Thursday, January 12, 2012

படம் சொல்லும் சேதி


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சின் நதியில் நடைபெற்ற நீச்சல் போட்டிதான் இது. அதில் பங்குபெற்ற வீரர்கள் ஒருசேர நேர்த்தியாக இலக்கை நோக்கி நீச்சல் அடிக்கும் காட்சி.



அச்சுறுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இது இரும்பு கொரில்லா. பிரிட்டிஷ் கலைஞர் டேவிட் மேக், இரும்பு உள்ளிட்ட உலோக கலவையால் இதை உருவாக்கி பிரிட்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகங்களில் வைத்துள்ளார்.



சீனாவின் புத்தாண்டு எப்போது விளக்குத் திருவிழாவுடன் தொடங்கும். இந்த ஆண்டு ஜனவரி 23 - ல் தொடங்க உள்ள புத்தாண்டை ஒட்டி இப்போதே சீன நகரங்கள் களைக்கட்டத் துவங்கிவிட்டன.அன்ஹுய் மாகாணத்தில் நடைபெற்ற விளக்குத் திருவிழாவில் பாரம்பரிய அரண்மனையை தத்ரூபமாக விளக்கில் ஒளிரவைத்து அசத்தியிருக்கிறார்கள் சீனர்கள்.



தகவல் : முத்தாரம் இதழ்

Wednesday, January 11, 2012

தற்காலிகமாக ஒரு நிலா !


பூமியை 2006-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை தற்காலிகமாக ஒரு நிலா சுற்றி வந்திருப்பதை தற்போது கண்டுபிடித்து உள்ளனர் விஞ்ஞானிகள்.

2006-ம் ஆண்டில் ஒரு மீட்டர் நீளம் கொண்ட ஒரு விண்கல் (குறுங்கோள்) பூமியைச் சுற்றி வந்தது. தொடக்கத்தில் இது ஏதாவது ஒரு ராக்கெட்டின் சிதைந்த பாகமாக இருக்கும் என்றே விஞ்ஞானிகள் கருதினர். ஆனால், அதை தெளிவாக ஆராய்ந்திருக்கிறார்கள். அப்போதுதான் அது ஒரு விண்கல் என்பதே தெரிய வந்தது.

பூமியின் ஈர்ப்பு விசையால் தற்காலிகமாக இழுக்கப்பட்டு, பூமியின் சுற்றுப் பாதைக்குள் வந்த விண்கல் சுமார் 2 ஆண்டுகள் சுற்றிவிட்டுச் சென்றுள்ளது.



இது குறித்து ஆய்வு நடத்திய அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள கார்ன்வெல் பல்கலைக்கழகத்தின் விண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் "இது போல எத்தனையோ விண்கற்கள் பூமியைச் சுற்றி வருவதாகவும், பூமிக்கு ஒரே ஒரு துணைக் கோள் (நிலா) தான் என்று சொல்வது தவறு என்றும், இப்படி பூமியைச் சுற்றி வரும் தற்காலிகமான நிலாக்கள் விண்ணில் நிறைய இருப்பதாகவும்" தெரிவித்திருக்கிறார்கள்.



தகவல் : டி. கார்த்திக்.

Tuesday, January 10, 2012

தகவல் துளி !


கம்பி வடத் தொலைக்காட்சிச் சேவை (Cable Tv) அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இந்திய மாநிலம் மிசோரம்.



இந்தியாவின் முதல் மின்சார புகைவண்டியின் பெயர் 'டெக்கன் குயின்' (Deccan Queen).



தமிழ்த் தாய் வாழ்த்து மோகன ராகத்தில் பாடப்படுகிறது.





தகவல் : சி.பரத்.

Sunday, January 8, 2012

தகவல் களம் !

சுத்தம் சோறு போடும்


அமெரிக்காவில் பொதுவாக திங்கட் கிழமையை 'ப்ளூ மன்டே' (Blue Monday) என்றழைக்கிறார்கள். அன்று தம் வீட்டை சுத்தம் செய்யும் நாளாகத் தேர்ந்தெடுக்கிறாகள். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அமைந்து விடுவதால், அந்தக் களேபரங்களை சுத்தம் செய்ய அடுத்த நாளான திங்கட் கிழமைதான் அவர்களுக்கு சரிப்படுகிறது.


