Saturday, April 28, 2012

கருப்பு மருந்துகளின் தந்தை!




Louis Pasteur

பாம்பு,தேள், போன்ற விஷ ஜந்துகளுக்கு மட்டுமல்ல...தான் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க் குட்டிகளிடமும் கூட மனிதன் அப்போதெல்லாம் பயந்து நடுங்கிய காலம் அது. ஆம், வெறிநாய்க்கடி என்பது அப்போதெல்லாம் ஓர் உயிர்கொல்லி நோய். எந்த மருந்துக்கும் கட்டுப்படாத அந்த ராபீஸ் நோயைக் கட்டுபடுத்தினார் லூயி பாஸ்டர் என்ற மருத்துவ மேதை.

பிரான்ஸில் 1822-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பிறந்த லூயி பாஸ்டர், சிறுவயது முதலே வேதியியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்தினார். அந்த ஆர்வம்தான், படிப்பை முடித்தவுடன் சிறிய அளவில் ஒரு ஆய்வுக் கூடத்தை நிறுவவும் அவரைத் தூண்டியது. ஒரு முறை லூயி தன் ஆய்வுக் கூடத்தில், வேதியியல் மாற்றங்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தபோது, கிருமிகள் எனப்படும் நுண்ணுயிரிகளை கவனித்தார். உலகையே வருத்திக் கொண்டிருக்கும் நோய்களையும் இந்த நுண்ணுயிரிகளையும் பொருத்திப் பார்த்தார். எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணம் கிருமிகளே, கிருமிகளின்றி ஓரணுவும் அசையாது என்று தன் ஆராய்ச்சிகளின் மூலம் நிரூப்பித்தார்.

நோய்களுக்கான காரணத்தைக் கண்டறிந்ததோடு நிற்காமல், தடுப்பு மருந்துகளை உருவாக்கும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கினார்.முதலில் பால் போன்ற திரவங்களில் உள்ள தீய பாக்டீரியாக்களை அழிக்கும் வழிமுறையைக் கண்டறிந்தார். இன்றுவரை பால் தொழிற்சாலைகளில் பின்பற்றப்படும் இந்த வழிமுறை, லூயி பாஸ்டரின் பெயரிலேயே 'பாஸ்டரைஸிங்' என்று அழைக்கபடுகிறது.


அதன்பின் கடும் முயற்சியின் விளைவாக, ஆந்த்ராக்ஸ் மற்றும் வெறிநாய்க்கடி (ராபீஸ்) கிருமிகளைக் கட்டுபடுத்தும் வழி முறையைக் கண்டுபிடித்தார் லூயி.

1885-ம் ஆண்டில் ஜோசப் மெயிஸ்டர் என்ற ஒன்பது வயது சிறுவனை வெறிநாய் ஒன்று 15 முறை கடித்துவிட்டது. அன்றையை மருத்துவர்கள் அனைவரும் கை விரித்துவிட்ட நிலையில், அவனுக்கு லூயி தந்து தடுப்பு மருந்து மூலம் சிகிச்சை அளித்தார். உயிரையும் காப்பாற்றினார். அந்தச் சிகிச்சையின் வெற்றிக்குப் பிறகு, லூயி உலகம் முழுவதும் பிரபலமாகி, லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் தனது 5 குழந்தைகளில் மூவரை டைபாய்டு நோய்க்கு பலி கொடுத்தவர் லூயி. பிற்காலத்தில் அவர் டைப்பாய்டு மட்டுமல்லாமல், டைபஸ், மஞ்சள் காமாலை, டிப்தீரியா, இன்புளூயன்சா போன்ற நோய்களையும் தன் மருந்துகளால் கட்டுபடுத்திக் காட்டினார்.

இறுதியாக 1895-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி... லூயி பாஸ்டர் என்ற பொக்கிஷத்தை இந்த உலகம் இழந்தது. மரணத்தோடு போராட அவர் கொடுத்துவிட்டுப் போன சில மருத்துவப் பொக்கிஷத்தை மரணத்தால் பறித்துக் கொள்ள முடியுமா என்ன ?




தகவல் : சி.பரத்.

Thursday, April 26, 2012

நிலம்....நடுக்கம்.


அருகருகே நகரும் இரண்டு பூமித் தட்டுகள் லேசாக உராயும்போது பெரிய அளவில் அழிவு இல்லை. அது லேசான நடுக்கமே. ஆனால், எதிரெதிர் திசையில் நகரும் இரண்டு பூமித் தட்டுகள் முட்டிக் கொள்ளும்போதுதான் பிரளயமே நடுங்குகிறது.

