Thursday, December 22, 2011

மலையாள நண்பர்கள் கவனத்திற்கு...

நூறு ஆண்டுகளை கடந்த அணைகள் வலு இழந்து விட்டது என பொய் பிரச்சாரம் செய்யும் இந்தக் காலக்கட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் கடந்த அணைகள் கூட உள்ளன என்பது எத்தனை பேருக்கு தெரியும். வியப்பின் சரித்திர குறியீடுகள் என்று சொல்லும் அளவிற்கு இன்றும் பயன்பாட்டில் உள்ள சில அணைகளைப் பார்ப்போம்.

கல்லணை


உலகின் பழமையான அணைகளில் ஒன்று கல்லணை.தமிழகத்தில் திருச்சிக்கு அருகே காவிரி ஆற்றின் நடுவே கம்பீரமாக இன்றும் காட்சியளிக்கிறது.

கி.பி.1 -ஆம் நூற்றாண்டின் இறுதியில் கரிகால் சோழனால் கட்டப்பட்டது இந்த அணை. சுண்ணாம்புக்கல், கடுக்காய் போன்ற பொருட்களை கலந்து பலமாக கட்டப்பட்டது. இன்று வரை பயன்பாட்டில் உள்ள இந்த அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் பிரிந்து செல்கிறது.


டூ ஜியாங் யான் அணை


சீனாவில் உள்ள டூ ஜியாங் யான் அணையும் பழங்காலத்து அணைகளில் ஒன்று. கி.மு.256 - ல் கட்டப்பட்ட அணை இது. சிச்சுவான் மாகாணத்தில் பாசன வசதிக்காக மின் நதியில் இது கட்டப்பட்டது. இந்த அணையால் 5300 சதுர கிலோ மீட்டர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.


மாரிப் அணை


ஏமன் நாட்டில் உள்ள மிகப் பழமையான அணை மாரிப் அணை. மாரிப் ஆற்றின் குறுக்கே கி.மு. 8 - ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அணை. சுட்ட கற்களால் கட்டப்பட்டது இது. 1986 - ல் இந்த அணை அருகே புதிய அணை கட்டப்பட்டது. ஆனால், இன்றும் கூட இந்த பழைய அணை இடிக்கப்படவில்லை.


கோர்ன்லோவோ அணை


கல்லணையைப் போலவே பழமையான அணை கோர்ன்லோவோ அணை. ஸ்பெயினில் படாஜோஸ் மாகாணத்தில் கி.பி.1 முதல் 2 - ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட அணை. பாசன வசதிக்காக அந்தக் காலத்திலேயே சுண்ணாம்புக்கல், கருங்கல் ஆகியவற்றை கொண்டு கட்டப்பட்ட இந்த அணை இப்போதும் பயன்பாட்டில் உள்ளது.



தகவல் : டி. கார்த்திக்.

0 comments:

Post a Comment