Monday, April 16, 2012

தூங்க வைக்கும் தொலைபேசி !


தூங்கியே காலத்தைக் கழிக்கும் சோம்பேறிகள் ஒருபுறம் இருக்க, தூக்கமே வராமல் துன்பப்பட்டுக்கொண்டு தூக்க மாத்திரைகளை நாடும் துக்கமான நோயாளிகளும் இன்னொரு பக்கம் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நோயாளிகள் 'இன்சோம்னியாக்கள்' (insomniacs) எனப்படுகிறார்கள்.

தூக்கம் வராமல் இந்நோயால் பரிதவிப்பவர்களுக்காவே நியூயார்க்கில் இயங்குகிறது ஸ்லீப் லைன் சேவை. அதாவது, ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமாகவே நம்மைத் தூங்க வைக்கும் தூக்க சேவை. "ஆம், தொலைபேசியில் இந்த ஸ்லீப் லைனைத் தொடர்பு கொண்டால் போதும்.... எப்பேர்ப்பட்ட ஆளையும் நாங்கள் பேசியே தூங்க வைத்துவிடுவோம்" என்று சவால் விடுகிறது இந்த சேவை அமைப்பு.

முதன் முதலில் இந்தப் பேச்சு - ஹிப்னாட்டிச முறையை அறிமுகப்படுத்தியவர் டான் டக்லஸ் (Don Douglas) என்ற நரம்பியல் மற்றும் மனநோய் மருத்துவர்தான். தூக்கத்தைத் தூண்டும் விதமாக இவர் பேசிய 8 நிமிட உரையைத்தான் இந்த ஸ்லீப் லைன் சேவையிலும் ஓட விடுகிறார்கள். அந்தக் குரல் செய்யும் மாயாஜாலமோ, அல்லது பேசும் விஷயம் அவ்வளவு மொக்கையோ தெரியவில்லை..... இந்த சேவையைத் தொடர்பு கொள்பவர்களில் பெரும்பாலனவர்கள் நல்ல தூக்கத்தைப் பெற்று விடுகிறார்களாம்.



முதலில் தூங்க வசதியான, பிடித்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. இவை சிகிச்சையின் முதல் படிகள். சிகிச்சையின் போது தொலைபேசிக் குரலின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வரும். கடைசியாக அந்தக் குரல் பேசி முடிப்பதற்குள் மறுமுனை 'கொர்ர்....கொர்ர்'தான்!

"ஏராளமான பக்க விளைவுகள் கொண்ட தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்துவது இதனால் வெகுவாகக் குறைந்த்திருக்கிறது" என்கிறது இந்தச் சேவையை நடத்திவரும் "லென்னாக்ஸ் ஹில்' மருத்துவமனை.

ஸ்லீப் லைன் பெற்று வரும் வெற்றியின் விளைவாக, விரைவில் நீரிழிவு நோய்க்கு ஒரு ஹெல்ப் லைன், காச நோய்க்கு ஒரு ஹெல்ப் லைன் என்று இவர்கள் கொண்டு வரவிருக்கிறார்கலாம். இந்த இரண்டு நோய்களுக்கும் பேச்சால் தீர்வு தர முடியாது என்றாலும், சிகிச்சை தொடர்பான பயனுள்ள ஆலோசனைகளை தொலைபேசியில் வழங்குவார்கள்.






தகவல்: ஆர்.ஆர்.பூபதி.

Sunday, April 15, 2012

உலகின் மிக விலையுர்ந்த ஓவியங்கள் !


"மோனலிசா"

இன்றுவரை விலை மதிப்பிடமுடியாத இடத்தில் இருப்பது மோனலிசாதான். இத்தாலிய எழுச்சியின்போது, பிரபல இத்தாலிய ஓவியர் லியனார்டோ டா வின்சி இதை வரைந்தார். இப்போது பிரான்ஸ் நாட்டின் லாவ்ரே அருங்காட்சியகத்தில் பொக்கிஷமாக மாட்டி பாதுகாக்கப்படும் மோனலிசா ஓவியத்தை இன்சூரன்ஸ் செய்வதற்காக 1962-ம் ஆண்டு மதிப்பிட்டார்கள். அப்போது,'460 கோடி ரூபாய் பெரும்' என கணக்கிட்டார்கள். ஐம்பது ஆண்டுகள் கழித்து இன்றைய கணக்கில் மதிப்பிட்டால், இது சுமார் 3220 கோடி ரூபாய் ! இந்த விலையிலும் இதனை வாங்கி தங்கள் சொந்தமாக்கிக் கொள்ள உலகின் பெரும் பணக்காரர்கள் தயார். ஆனால், பிரெஞ்சு அரசுதான் விற்க தயாராக இல்லை.




