் பல்லிதான். பிறப்பு முதல் இறப்புவரை தண்ணீர் அருந்தாத உயிரினம் பல்லி.



ஒ.கே என்ற சொல் முதலில் பிறந்தது அமெரிக்காவில்தான். 1828-ல் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ஆண்ட்ரூ ஜாக்சன்தான் தன்னுடைய பிரச்சாரத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தினார்.



கன்னிமாரா நூலகத்தை 1890 - ம் ஆண்டு கன்னிமாரா
(The Lord Connemara) பிரபுவால் தொடங்கப்பட்டது.



மார்லின் மன்ரோவின் இயற்பெயர் நார்மா ஜீன்பேக்கர் (Norma Jeane Baker)





தகவல் :

வித்யுத்,
ராஜசேகர் - செய்யாறு,
ஜெயலட்சுமி - சென்னை.

தகவல் துளி !


உலகின் தூய நீரில் 70 சதவிகிதம் அண்டார்டிகாவில்தான் உள்ளது.



இங்கிலாந்து நூலங்களில் இருந்து அதிகமாக திருடப்பட்ட புத்தகம் என்று கின்னஸ் புத்தகத்திற்கு ஒரு சாதனை உண்டு.



பட்டம்தான் உலகின் மிகவும் பழமையான பறக்கும் இயந்திரம்.



வாகன புகை சூழ்ந்த பெரு நகரங்களில் ஒரு மரத்தின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் மட்டுமே.



தகவல் : முத்தாரம் இதழ்

Monday, December 5, 2011

கண்ணசைவில் ஒரு புத்தகம் !

ஜான் டொமினிக் பாபி (Jean-Dominique Bauby) என்று ஒரு எழுத்தாளர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். அதனால் கைகளும், கால்களும் செயலிழந்து விட்டன. பேசவும் முடியாது. தனது நெருங்கிய உதவியாளரின் உதவியுடன் அவர் ஒரு புத்தகத்தை எழுதினார்.

எப்படி ?

கண்ணசைவால், உதவியாளருக்கு ஒவ்வொரு எழுத்து, வார்த்தை, வாக்கியத்தையும் புரிய வைத்தார். உதவியாளர் தவறாக புரிந்து கொண்டால், கண்களாலேயே மறுத்து, சரியான பொருளைப் புரிய வைத்தார். இப்படி அவர் எழுதிய புத்தகம் ' த டைவிங் பெல் அண்ட் த பட்டர்ஃப்ளை' (The Diving Bell and the Butterfly).



டொமினிக் இறப்பதற்கு முன், 1996 - ம் ஆண்டு இந்த புத்தகம் வெளியாகி, மிக அதிகம் விற்பனையான புத்தகங்களின் பட்டியலில் இடம் பெற்றது.



ஜான் டொமினிக் பாபி



தகவல் : வித்யுத்.

Sunday, December 4, 2011

டின் உணவுகள் உருவான விதம் !


டின் உணவுகளின் பிறப்பிடம் இத்தாலி நாட்டின் போர்க்களம் என்றால் நம்புவீர்களா ?

1796 - ல் மாவீரன் நெப்போலியன் பிரான்ஸின் எல்லைகளை விஸ்தரிக்க, 3 லட்சத்து 50 ஆயிரம் வீரர்களை இத்தாலிக்கு அனுப்பினார். வீரர்களுக்கு எதிரிகளுடன் மட்டுமல்ல... பசி உடனும் சண்டை போட வேண்டியிருந்தது. அதனால், பிரான்ஸ் திரும்பியதும், 'பயணத்தின் போது உணவை கெட்டுப் போகாமல் வைத்திருக்கும் வழிமுறை'யைக் கண்டுபிடிப்பவர்களுக்கு பெரிய பரிசு வழங்குவதாக அறிவித்தார் நெப்போலியன்.


இந்த வெற்றிக் கோப்பையைப் பறித்தவர் நிக்கோலஸ் அப்பெர்ட் என்ற மளிகைக்கடைக்காரர். நெப்போலியனின் அறிவிப்புக்கு முன்னரே இதை பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர் இவர்.

காற்று படாமல் இருக்கும் உணவுகள் அதிக காலம் கெட்டுப்போகாமல் இருக்கிறது என்று கண்டுபிடித்தார். காற்று எளிதில் புக முடியாத கண்ணாடிப் பாத்திரங்களை வடிவமைத்து பரிசோதனை செய்தார்.

மாதக் கணக்கில் உணவு கெட்டுப் போகாமல் இருந்தது. ஆனால், அப்பெர்டினின் கண்ணாடி பாத்திரங்கள் கனமானதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருந்தது. தவறி விழுந்தாலும் உடைந்து போகும்.

ப்ரையன் டான்கின் என்ற ஆங்கிலேயரிடம் இந்த பிரச்சனையை தீர்க்கும் வழி இருந்தது. கண்ணாடிப் பாத்திரங்களுக்கு பதில் ப்ரையன் டின்னைப் பயன்படுத்த ஆரம்பித்தார். 1812 - ல் காய்கறிகள், சமைத்த உணவு வகைகளை டின்களில் அடைத்து விற்க துவங்கினார். இப்படிதான் டின் உணவு பிறந்தது.




தகவல் : முத்தாரம் இதழ்.

Friday, December 2, 2011

பிள்ளைகளின் கல்வி பெரியாரின் தாகம்!


ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதில்தான் தந்தை பெரியார் தீராத தாகம் கொண்டு இருந்தார். தன் வாழ்நாள் முழுவதும் அவர் தன் குறிக்கோள்களில் ஒன்றாகவே அதனை வைத்திருந்தார்.

பிள்ளைகளினுடைய படிப்பின் மீது அவர் எவ்வளவு அக்கறை உடையவராக இருந்தார் என்பதை இரண்டு நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன. இரண்டுமே திருச்சி மாநகரத்தில் நடைபெற்றவை.

1972 ஆவது ஆண்டு, பேருந்து நிலையத்துக்கு எதிரே இருக்கிற அவருடைய சிலையின் கண்ணாடியை யாரோ உடைத்து விட்டார்கள். அல்லது உடைந்து போயிருக்கலாம். ஆனால் அடுத்த நாள் முழுவதும் அது திருச்சியில் பெரிய செய்தியாகிவிட்டது. இந்த செய்தி பரவிய உடன் முதன் முதலாக கல்லூரியை விட்டு மாணவர்கள் வெளியே வருகின்றனர்.

அந்த கல்லூரியை நிறுவியவர் தந்தை பெரியார்தான். அந்த நன்றி கடனின் பொருட்டு அம்மாணவர்கள் பெரிய ஊர்வலம் நடத்தினர். பெரியாரும் அன்று ஓர் அலுவல் காரணமாக திருச்சி வந்திருந்தார். தன்னுடைய மாளிகையில் அவர் தங்கியிருந்தார். பெரியார் மாளிகையை நோக்கி அந்த ஊர்வலம் நகர்கிறது. அப்போது அம்மாளிகையின் முன் மணியம்மையார் நின்று கொண்டு இருக்கிறார்.

மாணவர்கள் ஊர்வலமாக வந்த செய்தி பெரியாருக்கு செல்கிறது, உடனே அவர் பதட்டத்துடன் வெளியே வந்து 'என்னப்பா, என்னாச்சு' என்று அவர் கேட்டவுடன், அம்மாணவர்கள் 'தங்களின் சிலையை யாரோ சேதப்படுத்தி விட்டார்கள், அதனால் அதற்கு கண்டம் தெரிவித்து ஊர்வலமாக வந்து இருக்கிறோம் என்றனர். இதை கேட்ட தந்தை பெரியார் மிகுந்த கவலைக்கு உள்ளாகிறார்.

நான்தான் தவறு செய்துவிட்டேன் என்று நினைக்கிறன், இந்த திருச்சி மாநகரத்திலே இரண்டு, மூன்று கல்லூரிகள் உள்ளன. அவையாவும் ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்களுடையது என்பதாலும், அவர்களுடைய மதத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாலும், இந்து மதத்தைச் சேர்ந்த கல்லூரிகள் மேல் சாதி மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதாலும், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு தரமான கல்வி போய் சேர வேண்டும் என்று ரூபாய் 5 லட்சமும், 12 ஏக்கர் நிலத்தையும் அரசுக்கு கொடுத்து கல்லுரி ஒன்றை நிறுவ சொன்னேன்.

ஆனால், நீங்கள் எல்லாம் இப்படி படிக்க வேண்டிய நேரத்தில் படிப்பை உதறி தள்ளி விட்டு இங்கு வந்து நிற்கிறீர்களே என்று ஆதங்கப்பட்டார்.

சிலை உடைந்தால் என்ன ? என் கண் கண்ணாடி சரியாகத்தானே உள்ளது. இது போன்ற வேலைகளையெல்லாம் கட்சிக்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள். உங்கள் வேலை என்ன ? படிப்பது தானே, அதை விடுத்து தெருவில் இறங்கி கலவரம் பண்ணுவது, ஊர்வலம் வருவது உங்கள் வேலை அல்ல. நீங்கள் படிப்பது ஒன்றுதான் எனக்கு நீங்கள் செலுத்தும் நன்றி கடன் என்று கூறி அம்மாணவர்களை கல்லூரிக்கு திருப்பி அனுப்புகிறார்.

இதை அன்றைக்கு மாணவர்கள் ஊர்வலத்தில் பங்கு கொண்ட, இன்றைக்கு நாடளுமன்ற உறுப்பினராக இருக்ககூடிய திருச்சி சிவா அவர்கள் இதனை நினைவு கூர்ந்தார். இன்றைக்கு அந்த கல்லூரியின் முதல்வராக இருக்கக்கூடியவர் 72 - ல் அந்த கல்லூரியின் மாணவராக இருந்திருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய சிலை உடைந்தது பற்றி கவலைப்படுபவராக இல்லாமல், மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் தந்தார்.

இன்னொரு நிகழ்ச்சியும் அதே திருச்சி மாநகரத்தில் நடைப்பெற்றதுதான். திருச்சியில் சீதாலட்சுமி இராமசாமி என்ற பெயரில் ஒரு பெரிய கல்லூரி இருக்கிறது. அந்த கல்லூரியின் நிறுவனர் இராமசாமி ஐயருக்கு பெரிய பாராட்டு விழா நடைபெறுகிறது.


அந்த பாராட்டு விழாவில் யார் கலந்து கொள்கிறார்கள் என்றால் பச்சை நாத்திகர்களான தந்தை பெரியாரும், நாவலர் நெடுஞ்செழியனும். கடவுள் வாழ்த்து பாடலுடன் விழா தொடங்க, பெரியார் எழுந்து நிற்கிறார். இதை கண்ட அந்த கல்லூரியின் நிறுவனர் இராமசாமி ஐயர் ஒடி வந்து, தாங்கள் நிற்க வேண்டாம் என்ற சொன்னவுடன், 'இல்லை இல்லை, எல்லோரும் நிற்கும் போது, நான் மட்டும் அமர்ந்திருந்தால், சபை ஒழுங்கு கெட்டுவிடும். எனக்கு சிரமமில்லை' என்று கூறுகிறார்.

பின்பு நிகழ்ச்சியில் இராமசாமி ஐயரை பாராட்டி பேசுகிறார். இதை கேட்ட தோழர்கள் பலரும், நீங்கள் காலமெல்லாம் யாரை கடுமையாக எதிர்த்து பேசுகிறீர்களோ, இப்போது அவர்களையே ஆதரித்து பேசுகிறீர்களே என்று கேள்வி எழுப்பினர்கள்.

உடனே தந்தை பெரியார் ' என்ன பேசுகிறீர்கள், நம் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று, அதுவும் பெண் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று தன்னுடைய பணத்தில் ஒரு மனிதர் கல்லூரி கட்டியிருக்கிறார். அவரை பாராட்ட வேண்டாமா? அவர் நாத்திகராக இருந்தால் என்ன, ஆத்திகராக இருந்தால் என்ன, இல்லை வேறு எந்த சாதியாக இருந்தால் என்ன ? காலமெல்லாம் நாம் எதற்காக போராடுகிறோம், பெண் பிள்ளைகளுக்கு கல்வி வேண்டும் என்றுதானே, அதைதான் அவர் செய்திருக்கிறார். அவரை நாம் பாராட்டவில்லை என்றால் வேறு யார் பாராட்டுவார்கள்' என்று கேள்வி எழுப்பினார்.

தந்தை பெரியாரின் மனதில் பதிந்து இருந்ததெல்லாம் ஒன்றுதான், 1000 ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமுகம், ஓர் இனத்திற்கு கல்வி கிடைக்க வேண்டும், அதன் மூலம் தான் இந்த தமிழ் சமூகம் முன்னேற்றமடைய முடியும் என்ற ஆவல் மட்டும்தான்.
ஆனால், அவரை பற்றி பல தவறான தகவல் இங்கே உள்ளது. அதில் ஒன்று, அவர் குறிப்பிட சாதியை தாக்குவதாக கூறுகின்றார். அது தவறு, அவர் எந்த குறிப்பிட சாதியையும் தாக்கவில்லை, அதன் ஆதிக்கத்தைத்தான் தாக்குகிறார். ஒருவேளை, அந்த சாதி எல்லோருக்குமான கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்குமானால், முதலில் அதரவு தருவது தந்தை பெரியார்தான்.

சமத்துவம்தான் தந்தை பெரியாரின் கொள்கையே தவிர, துவேசமல்ல. ஒடுக்கப்படுகிற மக்களை அதிகமாக நேசித்தார். அவர்களை ஒடுக்குகிறவர்களை கடுமையாக எதிர்த்தார். ஆகவே, ஆதிக்கத்திற்கு எதிரான சமத்துவம் என்பதுதான் தந்தை பெரியார் தொடுத்த போரே அல்லாமல், பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய தாகம். மற்றப்படி அவரை பற்றி சொல்லப்படுகிற செய்திகள் தவறு என்பதற்கு இவ்விரண்டு நிகழ்ச்சிகளுமே ஆதாரம்.


தகவல் : ஒன்றே சொல், நன்றே சொல் புத்தகம்
- பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.

புகைப்பட உதவி : தமிழச்சி பெரியார்.