Thursday, March 8, 2012

தகவல் களம் !


தெற்கு கலிபோர்னியாவில் உள்ளது மான்டிசெல்லோ (Monticello Dam) அணைக்கட்டு. நீர் வரத்து அதிகரிப்பால் இந்த அணை நிரம்பி வழியும்போது, அது அக்கம்பக்கத்து ஊர்களை நீர்க்காடக்கி விடாதபடி ஓர் ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். அதாவது, நீர்த்தேக்கத்தின் நடுவே தலைகீழ் கவிழ்த்த கூம்பு வடிவ அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.


நீர்மட்டம் கொள்ளளவை அதிகரிக்கும் போது, உபரி நீரை இந்த வாய் திறந்த கூம்பு உள்வாங்கிக் கொள்கிறது. பிறகு தேவையைப் பொறுத்து முதலில் கூம்புக் கொள்ளளவு நீர் வெளியேற்றப்படுகிறது.1370 கன மீட்டர் நீரை இந்தக் கூம்பு தேக்கி வைத்துக் கொள்ளக்கூடியது! கூம்பு நீரின் கொள்ளளவே இவ்வளவு என்றால் அணையின் கொள்ளளவு எவ்வளவு இருக்கும் ?!




நியூயார்க் நகரின் பழைய பெயர் நியூ ஆம்ஸ்டர்டாம்.1664-ல் யார்க் மன்னன் இந்நகரை கைப்பற்றினார். இதன் பிறகே நியூ என்ற பெயருடன் யார்க் சேர்ந்து நியூயார்க் என அழைக்கப்பட்டது.



பாட்டில் மரங்கள் (Bottle Tree, Roma, Australia) ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் புளோரிடா ஆகிய மாகாணங்களில் அதிகம் வளர்க்கப்படுகின்றன. இம்மரங்களின் வண்ணப்பூக்கள் பூத்துக் குலுங்கும், கலை அழகிற்காக இவற்றை பெரிதும் வளர்க்கிறார்கள்.




தகவல் : முக்கிமலை நஞ்சன் மற்றும் வித்யுத்.

Wednesday, March 7, 2012

நம்பினால் நம்புங்கள் !


தலைவலியில் மட்டுமே 200-க்கும் அதிக வகைகள் இருக்கின்றன.



பிறந்த பச்சிளம் குழந்தைகளால் நிறங்களைப் பிரித்து அறிய முடியாது.



பட்டினியை விட, முறையான தூக்கமின்மையே மரணத்தை விரைந்து கொண்டுவரும்.




வடதுருவத்தின் குளிர் காலத்தில் யாருக்கும் ஜலதோஷம் ஏற்படாது. நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் வாழ முடியாத அளவு மிகக்குறைவான வெப்பம் நிலவுவதே காரணம்.





தகவல் : முத்தாரம் இதழ்.

Tuesday, March 6, 2012

படம் சொல்லும் சேதி


இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் சரிஸ்கா புலிகள் சரணாலயப் பகுதியில் இருந்த உம்ரி என்ற கிராமத்தினருக்கு மாற்று இடங்கள் கொடுத்து, அந்த கிராமத்தையே வனப்பகுதியை விட்டு வெளியேற்றி இருக்கிறார்கள். காடுகளை அழித்து மனிதக் குடியேற்றங்கள் நடைபெறும் காலத்தில், புலிகளுக்காக தங்கள் கிராமத்தைக் காட்டுக்குக் கொடுத்த தியாகிகள் இவர்கள்.



