Monday, January 16, 2012

தகவல் களம் !


மஞ்சள் தூளை நீரில் கரைத்திருப்பது போல இருக்கும் இது ஒரு உயிரி ! இதன் பெயர் 'அமீபாய்ட்'(Amoeboid). இதனை ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ (Hakodate) தீவில் உள்ள ப்யூசர் பலகலைக்கழகத்தில் வைத்து ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த வித்தியாசமான உயிரிக்கு மூளை கிடையாது. இவை அழுகிய இலையை உணவாக உண்டு வாழ்வதாகக் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.



உலகிலேயே மிக வேகமாகப் பீய்ச்சி அடிக்கும் வென்னீர் ஊற்று 'ஓல்ட் பெய்த்பூல்' (Old Faithful Geyser). இது அமெரிக்காவில் எல்பின்ஸ்டன் தேசிய பூங்காவில் உள்ளது. இது 64 நிமிடத்திற்கு ஒரு முறை 140 அடி உயரத்திற்கு வென்னீர் ஊற்றை உயர எழுப்பி பீய்ச்சியடிக்கிறது.



கீரிப்பிள்ளையின் மேல் தோலில் அடர்ந்து வளர்ந்துள்ள மயிர்க்கற்றைகளைத் தாண்டி பாம்பின் விஷம் ஏறுவதில்லை. அதனால்தான், பாம்பு எத்தனை முறை ஆவேசத்துடன் சீறிப் பாய்ந்து கொத்தினாலும் கீரிப்பிள்ளை இறப்பதில்லை.



கடலில் வாழும் பாசிகளில் சில வகைகள் உணவாகப் பயன்படுகின்றன. ஜப்பானில் கடல் பாசிகளை வளர்க்கும் தொழிலில் பலர் ஈடுபட்டு உள்ளனர். ஜப்பானில் ஆண்டு தோறும் உற்பத்தியாகும் பாசி உணவின் மதிப்பு சுமார் 30 லட்சம் டாலர்.



தகவல் : ஷம்ரிதி, கே.ஜெயலட்சுமி.

Friday, January 13, 2012

சிங்களனும், வட இந்தியனும் அந்நியர்தான் !


மீனவர் பிரச்னை என்பது கடலும் கடல் சார்ந்ததுமாகப் பார்க்கப்படாமல், நாடும் நாடுகள் கடந்துமாகப் பார்க்கப்படுகிறது. எனவேதான் அது தீர்க்க முடியாத சிக்கலாகவும் இருக்கிறது. மொழியால், இனத்தால், நிலப்பரப்பால் வேறுபட்டு இருந்தாலும், இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களும் அடிப்படையில் மீனவர்கள்தான். அவர்களுக்குக் கடல் பற்றி புரிதல் உண்டு. மீன் பிடித் தொழிலில் உள்ள நுட்பங்கள், கஷ்ட-நஷ்டங்கள் குறித்த அறிதல் உண்டு.

கச்சதீவு அந்தோணியார் கோயில் திருவிழாவில் தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் கட்டித் தழுவி அன்பு பாராட்டும் காட்சிகளைக் காணலாம். ஆனால், இந்த மீனவர்களின் வாழ்க்கையையே அறியாத சிங்கள கடற்படை, இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள், இருநாட்டு அரசுகள்தான் பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறார்கள். வடமேற்கு இலங்கைக்கும், கச்சத்தீவுக்கும் இடைப்பட்ட பூங்கொடித்தீவு, நெடுந்தீவு போன்ற பகுதிகள்தான் மீன்வளம் அதிகம். தமிழகக் கடல் எல்லைக்குள் நீர்ப்பரப்பு உண்டே தவிர, மீன் வளம் இல்லை. மீன் பிடிக்க வேண்டும் என்றால் கச்சத் தீவைத் தாண்டுவதைத் தவிர தமிழக மீனவர்களுக்கு வேறு வழி இல்லை.


