ஆங்கிலத்திலே இரண்டு சொற்கள் உண்டு. ஒன்று பாப்புலர், மற்றொன்று நொட்டோரியஸ் என்றும் குறிப்பிடுவார்கள். நல்ல விதத்தில், நல்ல முறையில், நல்ல காரணங்களுக்காக மக்களிடம் அறிமுகமானவர்களை பாப்புலர் என்று சொல்கிறார்கள். தவறான காரணங்களுக்காக வேறு வித்தியாசமான முறையில் மக்களிடம் அறிமுகமானவர்களை நொட்டோரியஸ் என்றும் சொல்கிறார்கள்.
அப்படி ரொம்பவும் நொட்டோரியஸ் என்று சொல்லக் கூடிய அளவிற்கு உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவர் போல் ஜோசப் கோயபல்ஸ் (Paul Joseph Goebbels) கோயபல்ஸ் என்ற பெயரை நாம் அத்தனை பேரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
கோயபல்ஸ் என்கிற பெயர் இன்று உலகம் முழுவதும் அறியப்பட்டப் பெயராக உள்ளது.
அவருடைய பெயர் எதற்காக அறியபட்டுள்ளது என்றால் உலகத்திலே மிகுதியாகப் பொய் சொன்னவர் என்கிற பொருளிலே கோணிப் புழுகன் கோயபல்ஸ் என்றுதான் நாம் அறிந்துள்ளோம்.
ஆனால், கோயபல்ஸிடம் கூட ரொம்ப வித்தியாசமான திறமைகள் இருந்தன என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். கோயபல்ஸ் நாம் அறிந்துள்ளது போல் ஹிட்லருக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர். 1925 - ல் தான் ஹிட்லரும் கோயபல்சும் சந்தித்துக் கொள்கிறார்கள்.
கோயபல்ஸின் தோற்றத்தை எழுதுகிற வரலாற்று ஆசிரியர்கள் அவர் மிகவும் விசித்திரமான தோற்றமுடையவர் என்று எழுதுகிறார்கள். குறிப்பாக அவருடைய கால்களைப் பற்றி எழுதும்போது கால்கள் கழுதையின் கால்களைப் போல் இருந்ததாகக் எழுதுகிறார்கள். அது அவருக்கான உடல் நலக் குறைபாடாகக் கூட இருக்கலாம். வேடிக்கையான அடையாளமாக இருந்திருக்கிறது.
மனிதர்கள் அவரை பார்த்த உடனே கேலியாகச் சிரித்திருக்கிறார்கள். ஆனாலும், கோயபல்ஸ் மேடைகளிலே ஏறி பேசத் தொடங்கிய பிறகு, யாரெல்லாம் அந்தக் கோயபல்சைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தார்களோ அவர்களேகூட தங்களை மறந்து கோயபல்சினுடைய பேச்சைக் கேட்டதாக அங்கே பல குறிப்புகள் நமக்குச் சொல்கின்றன.
கோயபல்ஸ் அப்படிப்பட்ட மிகப்பெரிய பேச்சாளர். அதுவும் ஒரு நாடகத்தன்மை வாய்ந்த பேச்சு என்று அவருடைய பேச்சைக் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். ஹிட்லருடைய பேச்சு உலகத்திலே புகழ் பெற்றது அப்படிதான். ஹிட்லர்தான் உலகத்திலேயே தன்னுடைய பேச்சை நாடக மயமாக ஆக்கிக் காட்டியவர்.
விளக்குகளையெல்லாம் பொருத்தி, அதிலே இருக்கிற அந்த ஒளிக் கருவிகளைக் கையாளுகிறவர்களிடத்திலே சொல்லி, எந்த நேரத்திலே எந்த வண்ண விளக்குகளை நீங்கள் ஒளிர வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி விடுவார். நான் மிகக் கோபமாக பேசுகிறபோது சிவப்பு வண்ணம் மேடையிலே அப்படியே பாய்ந்து வர வேண்டும் என்பதையெல்லாம் சொல்லி வைத்து நாடகத்தனமையோடு பேசுகிற ஆற்றல் ஹிட்லரிடம் இருந்தது.
