Friday, February 3, 2012

பாட்டியும் - பேரனும்


பள்ளி நாட்களில் இனிமையானது கோடைகாலத்தில் வரும் விடுமுறை நாட்கள்தான். நினைத்துப் பார்த்தால் அந்த நாட்களில்தான் புதுப்புது விளையாட்டுகளும், புதுப்புது இடங்களும், புதுப்புது நண்பர்களும் அறிமுகமாகிறார்கள். நம் சேட்டை பொறுக்காமல் விரும்பியோ, விரும்பாமலோ, அந்த நாட்களில்தான் வெளியூரில் இருக்கும் பாட்டி வீட்டுக்கோ, சித்தி வீட்டுக்கோ, ஊர் கடத்தப்படுகிறோம். அந்த விடுமுறை நாளின் அனுபவத்தை அழகாகச் சொல்கிறது 'தி வே ஹோம்' (The Way Home)

ஏழு வயது பையனான சாங்க்வுவை அவனது அம்மா பாட்டி வீட்டுக்கு முதல் முறையாக அழைத்துச் செல்கிறாள். 75 வயதாகும் பாட்டி போக்குவரத்து அதிகம் இல்லாத ஒரு மலையோர கிராமத்தில் வசிக்கிறாள். காது கொஞ்சம் மந்தம். வாய் பேச முடியாது. நகரத்தில் வளர்ந்த சிறுவனான சாங்க்வுவுக்கு பாட்டி வீட்டுக்குப் போக கொஞ்சமும் விருப்பம் இல்லை. பஸ்ஸிலிருந்து இறங்கியதும் வீட்டுக்கு வர மறுக்கிறான். அம்மா இரண்டு அடி போட்டு அவனை இழுத்துச் செல்கிறாள்.

அதிக மனித நடமாட்டமே இல்லாத மிகச்சிறிய கிராமம். மின்சார வசதி இல்லாத சிறிய கூரை வீடு.

சாங்க்வு சுவரில் படர்ந்த நூலாம்படையையும், இடுக்குகளில் ஓடும் பூச்சிகளையும் வெறுப்புடன் பார்க்கிறான். அம்மா பாட்டியிடம் சாங்க்வுவை அறிமுகப்படுத்துகிறாள். அவன் முகம் திருப்பிக்கொள்கிறான். அவனுக்குப் போதுமான அளவுக்கு குளிர்பானங்கள், சாக்லேட்டுகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை அனைத்தையும் கொடுத்துவிட்டு அன்று மாலையே அம்மா திரும்புகிறாள்.

அம்மாவை வழியனுப்பிவிட்டு பாட்டியும் பேரனும் அந்த மலைப்பாதையில் வீடு திரும்பும்போது பாட்டி அன்புடன் சாங்க்வுவின் கையைப் பிடிக்கிறாள். கையைத் தட்டிவிடும் சாங்க்வு பாட்டியைத் திட்டுகிறான். அடிக்க கை ஓங்குகிறான். அதற்கு பதில் பேச முடியாத பாட்டி தனது கையை நெஞ்சில் தடவி ஏதோ செய்கை செய்கிறாள். என்ன சொல்கிறாள் என்று புரியாத சாங்க்வு அவளைப் பைத்தியம் என்று திட்டுகிறான். வீடு திரும்பும்போது பாட்டி கூனல் விழுந்த முதுகுடன் கம்பு ஊன்றி முன்னால் செல்ல பேரன் பத்தடி பின்னால் செல்கிறான். பாட்டி திரும்பிப் பார்த்தால் சாங்க்வு முகம் திருப்பிக் கொள்கிறான். நீண்ட பாதையின் வழியே நடந்து பாட்டியும் பேரனும் வீடு திரும்புகிறார்கள்.

நகரத்தில் வளர்ந்த சாங்க்வுவுக்கு கிராமத்தில் பொழுதுபோக்க ஏதுமில்லை. அங்கிருக்கும் பழைய கருப்பு வெள்ளை டீவியின் ட்யூனரைத் திருப்பிப் பார்க்கிறான். அது கையோடு வந்து விடுகிறது. தான் கொண்டு வந்த சிறிய வீடியோ கேம் பிளேயரைக் கையில் வைத்துக் கொண்டு விளையாடத் துவங்குகிறான்.

பாட்டி வைத்த உணவை சாப்பிடாமல் அம்மா வாங்கித்தந்த டின்னில் அடைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுகிறான். பாதி ராத்திரியில் வயிற்றைக் கலக்குகிறது.அந்தச் சிறிய வீட்டில் வெஸ்டர்ன் டாய்லெட் கிடையாது. பாட்டி சத்தமில்லாமல் பெரிய ஊறுகாய் ஜாடி ஒன்றைத் தருகிறாள். அதில் உட்கார்கிறான். பாட்டி பாவம்போல பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறாள்.


காலையில் ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்று தெருவில் போனால் மனித நடமாட்டமே இல்லாத சரியான கிராமம். பாட்டி பரணில் இருக்கும் பழைய மரத்தால் ஆன விளையாட்டுச் சாமான்களை எடுத்துக் கொடுக்கிறாள். ஆனால், அவனுக்குப் பிடித்ததோ பிளாஸ்டிக் கார்கள்,ரோபோ பொம்மைகள். எப்போதும் வீடியோ கேம் விளையாடுகிறான். ஒருநாள் வீடியோ கேம் விளையாடும்போது பாட்டியின் கைகள் ஊசி நூலுடன் மெல்ல அவனருகே வருகின்றன. எரிச்சலுடன் திரும்பிப் பார்க்கும் சாங்க்வு ஊசியில் நூலைக் கோர்த்துக் கொடுக்கிறான்.

ஓயாமல் விளையாடிதால் வீடியோகேமின் பேட்டரி தீர்ந்து விடுகிறது. இருந்த ஒரு பொழுதுபோக்கும் காலி. என்ன செய்வது? பாட்டியிடம் பேட்டரி வாங்கப் பணம் கேட்கிறான். பாட்டியிடம் பணம் இல்லை. அவள் தனது கையை நெஞ்சில் வட்டம் போட்டுக்காட்டி ஏதோ சைகை செய்கிறாள். அது என்னவென்று புரியாத சாங்க்வு கோபத்துடன் அவளைத் தள்ளிவிடுகிறான். வீடு முழுக்க கலர் பென்சிலால் பாட்டியை கேலிச்சித்திரம் வரைந்து வைக்கிறான். வீட்டில் பணம் எங்காவது இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறான் சாங்க்வு. கிடைக்காத கோபத்தில் பாட்டியின் செருப்புகளை எடுத்து ஒளித்துவைக்கிறான். ஆனாலும், பாட்டி அந்த தள்ளாத வயதிலும் வெறுங்காலோடு தண்ணீர் எடுக்கப் போகிறாள்.

ஒருநாள் பாட்டி பேரனிடம் சாப்பிட என்ன வேண்டும் என்று சைகையில் கேட்கிறாள். சாங்க்வு தனக்கு பிடித்த பிட்ஸா, ஹம்பர்கர், கென்டுகி சிக்கன் வேண்டும் என்கிறான். சைகையின் வழியே அவன் கேட்பது கோழி என்று புரிந்து கொண்ட பாட்டி வீட்டிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்புகிறாள். முதன் முறையாகச் சிரிக்கும் சாங்க்வு பாட்டியை வழி அனுப்பி வைக்கிறான். வீட்டில் வரைந்த பாட்டியைக் கேலி செய்யும் சித்திரங்களை அழிக்கிறான். வரும்போது மழையில் நனைந்து கொண்டே பாட்டி ஒரு கோழியுடன் வருகிறாள். பேரனுக்குச் சமைத்துத் தருகிறாள். பசியில் தூங்கி விழித்த சாங்க்வு, தான் கேட்ட கென்டுகி சிக்கன் இது இல்லை என்று அறிகிறான். அவித்தது எனக்குப் பிடிக்காது, வறுத்துத் தா என்று அழுகிறான். ஆனாலும், வேறு வழியில்லை. பசி தாங்காமல் சாப்பிடுகிறான்.


மறுநாள் எழுந்து பார்த்தால் பாட்டி அசையாமல் படுத்திருக்கிறாள். சாங்க்வு பயத்துடன் அவள் நெஞ்சில் காதை வைத்து இதயம் துடிக்கிறதா என்று பார்கிறான். மழையில் நனைந்ததால் பாட்டிக்குக் காய்ச்சல் வந்திருப்பதை அறிந்து அவளுக்கு கம்பளிகளைப் போர்த்துகிறான். இருக்கிற உணவைத் தட்டில் வைத்து பாட்டிக்குக் கொடுக்கிறான்.


பாட்டியின் மீது மெல்ல அவனுக்கு அன்பு வரத்துவங்குகிறது. பாட்டியின் ஊர் அவனுக்குப் பிடித்தமானதாக மாறத் துவங்குகிறது. கிராமத்தில் அவன் வயதுடைய ஒரு சிறுமியும், வயல் வேலை செய்யும் சியோல் எனும் ஒரு பையனும் அவனுக்கு அறிமுகமாகிறார்கள். மலைப்பாதையில் இருக்கும் வெறிபிடித்த மாடு ஒன்று வழியில் வரும் ஆட்களைத் துரத்துகிறது. ஒருமுறை சியோல் மாடு துரத்த ஓடித் தப்பிக்கிறான். இது சாங்க்வு, அவனது தோழி இருவருக்கும் ஒரு விளையாட்டாக இருக்கிறது.

பாட்டி தனது தோட்டத்தில் விளைந்த பூசணிப்பழங்களை எடுத்துக் கொண்டு சாங்குவுவையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள சிறு நகரத்தின் சந்தைக்கு வருகிறாள். பூசணிகளை விற்று ஹோட்டலில் தன் பேரனுக்குப் பிடித்தமான உணவை வாங்கிக் கொடுக்கிறாள். புதிய ஷு வாங்கிக் கொடுக்கிறாள். பஸ்ஸில் ஏறும்போது வேறு ஏதாவது வேண்டுமா என்று பாட்டி சைகையில் கேட்கிறாள். இன்னொரு குழந்தை சாப்பிடும் சாக்லேட் வேண்டும் என்கிறான். அது என்ன சாக்லேட் என்று தெரியாததால் அவள் சாப்பிட்டுப் போட்ட கவரை எடுத்துச் சென்று காட்டி அதே சாக்லேட்டை கடையில் வாங்கி வருகிறாள்.

அதே பஸ்ஸில் சாங்க்வுவின் கிராமத்து தோழர்கள் வருகிறார்கள். பாட்டி சியோலிடம் ஏதோ சைகையில் சொல்கிறாள். சாங்க்வு என்ன சொல்கிறாள் என்று கேட்கிறான். வேலை இருப்பதால் பிறகு வருவதாகச் சொல்கிறாள் என்கிறான். பாட்டியின் சைகை மொழி தனக்குத் தெரியும் என்று சியோல் சொல்கிறான். சாங்க்வு ஊருக்கு வந்து காத்திருக்கிறான். பஸ் ஒவ்வொன்றாக வந்தபோதும் பாட்டி வரவே இல்லை. பேரனுக்கு செலவழிக்கப் பணம் வேண்டும் என்பதால் பஸ்ஸில் வராமல் கையில் மூட்டையுடன் கடைசியில் பாட்டி நடந்தே வருகிறாள். மனம் நெகிழ்ந்து சாங்க்வு பாட்டியின் மூட்டையை வங்கிக் கொண்டு நடக்கிறான்.

ஒருநாள் சியோல் தலையில் பாரத்துடன் வருகிறான். இதைப் பார்த்த சாங்க்வு அவனை ஏமாற்றுவதற்காக பின்னால் வெறிப்பிடித்த மாடு வருவதாக கத்துகிறான். பயந்து ஓடிவரும் சியோல் தலை பாரத்துடன் தடுக்கி விழுந்து காயம் அடைகிறான். கோபத்துடன் சியோல் அவனை நெருங்கும்போது என்ன செய்வதென்று தெரியாத சாங்க்வு தன் பாட்டி செய்கிற சைகை போல கையால் நெஞ்சில் வட்டமிட்டுக் காட்டுகிறான். சியோல் அமைதியாகிவிடுகிறான்.

