Thursday, October 20, 2011

ஏ குருவி, சிட்டுகுருவி,.

”சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா...” என்று பழைய சினிமாப் பாட்டு உண்டு. ஆனால் இப்போது சிட்டுக்குருவியே ஒரு சேதி (செய்தி ) ஆகிவிட்டது. அது மட்டுமல்ல, சிட்டுக்குருவி நம்மை விட்டு பிரிந்தே போய் விடுமோ என்றும் தோன்றுகிறது.

சென்னை, கோவை போன்ற தமிழக நகர்களில் சிட்டுக்குருவிகள் மிக அரிதாகி விட்டன. நாட்டின் இதர நகரங்களிலும் இதே நிலை தான். ஐரோப்பிய நாடுகளிலும் சிட்டுக்குருவிகள் மாயமாய் மறைந்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இங்கிலாந்தில் 1970 களில் சிட்டுக்குருவி பேரெண்ணிக்கையில் காணப்பட்டது. இப்போது அவற்றில் 68 சதவிகிதம் மறைந்து விட்டது. லண்டன் நகரைப் பொருத்த வரை மத்திய பகுதியில் சிட்டுக்குருவிகள் மிக அபூர்வமாகவே தென்படுகின்றன எனறு கூறப்படுகிறது.



சிட்டுக்குருவி பாதுகாக்கப்பட வேண்டிய பறவை இனம் என அறிவிக்க வேண்டியிருக்கும் என்ற அளவுக்கு நெதர்லாந்து நாட்டில் மறைந்து வருகின்றது. வட அமெரிக்காவிலும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

போதிய இரை கிடைக்காதது, கூடு கட்ட இடமின்மை போன்ற காரணங்களால் சிட்டுக்குருவிகள் மறைந்து வரலாம் என ஆரம்பத்தில் பொதுப்படையாகக் கூறப்பட்டு வந்தது. எனினும் இது குறித்து கடந்த சில ஆண்டுகளில் கனடா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா என பல நாடுகளில் ஆய்வுகள் நடந்துள்ளன. ஸ்பெயின் நாட்டில் விரிவாக ஆய்வு நடத்திய இரு நிபுணர்கள் சிட்டுக்குருவிகள் மறைந்து வருவதற்கும் செல் போன் டவர்களிலிருந்து வெளிப்படுகின்ற சிக்னல்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

செல் போன் டவர்களிலிருந்து வெளிப்படும் சிக்னல்கள் சிட்டுக்குருவிகளை மலடாக்கி விடுவதாகக் கூறப்படுகிறது. தவிர, கூடுகளில் சிட்டுக்குருவிகள் இடும் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிப்படுவதில்லை. முட்டைகள் அப்ப்டியே அழுகிப் போய் விடுவதாகவும் சொல்லப்படுகிறது.

செல் போன் டவர்களிலிருந்து வெளிப்படும் சிக்னல்களால் ஏற்படும் விளைவுகளை ஆராய இந்தியாவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு நிபுணர் குழுவை நியமித்தது. இக் குழுவினர் இந்தியாவில் மட்டுமன்றி வெளி நாடுகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சிக்னல்களால் பறவைகள் பாதிக்கப்படுவதாக இக்குழுவினர் அண்மையில் வெளிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சிட்டுக்குருவிகள் மறைந்து வரும் நிலையில் அவற்றைக் காக்கும் பொருட்டு உலக அளவில் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர் ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதியை சிட்டுக்குருவி தினமாகப் பின்பற்றி வருகின்றனர். சிட்டுக்குருவிகள் அழிவது தடுத்து நிறுத்தப்படாவிட்டால் மார்ச் 20 ஆம் தேதியை சிட்டுக்குருவிகளின் நினைவு தினமாக அனுஷ்டிக்க வேண்டி வரலாம்.



தகவல் மற்றும் நன்றி : அறிவியல்புரம் வலைப்பூ
(tamil-science.blogspot.com).

சுட்டித் தகவல்கள்


பார்வையற்றவர்களும் பயன்படுத்துவதற்க்கு ஏற்ற பிரேய்லி முறையிலும் பணத்தாள்கள் அச்சிட்டு வழங்கும் நாடுகள் சுவிடன், பிரேசில்,நெதர்லாந்து.



லட்சத் தீவு என்பது லட்சம் தீவுகளைக் கொண்டதல்ல ! அலி ராஜா என்பவருக்கு கிழக்கிந்தியக் கம்பெனியார் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றதால் அந்த பெயர் வந்தது.



லண்டனில் தபால் துறைக்கென்று பாதாளத்தில் ஒரு ரயில் பாதை உள்ளது.
1927 -ம் ஆண்டு அமைந்த இந்த பாதையில் ஓடும் ரயில்கள் ஓட்டுனர் இல்லாத தானியங்கி ரயில்கள்.


ஒரே ஆண்டில் லண்டன் விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெறுவதை "கோல்டன் ஸ்லாம்" என்று அழைக்கின்றனர்.


தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர்தான் பங்களா தேஷின் 'அமர் சோனார் பங்களா' என்ற தேசிய கீதத்தையும் இயற்றினார்.


தகவல் : முக்கிமலை நஞ்சன், எஸ். சடையப்பன், ஆர். ஆர். பூபதி.

Wednesday, October 19, 2011

குட்டித் தகவல்கள் !


1940 - களில் ஹாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் எலிசபெத் டெய்லர். 1960 - ல் உலக திரைப்பட வரலாற்றில் அதிக சம்பளம் பெற்ற நடிகையும் இவர்தான். கிளியோபாட்ரா படத்தில் நடித்ததற்காக அவருக்குத் கிடைத்த தொகை 7,00,000 டாலர்கள்.



சிங்கம் அதிகபட்சமாக ஒரே தாவலில் 20 அடியைக் கடக்கும்.



அகதா கிறிஸ்டி எழுதியுள்ள 87 துப்பறியும் நாவல்கள். 103 மொழிகளில் 50 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.


தகவல் : முக்கிமலை நஞ்சன், எஸ். சடையப்பன், ஆர். ஆர். பூபதி.

சொல்வனம் !


எங்கள் எதிராளிகள் பலம் வாய்ந்தவர்கள். பணம் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. தொழில் நுட்பமும் அவர்களிடம் இருந்தது. எங்களிடம் இரண்டுமே கிடையாது. ஆனால் அந்த பலசாலிகளை வெல்ல வேண்டும் என்ற வெறி மட்டும் இருந்தது.

- கிய்ச்சிரோ டோயாட்டா. (நிறுவனர் -- டோயாட்டா கார் நிறுவனம்)

Tuesday, October 18, 2011

சொல்வனம் !


சமுதாயமே ஒழுக்கக்கேடாகப் போனதற்குக் காரணம் ஒருவன் அயோக்கியத்தனம் செய்கிறானென்றால் அதைக் கண்டிக்க வேண்டும் என்று தோன்றாததுதான்.

**********

எந்த மனிதனும் எனக்குக் கீழானவனல்லன். அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்லன். ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும், சமத்துவமாக இருக்க வேண்டும்.


--- சமூகப் போராளி பெரியார்.



நன்றி : தோழர் தமிழச்சி.

வன தேவதைகள்!

தேக்கடி... இன்னமும் மிச்சம் இருக்கும் பச்சைப்பசேல் மலைத் தொடர். இங்கேதான் பெரியார் புலிகள் காப்பக வனச் சரகம் இருக்கிறது. இந்த வனத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு, இங்கு வாழும் 50 குடும்பத் தலைவிகளின் கைகளில்தான் இருக்கின்றது என்பதுதான் வியப்பு!