ஊரும் அதன் வரலாறும்


தமிழ்நாட்டில் சில ஊர்களின் பெயர்கள் காரணப் பெயர்களாகவே இருக்கும். ஒரு உதராணம் : திருவையாறு. திரு என்ற சிறப்பு அடைமொழி சேர்க்கப்பட்டதால் திருஐஆறு. அதாவது திருவையாறு. அந்த ஆறுகள் : காவேரி, குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு.


தொல்லைக்காட்சி

தொலைக்காட்சி ஒளிப்பரப்பின் போது கூர்ந்து கவனித்தால் கோடு போன்று பிரிவது தெரியும். உண்மையிலேயே ஒரு படத்தை பல கோடுகளாகப் பிரித்துத்தான் ஒளிப்பரப்புகிறார்கள். இது நாட்டுக்கு நாடு வேறுபடும். நம் நாட்டில் ஒரு படத்தை 625 கோடுகளாகவும், பிரான்சில் 819 கோடுகளாகவும், இங்கிலாந்தில் 405 கோடுகளாகவும் பிரித்து ஒளிப்பரப்புகிறார்கள்.


இரட்டை வேடம்



ஒரேயொரு இந்திய நகரம் தனி யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது சண்டிகருக்கு மட்டுமே கிடைத்திருக்கும் பெருமையாகும். இரண்டு மாநிலங்களுக்கு தலைநகர அந்தஸ்தும், தனி யூனியன் பிரதேச அந்தஸ்தும் கிடைக்க பெற்ற ஒரே இந்திய நகரமும் சண்டிகர் மட்டுமே.



தகவல் : வித்யுத், டி.கார்த்திக்.

Friday, January 6, 2012

அண்ணலும் - தந்தையும் !


நம்முடைய தலைமுறையிலே வாழ்ந்த, 20 -ஆம் நூற்றாண்டிலே நாம் அறிந்த மாமேதைகளில் ஒருவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். 1956-ஆம் ஆண்டு டிசம்பர் 6 - ந் தேதி அவர் மறைந்தார். அவர் மறைந்து அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது.

ஆனால், அவருடைய புகழும், அறிவு திறனும்,1990-க்குப் பிறகுதான் மிக அழுத்தமாக வெளிப்பட்டது என்று சொல்ல வேண்டும்.

1989-ல் அவருடைய நூற்றாண்டு வந்தது. அப்போதுதான் அவரைப் பற்றிய நூல்கள், விவாதங்கள் எல்லாம் அரங்கிற்கு வந்தன. அவர் காலம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காவே போராடி வாழ்ந்தார். தன்னுடைய தூக்கத்தைத் தொலைத்து தன் மக்களுக்காகப் படித்து வந்த ஒரு மாமேதை அவர்.

அவருடைய படிப்பு என்பது மிகவும் வியப்புக்குரியது. படிப்பிலே அப்படி என்ன வியப்பு என்று கேட்டால், படிக்கவே கூடாது அல்லது படிப்பை பற்றி நினைக்கவே கூடாது என்று ஒடுக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்த ஒரு வைரம் அவர். உலகமே வியக்கும் அளவிற்கு படித்து முடித்திருக்கிறார் என்றால் அந்த படிப்புப் வியப்புக்குரியதுதானே.


வெளிநாட்டிருக்கு போய் திரும்புகிற போது, கப்பலில் பெட்டி பெட்டியாக அவருக்கு பின்னால் அவர் வாங்கி வந்த பொருட்கள் இறங்கின. எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். இத்தனை பெட்டிகளா ? என்னென்ன பொருட்களையெல்லாம் வாங்கி வந்திருப்பார் என்று பார்த்தால், ஒரு பெட்டியில் அவருடைய துணிகள் இருந்தன. அந்த ஒரு பெட்டியை தவிர மற்ற அத்தனை பெட்டிகளும் புத்தகங்களாகவே இருந்தன என்பது நமக்கு இப்போதும் ஒரு வியப்பை ஏற்படுத்துகிறது.

