Friday, February 24, 2012

வெற்றி என்பது......



வெற்றி பெற வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கிறது. படிப்பில், விளையாட்டுப் போட்டிகளில் இப்படி எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவார்கள். சுருக்கமாகச் சொன்னால் வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் யாருமே கிடையாது. வெற்றி பெற முடியாதவர்கள் உண்டே தவிர, வெற்றி பெற விரும்பாதவர்கள் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.

ஆனாலும் வெற்றி என்றால் என்ன என்கிற ஒரு வினாவிற்குப் பல்வேறு விதமான விடைகள் இருக்கின்றன.

பொதுவாக உலகம் நம்புகிற வெற்றி எதுவென்று கேட்டால், மற்றவரைக் காட்டிலும் முந்தி இருப்பது என்பதைத்தான், இந்த உலகம் வெற்றி என்று குறிப்பிடுகிறது. பணக்காரன் என்றால், யாரையெல்லாம் விடப் பணக்காரன், அறிவாளி என்றால் யாரையெல்லாம் விட அறிவாளி, சாதனையாளன் என்றால் யாரைவிடச் சாதனையாளன் என்று மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்துத்தான் நம் வெற்றியைத் தீர்மானிக்கிறோம்.

ஒப்பிடுதல் பிழையில்லை. ஆனால் அந்த ஒப்பீட்டில் ஒரு நுட்பமான குறை இருக்கிறது. மற்றவர்களைவிட முந்தி இருக்கிறோமா என்பதைக் காட்டிலும், நாமே நம்முடைய பழைய வெற்றிகளைக் காட்டிலும் முந்தி இருக்கிறோமா என்பதுதான் வெற்றியின் அடிப்படையான செய்தி. ஏற்கனவே பெற்றிருக்கிற வெற்றியைக் காட்டிலும் கூடுதலாக இன்னொரு கட்டத்திற்கு, இன்னொரு தளத்திற்கு, இன்னொரு இடத்திற்கு வந்து சேர்வதுதான் வெற்றி.



ஏனெனில் மற்றவர்களோடு நாம் நம்மை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டிய தேவையில்லை.ஒவ்வொருவருடைய வாழ்க்கைச் சூழலும் வேறுவேறாக இருக்கிறது. அவர்களுடைய பாரம்பரிய மரபியல் கூறுகள் வேறுவேறாக இருக்கின்றன. எனவே அடுத்தவனோடு போட்டி என்பதை விட நம்மோடு நாம் போட்டியிடுகிறோம் என்பது முக்கியமானது.

எந்த ஒரு செயலையும், அதேமாதிரியான இன்னொரு செயலை நாம் அடுத்த முறை செய்ய நேர்கிறபோது, அதைக் காட்டிலும் சிறப்பாகச் செய்திருக்கிறோமா என்பது மிக முக்கியமானது. காரணம் முன்னால் செய்ததைவிட இப்போது செய்கிறபோது நமக்கு அனுபவம் என்ற ஒன்று கூடுதலாகக் கிடைத்திருக்கிறது.

நாம் ஒரு தேர்வு எழுதினோம், அது ஓர் அனுபவம். ஒரு விளையாட்டுப் போட்டியிலே கலந்து கொண்டோம், அது ஓர் அனுபவம். இன்னொரு முறை நாம் பங்கேற்கிறபோது அந்த அனுபவம் நமக்குக் கூடுதலாகக் கைகொடுக்கிறது. எனவே ஒவ்வொருமுறையும் கூடுதலாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு நாம் வந்து சேர்வதுதான் அடிப்படையில் வெற்றி என்று பொருள்.

அதை நோக்கி நாம் செயல்படுகின்ற நேரத்தில், மற்றவர்களைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல், நம்முடைய பணியில் கூடுதல் கவனத்தோடு இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. அப்படி அடுத்தடுத்து மென்மேலும் வெற்றிகளைப் பெற்று வர வேண்டும் என்றால் நாம் கூடுதலாகத் திட்டமிட வேண்டும், கூடுதலாக உழைக்க வேண்டும். எந்தத் துறையில் நாம் இருக்கிறோமோ, அந்தத் துறையில் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் அடிப்படையான செய்தி.

அப்படிக் கவனம் செலுத்துவதற்கு எதுவெல்லாம் தடையாக இருக்கிறது ?

அழகான ஒரு முரணை நாம் பார்க்கலாம். வயது ஆக ஆக அனுபவம் ஏறுகிறது. இது ஒரு நல்ல செய்தி. ஆனால், வயது ஆக ஆக எந்த ஒரு மனிதனுக்கும் சலிப்பு வந்து சேர்கிறது. இது ஒரு எதிர்மறையான செய்தி. இந்த இரண்டு முரண்பட்ட நிலைகளிலே இருந்து நாம் தொடர்ந்து வெற்றிகளைப் பெற வேண்டுமானால், இவற்றிலிருந்து எப்படி விடுபடுவது என்பது முக்கியமானது.

வயதாகிறபோது அனுபவம் ஏறுகிறது. ஆனால், அத்தோடு அது நின்றுவிடுவதில்லை. நமக்கு இனிமேல் என்ன இருக்கிறது, ஏறத்தாழ வாழ்க்கையின் பாதிப் பகுதியை கடந்து வந்து விட்டோம், வாழ்க்கையின் முக்கால் முடிந்து போய்விட்டது என்கிற எண்ணங்கள்தான், நம்மை அடுத்த கட்டத்திற்குப் போக விடாமல் தடுக்கின்றன அல்லது பின்னே இழுக்கின்றன. அவற்றிலிருந்து விடுபடவில்லை என்றால் நம்முடைய அனுபவம் கூட நமக்குப் பயன்படாமல் போய்விடும்.

எனவே நாம் வயது பற்றிய ஒரு சிந்தனைக்கு வர வேண்டும். வயதானால் நம்மால் முடியுமா, முடியாதா என்றொரு கேள்வி எழுகிறது. அப்படியானால் வயது என்பது என்ன ? வயது என்பது உடல் சார்ந்தது மட்டும்தானா ? பொதுவாக, வயது என்பது உடல் சார்ந்ததன்று, நம்முடைய மனம் சார்ந்தது என்று சொல்கிறோம். சரியாகச் சொல்ல வேண்டுமானால் வயது என்பது மூன்று வகைப்படும். உடம்பின் வயது, அறிவின் வயது, மனதின் வயது என்று இந்த வயதை நாம் மூன்றாகப் பகுத்துக் கொள்ளலாம்.

உடம்பின் வயது துல்லியமானது. யாரும் கூட்டியோ, குறைத்தோ, பார்த்துக் கொள்ள முடியாது. காலம் அதைத் தீர்மானிக்கிறது. நீங்கள் பிறந்து இந்த உலகத்திலே எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்பதுதான் அந்த உடம்பின் வயதிற்கான ஒரே ஒரு கணக்கு. இதில் ஒன்றும் பெரிய சிக்கலோ, நுட்பமோ இல்லை. ஆனால் அறிவின் வயதும், மனதின் வயதும் அப்படியல்ல. சிலபேருக்கு வயது ஏற ஏற அறிவு கூடும். சிலருக்கு வயது ஏற ஏற குறையும்.


அறிவின் வயது என்பதை இன்றைக்கு அறிவியல் உலகிலே ஐக்யூ ஏஜ் (IQ Age) என்று சொல்கிறார்கள். ஐக்யூ என்பது The Intelligence Quotiont என்கிற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் ஆகும். சில பிள்ளைகளை நாம் பார்க்கலாம். பத்து வயதாக இருக்கிறபோதே இருபது வயது மனிதனைப் போல சிந்திப்பார்கள். சில பேர் 40 வயதான பிறகும், 14 வயதிற்குரிய அறிவுகுரியவர்களாகவே நின்று போய்விடுவார்கள்.

இப்போதும் நம்மால் எந்தப் புத்தகத்தை கூடுதலாகப் படிக்க முடிகிறது. எந்த மாதிரியான படங்களை எல்லாம் பார்க்க மனம் விரும்புகிறது என்பதையெல்லாம் பார்த்தால் அது அறிவின் வயதையும், மனதின் வயதையும் ஒட்டியதாக இருக்கிறது. பல்வேறுவிதமான பொது அறிவுத் தகவல்களைச் சேகரித்து வைப்பது, சேகரித்து வைத்துள்ள தகவல்களிலிருந்து, நுட்பமான, சரியான எதிர்கால முடிவுகளை எடுப்பது என்பதெல்லாம் அறிவின் வயதை ஒட்டியதாக இருக்கிறது.


இந்த மனதினுடைய வயது இருக்கிறதே, அது வெறுமனே உங்களுடைய உற்சாகம் சார்ந்தது அவ்வளவுதான். இந்த மனம் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் வயது குறைகிறது. ஒருவேளை இளமைக்காலத்திலேயே மனம் சோர்ந்துவிடுமானால், 25 வயது இளைஞனுக்கும் கூட மனத்தினுடைய வயது 60 ஆக ஆகிவிடுகிறது. மனதின் வயதுதான் நம்மை இயக்குகிறது.

மனம் இளமையாக இருந்தால் அடுத்தடுத்த திட்டங்களை நம்மால் போட முடிகிறது. ஏராளமான எதிர்காலத் திட்டங்களை வைத்துக் கொண்டிருக்கிற 70 வயது மனிதர்களையும் நாம் பார்க்கிறோம். எதிர்காலம் பற்றிய எந்த சிந்தனையுமின்றி சோர்ந்துப் போய்க் கிடக்கிற 30 வயது இளைஞனையும் பார்க்கிறோம்.

சோர்வு என்பதும், அடுத்த வேலைக்கான ஊக்கம் என்பதும் மனதிலிருந்து வருகிறது. ஆகவே அதை மனதின் வயது என்கிறோம். நாம் மனதின் வயதைக் குறைத்துக் கொண்டும், அறிவின் வயதைக் கூட்டிக் கொண்டும் இருப்போமானால் உடலின் வயதுப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. எதிர்மறையாக நடந்துவிடுவதுதான் பெரிய ஆபத்து.

எல்லாம் நேர்மறையாக அமையுமானால், நம்மால் கூடுதலாகத் திட்டமிட முடியும். கூடுதலாகப் பணியாற்ற முடியும். நாம் இருக்கின்ற துறையிலே கூடுதலாகக் கவனம் செலுத்த முடியும். அப்படி செய்கிறபோது நேற்றைக்கு நம் துறையில் என்ன சாதித்திருந்தோமோ அதைக் காட்டிலும் கூடுதலாகச் சாதிக்க முடியும். அதற்கு அடுத்த கட்டத்திற்கு வர முடியும்.

எனவே நம்மை நாமே முந்துவது என்பதுதான் வெற்றியே தவிர, அடுத்தவர்களை முந்துகிறோமோ என்பதல்ல. அடுத்தவர்களை முந்த வேண்டுமா என்பது கூட ஒரு பெரிய கேள்விதான். நம்மை நாம் தொடர்ச்சியாக முந்திக் கொண்டிருந்தோ மென்றால், நாம் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்று பொருள். எனவே ஒருவன் வெற்றியாளனா, இல்லையா என்பதை அவனுடைய பழைய நடவடிக்கைளையும், இன்றைய நடவடிக்கைளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அவன் எழுதிய கவிதையையும், இப்போது அவன் எழுதுகிற கவிதையையும், அன்றைக்கு வரைந்த ஓவியமும், இன்றைக்கு வரைந்த ஓவியமும், அன்றைக்கு இருந்த நிர்வாகத் திறனும், இன்றைக்கு இருக்கிற நிர்வாகத் திறனும் எப்படி இருக்கின்றன என்பதை ஒப்பிட்டு பார்த்தால், வெற்றியாளர்கள் யார் என்பதை நம்மாலே எளிதில் கண்டுபிடித்து விடமுடியும்.


நாம் வெற்றியாளர்களாக ஆக வேண்டுமென்றால் பின்பற்ற வேண்டிய செயல்நெறி, சூத்திரம் இதுதான்.







நூல் : ஒன்றே சொல், நன்றே சொல்.


ஆசிரியர் : ஐயா சுப.வீரபாண்டியன்.

3 comments:

Dee........ said...

arumaya solirukar...

Siraju said...

ஆம் கார்த்திக். இந்த சிந்தனையை எல்லோரும் கடைபிடிப்போம்.

avan indri.... said...

iyo...yeஐயோ ....அருமை அருமை....

Post a Comment