Friday, May 4, 2012
வந்தாச்சு பறக்கும் கார் !
தரையில் சென்று கொண்டிருக்கும் நம் கதைநாயகனின் கார் பட்டென்று மேலே பறந்து வில்லன்களைத் தாண்டுமே... அந்த உட்டாலக்கடி எல்லாம் இனி உண்மையாகப் போகிறது. ஆம், கார் பாதி-விமானம் பாதி' கலந்து செய்த கலவையாக அமெரிக்காவில் உருவாகியிருக்கிறது ஒரு ஜகஜால கார்.
கடந்த ஏப்ரல் 6-ல் நடைப்பெற்ற நியூயார்க் சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் ஆனானப்பட்ட ஃபோர்டு, நிஸ்ஸான், டொயோட்டாவெல்லாம் வாய்பிளந்து நிற்க, ஒரு குட்டி நிறுவனம் தயாரித்த இந்த அழகிய கார், இறக்கை விரித்துப் பறந்து காட்டி அசத்தியிருக்கிறது.
இந்தப் பறக்கும் காரைத் தயாரிக்க வேண்டும் என்ற ஒரே குறிக் கோளோடு, 'மசாசூசெட்ஸ்' தொழிநுட்ப நிறுவனத்தில் படித்த தொழிநுட்ப பொறியாளர்கள் மற்றும் விமான ஓட்டிகள் 25 பேர் இணைந்து ஆரம்பித்த குட்டி நிறுவனம்தான் டெர்ராஃப்யூஜியா (Terrafugia).2006 - ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், ஆறு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு இன்று நினைத்ததை சாதித்திருக்கிறது.
'டிரான்ஸிஷன்.... (Transition) அதாவது, மாற்றம் என்றே பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தக் கார், மோட்டார் உலகையே மாற்றப் போவது நிச்சயம்' என்று நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார் டெர்ராஃப்யூஜியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்ல் டைட்ரிச்.
சராசரி அளவுள்ள உங்கள் வீட்டு கார் நிறுத்துமிடத்தில் இது அடங்கிவிடும். இதை சாலையில் சாதாரணமாக விமான நிலையம் வரை ஓட்டிச் செல்ல முடியும். அங்கிருக்கும் ரன்வேக்குப் போனதும் இதை விமான மோடுக்கு மாற்றி இறக்கை விரித்துக் கிளம்பலாம். இது அதிகபட்சம் 740 கி.மீ. தூரம் வரை பயணிக்கும்.
அந்த தூரத்துக்குள் உள்ள எந்த நகரத்திலும் நீங்கள் தரையிறங்கிவிட்டு மீண்டும் இதைக் காராக்கிக் கொள்ளலாம். இரண்டு பேர் மட்டும் பயணிக்கக் கூடிய இந்தக் கார், சாதாரண பெட்ரோலிலேயே இயங்கும். 1400 அடி உயர வரை பறக்கும்' என்று தொழில்நுட்ப விவரங்களை அடுக்குகிறார் இதை சோதனை ஓட்டம் செய்து காட்டும் பைலட்டான பில் எம்டீர்.
இந்த வருட இறுதிக்குள் இந்தக் கார் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. விலை சுமார் 3 லட்சம் டாலர்....அதாவது 1 கோடியே 53 லடசத்து 7470 ரூபாயாம் !
"எவ்வளவு காசியிருந்தாலும் இந்தக் காரை சுலபமாக வாங்கிவிடமுடியாது. "ஸ்போர்ட் பைலட்' ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களே இதை வாங்க முடியும்' என்கின்றனர் மோட்டார் வல்லுனர்கள்.
தகவல்: கோகுலவாச நவநீதன்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment