Friday, November 18, 2011

தன்னம்பிக்கையின் அளவு !


தன்னம்பிக்கை இருந்தால் வாழ்வில் வெற்றிகள் வெகு இயல்பாக வந்து சேரும் என்பதற்கு உதாரணம், அமெரிக்க விஞ்ஞானி ஜான் பார்டீன் (John Bardeen) .

1956 - ல் டிரான்சிஸ்டரை கண்டுபிடித்ததற்காகவும், 1972 - ல் மின்தடை சிறிதும் இன்றி மின்சாரத்தைக் கடத்தும் கடத்திகளைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்ததற்காகவும் இயற்பியல் துறையில் இருமுறை நோபல் பரிசு பெற்றவர் இவர்.

பார்டீன் 1956 - ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றபோது அவரது இரு மகன்களும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தனர். எனவே அவர்கள் இருவரையும் தொந்தரவு செய்ய விரும்பாது நோபல் பரிசு வழங்கும் விழாவுக்கு ஒரு மகனை மட்டும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.

பார்டீனின் வாழ்க்கையில் நடைபெறும் மிக முக்கியமான விழாவுக்கு அவர் தன்னுடைய குடும்பத்தினரை அழைத்து வராததை சுவீடன் நாட்டு மன்னரான குஸ்டாவோ விரும்பவில்லை. பிள்ளைகள் இருவரையும் அழைத்து
வராததற்காக அவர் ஜான் பார்டீனை நாகரீகமாகக் கடிந்து கொண்டார்.

அப்போது மன்னரிடம் பார்டீன், "மாட்சிமை பொருந்திய மன்னர் பெருமானே, நான் இரண்டாம் முறை பரிசு பெற மீண்டும் உங்கள் அவைக்கு வருவேன். அப்போது தங்கள் விருப்பம் போல என் இரு பிள்ளைகளையும் அழைத்து வருகிறேன்" என்றார்.

மன்னர் அதை கேட்டு ஆச்சரியம் அடைந்திருக்கக்கூடும். ஆனால் பார்டீன் தான் சொன்னதை 1972 - ல் நிரூபித்தார். ஆம், அப்போது மின்சாரக்கடத்திகள் பற்றிய உண்மைகளைக் கண்டுபிடித்ததற்காக அவருக்கு இரண்டாவது முறையாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

சொன்னபடியே அவர் தனது இரு மகன்களையும் பரிசளிப்பு விழாவிற்கு அழைத்து சென்று மன்னரை மகிழ்வித்தார். எவ்வளவு தன்னபிக்கை இருந்தால், 15 ஆண்டுகளுக்கு பின் தான் செய்ய போகும் சாதனையை ஒருவரால் முன்கூட்டியே அறிவிக்க முடியும் ? இது அவர் திறமையின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கை.

மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் திறமைகள் உள்ளன, அதை வெளிப்படுத்த முதலில் தேவைப்படுவது அவரவர் மீதான நம்பிக்கையே !




(ஜான் பார்டீனை பெருமைப்படுத்தும் விதமாக அமெரிக்க அரசு
வெளியிட்டுள்ள தபால் தலை)



இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு





தகவல் : தினத்தந்தி.

1 comments:

Unknown said...

self confident is the most importent in our life

Post a Comment