Wednesday, December 7, 2011

புகழ்ச்சி இயல்பன்று !

உலகிலேயே மிகவும் கடினமானது என்னவென்றால் ஒருவரை உட்கார வைத்து கொண்டு அவர் முகத்துக்கு நேராக புகழ்வது. அதைவிடக் கடினமானது அந்தப் புகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருப்பது. ஆனால், இந்த இரண்டும் இங்கே மிக இயல்பாக நடக்கின்றன. பொது மேடைகளில் மட்டுமின்றி, காதலன், காதலி உரையாடலிலும் கூட புகழ்ச்சி என்பது மிகையாக இருந்தால்தான் அது உணமையான காதல் என்று கருதப்படுகிறது.

எப்போதும் இயல்புதான் சுவையானது. இயல்புதான் அழுத்தமானது. ஆனால், இங்கே மிகைப்படக் கூறுவது, மிகைப்படப் பாராட்டுவது, உண்மையைக் காட்டிலும் கூடுதலாக பேசுவது என்பவைதான் வரவேற்புக்கு உரியவைகளாக இருக்கின்றன. இது ஒரு சமூகத்தின் நலிந்த நிலையைத்தான் காட்டுகிறது.

அண்மையில் வெளியான ஒரு திரைப்படத்தில் காதலனுக்கும், காதலிக்கும் இடையே நடக்கின்ற உரையாடல் மிக நயமானதாகப்பட்டது. அந்த பெண் தன்னுடைய காதலனிடத்தில் ஒரு கேள்வி கேட்கிறாள், "எல்லா காதலனும், தன் காதலியை தேனே என்றும் , மானே என்றும் கொஞ்சுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், ஒருநாள் கூட நீ என்னை அப்படி கொஞ்சியதில்லையே" என கேட்கிறாள்.


அவன் சொல்கிறான்,"உண்மைதான். உன்னை பார்த்தல் தேனை பார்த்தது போல தோன்றவில்லை என்கிறான். "அப்படியா ? நான் உனக்கு தேனாக தோன்றவில்லையா ?" என்கிறாள். "இல்லை... இல்லை நீ எனக்குத் தேனில்லை" என்கிறான். இந்த இடத்திலே அந்தக் காட்சியை நினைக்கும் போது நமக்கு நினைவுக்கு வரும் ஒரு இலக்கியத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என தோன்றுகிறது.

ஷேக்ஸ்பியர் எழுதிய கிங்லியர் நாடகம் ஒன்று இருக்கிறது. முடிவு மிக சோகமாக அமைந்த நாடகம் அது. ஆனால், மிக அருமையான உரையாடல்கள் அந்த நாடகம் முழுவதும் இருக்கிறது. ஒரு இடத்திலே ஆண்டனி என்கிற கதை பாத்திரத்தைப் பார்த்து கேமலின் என்கிற பெண் சொல்வாள், "எப்போது பார்த்தாலும் அடி வாங்குவதற்கு என்றே ஒரு கன்னத்தையும், பழி சுமப்பதற்காகவே என்று ஒரு தலையையும் வைத்திருப்பவள் நீ "என்று கூறுவாள்.


இது போன்ற சில கூர்மையான வசனங்கள் அதில் வரும். அதுபோல, லியர் என்கிற மன்னனுக்கு மூன்று மகள்கள் இருந்தார்கள். அந்த மூன்று பெண்களுக்கும் தன் முதுமையின் காரணமாக நாடு முழுவதையும் பிரித்து கொடுத்து விடலாம் என்று மன்னன் கருதினான். அந்த நாடகத்தினுடைய முதல் காட்சியே அதுதான்.

