பார்வை இழந்தவர்கள் என்றால் வாழ்வையே இழந்தவர்கள் என்றுதான் முன்பெல்லாம் மக்கள் கருதினார்கள். அதை மாற்றிக் காட்டிய மாமேதைதான் லூயி பிரெய்லி!.
1809-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் கூப்வெரி என்ற இடத்தில் பிறந்தார். இவர் தந்தை சைமன் ரேனே பிரெய்லி, தோல் பொருட்கள் செய்யும் திறம்மிக்க கலைஞர். லூயி மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையின் தோல் தொழிற்சாலையில் பயன்படும் குத்தூசியைக் கையில் வைத்து விளையாடினார்.
அது அவர் வலது கண்ணில் குத்திக் கிழித்தது. சில நாட்களில் வலது கண் காயத்திலிருந்து நுண்கிருமிகள் இடது கண்ணையும் தாக்கியதால் இரு கண்களிலும் பார்வையை இழந்தார்.
லூயி பிரெய்லியின் பிறந்த வீடு
அந்தக் காலத்தில் பார்வையற்றவர்கள் பிச்சை எடுத்து வாழும் நிலையிலேயே இருந்தனர். இந்நிலை தன் மகனுக்கு வந்துவிடக்கூடாது என்று நினைத்த அவர் தந்தை, எழுத்துகளை ஆணி மூலம் பலகையில் பதித்து அவருக்குக் கல்வி கற்பித்தார். மேலும், யார் துணையுமின்றி நடந்து செல்ல ஊன்று கோல் ஒன்றையும் தயாரித்துக் கொடுத்தார்.
பார்வை இல்லை என்ற குறைபாட்டை அறிவுக் கூர்மை ஈடுசெய்ய, நன்கு படித்து கல்வியில் தேறினார். பின்பு பாரிஸில் இருந்த பார்வை இழந்தோர் சிறப்புப் பள்ளியில் சேர்ந்தார். அங்குதான் தன் வாழ்நாள் முழுவதையும் கற்பதிலும், கற்பிப்பதிலும் கரைந்தார்.
1821-ம் ஆண்டு, பார்வையற்றோருக்கான 'நைட் ரைட்டிங்' என்ற புதிய எழுத்து வடிவம் அந்தப் பள்ளியில் அறிமுகபடுத்தபட்டது. விரலால் தொட்டு அறியக் கூடிய 12 புள்ளிகளை அது கொண்டிருந்ததால் மாணவர்கள் படிப்பது கடினமானதாகவும், சிரமமாகவும் இருக்கும் என்று லூயி நினைத்தார்.
1824-ம் ஆண்டு இம்முறைக்கு மாற்றாக 6 புள்ளிகளைக் கொண்ட புதிய பிரெய்லி குறியீட்டை அவர் உருவாக்கினார். இம்முறையை உலகம் முழுவதும் பார்வையற்றோர் வரவேற்றனர். அதன் மூலம் அவர்களால் வேகமாகவும் எளிதாகவும் படிக்க முடிந்தது. 1829-ம் ஆண்டு பிரெய்லி முறையில் எழுத்தப்பட்ட தன் முதல் புத்தகத்தை வெளியிட்டார் லூயி. மேலும், பார்வை இழந்தோருக்கான பிரெய்லி தட்டச்சு இயந்திரத்தை பியரி என்பவருடன் இணைந்தது தயாரித்து வெற்றி கண்டார்.
சாதனையாளர்களை விழுங்கினால்தான் நோய்களின் அகோரப் பசி அடங்குமோ என்னவோ.... பிரெய்லியைத் தாக்கியது எலும்புருக்கி நோய். 1852-ம் ஆண்டு...தனது பிறந்த நாளைக் கொண்டாடிய இரண்டே நாட்களில், அதாவது ஜனவரி 6-ம் தேதி தனது 43-வது வயதில் மறைந்தார்.
இன்றும் பார்வையற்றோர் தொட்டு உணரும் அந்த ஆறு புள்ளிகளுக்கு இடையே ஒரு பெரும் புள்ளியாக அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தகவல் : சி.பரத்.
0 comments:
Post a Comment