பானையில் பிடித்து வைத்த தண்ணீர் ரெண்டு நாள் பழசானாலே குடிக்க மாட்டோம். 2 கோடி வருடங்களுக்கு முந்தைய தண்ணீர் என்றால் ? 'அதை வைத்து ஏகப்பட்ட பரிசோதனைகளைச் செய்யலாம்' என்று அதிசயிக்கிறார்கள் உலக விஞ்ஞானிகள்.
பனிப் பாறைகளுக்கு அடியில் சலனமில்லாமல் இருந்த ஏரி ஒன்றின் தண்ணீரை எடுத்து ஆராய்ச்சி செய்கிறது ரஷ்யா. "நிலாவில் மனிதன் காலடி எடுத்து வைத்ததற்கு இணையான சாதனை இது" என ஆரவாரம் செய்கிறது உலகமே! மனித இனமாகிய நாம் தோன்றுவதற்கு முன்னால் இந்த பூமி எப்படி இருந்தது என்பதையும், சூரியக் குடும்பத்தில் இருக்கும் மற்ற கிரகங்களில் என்ன மாதிரியான உயிரினங்கள் இருக்கக்கூடும் என்பதையும் பூமியில் வைத்தே இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்துவிடலாம் என்பதுதான் சிறப்பு !
அந்த ஏரியின் பெயர் வோஸ்டாக் (Vostok). அன்டார்ட்டிக் பனிக் கண்டத்தில் இருக்கிறது. அன்டார்ட்டிக் பகுதியில் பனிப்படலங்களுக்கு அடியில் சுமார் 400 நன்னீர் ஏரிகள் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். அவற்றில் மிகப் பெரியது வோஸ்டாக் ஏரி. பூமியின் தென் துருவத்துக்கு சற்றே கிழக்காக இந்த ஏரி இருக்கிறது. இந்த ஏரியின் நீளம் 250 கிலோமீட்டர்; அகலம் 50 கிலோமீட்டர். ஏரியின் ஆழம் 670 மீட்டர் என்றால் இது எவ்வளவு பெரியது என்று கற்பனை செய்து பாருங்கள்.
சரி... பனிக்கண்டத்தில் இது மட்டும் எப்படி உறைந்து பனிக்கட்டி ஆகாமல் தண்ணீராகவே இருக்கிறது ? 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இது போன்ற ஏரிகளை கடினமான பனிப்பாறைகள் மூடிக் கொண்டன. அதன் மேல் பனிப்படலங்கள் படிந்து அன்டார்க்ட்டிக் கண்டம் பனியால் மூடப்பட்டது. ஆனால் பூமிக்கடியில் நிகழும் சலனங்களால் வெளியேறும் வெப்பம், இந்த ஏரிகளை உறைந்து விடாமல் காக்கிறது. ஏரியின் மீது சுமார் 3 கிலோ மீட்டர் தடிமனில் ஒரு கடினப் பனிப்பாறை போர்வை போல போர்த்தியிருப்பதால், அதைத் தாண்டி பனிபடலங்களும் தோன்றுவதில்லை.
இந்த ஏரியின் தண்ணீரை எடுத்து சோதித்தால், 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பூமி எப்படி இருந்தது என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். பாக்டீரியா போன்ற உயிரினங்கள் அதில் இருக்கக்கூடும். செவ்வாய் போன்ற கிரகங்களின்
துருவப் பனிப்பகுதிகளில் இருக்கும் உயிரினங்களின் வாழ்க்கையும் இதுவும் ஒத்துப் போகும். நிறைய செலவு செய்து செவ்வாய் கிரகத்தை ஆராய்வதை விட, எளிமையாக இதில் ஆராய்ச்சியை முடித்துவிடலாம் என நினைத்தது ரஷ்யா.
இதற்காக அன்டார்க்ட்டிக் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் மற்ற உலக நாடுகளின் அனுமதியைக் கேட்டது. இந்த ஆராய்ச்சியால், வேதிப் பொருட்கள் அந்த ஏரியில் கலக்கும் அபாயம் இருக்கிறதா என்ற விவாதம் பல ஆண்டுகள் நடந்தது.அதன்பின் ரஷ்யாவிற்கு அனுமதி கிடைத்தது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சியை ரஷ்யா ஆரம்பித்தது. சும்மாவா.... அன்டார்க்ட்டிக் தரைப் பரப்பிலிருந்து 3623 மீட்டர் - அதாவது மூன்றரை கிலோ மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் அல்லவா வோஸ்டாக் ஏரி இருக்கிறது. நம் வீடுகளில் ஆழ்துளைக் கிணறு தோண்டுவார்களே...அதே தொழில்நுட்பத்தில் சற்று பெரிய, ஆழமான கிணறு தோண்டும் முயற்சி ! ஆனால், மைனஸ் 89 டிகிரி செல்சியஸ் என உறைபனிக்கும் கிழே நடுங்கும் குளிரில் இது அசாத்திய வேலை!
அன்டார்க்டிக்கில் கோடை காலமான டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான ஐந்து மாதங்களில் சில நாட்களில் மட்டும்தான் வேலை செய்ய முடியும். எண்ணெய், ஆயில், கருவிகளை பனி உறையாமல் தடுக்க தெளிக்கப்படும் வேதிப் பொருட்கள் என எதுவும் ஆழ்துளை வழியாக ஏரிக்குள் போய்விடாமல் பத்திரமாகச் செய்துவிடவேண்டும். இயல்பாக மூச்சு விடக்கூட போதுமான ஆக்சிசன் கிடைக்காது. ஏதாவது என்றால் ஆபத்திற்கு உதவுவதற்கு ஒருத்தரும் கிடையாது.
இப்படி நெருக்கடியான சூழலில் அங்குலம் அங்குலமாகத் துளை போட்டு 20 ஆண்டு முயற்சி கடந்த பிப்ரவரி 5 - ம் தேதி வெற்றிக் கனியைப் பறித்து தந்தது. அன்றுதான் இந்த ஆழ்துளை, ஏரியின் நீர் மட்டத்தைத் தொட்டது. தொட்ட வேகத்தில் ஆழத்திலிருந்து நீர் பீய்ச்சியடித்து வெளியில் வந்தது. சுமார் 40 லிட்டர் தண்ணீர் இப்படி துளை வழியே வெளியே வந்து, பனிக் காற்று பட்டதும் உறைந்து விட்டது. இந்த தண்ணீர் மாதிரியை வைத்தே இனி சோதனைகள் தொடரும்.
வெற்றிக் களிப்பில் ரஷ்யக் குழு !
அமெரிக்காவும், பிரிட்டனும் இப்படி வேறு இரண்டு சின்னச் சின்ன ஏரிகளில் துளைப் போட்டு தண்ணீர் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. என்றாலும் முதல் வெற்றிச் சாதனை ரஷ்யாவுக்கே!
தகவல் : நிதர்ஸனா.
0 comments:
Post a Comment