''ஆதிகாலத்துல காடுகள்தான் நமக்கு வீடா இருந்தது. வளர்ச்சி ஏற்பட... ஏற்பட... காட்டில் இருந்து நாம தூர வந்துட்டோம். நம்மை வாழவெச்ச வீட்டை நாமே செங்கல் செங்கலாப் பெயர்க்கிற மாதிரி, காட்டை அழிச்சுட்டு இருக்கோம். மிருகங் களை வேட்டையாடுறோம். மரங்களை வெட்டிக் காசு பார்க்குறோம். இப்படியே போனா, ஒரு கட்டத்தில், காடுங்கிற தையே கதையில் மட்டும்தான் கேட்க முடியும். சட்டங்கள் போட்டாலும் காட்டைப் பாதுகாக்க முடியலை. பழங் குடி மக்களோட ஆதரவு இல்லாமல் காடுகளைக் காப்பாத்த முடியாதுனு அரசாங்கத்துக்குத் தெரிஞ்சுதான் காட்டைப் பாதுகாக்கும் பொறுப்புல எங்களையும் இணையச் சொன்னாங்க. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த 'வசந்த சேனா’ அமைப்பு!'' - பெருமையாகச் சொல்கிறார் கிரேஸி குட்டி. 'வசந்த சேனா’ - எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் வனங்களைப் பாதுகாக்கச் செயல் பட்டுவரும் தன்னார்வ அமைப்பு!


''முன்னே காட்டுக்குள் இருந்த மரங்கள், அபூர்வமான மூலிகைகளைக் கொஞ்சம் கொஞ்சமா வெளியாட்கள் கடத்த ஆரம்பிச்சாங்க. இது எல்லாமே ராத்திரி நேரங்களில் நடந்ததால், வனத் துறையால் தடுக்க முடியலை. ராத்திரி நேரங்களில் வாட்சர்கள் ரோந்து போனாங்க. அப்படிப் போகும்போது அசதியில் பகல் நேரத்தில் தூங்கிடுவாங்க. இதைத் தெரிஞ்சு, கடத்தல்காரங்க பகல் நேரத்தில் காட்டுக்குள் நுழைய ஆரம்பிச்சாங்க. பகல் நேரத்திலும் காடுகளைக் கண்காணிக்கணும்னு நினைச்சப்ப, வனத் துறை எங்களோட உதவியைக் கேட்டாங்க. அப்போ வனத் துறைக்கு உதவ முன் வந்ததில் பல பேர் பெண்கள்தான் எங்களை வெச்சு வசந்த சேனா அமைப்பை உருவாக்கினாங்க. இப்போ நாங்க பகலில் ரோந்து போய் காடுகளைப் பாதுகாக்கு றோம். எங்க அமைப்பில் ஸ்கூல், காலேஜ் பெண்களும் இருக்காங்க. அதிகமா இருக்கிறது குடும்பத் தலைவிகள்தான்!'' என்று வசந்த சேனாபற்றி அறிமுகப்படுத்துகிறார் குஞ்ஞம்மா.


இந்த அமைப்பின் தலைவரான ரமணி குட்டி, அமைப்பின் செயல்பாடுகள்பற்றி விளக்குகிறார். ''2002-ல் இந்த அமைப்பை வனத் துறை கொண்டுவந்தது. 2008-ல் எங்கள் அமைப்புக்கு 'ஈ.டி.சி’-ங்கிற சூழலியல் மேம்பாட்டுக் குழுவின் அங்கீகாரம் கிடைச்சது. இப்போ எங்க அமைப்பில் 50 பேர் இருக்கோம். இந்த 50 பேரை எட்டுக் குழுவாகப் பிரிச்சு இருக்கோம். ஒவ்வொரு குழுவிலும் அஞ்சு முதல் ஏழு பேர் வரை இருக்காங்க. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழு ரோந்து போகும். பத்தரை மணிக்கு காட்டுக்குள் ரோந்து போக ஆரம்பிப்போம். மதியம் சாப்பாட்டுக்குத் திரும்ப வரும்போது, காலை யில் இருந்து மதியம் வரைக்கும் எந்தெந்த மிருகங்களைப் பார்த்தோம், காட்டுக்குள் என்ன வித்தியாசங்கள் தென்படுதுனு எல்லா விவரங்களையும் பதிவு செய்வோம். திரும்ப இரண்டு மணியில் இருந்து ஆறு மணி வரைக்கும் ரோந்து போவோம். திரும்ப வந்து விவரங்களைப் பதிவு பண்ணுவோம். நாங்க பதிவு பண்ற விஷயங்களைத் தினமும் ரேஞ்சர்களும் வாட்சர்களும் ஃபாலோ பண்ணிட்டே இருப்பாங்க. ஏதாவது பிரச்னைன்னா, உடனடியாக் காட்டுக்குள் போய் என்ன, ஏதுன்னு பார்ப்பாங்க'' என்கிறார்.