தட்டான்பூச்சி போல தோற்றமளிக்கும் இது உண்மையில் 'ஆளில்லா உளவு விமானம்'. அமெரிக்கத் தயாரிப்பு. மூன்று அடி நீளமுள்ள இதில் கேமரா, ரெக்கார்ட்டர் என சகல உளவுக் கருவிகளும் இருக்கும். 'ட்ரோன்' எனப்படும் இந்த ரக ஆளில்லா விமானங்களில் சற்றே பெரிய சைஸை அனுப்பி தீவிரவாதிகளைக் கொல்லவும் செய்கிறது அமெரிக்கா. 'பயணிகள் விமானங்கள் மீது இவை மோதினால் ஆபத்து. செயலற்று இவை நொறுங்கி விழும் இடத்தில் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தும்' என பலரும் கவலை தெரிவிக்கிறார்கள்!



ரஷ்யாவின் தாஜெஸ்தான் மாகாணத் தலைநகர் மகாச்கலா. காஸ்பியன் கடற்கரையில் இருக்கும் இந்த நகரை ஒட்டி டால்மேஷியன் பெலிக்கன் பறவைக்களுக்கான இயற்கை சரணாலயம் இருக்கிறது. அழிந்துவரும் அரிய இனம் இது. எப்போதும் இல்லாத குளிர் இந்தப் பிரதேசத்தைத் தாக்கி, சரணாலய ஏரி முழுக்க உறைந்துவிட்டது. சாப்பிட, மீன் கிடைக்காததால் அருகிலிருக்கும் துறைமுகத்துக்குக் கிளம்பி வந்துவிட்டன. மீனவர்கள் இந்த விருந்தாளிக்கு மீன் கொடுத்து உபசரிக்கிறார்கள்.






தகவல் : முத்தாரம் இதழ்.

Monday, March 5, 2012

பனி ஏரியில் உயிர் சோதனை !


பானையில் பிடித்து வைத்த தண்ணீர் ரெண்டு நாள் பழசானாலே குடிக்க மாட்டோம். 2 கோடி வருடங்களுக்கு முந்தைய தண்ணீர் என்றால் ? 'அதை வைத்து ஏகப்பட்ட பரிசோதனைகளைச் செய்யலாம்' என்று அதிசயிக்கிறார்கள் உலக விஞ்ஞானிகள்.

பனிப் பாறைகளுக்கு அடியில் சலனமில்லாமல் இருந்த ஏரி ஒன்றின் தண்ணீரை எடுத்து ஆராய்ச்சி செய்கிறது ரஷ்யா. "நிலாவில் மனிதன் காலடி எடுத்து வைத்ததற்கு இணையான சாதனை இது" என ஆரவாரம் செய்கிறது உலகமே! மனித இனமாகிய நாம் தோன்றுவதற்கு முன்னால் இந்த பூமி எப்படி இருந்தது என்பதையும், சூரியக் குடும்பத்தில் இருக்கும் மற்ற கிரகங்களில் என்ன மாதிரியான உயிரினங்கள் இருக்கக்கூடும் என்பதையும் பூமியில் வைத்தே இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்துவிடலாம் என்பதுதான் சிறப்பு !

அந்த ஏரியின் பெயர் வோஸ்டாக் (Vostok). அன்டார்ட்டிக் பனிக் கண்டத்தில் இருக்கிறது. அன்டார்ட்டிக் பகுதியில் பனிப்படலங்களுக்கு அடியில் சுமார் 400 நன்னீர் ஏரிகள் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். அவற்றில் மிகப் பெரியது வோஸ்டாக் ஏரி. பூமியின் தென் துருவத்துக்கு சற்றே கிழக்காக இந்த ஏரி இருக்கிறது. இந்த ஏரியின் நீளம் 250 கிலோமீட்டர்; அகலம் 50 கிலோமீட்டர். ஏரியின் ஆழம் 670 மீட்டர் என்றால் இது எவ்வளவு பெரியது என்று கற்பனை செய்து பாருங்கள்.