இந்தியக் கடற்படை

கடல் பரப்பை எல்லை போட்டுப் பிரிப்பதை விட, மீன் வளத்தை எப்படி இருநாட்டு மீனவர்களும் பங்கிட்டுக்கொள்வது என்பதுதான் முக்கியம். ராமேஸ்வரத்தில் நாட்டு படகு மீனவர்களுக்கும், விசைப் படகு மீனவர்களுக்கும் இடையில் எந்தெந்த நாட்களில் மீன் பிடிக்க செல்லலாம் என்ற ஒப்பந்தம் இருக்கிறது. அதைப் போல இலங்கை மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையில் புரிதலும் ஒப்பந்தமும் ஏற்பட வேண்டியது அவசியம். ஆனால், விடுதலைப் புலிகள் இருந்த காலம் வரை, தமிழக மீனவர்களைக் கடற் புலிகளாகவே கருதி தாக்குதல் தொடுத்தது இலங்கை அரசு. இப்போது புலிகள் இல்லாத காலத்திலும் அவர்களுக்கு புலி அச்சம் போகவில்லை. பிழைப்புக்காக கடலில் படகெடுத்து செல்லும் அப்பாவிகளைக் கண்மூடித்தனமாகத் தாக்குவதும், சுட்டுத்தள்ளுவதும், எந்த தார்மீக நெறிகளிலும் சேர்த்தி இல்லை. மீன் என்பது எப்போதும் வலையில் விழாது. இரவில் வலை போட்டு கண் அசந்துவிடுவார்கள் மீனவர்கள். காலையில் படகு இந்திய எல்லையைத் தாண்டி விடும். படகு திசைமாறிப் போவது என்பது காற்று, தட்பவெப்ப நிலை, நீரோட்டங்கள் எல்லாவற்றையும் பொறுத்தது. இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஒருவர் மீனவர் வாழ்கையைப் பற்றி புரிந்தவராக இருக்க வேண்டும் என்பதைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.


சிங்களக் கடற்படை


ஆனால், இதையெல்லாம் புரிந்து கொள்ளதவர்கள்தான் அதிகாரிகளாகவும், அரசியல்வாதிகளாகவும் இருக்கிறார்கள். ஏதோ சிங்கள கடற்படை மட்டும்தான் அநியாயம் செய்கிறது என்று இல்லை, இந்தியக் கடற்படை செய்யும் அட்டூழியம் அதைவிட அதிகம். கொலை செய்வது இல்லையே தவிர, மீனவர்களைத் தாக்குவது, மீன் பிடிப் பொருட்களைச் சேதப்படுத்துவது என எல்லா அட்டூழியங்களையும் இந்தியக் கடற்படை செய்கிறது. ஒரு தமிழக மீனவருக்கு எப்படி சிங்களம் பேசும் இலங்கைக் கடற்படை அதிகாரி அந்நியரோ, அதே போலத் தமிழ் தெரியாத வட மாநில இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரியும் அந்நியராகத்தான் இருக்கிறார்.


சமீபத்தில் கச்சதீவைச் சுற்றிலும் எண்ணெய் வளங்கள் இருப்பதாகக் கண்டுபிடித்து உள்ளனர். ஏற்கனவே எண்ணெய் அரசியலால் அரபுலகு நாடுகள் என்னென்ன பிரச்சனைகளைச் சந்திக்கின்றன என்பது நமக்குத் தெரியும். கச்சத்தீவிலும் அப்படி ஒரு ஆதிக்கப் போட்டி வரும். அந்தப் போட்டி எத்தகைய அழிவைக் கொடுக்கப்போகிறதோ தெரியவில்லை. அதற்கு முன், தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், இந்திய அரசு, இலங்கை அரசு என நான்கு தரப்பினரும் அமர்ந்து பேசி பரஸ்பரப் புரிதலுக்கு வருவதுதான் ஒரே தீர்வு !



நன்றி : எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ். - விகடன்.


எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் கடலைப் பற்றியும், கடல் சார் மக்களான மீனவர்களைப் பற்றியும் எழுதிய மிகச் சிறந்த புத்தகம் "ஆழி சூழ் உலகு".

Thursday, January 12, 2012

படம் சொல்லும் சேதி


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சின் நதியில் நடைபெற்ற நீச்சல் போட்டிதான் இது. அதில் பங்குபெற்ற வீரர்கள் ஒருசேர நேர்த்தியாக இலக்கை நோக்கி நீச்சல் அடிக்கும் காட்சி.



