Wednesday, November 16, 2011

கவிதையின் கதை


அலங்கார வளைவுகளைத்
தாண்டிய பின்னும்
அரங்கிற்குள் நுழையத்
தயங்கி நின்றது கவிதை !

"உன்னைப் பற்றித்தான்
பேசுகிறார்கள் !
உள்ளே போ" -
உபசரித்தார் ஒருவர் !

உள்ளே-
நிற்கவும் இடமில்லா
நெருக்கடி !

அலட்டிக் கொள்ளத் தெரியாத
அப்பாவிக் கவிதை
மேடை வரை நடந்து போய்
மீண்டும் திரும்பி
இருக்கை தேடி
ஏமாற்ற மடைந்தது !

சாகித்ய மண்டல
சண்ட மாருதங்கள்....
ஞானபீட
வாண வேடிக்கைகள்...

இசங்களைக் கரைத்து
ரசங்களாய்க் குடித்தவர்கள்...
தமிழ்
செத்துப் போய்விடக்கூடாதே
என்ற
கருணையால்
பேனாவைப் பிடித்திருக்கும்
பிரும்மாக்கள்....

ஒருவர் கூட
கவிதையை
உட்காரச் சொல்லவில்லை !
இடம் தேடும் கவிதையை
ஏறிட்டுப் பார்க்கவில்லை !

சுற்றிச் சுற்றிப் பார்த்து
சோர்ந்த கவிதை
அரங்கிலிருந்து
வெளியே வந்தது !

விமர்சனத்தின்
கிழக்கு மேற்கு அறியாத
கிராமத்து ரசிகர் ஒருவர்
கவிதையைக் கேட்டார் :

"உன்னைப் பற்றித்தான்
விவாதம் நடக்கிறது....
நீயே வெளியேறுவது
நியாமா ? "

கவிதை அவரிடம்
கனிவுடன் உரைத்தது
"அவர்களின் நோக்கமெல்லாம்
என்னைப் பற்றி
விவாதிப்பதல்ல....
தம்மைப் பற்றித்
தம்பட்டம் அடிப்பதே ! "


- கவிஞர் மு.மேத்தா.



கவிஞர் மு.மேத்தா




நன்றி : விகடன் பவள விழா மலர்.

0 comments:

Post a Comment