மறுநாள் தன் தோழியுடன் விளையாடுவதற்காக தன் பொம்மைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறான். பாட்டி எதையோ ஒரு காகிதத்தில் சுற்றிக் கொடுக்கிறாள். சாங்க்வு விளையாடிவிட்டுத் திரும்பும்போது சியோல் அவனைப் பார்த்து மாடு வருகிறது என்று கத்துகிறான். தன்னை ஏமாற்றுவதற்காக கத்துகிறான் என்று நினைக்கும்போது நிஜமாகவே மாடு வருகிறது. சாங்க்வு விழுகிறான். சியோல் அவனைக் காப்பாற்றுகிறான். முதல் நாள் தான் செய்த தவறுக்காக சாங்க்வு அவனிடம் மன்னிப்புக் கோருகிறான். அதுதான் ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டாயே என்று சொல்கிறான் சியோல். கையை நெஞ்சில் வைத்து காட்டுகிற பாட்டியின் சைகைக்கு 'மன்னித்துவிடு' என்கிற அர்த்தம், சாங்க்வுவுக்குப் புரிகிறது. காயம் பட்ட வேதனையுடன் திரும்பி வரும்போது தன் பையில் பாட்டி காகிதத்தில் சுற்றித் தந்ததைப் பிரிகிறான். உள்ளே வீடியோ கேம் பிளேயர் இருக்கிறது. சாங்க்வு பாட்டியின் அன்பை நினைத்துக் கண் கலங்குகிறான்.

அழுதுகொண்டே நடந்து வரும்போது பாட்டி எதிரில் ஒரு கடிதத்துடன் வருகிறாள். சாங்க்வுவை அழைத்துப் போவதற்கான அம்மாவின் கடிதம். அவன் ஊருக்குப் போன பிறகு பாட்டிக்கு போன் பேசமுடியாது என்பதால் அன்று இரவு பாட்டிக்கு இரண்டு வார்த்தைகள் எழுதக் கற்றுக் கொடுக்கிறான்.


உடல் நலம் இல்லாது போனால் உடனே சொல்லும் விதமாக i am sick என்றும், பார்க்க விரும்பினால் i miss you என்றும் எழுத அழுதுகொண்டே கற்றுத்தருகிறான். நடுங்கும் விரல்களால் எழுத முடியாது பாட்டியும் அழுகிறாள்.

மறுநாள் அம்மா, பாட்டி, சாங்க்வு மூவரும் பஸ் வரக் காத்திருகிறார்கள். உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுமாறு சாங்க்வுவின் அம்மா தனது அம்மாவிடம் சொல்கிறாள். பாட்டியோ தனது பேரனையே பார்த்திருக்கிறாள். தூசி கிளம்ப அந்த மண் சாலையில் பஸ் வருகிறது. அம்மாவும், சாங்க்வுவும் ஏறுகிறார்கள். பஸ்ஸில் ஏறிய சாங்க்வு திரும்ப இறங்கி தன் பாட்டியிடம் இரண்டு அட்டைகளைக் கொடுக்கிறான். பஸ் கிளம்புகிறது. மனசு கேட்காமல் பஸ்ஸின் பின் கண்ணாடி வழியே கண்கலங்க பாட்டியைப் பார்க்கும் சாங்க்வு நடந்தற்கெல்லாம் மன்னிப்பு கேட்கும் விதமாக தன் கையால் நெஞ்சைத் தடவி சைகை செய்கிறான்.



பாட்டி கடைசியாக சாங்க்வு கொடுத்த அட்டையைப் பார்க்கிறாள். சாங்க்வுவுக்கு அவள் அனுப்பும் விதமாக i am sick, i miss you என்று கலர் பென்சிலால் வரைந்து எழுத்தப்பட்ட இரண்டு அட்டைகள். சோகம் ததும்ப, இலைகள் உதிர்ந்த அந்த மலைப்பாதை வழியே தீராத தன் தனிமையுடன் பாட்டி நடந்து செல்கிறாள். திரையில் இருள் கவிய எல்லாப் பாட்டிகளுக்கும் இந்தப் படம் சம்பர்ப்பணம் எனும் எழுத்துகளுடன் படம் முடிகிறது.


நாகரிகம் காரணமாக நாம் இழந்துவிட்ட மென்மையான உணர்வுகளையும், உறவுகளையும் இப்படம் அழகாகக் பதிவு செய்கிறது. ஒரு காட்சியில் பாட்டி தனியே அமர்ந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கிறாள். அவளைப்பார்க்கும் சாங்க்வு ஏன் இதையெல்லாம் பார்க்கிறாள் என்பது போல கடந்து செல்கிறான். அதுபோல் வீட்டுக்குள் கரப்பான் பூச்சி வந்தததும் சாங்க்வு கத்துகிறான். ஆனால், பாட்டியோ அதை அவனிடம் பிடித்து விளையாடத் தருகிறாள். அதைக் கொல் என்று சாங்க்வு கத்துகிறான். ஆனால், பாட்டியோ, அதைப் பத்திரமாக வெளியில் விடுகிறாள். நகரத்தில் வளரும் குழந்தைகளின் மனநிலையை இந்தக் காட்சிகள் அழகாகப் பதிவு செய்கின்றன. அது போல பாட்டி சாக்லேட் வாங்கும் காட்சியில் வயதானவர்களின் உணர்வை அழகாகச் சொல்கிறது.

