Friday, April 6, 2012
குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன் ?
தேர்வு நேரம் இது. நமது கல்வி முறை மனப்பாடம் செய்வதையே மையமாகக் கொண்டு இயங்குகிறது. 'படி...படி...' என்று பெற்றோரும் பிள்ளைகளை வாட்டி வதைக்கும் காலத்தில் அமெரிக்காவில் நினைவு தவறுதல், கவனம் சிதைவுறுதல் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஓஹியோவில் உள்ள தேசிய குழந்தைகள் மருத்துவமனை வெளியிட்ட அந்த ஆய்வில், 'குழந்தைகள் படிக்க சிரம்பப்படுவது ஏன்' என்பது குறித்த அதிர்ச்சியளிக்கும் விபரங்கள் உள்ளன.
சின்ன வயதில் விளையாட்டின்போது சில குழந்தைகள் தலையில் லேசாக அடிபட்டு பின் சரியாகி விடுவதைப் பார்த்திருப்போம். ஆனால், இந்தக் காயம் ஆறியதால், அது முடிந்து விட்டதாக அர்த்தமில்லையாம். அது மூளைக்குள் ஊடுருவி அழுத்தமாக நினைவைத் தாக்கி, மறதியை அதிகரிக்கச் செய்கிறதாம். 'லட்சக்கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் இப்படி காயங்களுடன் வருகின்றனர். நாமும் சிகிச்சையளித்து விட்டு குழந்தை குணமாகி விட்டதாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். ஆனால் அப்படி சிகிச்சை பெற்ற குழந்தைகளில் பலர் இந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்' என்கிறார் இந்த மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் கீத்யீட்ஸ். சில குழந்தைகளுக்கு ஓராண்டு வரை இந்த நினைவு மறதி பாதிப்பு நீடிக்கிறதாம்.
அடிபட்டு சரியாகிவிட்டாலும் அலட்சியமாக இருக்காமல் குழந்தையைக் கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தலைவலி, கோபம், எரிச்சல், சமநிலை குலைதல், படிப்பில் கவனமின்மை, அசதி, மறதி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக குழந்தையை பரிசோதிக்க வேண்டும் என்று அமெரிக்க நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். 8 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே இத்தகைய பாதிப்புக்கு அதிகம் ஆளாகின்றனர்.
அடி, விபத்து போன்ற புறக்காயங்கள் மட்டுமின்றி, கடுமையான வன்முறையை சந்தித்தல், கோரமான விபத்துகள், படுகொலைகளைப் பார்த்தல், பயம், புறக்கணிக்கப்படுதல், அவமதிக்கப்படுதல் போன்ற அகரீதியான காயங்களும் குழந்தைகளுக்கு ஆழமான பாதிப்பை மூளைக்குள் ஏற்படுத்துவதாக இந்த ஆய்வு கூறுகிறது. குழந்தைகளை விளையாட அனுமதிக்காமல் வீட்டுக்குள் முடக்குவதும் அதிகமான படிப்புச் சுமையை ஏற்றுவதும் குழந்தையின் மூளையை மந்தமாக்கி விடுகிறது என்றும் உளவியல் நூல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, குழந்தை மதிப்பெண் எடுக்கவில்லை என்பதற்காக தண்டிப்பதைத் தவிர்த்து, குழந்தையின் நடவடிக்கைகளை தாயுள்ளத்துடன் கண்காணித்து உதவி செய்தால், அவசியமான நேரத்தில் சிகிச்சையளித்தால், நிச்சயம் எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் !
தகவல் : செந்தூரம் ஜெகதீஷ்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment