Thursday, September 15, 2011

பசுமை வேட்டை என்கிற பயங்கரவாதம்-XII

சார்ஹல்... இலையுதிர்ந்த சால் மரங்கள் புதிதாய் துளிர்க்கும் காலத்தில் (ஏப்ரல் – மே மாதங்களில்) ஜார்கண்ட் பழங்குடி மக்கள், வனத்தில் ஒரு நறுமணத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் இப்பருவத்தை வரவேற்றுக் குதூகலிக்கும் ஒரு திருவிழா. வாழ்வில் நம்பிக்கையை விதைக்கும் இயற்கையை வழிபட, வனவாழ் மக்கள் தத்தமது ‘சரண் ஸ்தல்'களில் குழுமி இக்காலத்தைக் கொண்டாடுவர். பாரம்பரியமிக்க இவ்வனவாழ்வில் இதுபோன்ற இன்பங்களையும் மகிழ்வுகளையும் சீர்குலைத்துதான் அரசு எந்திரம் தனது கனரக உறுப்புகளை மலை – வனப் பிரதேசங்களில் நிறுவி வருகிறது. ராஞ்சியிலிருந்து 120 கி.மீ. தொலைவிலுள்ள லதேஹர் மலைப் பிரதேசத்தில் ராஜ்தந்தாவிலிருந்து பாரஹி வரை புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையின் வழியே ஊர்ந்து வரவிருக்கும் ஆபத்துகள் பற்றிய அனுமானங்கள் ஏதுமின்றி, இம்மக்கள் இச்சாலைகள் மிகவும் தரமற்றவையாகப் போடப்பட்டிருக்கின்றன என மாவட்ட அரசு நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர் (‘தி டைம்ஸ் ஆப் இந்தியா', ஏப்ரல் 18, 2011). தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் இப்பணிகளைக் கையகப்படுத்தும் ஒப்பந்ததாரர்கள், மக்கள் பணத்தில் அபரிமிதமாகவே மஞ்சள் குளிக்கின்றனர். கல்வியறிவும் விழிப்புணர்வும் ஓரளவு பெற்றிருக்கும் கிராமப்புறங்களிலேயே, அவ்வளவு ஏன், மெத்தப்படித்த நகர்ப்புறங்களில் கூட அரசுப் பணிகளில் வித்தைகள் காட்டும் ஒப்பந்ததாரர்களுக்கு இப்பழங்குடி மக்களை ஏய்த்துப் பிழைப்பது எம்மாத்திரம்? இங்கு குறிப்பிடப்படும் இச்செய்தி ஓர் எடுத்துக்காட்டே.


தார்ச்சாலைகள், பள்ளிக்கூடங்கள், மின்கம்பங்கள், தொலைபேசி இணைப்புகள், சுகாதார நிலையங்கள் ஆகிய அடிப்படை வசதிகள் கட்டமைக்கப்படுவதை அம்மக்களே வரவேற்பார்களெனில், மாவோயிஸ்டுகள் உட்பட வேறெவரும் அதை எதிர்க்க வேண்டியதில்லைதான். ஆனால், ஒப்பந்ததாரர்களின் ஊழல்களில் தொடங்கும் இக்கட்டமைப்புப் பணிகள், துணை ராணுவப் படையினரின் மக்கள் மீதான ஒடுக்குதலில் முடிவடைகின்றன என்ற தொடர்நிலையைக் கண்ணுறும் போதுதான், அவை நலத்திட்டங்கள் தானா? என்ற அய்யமே எழுகிறது. காவல் படைகளும் மாவோயிஸ்டுகளும் சில நேரங் களில் மோதிக் கொள்ளும் இடம் பள்ளிக்கூடங்களாகவும் இருக்கின்றன. ஆனால், மோதலற்ற, காவல் துறையினர் நிகழ்த்தும் பச்சைப் படுகொலைகளை, அவர்கள் தரும் செய்திகளின் அடிப்படையிலேயே மோதலாகச் சித்தரித்து வரும் ஊடகங்கள், பள்ளிக்கூடங்கள் அல்லது காவல் நிலையங்களுக்கு அருகில் நிகழும் மோதல்களை வெட்டு செய்திகளாகவே வெளியிடுகின்றன. ‘காவல் நிலையம் மீது வெடிகுண்டு வீச்சு', ‘பள்ளிக்கூடம் மீது தாக்குதல்', ‘அரசு கட்டடம் தகர்ப்பு' என்ற துணைத் தலைப்புகள், ‘மாவோ யிஸ்டுகள் வெறிச்செயல்', ‘நக்சலைட்டுகள் அட்டூழியம்' என்ற பெருந்தலைப்புகளின் கீழ் வெளியிடப்படுகின்றன. தங்களின் செய்திகளுக்குப் பின்னே ஒளிந்திருக்கும் தந்திர அரசியலை சமூக விழிப்புணர்வு அற்ற சாமானிய மக்களும் அரசியல் வெறுமையில் மிதக்கும் நடுத்தர வர்க்கமும் அறியப் போவதில்லை என்ற இறுமாப்பின் மீதுதான், ஊடகங்கள் தங்கள் வணிக மேலாதிக்கத்தையும் புனைவுகளையும் நிறுவியிருக்கின்றன.

ஒரிசா மாநிலம், ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் தின்கியா எனும் பகுதியில் போஸ்கோ உருக்காலைத் திட்டத்திற்கு, நடுவண் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இறுதி ஒப்புதல் அளித்த பிறகு, அங்கு திட்டப்பணிகள் தொடங்கி விட்டன. ‘போஸ்கோ பிரதிரோத் சமிதி' என்ற அமைப்பின் கீழ் பெண்கள், குழந்தைகள், முதியோர் உட்பட ஏராளமானோர் தொடர் போராட்டத்தில் உருக்காலைக்கு எதிராக ஈடுபட்டு வருகின்றனர். தின்கியா பகுதியிலுள்ள பள்ளிக்கூடங்களில் போஸ்கோ ஆலைக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், காவல் துறையினரும் துணை ராணுவத்தினரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்திற்கு எதிராக இரவு பகலாக முகாமிட்டு, மக்கள் போராடி வருவதால் இப்பள்ளிக்கூட ஆக்கிரமிப்பு விவகாரம் ஊடகங்களால் தணிக்கை செய்யப்படாமல் வெளிச்சத்திற்கு வந்தது.

தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் ஒரிசா அரசுக்கு அறிவிக்கை அனுப்பியது. பள்ளிக்கூடங்கள் ஆக்கிரமிக்கப்படவில்லை என்றும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்ய சமூகப் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை இப்பகுதிக்கு அனுப்பி கண்காணிக்கலாம் என்றும் தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்துடனான பேச்சுவார்த்தையில் ஒரிசா அரசு கூறியது. மேலும், துப்பாக்கி முனை யில் மக்களை மிரட்டி வைத்துக் கொண்டு, போஸ்கோ உருக்காலைப் பணிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

பள்ளிக்கூடங்கள் அரசுப் படைகளின் தங்கும் விடுதிகளாக்கப்பட்டு, துப்பாக்கி முனைகளில் மக்கள் அடிபணிய வைக்கப்படும் போது போராடும் மக்களுக்கு மீளும் வழி என்ன இருக்கிறது? இப்படியான சூழல்களில் அரசுப் படைகளின் மீது தாக்குதல் நடத்தி, மக்களை மீட்க மாவோயிஸ்டுகளுக்கும் பழங்குடி மக்களின் கெரில்லாக்களுக்கும் எஞ்சியிருக்கும் போராட்ட வழிமுறை என்னவாக இருக்க முடியும்? காவல் படைகளின் ஆக்கிரமிப்பையும் அட்டூழியங் களையும் மனித உரிமை ஆணையங்களால் கண்டிக்க மட்டுமே முடிகிறது. ஆனால், அரசுகளால் அவற்றை மூடி மறைக்கவும் முடியும். ஊடகங்களால் அவை திரிபு செய்யப்படவும் முடியும் எனும் போது, மக்களால் வேறு என்ன தான் இயலும்? ஆனால், ஆயுதம் தரித்த போராளிகளால் மட்டுமே இந்நிலைமை பேசு பொருளாகவும் படுகிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, தின்கியா பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு மறுவாழ்வு குடியிருப்புப் பணிகளையும் நொலியாசாகி எனும் பகுதியில் அரசு மேற்கொண்டு வருகிறது. இப்பகுதியோ புயல், மழை மற்றும் கடல் கொந்தளிப்புக் காலங்களில் நீரில் மூழ்கிவிடும் ஆபத்து மிகுந்த பகுதி என மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

புயல், மழைக்காலங்களில் இந்திய தீபகற்ப நிலத்தில் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதியாக, ஆந்திர – ஒரிசா கடலோர வாழிடங்களே இருந்து வருகின்றன. மீனவப் பழங்குடிகளைச் சாகடித்து வேடிக்கை பார்க்கும் அதிகார வர்க்கம், வனப் பழங்குடிகளையோ அவர்களின் வாழிட தகவமைப்புக்கு விரோதமாகப் பொருத்தமற்ற நிலப்பகுதியில் குடியமர்த்திக் கொல்லத் துடிக்கிறது. வனப் பழங்குடிகளான ஆதிவாசிகளும், நிலப் பழங்குடிகளான தலித்துகளும், கடல் பழங்குடிகளான மீனவர்களும் வாழத் தகுதியற்றவர்கள் என்றே அதிகார வர்க்கமும் ஒட்டுண்ணி சமூகங்களும் முடிவு செய்திருக்கின்றனர் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இச்செய்தி இன்னுமோர் எடுத்துக்காட்டு.

2010 ஆம் ஆண்டின் குளிர்பருவம். டிசம்பர் 27 அன்று, ஒரிசா மாநிலத்தின் பர்கார் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கொல்லப்பட்டனர். அப்பகுதியின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அவர்கள், சுரங்கங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் என்பதால் இருவரின் கொலைகளும் நிகழ்ந்தன. தொடர்ந்து அதே வாரத்தில் 2011, ஜனவரி 1 அன்று அய்வர் கொல்லப்பட்டனர். அவர்களில் பாலிகோதா எனும் கிராமத்தைச் சேர்ந்த ஜங்கா எனும் 12 வயதுச் சிறுமி உட்பட மூவர் பெண்கள் என்பது கூடுதல் செய்தி. ஒரு வாரத்திற்குப் பிறகு ரயாகடா மாவட்டத்தில் சனவரி 8 அன்று, நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது சிறப்பு அதிரடிப் படையினரால் 9 கிராமத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வை ‘மோதல் சாவுகள்' வகைக்குள் அவர்களாலேயே கொண்டு வர இயலவில்லை. மோதல் நடந்ததாகப் புனைந்து, கதையெழுதி அலுத்துப் போய்விட்டார்கள் போலும். இனி, கேள்வி கேட்பாரற்று கொன்று விடலாம் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்.

சனவரி 12 அன்று, மயூர்பான்ச் மாவட்டத்தில் கியோன்ஜாரிலிருந்து 35 கி.மீ. தொலைவிலுள்ள பான்ஜம் எனும் கிராமத்தில், அதிகாலையில் சாது முண்டா (வயது 24) என்பவரும், ராஜு என்னும் சிறுவனும் மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர். அன்றைய நாள் மாலை 3 மணியளவில் அழுகிய நிலையில் சிறுவன் ராஜுவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஒருவரது உடல் இறந்த 72 மணி நேரத்திற்குப் பிறகே அழுகத் தொடங்கும். ஆனால், மோதல் நடந்ததாகச் சொல்லப்பட்ட அன்று மாலையே, அழுகிய நிலையில் உடல் கிடந்ததெப்படி என்ற கேள்வி எழுகிறது? ஆனால், ஒருவரும் பதில் தரப்போவதில்லை.

பாலிகோதாவைச் சேர்ந்த ஜங்கா என்ற அச்சிறுமி கொல்லப்பட்ட 10 நாட்களுக்கு பிறகும் அவளது உடலைப் பெற்றுக் கொள்ள எவரும் வரவில்லை. அக்கிராம மக்களின் உயிரச்சமும் வாழ்க்கை நெருக்கடியும் அப்படி. இந்நிகழ்வைத் தொடர்ந்து 10க்கும் மேற்பட்டவர்கள் சரணடைந்ததாகக் காவல் துறை கூறியது. அவர்களில் பெரும்பான்மையினர் சிறார்கள். இவ்வாறு சரணடைபவர்களுக்கென்றே, டாடா நிறுவனம் மறுவாழ்வு முகாம்களை நடத்தி வருகிறது. கொலைகாரனே இங்கு மருத்துவனும்கூட. மருத்துவர்கள் பலர் கொள்ளைக்காரர்களாகவும் சோதனைக் கொலைகாரர்களாகவும் பிழைக்கும் நாட்டில், கொலைகாரனே மருத்துவனாக இருப்பதில் வியப்பில்லைதானே? ஜங்காவின் தந்தை ராம்ராய் ஜமுடா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காவல் துறையால் கொல்லப்பட்டு விட்டார். பெற்றோர்களை இழந்தவர்கள், காவல் துறையின் தாக்குதலில் காயமடைந்தவர்கள், மாவோயிஸ்டுகளோடு இணைந்து விடும் வாய்ப்புள்ள சிறார்கள் என காவல் துறையின் பிடிக்குள் அகப்பட்டுவிடும் பலரும், டாடாவின் முகாம்களில் மறுவாழ்வு என்ற பெயரில் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

சாது முண்டாவும் பாலிகோதாவைச் சேர்ந்தவரே. கலிங்கநகர் தொழிற்பூங்காவில் அமைக்கப்படவிருக்கும் டாடா இரும்பு உருக்காலைக்கு எதிரான ‘பிஸ்தாபன் பித்ரோஹி ஜன் மன்ஞ்' (BBJM) என்ற அமைப்பில் தீவிரமாக இயங்கி வந்தவர். இந்த இயக்கம் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவான அமைப்பாக அரசால் கருதப்படுகிறது. கலிங்கநகர் தொழிற்பூங்கா உருவாக்கப்படும் போதே, சனவரி 2, 2006 அன்று, அது நிறுவப்படுவதற்கு எதிராகப் போராடிய பழங்குடியின மக்கள் மீது காவல் துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர். இன்றுவரை அப்பகுதியின் கிராம மக்கள் தொடர்ச்சியான கைதுகள், தாக்குதல்கள், தேடுதல்கள் என காவல் துறையினரின் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.


2010 ஏப்ரலில், BBJM அமைப்பு பாலிகோதாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு செல்ல விடாமல் பத்திரிகையாளர்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர், பிஜு ஜனதா தளத்தின் டாடா நிறுவனத்திற்கு ஆதரவான அரசியல் குண்டர்களுடன் இணைந்து, அக்கூட்டத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். சாண்டியா எனும் கிராமத்தைச் சேர்ந்த BBJM தலைவர்களில் ஒருவரான ரவீந்திர ஜாரிகா என்பவர், ‘மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி எங்களை அரசு முட்டாளாக்க நினைக்கிறது. நாங்கள் விரும்பினால், 200 பேர்களை ஆயுதம் தாங்கியவர்களாக காடுகளுக்குள் அனுப்ப முடியும். ஆனால், நாங்கள் அமைதியான முறையில் எங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறோம். இப்போராட்டத்திலேயே சாவதற்கும் தயாராக இருக்கிறோம்'' என காவல் துறையின் மீது கோபக் கணைகளை வீசுகிறார். ‘நீங்கள் மாவோயிஸ்டுக்கு ஆதரவாளரா?' என்ற நேரடியான கேள்வி ஒன்றுக்கு, ‘நான் மாவோயிஸ்டுகளுக்கும் வேண்டப்படாதவனாகவே இருக்கிறேன்' என வருத்தம் ததும்பக் கூறுகிறார்.

ரயாகடா மாவட்டத்தின் குரிகார் எனும் கிராமத்தில் 2011, சனவரி 8 அன்று, உறங்கிக் கொண்டிருந்த மக்கள் 9 பேர் நிர்க்கதியாய் கொல்லப்பட்டதை நினைவில் இருத்தி கொண்டு, இதை வாசியுங்கள். டிசம்பர் 14, 2010 அன்று, காஷிபூர் வட்டத்திலுள்ள தோபாசில் எனும் கிராமத்தில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டிருந்தனர் எனக் குற்றம் சுமத்தப்பட்டு, 2 சிறார்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தோபாசில், கோண்டு மற்றும் ஜோடியா என இரு பழங்குடிப் பிரிவினர் வாழும் கிராமம். இக்கிராமத்தினர் குடும்ப அட்டைகள் வைத்திருக்கின்றனர். ஆனால், ரேசன் பொருட்கள் கிடைப்பதில்லை. தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் அட்டை பெற்றுள்ளனர். ஆனால், வேலை தரப்படுவதில்லை. மின்சாரக் கம்பங்கள் நடப்பட்டிருக்கின்றன; மின் விநியோகம் இல்லை. காடுகளில் தேடிக் கிடைக்கும் சிறிதளவு தானியங்களை உண்டு, உயிர் பிழைத்து வருகின்றனர் இம்மக்கள். பழங்குடியினர் பட்டியலில் கூட அரசு இவர்களை அங்கீகரிக்கவில்லை. இம்மக்கள்தான் காடுகளில் மாவோயிஸ்டுகளின் ஆயுதப் பயிற்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தனர் என, முதல் தகவல் அறிக்கையில் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்த முதல் தகவல் அறிக்கையை சுட்டிக் காட்டி, ‘அக்கூட்டத்தில் பெரும்பான்மையோர் ஆலிவ் பச்சை நிறத்தில் உடை அணிந்திருந்தனர். அவர்களின் உடைகள் மற்றும் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை வைத்து, அவர்கள் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதை முடிவு செய்தோம். அவர்களை சுற்றி வளைத்து சரணøடயுமாறு கூறியபோது, அவர்கள் எங்களை நோக்கி சுடத் தொடங்கினர். நாங்கள் திருப்பி சுடத் தொடங்கியதும் அவர்கள் காடுகளுக்குள் ஓடி ஒளிந்தனர்'' எனக் கதையளக்கிறார், கல்யாண்சிங்பூர் காவல் நிலைய ஆய்வாளர். கைது செய்யப்பட்ட கோனி ஜோடியா என்ற பெண் 16 வயது என முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால், அவரது குடும்ப அட்டையின்படி (ஆகஸ்டு 1, 2010 அன்று வழங்கப்பட்டது) அவளது வயது 11. தோபாசில் கிராம மக்களோ, கிராமத்திற்குள் தேடுதல் வேட்டைக்காக வந்த காவல் துறையினர், தேடப்படுவதாகக் கூறி சபிதா ஜோடியா மற்றும் ஜோதி ஜோடியா (வயது 10) ஆகிய இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர் என்றும், இருவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர். ஏனெனில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டவர்கள் பட்டியலில் இல்லை (‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்', சனவரி 30, 2011).

சனவரி 8, 2011 அன்று காஷிபூர் வட்டத்திலுள்ள பாரிகான் எனும் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா மினியகா, செபோ மினியகா, புல்கோ மினியகா என்ற மூன்று இளம் பெண்கள் மோதலில் கொல்லப்பட்டதாக, அக்கிராமத்தினர் செய்தித் தாள்கள் மூலமே தெரிந்து கொண்டனர். அதன் பின்னரே, பாரிகான் மக்கள் கொல்லப்பட்ட அப்பெண்களுக்கு தமது குலவழக்கப்படி, இறுதி மரியாதைகளைச் செய்தனர். 1993 முதல் ‘உத்கல் அலுமினா' பன்னாட்டு நிறுவனத்தின் பாக்சைட் சுரங்கத்திற்கு எதிராகப் போராடி வரும் காஷிபூர் பழங்குடி மக்களின் போராட்ட வரலாற்றில் இப்பெண்களின் படுகொலைகள் இன்னுமொரு அத்தியாயத்தை திறந்து விட்டிருக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளாக நில அபகரிப்புக்கு எதிராகப் போராடி வரும் பாரிகான் கோண்டு இன மக்களின் தலைவரான புலிகா மினியகா, 2004 – 05 இல் சிறையில் இருந்தவர். அவர், ‘இது எங்கள் நிலம். இது எங்கள் வனம். இந்த ஆறுகள் எங்களுடையவை. இந்த மரங்கள் எங்களுக்குரியவை. இந்தக் காவல் படையினர் ஏன் இங்கு வருகின்றனர். அவர்களுக்கு இங்கு என்ன வேலை? எங்கள் மக்களைக் கொல்வதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?'' என சீற்றத்துடன் கேள்வி எழுப்புகிறார். அவருக்கான பதில் உங்களிடம் இருக்கிறதா?

மேற்கு வங்கத்தின் லால்கர் பகுதியில் கிராமங்களின் அமைதி கிழிபட, ராணுவத்தினர் இரவு நேரங்களில் கூட அணி வகுப்பு நடத்துகின்றனர். இந்த்ரமானி எனும் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா சாகு என்பவர், ‘எந்த நேரமானாலும் எங்கள் வீடுகள் தட்டப்படும். வீட்டில் உள்ள பைகளிலும் தலையணைக்கு அடியிலும் கூடாவா மாவோயிஸ்டுகள் ஒளிந்திருப்பர். எங்களிடமிருக்கும் குறைந்த அளவு பணத்தையும் சிறுஅளவு அணிகலன்களையும் கூட ராணுவத்தினர் எடுத்துச் செல்கின்றனர்'' என வேதனை தெரிவிக்கிறார். மே 28, 2010 அன்று மேற்கு மிட்னாபூரில் நிகழ்ந்த ஞானேஸ்வரி விரைவு ரயில் வண்டி விபத்தில் கொல்லப்பட்ட 141 பேர் உட்பட 2008 முதல் 2010 வரை 800க்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப்பட்டுள் ளனர். சட்டீஸ்கரில் 2007 முதல் 2010 வரை 420க்கும் மேற்பட்ட குடிமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இப்படுகொலை களை நக்சலைட்டுகள் நிகழ்த்துவதாக அரசு பரப்புரை செய்கிறது. ஆனால், நேர்மையான உள்ளூர் பத்திரிகையாளர்கள் சிலர், ‘பாதுகாப்புப் படையினரே இப்படுகொலைகளை செய்துவிட்டு, நக்சலைட்டுகள் மீது பழி சுமத்திவிடுகின்றனர்'' என்கின்றனர் (ரேகா தீக்ஷித், ‘தி வீக்' ஆகஸ்ட் 22, 2010).

சட்டீஸ்கரின் பஸ்தார் 40,000 ச.கி.மீ. பரப்பளவிலான அடர்ந்த வனப்பகுதியைக் கொண்டது பஸ்தார், தண்டேவாடா, பிஜப்பூர், நாராயண்பூர், கன்கெர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிதான் தண்டகாரண்யா எனப்படுகிறது. இப்பகுதியில் மக்கள் அரசாங்கம் (ஜனதனா சர்க்கார்) நிறுவப்பட்டுள்ளதாக, மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர், ‘பஸ்தார் இம்பாக்ட்' என்ற தினசரி பத்திரிகையின் ஆசிரியரான சுரேஷ் மஹாபத்ரா என்பவர், ‘நக்சலைட்டுகள் படிப்படியாக புதிய பகுதிகளைக் கைப்பற்றி வருகின்றனர். தங்கள் தலைவர்களில் ஒருவரான ஆசாத் கொல்லப்பட்ட பிறகு, ஆந்திராவையும், சட்டீஸ்கரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை (எண்.221) யையும் அவர்கள் மூடிவிட்டனர்'' என்கிறார். சட்டீஸ்கரில் 2007 முதல் 2010 வரை ஏறத்தாழ 2000 மோதல்கள் நடந்துள்ளதாக அரசுக் குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால், இவற்றில் பெரும்பான்மையானவை போலி மோதல்களே.

24.4.2011 அன்று அதிகாலையில், ஒரிசாவின் மல்காங்கிரி மாவட்டத்தின் சித்ரகோண்ட் வனப் பகுதியில் நிகழ்ந்த மோதலில் மாவோயிஸ்ட் பெண் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். எல்லைப் பாதுகாப்புப் படை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட தன்னார்வப் படையினர் இணைந்து மாவோயிஸ்டுகளுடன் நடத்திய மோதலில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இப்பெண் கொல்லப்பட்டிருக்கிறார் என்றும் பிப்ரவரி 16இல் மல்காங்கிரி மாவட்ட ஆட்சியரைக் கடத்திய பிரசாத் என்பவரின் தலைமையிலான மாவோயிஸ்டு படைப் பிரிவில் உறுப்பினராக இருப்பவர் என்றும் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் அனிருத் சிங் தெரிவித்துள்ளார் (‘டைம்ஸ் ஆப் இந்தியா', 25.4.2011). ‘இது முன்னரே திட்டமிடப்பட்டதல்ல, அவர்கள் சுடத் தொடங்கியதால், எங்கள் ஆட்கள் திருப்பிச் சுட வேண்டியதாகிவிட்டது' என கூறியுள்ளார் ஒரிசா மாநில காவல் துறைத் தலைவர் பொறுப்பிலிருக்கும் அனுப் பட்நாயக். ‘சட்ட விரோத நடவடிக்கைகளில் மாவோயிஸ்டுகள் ஈடுபடவில்லையெனில், அவர்களுக்கு எதிராக நாங்கள் செயல்படப் போவதில்லை. ஆனால், அவர்கள் ஆயுதம் தாங்கிய குழுக்களாக இயங்கி பல்வேறு போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து, பொது அமைதிக்கு ஊறு விளைவித்தும் வருகின்றனர்'' என ஒரிசா அரசு குற்றம் சுமத்துகிறது.

மாவட்ட ஆட்சியரைக் கடத்தியதற்குப் பழி வாங்கும் விதமாகவே மாவோயிஸ்டு ஆதரவாளராக இருந்த அப்பெண்ணைக் கைது செய்து, திட்டமிட்டுப் படுகொலை செய்திருக்கிறது காவல் துறை. மேலும், கடத்தப்பட்ட ஆட்சியரை விடுவிக்கும்போது, மாநில அரசு மாவோயிஸ்டுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறும் விதமாகவும் இந்நிகழ்வை நடத்தியிருக்கிறது. சிறையில் இருக்கும் பழங்குடி மக்களை படிப்படியாக விடுவிக்க வேண்டுமெனவும், தங்கள் முன்னணித் தோழர்களுக்குப் பிணை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்து, ஆயுத நடவடிக்கைகளை ஒரிசாவில் நிறுத்தி வைத்திருக்கும் மாவோயிஸ்டுகளை சீண்டி விட்டு, பசுமை வேட்டைப் போரைத் தொடர்ந்து நடத்தவே விரும்புகிறது ஆளும் மாநில அரசு என்றே சந்தேகிக்க இடமேற்பட்டுள்ளது. போராடும் மக்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களையும், வாக்குறுதிகளையும் மீறுவது ஆளும் அரசுகளின் எழுதப்படாத நியதி என்பது நாமறிந்ததுதானே ?


இதன் முன் பகுதிகள் ஜூன் ஜூலை மாதங்களில் பதியப்பட்டுள்ளது.

நன்றி : ஆசிரியர் இளம் பரிதி மற்றும் தலித் முரசு, கீற்று இணையதளம்.

0 comments:

Post a Comment