Tuesday, April 24, 2012

தேங்காய் நண்டு !

(Coconut Crab-Chennai Museum)

"மனிதர்களில் பராக்கிரமசாலிகளை நாம் பாராட்டத்தான் செய்வோம். ஆனால், விலங்குகளில் மட்டும் பராக்கிரமசாலிகளை வசை பாடப் பழகிவிட்டோம். அப்படி நம்மிடம் கெட்ட பெயர் வாங்கிய பராக்கிரமசாலி தான் திருட்டு நண்டு எனப்படும் தேங்காய் நண்டு!"

-- காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பாடம் செய்யப்பட்ட தேங்காய் நண்டைக் காண்பித்து இந்தத் தகவலைச் சொன்னார் சென்னை அருங்காட்சியகத்தின் விலங்கியல் பிரிவு காப்பாட்சியர் அசோகன். அப்படி என்ன பராக்கிரமம் இந்த நண்டுக்கு ? அதையும் அவரே விளக்குகிறார் ?

"நிலத்தில் காணப்படும் முதுகெலும்பற்ற விலங்கினங்களிலேயே இதுதான் மிகப் பெரியது. மூன்றடிக்கு மேல் நீளமும் நான்கு கிலோ வரை எடையும் இருக்கும். தண்ணீரில் வாழும் பெரும்பாலான நண்டுகளுக்கு மத்தியில்.... நிலத்தில், அதிலும் தென்னை மரங்கள் அடர்ந்த பகுதிகளில் அதிகம் வாழும் நண்டுகள் இவை. தென்னை மரத்தில் ஏறி தேங்காயைப் பறித்து அதன் நாரையும் உரித்து உடைத்து உட்கொள்வதால்தான் தேங்காய் நண்டு என்ற பெயரைப் பெற்றது.

மனிதர்கள் வாழக்கூடிய பகுதிக்கு இது வந்தால் அவ்வளவுதான். மனிதர்கள் பயன்படுத்தும் சட்டி,பானை இத்யாதிகளை எல்லாம் ஏதோ உணவுப் பொருள் என்று நினைத்து உருட்டிக் கொண்டு போய்விடும். அதனால்தான் திருட்டு நண்டு என்றும் பெயர் பெற்றது.


இந்த வகை நண்டுகள் கடல் நீரில்தான் முட்டைகளை இடும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் சிப்பி, நத்தை,சங்கு, ஆமை போன்ற உயிரினங்களின் ஓடுகளில் ஒட்டிக்கொண்டு சிறிது காலம் வாழும்.கொஞ்சம் வளர்ச்சியடைந்தாலும் தரைக்கு வந்து நிலத்தில் குழிகளைத் தோண்டி, மெத்தென்று தேங்காய் நார்களைப் போட்டு அதில் வசிக்க ஆரம்பிக்கின்றன.

இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் கடல் தீவுகளில் அதிகம் வாழும் தேங்காய் நண்டுகள், பல நிறங்களிலும் காணப்படுகின்றன. நல்ல நுகரும் சக்தி இருப்பதால் இவை எளிதில் இரையைக் கண்டுபிடிக்கின்றன. பொதுவாக இது மற்ற நண்டினங்களிருந்து மாறுபட்ட் இருப்பதால் இதை உன்ன விரும்ப மாட்டார்கள்.

ஆனால், இந்த நண்டின் மாமிசத்தில் மருத்துவ குணம் உண்டென்று ஒரு புரளி உள்ளதால் சில நாடுகளில் இதை வேட்டையாடுவதும் உண்டு. இதனால் இந்த இனம் சில பகுதிகளில் முற்றிலும் அழியும் நிலைக்கு வந்துவிட்டது!" என்று அபயாமணி அடித்தார் அசோகன்.


இன்றுவரை நாம் ஆச்சரியப்படுவதற்கென்று இருக்கும் ஒன்றிரண்டு உயிரினங்களையும் நம் மூடநம்பிக்கைகள் அழித்துவிடக் கூடாது அல்லவா ?









தகவல் : டி.ரஞ்சித்.

1 comments:

கோவை நேரம் said...

நல்ல பகிர்வு..அரிய தகவல்

Post a Comment