சரி... பனிக்கண்டத்தில் இது மட்டும் எப்படி உறைந்து பனிக்கட்டி ஆகாமல் தண்ணீராகவே இருக்கிறது ? 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இது போன்ற ஏரிகளை கடினமான பனிப்பாறைகள் மூடிக் கொண்டன. அதன் மேல் பனிப்படலங்கள் படிந்து அன்டார்க்ட்டிக் கண்டம் பனியால் மூடப்பட்டது. ஆனால் பூமிக்கடியில் நிகழும் சலனங்களால் வெளியேறும் வெப்பம், இந்த ஏரிகளை உறைந்து விடாமல் காக்கிறது. ஏரியின் மீது சுமார் 3 கிலோ மீட்டர் தடிமனில் ஒரு கடினப் பனிப்பாறை போர்வை போல போர்த்தியிருப்பதால், அதைத் தாண்டி பனிபடலங்களும் தோன்றுவதில்லை.


இந்த ஏரியின் தண்ணீரை எடுத்து சோதித்தால், 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பூமி எப்படி இருந்தது என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். பாக்டீரியா போன்ற உயிரினங்கள் அதில் இருக்கக்கூடும். செவ்வாய் போன்ற கிரகங்களின்
துருவப் பனிப்பகுதிகளில் இருக்கும் உயிரினங்களின் வாழ்க்கையும் இதுவும் ஒத்துப் போகும். நிறைய செலவு செய்து செவ்வாய் கிரகத்தை ஆராய்வதை விட, எளிமையாக இதில் ஆராய்ச்சியை முடித்துவிடலாம் என நினைத்தது ரஷ்யா.

இதற்காக அன்டார்க்ட்டிக் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் மற்ற உலக நாடுகளின் அனுமதியைக் கேட்டது. இந்த ஆராய்ச்சியால், வேதிப் பொருட்கள் அந்த ஏரியில் கலக்கும் அபாயம் இருக்கிறதா என்ற விவாதம் பல ஆண்டுகள் நடந்தது.அதன்பின் ரஷ்யாவிற்கு அனுமதி கிடைத்தது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சியை ரஷ்யா ஆரம்பித்தது. சும்மாவா.... அன்டார்க்ட்டிக் தரைப் பரப்பிலிருந்து 3623 மீட்டர் - அதாவது மூன்றரை கிலோ மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் அல்லவா வோஸ்டாக் ஏரி இருக்கிறது. நம் வீடுகளில் ஆழ்துளைக் கிணறு தோண்டுவார்களே...அதே தொழில்நுட்பத்தில் சற்று பெரிய, ஆழமான கிணறு தோண்டும் முயற்சி ! ஆனால், மைனஸ் 89 டிகிரி செல்சியஸ் என உறைபனிக்கும் கிழே நடுங்கும் குளிரில் இது அசாத்திய வேலை!

அன்டார்க்டிக்கில் கோடை காலமான டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான ஐந்து மாதங்களில் சில நாட்களில் மட்டும்தான் வேலை செய்ய முடியும். எண்ணெய், ஆயில், கருவிகளை பனி உறையாமல் தடுக்க தெளிக்கப்படும் வேதிப் பொருட்கள் என எதுவும் ஆழ்துளை வழியாக ஏரிக்குள் போய்விடாமல் பத்திரமாகச் செய்துவிடவேண்டும். இயல்பாக மூச்சு விடக்கூட போதுமான ஆக்சிசன் கிடைக்காது. ஏதாவது என்றால் ஆபத்திற்கு உதவுவதற்கு ஒருத்தரும் கிடையாது.

இப்படி நெருக்கடியான சூழலில் அங்குலம் அங்குலமாகத் துளை போட்டு 20 ஆண்டு முயற்சி கடந்த பிப்ரவரி 5 - ம் தேதி வெற்றிக் கனியைப் பறித்து தந்தது. அன்றுதான் இந்த ஆழ்துளை, ஏரியின் நீர் மட்டத்தைத் தொட்டது. தொட்ட வேகத்தில் ஆழத்திலிருந்து நீர் பீய்ச்சியடித்து வெளியில் வந்தது. சுமார் 40 லிட்டர் தண்ணீர் இப்படி துளை வழியே வெளியே வந்து, பனிக் காற்று பட்டதும் உறைந்து விட்டது. இந்த தண்ணீர் மாதிரியை வைத்தே இனி சோதனைகள் தொடரும்.


