அம்பேத்கர் என்றால், ஒரு தலைவரின் முகம் நினைவுக்கு வரும் முன்னர்... அவர் சாதியும் நினைவுக்கு வரும் மோசமான சூழலில்தான் நம் நாடு இன்னும் இருக்கிறது. அம்பேத்கர் என்று தனக்கு வைக்கப்பட்ட பெயர் காரணமாக இவர் அனுபவித்த துயரங்களின் பட்டியல்...
''விழுப்புரம் மாவட்ட தியாகதுருவம்தான் என் சொந்த கிராமம். வளர்ந்தது, வேப்பூர் கிராமத்தில். சுகாதாரத் துறையில் தொழுநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் கிராம மருத்துவர் என் அப்பா கதிர்வேலன். தீவிரமான கடவுள் பக்தரான அவருக்குத் தந்தை பெரியாரின் கொள்கைகள் மீது ஈர்ப்பு ஏற்பட, நாத்திகரா மாறினார். திராவிட இயக்கம், அம்பேத்கர், பெரியார்னு ஈடுபாடு காட்டினார். எனக்கு பரணீதரன்னுதான் முதலில் பேர்வெச்சு இருந்தாங்க. ஆறு வயசுல வேப்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சேர்த்தப்ப, என் பேரை அம்பேத்கர்னு எழுதச் சொன்னார் அப்பா. அன்னையிலேர்ந்து நான் அம்பேத்கர் ஆயிட்டேன்.
பள்ளிக் காலங்களில் எனக்கு முத்திரைகள் எதுவும் இல்லை. காரணம், சின்ன ஊர். எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். சட்டம் படிக்க சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கு வந்தேன். எல்லை கடந்து அப்பதான் சாதிய அடையாளங்களோட வடிவங்கள் தெரிய ஆரம்பித்தன. சேர்ந்த புதிதில், 'எவன் உன்னை ராகிங் பண்ணுறான்னு பார்ப்போம்’னு என்னைப் பிடிச்சுப் பத்திரப்படுத்துச்சு ஒரு குழு. என் பெயரே எனக்கு ஒரு பக்கச் சார்பைக் கொடுத்துச்சு. அடுத்து போலீஸ் வேலைக்குத் தேர்வா னேன். ஆவடி வீராபுரத்தில் பயிற்சி.
தமிழ்நாடு முழுக்க 280 பேர் வந்திருந்தாங்க. வரிசையா ஒவ்வொருத்தர் பேரா சொல்லிக் கூப்பிட்டாங்க. அம்பேத்கர்னு என் பேரைச் சொல்லிக் கூப்பிட்டவுடனே அத்தனை பேர் கண்ணும் என்னை மொய்க்க ஆரம் பிச்சுடுச்சு. அந்தப் பார்வைக்குத்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்?
'டேய்! இவன் நம்மாளுடா...’ 'ஓ... அவனா நீயி?’ங்கிற மாதிரி எத்தனையோ பார்வைகள்!
பயிற்சிக் காலத்தின்போது பலரும் வந்து சாதிரீதியாகத் தங்களுக்கு ஏற்படுற சிரமங்களை என்கிட்ட வந்து சொல்வாங்க. நான் ஆறுதல் சொல்லி அனுப்பிவைப்பேன். அப்படி வர்றவங்க எந்த நியாயத்தின்பேரில் என்கிட்ட வர்றாங்கங்கிறதை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது.
அப்புறம், போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் வேலைக்குச் சேர்ந்தேன். சாதி தொடர்பான சச்சரவுகளுக்குப் பஞ்சமே இல்லாத பகுதி அது. 2000-ல் புளியங்குடிங்கிற இடத்தில் ஒரு சமூகத்தைச் சார்ந்த மூணு பேரைக் கொடூரமாக் கொன்னுட்டாங்க. கடலூர் மாவட்டமே பற்றி எரியுற அளவுக்குப் பதற்றம். உயர் அதிகாரிகள் அத்தனை பேரும் வந்துட்டாங்க. என்னோட உயர் அதிகாரியாக இருந்த நரசிம்மன், 'பாடியைத் தூக்கி ஆம்புலன்ஸில் வைப்பா’ன்னார். நான் போய் பிணத்தைத் தூக்கினேன். உடனே, அங்கிருந்த சிலர் 'பிணத்தைத் தூக்கக்கூட நம்ம போலீஸ்தாண்டா வர்றான்’னாங்க. அப்போ நிலைமையைச் சுமுகமான சூழலுக்குக் கொண்டுவந்தார் சைலேந்திரபாபு.
ஆனா, அம்பேத்கர்ங்கிற பேர் காரணமாவே நான் அந்தச் சம்பவத்தப்ப ஒதுங்கி இருக்க வேண்டிய நிலை. ரவுண்ட்ஸ் போனால், குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்க மாட்டாங்க. சிலர் வீட்டிலேயோ, விருந்து கொடுக்காத குறையாக உபசரிப்பாங்க. எல்லாம் 'அம்பேத்கர்’ங்கிற பேருக்குக் கிடைக்கிற மரியாதை.
என் மேல, 'குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால், பாரபட்சமாக நடந்துகொள்கிறார்’னு ஒரு வழக்கு பதியப்பட்டு, 10 வருஷங்களுக்கு மேல விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு. கடலூர் மாவட்டத்துக்கு வந்து 12 வருஷங்கள் ஆகுது. தப்பு செஞ்சா, ஒரு போலீஸ் அதிகாரிங்கிற முறையில் நான் என்ன செய்யணுமோ, அதைப் பாரபட்சம் இல்லாம செய்வேன்கிறதை எல்லாத் தரப்பு மக்கள்கிட்டேயும் நிரூபிச்சு இருக்கேன்.
என் சங்கடங்களைத் தெரிஞ்சுகிட்ட எங்கப்பா ஒருகட்டத்துல, 'உனக்கு நான் சிரமம் கொடுத்துட்டேனோ? நீ வேணும்னா, உன் பேரை மாத்திக்கப்பா’னு சொன்னார். 'அரை நூற்றாண்டுக் காலம் இந்த நாட்டோட அடித்தட்டு மக்களுக்காகப் போராடியவரோட பேர் என் பேர்ங்கிறது எனக்குப் பெருமைதான்பா. வேணாம்பா’ன்னுட்டேன்.
அண்ணல் அம்பேத்கரை இந்தச் சமூகம் இன்னமும் ஒரு சாதியின் தலைவராகப் பார்க்குதேங்கிறதுதான் என் வேதனை'' என்று முடித்தார் அம்பேத்கர்.
இவ்வளவு கஷ்டங்களையும் அனுபவித்த இந்த அம்பேத்கர், பிறப்பால் தலித் அல்ல. அம்பேத்கரின் பெயரைவைத்துக்கொண்டு இருப்பதாலேயே இவர் அனுபவிக்கும் கொடுமைகள் இப்படி என்றால், உண்மையான அடித்தட்டு மக்கள் படும் துன்பம்?
நன்றி : நிருபர் டி.அருள் எழிலன்
படம் : ஜெ.முருகன் - ஆனந்த விகடன்
2 comments:
நம்மநாட்டுலதான் பெயரில கூட தீண்டாமை இருக்கிறது
//அம்பேத்கரின் பெயரைவைத்துக்கொண்டு இருப்பதாலேயே இவர் அனுபவிக்கும் கொடுமைகள் இப்படி என்றால், உண்மையான அடித்தட்டு மக்கள் படும் துன்பம்?//
உங்கள் கூற்றும் இவ்வரிகளும் நிதர்சனம் நண்பரே !
Post a Comment