Monday, September 12, 2011

நான் ச.பாலமுருகன் ஆனது எப்படி ?


"நிலம் என்பது சொத்து அல்ல; அது சுயமரியாதை. மண்ணுக்கும் மனிதனுக்குமான தொப்புள் கொடி. அந்த நிலத்தைப் பிடுங்கிக்கொண்டு சொந்த ஊரில் அகதி களாக மக்களைத் திரியவிடுவதைக் காட்டிலும் இந்த உலகில் பெரிய துயரம் வேறு எதுவும் இல்லை.

காலம் காலமாக நம் நாட்டின் பழங்குடி மக்களிடம் இருந்து அவர் களின் நிலமும், வனமும் வன்முறை யாகப் பிடுங்கப்படுகிறது. காட்டுக்குள் ஒரு பறவையைப்போல, தாவரத்தைப்போல வாழ்ந்திருக்கும் பழங்குடிகள், அதிகாரத்தாலும் அரசாங்கத்தாலும் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றனர்" - உறுதியான குரலில் பேசுகிறார் ச.பாலமுருகன். பி.யூ.சி.எல். என்னும் மனித உரிமை அமைப்பின் மாநிலச் செயலாளர். வீரப்பன் தேடுதல் வேட்டையில் போலீஸின் அடக்குமுறைக்கு ஆளான பழங்குடி மக்களின் துயரத்தை 'சோளகர் தொட்டி' என்ற பெயரில் இவர் எழுதிய நாவல் தமிழ்ச் சூழலில் மிகப் பெரும் அதிர்வுகளைஉண்டு பண்ணியது!

"ஈரோடு மாவட்டத்தில் பவானி என் ஊர். அப்பா, சிகை அழகுக் கலைஞர். எளிய குடும்பத்தில் பிறந்த எனக்கு பள்ளிப் பருவம்தான் மாற்றத்துக்கான களமாக இருந்தது. பவானி அரசுப் பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கும்போது பள்ளியின் நிர்வாகச் சீர்கேடுகளை எதிர்த்து மாணவர்களைத் திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்தினேன். ஒரு மாதம் பள்ளியை மூடும் அளவுக்கு நிலைமை போனது. என்னைப் பள்ளியில் இருந்து நீக்கினார்கள்.

பள்ளிப் பருவத்தில் நடந்த அந்தப் போராட்ட அனுபவம் எனக்கு மிகப் பெரிய உத்வேகத்தைத் தந்தது. கோவை சட்டக் கல்லூரியில் படித்தபோது இலக்கியங்கள் படிக்கும் வாய்ப்பு, புரட்சிக்கர அமைப்புகளுடன் ஏற்பட்ட பழக்கம், மக்களையும் போராட்டங் களையும் நேசிக்கவைத்தது. அப்போது அரூரில் ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. போலீஸ், மாநாட்டுக்குத் தடைபோட்டது. ஆனால், எப்படியாவது அதில் பங்கெடுக்க வேண்டும் எனத் தோழர்கள் முடிவு செய்தனர். சுமார் 200 பேர் ரயிலில் கிளம்பினோம். அரூர் அருகே ஒரு கிராமத்தில் இறங்கினோம். திடீரென 200 பேர் இறங்கி கோஷம் போட்டுக்கொண்டு ஊருக்குள் வர, அந்தப் பகுதியே பரபரப்பாகிவிட்டது. போலீஸ் கைது செய்து அடி பின்னியது. வேலூர் சிறையில் 25 நாட்கள் வைக்கப்பட்டோம்.

சிறை நாட்கள்தான் மனித உரிமைகளின் பக்கம் என்னை முழுவதுமாகத் திருப்பியது. சிறையில் இருப் பவர்கள் அனைவருமே குற்றவாளிகள் அல்ல; அப்ப டியே குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்களுக்கும் உரிமைகள் இருக்கின்றன. ஆனால், உள்ளுக்குள் இருந்த நிலைமை முற்றிலும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டதாக இருந்தது. சிறைக்குள் போராட்டம் நடத்தினோம். உடனே, எங்களை தனிமைச் சிறையில் வைத்தார்கள்.

93-ல் வழக்கறிஞராகத் தொழில் தொடங்கினேன். அந்தக் காலகட்டத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டைதீவிர மாக நடந்துகொண்டு இருந்தது. தேடுதல் வேட்டையின் பெயரால் அப்பாவிப் பழங்குடி மக்கள் மிகக் கொடூர மாகத் துன்புறுத்தப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்துடன் இணைந்து அந்தப் பகுதிகளுக்குப் போனபோது, ஒரு நடுத்தர வயதுப் பெண் கேட்ட கேள்வியை இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை. தன் தாலியைக் கையில் பிடித்தபடி 'என் புருஷனை போலீஸ்காரங்க பிடிச்சுட்டுப் போயி எட்டு மாசம் ஆகுது. இருக்காரா, செத்தாரான்னு தெரியலை. இந்தத் தாலியை நான் கட்டிக்கிறதா, வேண் டாமா? இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க, போதும்' என்றார் அந்தப் பெண்.