பொதுவாகவே பூமித் தட்டுகள் நகர்வது ரொம்ப குறைவான வேகத்தில்தான். ஆண்டுக்கு சில சென்டி மீட்டர்கள். ஆனால் முட்டிக்கொள்ளும்போது நீயா - நானா என்கிற அளவிற்கு கங்கணம் கட்டிக் கொள்கின்றன. இரண்டும் தட்டுகளும் ஆண்டுக்கணக்காக அப்படியே முட்டிக் கொண்டு நிற்கும். தட்டின் பின் பக்க சுமை இதை அழுத்தி முன்னால் தள்ளப் பார்க்கும். இப்படி ஒருபுறம் நகரமுடியாமல் தவிக்கும் இந்தத் தட்டுகளில் அழுத்தம் அதிகமாகிக் கொண்டே இருக்கும்.

ஸ்பிரிங் விளையாட்டு போலத்தான் இது. இருபுறமும் கைகளால் ஒரு ஸ்பிரிங்கை அழுத்திப் பிடித்திருக்கிறீர்கள். அதை அழுத்தி வைக்கும்போது எப்படியாவது இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிக்கும். இரண்டு புறமும் பிடித்திருக்கும் கைகளை விட்டுவிடுகிறீர்கள். சட்டென அது விரிந்துவிடும் இல்லையா ? அதுபோல இரண்டு தட்டுகள் ஆண்டுக்கணக்கில் முட்டிக் கொண்டிருக்கும்போது சேரும் அழுத்தம் திடீரென சில நொடிகளில் வெளிப்படும். அந்த சக்தியின் வெளிப்பாடு மிகப் பயங்கரம்.



அப்போது அந்தத் தட்டுகள் நகர்ந்து, இத்தனை ஆண்டுகளாக பாக்கி வைத்திருந்த தூரத்தை ஒரே சமயத்தில் கடக்கப் பார்க்கும். இதில் ஒரு தட்டு பெரியதாகவும் இன்னொன்று சிறியதாகவும் இருந்தால் ஒரு தட்டு இன்னொரு தட்டிற்கு அடியில் கொஞ்ச தூரம் போய்விடும். அதன் பின் சில காலம் ஆட்டம் கண்டு கொண்டே இருக்கும். நிலை பெறுவதற்கு 6 மாதங்கள் கூட ஆகலாம்.





நன்றி : முத்தாரம் இதழ்.

Wednesday, April 25, 2012

நம்பினால் நம்புங்கள் !


ஆச்சா என்கிற மரத்திலிருந்துதான் நாதஸ்வரம் இசைக் கருவி செய்யப்படுகிறது.



கிளியோபாட்ரா என்பது ஒரு அழகியின் பெயர் அல்ல. மாசிடோனிய இளவரசிகளின் பட்டத்துப் பெயரே கிளியோபாட்ரா.



நம் உடலிலேயே அதிக அளவு வேலை செய்வது நம் கைகளில் உள்ள கட்டை விரல்தான்.



இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கும் எல்லைக் கோடாக அமைந்திருக்கும் கிராமத்தின் பெயர் யூரி.






தகவல் : டி. கார்த்திக்.

Tuesday, April 24, 2012

தேங்காய் நண்டு !

(Coconut Crab-Chennai Museum)

"மனிதர்களில் பராக்கிரமசாலிகளை நாம் பாராட்டத்தான் செய்வோம். ஆனால், விலங்குகளில் மட்டும் பராக்கிரமசாலிகளை வசை பாடப் பழகிவிட்டோம். அப்படி நம்மிடம் கெட்ட பெயர் வாங்கிய பராக்கிரமசாலி தான் திருட்டு நண்டு எனப்படும் தேங்காய் நண்டு!"

-- காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பாடம் செய்யப்பட்ட தேங்காய் நண்டைக் காண்பித்து இந்தத் தகவலைச் சொன்னார் சென்னை அருங்காட்சியகத்தின் விலங்கியல் பிரிவு காப்பாட்சியர் அசோகன். அப்படி என்ன பராக்கிரமம் இந்த நண்டுக்கு ? அதையும் அவரே விளக்குகிறார் ?

"நிலத்தில் காணப்படும் முதுகெலும்பற்ற விலங்கினங்களிலேயே இதுதான் மிகப் பெரியது. மூன்றடிக்கு மேல் நீளமும் நான்கு கிலோ வரை எடையும் இருக்கும். தண்ணீரில் வாழும் பெரும்பாலான நண்டுகளுக்கு மத்தியில்.... நிலத்தில், அதிலும் தென்னை மரங்கள் அடர்ந்த பகுதிகளில் அதிகம் வாழும் நண்டுகள் இவை. தென்னை மரத்தில் ஏறி தேங்காயைப் பறித்து அதன் நாரையும் உரித்து உடைத்து உட்கொள்வதால்தான் தேங்காய் நண்டு என்ற பெயரைப் பெற்றது.

