Tuesday, April 10, 2012

புவி வெப்பத்தால் குள்ளமாகிறோமா நாம்?


நமது உடல் அளவுக்கும் தட்ப வெப்பத்துக்கும் தொடர்பு உள்ளதாக அமெரிக்காவின் ப்ளோரிடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளார்கள். மனிதர்கள் மட்டுமல்ல... எல்லா பாலூட்டி இனங்களுமே இப்படித்தானாம். குளிர்ந்த சூழ்நிலையில் இருந்தால் தலைமுறை தலைமுறையாக அதன் சந்ததிகளின் உயரமும் எடையும் வளர்ந்து கொண்டே வந்து, சில ஆயிரம் வருடங்களில் மிகப் பெரிய உயிரினமாக பரிமாணம் பெற்றுவிடும். அதுவே வெப்பம் மிகுந்திருந்தால், படிப்படியாக அளவு குறைந்து மினியேச்சர் உயிரினமாகிவிடுமாம்.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த குதிரைகளின் புதை படிம எச்சங்களை ஆரய்ச்சி செய்த விஞ்ஞானிகள்தான் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

முதன் முதலில் பூமியில் தோன்றிய குதிரைகளான சிப்ருஹிப்புஸ் இனத்தவை, வெறும் 6 கிலோ எடையோடு ஒரு நாயின் அளவில்தான் இருந்தனவாம். அது எப்படி இன்றிருக்கும் பிரமாண்டமான குதிரையாக மாறியது ? அதைத்தான் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துருக்கிறார்கள்.


பல்லாயிரம் வருடங்களாக நம் உலகம் குளிரையும் வெப்பத்தையும் மாறி மாறி அனுபவித்தே வந்திருக்கிறது. கடும் குளிர் சில ஆயிரம் வருடங்கள் என்றால், வெப்பம் சில ஆயிரம் வருடங்கள். இதுவே நம் பூமியின் வரலாறு.

"அப்படியொரு குளிரில் இருந்து உலகம் வெப்பமடைந்த காலத்தில், நாயளவு இருந்த சிப்ருஹிப்புஸ் குதிரைகள், மேலும் படிப்படியாக எடை குறைந்து பூனைக் குட்டி அளவிற்கு மாறி விட்டன. அதன் பிறகு மீண்டும் பூமி குளிர்ந்த போது, அவை மறுபடியும் வளர்ச்சியடைந்து தற்போதிருக்கும் குதிரைகளின் உயரத்திற்கு வந்து விட்டன " என்கிறார் ப்ளோரிடாவில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜோனாதன் ப்ளச்.


மருத்துவர் ஜோனாதன் ப்ளச் (Dr Jonathan Bloch).


குதிரைக்கு நேர்ந்த இந்த பரிமாண மாற்றம் நமக்கும் ஏற்படலாம்; தற்போது அதிகரித்து வரும் புவி வெப்பம், மனிதர்களின் அளவையும் குறைக்கலாம் என்பதே விஞ்ஞானிகளின் கருத்து.

ஆனால், இது உடனடியாக நிகழ்ந்து விடாது. தலைமுறை தலைமுறையாக நம் உடலும் எடையும் குறைந்து கொண்டே வந்து, சில ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு நாம் மினியேச்சர் மனிதர்கள் ஆவோம் என்பதும், புலி, சிங்கம், யானை போன்ற விலங்குகளும் நம்மோடு சேர்ந்து மினியேச்சர்கள் ஆகிவிடும் என்பது ஆறுதல் செய்திகள்....

அப்போது பொம்மை காரில் நிஜ மனிதர்கள் பயணிக்கக்கூடும் !






தகவல்: கோகுலவாச நவநீதன்.

0 comments:

Post a Comment