அச்சுறுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இது இரும்பு கொரில்லா. பிரிட்டிஷ் கலைஞர் டேவிட் மேக், இரும்பு உள்ளிட்ட உலோக கலவையால் இதை உருவாக்கி பிரிட்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகங்களில் வைத்துள்ளார்.



சீனாவின் புத்தாண்டு எப்போது விளக்குத் திருவிழாவுடன் தொடங்கும். இந்த ஆண்டு ஜனவரி 23 - ல் தொடங்க உள்ள புத்தாண்டை ஒட்டி இப்போதே சீன நகரங்கள் களைக்கட்டத் துவங்கிவிட்டன.அன்ஹுய் மாகாணத்தில் நடைபெற்ற விளக்குத் திருவிழாவில் பாரம்பரிய அரண்மனையை தத்ரூபமாக விளக்கில் ஒளிரவைத்து அசத்தியிருக்கிறார்கள் சீனர்கள்.



தகவல் : முத்தாரம் இதழ்

Wednesday, January 11, 2012

தற்காலிகமாக ஒரு நிலா !


பூமியை 2006-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை தற்காலிகமாக ஒரு நிலா சுற்றி வந்திருப்பதை தற்போது கண்டுபிடித்து உள்ளனர் விஞ்ஞானிகள்.

2006-ம் ஆண்டில் ஒரு மீட்டர் நீளம் கொண்ட ஒரு விண்கல் (குறுங்கோள்) பூமியைச் சுற்றி வந்தது. தொடக்கத்தில் இது ஏதாவது ஒரு ராக்கெட்டின் சிதைந்த பாகமாக இருக்கும் என்றே விஞ்ஞானிகள் கருதினர். ஆனால், அதை தெளிவாக ஆராய்ந்திருக்கிறார்கள். அப்போதுதான் அது ஒரு விண்கல் என்பதே தெரிய வந்தது.

பூமியின் ஈர்ப்பு விசையால் தற்காலிகமாக இழுக்கப்பட்டு, பூமியின் சுற்றுப் பாதைக்குள் வந்த விண்கல் சுமார் 2 ஆண்டுகள் சுற்றிவிட்டுச் சென்றுள்ளது.



இது குறித்து ஆய்வு நடத்திய அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள கார்ன்வெல் பல்கலைக்கழகத்தின் விண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் "இது போல எத்தனையோ விண்கற்கள் பூமியைச் சுற்றி வருவதாகவும், பூமிக்கு ஒரே ஒரு துணைக் கோள் (நிலா) தான் என்று சொல்வது தவறு என்றும், இப்படி பூமியைச் சுற்றி வரும் தற்காலிகமான நிலாக்கள் விண்ணில் நிறைய இருப்பதாகவும்" தெரிவித்திருக்கிறார்கள்.



தகவல் : டி. கார்த்திக்.

Tuesday, January 10, 2012

தகவல் துளி !


கம்பி வடத் தொலைக்காட்சிச் சேவை (Cable Tv) அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இந்திய மாநிலம் மிசோரம்.



இந்தியாவின் முதல் மின்சார புகைவண்டியின் பெயர் 'டெக்கன் குயின்' (Deccan Queen).



தமிழ்த் தாய் வாழ்த்து மோகன ராகத்தில் பாடப்படுகிறது.





தகவல் : சி.பரத்.

Sunday, January 8, 2012

தகவல் களம் !

சுத்தம் சோறு போடும்


அமெரிக்காவில் பொதுவாக திங்கட் கிழமையை 'ப்ளூ மன்டே' (Blue Monday) என்றழைக்கிறார்கள். அன்று தம் வீட்டை சுத்தம் செய்யும் நாளாகத் தேர்ந்தெடுக்கிறாகள். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அமைந்து விடுவதால், அந்தக் களேபரங்களை சுத்தம் செய்ய அடுத்த நாளான திங்கட் கிழமைதான் அவர்களுக்கு சரிப்படுகிறது.


ஊரும் அதன் வரலாறும்


தமிழ்நாட்டில் சில ஊர்களின் பெயர்கள் காரணப் பெயர்களாகவே இருக்கும். ஒரு உதராணம் : திருவையாறு. திரு என்ற சிறப்பு அடைமொழி சேர்க்கப்பட்டதால் திருஐஆறு. அதாவது திருவையாறு. அந்த ஆறுகள் : காவேரி, குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு.


தொல்லைக்காட்சி

தொலைக்காட்சி ஒளிப்பரப்பின் போது கூர்ந்து கவனித்தால் கோடு போன்று பிரிவது தெரியும். உண்மையிலேயே ஒரு படத்தை பல கோடுகளாகப் பிரித்துத்தான் ஒளிப்பரப்புகிறார்கள். இது நாட்டுக்கு நாடு வேறுபடும். நம் நாட்டில் ஒரு படத்தை 625 கோடுகளாகவும், பிரான்சில் 819 கோடுகளாகவும், இங்கிலாந்தில் 405 கோடுகளாகவும் பிரித்து ஒளிப்பரப்புகிறார்கள்.


இரட்டை வேடம்



ஒரேயொரு இந்திய நகரம் தனி யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது சண்டிகருக்கு மட்டுமே கிடைத்திருக்கும் பெருமையாகும். இரண்டு மாநிலங்களுக்கு தலைநகர அந்தஸ்தும், தனி யூனியன் பிரதேச அந்தஸ்தும் கிடைக்க பெற்ற ஒரே இந்திய நகரமும் சண்டிகர் மட்டுமே.



தகவல் : வித்யுத், டி.கார்த்திக்.

Friday, January 6, 2012

அண்ணலும் - தந்தையும் !


நம்முடைய தலைமுறையிலே வாழ்ந்த, 20 -ஆம் நூற்றாண்டிலே நாம் அறிந்த மாமேதைகளில் ஒருவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். 1956-ஆம் ஆண்டு டிசம்பர் 6 - ந் தேதி அவர் மறைந்தார். அவர் மறைந்து அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது.

ஆனால், அவருடைய புகழும், அறிவு திறனும்,1990-க்குப் பிறகுதான் மிக அழுத்தமாக வெளிப்பட்டது என்று சொல்ல வேண்டும்.

1989-ல் அவருடைய நூற்றாண்டு வந்தது. அப்போதுதான் அவரைப் பற்றிய நூல்கள், விவாதங்கள் எல்லாம் அரங்கிற்கு வந்தன. அவர் காலம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காவே போராடி வாழ்ந்தார். தன்னுடைய தூக்கத்தைத் தொலைத்து தன் மக்களுக்காகப் படித்து வந்த ஒரு மாமேதை அவர்.

அவருடைய படிப்பு என்பது மிகவும் வியப்புக்குரியது. படிப்பிலே அப்படி என்ன வியப்பு என்று கேட்டால், படிக்கவே கூடாது அல்லது படிப்பை பற்றி நினைக்கவே கூடாது என்று ஒடுக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்த ஒரு வைரம் அவர். உலகமே வியக்கும் அளவிற்கு படித்து முடித்திருக்கிறார் என்றால் அந்த படிப்புப் வியப்புக்குரியதுதானே.


வெளிநாட்டிருக்கு போய் திரும்புகிற போது, கப்பலில் பெட்டி பெட்டியாக அவருக்கு பின்னால் அவர் வாங்கி வந்த பொருட்கள் இறங்கின. எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். இத்தனை பெட்டிகளா ? என்னென்ன பொருட்களையெல்லாம் வாங்கி வந்திருப்பார் என்று பார்த்தால், ஒரு பெட்டியில் அவருடைய துணிகள் இருந்தன. அந்த ஒரு பெட்டியை தவிர மற்ற அத்தனை பெட்டிகளும் புத்தகங்களாகவே இருந்தன என்பது நமக்கு இப்போதும் ஒரு வியப்பை ஏற்படுத்துகிறது.

லண்டனில் இருக்கிற நூலகத்தில் மிகுதியாகப் படித்தவர்கள், மிகுதியான நேரத்தைச் செலவிட்டவர்கள் என்று இரண்டு பேரைத்தான் சொல்கிறார்கள். ஒருவர் கார்ல் மார்க்ஸ், இன்னொருவர் அம்பேத்கர். உலகமே வியக்கிற அளவிற்கு ஏராளமாகப் படித்த பெருமகன் அவர்.