மூன்று மகள்களையும் அழைத்தான். "எனக்கு வயதாகிறது. நான் இந்த நாட்டை மூன்று பங்காக ஆக்கி, உங்களுக்கு கொடுத்து விடலாம் என்று கருதுகிறேன். ஆனால், யார் என்னிடம் கூடுதல் அன்பு வைத்து உள்ளீர்களோ, அந்த அளவுக்கு நான் கொடுக்க போகும் நாட்டின் அளவும் கூடுதலாக இருக்கும். எனவே ஒவ்வொருவராக சொல்லுங்கள்" என்று சொன்ன பிறகு, சொல்ல வேண்டுமா என்ன ?. எவ்வளவு புகழ்கிறோமோ, அவ்வளவு நாட்டின் பகுதியை நாம் பெற்று கொள்ளலாம் என்று பெண்கள் மனதிற்குள் முடிவு செய்கிறார்கள்.


மன்னன், மூத்த மகளை அழைத்து முதலில் நீ சொல் என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண் சொல்கிறாள், "உலகத்திலேயே உன்னைத்தான் நான் கூடுதலாக நேசிக்கிறேன். வேறு யாரையும் அல்ல. இந்த உலகத்தில் எத்தனை மனிதர்களை எடுத்துகொண்டாலும், நான் கூடுதலாக நேசிக்கிற மனிதன் நீ மட்டும்தான்" என்று ஒரே போடாக போட்டு விடுகிறாள்.

இதை கேட்டு மன்னன் நெகிழ்ந்து விடுகிறான். உடனே,மன்னன் "நல்லது, நம்முடைய நாட்டின் வரைப்படத்தில் இந்த கோட்டிலிருந்து, அந்த கோடு வரை உள்ள வளமான பகுதியை நீ சொல்லி இருக்கிற புகழ்ச்சிக்கு ஏற்ப உனக்கு தருகிறேன்" என்று கூறுகிறார்.

அடுத்து, இரண்டாவது மகளை அழைத்து, "இப்போது நீ சொல் பார்க்கலாம்" என்கிறார். அவள் சொல்கிறாள், "எல்லாம் மூத்த சகோதரி சொன்ன செய்திதான். கூடுதலாக ஒன்று, அவள் எவ்வளவு தூரம் உங்கள் மீது நேசம் வைத்துள்ளளோ, அதைவிட கூடுதலாக நான் உங்களை நேசிக்கிறேன்" என்று கூறுகிறாள். முதல் மகளுக்கு கிடைத்ததைவிட, கொஞ்சம் அதிகமான வளங்களும், எல்லைகளும் தனக்கு கிடைக்கும் என்று எண்ணி கொள்கிறாள். அதுபோலவே, அவளுக்கு கிட்டுகிறது.

ஆக, இரண்டு பேரும் புகழ்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு, வளமான பெரும் பகுதிகளை பெற்று கொள்கின்றனர். அதில் அவர்களுடைய கணவன்மார்களுக்கும் நாடு கிடைத்த மகிழ்ச்சி.


இப்போது, இறுதியாக தன்னுடடைய கடைக் குட்டியான மூன்றாவது மகளை அழைத்து, "நீ கடைசி மகளாக இருந்தாலும் கூட, என் மீது நீ வைத்துள்ள வாஞ்சையையும், அன்பையையும் நான் அறிவேன். நீ சொல், உன் மூத்த சகோதரிகள் இரண்டு பேரைக் காட்டிலும் என் மீது நீ எப்படி அதிகமான அன்பு வைத்திருக்கிறாய்" என மன்னன் கேட்ட போது,

மூன்றாவது மகளான கார்டிலீயா பொறுமையாக சொல்கிறாள்

"ஒன்றுமில்லை"

"ஒன்றுமில்லையா ? " என கேட்க

"ஆமாம், ஒன்றுமில்லை என்றால் ஒன்றுமில்லைதான்" என்கிறாள்.

அப்போது மன்னன் சொல்வான் Nothing comes from Nothing என்று. அதாவது "ஒன்றுமில்லாத்திலிருந்து உலகத்தில் ஒன்றும் வெளிவராது. நீ எப்படி ஒன்றுமில்லை என்று சொல்கிறாய்" என்று கேட்கிறபோது, கார்டிலீயா சொல்வாள் "அப்படி இல்லையப்பா ஒரு அப்பாவின் மீது பெண்ணுக்கு எவ்வளவு அன்பு இருக்குமோ அவ்வளவு அன்பு நான் வைத்திருக்கிறேன்".

"அவ்வளவுதானா ? "

" அவ்வளவுதான். ஒரு அப்பாவின் மீது ஒரு குழந்தைக்கு எவ்வளவு பாசம் இருக்குமோ அந்தப் பாசம் எனக்கு இருக்கிறது". "உன் மூத்த சகோதரிகள் இரண்டு பெரும் எவ்வளவு பாராட்டிச் சொன்னார்கள். நீ என்னமோ என் மீது வைத்திருப்பது வெறும் அன்புதான் என்கிறாயே ?" என்று மன்னன் கேட்ட போது, மிக அழகாய் பதில் சொன்னால் கார்டிலீயா.


"அவர்கள் உலகத்தில் உங்களை மட்டும்தான் நேசிக்கிறேன் என்று சொல்கிறார்கள். அது உண்மையாக இருந்திருந்தால், அவர்கள் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. இங்கேயே இருந்திருக்கலாம். திருமணம் ஆன பிறகு கணவரையும் நேசிக்க வேண்டிய கடமை இருக்கிறதல்லவா ? பிறக்க போகிற குழந்தைகளையும் நேசிப்பது இயல்புதானே. அதோடு இல்லாமல், இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நேசிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறத்தல்லவா ? இப்படியாக, எல்லோரையும் நேசிக்கும் அவர்களுடைய இதயத்தில், அப்பாவிற்கு என்று என்ன இடம் இருக்குமோ, அதுதான் இருக்கும்" என கூறினாள்.

இந்த உண்மையான் கூற்றை அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை. அது அவருக்கு மன நிறைவு தரவில்லை. இது மோசமானது என கருதினான். உடனே மன்னன் கூறுகிறான், "உன் பதில் எனக்கு மன நிறைவை தரவில்லை, ஆதலால், உனக்கு இந்த நாட்டில் எந்த ஒரு பகுதியையும் தர முடியாது. உனக்கு சேரவேண்டிய பங்கை, உன் மூத்த சகோரிகளே எடுத்து கொள்வார்கள்" என கூறிவிட்டான். பின்னொரு காலம், உண்மையான அன்பு எது என கண்டு, மன வேதனை அடைந்தான்.

இந்த இடத்திலே, மறுபடியும் முதல் பத்தியில் சொன்ன அந்த திரைபடத்தின் காதல் வசனங்களை நினைவுப்படுத்தி பார்ப்போம். எக்காலத்திலும் உண்மையை நேரடியாக உள்ளது உள்ளப்படி சொல்லும் போது, அது ஏற்று கொள்ளபடுவதில்லை. மாறாக, அதை மிகையாக சொல்லும் போதுதான் அது பாராட்டாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

சரி, இனி காதலர்களின் பிரச்சனைக்கு வருவோம். காதலி "என்னை ஏன் தேனே என்றும், மானே என்றும் அழைப்பதில்லை. நான் உனக்கு தேனில்லையா ?" என்று கேட்டபொழுது, காதலன் சொன்னான், "ஆம், நீ எனக்கு தேனில்லை. தேன் சுவையானதுதான். ஆனால், விரைவில் திகட்டிவிடும். ஆனால். நீ எனக்கு வாழ்க்கை முழுவதும் திகட்டாத இனிக்கும் தண்ணீரடி" என்று உரையாடல் முடிவுறும்.


தேன் என்பது சிறிது நேரத்தில் திகட்டி விடும், தண்ணீர்தான் காலம் முழுவதும் துணையிருக்கும் என்ற அந்த உரையாடலை, அந்த வசனத்தை எழுதியிருப்பவர் இயக்குனர் சீமான் அவர்கள்தான்.

ஆகவே, அன்பு என்பது மிகையல்ல. பாராட்டும் அல்ல. அது உண்மையானது மட்டுமே.




நன்றி :
நூல் : ஒன்றே சொல் ! நன்றே சொல் !
-- பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.

0 comments:

Post a Comment