லண்டனில் இருக்கிற நூலகத்தில் மிகுதியாகப் படித்தவர்கள், மிகுதியான நேரத்தைச் செலவிட்டவர்கள் என்று இரண்டு பேரைத்தான் சொல்கிறார்கள். ஒருவர் கார்ல் மார்க்ஸ், இன்னொருவர் அம்பேத்கர். உலகமே வியக்கிற அளவிற்கு ஏராளமாகப் படித்த பெருமகன் அவர்.

சாதி ஒழிப்பு (Anihilation of Caste) என்று அவர் எழுதியிருக்கிற அந்த புத்தகம் இன்றைக்கும் கூட பல்வேறு சிந்தனைகளை, அழுத்தமான எண்ணங்களை நம்மிடத்திலே உருவாக்குகிறது. சாதியைப் பற்றிய மிக விரிவான ஆய்வை அவர்தான் மேற்கொண்டார். அதைத் தந்தை பெரியார் அவர்கள்தான் சாதி ஒழிப்பு என்கிற பெயரில் முதன் முதலாகப் தமிழில் மொழிப் பெயர்த்துக் குடியரசு பதிப்பகத்தின் மூலமாகத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அம்பேத்கரும், தந்தை பெரியாரும், காலம் முழுவதும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மதிப்புடையவர்களகாவும், ஒருவரையொருவர் பின்பற்றக் கூடியவர்களாகவும், பாராட்டக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். தந்தை பெரியார் யாரையும் தன்னுடைய தலைவர் என்று சொல்லவில்லை. நான்தான் தலைவர் என்று சொல்லுவார்.

ஆனால், அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்களே, 1967 - ஆவது ஆண்டு மயிலாடுதுறையிலே நடைப்பெற்ற ஒரு கூட்டத்திலே பேசுகிறபோது உங்களுக்கு மட்டுமல்ல... எனக்கும் அம்பேத்கர்தான் தலைவர் என்று சொன்னார். அந்த அளவுக்கு அம்பேத்கர் மீது ஆழ்ந்த மதிப்பு கொண்டவராகத் தந்தை பெரியார் திகழ்ந்தார்.


அதைப் போலவே மிசோராம் மாநிலத்திலே ஆளுநராக இருந்த பத்மநாபன் அவர்கள், தன்னுடைய நூலிலே ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறார் : 'அம்பேத்கரை 1944 -ஆவது ஆண்டு, சென்னைக்கு வந்திருந்தபோது, அன்று கல்லூரி மாணவராக இருந்த பத்மநாபன் உள்பட ஏராளமான இளைஞர்கள் சந்திக்கிறார்கள். நாங்கள் உங்களைப் பின்பற்றி இங்கே ஓர் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நீங்கள்தான் வழிகாட்டவேண்டும்' என்று கேட்ட போது அம்பேத்கர் சொன்னாராம் 'மற்ற மாநிலங்களில் எல்லாம் இளைஞர்கள் வருகிறபோது, அதை நான் ஏற்றுக் கொண்டு அவர்களை இயக்க நெறிகளிலே வழிப்படுத்துகிறேன். ஆனால், தமிழ்நாட்டிலே அதற்குத் தேவையில்லை.

ஏற்கனவே இங்கே இருக்கிற ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள், நான் என்ன காரியங்களையெல்லாம் செய்து கொண்டு இருக்கிறேனோ, எதை சொல்கிறேனோ, அதைதான் அவரும் செய்து கொண்டு இருக்கிறார். எனவே நீங்கள் என்னைத் தேடி வர வேண்டியது இல்லை. ராமசாமி நாயக்கரைப் பின்பற்றினாலே போதும் என்று சொன்னார் என்று பத்மநாபன் தன்னுடயை நூலிலே குறிப்பிடுகிறார்.

எனவே இரண்டு பெரும் ஒருவரையொருவர் பின்பற்றுவதற்கு காரணம் வேறு ஒன்றுமில்லை. இரண்டுபேருமே சமூக நீதிப் போராளிகளாக இருந்தார்கள் என்பதுதான். ஒரு சமூகம் ஏற்றத்தாழ்வு உள்ளச் சமூகமாக இருக்கிறது. அது தமிழ்ச் சமூகமாக இருந்தாலும் சரி, இந்தியச் சமூகமாக இருந்தாலும் சரி, இன்றைக்கு இந்த சமூகம் ஒரு சாதியச் சமூகமாக இருக்கிறது. சாதியம் என்றால் ஏற்றத்தாழ்வுகளைத் தன்னோடு வைத்திருகிறது என்று பொருள். அதுதான் சாதி.


