Friday, May 25, 2012
தகவல் களம் !
ஏர்பஸ் ஏ 380 ரக விமானம் போலவே ஒரு உணவகம் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது. சாங்கிங் நகரில் இருக்கும் 'ஸ்பெஷல் கிளாஸ்' என்ற இந்த உணவகம் ஒரே நேரத்தில் 110 பேர் சாப்பிடலாம். இருக்கைகள், உள் அலங்காரம் எல்லாமே விமானம் போல இருக்கிறது. பரிமாறுகிறவர்கள் விமானப் பணிப் பெண் போலவே உடை அணிந்திருப்பார்கள். விமானத்தில் பறக்க முடியாதவர்கள் இங்கே சாப்பிட்டு திருப்தி அடையலாம். குடும்பத்தோடு சாப்பிட தனி அறைகளும் உண்டு.
இயற்கையின் விசித்திரங்களை அல்பட்ராஸைத் தவிர வேறெந்த பறவையைக் கொண்டும் விளக்கிட முடியாது. காலங்காலமாக நாம் அறிந்ததைவிட, இந்தப் பறவைகள் எவ்வளவு தூரம் பறக்கின்றன என்பதை செயற்கைக் கோள்கள் நமக்குக் காட்டியுள்ளன. பழுப்புத் தலையுள்ள அல்பட்ராஸ் பறவையால் புவியை 42 நாட்களில் வட்டமடிக்க முடிகிறது. ஒரு அல்பட்ராஸினால், புவியின் சுற்றளவைப் போல 3 மடங்கு தொலைவை ஒரே ஆண்டில் கடக்க முடியும். கிட்டத்தட்ட 3 மீட்டர் நீளமுள்ள இதன் இறக்கைகளை நீண்ட தூரப் பயணத்தின்போது இது பயன்படுத்துவதே இல்லை என்பது இன்னொரு ஆச்சரியம்.
அமெரிக்க வெண்ணிற நெற்றிக் கழுகை விட இது இருமடங்கு எடை கொண்டிருந்தாலும், காற்றைக் கிழித்துச் செல்லும் வேகம் அதிகம். அல்பட்ராஸ் காற்றை எல்லா வகையிலும் பயன்படுத்திக் கொண்டு கோணல்மாணலாக ஜிக்ஜாக் வடிவம் போல பறக்கிறது. அல்பட்ராஸின் இதயத் துடிப்பு அது ஓய்வெடுக்கும் போது இருப்பதைவிட, பறக்கும்போது குறைவு ! இறக்கை மற்றும் மூட்டுகளில் உள்ள லாக் அமைப்பு காரணமாகவே, இது பறக்கும்போது இயங்குவதில்லை.
அல்பட்ராஸின் தனித்துவமிக்க அளவு, ஆற்றல், இடைவிடாது மிகமிக நீண்ட தூரம் பறக்கும் தன்மை ஆகியவை பார்ப்பவரை தடுமாறச் செய்யும்.பறவை பிரியர்களுக்கு இது அற்புத விஷயம்....
'இந்த பறவையைப் போல உள் இயங்கும் ஆற்றலைக் கொண்டே நம் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ளவேண்டும்' என்கிறார் ஒரு தத்துவ ஞானி.
இப்பறவைகள் இடம்பெயர்வதோடு நிறுத்தாமல், பாதையை நினைவில் வைத்துக் கொண்டு, மீண்டும் தங்கள் கூட்டுக்கே திரும்பிவிடுவதும் ஒரு புதிர்தான்!
குதிரை மேல் அமர்ந்தபடி இருக்கும் போர் வீரர்கள், தளபதிகள் சிலைகளை செதுக்கவும் ஒரு மரபு இருக்கிறது. குதிரை நான்கு கால்களையும் தரையில் பதித்திருந்தால், அந்த சிலையில் இருப்பவர் இயற்கையாக மரணம் அடைந்ததாக அர்த்தம். குதிரையின் ஒரு கால் அந்தரத்தில் இருந்தால், போரில் காயம்பட்டு அதன்பிறகு வீரர் இறந்ததாக அர்த்தம். குதிரையின் இரண்டு கால்கள் அந்தரத்தில் இருந்தால், போர்களத்திலேயே வீரர் இறந்ததாக அர்த்தம்.
தகவல் : லோகேஷ்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment