Tuesday, December 13, 2011

பறையடிக்க மறுத்ததால் ஜாதி இந்துக்கள் வெறியாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அக்கரைப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது மல்லையாபுரம் கிராமம். வழக்கமாக எல்லா சேரிகளையும் போலவே தலித்துகளுக்கு எதிரான ஆதிக்க சாதியினரின் பெயரையே தாங்கி நிற்கிறது மல்லையா (நாயக்கன்) புரம். மதுரையிலிருந்தும் தேனியிலிருந்தும் வரும் சாலை, தாராபுரம் போகும் சாலையில் இணையும் இடமான செம்பட்டியிலிருந்து தோராயமாக 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பராமரிப்பில்லாத குண்டும் குழியுமான சாலையில் பயணித்து, மல்லையாபுரத்தை அடைய வேண்டும்.

தமிழகம் முழுவதும் 30.10.2011 அன்று அனைத்து தேர்தல் அரசியல் கட்சித் தலைவர்களாலும், கள்ளர் சாதியினராலும் கொண்டாடப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கம் குருபூசையை, மல்லையாபுரம் கிராமத்தில் வாழும் கள்ளர் சாதியினர், தலித்துகள் மீதான வன்முறைத் தாக்குதலுடன் கொண்டாடி முடித்திருக்கின்றனர்.

மல்லையாபுரம் கிராமத்தில், சுமார் 150 சக்கிலியர் குடும்பங்களும், 40 கள்ளர் குடும்பங்களும், சுமார் 350 நாயக்கர் குடும்பங்களும் வசிக்கின்றனர். சக்கிலியர்கள் விவசாயக்கூலிகளாகவும், சென்னை முதலான வெளியூர்களுக்கு சென்று பறையடிப்பதையும் தொழிலாக செய்து வருகின்றனர். கள்ளர் சாதியினர் திருப்பூர் உள்ளிட்ட வெளியூர்களில் வேலை செய்து கொண்டும், கறவை மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்யும் தொழிலையும் மேற்கொண்டு வருகின்றனர். நாயக்கர்களிடம்தான் பெரும்பாலான நிலங்கள் உள்ளன, நாயக்கர்கள் விவசாய முதலாளிகளாக உள்ளனர்.

ஆண்டு தோறும் 30.10.2011 அன்று முத்துராமலிங்கம் பிறந்த நாளில் மல்லையாபுரத்தில் ஒரு தோட்டத்திலிருந்து முத்துராமலிங்கத்தின் படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு , ஊரின் மய்யப்பகுதியில் வைத்து கும்மியடித்து பூஜைகள் செய்து கொண்டாடப்படுவதும், ஊர்வலத்தின் போதும் பூஜைக்கொண்டாட்டங்களின் போதும் – உள்ளூர் சக்கிலியர்கள் இலவசமாகப் பறை அடிப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்த ஆண்டும் வந்து இலவசமாகப் பறை அடித்து தருவதாக தலித்துகள் ஒப்புக் கொண்டுள்ளனர். மாலை 4 மணிக்கு ஊர்வலம் கிளம்புகிற நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால், தலித்துகள் பறை அடிக்கப் போகவில்லை. தலித்துகளை பறையடிக்க வருமாறு மைக்செட் மூலம் கள்ளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தலித்துகள் செல்போன் மூலம், “மழை பெய்து கொண்டிருப்பதால்தான் வரமுடியவில்லை, மழையில் அடித்தால் தப்பு கிழிந்து விடும், எங்க பொழப்பே போய்விடும்'' என்றும் தகவல் சொல்லியனுப்பியுள்ளனர்.

“ஓ! நாங்க சொல்ற நேரத்துக்கு நீங்க அடிக்க மாட்டீங்க? உங்களுக்கு வசதியான நேரத்துலதான் நாங்க சாமி கும்பிடணுமோ?'' என்று கேட்டு, செல்போனை துண்டித்து விட்டனர். பறை முழக்கம் இல்லாமலேயே பூசை கொண்டாட்டங்களை முடித்து விட்ட கள்ளர் சாதியினரில் சுமார் 40 பேர் கொண்ட கும்பல், தலித்துகள் வசிக்கும் தெருவுக்குள் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்கி, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்களை பெயர் சொல்லி தட்டி எழுப்பி, வீடுகளின் தாழ்வாரங்களில் கட்டி தொங்க விடப்பட்டிருந்த பறைகளை கிழித்து எறிந்து, “இந்த தப்ப வெச்சுக்கிட்டுதானடா இந்த ஆட்டம் காட்டுறீங்க?'' என்று சொல்லிக்கொண்டே வீடுகளையும் தலித்துகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

செல்போன் மூலம் தலித்துகள் காவல் நிலையத்துக்கு தகவல் சொல்ல, உடனடியாக செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கணேசனும், டி.எஸ்.பியும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். முதலில் "மைக்செட்'காரரையும், அவர் அடையாளம் காட்டிய நான்கு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வழக்கம் போல ஆதிக்க சாதியினர் வாழும் பகுதிக்கு மட்டும் காவல் துறையினரை பாதுகாப்புக்கு நிறுத்திச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே தலித்துகளை விசாரித்த டி.எஸ்.பி., மறுநாள் பசும்பொன் குருபூஜைக்கு போய்விட்டு திரும்ப வருகிறவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை இருப்பதால், மறுநாள் மாலை 5 மணிக்கு மேல் காவல் நிலையம் வரச்சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

மறுநாள் மாலை 5 மணிக்கு தலித்துகள் காவல் நிலையம் சென்றுள்ளனர். ஆதித்தமிழர் பேரவை மாவட்ட அமைப்புச் செயலர் முருகன், மாவட்டத் தலைவர் ராசாராம், மாவட்ட அமைப்பாளர் சண்முகம், மாவட்டப் பொறுப்பாளர் காளிராஜ், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி பொறுப்பாளர் ஆபிரகாம் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன்பாபு, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் அரசு, தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் கதிர் ஆகியோரும் காவல்நிலையத்தில் இருந்துள்ளனர்.

செம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் கணேசன் தலித்துகளை நோக்கி, “எழுத்து மூலமான புகார் தந்தால்தான் புகார் பதிவு செய்வேன்! என்னப்பா எழுத்து மூலமான புகார் தர்றீங்ளா?'' என மிரட்டும் தொனியில் கேட்க, தலித்துகள் “நேற்றே வாக்குமூலம் தந்தோமே'' என்று சொல்லியுள்ளனர். இடையில் குறுக்கிட்ட ஆதித்தமிழர் பேரவை மாவட்ட அமைப்புச்செயலர் முருகன் காவல்நிலைய ஆய்வாளரிடம், “என்னங்கய்யா இது அநியாயமாக இருக்கு? பாதிக்கப்பட்ட தலித்துகள் பகுதிக்கு பாதுகாப்பு போடாமல் தாக்குதல் நடத்தியவர்கள் பகுதிக்கு பாதுகாப்பு போட்டிருக்கிறீர்கள்! நேற்றே வாக்குமூலம் பதிவு செய்துவிட்டு அதை வைத்தே முதல் தகவல் அறிக்கை போடாமல், எழுத்து மூலமான புகார் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்'' எனக்கேட்க, “நீ ஒண்ணும் எனக்கு சட்டம் சொல்லித்தரவேணாம்! இந்த மக்கள் (தலித்துகள்) ஒரு நாளும் ஒண்ணு சேந்து போய் அவங்கள (கள்ளர்களை) அடிச்சுர மாட்டாங்க! அவங்க ஒண்ணு சேந்து அடிச்சுரக்கூடாதேன்னுதான், அங்க போலீச நிறுத்தினேன்!'' என்று சொல்ல, பதிலுக்கு முருகன், “தலித்துகள் ஒருநாளும் ஒண்ணு சேரமாட்டாங்கன்னு எப்படி நீங்களே முடிவு பண்ணலாம்? வாக்குமூலத்தை வைச்சே முதல் தகவல் அறிக்கை போடலாம்; ஆனா எழுத்துப்பூர்வமா புகார் வேணும்னு தலித்துகளை மிரட்டுறீங்க! உங்ககிட்ட நியாயம் கிடைக்கும்னு தெரியல! நாங்க எஸ்.பி.ய பார்க்கப் போகிறோம்'' என்று சொல்லி விட்டு கிளம்ப, காவல் துறையினர் அங்கிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தலித்துகளிடம் பேசச் சொல்லியுள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தலித்துகளிடம், “எப்படியும் அவங்க நெலத்துக்குதான் வேலைக்குப் போயாகணும், அவங்கள பகைச்சுகிட்டு வாழ முடியுமான்னு யோசிச்சுப் பாருங்க! வேணுமுன்னா இனிமே, இப்படி அடிக்க மாட்டோம்னு அவங்க கிட்ட எழுதி வாங்கிக்கலாம்!'' என்று சொல்ல, தலித்துகளும் அவ்வாறே எழுதிக்கொடுத்துவிட்டு வந்து விட்டனர். இதற்கிடையில், வீடுகள் நொறுக்கப்பட்ட காட்சிகளை "தமிழன்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் இருக்க ஒரு கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு, விடுதலைச் சிறுத்தைகள், சி.டி.யை கள்ளர்களிடமே கொடுத்தது தனிக்கதை. பிடியாணை தேவைப்படாத குற்றங்களுக்கு யாருடைய புகாரும் தேவையில்லை என்கிற சட்டவிதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு, மநுதர்மத்தை "மிகச்சிறப்பாக'வே நடைமுறைப்படுத்தியுள்ளனர் காவல்துறையினர்.


நன்றி : தலித் முரசு மற்றும் கீற்று இணையத்தளம்.

Sunday, December 11, 2011

சாதனைக்கு வயது ஒரு தடையல்ல!


புகழ் பெற்ற ' தி ஆர்ஜின் ஆஃப் ஸ்பீசீசஸ்' (The Origin of Species) என்ற புத்தகத்தை எழுதிய போது சார்லஸ் டார்வினுக்கு 50 வயது.



மெக் ஆடம் என்கிற ஆங்கிலேய நிலம் அளப்பவர்தான் (Surveyor) 69 வயதில் கல்லைப் பரப்பிச் சாலையை அமைக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.



பிறவியிலேயே பார்வையும், கேட்கும் திறனும், பேசும் திறனும் இல்லாமல் பிறந்த ஹெலன் கெல்லர் கடுமையான பயிற்சிகளால் 10 வயதிலேயே பேசக் கற்றுக் கொண்டதோடு, சொற்பொழிவு ஆற்றும் திறனும் பெற்றார். இதைக் கேள்விப்பட்ட விக்டோரியா பேரரசி ஒரு கப்பலுக்கு ஹெலன் கெல்லரின் பெயரை சூடியது தனிக் கதை.



ஆஸ்திரியா நாட்டு மருத்துவர் சிக்மண்ட் ப்ராய்டு கனவுகள் பற்றி ' தி இன்டபிரிடேஷன்ஸ் ஆஃப் ட்ரீம்ஸ்' (The Interpretation of Dreams) என்ற புத்தகத்தை 44 வது வயதில் எழுதி உலகப் புகழ் பெற்றார்.



தகவல் : (கே.ஜெயலட்சுமி, சென்னை)

Wednesday, December 7, 2011

புகழ்ச்சி இயல்பன்று !

உலகிலேயே மிகவும் கடினமானது என்னவென்றால் ஒருவரை உட்கார வைத்து கொண்டு அவர் முகத்துக்கு நேராக புகழ்வது. அதைவிடக் கடினமானது அந்தப் புகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருப்பது. ஆனால், இந்த இரண்டும் இங்கே மிக இயல்பாக நடக்கின்றன. பொது மேடைகளில் மட்டுமின்றி, காதலன், காதலி உரையாடலிலும் கூட புகழ்ச்சி என்பது மிகையாக இருந்தால்தான் அது உணமையான காதல் என்று கருதப்படுகிறது.

எப்போதும் இயல்புதான் சுவையானது. இயல்புதான் அழுத்தமானது. ஆனால், இங்கே மிகைப்படக் கூறுவது, மிகைப்படப் பாராட்டுவது, உண்மையைக் காட்டிலும் கூடுதலாக பேசுவது என்பவைதான் வரவேற்புக்கு உரியவைகளாக இருக்கின்றன. இது ஒரு சமூகத்தின் நலிந்த நிலையைத்தான் காட்டுகிறது.

அண்மையில் வெளியான ஒரு திரைப்படத்தில் காதலனுக்கும், காதலிக்கும் இடையே நடக்கின்ற உரையாடல் மிக நயமானதாகப்பட்டது. அந்த பெண் தன்னுடைய காதலனிடத்தில் ஒரு கேள்வி கேட்கிறாள், "எல்லா காதலனும், தன் காதலியை தேனே என்றும் , மானே என்றும் கொஞ்சுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், ஒருநாள் கூட நீ என்னை அப்படி கொஞ்சியதில்லையே" என கேட்கிறாள்.


அவன் சொல்கிறான்,"உண்மைதான். உன்னை பார்த்தல் தேனை பார்த்தது போல தோன்றவில்லை என்கிறான். "அப்படியா ? நான் உனக்கு தேனாக தோன்றவில்லையா ?" என்கிறாள். "இல்லை... இல்லை நீ எனக்குத் தேனில்லை" என்கிறான். இந்த இடத்திலே அந்தக் காட்சியை நினைக்கும் போது நமக்கு நினைவுக்கு வரும் ஒரு இலக்கியத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என தோன்றுகிறது.

ஷேக்ஸ்பியர் எழுதிய கிங்லியர் நாடகம் ஒன்று இருக்கிறது. முடிவு மிக சோகமாக அமைந்த நாடகம் அது. ஆனால், மிக அருமையான உரையாடல்கள் அந்த நாடகம் முழுவதும் இருக்கிறது. ஒரு இடத்திலே ஆண்டனி என்கிற கதை பாத்திரத்தைப் பார்த்து கேமலின் என்கிற பெண் சொல்வாள், "எப்போது பார்த்தாலும் அடி வாங்குவதற்கு என்றே ஒரு கன்னத்தையும், பழி சுமப்பதற்காகவே என்று ஒரு தலையையும் வைத்திருப்பவள் நீ "என்று கூறுவாள்.


இது போன்ற சில கூர்மையான வசனங்கள் அதில் வரும். அதுபோல, லியர் என்கிற மன்னனுக்கு மூன்று மகள்கள் இருந்தார்கள். அந்த மூன்று பெண்களுக்கும் தன் முதுமையின் காரணமாக நாடு முழுவதையும் பிரித்து கொடுத்து விடலாம் என்று மன்னன் கருதினான். அந்த நாடகத்தினுடைய முதல் காட்சியே அதுதான்.

மூன்று மகள்களையும் அழைத்தான். "எனக்கு வயதாகிறது. நான் இந்த நாட்டை மூன்று பங்காக ஆக்கி, உங்களுக்கு கொடுத்து விடலாம் என்று கருதுகிறேன். ஆனால், யார் என்னிடம் கூடுதல் அன்பு வைத்து உள்ளீர்களோ, அந்த அளவுக்கு நான் கொடுக்க போகும் நாட்டின் அளவும் கூடுதலாக இருக்கும். எனவே ஒவ்வொருவராக சொல்லுங்கள்" என்று சொன்ன பிறகு, சொல்ல வேண்டுமா என்ன ?. எவ்வளவு புகழ்கிறோமோ, அவ்வளவு நாட்டின் பகுதியை நாம் பெற்று கொள்ளலாம் என்று பெண்கள் மனதிற்குள் முடிவு செய்கிறார்கள்.


மன்னன், மூத்த மகளை அழைத்து முதலில் நீ சொல் என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண் சொல்கிறாள், "உலகத்திலேயே உன்னைத்தான் நான் கூடுதலாக நேசிக்கிறேன். வேறு யாரையும் அல்ல. இந்த உலகத்தில் எத்தனை மனிதர்களை எடுத்துகொண்டாலும், நான் கூடுதலாக நேசிக்கிற மனிதன் நீ மட்டும்தான்" என்று ஒரே போடாக போட்டு விடுகிறாள்.

இதை கேட்டு மன்னன் நெகிழ்ந்து விடுகிறான். உடனே,மன்னன் "நல்லது, நம்முடைய நாட்டின் வரைப்படத்தில் இந்த கோட்டிலிருந்து, அந்த கோடு வரை உள்ள வளமான பகுதியை நீ சொல்லி இருக்கிற புகழ்ச்சிக்கு ஏற்ப உனக்கு தருகிறேன்" என்று கூறுகிறார்.

அடுத்து, இரண்டாவது மகளை அழைத்து, "இப்போது நீ சொல் பார்க்கலாம்" என்கிறார். அவள் சொல்கிறாள், "எல்லாம் மூத்த சகோதரி சொன்ன செய்திதான். கூடுதலாக ஒன்று, அவள் எவ்வளவு தூரம் உங்கள் மீது நேசம் வைத்துள்ளளோ, அதைவிட கூடுதலாக நான் உங்களை நேசிக்கிறேன்" என்று கூறுகிறாள். முதல் மகளுக்கு கிடைத்ததைவிட, கொஞ்சம் அதிகமான வளங்களும், எல்லைகளும் தனக்கு கிடைக்கும் என்று எண்ணி கொள்கிறாள். அதுபோலவே, அவளுக்கு கிட்டுகிறது.

ஆக, இரண்டு பேரும் புகழ்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு, வளமான பெரும் பகுதிகளை பெற்று கொள்கின்றனர். அதில் அவர்களுடைய கணவன்மார்களுக்கும் நாடு கிடைத்த மகிழ்ச்சி.


