மலைக்குகைகளின் உள்ளே போகும் சாலை, திடீரென கிடுகிடு பள்ளத்தாக்கின் மீது தொங்கும் பாலத்தைத் தொட்டு, அடுத்த மலைக்குகைக்குள் நுழைந்தால் எப்படி இருக்கும் ? இது ஹாலிவுட் பட கற்பனை இல்லை. நிஜமாகவே இப்படி ஒரு பாலத்தை சீனாவில் கட்டி திறந்திருக்கிறார்கள். அய்ஸாய் பாலம் என்ற அது கடந்த வாரம் திறக்கப்பட்டது.
சீனாவின் ஹூனான் மாகாணத்தில் இருக்கும் இரண்டு பெரிய நகரங்கள் ஜிஷோ மற்றும் ஸடோங். இரண்டும் இரண்டு வெவ்வேறு மலைத்தொடர்களில் இருக்கின்றன. ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரம் போக, ஒரு மலையிலிருந்து இறங்கி, இன்னொரு மலையில் ஏற வேண்டும். வளைந்து செல்லும் மலைப்பாதைகளில் சாலை அருமையாக இருந்தாலும், போக நான்குமணி நேரம் ஆகும்.

இரண்டு மலைகளையும் பிரிக்கும் 1102 அடி ஆழ பள்ளத்தாக்கின் மீது தொங்கு பாலம் கட்ட முடிவெடுத்தது அரசு. உயரத் தூண்களிலிருந்து தொங்கும் இரும்புக் கம்பிகள் தாங்கிப் பிடிக்க 1146 மீட்டர் தூரத்துக்கு - அதாவது ஒரு கிலோமீட்டரையும் விட நீளமாக தொங்குகிறது இந்தப் பாலம். இருபுறமும் மலைகளைத் குடைந்து, குகைகளில் சாலை அமைத்து, பாலத்தோடு இணைத்திருக்கிறார்கள். ஆறு வழிப் பாதை என்பதால் ஏராளமான வாகனங்கள் பயணிக்கலாம். பாதசாரிகள் நடக்க பக்கத்தில் பாதை உண்டு. பள்ளத்தைப் பார்த்து பயப்படாதவர்கள் தாராளமாக நடைப் பயிற்சி கூட மேற்கொள்ளலாம். உலகின் உயர குகைப் பாலம் என்ற பெருமை பெற்றிருக்கிறது இது!
தகவல் : லோகேஷ்.
0 comments:
Post a Comment