வெற்றிக் களிப்பில் ரஷ்யக் குழு !


அமெரிக்காவும், பிரிட்டனும் இப்படி வேறு இரண்டு சின்னச் சின்ன ஏரிகளில் துளைப் போட்டு தண்ணீர் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. என்றாலும் முதல் வெற்றிச் சாதனை ரஷ்யாவுக்கே!





தகவல் : நிதர்ஸனா.

Sunday, March 4, 2012

எண்களில் உள்ளது தகவல்....


32312 குறுந் தகவல்கள் ஒரு வினாடியில் பரிமாறப்பட்டன. ட்விட்டர் தளத்துக்கு மாற்றாக சீனாவில் உள்ளது 'சைனா வெய்போ' என்ற சமூக இணையதளம். சீனப் புத்தாண்டு தினத்தன்று இவ்வளவு தகவல்கள் ஒரு நொடியில் அதில் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இதுவரை ட்விட்டரில் ஒரு நொடிக்கு 7 ஆயிரம் தகவல்கள் பரிமாறப்பட்டதே உலக சாதனையாக இருந்தது.




9 கோடியாக ஜப்பான் மக்கள் தொகை வரும் 2060 - ம் ஆண்டில் குறைந்து விடும் என்று அஞ்சப்படுகிறது. இது இப்போதைய ஜப்பான் மக்கள் தொகையான 12 கோடியே 80 லட்சத்தைவிட சுமார் 30 சதவீதம் குறைவு. ஜப்பானில் குழந்தைப் பிறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. கூடவே முதியோர் எண்ணிக்கையும் அதிகம். இப்போதைய மக்கள் தொகையில் ஐந்தில் இரண்டு சதவீதம் 65 மேற்பட்டவர்கள்.




1092 டாலர் ஒரு அமெரிக்கத் தொழிலாளி சராசரியாக ஆண்டுக்கு காபி குடிப்பதற்காக செலவழிக்கும் தொகை. (இந்திய மதிப்பில் தோராயமாக 54 ஆயிரம் ரூபாய்)



11500 கோடி ரூபாய். சுவிட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய வங்கியான யுபிஎஸ் ஒரு வர்த்தகர் நிகழ்த்திய சட்டவிரோத பரிவர்த்தனைகளினால் அந்த வங்கிக்கு ஏற்பட்ட இழப்பின் அளவு இது. கறுப்புப் பணப் பதுக்கலுக்குப் புகழ் பெற்ற சுவிஸ் வங்கி ஒன்றில் நிகழ்ந்த மிகப் பெரிய மோசடியாக இது கருதப்படுகிறது.



104295 பேர் வியட்நாமில் கண்ணிவெடிகளுக்கும், போரின் போது வெடிக்காமல் இருந்த குண்டுகளுக்கும் பலியாகி இருக்கின்றனர். வியட்நாம் போர் முடிவுக்கு வந்து நாற்பது ஆண்டுகள் முடிந்த பிறகும் அதன் பாதிப்புகள் எப்படியெல்லாம் தொடர்கின்றன என்பதற்கு இந்த தகவலே சோக உதாரணம்.






தகவல் : லோகேஷ்.

Friday, March 2, 2012

ஒளரங்கசீப்


மொகலாயப் பேரரசர்களில் ஒளரங்கசீப்பைப் பற்றி மிகக் கடுமையான சில விமர்சனங்கள் உண்டு. திறனாய்வாளர்கள் அக்பரைப் பாராட்டுவார்கள். ஷாஜகானையும், ஜஹாங்கீரையும் கூடக் கூடுதலாகக் குறைச் சொல்ல மாட்டார்கள். ஆனால், ஒளரங்கசீப், மிக மோசமான மத வெறியன், இசைக்கும், கலைக்கும் எதிரி என்பன போன்ற விமர்சனங்கள் எப்போதும் உண்டு.