"தி கார்டு பிளேயர்ஸ்'

"தி கார்டு பிளேயர்ஸ்' இதுவரை ஏலங்களிலும் தனிப்பட்ட முறையிலும் உலகெங்கும் விற்கப்பட்ட ஓவியங்களிலேயே மிக அதிக விலைக்கு விற்பனையாகி சரித்திரம் படைத்தது. இரண்டு பேர் சீட்டாடும் காட்சியில் அப்படி என்ன ரசனைக்குரிய அம்சம் இருக்கிறதோ தெரியவில்லை.... இதேபோல பல ஓவியங்களை வரைந்திருக்கிறார் பிரெஞ்சு ஓவியர் பால் செழான். அதில் 1892-ம் ஆண்டு வரைந்த இந்தக் குறிப்பிட்ட ஓவியத்தை கடந்த ஆண்டு கத்தார் குடும்பம் விலைக்கு வாங்கியது. பொது ஏலத்தில் இல்லாமல் தனிப்பட்ட முறையில் வாங்கியது என்பதால் சரியான விலையை அவர்கள் சொல்லவில்லை. என்றாலும், கிட்டத்தட்ட 1250 கோடி ரூபாய் கொடுத்து அவர்கள் வாங்கியதாகத் தகவல்.



"நம்பர் 5 1948"

அமெரிக்க ஓவியர் ஜாக்ஸன் போல்லாக் வரைந்த 'நம்பர் 5 1948' என்ற ஓவியம் விற்பனை சாதனையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. நவீன ஓவியங்களுக்கு முன் மாதிரியாகக் கருதப்படும் இது 1948-ம் ஆண்டு வரையப்பட்டது. கோடுகளும் வண்ணங்களும் தாண்டி இதில் என்ன உருவம் இருக்கிறது என்பது சாதாரணர் கணகளுக்குப் புலப்படாது. கடந்த 2006-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஏலத்தில் இந்த ஓவியம் 700 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.



"வுமன் 3"

நெதர்லாந்தில் பிறந்து அமெரிக்காவில் வசித்த வில்லெம் டி கூனிங் என்ற ஓவியர் வரைந்த ஓவியம் வுமன் 3 என்ற ஓவியம் இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. பெண்களை மையக் கருவாக வைத்து இவர் வரைந்த ஆறு ஓவியங்களில் இதுவம் ஒன்று. 1953-ம் ஆண்டு வரையப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு இது 681 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.




'அடேல் ஃபிளாச் பாயர்-1

இந்த பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்திருக்கும் ஓவியம் 'அடேல் ஃபிளாச் பாயர்-1 ஹஸ்டவ் கிலிமிட் என்ற ஓவியர் 1907-ம் ஆண்டு வரைந்து முடித்த ஓவியம் இது. முழு வேலைப்பாடுகளுடன் கூடிய மங்கையை சித்தரித்து முடிக்க, 3 வருடங்கள் ஆனதாம் அவருக்கு. நியூயார்க் நகரில் உள்ள நியூ கேலரிக்காக, ரோஸ்ட் லாடர் என்பவர் 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த ஓவியத்தை 621 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கினார்.







தகவல்: ராஜிராதா.

Friday, April 13, 2012

அறிவுலக நாயகன் அம்பேத்கர்.



சிறு சம்பவம்...