அதைப்போலவே கோயபல்சும் உணர்ச்சிகரமாக பேசி கேட்கிற மக்களையெல்லாம் இவர் எந்த உணர்வில் பேசுகிறாரோ அந்த உணர்வுக்கு இழுத்து வந்த விடுகிற ஒரு பெரிய ஆற்றல் வாய்ந்தவராக இருந்தார். அந்த ஆற்றல் ஹிட்லரிடம் இவரைக் கொண்டு போய் சேர்த்தது. 1928 - ஆம் ஆண்டு தன்னுடைய நாசிக் கட்சியினுடைய கொள்கைபரப்புச் செயலாளராக கோயபல்சை ஹிட்லர் நியமிக்கிறார். அதுதான் அவர் அரசியல் வாழ்க்கைக்கு வருகிற முதல் கட்டம். நாசிக் கட்சி ஜெர்மனி மக்களிடத்திலே ஆரியர்கள் நாம் ; நாம்தான் ஆளப் பிறந்தவர்கள் என முழங்கியது.
யூதர்களுக்கு எதிராக அவர் மிகப் பெரிய எழுச்சியை அந்த ஜெர்மனிய மக்களிடத்திலே ஏற்படுத்தியிருந்த காலம்கட்டம் அது. எனவே அந்த நேரத்தில் கோயபல்ஸ் ஜெர்மனி மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு பேச்சாளனாக, ஹிட்லருடைய வலது கையாக எல்லோரிடமும் அறியப்பட்டார்.
பேச்சக்கு மயங்கிய அந்த ஜெர்மனிய மக்கள் தேர்தலில் ஹிட்லருக்கு வாக்களித்து அதிபராக்கினார்கள். ஹிட்லர் பதவிக்கு வந்ததற்கு பிறகு அவருடைய அமைச்சரவையிலேயும் கோயபல்சுக்கு இடம் கிடைத்தது. அதன் பிறகு வந்த இரண்டு தலைமுறைக்கு தேர்தலில் வாக்களிக்க வேண்டிய வேலையை இல்லாமல் செய்துவிட்டார் ஹிட்லர். இனி கோயபல்சுக்கு வருவோம். கோயபல்ஸ் அந்த ஜெர்மனிய மக்களிடம் வித்தியாசமான முறையில் பிரச்சாரங்களைக் கொண்டு செல்கிறார். அவருடைய பிரச்சார முறைகள் வரலாற்று ஆசிரியர்களாலே கூட வியப்பாக பார்க்கபட்ட ஒன்று.
அதுவும் இரண்டாவது உலக யுத்தத்திலே அவருடைய பிரச்சார யுத்திகளை வரலாற்றில் படிக்கும் போது வேடிக்கையான ஒன்றாக இருக்கும். முதல் பிரச்சாரம் முனுமுனுப்புப் பிரச்சாரம். இரண்டாவது ஜோதிடப் பிரச்சாரம். மூன்றாவது திரும்ப திரும்ப சொல்லும் பிரச்சாரம்.
இது போன்ற பிரச்சார யுத்திகளை எல்லாம் நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், கோயபல்சினுடைய விஷயங்கள் அத்தனையும் பொய்யானவை. ஆனாலும், அவர் அதை கொண்டு சென்ற முறை இருக்கிறதே அது வலிமையானது.
முதலில் முனுமுனுப்புப் பிரச்சாரம்.
அரசாங்கத்திலிருந்தே ஆட்களைத் தேர்வு செய்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புவது. அவர்கள் இரண்டு இரண்டு பேராக, மூன்று, மூன்று பேராக பிரிந்து செல்வார்கள். பலரும் கூடியிருக்கிற ஒரு தேநீரகத்தில், ஒரு பேருந்து நிலையத்தில் ஒருவருக்கு ஒருவர் அறியாதவர்கள் போல் நின்று கொண்டு பேசி கொண்டிருப்பார்கள். அவர்கள் முனுமுனுத்துக் கொண்டு பேசும் பேச்சு அருகில் உள்ளவரிடம் பற்றும். இவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என்றால், 'என்ன இருந்தாலும் ஹிட்லர் மாதிரி வராது' என்பார் ஒருவர். இன்னொருவர் மறுக்கிற மாதிரி மறுப்பார்.
மறுப்பவனுடைய வாதங்கள் எல்லாம் பலவீனமாக இருக்கும். ஹிட்லரை ஆதரிக்கிறவன் வாதம் எல்லாம் மிக அழுத்தமாக இருக்கும். முதலில் மறுப்பவனும் பின்பு அதனை ஏற்றுக் கொள்வான். அந்த இடத்திலே நின்று கொண்டிருக்கும் மற்றவர்களுக்கும் இவர்களின் வாதங்களை கேட்கும் போது சரியெனப்படும். இது முனுமுனுப்புப் பிரச்சாரம்.
