Sunday, March 11, 2012

சுத்துதே சுத்துதே பூமி !


விண்வெளியின் அற்புதங்களை அறியச் செய்தவர் கலிலியோ கலீலி(Galileo Galilei). இவர் 1564-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி இத்தாலியில் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பைசா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில சேர்ந்தார். ஆனால் அதில் அவருக்கு நாட்டம் இல்லை. இயற்பியலில் அவரது கவனம் திரும்பியது.

இரண்டு பொருட்கள் ஒரே உயரத்திலிருந்து விழுந்தால், அவற்றுள் எடை அதிகமான பொருள்தான் முதலில் தரையில் விழும்' என அரிஸ்டாட்டில் கூறியதை கலிலியோ மறுத்தார். 'ஒரே உயரத்திலிருந்து விழுபவை, ஒரே சமயத்தில்தான் தரையை அடையும்' என்று கூறினார். இதை நீருபிக்க மக்களையும், அறிஞர்களையும், பைசா நகர கோபுரத்துக்கு அழைத்துச் சென்றார். கோபுர உச்சியிலிருந்து இரண்டு துப்பாக்கிக் குண்டுகளை ஒரே சமயத்தில் தரையை நோக்கிப் போட்டார். ஒரு குண்டின் எடை 450 கிராம். இன்னொன்று 4500 கிராம். இரண்டும் ஒரே நேரத்தில் தரையை வந்தடைந்தன.

சாய்ந்த கோபுரம் என்பதால் கலிலியோ எளிதாக விளக்கிக் காட்ட முடிந்தது. மக்கள் கண்ணால் கண்டும் அவரது கண்டுபிடிப்பை மறுத்தனர். இதுபோல் சாய்வுகளிலும் பந்துகளை உருள விட்டு பரிசோதித்தார். 1590 - ல் தனது முடிவுகளை முன் வைத்து 'ஆன் மோஷன்' என்ற புத்தகத்தை எழுதினார்.

பெளதீக உலகத்தின் வாசற்கதவை முதன் முதலில் அகலத் திறந்து வைத்தவர். தனது தொலை நோக்கியில் கோள்களின் நகர்வை ஆராய்ந்து அவர் எழுதிய 'வீண்மீன்களின் தூதர்' என்னும் நூல் வானிலை துறை வளர வழி வகுத்தது.


பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது' என்பதை முதன் முதலில் ஆதாரத்துடன் விளக்கியது அவர்தான். 1632 - ல் 'இரண்டு முக்கியமான உலகங்களின் உரையாடல்' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

'மதத்திற்கு விரோதமான பல உண்மைகள் அதில் இருப்பதாக' குற்றச்சாட்டுக்கு ஆளானார். விசாரணைக்காக கிறிஸ்தவ திருச்சபையின் முன் நிறுத்தப்பட்டார்.

'நமது வேத நூல் பரலோக வாழ்வை அடைவதற்கான வாழ்வை காட்டுகிறதே தவிர, வானில் உள்ள அற்புதங்களை விளக்குவதன்று' என்று அவர் வாதிட்டார். ஆனால் இந்த வாதம் ஏற்கப்படவில்லை. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


தண்டனையிலிருந்து தப்பிக்க மன்னிப்புக் கடிதம் கொடுத்தார். எனவே அவரது மரண தண்டனை, சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 22 நாட்கள் சிறையிலிருந்த பின் கலிலியோ விடுதலையானார். இறுதி நாட்களில் வியான்னாவில் வறுமையால் பீடிக்கப்பட்டு கண்களை இழந்து குருடானார். தனது 78 - ம் வயதில் அவர் மரணம் அடைந்தார்.

மன்னிப்புக் கடிதம் தரும்போது 'உலகம் உருண்டை என்பதை நானே மறுத்தாலும் கூட அதுதான் உண்மை. அது அப்படிதான் இருக்கும். எனக்காக அது தட்டையாகிவிடாது' என்று குறிப்பிட்டிருந்தார்.இப்போது அதை உலகமே ஒப்புக் கொண்டு விட்டது.





தகவல் : சி.பரத்.

0 comments:

Post a Comment