எங்கள் ஒட்டுமொத்தப் போராட்டங்களுக்கும் அந்தப் பெண்ணே தூண்டுகோல். பல்வேறு இயக்கங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பாகச் சேர்ந்தோம். வீரப் பன் தேடுதல் வேட்டையின் பெயரால், தமிழ்நாடு - கர்நாடக கூட்டு அதிரடிப் படைகள், பழங்குடி மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கொடூரமான வன்முறைகளை அம்பலப்படுத்தினோம். அந்தக் காலகட்டத்தில் இதைப் பற்றிப் பேசினாலே, அது 'வீரப்பன் ஆதரவாக' மட்டுமே பார்க்கப்பட்டது. ஒரு பக்கம் அரச வன்முறை, மறு பக்கம் வீரப்பனின் வன்முறை. இரண்டுக்கும் இடையே சிக்கித் தவித்த அப்பாவிப் பழங்குடிகளின் குரலை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. நாங்கள் அதைத் துணிந்து பேசினோம். ஏழு வருடப் போராட்டங்களின் விளைவாக தேசிய மனித உரிமைகள் ஆணையம், நீதிபதி சதாசிவம் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தது.

1999 தொடங்கி 2002 வரை சதாசிவம் கமிஷன் முன்பு சாட்சியம் சொல்வதற்காக பழங்குடி மக்களை அழைத்து வந்தோம். அந்த மக்கள் ஒவ்வொருவரும் விவரித்த சித்ரவதைகள் எல்லோரையும் குலை நடுங்க வைத்தன. காவல் துறையால் அடித்து உதைத்து முட மாக்கப்பட்டவர்கள், பாலியல் வல்லுறவுக்கு உள்ளானவர்கள், வீடுகள் எரிக்கப்பட்டு ஊரைவிட்டுத் துரத்தப் பட்டவர்கள் என அவர்களின் வாழ்க்கையே சிதைக்கப் பட்டு இருந்தது. போலீஸ் சித்ரவதையால் பல பேர் பைத்தியங்களாகத் திரிந்தார்கள். அரச வன்முறையின் கோரமான முகத்தை ஆவணமாகப் பாதுகாக்க வேண் டிய தேவையும் இருந்தது. 'சோளகர் தொட்டி' என்ற நாவல் இப்படித்தான் உருவானது. புத்தகம் விற்றது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கான முழுமையான நீதி இன்று வரை கிடைக்கவில்லை.

இந்தியாவிலேயே பழங்குடி நிலங்களைப் பாதுகாக்க எந்தவித சட்டமும் இல்லாத ஒரே மாநிலம், தமிழ்நாடு தான். தண்டகாரண்யா காடுகளில் தங்கள் நிலம் பிடுங் கப்படுவதற்கு எதிராகப் போராடும் பழங்குடிகளுக்கு உள்ள எல்லா நியாயங்களும் மாதேஸ்வரன் மலைப் பழங்குடிகளுக்கும் இருக்கிறது. அவர்கள் கையில் ஆயுதம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், மன உறுதி இருக்கிறது. எவ்வளவோ சித்ரவதைகளுக்கு ஆளான பின்னும் அந்த மண்ணைவிட்டு விலக அவர்கள் தயார் இல்லை. காரணம், மண்ணையும் தங்கள் மரபையும் அந்த அளவுக்கு அவர்கள் காதலிக்கிறார்கள். பழங்குடிகளிடம் இருக்கும் மன உறுதியை வேறு யாரிடமும் நீங்கள் காண முடியாது. எந்தப் பழங்குடி யாவது தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் உண்டா? கிடையாது. இத்தகைய ஒடுக்கப்படும் மக்க ளுக்காகப் போராடும் எங்களைப் போன்ற மனித உரிமையாளர்கள் தொடர்ந்து அரசால் முத்திரை குத்தப் படுகிறோம்.

'போராட்டமே தப்பு' என்பது மனித உரிமை மீறல் மட்டுமல்ல; அது மானுட விரோதம்!"


(நன்றி: ஆனந்த விகடனில் பாரதிதம்பி அவர்கள் எழுதிய படைப்பு .
மற்றும் ஈரோடு கதிரின் வலைப்பூவிற்கு...)

0 comments:

Post a Comment