மனிதர்கள் வாழக்கூடிய பகுதிக்கு இது வந்தால் அவ்வளவுதான். மனிதர்கள் பயன்படுத்தும் சட்டி,பானை இத்யாதிகளை எல்லாம் ஏதோ உணவுப் பொருள் என்று நினைத்து உருட்டிக் கொண்டு போய்விடும். அதனால்தான் திருட்டு நண்டு என்றும் பெயர் பெற்றது.


இந்த வகை நண்டுகள் கடல் நீரில்தான் முட்டைகளை இடும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் சிப்பி, நத்தை,சங்கு, ஆமை போன்ற உயிரினங்களின் ஓடுகளில் ஒட்டிக்கொண்டு சிறிது காலம் வாழும்.கொஞ்சம் வளர்ச்சியடைந்தாலும் தரைக்கு வந்து நிலத்தில் குழிகளைத் தோண்டி, மெத்தென்று தேங்காய் நார்களைப் போட்டு அதில் வசிக்க ஆரம்பிக்கின்றன.

இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் கடல் தீவுகளில் அதிகம் வாழும் தேங்காய் நண்டுகள், பல நிறங்களிலும் காணப்படுகின்றன. நல்ல நுகரும் சக்தி இருப்பதால் இவை எளிதில் இரையைக் கண்டுபிடிக்கின்றன. பொதுவாக இது மற்ற நண்டினங்களிருந்து மாறுபட்ட் இருப்பதால் இதை உன்ன விரும்ப மாட்டார்கள்.

ஆனால், இந்த நண்டின் மாமிசத்தில் மருத்துவ குணம் உண்டென்று ஒரு புரளி உள்ளதால் சில நாடுகளில் இதை வேட்டையாடுவதும் உண்டு. இதனால் இந்த இனம் சில பகுதிகளில் முற்றிலும் அழியும் நிலைக்கு வந்துவிட்டது!" என்று அபயாமணி அடித்தார் அசோகன்.


இன்றுவரை நாம் ஆச்சரியப்படுவதற்கென்று இருக்கும் ஒன்றிரண்டு உயிரினங்களையும் நம் மூடநம்பிக்கைகள் அழித்துவிடக் கூடாது அல்லவா ?









தகவல் : டி.ரஞ்சித்.

Monday, April 23, 2012

படம் சொல்லும் சேதி !


உலகின் மிகக் குட்டியான நாய் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது இது. டாஷண்ட் கலப்பின குட்டியான இது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்திருக்கிறது. பிறந்த குட்டியாக இருந்தபோது ஒரு ஸ்பூனுக்குள் அடங்கிவிட்டதாம். மூன்றரை இஞ்ச் நீளமே இருக்கும் இதற்கு, உலகின் மிகப் பெரிய பாப் பாடகியான பியான்ஸ் நோல்ஸ் பெயரை வைத்திருக்கிறார்கள்.



மனித இனம் நெருப்பைப் பயன்படுத்தத் தெரிந்து கொண்ட பிறகுதான் நாகரீகத்தை நோக்கிய முதல் பாய்ச்சல் நிகழ்ந்தது.எப்போது முதல் மனிதர்கள் நெருப்பைப் பயன்படுத்தினார்கள் என்பதில் மானுட ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிகழ்கிறது. இதை தீர்க்கும் ஆதாரம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கிடைத்திருக்கிறது.

இங்கிருக்கும் ஒன்டர்வெர்க் குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் நிறைய சாம்பல் கிடைத்திருக்கிறது. கூடவே எரிந்த எலும்புகளும்! இவை பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கண்டறிந்து உள்ளனர். நமது முன்னோர்களான ஹோமோ எரெடக்ஸ் இனத்தவர் விலங்குகளை எரித்து மாமிசம் சாப்பிட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.



நம் ஊர்களில் ஆண்டு தேர்வு முடிந்ததும் பள்ளி மாணவர்கள் ஒருவர் சட்டையில் இன்னொருவர் இங்க் அடித்து மகிழ்ச்சியடைவார்கள். அவ்வாறு அசாம் மாநிலத் தலைநகர் கௌகாத்தியில் தேர்வு முடிந்த கல்லூரி மாணவர்கள் தங்கள் முகத்தில் வெள்ளி மூலாம் பூசி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடுகின்றனர்.






தகவல் : முத்தாரம் இதழ்.

Friday, April 20, 2012

மணல் சாலை இல்லை, இது சணல் சாலை !


சணல் கயிறு, சணல் சாக்கு, சணல் பைகள், சணல் சட்டைகள் கூடக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், சணல் சாலை தெரியுமா உங்களுக்கு ? இது வேறெங்கோ வெளிநாட்டில் நடக்க உள்ள அதிசயம் இல்லை. நம் இந்தியாவில்தான் போடுகிறார்கள் !