இரண்டாவது, ஜோதிடப் பிரச்சாரம். ஜோதிடர்களுக்கு வேண்டிய அளவுக்கு பணம் கொடுப்பது, ஏறத்தாழ எல்லா ஜோதிடர்களும் ஒரே மாதிரி எழுதுவது. இரண்டாவது உலக யுத்தத்தில் ஜெர்மனி மிகப் பெரிய வெற்றியடையப் போகிறது, எதிரி நாடுகளின் விழ்ச்சி உறுதியாகிவிட்டது.ஜோதிடம் அவ்வாறே சொல்கிறது. ராசி இவ்வாறு இருக்கிறது, கிரக நிலைகள் நமக்கு சாதகமாக இருக்கிறது என்று பரப்புவது.
மூன்றாவது, திரும்ப திரும்ப சொல்வது. கோயபல்ஸ் கூறிய ஒன்றை, அது சிறிய விஷயமாக இருந்தாலும், அதை பெரிது படுத்தி கூறுவது, தொடர்ந்து சொல்லி கொண்டே இருப்பதன் மூலம் பொய்யும் உண்மையாக சித்தரிக்கப்படும். இவ்வாறாக மூன்று விதமான பிரச்சார உத்திகளைக் கையாண்டார்.
அதோடு மட்டுமல்லாமல், கலைத் துறையையும் கைப்பற்றினார். யூதர்களுக்கு எதிரான வகையில் திரைப்படங்கள் கோயபல்சின் மேற்பார்வையில் வெளியிடப்பட்டது. ஊடகம் என்பது வலிமையான ஒன்று. அதுதான் செய்திகளை மக்களிடம் விரைவாக கொண்டு செல்லும் என்பதை முதலில் பயன்படுத்தியவர் இவரே.
பிறகு செக்கோஸ்லோவியா நாட்டைச் சேர்ந்த லிடா பார்வா (Lida Baarova) என்ற நடிகையுடன் தொடர்பு இருந்ததாக அவருக்கு எதிரான பிரச்சாரம் ஒன்று கையாளப்பட்டது. அது உண்மையும் கூட. அதில் அவருடைய பெயர் கொஞ்சம் சரிந்தாலும், இரண்டாவது உலக யுத்தத்திலே அவருடைய பெயர் உச்சத்திற்கு சென்றது. ஆனாலும், பொய்யை எத்தனைவிதமான திறமையான யுத்திகள் மூலம் பிரச்சாரம் செய்தாலும் உண்மை ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். ஆம், சோவியத் நாட்டுப் படைகள் ஜெர்மனியை முற்றுகையிட்ட நேரத்தில் 1945 ஏப்ரல் 30 - ம் தேதி ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். இந்த நாட்டின் அடுத்த அதிபராக கோயபல்சை நான் நியமிக்கிறேன் என்று கூறிய பிறகுதான் ஹிட்லர் இறந்தார்.
ஆனால், கோயபல்ஸ் அந்த நாட்டிற்க்கு எத்தனை நாள் அதிபராக இருந்தார் தெரியுமா ? அடுத்த ஒரே நாள்தான். மே மாதம் முதல் தேதி அவர் தன்னுடைய மனைவி, 6 குழந்தைகளுடன் தற்கொலை செய்து மாண்டு போனார் என்று வரலாறு சொல்கிறது.
எனவே எவ்வளவு திறமை இருந்தாலும், அது உண்மையின் அடிப்படையில், நேர்மையின் அடிப்படையில் இருந்தால்தான் நிலைக்கும் என்பதை நமக்கு கோயபல்சின் வரலாறு உணர்த்துகிறது.
நூல் : ஒன்றே சொல், நன்றே சொல்.
ஆசிரியர் : ஐயா சுப.வீரபாண்டியன்.
5 comments:
HISTORY REPEATS VIA MODI
HISTORY REPEATS VIA MODI
முஸ்லீம்களின் பிரதான பீதி மோடி என்பது அவர்களின் பின்னுட்டம் மூலம் மிகத் தெளிவாகிறது
K ur well said
But sir
Y did u support corrupted katchigal
கோயபல்ஸ்சை பற்றி ஹிட்லர் வரலாற்றை படிக்கும் போது அறிந்து கொள்ள முடிந்தது
மேற்கொண்டு தகவல் திரட்ட இணையத்தில் தேடியபோது அருமையான இந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது அருமையான நடையில் மேலதிக தகவலை தெரிந்து கொண்டேன் நன்றி சுபவீ ஐயா
Post a Comment