Thursday, April 5, 2012

உலகம் பலவிதம் !


இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும், 'ஏதோ எரிமலை சீறுவதால் அதிலிருந்து நெருப்புக் குழம்பு பொங்கி வழிகிறது' என்று தோன்றலாம். ஆனால், உண்மை அதுவல்ல ! இது சாதாரண அருவி, தண்ணீர் வழிந்து விழும் அற்புத அருவி. இதன் தண்ணீர்தான் இயற்கையின் மாயாஜாலத்தில் இப்படி நெருப்புக் குழம்பு போல சீற்றத் தோற்றம் காட்டுகிறது.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கிறது யோஸ்மைட் தேசிய பூங்கா. இந்தப் பூங்காவில் ஒரு அருவிக்குப் பெயர் 'குதிரைவால் அருவி'. மலை முகட்டிலிருந்து ஒரு நேர்க்கோடாக தண்ணீர் தரையில் வந்து விழுகிற விதத்தில் இருக்கிறது இந்த அருவி. பிப்ரவரி மாதத்தின் மத்தியில் இரண்டே இரண்டு வாரங்களுக்கு சூரியன் மிகச் சரியாக இந்த அருவியின் தலைப் பக்கமாக அஸ்தமன நேரத்தில் வரும்போது சிவப்பான சூரியக் கதிர்கள் பட்டு அருவி அப்படியே செந்நிறமாகிறது. அப்போது புகைப்படம் எடுத்தால் இப்படித்தான் தோன்றுகிறது அருவி.

வெறும் இரண்டே நிமிடங்களில் இப்படி மாயாஜாலம் காட்டிவிட்டு மறைகிறது சூரியன். வானம் தெளிவாக இருந்து, அருவியிலும் போதுமான தண்ணீர் கொட்டினால்தான் இந்தக் காட்சி சாத்தியமாகும் ! இதைப் படம் பிடிக்க உலகெங்கிலும் இருந்து புகைப்படக் கலைஞர்கள் இங்கு வந்து காத்து இருக்கிறார்கள்.



உலகெங்கிலும் பல விமான நிறுவனங்கள் சிக்கலை சந்திக்கும் நேரம் இது. ஹங்கேரி நாட்டின் 'மாலேவ்' விமான நிறுவனம் நஷ்டத்தைத் தாங்காமல் மூடப்பட்டு விட்டது. அந்த நிறுவனத்தின் ஆறு விமானங்களையும் அமெரிக்காவில் தனித் தனியாகப் பிரித்து பழைய இரும்புக்குப் போடுகிறார்கள். இவற்றைப் புதுப்பிக்க ஆகும் செலவுக்கு புதுசே வாங்கிவிடலாம் என்பதால் சீண்டுவாரில்லை !




தேள் கொட்டுவது என்பது வலி மிகுந்த அனுபவம். சில சமயம் இறப்பு நிலையும் ஏற்படக்கூடும். ஆனால், அந்தத் தேளின் விஷமே மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆமாம், நரம்பு நோய்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தேள் விஷம் மருந்தாகிறது. தேள்களில் இதுவரை மொத்தம் 12 வகை இருப்பதாக சொல்கிறார்கள். அவை: வெண்தேள், செந்தேள், கருந்தேள், கொள்ளிதேள், சித்திரத்தேள், சந்தித்தேள், சினைத்தேள், மணித்தேள், ஜூனைத்தேள், நீர்த்தேள், உச்சிலிங்கத்தேள், நச்சுத்தேள்.










தகவல் : லோகேஷ்,வித்யுத்.

0 comments:

Post a Comment