ஒரு முறை சாங்க்வு மழையில் நனையும் துணிகளைப் பார்த்ததும் ஓடிப்போய் தனது துணிகளை மட்டும் எடுக்கிறான். பிறகு பாட்டியின் துணிகளையும் எடுக்கிறான். உடனே மழை விட்டுவிடுகிறது. திரும்ப காயப் போடும்போது பாட்டியின் துணிகளை தனியாக போடுகிறான். பிறகு தன் துணியுடன் சேர்த்துக் காயவைக்கிறான். அவனது மனமாற்றத்தை இக்காட்சி அழகாக சொல்கிறது. கடைசி நாள் இரவில் பாட்டிக்காக இருக்கும் ஊசியில் எல்லாம் வரிசையாக நூல் கோர்த்து வைக்கும்போது ஒரு கவிதையைப் போல அந்த சோகமும் பிரிவும் நம்மைக் கண் கலங்க வைக்கிறது.

பாடல்கள் இல்லாமல் நகைசுவைக்கென தனியான காட்சிகள் இல்லாத போதும் இப்படம் கொஞ்சமும் சலிப்படைய வைக்காமல் சுவாரஸ்யமாக 85 நிமிடம் ஓடுகிறது. பாட்டிக்குப் பேசமுடியாது, பேரனுக்குப் பேச விருப்பமில்லை என்பதால் இந்தப் படத்தின் மொத்த வசனத்தையும் ஒரு பக்கத்தில் எழுதிவிடலாம். 2002 - ல் வெளியான நிறைய விருத்களைப் பெற்ற இந்தத் தென்கொரியப் படத்தின் இயக்குனர் ஒரு பெண். பெயர் லீ ஷியான் ஹியான்.

சொற்ப காலமே நம்முடன் இருந்து மறையும் உறவுகளில் முக்கியமானது தாத்தா பாட்டி உறவு. கதையில் வரும் மழைக் கிராமம் போல முதியவர்கள் எங்கிருந்தாலும் தனிமையில்தான் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை. சாங்க்வுவின் பாட்டியைப் போல எந்த எதிர்பார்ப்புமற்று நம் பாட்டிகளும் அன்பை மட்டுமே தங்களிடம் வைத்துக்கொண்டு மரணத்தின் வெகு அருகில் காத்திருக்கிறார்கள்.




படத்தைப் பற்றி இயக்குனர் லீ ஷியான் ஹியான் (Lee Jeong-hyang) :


'பாட்டியும், இயற்கையும் ஒன்று என்பதே இப்படத்தின் கருத்து. இயற்கை பேசுவதில்லை. எனவே இக்கதையில் வரும் பாட்டியும் வார்த்தைகளே இல்லாத அன்பைத் தருகிறாள்' என்று சொல்லும் இவர், இந்தப் படத்தில் தொழில் முறை அல்லாதவர்களையே நடிகர்களைக் பயன்படுத்தியுள்ளார்.


ஒரு படத்தின் கதையை நேரில் பார்ப்பது போல் அதை எழுத்தின் மூலமாக கொண்டு வர அசாத்திய திறமை வேண்டும். அது நிறையவே இருக்கிறது நம்முடைய தேசிய விருது பெற்ற "தென் மேற்கு பருவக் காற்று' படத்தின் ஒளிப்பதிவாளர் செழியனுக்கு. நன்றி செழியன் அவர்களே.



நூல் : உலக சினிமா, எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் செழியன் - விகடன் பதிப்பகம்.

1 comments:

Unknown said...

உலகில் இன்றும் பாட்டிகளின் பாசத்தை புரிந்து கொள்ள முடியாத எத்தனையோ பேரன்களும், பாசத்தை உணர்த்த முடியாத பாட்டிகளும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அருமையான ஒரு திரைகாவியத்தை வார்த்தைகளில் வடித்த திரு.செழியன் அவர்களுக்கும், பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் மிக்க நன்றிகள் தோழரே........

Post a Comment