இப்போது, இறுதியாக தன்னுடடைய கடைக் குட்டியான மூன்றாவது மகளை அழைத்து, "நீ கடைசி மகளாக இருந்தாலும் கூட, என் மீது நீ வைத்துள்ள வாஞ்சையையும், அன்பையையும் நான் அறிவேன். நீ சொல், உன் மூத்த சகோதரிகள் இரண்டு பேரைக் காட்டிலும் என் மீது நீ எப்படி அதிகமான அன்பு வைத்திருக்கிறாய்" என மன்னன் கேட்ட போது,

மூன்றாவது மகளான கார்டிலீயா பொறுமையாக சொல்கிறாள்

"ஒன்றுமில்லை"

"ஒன்றுமில்லையா ? " என கேட்க

"ஆமாம், ஒன்றுமில்லை என்றால் ஒன்றுமில்லைதான்" என்கிறாள்.

அப்போது மன்னன் சொல்வான் Nothing comes from Nothing என்று. அதாவது "ஒன்றுமில்லாத்திலிருந்து உலகத்தில் ஒன்றும் வெளிவராது. நீ எப்படி ஒன்றுமில்லை என்று சொல்கிறாய்" என்று கேட்கிறபோது, கார்டிலீயா சொல்வாள் "அப்படி இல்லையப்பா ஒரு அப்பாவின் மீது பெண்ணுக்கு எவ்வளவு அன்பு இருக்குமோ அவ்வளவு அன்பு நான் வைத்திருக்கிறேன்".

"அவ்வளவுதானா ? "

" அவ்வளவுதான். ஒரு அப்பாவின் மீது ஒரு குழந்தைக்கு எவ்வளவு பாசம் இருக்குமோ அந்தப் பாசம் எனக்கு இருக்கிறது". "உன் மூத்த சகோதரிகள் இரண்டு பெரும் எவ்வளவு பாராட்டிச் சொன்னார்கள். நீ என்னமோ என் மீது வைத்திருப்பது வெறும் அன்புதான் என்கிறாயே ?" என்று மன்னன் கேட்ட போது, மிக அழகாய் பதில் சொன்னால் கார்டிலீயா.


"அவர்கள் உலகத்தில் உங்களை மட்டும்தான் நேசிக்கிறேன் என்று சொல்கிறார்கள். அது உண்மையாக இருந்திருந்தால், அவர்கள் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. இங்கேயே இருந்திருக்கலாம். திருமணம் ஆன பிறகு கணவரையும் நேசிக்க வேண்டிய கடமை இருக்கிறதல்லவா ? பிறக்க போகிற குழந்தைகளையும் நேசிப்பது இயல்புதானே. அதோடு இல்லாமல், இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நேசிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறத்தல்லவா ? இப்படியாக, எல்லோரையும் நேசிக்கும் அவர்களுடைய இதயத்தில், அப்பாவிற்கு என்று என்ன இடம் இருக்குமோ, அதுதான் இருக்கும்" என கூறினாள்.

இந்த உண்மையான் கூற்றை அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை. அது அவருக்கு மன நிறைவு தரவில்லை. இது மோசமானது என கருதினான். உடனே மன்னன் கூறுகிறான், "உன் பதில் எனக்கு மன நிறைவை தரவில்லை, ஆதலால், உனக்கு இந்த நாட்டில் எந்த ஒரு பகுதியையும் தர முடியாது. உனக்கு சேரவேண்டிய பங்கை, உன் மூத்த சகோதரிகளே எடுத்து கொள்வார்கள்" என கூறிவிட்டான். பின்னொரு காலம், உண்மையான அன்பு எது என கண்டு, மன வேதனை அடைந்தான்.

இந்த இடத்திலே, மறுபடியும் முதல் பத்தியில் சொன்ன அந்த திரைபடத்தின் காதல் வசனங்களை நினைவுப்படுத்தி பார்ப்போம். எக்காலத்திலும் உண்மையை நேரடியாக உள்ளது உள்ளப்படி சொல்லும் போது, அது ஏற்று கொள்ளபடுவதில்லை. மாறாக, அதை மிகையாக சொல்லும் போதுதான் அது பாராட்டாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

சரி, இனி காதலர்களின் பிரச்சனைக்கு வருவோம். காதலி "என்னை ஏன் தேனே என்றும், மானே என்றும் அழைப்பதில்லை. நான் உனக்கு தேனில்லையா ?" என்று கேட்டபொழுது, காதலன் சொன்னான், "ஆம், நீ எனக்கு தேனில்லை. தேன் சுவையானதுதான். ஆனால், விரைவில் திகட்டிவிடும். ஆனால். நீ எனக்கு வாழ்க்கை முழுவதும் திகட்டாத இனிக்கும் தண்ணீரடி" என்று உரையாடல் முடிவுறும்.


