
பிரமாண்ட டைட்டானிக் கப்பல், 1500 பேரை பலி கொண்டபடி மூழ்கிப் போன வருடம், 1912 . நம்ம ஊர் என்றால் இந்நேரம் நூற்றாண்டு விழா கொண்டாடியிருப்போம். ஆனால், அமெரிக்கர்கள் ஒரு படம் எடுத்து உலகம் முழுக்க வசூலை வாரிக் குவித்த பிறகும் கூட, 'டைட்டானிக் ஏன் முழ்கியது? என்ற ஆராய்ச்சியைக் கைவிடவில்லை. "டைட்டானிக் மூழ்கியதற்கு நிலவுதான் காரணம் !" என்று சமீபத்தில் பரபரப்பாக அறிவித்திருக்கிறார்கள் அவர்கள்.
'ஒரு பெரிய பனிப்பாறையில் மோதித்தானே டைட்டானிக் கப்பல் கவிழ்ந்தது' என்ற புருவம் சுருக்குகிறீர்களா ? சரிதான், பனிப்பாறைதான் முதல் குற்றவாளி. ஆனால், அவ்வளவு பெரிய பனிப்பாறை, அந்த நேரத்தில், அந்த இடத்தில் எப்படி வந்தது? இங்கேதான் இரண்டாம் குற்றவாளியாகக் கைகட்டி நிற்கிறது நிலா.
"டைட்டானிக் மூழ்கிய அதே ஆண்டில் வழக்கத்துக்கு மாறாக நிலவு நம் பூமியை மிகவும் நெருங்கி வந்திருக்கிறது.1400 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் வானவியல் அதிசயம் இது !" என்கிறார் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண பல்கலைக்கழக இயற்பியலாளர் டொனால்டு ஆல்சன்.
'சரி, இதற்கும் கப்பல் மூழ்குவதற்கும் என்ன சம்பந்தம் ?"
- அதையும் விளக்குகிறது அவர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு.
"அந்த வருடத்தில் பூமியை நெருங்கி வந்த நிலவு, மிக மிகக் குறைந்தபட்ச தூரத்துக்கு வந்தது 1912 ஜனவரி 4 ம் தேதி. இது நடந்தது சுமார் 3 மாதம் கழித்து... அதாவது, 1912 ஏப்ரல் 15 அன்றுதான் டைட்டானிக் மூழ்கியது. பொதுவாக பனிப்பாறைகள் வட துருவத்தில்தான் உருவாகும். அதுவும் பனிக்காலமான வருட இறுதியில்தான் அவை உருவாகும்.

டைட்டானிக் மூழ்கிய இடம், வட துருவத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. மூன்றே மாதத்தில் ஒரு பனிப்பாறை அவ்வளவு தூரம் பயணிப்பது கடினம். பயணித்தாலும் அலைகளால் தாக்கப்பட்டு, கரைந்து குட்டிப் பனிக்கட்டி ஆகிவிடும்.

ஆனால், அந்த வருடத்தில் நிலவு பூமிக்கு அருகில் இருந்ததால், கடல் அலைகளில் நிறைய மாறுதல்கள் இருந்திருக்க வேண்டும். வழக்கத்துக்கு மாறான வலிமையான அலைகள் மற்றும் கடல் நீரில் ஏற்பட்ட அசைவுகளே அந்தப் பாறையை அவ்வளவு தூரம் நகர்த்திக் கொண்டு வந்திருக்க வேண்டும். எதிர்பாராத இடத்தில் அது மோதி, டைட்டானிக்கை பதம் பார்த்திருக்கிறது' என்கிறது விஞ்ஞானிகள் குழு.
தகவல்: கோகுலவாச நவநீதன்.
1 comments:
That is a very interesting finding.
Post a Comment