Tuesday, April 17, 2012
உலகம் பல விதம் !
கழுகு இனங்களில் பிரமாண்டமானது அமெரிக்காவில் வாழும் 'கலிபோர்னியா காண்டேர்' இனப் பருந்துகள். இவை இன்னொரு சாதனைப் பட்டியலிலும் இடம்பெறப் போகின்றன. சான் டியாகோ விலங்கியல் பூங்காவில் 'காண்டேர் கேம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அடை காக்கப்படும் ஒரு முட்டையிலிருந்து கழுகுக் குஞ்சு ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியில் வந்து, இந்த உலகை தன் கண்ணால் முதன்முதலில் பார்க்கும் காட்சியை நேரடி ஒளிபரப்பு செய்வதுதான் இந்தத் திட்டம். 'இப்படி கழுகின் பிறப்பைப் பார்ப்பவர்கள், உயிரின் மதிப்பை உணர்வார்கள். அதன்பின் விலங்குகளுக்கு தொல்லை தரமாட்டார்கள்' என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் விலங்கியல் பூங்கா நிர்வாகிகள்.
ஒவ்வொரு நகரிலும் ஒரு மணிக்கூண்டு இருக்கும்; அதில் பெரிய கடிகாரம் கட்டாயமாக இருக்கும். அந்த மணிக்கூண்டுக்குப் பின் ஒரு வரலாறு இருக்கும். காலப்போக்கில் அது அந்த நகரின் அடையாளமாகவும் மாறிப் போகும்.
இதேபோல் செக் குடியரசின் தலைநகர் பிராக்கில், நகர சதுக்கத்தில் ஒரு பிரமாண்ட கடிகாரம் உள்ளது. இதை கடிகாரம் என்று சொல்வதைவிட அதிசயம் என்று சொல்லலாம். இது சாதாரணமான நேரம் காட்டும் கடிகாரம் இல்லை. வானசாஸ்திர கடிகாரம். சூரியன், நிலா, இதர கோள்கள் ஆகியவை ஒன்றுக்கொன்று எந்தெந்த திசையில் இருந்தபடி சுழல்கின்றன என்ற கிரக அமைப்பைக் காட்டும். 1410-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கடிகாரம், இப்போதும் இயங்கும் உலகின் மிகப்பழமையான ஒரே வானியல் கடிகாரம். இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்கள் இதை தீயிட்டு அழிக்க முயல, நகர மக்கள் பெரும் போராட்டம் நடத்தி இதைக் காத்தனர்.
குழந்தைகள் விரும்பும் 'பேட்மேன்' போல உடை அணிந்த இந்த வௌவால் மனிதன் ஸ்லோவாக் நாட்டைச் சேர்ந்தவர். 26 வயதாகும் இவர் பெயர் ஜோல்டன் கோஹாரி. தண்ணீர், மின்சாரம் ஏதும் இல்லாத பழைய வீட்டில் தனியாக வாழ்ந்துவரும் இவரை அந்நாட்டு மக்கள் செல்லமாக 'ஸ்லோவாக் பேட்மேன்' என்று அழைக்கின்றனர். இவர் நாட்டில் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் சினிமா ஹீரோ கிடையாது.
ஆனால் மக்களுக்கு சேவை செய்வதுதான் இவரின் வேலை. தன் ஏரியாவில் வசிப்பவர்களுக்கு தன்னால் முடிந்த சின்ன சின்ன உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார். அதுவே அவரின் நிரந்தர வேலையாக மாறிவிட்டது. வெளியே செல்லும்போது இந்த உடையில் இருப்பதால், குழந்தைகள் மத்தியில் ஜோல்டன் மிகவும் பிரபலம்.
தகவல் : ப்ரியா.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment