Tuesday, November 8, 2011

அவ்வளவுதான் நண்பர்களே !


அவ்வளவுதான் நண்பர்களே...
நீங்கள் திகைப்புறும்படியாக
ஏதும் நடந்துவிடவில்லை
வெண்மணியில் ஒரு குடிசை
சில உயிர்கள் தகனம்...
உத்தப்புரத்தில் ஒரு சுவரில்
ஒரு கிராமம் துண்டிப்பு...
பரமக்குடியில் ஏழு தலித்துகள்
(தலா ஒரு லட்சம் பெறுமதியானவர்கள்)
குண்டந்தடியில்
சிதைந்த தலைகள்
சில லிட்டர் குருதி
அவ்வளவுதான்

வீதிகள் கழுவிவிடப்பட்டாயிற்று
நூற்றாண்டுகளுக்கு பிறகு
அணிய அனுமதிக்கப்பட்ட
காலணிகளும் துண்டுகளும்
லத்திக் கம்புகளால் சேகரிக்கப்பட்டு
எரியூட்டப்பட்டாயிற்று
அவ்வளவுதான்

சாதிக் கொழுப்பூற்றி வார்க்கப்பட்ட
துப்பாக்கிச் சன்னங்களும்
தண்ணீரிலும் அடர்த்தி குறைந்த
கறுப்புக் குருதியும்
சந்தித்துக் கொண்டன
அவ்வளவுதான்

நீங்கள் வருத்தப்பட வேண்டாம்
கழுவிவிடப்பட்ட வீதிகளில்
ஒரு துளிக் கறையுமில்லை.
இனியென்ன...
திண்ணியத்தில் திணிக்கப்பட்ட
மலம் போலும் வாசனை பரத்தும்
'தீர்ப்பு'கள் நாளையும் வரும்
அவ்வளவுதான் நண்பர்களே
அவ்வளவுதான் !


--- கவிஞர் தமிழ்நதி.


கவிஞர் தமிழ்நதி.


நன்றி - விகடன்

0 comments:

Post a Comment