கொல்கத்தாவில் உள்ள சணல் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று, 24 கி.மீ. தூரத்துக்கு சணல் ரோடு அமைக்கத் திட்டமிட்டுள்ளது. சாதாரண தார் சாலையைக் காட்டிலும் இந்த 'நார்' சாலை வலுவானதாக இருக்கும் என்று அடித்துச் சொல்கிறது அந்நிறுவனம்.

நமது நாட்டில் பெரும்பாலான சாலைகள் வாட்ட சாட்டமாக காட்சியளித்தாலும், ஒரே மழைக்காலம் வந்துவிட்டால் அடித்துப் போட்ட 'கைப்புள்ள' மாதிரி, குற்றுயிரும் குலையுயிருமாகி விடுகின்றன. அவற்றைப் பழுது பார்க்கவே நமது பொருளாதாரம் ததிங்கிணத்தோம் போடுகிறது. ஆனால், இந்த சணல் சாலை வலுவானதாக மட்டுமின்றி, மழைக்காலங்களிலும் பாதிக்கப்படாமல் இருக்குமாம். இத்தனை வாக்குறுதிகளையும் அவர்கள் சும்மா சொல்லவில்லை. ஏற்கனவே மாதிரிச் சாலை ஒன்றை உருவாக்கி சணலின் மதிப்பை சோதித்த பிறகே சொல்கிறார்கள்.

கொல்கத்தாவிலிருந்து நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குப்தி பாரா என்ற கிராமத்தில்தான் அமைத்திருக்கிறது அந்த மாதிரிச் சாலை. சாலை போட பரப்பப்படும் சரளைக் கற்களுக்கும் மண்ணுக்கும் இடையே சிறு பட்டையாகச் சணலை அங்கே அவர்கள் பயன்படுத்தினார்கள். இந்தச் சணல் பட்டை, மழை நீரை உள்வாங்கிச் சாலையைப் பழுதுபடாமல் பாதுகாத்தது. அது மட்டுமல்ல...சரளைக் கற்களையும் நகர விடாமல் பிடித்து வைக்கிறதாம் சணல் பட்டை.



"சணலைப் பயன்படுத்துவதன் மூலம் சாலையின் ஆயுளை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவாதப்படுத்தலாம்" என்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர்.

மேற்கு வங்கத்தில் சணல் உற்பத்தி அதிகம்.ஆனால், இந்தியா முழுக்க சணலின் பயன்பாடு குறைந்துவிட்டது. சணல் சாக்குகளுக்கு பதில் பாலிதீன் சாக்குகள் வந்துவிட்டன. அதற்கு எதிர்ப்பு கிளம்பிய பிறகும் காகித பைகள் பயன்படுத்தப்படுகின்றனவே தவிர, சணல் சாக்குகள் புத்துயிர் பெறவில்லை. அதனால், உபரியாக இருக்கும் சணலை சாலைகள் போட உபயோகிப்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டம் !

கிராமத்து சணல் உற்பத்தியாளர்களும் நகரத்து இரண்டு சக்கர தோழர்களும் ஒருசேர மகிழ்ச்சியடையும் நாளை விரைவில் எதிர்பார்க்கலாம் !






தகவல் : ஆர்.ஆர்.பூபதி.

Thursday, April 19, 2012

அந்தரத்தில் மிதக்கும் சீனர் !


அடுத்த நொடி இவர் கதி என்ன ஆகியிருக்கும் ? பதைபதைப்போடு இந்தக் கேள்வியைக் கேட்டாலும், லி வெய் அதை புன்னகையோடு எதிர்கொள்கிறார். சீனாவின் ஹூபெய் நகரைச் சேர்ந்த இந்த 37 வயது மனிதர், புவி ஈர்ப்பு விசைக்கே சவால் விடுகிறார். புகைப்படக் கலைஞரான இவர் எடுத்த புகைப்படங்களைவிட, இவரை இப்படி பிறர் எடுத்த படங்களே புகழ் பெற்று உள்ளன.

" அடுக்குமாடியின் உயரத்திலிருந்து உதைக்கப்பட்டு விழுவது, வில்லில் அம்பாக சாய்ந்திருப்பது, அந்தரத்தில் நடப்பது, தலைகீழாய் மிதப்பது என எல்லா படங்களிலும் நான் ரிஸ்க் எடுத்திருக்கிறேன். இது சர்க்கஸ் இல்லை: மேஜிக்கும் இல்லை; இயந்திரங்களின் உதவியோடு செய்யப்படும் சின்னசின்ன சாகசங்கள்" என்கிறார் இவர். சில புகைப்படங்களை உற்றுப் பார்த்தால் இவரை பிணைத்திருக்கும் கயிறு தெரியலாம் !











தகவல் : லோகேஷ்.