பேசாமல் இருப்பவர்கள்
கோபித்துக்கொண்டு
பேசாமல் இருந்தவர்கள் பின்னால்
பேசாமல் இருந்ததற்காகக்
கோபித்துக்கொள்கிறார்கள்
சாப்பிடுகையில் பேசாதவர்கள்
பின்னொரு தருவாயில்
சாப்பாட்டைப்பற்றியாவது பேசுபவர்களாக
மாறிவிடுகிறார்கள்
பேசாதேயென
மாணவர்களை அதட்டும் குருமார்கள்
பிறகு மாணவர்களின் பகடி நிரம்பிய
பேச்சுக்கு ஆளாகிறார்கள்
நல்லதைப் பேசியவர்கள்
நாளடைவில் பேச முடியாதவர்களாகவும்
யாராலும்
பேசப்படாதவர்களாகவும் ஆகும்
அபாயம் நேர்ந்துவிடுகிறது
குடிமுயங்கப் பேசுபவர்கள்
தெளிந்ததும் தான் பேசியதையும்
பேசாததுபோலக் காட்டிக்கொள்கிறார்கள்
பேச வேண்டிய நேரத்தில்
பேசாத ஒரு தலைவன் வேறு வேறு
காரணங்களைப்
பேசிக்கொண்டிருக்கிறான்
காலம்
கடந்து போவது தெரியாமல்
பேசுபவர்கள்
கடந்த காலத்தையும் பேசும் நிலை
பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை
பேசாமல் இருந்தாலும் அதேதான் !
- கவிஞர் யுகபாரதி
தங்கம்
"புறப்பட்ட இடத்துக்கே
பொருள்கள் வந்து சேர்கின்றன.
இந்த பொது விதிக்கு
நீதான் பொது விலக்கு.
மரணித்துப் போனது
மாதாவாக இருந்தால் கூட
அழுதுக் கொண்டே
உன்னை மாத்திரம்
அப்புறப்படுத்திவிடுகிறோம் !"
- வலம்புரி ஜான்.
நன்றி : விகடன்.
0 comments:
Post a Comment