Friday, September 16, 2011

நம்பிக்கைகள்

தொட்டிலை
ஊஞ்சலாக மாற்றிவிடவும்

தன் காலுக்குப் பொருத்தமற்ற
செருப்பை அணிந்து கொள்ளவும்

நீண்ட கைக்குட்டையை
தாவணியைப் போல நினைத்து
உடுத்திக் கொள்ளவும்

பிரியமானவர்களின்
கொஞ்சல்களைத் தவிர்த்து விட்டு
பொம்மைகளோடு பேசித் திரியவும்
முடிகிறது குழந்தைகளால்

எதிர் முனையில்
அழைப்பவர்களின்
பதிலுக்கு காத்திராமல்
தன் விருப்பங்களைப்
பேசிவிடுகின்றன
அலைபேசில் குழந்தைகள்

ஆதாம் ஏவாள் காலத்தில்
நேசிக்கப்பட்ட நிர்வாணத்தை
குழந்தைகள் மீண்டும்
கெளரவிக்கினறன

விலக்கப்பட்ட கனியாய் இருக்கும்
உலகின் நடைமுறைகள்
குழந்தைகளை வெட்கமுறச்
செய்கின்றன

குழந்தைகளின் தலையில்
குண்டு வீசிச் செல்லும்
போர் விமானங்கள் பறக்கிற வரை
உலகம்
நாகரிகம் அடைந்துவிட்டதாக
நம்புகிறவர்கள் காட்டுமிராண்டிகள் !



- அமீர் அப்பாஸ்.

நன்றி: ஆனந்த விகடன்

0 comments:

Post a Comment