
சணல் கயிறு, சணல் சாக்கு, சணல் பைகள், சணல் சட்டைகள் கூடக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், சணல் சாலை தெரியுமா உங்களுக்கு ? இது வேறெங்கோ வெளிநாட்டில் நடக்க உள்ள அதிசயம் இல்லை. நம் இந்தியாவில்தான் போடுகிறார்கள் !
கொல்கத்தாவில் உள்ள சணல் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று, 24 கி.மீ. தூரத்துக்கு சணல் ரோடு அமைக்கத் திட்டமிட்டுள்ளது. சாதாரண தார் சாலையைக் காட்டிலும் இந்த 'நார்' சாலை வலுவானதாக இருக்கும் என்று அடித்துச் சொல்கிறது அந்நிறுவனம்.
நமது நாட்டில் பெரும்பாலான சாலைகள் வாட்ட சாட்டமாக காட்சியளித்தாலும், ஒரே மழைக்காலம் வந்துவிட்டால் அடித்துப் போட்ட 'கைப்புள்ள' மாதிரி, குற்றுயிரும் குலையுயிருமாகி விடுகின்றன. அவற்றைப் பழுது பார்க்கவே நமது பொருளாதாரம் ததிங்கிணத்தோம் போடுகிறது. ஆனால், இந்த சணல் சாலை வலுவானதாக மட்டுமின்றி, மழைக்காலங்களிலும் பாதிக்கப்படாமல் இருக்குமாம். இத்தனை வாக்குறுதிகளையும் அவர்கள் சும்மா சொல்லவில்லை. ஏற்கனவே மாதிரிச் சாலை ஒன்றை உருவாக்கி சணலின் மதிப்பை சோதித்த பிறகே சொல்கிறார்கள்.
கொல்கத்தாவிலிருந்து நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குப்தி பாரா என்ற கிராமத்தில்தான் அமைத்திருக்கிறது அந்த மாதிரிச் சாலை. சாலை போட பரப்பப்படும் சரளைக் கற்களுக்கும் மண்ணுக்கும் இடையே சிறு பட்டையாகச் சணலை அங்கே அவர்கள் பயன்படுத்தினார்கள். இந்தச் சணல் பட்டை, மழை நீரை உள்வாங்கிச் சாலையைப் பழுதுபடாமல் பாதுகாத்தது. அது மட்டுமல்ல...சரளைக் கற்களையும் நகர விடாமல் பிடித்து வைக்கிறதாம் சணல் பட்டை.

"சணலைப் பயன்படுத்துவதன் மூலம் சாலையின் ஆயுளை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவாதப்படுத்தலாம்" என்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர்.
மேற்கு வங்கத்தில் சணல் உற்பத்தி அதிகம்.ஆனால், இந்தியா முழுக்க சணலின் பயன்பாடு குறைந்துவிட்டது. சணல் சாக்குகளுக்கு பதில் பாலிதீன் சாக்குகள் வந்துவிட்டன. அதற்கு எதிர்ப்பு கிளம்பிய பிறகும் காகித பைகள் பயன்படுத்தப்படுகின்றனவே தவிர, சணல் சாக்குகள் புத்துயிர் பெறவில்லை. அதனால், உபரியாக இருக்கும் சணலை சாலைகள் போட உபயோகிப்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டம் !
கிராமத்து சணல் உற்பத்தியாளர்களும் நகரத்து இரண்டு சக்கர தோழர்களும் ஒருசேர மகிழ்ச்சியடையும் நாளை விரைவில் எதிர்பார்க்கலாம் !
தகவல் : ஆர்.ஆர்.பூபதி.
0 comments:
Post a Comment