Saturday, April 28, 2012

கருப்பு மருந்துகளின் தந்தை!




Louis Pasteur

பாம்பு,தேள், போன்ற விஷ ஜந்துகளுக்கு மட்டுமல்ல...தான் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க் குட்டிகளிடமும் கூட மனிதன் அப்போதெல்லாம் பயந்து நடுங்கிய காலம் அது. ஆம், வெறிநாய்க்கடி என்பது அப்போதெல்லாம் ஓர் உயிர்கொல்லி நோய். எந்த மருந்துக்கும் கட்டுப்படாத அந்த ராபீஸ் நோயைக் கட்டுபடுத்தினார் லூயி பாஸ்டர் என்ற மருத்துவ மேதை.

பிரான்ஸில் 1822-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பிறந்த லூயி பாஸ்டர், சிறுவயது முதலே வேதியியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்தினார். அந்த ஆர்வம்தான், படிப்பை முடித்தவுடன் சிறிய அளவில் ஒரு ஆய்வுக் கூடத்தை நிறுவவும் அவரைத் தூண்டியது. ஒரு முறை லூயி தன் ஆய்வுக் கூடத்தில், வேதியியல் மாற்றங்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தபோது, கிருமிகள் எனப்படும் நுண்ணுயிரிகளை கவனித்தார். உலகையே வருத்திக் கொண்டிருக்கும் நோய்களையும் இந்த நுண்ணுயிரிகளையும் பொருத்திப் பார்த்தார். எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணம் கிருமிகளே, கிருமிகளின்றி ஓரணுவும் அசையாது என்று தன் ஆராய்ச்சிகளின் மூலம் நிரூப்பித்தார்.

நோய்களுக்கான காரணத்தைக் கண்டறிந்ததோடு நிற்காமல், தடுப்பு மருந்துகளை உருவாக்கும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கினார்.முதலில் பால் போன்ற திரவங்களில் உள்ள தீய பாக்டீரியாக்களை அழிக்கும் வழிமுறையைக் கண்டறிந்தார். இன்றுவரை பால் தொழிற்சாலைகளில் பின்பற்றப்படும் இந்த வழிமுறை, லூயி பாஸ்டரின் பெயரிலேயே 'பாஸ்டரைஸிங்' என்று அழைக்கபடுகிறது.


அதன்பின் கடும் முயற்சியின் விளைவாக, ஆந்த்ராக்ஸ் மற்றும் வெறிநாய்க்கடி (ராபீஸ்) கிருமிகளைக் கட்டுபடுத்தும் வழி முறையைக் கண்டுபிடித்தார் லூயி.

1885-ம் ஆண்டில் ஜோசப் மெயிஸ்டர் என்ற ஒன்பது வயது சிறுவனை வெறிநாய் ஒன்று 15 முறை கடித்துவிட்டது. அன்றையை மருத்துவர்கள் அனைவரும் கை விரித்துவிட்ட நிலையில், அவனுக்கு லூயி தந்து தடுப்பு மருந்து மூலம் சிகிச்சை அளித்தார். உயிரையும் காப்பாற்றினார். அந்தச் சிகிச்சையின் வெற்றிக்குப் பிறகு, லூயி உலகம் முழுவதும் பிரபலமாகி, லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் தனது 5 குழந்தைகளில் மூவரை டைபாய்டு நோய்க்கு பலி கொடுத்தவர் லூயி. பிற்காலத்தில் அவர் டைப்பாய்டு மட்டுமல்லாமல், டைபஸ், மஞ்சள் காமாலை, டிப்தீரியா, இன்புளூயன்சா போன்ற நோய்களையும் தன் மருந்துகளால் கட்டுபடுத்திக் காட்டினார்.

இறுதியாக 1895-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி... லூயி பாஸ்டர் என்ற பொக்கிஷத்தை இந்த உலகம் இழந்தது. மரணத்தோடு போராட அவர் கொடுத்துவிட்டுப் போன சில மருத்துவப் பொக்கிஷத்தை மரணத்தால் பறித்துக் கொள்ள முடியுமா என்ன ?




தகவல் : சி.பரத்.

0 comments:

Post a Comment