சாதி ஒழிப்பு (Anihilation of Caste) என்று அவர் எழுதியிருக்கிற அந்த புத்தகம் இன்றைக்கும் கூட பல்வேறு சிந்தனைகளை, அழுத்தமான எண்ணங்களை நம்மிடத்திலே உருவாக்குகிறது. சாதியைப் பற்றிய மிக விரிவான ஆய்வை அவர்தான் மேற்கொண்டார். அதைத் தந்தை பெரியார் அவர்கள்தான் சாதி ஒழிப்பு என்கிற பெயரில் முதன் முதலாகப் தமிழில் மொழிப் பெயர்த்துக் குடியரசு பதிப்பகத்தின் மூலமாகத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அம்பேத்கரும், தந்தை பெரியாரும், காலம் முழுவதும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மதிப்புடையவர்களகாவும், ஒருவரையொருவர் பின்பற்றக் கூடியவர்களாகவும், பாராட்டக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். தந்தை பெரியார் யாரையும் தன்னுடைய தலைவர் என்று சொல்லவில்லை. நான்தான் தலைவர் என்று சொல்லுவார்.

ஆனால், அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்களே, 1967 - ஆவது ஆண்டு மயிலாடுதுறையிலே நடைப்பெற்ற ஒரு கூட்டத்திலே பேசுகிறபோது உங்களுக்கு மட்டுமல்ல... எனக்கும் அம்பேத்கர்தான் தலைவர் என்று சொன்னார். அந்த அளவுக்கு அம்பேத்கர் மீது ஆழ்ந்த மதிப்பு கொண்டவராகத் தந்தை பெரியார் திகழ்ந்தார்.


அதைப் போலவே மிசோராம் மாநிலத்திலே ஆளுநராக இருந்த பத்மநாபன் அவர்கள், தன்னுடைய நூலிலே ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறார் : 'அம்பேத்கரை 1944 -ஆவது ஆண்டு, சென்னைக்கு வந்திருந்தபோது, அன்று கல்லூரி மாணவராக இருந்த பத்மநாபன் உள்பட ஏராளமான இளைஞர்கள் சந்திக்கிறார்கள். நாங்கள் உங்களைப் பின்பற்றி இங்கே ஓர் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நீங்கள்தான் வழிகாட்டவேண்டும்' என்று கேட்ட போது அம்பேத்கர் சொன்னாராம் 'மற்ற மாநிலங்களில் எல்லாம் இளைஞர்கள் வருகிறபோது, அதை நான் ஏற்றுக் கொண்டு அவர்களை இயக்க நெறிகளிலே வழிப்படுத்துகிறேன். ஆனால், தமிழ்நாட்டிலே அதற்குத் தேவையில்லை.

ஏற்கனவே இங்கே இருக்கிற ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள், நான் என்ன காரியங்களையெல்லாம் செய்து கொண்டு இருக்கிறேனோ, எதை சொல்கிறேனோ, அதைதான் அவரும் செய்து கொண்டு இருக்கிறார். எனவே நீங்கள் என்னைத் தேடி வர வேண்டியது இல்லை. ராமசாமி நாயக்கரைப் பின்பற்றினாலே போதும் என்று சொன்னார் என்று பத்மநாபன் தன்னுடயை நூலிலே குறிப்பிடுகிறார்.

எனவே இரண்டு பெரும் ஒருவரையொருவர் பின்பற்றுவதற்கு காரணம் வேறு ஒன்றுமில்லை. இரண்டுபேருமே சமூக நீதிப் போராளிகளாக இருந்தார்கள் என்பதுதான். ஒரு சமூகம் ஏற்றத்தாழ்வு உள்ளச் சமூகமாக இருக்கிறது. அது தமிழ்ச் சமூகமாக இருந்தாலும் சரி, இந்தியச் சமூகமாக இருந்தாலும் சரி, இன்றைக்கு இந்த சமூகம் ஒரு சாதியச் சமூகமாக இருக்கிறது. சாதியம் என்றால் ஏற்றத்தாழ்வுகளைத் தன்னோடு வைத்திருகிறது என்று பொருள். அதுதான் சாதி.


