Friday, April 13, 2012

அறிவுலக நாயகன் அம்பேத்கர்.சிறு சம்பவம்...

காலையில் மழை சோவென கொட்டத்துவங்கியது. சதாராவின் வீதியில் பள்ளிக்குப் புறப்படும் தருவாயில் இருந்த சிறுவர்கள் ஐந்தாறு பேர் மழையையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இதை சாக்காக வைத்துக் கொண்டு இன்று பள்ளிக்கு எப்படியும் மட்டம் போட்டுவிடுவது என்பது அவர்களுடைய திட்டம். அவர்களுள் ஒருவனாக நின்ற பீமின் மனதிலோ வேறு எண்ணம்.(பீமாராவ் சக்பால் அம்பேத்கரின் இயற்பெயர்)

என்னதான் மழை விடாமல் பெய்தாலும் இன்று எப்படியும் பள்ளிக்குச் செல்வது என அவன் முடிவெடுத்திருந்தான். இதைக் கேட்ட மற்ற சிறுவர்கள் பீமைக் கேலி செய்தனர். "உன்னால் இந்த அடை மழையில் பள்ளிக்குச் செல்லமுடியுமா ?" எனச் சவால் விட்டனர்.

அடுத்த நொடியே எதையும் பொருட்படுத்தாமல் பீம் தெருவில் இறங்கி நடக்கத் துவங்கினான். எப்படியெல்லாம் தன் புத்தக பையை ஈரம் படாமல் பாதுகாக்க முடியோமோ, அதற்கான முயற்சிகள் அத்தனையும் மேற்கொண்டபடி, பள்ளியை நோக்கி விறுவிறுவென நடந்துச் சென்றான்.

ஓரிடத்தில் மழை மிகக் கடுமையாகக் கொட்டத் துவங்க, அருகிலிருந்த வீடொன்றில் அவன் ஒதுங்கி நின்ற சமயம், வீட்டிலிருந்து வெளியே வந்த ஒரு பெண்மணி கோபத்துடன் பீமைப் பார்த்தாள். அடுத்த நொடி பீம் தெருவில் விழுந்து கிடந்தான். அவன் பிடித்திருந்த புத்தக பையினுள் இப்போது நீர் முழுவதுமாகப் புகுந்திருந்தது. எழுந்து நின்றான்.

அவனுக்கு எதிரே இன்னமும் அந்தப் பெண்மணி ஆவேசத்துடன் நின்றுகொண்டு இருந்தாள். "நீ ஒரு மகர். (மகர் என்பது தாழ்த்தப்பட்டச் சாதிகளுள் ஒன்று ). என்ன தைரியம் இருந்தால் வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பாய்?" என இரைந்தாள்.

அந்த கொட்டும் மழை ஈரத்தையும் மீறி, தீண்டாமை எனும் கொடிய நெருப்பு சிறுவன் பீமின் இதயத்தை எரித்தது. தனது குழந்தைகளை எந்தப் பேய் நெருங்கிவிடக் கூடாது என்று கிராமத்தில் இருந்து ராம்ஜி சக்பால் (அம்பேத்கரின் தந்தை) நகரத்துக்கு அழைத்து வந்தாரோ, அங்கேயும் அது வெவ்வேறுவிதமான ரூபங்களில் தன் குழந்தைகளைப் பயமுறுத்துவதைக் கண்டு அவர் மிகுந்த வேதனை கொண்டார்.

பீம் வளர்ந்து பெரியவன் ஆனான்.ஆரம்பக் கல்வி முடிந்து, உயர்நிலைக் கல்வியில் சேரும் நேரமும் வந்ததது. பள்ளியில் தனது மகனைச் சேர்க்கச் சென்றபோது, இம்முறை ராம்ஜி கூடுதல் கவனத்துடன் புதிய பள்ளியின் சாதியத் தொந்தரவுகளிலிருந்து மகனைப் பாதுகாக்க ஒரு புதிய உத்தியைக் கையாண்டார்.

அதன்படி பீம் எனும் அவன் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் பட்டப் பெயரான சக்பாலை எடுத்துவிட்டு, பீமின் மேல் பற்று வைத்திருந்த ஆசிரியர் ஒருவரின் பெயரைச் சேர்க்க முடிவு செய்தார். அந்தப் பெயர்தான் அம்பேத்கர். இன்று இந்தியாவின் ஒவ்வொரு கடைசி மனிதனுக்கும் வாழ்வதற்கான நம்பிக்கையையும், போராடுவதற்கான வலிமையையும் ஊட்டும் பெயராக விளங்கிவரும் அந்தப் பெயர் உருவாக்கம் பெற்றது இப்படித்தான். பீமாராவ் சக்பால் என்று அழைக்கப்பட்ட அந்த சிறுவன், அன்றுமுதல் பீமாராவ் அம்பேத்கராக மாறினான்.


ராம்ஜி சக்பாலுக்கு இச்சமயத்தில் மகாராஷ்டிரத்தில் காரேகான் எனும் இடத்தில் காசாளர் வேலை கிடைத்தது. எனவே அவர், தன் பிள்ளைகளை அவர்களின் அத்தையின் பொறுப்பில் விட்டுவிட்டு அங்கே சென்றுவிட்டார். விடுமுறை நாளின்போது அம்பேத்கர், அவரின் சகோதரன் மற்றும் அக்காள் மகன் ஆகிய மூவரும் தங்கள் தந்தையைச் சந்திக்கவேண்டி, காரேகானுக்கு ரயிலில் புறப்பட்டு மசூர் ரயில் நிலையத்தை அடைந்தனர்.

அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. குறித்த நேரத்தில், இவர்கள் வரும் தவகல் கிடைக்காத காரணத்தாலோ என்னவோ, இவர்களை அழைத்துப்போக ரயில் நிலையத்துக்குத் தந்தை வரவில்லை. மூவரும் வாடகைக்கு ஒரு மாட்டு வண்டியைப் பிடித்து காரேகான் செல்லத் தயாராயினர். பாதித் தொலைவு சென்றிருப்பார்கள்... வண்டிக்காரனுக்கு தான் மகர் இனச் சிறுவர்களை ஏற்றிச் செல்கிறோம் என்பது தெரியவர, சட்டென ஆத்திரப்பட்டவன் அப்படியே அந்த வண்டியைக் குடை சாய்த்து, மூன்று சிறுவர்களையும் கீழே உருண்டு விழச் செய்தான். அதன்பிறகு மிகுந்த சிரமத்துக்கிடையே மூவரும் தட்டுத்தடுமாறி, ஒருவழியாகக் காரேகானுக்குச் சென்று சேர்ந்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாக மிகுதியால் ஒரு குளத்தில் இறங்கி நீர் குடிக்கச் சென்றபோது, ஊரார் ஒன்று சேர்ந்து துரத்தி அடித்த சம்பவம், சிகை திருத்தும் நிலையத்தில் முடி பாதி வெட்டப்பட்ட நிலையில் அரைகுறையாக இறக்கிவிடப்பட்டு அவமானத்தோடு வீடு வந்து சேர்ந்து, சகோதரிகளால் மீதமுள்ள முடி திருத்தப்பட்ட சம்பவம் எனச் சிறுவயதிலேயே தீண்டாமையின் கொடுமை வெந்தணல் கொப்புளங்களாக அவர் உள்ளத்தில் நீர் கட்டி நின்றன. கல்வி ஒன்றுதான் இவை அனைத்துக்கும் தீர்வு என்பதை நன்கு உணர்ந்துகொண்ட அம்பேத்கர், முன்னிலும் தீவிரமாகப் படிப்பில் நாட்டம் செலுத்தத் துவங்கினார்.

பள்ளியில் அம்பேத்கர் தனது ஆழ்ந்த படிப்பாலும், இனிமையான சுபாவத்தாலும், எதனையும் ஆய்ந்தறிந்து வெளிப்படுத்தும் நுண்ணறிவாலும் தனித்துவமான மாணவனாக விளங்கினார். என்றாலும், சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மூளையில் புற்றுநோயாக ஒட்டிக் கொண்டு இருந்த சாதியம் எனும் வெறி, அவரை மனதளவில் பள்ளியிலிருந்து விலகியிருக்கவே செய்தது.