ஆனால், ஒளரங்கசீப்பின் அரச முறையை, அவருடைய எளிமையை, அவருடைய வாழ்க்கை வகையை நாம் கண்டு அறிந்தால், இந்த விமர்சனங்கள் ஒரு பக்கச் சார்ப்பு உடையவையோ என நமக்குத் தோன்றும். ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் ஆண்ட மன்னராக ஒளரங்கசீப் இருந்தார். அவருடைய காலத்திலேதான் மராட்டிய மன்னன் சிவாஜிக்கும், அவருக்கும் பெரும் பகையும், போரும் மூண்டது என்கிற காரணத்தினாலேயும், சிவாஜிக்கு ஆதரவாளர்கள் எல்லோரும் ஒளரங்கசீப்பை மிகக் கடுமையாக விமர்சனம் செய்வது உண்டு.


உண்மை என்ன என்பதை வெர்னியர் குறிப்புகள் (François Bernier) என்கிற ஒரு வெளிநாட்டுப் பயணியின் பயணக் குறிப்புகளைப் பார்க்கிற போது, நாம் அறிந்து கொள்ளமுடிகிறது. ஷாஜகான் மிக ஆடம்பரமாக வாழ்ந்தவர். அவருக்கு நேர்மாறாக ஒளரங்கசீப் மிக எளிமையாக இருந்தவர். ஷாஜகானுக்கும், ஒளரங்கசீப்புக்கும் இடையிலான மிகப் பெரிய வேறுபாடு அது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப தலைநகரைக் கூட மாற்றியவர் ஷாஜகான்.

1638 - ல் இருந்து 1648 - வரை ஆக்ராவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரம் மாற்றப்பட்டது. அதோடு மட்டுமன்று டெல்லிக்குப் பெயரே ஷாஜகான் பாத் என மாற்றப்பட்டது. அப்படித் தன்னுடைய பெயரைச் சூட்டுவது, தன்னுடைய விருப்பத்திற்கேற்ப ஆடம்பரங்களில் ஈடுபடுவது ஷாஜகானின் வழக்கம்.

நடனத்திலும், கலையிலும், ஓவியத்திலும் ஜஹாங்கீருக்கும், ஷாஜகானுக்கும் அதிகமான ஈடுபாடு உண்டு. அதற்காக அவர்கள் செலவழித்த தொகையானது மிகக் கூடுதலாகும். ஒளரங்கசீப் இவைகளை எல்லாம் மறுத்தார். கலைக்கும், இசைக்கும் ஓரளவுதான் செலவழிக்க வேண்டும், மக்கள் நலனுக்குத்தான் கூடுதலாகச் செலவழிக்க வேண்டும் என்பதிலே ஒளரங்கசீப் மிக உறுதியாக இருந்தார்.

பல்லக்கிலே பயணம் போவதைக் கூட அவர் மறுத்தார். அவருடன் இருந்த அமைச்சர்கள் எல்லாம், மன்னர் நடந்து போவது சரியாக இருக்காது என்று அவரிடத்திலே அறிவுறுத்தி, அவருடைய விருப்பத்திற்கு மாறாகத்தான் பலவற்றை அவரிடத்திலே திணித்தார்கள். அவர் சொன்னார், 'இதென்ன பழக்கம் பல்லக்கில் செல்வது. ஆறுபேர் பல்லக்கைச் சுமக்க, மன்னரோடு அவருடைய பணியாட்கள் இருவரும் அதில் அமர்ந்து செல்ல, அம்மூவரையும் அவர்கள் சுமக்க வேண்டும்.

தங்கள் வாயின் துர்நாற்றம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, எப்போதும் வாசனைப் புகையிலை மென்று கொண்டிருக்கிற மன்னர்கள், அவற்றைத் துப்புவதற்காக வெள்ளியிலோ, பீங்கானிலோ ஆன கிண்ணம் ஒன்று அந்த பல்லக்கிலேயே இருக்கும். பல்லாக்குத் தூக்கிகள் கால் வலிக்க
இவர்களை தூக்கிச் செல்ல வேண்டும். இதெல்லாம் என்ன பழக்கம்' என்றார்.


இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று ஒளரங்கசீப் நினைத்தார். மன்னர் உட்காருகிற மயில் சிம்மாசனமே இவ்வளவு பெரியதாக இருக்க வேண்டுமா என்று ஒளரங்கசீப் கேட்டார். மற்றவர்கள் எல்லாம் சொன்னார்கள் ' நீங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், உங்களுடைய அரண்மனையில் எவ்வளவு எளிமையாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தர்பாரில் இருக்கிறபோது மயில் சிம்மாசனத்தில்தான் இருக்க வேண்டும்'.

மயில் சிம்மாசனம் என்பது இரண்டடி உயரமுள்ள நான்கு கால்கள், அதன் மீது ஒரு விதானம், அந்த விதானத்தின் மீது 12 சின்ன சின்னத் தூண்கள், அந்த 12 தூண்களிலும் ஒன்றில் மரகத மாலை, ஒன்றில் வைர மாலை, இன்னொன்றிலோ சிவப்புக் கல் மாலை, ஒன்றிலே வாள் போன்ற வடிவம், இன்னொன்றிலே வில் போன்ற வடிவம் இத்தனை அழகான வேலைப்பாடுகளோடு அமைக்கப்பட்டது.


அதற்கு மேலே ஒரு நாற்காலி போல் இல்லாமல், படுக்கை போல அமைந்திருப்பதுதான் அன்றைய மொகலாய சாம்ராஜ்யத்தினுடைய சிம்மாசனம்.

அந்த சிம்மாசனம் டெக்ரான் ஷாவினுடைய அரண்மனையிலே அருங்காட்சியத்திலே இன்றைக்கும் உள்ளது என்று கூறுகிறார்கள்.

அதனுடைய குறைந்தபட்ச மதிப்பே 26 லட்சம் டாலர் என்று மதிப்பிடப்படுகிறது.

இவ்வளவு ஆடம்பரமாக, இத்தனை பெரிய செலவுகளை மன்னர்கள் செய்து கொண்டிருக்க வேண்டுமா என்கிற கேள்வி ஒளரங்கசீப்புக்கு இருந்து கொண்டே இருந்தது. அதை மெல்ல மெல்லத்தான் அவரால் மாற்ற முடிந்தது. முதல் பத்தாண்டுகள் ஏறத்தாழ முழுக்க முழுக்க ஷாஜகானினுடைய ஆட்சியின் தொடர்ச்சியாகத்தான் அவரால் ஆட்சியை நடத்த முடிந்தது. ஏனென்றால் அந்த மாற்றங்களை எல்லாம் ஒரு பேரரசனாக இருந்தபோதும்கூட, உடனடியாக அவரால் கொண்டு வரமுடியவில்லை. சில மாற்றங்களைச் செய்தார். அவை போற்றப்பட வேண்டியவனாக இருந்தன.

ராஜா ஜெய்மாலினுடைய சிலையையும், சித்தூர் அரசர் சிலையையும் மன்னருடைய மாளிகைக்கு முன்னால், இரண்டு யானைகளின் மேல் இருப்பது போல அமைத்தார். பொதுவாகச் சிலைகளின் மீதும், கலைகளின் மீதும் ஆர்வமில்லாத ஒளரங்கசீப் இரண்டு கருங்கல் யானைகளைச் செய்யச் சொல்லி அவற்றின் மீது ராஜா ஜெய்மாலின் சிலையும், சித்தூர் அரசர் பட்டாவின் சிலையையும் வைக்க சொல்கிறாரே என்கிற வருத்தம் பலருக்கு இருந்தது.