இந்த அமைப்பு ஆரம்பிப்பதற்கு முன் ஒரு நாளைக்கு ஒரு டஜன் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டனவாம். இப்போது தொடர் ரோந்து காரணமாக எந்த ஒரு மரமும் வெட்டப்படுவது இல்லை. ''காட்டுக்குள் போகும்போது, சில சமயம் மிருகங்கள்கிட்ட மாட்டிக்குவோம். இத்தனை வருஷ அனுபவத்தில், எந்த இடங்களில் மிருகங்கள் வரும், என்ன மாதிரி மிருகங்கள் வரும்னு அதோட வாசனை, கால் தடம், கழிவு... இதுகளைவெச்சே கண்டு பிடிச்சிருவோம். அதே மாதிரி எந்த இடங்களில் சரிவு இருக்கு, எந்த இடங்கள்ல தண்ணி ஓடும் என்பதும் எங்களுக்குத் தெரியும்'' என்கிறார் ரமணி குட்டி. ''வீட்டைவிட்டு வெளியே வராத பெண்கள் எல்லாம், இன்னிக்கு இந்த அமைப்பில் சேர்ந்த பிறகு, காட்டுக் குள் தனியா போயிட்டுத் திரும்பி வர்ற அளவுக்குத் தைரியம் அடைஞ்சு இருக்காங்க. காட்டுக்குள் ரோந்து போவதுடன், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தவும் செய்யறோம். எங்களோட உழைப்புக்கு அங்கீகாரமா 2006-ம் வருஷம் 'அம்ரித் தேவி பைஷ்னோய்’ விருது கிடைச்சுது. காடுகளைப் பாதுகாக்கும் வேலைக்காக இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயர்ந்த விருது அது'' என்று சிலிர்க்கிறார் கிரேஸி குட்டி. ''மழைக் காலத்தில் எங்களுக்குத் தேவையான ரெயின் கோட், தொப்பி, பூட்ஸ்னு எல்லாத்தையும் அரசாங்கம் தரும். மத்தபடி நாங்க சம்பளம் எதுவும் வாங்குவது இல்லை. நம்ம வீட்டைப் பாதுகாக்க எதுக்குப் பணம் வாங்கணும்?'' - குஞ்ஞம்மா கேட்க, அத்தனை பேரும் தலையாட்டி ஆமோதிக்கிறார்கள்!

நன்றி : நிருபர் : ந.வினோத்குமார். படம் : எம்.விஜயகுமார் -விகடன்.
நன்றி : http://www.thedipaar.com

ஓசோன் மண்டலத்தில் வட அமெரிக்காவை விட பெரிய ஓட்டை


சுற்றுசுழல் மாசு காரணாமாக பூமியின் மேற்பரப்பில் உள்ள ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்து உள்ளது. அண்டார்டிகா மீதான ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டதை முதன் முதலாக 1970 -ம் ஆண்டுகளில் தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த ஓட்டை ஆண்டுக்கு ஆண்டு விரிவாகி வருகிறது.

2006 - ம் ஆண்டு செலுத்தப்பட்ட அமெரிக்காவின் ஆரோ செயற்கைக்கோள். அண்டார்டிகா மீது உள்ள ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டு உள்ள ஓட்டை 2 கோடியே 75 லட்சம் சதுர கி.மீ. பரப்புக்கு விரிவு அடைந்து உள்ளதை கண்டுபிடித்தது. இது வட அமெரிக்காவை விட பெரியது.

சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்கள் பூமியின் மீது விழுந்து அங்கு வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படாமல் காப்பது ஓசோன் மண்டலம்தான். இந்த மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டு இது ஆண்டுக்கு ஆண்டு பெரியதாகி வருவது ஆபத்தை அதிகரிப்பது ஆகும்.



தகவல் : தினத்தந்தி.