காலையில் மழை சோவென கொட்டத்துவங்கியது. சதாராவின் வீதியில் பள்ளிக்குப் புறப்படும் தருவாயில் இருந்த சிறுவர்கள் ஐந்தாறு பேர் மழையையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இதை சாக்காக வைத்துக் கொண்டு இன்று பள்ளிக்கு எப்படியும் மட்டம் போட்டுவிடுவது என்பது அவர்களுடைய திட்டம். அவர்களுள் ஒருவனாக நின்ற பீமின் மனதிலோ வேறு எண்ணம்.(பீமாராவ் சக்பால் அம்பேத்கரின் இயற்பெயர்)

என்னதான் மழை விடாமல் பெய்தாலும் இன்று எப்படியும் பள்ளிக்குச் செல்வது என அவன் முடிவெடுத்திருந்தான். இதைக் கேட்ட மற்ற சிறுவர்கள் பீமைக் கேலி செய்தனர். "உன்னால் இந்த அடை மழையில் பள்ளிக்குச் செல்லமுடியுமா ?" எனச் சவால் விட்டனர்.

அடுத்த நொடியே எதையும் பொருட்படுத்தாமல் பீம் தெருவில் இறங்கி நடக்கத் துவங்கினான். எப்படியெல்லாம் தன் புத்தக பையை ஈரம் படாமல் பாதுகாக்க முடியோமோ, அதற்கான முயற்சிகள் அத்தனையும் மேற்கொண்டபடி, பள்ளியை நோக்கி விறுவிறுவென நடந்துச் சென்றான்.

ஓரிடத்தில் மழை மிகக் கடுமையாகக் கொட்டத் துவங்க, அருகிலிருந்த வீடொன்றில் அவன் ஒதுங்கி நின்ற சமயம், வீட்டிலிருந்து வெளியே வந்த ஒரு பெண்மணி கோபத்துடன் பீமைப் பார்த்தாள். அடுத்த நொடி பீம் தெருவில் விழுந்து கிடந்தான். அவன் பிடித்திருந்த புத்தக பையினுள் இப்போது நீர் முழுவதுமாகப் புகுந்திருந்தது. எழுந்து நின்றான்.

அவனுக்கு எதிரே இன்னமும் அந்தப் பெண்மணி ஆவேசத்துடன் நின்றுகொண்டு இருந்தாள். "நீ ஒரு மகர். (மகர் என்பது தாழ்த்தப்பட்டச் சாதிகளுள் ஒன்று ). என்ன தைரியம் இருந்தால் வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பாய்?" என இரைந்தாள்.

அந்த கொட்டும் மழை ஈரத்தையும் மீறி, தீண்டாமை எனும் கொடிய நெருப்பு சிறுவன் பீமின் இதயத்தை எரித்தது. தனது குழந்தைகளை எந்தப் பேய் நெருங்கிவிடக் கூடாது என்று கிராமத்தில் இருந்து ராம்ஜி சக்பால் (அம்பேத்கரின் தந்தை) நகரத்துக்கு அழைத்து வந்தாரோ, அங்கேயும் அது வெவ்வேறுவிதமான ரூபங்களில் தன் குழந்தைகளைப் பயமுறுத்துவதைக் கண்டு அவர் மிகுந்த வேதனை கொண்டார்.

பீம் வளர்ந்து பெரியவன் ஆனான்.ஆரம்பக் கல்வி முடிந்து, உயர்நிலைக் கல்வியில் சேரும் நேரமும் வந்ததது. பள்ளியில் தனது மகனைச் சேர்க்கச் சென்றபோது, இம்முறை ராம்ஜி கூடுதல் கவனத்துடன் புதிய பள்ளியின் சாதியத் தொந்தரவுகளிலிருந்து மகனைப் பாதுகாக்க ஒரு புதிய உத்தியைக் கையாண்டார்.

அதன்படி பீம் எனும் அவன் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் பட்டப் பெயரான சக்பாலை எடுத்துவிட்டு, பீமின் மேல் பற்று வைத்திருந்த ஆசிரியர் ஒருவரின் பெயரைச் சேர்க்க முடிவு செய்தார். அந்தப் பெயர்தான் அம்பேத்கர். இன்று இந்தியாவின் ஒவ்வொரு கடைசி மனிதனுக்கும் வாழ்வதற்கான நம்பிக்கையையும், போராடுவதற்கான வலிமையையும் ஊட்டும் பெயராக விளங்கிவரும் அந்தப் பெயர் உருவாக்கம் பெற்றது இப்படித்தான். பீமாராவ் சக்பால் என்று அழைக்கப்பட்ட அந்த சிறுவன், அன்றுமுதல் பீமாராவ் அம்பேத்கராக மாறினான்.