அதற்கு காரணம், அந்த இரண்டு அரசர்களும் மொகலாய வம்சத்தில் வழி வந்தவர்கள் இல்லை. அக்பரின் காலத்தில் அவரை எதிர்த்து கடுமையாக போர் புரிந்தவர்கள்.

தங்களுடைய மொகலாய சாம்ராஜ்யத்திற்கு எதிராகப் போரிட்ட அரசர்களை எதற்காக இவர் மேன்மைப்படுத்துகிறார் என்றால், ஒளரங்கசீப் சொன்னார் 'அவர்கள் நம்மை எதிர்த்து போரிட்டு இருக்கலாம். ஆனாலும், களத்தில் கடைசிவரைக்கும் நின்று கலங்காமல் போரிட்ட மாவீரர்கள் அவர்கள். எதிரிகளாக இருந்தாலும் வீரர்களை மதிக்க வேண்டும்' என்று சொன்ன மிகப் பெரிய பண்பை ஒளரங்கசீப் பிடத்திலேதான் பார்க்க முடிந்தது.


எனவே ஒளரங்கசீப் மற்ற நாட்டுக்காரர்களை வெறுக்கிறவர், மற்ற மதத்துக்காரர்களை எல்லாம் வெறுக்கிறவர், அவர்களையெல்லாம் அடியோடு ஒழித்தவர், இந்துகளின் மீது கடுமையான வரிகள் விதித்து அவர்களை இன்னலுக்கு உள்ளாக்கியவர் என்றெல்லாம் வரலாற்று ஆசிரியர்கள் எழுதி உள்ளனர். ஆனால், உண்மையை புரட்டி பார்க்கும் போது
அவர் பல வரிகளை இந்துகளுக்கு மட்டுமல்ல, இஸ்லாமியர்களுக்கும் சேர்த்துதான் விதித்து இருக்கிறார்.

வரி விதிக்காமல் நாட்டை ஆள முடியாது. வரி வருவாயின் மூலம்தான் நாட்டைச் செம்மையாக ஆள முடியும் என்று அவர் கருதியிருக்கிறார். இந்துக்களையே முழுமையாக அழிந்துவிட வேண்டும் என்று கருதியிருந்தால், குமரகுருபரர் காசியிலே கட்டியிருந்த மடத்திற்கு ஒரு பெரிய தொகையை ஒளரங்கசீப் கொடுக்க வேண்டிய தேவையில்லை.


இன்றைக்கும் அந்த பதிவு காசி மடத்தில் இருக்கிறது. குமரகுருபரர் கட்டிய அந்த மடம் ஒன்றும் இஸ்லாமிய மடம் அன்று. இந்து மதம் சார்ந்த சைவ மதம் சார்ந்த ஒரு மடம். அந்த மடத்திற்கு ஒரு பெரும் தொகையை உதவியாகக் கொடுத்தவர் ஒளரங்கசீப்.

சில இடங்களிலே அவர் கடுமையாக இருந்திருக்கலாம். இசைவாணர்கள் சிலர் இடத்திலே அவர் கோபம் கொண்டார் என்பது உண்மைதான். ஒருமுறை அந்த இசைவாணர்கள் எல்லாம் ஒரே ஒப்பாரியோடு வரிசையாக போனார்கள். எங்கே போகிறீர்கள் என்று ஒளரங்கசீப் கேட்டபோது 'நீங்கள் இசைக்கு இடம் இல்லை என்று சொல்லிவிட்டதால், இசைக் கருவிகளை எல்லாம் புதைக்கப் போகிறோம்' என்று சொன்னார்கள். உடனே ஒளரங்கசீப் 'கொஞ்சம் ஆழமாகக் குழி தோண்டி புதையுங்கள்' என்று சொல்லியிருக்கிறார்.

அவர் இசைக்கும், கலைக்கும் எதிரி இல்லை. நாம் இசை கேட்டு கொண்டிருக்க பிறந்தவர்கள் இல்லை. செய்வதற்கு ஏராளமான வேலைகள் உள்ளன என்பதாக கருதியவராக இருந்திருக்கிறார்.