ஏற்றத்தாழ்வுகளை நீக்கிச் சமப்படுத்துவது என்பதுதான், இந்த சமூகத்தைச் சமப்படுத்துகிற முயற்சிதான் சமூக நீதி. அந்த சமூக நீதிக்காகத்தான் தங்கள் வாழ்நாள் முழுவதையும் பெரியாரும், அம்பேத்கரும் கழித்தார்கள் என்று சொல்லவேண்டும்.

ஒருமுறை அம்பேத்கர் வீட்டிலே முகச்சவரம் செய்து கொண்டிருந்தபோது, அருகில் நின்று கொண்டிருந்த ஒரு நண்பர், அண்ணலைப் பார்த்து கேட்கிறார். 'மிக மென்மையான் மனிதர் நீங்கள், மிகுந்த அறிவாளி நீங்கள். ஆனால், சில இடங்களில், சில ஆதிக்கக் கோட்பாடுகளை, ஆதிக்கப் பிரிவினரை எதிர்த்துப் பேசுகிறபோது, மிகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறீர்களே ? என்ன காரணம்' என்று கேட்ட போது, அம்பேத்கர் சொன்னார் :

'சில வேளைகளில் நாம் எந்த ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டுமோ, அதைத்தான் பயன்படுத்த வேண்டும். எனது முகத்தில் இருக்கிற முடியை மழிப்பதற்க்கு இந்தக் கத்தி போதுமானதாக இருக்கிறது என்ற காரணத்தினாலே, நாளைக்கு என் தோட்டத்திலே ஒரு நச்சு மரம் வளருமானால், அதை இந்தக் கத்தியை வைத்துக் கொண்டே சாய்த்து விடலாம் என்று கருத முடியுமா ? அதைக் கோடாரியைக் கொண்டுதான் வெட்ட முடியும். எனவே இதற்கு இது போதும். அதற்கு அது வேண்டும்.

சில நேரங்களில் அழுத்தமாக வேரூன்றியிருக்கிற ஆதிக்க குணங்களை அகற்ற வேண்டும் என்று கருதுகிற போது, நான் மிகக் கடுமையான சொற்களைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது' என்று சொன்னார் அம்பேத்கர். ஆகையால், அவர் சில இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்களிடத்திலே மென்மையாகவும், ஆதிக்க சக்தியிடத்திலே மிக வன்மையானவராக இருந்தார்.


அவர் ஒருமுறை இரவெல்லாம் விழித்து எழுதிக் கொண்டிருக்கிறபோது, செய்தியாளர்கள் அவரைப் பார்த்துக் கேட்கிறார்கள். காந்தியடிகளை நாங்கள் பார்க்க சென்றிருந்தோம். அவரும் கடுமையாக உழைக்ககூடிய மனிதர். ஆனால், அவர் கூட இந்த நேரத்திலே உறங்கி விட்டார். நீங்கள் இன்னமும் விழித்து எழுதிக் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டபோது அம்பேத்கர் சொன்னார் :

'அது ஒன்றும் பிழை இல்லை,அவருடைய மக்கள் எல்லாம் விழித்துக் கொண்டிருக்கிறார்கள், எனவே அவர் உறங்கலாம். என்னுடைய மக்கள் எல்லாம் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே நான் விழித்திருக்க வேண்டியிருக்கிறது' என்று சொன்னார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள், இந்தியாவின் மிகப் பெரிய பொறுப்புகளையெல்லாம் வகித்தவர். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவினுடைய தலைவர். ஆனால், அம்பேத்கரின் பெருமை அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் இல்லை. இந்த சாதிய சமூக அமைப்பை எதிர்த்துப் போராடிச் சமூகத்தை சமதளத்திலே கொண்டுவர முயற்சித்த அந்தச் சமூக நீதிப் போராட்டத்திலேதானிருக்கிறது.



நூல்:

ஒன்றே சொல், நன்றே சொல்.
ஆசிரியர் சுப.வீரபாண்டியன்.