ராம்ஜி சக்பாலுக்கு இச்சமயத்தில் மகாராஷ்டிரத்தில் காரேகான் எனும் இடத்தில் காசாளர் வேலை கிடைத்தது. எனவே அவர், தன் பிள்ளைகளை அவர்களின் அத்தையின் பொறுப்பில் விட்டுவிட்டு அங்கே சென்றுவிட்டார். விடுமுறை நாளின்போது அம்பேத்கர், அவரின் சகோதரன் மற்றும் அக்காள் மகன் ஆகிய மூவரும் தங்கள் தந்தையைச் சந்திக்கவேண்டி, காரேகானுக்கு ரயிலில் புறப்பட்டு மசூர் ரயில் நிலையத்தை அடைந்தனர்.

அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. குறித்த நேரத்தில், இவர்கள் வரும் தவகல் கிடைக்காத காரணத்தாலோ என்னவோ, இவர்களை அழைத்துப்போக ரயில் நிலையத்துக்குத் தந்தை வரவில்லை. மூவரும் வாடகைக்கு ஒரு மாட்டு வண்டியைப் பிடித்து காரேகான் செல்லத் தயாராயினர். பாதித் தொலைவு சென்றிருப்பார்கள்... வண்டிக்காரனுக்கு தான் மகர் இனச் சிறுவர்களை ஏற்றிச் செல்கிறோம் என்பது தெரியவர, சட்டென ஆத்திரப்பட்டவன் அப்படியே அந்த வண்டியைக் குடை சாய்த்து, மூன்று சிறுவர்களையும் கீழே உருண்டு விழச் செய்தான். அதன்பிறகு மிகுந்த சிரமத்துக்கிடையே மூவரும் தட்டுத்தடுமாறி, ஒருவழியாகக் காரேகானுக்குச் சென்று சேர்ந்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாக மிகுதியால் ஒரு குளத்தில் இறங்கி நீர் குடிக்கச் சென்றபோது, ஊரார் ஒன்று சேர்ந்து துரத்தி அடித்த சம்பவம், சிகை திருத்தும் நிலையத்தில் முடி பாதி வெட்டப்பட்ட நிலையில் அரைகுறையாக இறக்கிவிடப்பட்டு அவமானத்தோடு வீடு வந்து சேர்ந்து, சகோதரிகளால் மீதமுள்ள முடி திருத்தப்பட்ட சம்பவம் எனச் சிறுவயதிலேயே தீண்டாமையின் கொடுமை வெந்தணல் கொப்புளங்களாக அவர் உள்ளத்தில் நீர் கட்டி நின்றன. கல்வி ஒன்றுதான் இவை அனைத்துக்கும் தீர்வு என்பதை நன்கு உணர்ந்துகொண்ட அம்பேத்கர், முன்னிலும் தீவிரமாகப் படிப்பில் நாட்டம் செலுத்தத் துவங்கினார்.

பள்ளியில் அம்பேத்கர் தனது ஆழ்ந்த படிப்பாலும், இனிமையான சுபாவத்தாலும், எதனையும் ஆய்ந்தறிந்து வெளிப்படுத்தும் நுண்ணறிவாலும் தனித்துவமான மாணவனாக விளங்கினார். என்றாலும், சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மூளையில் புற்றுநோயாக ஒட்டிக் கொண்டு இருந்த சாதியம் எனும் வெறி, அவரை மனதளவில் பள்ளியிலிருந்து விலகியிருக்கவே செய்தது.

இதனால், பள்ளிகாலங்களில் அம்பேத்காருக்குத் தோழர்கள் என யாரும் இல்லை. ஆனால், அந்தக் குறையைப் புத்தகங்கள் போக்கின. ஒரு நல்ல நூலைக் காட்டிலும் சிறந்த நட்பு வேறு எதுவாக இருந்துவிட முடியும்? சமயம் கிட்டும்போதெல்லாம் அந்த நண்பர்களுடன் தனது நேரத்தை முழுமையாகச் செலவிடுவார் அம்பேத்கர். மாலை நேரங்களில் அருகில் இருக்கும் பூங்காக்களுக்குச் சென்று, இந்த உலகத்தையும் மனிதர்களையும் வேடிக்கை பார்க்கத் துவங்குவார்.