ஏற்றத்தாழ்வுகளை நீக்கிச் சமப்படுத்துவது என்பதுதான், இந்த சமூகத்தைச் சமப்படுத்துகிற முயற்சிதான் சமூக நீதி. அந்த சமூக நீதிக்காகத்தான் தங்கள் வாழ்நாள் முழுவதையும் பெரியாரும், அம்பேத்கரும் கழித்தார்கள் என்று சொல்லவேண்டும்.

ஒருமுறை அம்பேத்கர் வீட்டிலே முகச்சவரம் செய்து கொண்டிருந்தபோது, அருகில் நின்று கொண்டிருந்த ஒரு நண்பர், அண்ணலைப் பார்த்து கேட்கிறார். 'மிக மென்மையான் மனிதர் நீங்கள், மிகுந்த அறிவாளி நீங்கள். ஆனால், சில இடங்களில், சில ஆதிக்கக் கோட்பாடுகளை, ஆதிக்கப் பிரிவினரை எதிர்த்துப் பேசுகிறபோது, மிகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறீர்களே ? என்ன காரணம்' என்று கேட்ட போது, அம்பேத்கர் சொன்னார் :

'சில வேளைகளில் நாம் எந்த ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டுமோ, அதைத்தான் பயன்படுத்த வேண்டும். எனது முகத்தில் இருக்கிற முடியை மழிப்பதற்க்கு இந்தக் கத்தி போதுமானதாக இருக்கிறது என்ற காரணத்தினாலே, நாளைக்கு என் தோட்டத்திலே ஒரு நச்சு மரம் வளருமானால், அதை இந்தக் கத்தியை வைத்துக் கொண்டே சாய்த்து விடலாம் என்று கருத முடியுமா ? அதைக் கோடாரியைக் கொண்டுதான் வெட்ட முடியும். எனவே இதற்கு இது போதும். அதற்கு அது வேண்டும்.

சில நேரங்களில் அழுத்தமாக வேரூன்றியிருக்கிற ஆதிக்க குணங்களை அகற்ற வேண்டும் என்று கருதுகிற போது, நான் மிகக் கடுமையான சொற்களைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது' என்று சொன்னார் அம்பேத்கர். ஆகையால், அவர் சில இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்களிடத்திலே மென்மையாகவும், ஆதிக்க சக்தியிடத்திலே மிக வன்மையானவராக இருந்தார்.


அவர் ஒருமுறை இரவெல்லாம் விழித்து எழுதிக் கொண்டிருக்கிறபோது, செய்தியாளர்கள் அவரைப் பார்த்துக் கேட்கிறார்கள். காந்தியடிகளை நாங்கள் பார்க்க சென்றிருந்தோம். அவரும் கடுமையாக உழைக்ககூடிய மனிதர். ஆனால், அவர் கூட இந்த நேரத்திலே உறங்கி விட்டார். நீங்கள் இன்னமும் விழித்து எழுதிக் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டபோது அம்பேத்கர் சொன்னார் :

'அது ஒன்றும் பிழை இல்லை,அவருடைய மக்கள் எல்லாம் விழித்துக் கொண்டிருக்கிறார்கள், எனவே அவர் உறங்கலாம். என்னுடைய மக்கள் எல்லாம் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே நான் விழித்திருக்க வேண்டியிருக்கிறது' என்று சொன்னார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள், இந்தியாவின் மிகப் பெரிய பொறுப்புகளையெல்லாம் வகித்தவர். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவினுடைய தலைவர். ஆனால், அம்பேத்கரின் பெருமை அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் இல்லை. இந்த சாதிய சமூக அமைப்பை எதிர்த்துப் போராடிச் சமூகத்தை சமதளத்திலே கொண்டுவர முயற்சித்த அந்தச் சமூக நீதிப் போராட்டத்திலேதானிருக்கிறது.



நூல்:

ஒன்றே சொல், நன்றே சொல்.
ஆசிரியர் சுப.வீரபாண்டியன்.

Tuesday, January 3, 2012

படம் சொல்லும் சேதி !


கனடாவைச் சேர்ந்த சர்க்கஸ் சாகச குழு 'சர்க்யூ டூ சொலின்'. சர்க்கஸையே நாடகம் போல நடத்துவது இவர்களுக்கு கை வந்த கலை. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அவர்கள் நடத்திய காட்சி இது.



பெலாரஸ் நாட்டில் மின்ஸ்க் நகரில் 'உடலில் வண்ணம் பூசும்' போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவர், கடிகாரத்தில் உள்ள முட்கள் போல வண்ணம் பூசி பார்வையாளர்களைக் கவர்ந்தார்.



கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சின் தலைவர் மறைந்த ஜேக் லேடனுக்கு மரியாதை செலுத்துவதற்காக ஆரஞ்சு ஒளி வெள்ளத்தை நயாகரா நீர்விழ்ச்சியில் பாய்ச்சி ஒளிர வைத்திருக்கிறார்கள் இரு முதியவர்கள்.


இதற்காக நீர்விழ்ச்சி அருகே பல்வேறு முனைகளில் இருந்து 4 ஆயிரம் வாட்ஸ் பல்புகளை குவித்து இந்த ஒளி வெள்ளத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த பல்புகள் தரும் ஒளி வெளிச்சம் 820 கோடி மெழுகுவர்த்திக்களுக்குச் சமம்.



தென் கொரியாவில் நவம்பர் 4 முதல் 20 வரை விளக்குத் திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவில் வித்தியாசமாக விளக்குகளை பொருத்தி மக்கள் பரவசம் அடைவார்கள். தலைநகர் சியோலில் மேற்கூரையில் விளக்குகளை தொங்க விட்டிருக்கும் காட்சி இது.



தகவல் : முத்தாரம் இதழ்.

Sunday, January 1, 2012

தகவல் களம் !

ரத்தத்தின் ரத்தமே

மனித உடலில் உள்ள ஹீமோகுளோபின் (Hemoglobin) என்பது சிவப்பு நிறமிப் பொருளாகும். இவற்றின் வாழ்நாள் வெறும் 4 மாதங்கள் மட்டுமே. பின்னர் இவை பெரும்பாலும் மண்ணீரலில் சிதைவுறுகின்றன. சிதைவுற்ற அழிந்து போகும் உயிரணுக்களை ஈடுகட்ட புதிய சிவப்பணுக்கள் எப்போதும் உருவாகிக் கொண்டிருக்கும்.

நிமிர்ந்த கோபுரம்


உலக அதிசயங்களில் ஒன்றான பைசா நகரத்து (Pisa tower) சாய்ந்த கோபுரம் 1990-ல் தான் சாய ஆரம்பித்தது. இதன் சாய்வை தடுத்து நிறுத்த 50 செ.மீ. வரை சாய்ந்த கோபுரத்தின் வடப்புறத்தில் நிலத்தைத் தோண்டி 70 டன் மண் எடுக்கப்பட்டது. மண்ணைத் தோண்டி எடுத்த பிறகு 48 செ.மீ. அளவுக்கு கோபுரம் நிமிர்த்தப்பட்டது. 800 ஆண்டு கால சரித்திரத்தில் அது நிலையாக நிற்க ஆரம்பித்திருப்பது இப்போதுதான்.


தங்கமே தங்கம்

916 கே.டி.எம்.(K.D.M) என்பது ஒரு கிராம் ஆபரண தங்கத்தில் 91.6 சதவிகிதம் சுத்தமான தங்கத்தை குறிப்பதாகும். இதைதான் 24 கேரட் தங்கம் என்று அழைக்கிறார்கள். மீதி 8.4 சதவிகிதம் செம்பும், வெள்ளியும் கலந்திருக்கும்.


கட்டற்ற கலைக்களஞ்சியம்


உலகிலேயே பெரிய கணினி கலைக்களஞ்சியம் விக்கிபீடியா (Wikipedia). இதில் 20 லட்சம் கட்டுரைகள் உள்ளன. 200 மொழிகளில் விபரங்களைப் பெற முடியும். ஒவ்வொரு நாளும் புதிதாக 5000 கட்டுரைகள் சேர்க்கப்படுகின்றன. 'விக்கி' என்ற சொல் ஹவாய் மொழி சொல். அதன் பொருள் விரைவு.



தகவல் : டி.கார்த்திக்.