தேன் என்பது சிறிது நேரத்தில் திகட்டி விடும், தண்ணீர்தான் காலம் முழுவதும் துணையிருக்கும் என்ற அந்த உரையாடலை, அந்த வசனத்தை எழுதியிருப்பவர் இயக்குனர் சீமான் அவர்கள்தான்.

ஆகவே, அன்பு என்பது மிகையல்ல. பாராட்டும் அல்ல. அது உண்மையானது மட்டுமே.




நன்றி :
நூல் : ஒன்றே சொல் ! நன்றே சொல் !
-- பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.

Tuesday, December 6, 2011

தகவல் களம் !

இப்போது தனியார் வானொலிகள் இந்தியாவில் அதிகமாக பெருகிவிட்டன. ஆனால், தனிநபருக்காக ஒரு வானொலி நிலையம் முதன் முதலில் 1935- ம் ஆண்டில் உருவானது. ஐதராபாத் மன்னர் நிஜாம்தான் தனக்கென்று ஒரு வானொலி நிலையத்தை உருவாக்கினார். அதன் பெயர் 'டெக்கான் ரேடியோ'.



கடுமையான தண்ணீர் பஞ்சம் நிகழும் காலத்திலும் வாழக் கூடிய உயிரினம் பல்லிதான். பிறப்பு முதல் இறப்புவரை தண்ணீர் அருந்தாத உயிரினம் பல்லி.



ஒ.கே என்ற சொல் முதலில் பிறந்தது அமெரிக்காவில்தான். 1828-ல் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ஆண்ட்ரூ ஜாக்சன்தான் தன்னுடைய பிரச்சாரத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தினார்.



கன்னிமாரா நூலகத்தை 1890 - ம் ஆண்டு கன்னிமாரா
(The Lord Connemara) பிரபுவால் தொடங்கப்பட்டது.



மார்லின் மன்ரோவின் இயற்பெயர் நார்மா ஜீன்பேக்கர் (Norma Jeane Baker)





தகவல் :

வித்யுத்,
ராஜசேகர் - செய்யாறு,
ஜெயலட்சுமி - சென்னை.

தகவல் துளி !


உலகின் தூய நீரில் 70 சதவிகிதம் அண்டார்டிகாவில்தான் உள்ளது.



இங்கிலாந்து நூலங்களில் இருந்து அதிகமாக திருடப்பட்ட புத்தகம் என்று கின்னஸ் புத்தகத்திற்கு ஒரு சாதனை உண்டு.



பட்டம்தான் உலகின் மிகவும் பழமையான பறக்கும் இயந்திரம்.



வாகன புகை சூழ்ந்த பெரு நகரங்களில் ஒரு மரத்தின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் மட்டுமே.



தகவல் : முத்தாரம் இதழ்

Monday, December 5, 2011

கண்ணசைவில் ஒரு புத்தகம் !

ஜான் டொமினிக் பாபி (Jean-Dominique Bauby) என்று ஒரு எழுத்தாளர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். அதனால் கைகளும், கால்களும் செயலிழந்து விட்டன. பேசவும் முடியாது. தனது நெருங்கிய உதவியாளரின் உதவியுடன் அவர் ஒரு புத்தகத்தை எழுதினார்.

எப்படி ?

கண்ணசைவால், உதவியாளருக்கு ஒவ்வொரு எழுத்து, வார்த்தை, வாக்கியத்தையும் புரிய வைத்தார். உதவியாளர் தவறாக புரிந்து கொண்டால், கண்களாலேயே மறுத்து, சரியான பொருளைப் புரிய வைத்தார். இப்படி அவர் எழுதிய புத்தகம் ' த டைவிங் பெல் அண்ட் த பட்டர்ஃப்ளை' (The Diving Bell and the Butterfly).



டொமினிக் இறப்பதற்கு முன், 1996 - ம் ஆண்டு இந்த புத்தகம் வெளியாகி, மிக அதிகம் விற்பனையான புத்தகங்களின் பட்டியலில் இடம் பெற்றது.



ஜான் டொமினிக் பாபி



தகவல் : வித்யுத்.