இதனால், பள்ளிகாலங்களில் அம்பேத்காருக்குத் தோழர்கள் என யாரும் இல்லை. ஆனால், அந்தக் குறையைப் புத்தகங்கள் போக்கின. ஒரு நல்ல நூலைக் காட்டிலும் சிறந்த நட்பு வேறு எதுவாக இருந்துவிட முடியும்? சமயம் கிட்டும்போதெல்லாம் அந்த நண்பர்களுடன் தனது நேரத்தை முழுமையாகச் செலவிடுவார் அம்பேத்கர். மாலை நேரங்களில் அருகில் இருக்கும் பூங்காக்களுக்குச் சென்று, இந்த உலகத்தையும் மனிதர்களையும் வேடிக்கை பார்க்கத் துவங்குவார்.


இப்படிச் சிறு வயதிலேயே ஆழ்ந்த சிந்தனையும் தனிமையுமாகக் காணப்பட்ட அந்தச் சிறுவனை, அந்தச் சிறுவனை, அந்தப் பூங்காவுக்கு வழக்கமாக வரும் ஒரு நபர் நாள்தோறும் கவனிக்கத் துவங்கினார். அவர் பெயர் கிருஷ்ண அர்ச்சுன ராவ் கெலுஸ்கர். வில்சன் ஹைஸ்கூலின் தலைமை ஆசிரியரான அவர், அப்போதே இந்தச் சிறுவனிடம் அசாத்தியமானதொரு திறமை இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்.

அந்த வருட மெட்ரிகுலேஷன் தேர்வுகளின் முடிவுகள் வெளியானபோது, தாழ்த்தப்பட்ட மாணவர்களில் ஒருவன் முதல் முறையாக மெட்ரிக்கில் தேர்ச்சி பெற்றது மிக முக்கியமான செய்தியாக அங்கிருப்பவர்களால் பேசப்பட்டது. 'நமது சமூகத்தில் முதல் முறையாக ஒருவன் செய்திருக்கும் சாதனையை நாம் கொண்டாடவேண்டும்' என அந்த மக்கள் முடிவு செய்து, அதற்கென ஒரு விழாவை ஏற்பாடு செய்தார்கள். அந்த விழாவுக்கு அவர்கள் சிறப்பு விருந்தினராக ஒருவரை அழைத்தார்கள். அவர் கெலுஸ்கர். 'பூங்காவில் பார்த்து, எந்த மாணவனைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் கொண்டிருந்தோமோ, அதே மாணவனுக்குத்தான் நாம் பரிசளிக்கப் போகிறோம்' என்பதை அறிந்து, அந்த ஆசிரியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.


இனி....


சாதாரண ஒரு படைவீரனின் மகனாக, வரலாற்று வார்த்தைகளால் ஒடுக்கப்பட்ட குலத்தில் பிறந்து, இந்தியாவின் ஈடு இணையற்ற அறிஞராக, சாதி வெறியின் தலை மேல் சம்மட்டி அடிகொடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புது வெளிச்சம் தந்த புரட்சி வீரனாக மறைந்த அம்பேத்கரின் வாழ்வில் எதிர்கொண்ட வேதனைகளின் சரித்திரம் இனி வேறு எவராலும் நினைத்துப் பார்க்க முடியாதது.

சிறுவயதில், பள்ளியிலும் மழைக்கு ஒதுங்கிய வீட்டிலும் பட்ட அவமானங்களினால் அன்று மட்டும் முடங்கியிருந்தால் இன்றைய இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை எப்படியாக இருக்கும் என ஒருமுறை யோசித்துப் பாருங்கள். அன்று அவரை சுற்றிச் சூழ்ந்திருந்தது அடர் இருட்டு, கடைத்தேறவே வழியில்லாமல் சாதி வெறியர்களால் உருவாக்கப்பட்ட இருட்டு. அப்போது அவருக்கு முன் இருந்த ஒரே தூரத்து வெளிச்சம் கல்வி. கண்களை இறுக மூடி தளராத நெஞ்சுரத்துடன் அந்த வெளிச்சத்தை மட்டுமே பற்றுக்கோடாக்கி அவர் நடை பயின்றதன் பலன் இன்று லண்டன் மியூசத்தில் பெருமைப்படத்தக்க அறிஞர்களின் வரிசையில் கார்ல் மார்க்ஸுக்கு இணையான இடத்தில் அவரைப் புகைப்படமாக மாட்டப்படும் அளவுக்கு உயர்த்தியுள்ளது.