ஒளரங்கசீப்பிற்கு இரண்டு பக்கங்கள் இருந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் ஒரு பக்கத்தை மட்டுமே சொல்லி கொண்டிருப்பதில் நியாயமுமில்லை.






நூல் : ஒன்றே சொல், நன்றே சொல்
ஆசிரியர் : ஐயா, சுப,வீரபாண்டியன்.

Thursday, March 1, 2012

கரடி பொம்மை (Teddy bear) உருவான விதம்...


மெத்து மெத்தென இருக்கும் இந்த கரடி பொம்மையை யாருக்குதான் பிடிக்காது. 1902-ல் அமெரிக்க அதிபராக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) மிஸிஸிபி மாகாணத்துக்கு வேட்டையாடச் சென்றார். பாதுகாப்பு கருதி ஒரு கரடியை கட்டி வைத்து சுடச் சொன்னார்கள் அவரது உதவியாளர்கள். அது 'முறைகேடான விஷயம்' என்று மறுத்துவிட்டார் ரூஸ்வெல்ட்.

தியோடர் ரூஸ்வெல்ட்

மறுநாளே இந்த விஷயத்தை கார்ட்டூனாக பல பத்திரிகைகள் வெளியிட்டன. (பேரிமேர் கார்ட்டூன் மிகவும் பிரபலமானது).


பத்திரிகைகளின் கேலிச் சித்திரம்

'ப்ரூக்ளின்' என்ற பெயரில் கடை வைத்திருந்த மோரிஸ் மிச்சோடம் மற்றும் அவரது மனைவி ரோஸ் ஆகியோர் பஞ்சு அடைத்த ஃபர் (Fur-பஞ்சைப் போல மெத்தென இருக்கும் ஒருவகையான துணி) கரடி பொம்மைகளை விற்பனைக்கு வைத்திருந்தனர். அவற்றுக்கு டெடிஸ் பியர் (Teddy's bear) என அதிபர் ரூஸ்வெல்டிடம் அனுமதி பெற்று பெயர் வைத்தனர். (டெடி என்பது அதிபரின் செல்லப் பெயர்) கன ஜோரான விற்பனை !

இதே காலகட்டத்தில் ஜெர்மனியில் ஒரு சம்பவம், 1880-ல் ஃபர் பொம்மைகளை அறிமுகப்படுத்திய மார்கரெட் ஸ்டீஃப், முதலில் ஃபர் யானைகளையே விற்றுக் கொண்டிருந்தார். அவரது உறவினரான ரிச்சர்ட், ஃபர் கரடி பொம்மைகளை விற்குமாறு தூண்ட, 1902-ல் அவற்றைத் தயாரித்து விற்க ஆரம்பித்தார் மார்கரெட். ஜெர்மனியில் அவை சரியாக விற்பனையாகவில்லை. ஆனால், ஒரு பொம்மைத் திருவிழாவில் அமெரிக்க வியாபாரி ஒருவர், மார்கரெட்டிடம் இருந்து 3 ஆயிரம் டெடி பியர்களை வாங்கிக் கொண்டார்.


ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட முதல் கரடி பொம்மை


மோரிஸ் மிச்டோமின் கரடி பொம்மைகள் குழந்தைகள் போல காணப்பட்டன. ஸ்டீஃப்னின் கரடி பொம்மைகள்தான் கரடிகளைப் போலவே இருந்தன. ஸ்டீஃப்னின் நிறுவனம் இன்றளவும் உலக அளவில் டெடி பியர்களை ஏற்றுமதி செய்து வருகிறது. பொம்மையை மட்டுமல்ல, டெடி பியர் அனிமேஷன், வீடியோ கேம் என பணம் கொழிக்கின்றன.




தகவல் : முத்தாரம் இதழ்.
பட உதவி : விக்கிப்பீடியா.