இப்படிச் சிறு வயதிலேயே ஆழ்ந்த சிந்தனையும் தனிமையுமாகக் காணப்பட்ட அந்தச் சிறுவனை, அந்தச் சிறுவனை, அந்தப் பூங்காவுக்கு வழக்கமாக வரும் ஒரு நபர் நாள்தோறும் கவனிக்கத் துவங்கினார். அவர் பெயர் கிருஷ்ண அர்ச்சுன ராவ் கெலுஸ்கர். வில்சன் ஹைஸ்கூலின் தலைமை ஆசிரியரான அவர், அப்போதே இந்தச் சிறுவனிடம் அசாத்தியமானதொரு திறமை இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்.

அந்த வருட மெட்ரிகுலேஷன் தேர்வுகளின் முடிவுகள் வெளியானபோது, தாழ்த்தப்பட்ட மாணவர்களில் ஒருவன் முதல் முறையாக மெட்ரிக்கில் தேர்ச்சி பெற்றது மிக முக்கியமான செய்தியாக அங்கிருப்பவர்களால் பேசப்பட்டது. 'நமது சமூகத்தில் முதல் முறையாக ஒருவன் செய்திருக்கும் சாதனையை நாம் கொண்டாடவேண்டும்' என அந்த மக்கள் முடிவு செய்து, அதற்கென ஒரு விழாவை ஏற்பாடு செய்தார்கள். அந்த விழாவுக்கு அவர்கள் சிறப்பு விருந்தினராக ஒருவரை அழைத்தார்கள். அவர் கெலுஸ்கர். 'பூங்காவில் பார்த்து, எந்த மாணவனைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் கொண்டிருந்தோமோ, அதே மாணவனுக்குத்தான் நாம் பரிசளிக்கப் போகிறோம்' என்பதை அறிந்து, அந்த ஆசிரியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.


இனி....


சாதாரண ஒரு படைவீரனின் மகனாக, வரலாற்று வார்த்தைகளால் ஒடுக்கப்பட்ட குலத்தில் பிறந்து, இந்தியாவின் ஈடு இணையற்ற அறிஞராக, சாதி வெறியின் தலை மேல் சம்மட்டி அடிகொடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புது வெளிச்சம் தந்த புரட்சி வீரனாக மறைந்த அம்பேத்கரின் வாழ்வில் எதிர்கொண்ட வேதனைகளின் சரித்திரம் இனி வேறு எவராலும் நினைத்துப் பார்க்க முடியாதது.

சிறுவயதில், பள்ளியிலும் மழைக்கு ஒதுங்கிய வீட்டிலும் பட்ட அவமானங்களினால் அன்று மட்டும் முடங்கியிருந்தால் இன்றைய இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை எப்படியாக இருக்கும் என ஒருமுறை யோசித்துப் பாருங்கள். அன்று அவரை சுற்றிச் சூழ்ந்திருந்தது அடர் இருட்டு, கடைத்தேறவே வழியில்லாமல் சாதி வெறியர்களால் உருவாக்கப்பட்ட இருட்டு. அப்போது அவருக்கு முன் இருந்த ஒரே தூரத்து வெளிச்சம் கல்வி. கண்களை இறுக மூடி தளராத நெஞ்சுரத்துடன் அந்த வெளிச்சத்தை மட்டுமே பற்றுக்கோடாக்கி அவர் நடை பயின்றதன் பலன் இன்று லண்டன் மியூசத்தில் பெருமைப்படத்தக்க அறிஞர்களின் வரிசையில் கார்ல் மார்க்ஸுக்கு இணையான இடத்தில் அவரைப் புகைப்படமாக மாட்டப்படும் அளவுக்கு உயர்த்தியுள்ளது.

அரசியல், சமூகம், சட்டம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, வணிகம், கல்வி, சமயம் என சகல துறைகளிலும் அசாத்தியமான அறிவாற்றலும், எழுத்து வன்மையும், மேதமையும் கொண்டிருந்த இதுவரையிலான இந்தியாவின் ஒரே அறிவுலக நாயகன் அம்பேத்கர் மட்டுமே. அப்படிப்பட்ட மேதை வேறு எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் கணக்கில்லாத விருதுகளைத் தந்து அந்த நாட்டின் அரசாங்கம் பெருமைக் கொண்டிருக்கும்.

ஆனால், அப்பேர்ப்பட்ட தலைவருக்கு, 'பாரத ரத்னா' விருது கொடுக்கப்பட்டதே அவர் இறந்து இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்த பிறகுதான் என்பது நாம் அனைவரும் வருத்ததோடு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.

எந்த நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை வடிவமைக்க அம்பேத்கர் அல்லும் பகலும் அயராது வியர்வை சிந்தினாரோ அந்தச் சட்டங்களை செயல்படுத்தும் அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டடம் அவரை தேசத்தின் சிற்பியாக அங்கீகரிக்க மனமில்லாமல் அவரது புகைப்படத்துக்கு அனுமதி மறுத்து வந்தது. பாரதப் பிரதமராக வி.பி.சிங்.பதவி ஏற்று கட்டளை இட்ட பிறகுதான் அந்தத் தடையும் விலகி நம் நாடாளுமன்றம் தன் கதவுகளைக் திறந்து வழிவிட்டது.

(இன்றும் கிராமப்புற மக்கள் தங்களின் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு கொஞ்சமேனும் பொருளாதார சுவாசக் காற்றை சுவாசிக்க காரணமான, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை தன் ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தியவர்தான் திரு.வி.பி.சிங் அவர்கள்)

இவை அனைத்துக்கும் சிகரமாக இருக்கும் இன்னொரு முக்கியமான விஷயம் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு உண்டான நெருக்கடி...! இயக்குனர் ஜாபர் படேல் இயக்கத்தில் என்.எப்.டி.சி. தயாரிப்பில் உருவான அந்தத் திரைப்படம் கூட தற்பொழுதுதான் வெளிவந்து சில நாட்களில் ஆதிக்க சாதியின் அழுத்தத்தில் திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது.



வாழ்நாள் முழுவதும் எந்த தேசத்தின் உண்மையான அகவிடுதலைக்காகப் போராடினாரோ அந்த தேசத்தில்அவருக்கான முழுமையான மதிப்பும் மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பதற்க்குத்தான் எத்தனை தடங்கல்கள், எத்தனை தடைகள்!

இவையனைத்தையும் கடந்து இதே தேசத்தில் இன்னொரு புறம் உலகம் வியக்கும் ஒரு மகத்தான பெருமையும் அவருக்கு உண்டு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களிலும் இன்று நின்றுகொண்டிருக்கும் அவரது சிலைகளின் சாதனை, உலகின் வேறு எந்தத் தலைவருக்கும் இல்லாத பெருமைகளில் ஒன்று. ஆனால், எண்ணிக்கையில் 6 லட்சமாக இருந்தாலும் அவை இரண்டாகப் பிளவுண்டு 12 லட்சம் கிராமங்களாகவே இந்தியா இன்றும் காணப்படுவதுதான் மிக மோசமான வேதனை!






நூல்: அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு.
ஆசிரியர் அஜயன் பாலா.
விகடன் வெளியீடு.

முன்படம் : வே.மதிமாறன் வலைப்பூ.
மற்ற படங்கள் : கூகுள் இமேஜ்.





அண்ணல் அம்பேத்கரைப் மற்றொரு நிகழ்வு:

Wednesday, April 11, 2012

உலகின் உயர குகைப் பாலம்!

(Aizhai Suspension Bridge - China)


மலைக்குகைகளின் உள்ளே போகும் சாலை, திடீரென கிடுகிடு பள்ளத்தாக்கின் மீது தொங்கும் பாலத்தைத் தொட்டு, அடுத்த மலைக்குகைக்குள் நுழைந்தால் எப்படி இருக்கும் ? இது ஹாலிவுட் பட கற்பனை இல்லை. நிஜமாகவே இப்படி ஒரு பாலத்தை சீனாவில் கட்டி திறந்திருக்கிறார்கள். அய்ஸாய் பாலம் என்ற அது கடந்த வாரம் திறக்கப்பட்டது.

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் இருக்கும் இரண்டு பெரிய நகரங்கள் ஜிஷோ மற்றும் ஸடோங். இரண்டும் இரண்டு வெவ்வேறு மலைத்தொடர்களில் இருக்கின்றன. ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரம் போக, ஒரு மலையிலிருந்து இறங்கி, இன்னொரு மலையில் ஏற வேண்டும். வளைந்து செல்லும் மலைப்பாதைகளில் சாலை அருமையாக இருந்தாலும், போக நான்குமணி நேரம் ஆகும்.



இரண்டு மலைகளையும் பிரிக்கும் 1102 அடி ஆழ பள்ளத்தாக்கின் மீது தொங்கு பாலம் கட்ட முடிவெடுத்தது அரசு. உயரத் தூண்களிலிருந்து தொங்கும் இரும்புக் கம்பிகள் தாங்கிப் பிடிக்க 1146 மீட்டர் தூரத்துக்கு - அதாவது ஒரு கிலோமீட்டரையும் விட நீளமாக தொங்குகிறது இந்தப் பாலம். இருபுறமும் மலைகளைத் குடைந்து, குகைகளில் சாலை அமைத்து, பாலத்தோடு இணைத்திருக்கிறார்கள். ஆறு வழிப் பாதை என்பதால் ஏராளமான வாகனங்கள் பயணிக்கலாம். பாதசாரிகள் நடக்க பக்கத்தில் பாதை உண்டு. பள்ளத்தைப் பார்த்து பயப்படாதவர்கள் தாராளமாக நடைப் பயிற்சி கூட மேற்கொள்ளலாம். உலகின் உயர குகைப் பாலம் என்ற பெருமை பெற்றிருக்கிறது இது!






தகவல் : லோகேஷ்.

Tuesday, April 10, 2012

புவி வெப்பத்தால் குள்ளமாகிறோமா நாம்?


நமது உடல் அளவுக்கும் தட்ப வெப்பத்துக்கும் தொடர்பு உள்ளதாக அமெரிக்காவின் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளார்கள். மனிதர்கள் மட்டுமல்ல... எல்லா பாலூட்டி இனங்களுமே இப்படித்தானாம். குளிர்ந்த சூழ்நிலையில் இருந்தால் தலைமுறை தலைமுறையாக அதன் சந்ததிகளின் உயரமும் எடையும் வளர்ந்து கொண்டே வந்து, சில ஆயிரம் வருடங்களில் மிகப் பெரிய உயிரினமாக பரிமாணம் பெற்றுவிடும். அதுவே வெப்பம் மிகுந்திருந்தால், படிப்படியாக அளவு குறைந்து மினியேச்சர் உயிரினமாகிவிடுமாம்.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த குதிரைகளின் புதை படிம எச்சங்களை ஆரய்ச்சி செய்த விஞ்ஞானிகள்தான் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

முதன் முதலில் பூமியில் தோன்றிய குதிரைகளான சிஃப்ருஹிப்புஸ் இனத்தவை, வெறும் 6 கிலோ எடையோடு ஒரு நாயின் அளவில்தான் இருந்தனவாம். அது எப்படி இன்றிருக்கும் பிரமாண்டமான குதிரையாக மாறியது ? அதைத்தான் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துருக்கிறார்கள்.


பல்லாயிரம் வருடங்களாக நம் உலகம் குளிரையும் வெப்பத்தையும் மாறி மாறி அனுபவித்தே வந்திருக்கிறது. கடும் குளிர் சில ஆயிரம் வருடங்கள் என்றால், வெப்பம் சில ஆயிரம் வருடங்கள். இதுவே நம் பூமியின் வரலாறு.

"அப்படியொரு குளிரில் இருந்து உலகம் வெப்பமடைந்த காலத்தில், நாயளவு இருந்த சிஃப்ருஹிப்புஸ் குதிரைகள், மேலும் படிப்படியாக எடை குறைந்து பூனைக் குட்டி அளவிற்கு மாறி விட்டன. அதன் பிறகு மீண்டும் பூமி குளிர்ந்த போது, அவை மறுபடியும் வளர்ச்சியடைந்து தற்போதிருக்கும் குதிரைகளின் உயரத்திற்கு வந்து விட்டன " என்கிறார் ஃப்ளோரிடாவில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜோனாதன் ப்ளச்.


மருத்துவர் ஜோனாதன் ப்ளச் (Dr Jonathan Bloch).


குதிரைக்கு நேர்ந்த இந்த பரிமாண மாற்றம் நமக்கும் ஏற்படலாம்; தற்போது அதிகரித்து வரும் புவி வெப்பம், மனிதர்களின் அளவையும் குறைக்கலாம் என்பதே விஞ்ஞானிகளின் கருத்து.

ஆனால், இது உடனடியாக நிகழ்ந்து விடாது. தலைமுறை தலைமுறையாக நம் உடலும் எடையும் குறைந்து கொண்டே வந்து, சில ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு நாம் மினியேச்சர் மனிதர்கள் ஆவோம் என்பதும், புலி, சிங்கம், யானை போன்ற விலங்குகளும் நம்மோடு சேர்ந்து மினியேச்சர்கள் ஆகிவிடும் என்பது ஆறுதல் செய்திகள்....

அப்போது பொம்மை காரில் நிஜ மனிதர்கள் பயணிக்கக்கூடும் !






தகவல்: கோகுலவாச நவநீதன்.

Monday, April 9, 2012

படம் சொல்லும் சேதி !

(Veteran Artist Tim Storrier's Self-Portrait-Australia)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு ஓவியப்போட்டியில் முதல் பரிசு பெற்ற 'வழிப்போக்கன்' ஓவியம்தான் இது. வரைந்தவர் ஓவியர் டிம் ஸ்டோர்ரியர். அந்தக்கால வழிப்போக்கனுக்கு கட்டுசோறு மூட்டை போதும். ஆனால், இப்போது என்னவெல்லாம் தேவைப்படுகிறது.



(Mammoth Reproductions in the Exhibition 'Giants of the Ice Age', Nebra, Central Germany)

ஜெர்மனியின் நெப்ரா நகரில் 'ஐஸ் ஏஜ் ஜென்ட்ஸ்' என்ற கண்காட்சி இந்த மாதம் தொடங்கி டிசம்பர் வரை நடைபெறுகிறது. பனி யுகத்தில் வாழ்ந்த பிரமாண்டமான மிருகங்களை அப்படியே உயிருள்ள உருவங்கள் போலச் செய்து கண்காட்சியில் வைக்கிறார்கள். அப்படி உருவாக்கப்பட்ட மம்மூத் யானையும், அதன் குட்டியும்...



(A Flower Horn Fish-Thailand)

தலையில் கொம்பு முளைப்பது என்பது தரையில் வாழும் விலங்கினங்களுக்கே உரிய சிறப்பம்சம். மீனுக்கு கொம்பு முளைத்தால்.... அது இப்படிதான் கொண்டை போட்டுவிட்டது போல இருக்கும். தாய்லாந்தில் அழகிய மீன் கண்காட்சி நடந்தது. அதில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்த இந்த மீனுக்கு பெயர் ' ஃபிளவர்ஹார்ன் ஃபிஷ்'. அதாவது பூக்கொம்பு மீன்.


(9.5 Crores Kelly bag- France)

பிரான்சின் புகழ்பெற்ற ஹெர்ம்ஸ் பர்கின் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்தப் புதிய கைப்பையின் விலை ஒன்பதரை கோடி ரூபாய். முதலைத் தோலில் செய்து, அதன்மீது விலை உயர்ந்த 11,303 வைரங்களும் இதர கற்களும் பதிக்கப்பட்ட கைப்பை. இதன் கைப்பிடியை கையில் மாட்டிக் கொண்டால் அழகிய பிரேஸ்லெட் போலத் தெரியும். வைரங்கள் எதுவும் சுலபத்தில் விழுந்து விடாதபடி கவனமாக பதிக்கப்பட்டு இருக்கின்றன.





தகவல் : முத்தாரம் இதழ்.

Sunday, April 8, 2012

நம்பினால் நம்புங்கள் !


எலெக்ட்ரிக் ஈல் எனும் மீன் வகை வெளிப்படுத்தும் மின்சாரமானது, ஒரு குதிரையையே கொல்லும் அளவு ஆற்றல் வாய்ந்தது.




மனித நாவை விட ஈயின் கால்கள் ஒரு கோடி மடங்கு நுட்பமான உணர்வு கொண்டவை.



வௌவால் ஆண்டுக்கு ஒரு குட்டி மட்டுமே இடும். அதன் அளவில் உள்ள பாலூட்டிகளில் மிக மெதுவாக இனப்பெருக்கம் செய்பவை வௌவால்களே.



கொசு ஒரு மைல் சுற்றளவைத் தாண்டி வெளியே செல்லாது.








தகவல் : முத்தாரம் இதழ்.