அரசியல், சமூகம், சட்டம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, வணிகம், கல்வி, சமயம் என சகல துறைகளிலும் அசாத்தியமான அறிவாற்றலும், எழுத்து வன்மையும், மேதமையும் கொண்டிருந்த இதுவரையிலான இந்தியாவின் ஒரே அறிவுலக நாயகன் அம்பேத்கர் மட்டுமே. அப்படிப்பட்ட மேதை வேறு எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் கணக்கில்லாத விருதுகளைத் தந்து அந்த நாட்டின் அரசாங்கம் பெருமைக் கொண்டிருக்கும்.

ஆனால், அப்பேர்ப்பட்ட தலைவருக்கு, 'பாரத ரத்னா' விருது கொடுக்கப்பட்டதே அவர் இறந்து இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்த பிறகுதான் என்பது நாம் அனைவரும் வருத்ததோடு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.

எந்த நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை வடிவமைக்க அம்பேத்கர் அல்லும் பகலும் அயராது வியர்வை சிந்தினாரோ அந்தச் சட்டங்களை செயல்படுத்தும் அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டடம் அவரை தேசத்தின் சிற்பியாக அங்கீகரிக்க மனமில்லாமல் அவரது புகைப்படத்துக்கு அனுமதி மறுத்து வந்தது. பாரதப் பிரதமராக வி.பி.சிங்.பதவி ஏற்று கட்டளை இட்ட பிறகுதான் அந்தத் தடையும் விலகி நம் நாடாளுமன்றம் தன் கதவுகளைக் திறந்து வழிவிட்டது.

(இன்றும் கிராமப்புற மக்கள் தங்களின் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு கொஞ்சமேனும் பொருளாதார சுவாசக் காற்றை சுவாசிக்க காரணமான, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை தன் ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தியவர்தான் திரு.வி.பி.சிங் அவர்கள்)

இவை அனைத்துக்கும் சிகரமாக இருக்கும் இன்னொரு முக்கியமான விஷயம் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு உண்டான நெருக்கடி...! இயக்குனர் ஜாபர் படேல் இயக்கத்தில் என்.எப்.டி.சி. தயாரிப்பில் உருவான அந்தத் திரைப்படம் கூட தற்பொழுதுதான் வெளிவந்து சில நாட்களில் ஆதிக்க சாதியின் அழுத்தத்தில் திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது.வாழ்நாள் முழுவதும் எந்த தேசத்தின் உண்மையான அகவிடுதலைக்காகப் போராடினாரோ அந்த தேசத்தில்அவருக்கான முழுமையான மதிப்பும் மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பதற்க்குத்தான் எத்தனை தடங்கல்கள், எத்தனை தடைகள்!

இவையனைத்தையும் கடந்து இதே தேசத்தில் இன்னொரு புறம் உலகம் வியக்கும் ஒரு மகத்தான பெருமையும் அவருக்கு உண்டு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களிலும் இன்று நின்றுகொண்டிருக்கும் அவரது சிலைகளின் சாதனை, உலகின் வேறு எந்தத் தலைவருக்கும் இல்லாத பெருமைகளில் ஒன்று. ஆனால், எண்ணிக்கையில் 6 லட்சமாக இருந்தாலும் அவை இரண்டாகப் பிளவுண்டு 12 லட்சம் கிராமங்களாகவே இந்தியா இன்றும் காணப்படுவதுதான் மிக மோசமான வேதனை!


நூல்: அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு.
ஆசிரியர் அஜயன் பாலா.
விகடன் வெளியீடு.

முன்படம் : வே.மதிமாறன் வலைப்பூ.
மற்ற படங்கள் : கூகுள் இமேஜ்.

அண்ணல் அம்பேத்கரைப் மற்றொரு நிகழ்வு:

0 comments:

Post a Comment